கனவில் வந்த பஷீர்






நேற்று ஒரு கனவு.நான் பஷீரை கடிதம் மூலமாக தொடர்பு கொள்கிறேன்.அவர் தடியான சட்டகம் கொண்ட கண்ணாடியும் வழுக்கை தலையுமாக முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்தவாறு என் வீட்டுக்கு வருகிறார்.வீட்டில் குளித்துவிட்டு வேஷ்டியை கட்டிக்கொண்டு வெளியே வரும் பஷீரை பார்க்கும் என் தந்தை யாருடா நீ என்று கேட்கிறார்.அதற்கு பஷீர் நீ யாருடா என்கிறார்.என் தந்தை திகைத்து போய் நின்று விடுகிறார்.பின்னர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஏதோ அருந்துகிறார்.என்னிடம் கீயர் பைக் அதாவது இந்த ஸ்பெலன்டர் போன்ற பைக் இருக்கிறதா என்று கேட்கிறார்.நான் என்னிடம் டிஸ்கவரர் இருக்கிறது என்று சொல்கிறேன்.சரி , அது போதும் என்கிறார்.அவர் பிறந்தது 1908யில்.அப்படியென்றால் கிட்டத்தட்ட 107 வயது ஆகிறது, இப்போது எப்படி வண்டி ஓட்ட முடியும் என்று அவரிடமோ அல்லது வேறு யாருடமோ அல்லது என்னிடமே கேட்டுக்கொள்கிறேன்.சிறிது நேரத்தில் யாரோ ஒரு இஸ்லாமியர் வருகிறார்.பஷீரின் நண்பர்.பஷீரை தன்னுடன் வந்து தங்கிக்கொள்ள சொல்கிறார்.பஷீர் இந்த பையன் மிகவும் பிரயப்படுகிறான், நான் சிறிது காலம் இங்கேயே தங்குகிறேன் என்கிறார்.என் வீட்டில் எப்படி பஷீரை தங்க வைப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.கனவு கலைந்துவிட்டது.உண்மையிலேயே நேற்று இந்த கனவு வந்தது.விடியற்காலையில் ஆறரை மணி போல இருக்கும்.எழுந்துவிட்டேன்.மனம் மிகவும் உற்சாகம் கொண்டது.பிறகு கொஞ்ச நேரத்திலேயே சோர்ந்துவிட்டேன்.படுக்கையிலிருந்து எழவே இல்லை.மதியம் தான் அலுவலகம் சென்றேன்.என் கனவில் இ்துவரை ஒரு எழுத்தாளர் வந்ததில்லை.தஸ்தவெய்ஸ்கியும் காந்தியும் கனவில் வந்ததாக நான் நிணைத்ததுண்டு.பின்னர் அது என் கற்பனையே என்று புரிந்து கொண்டேன்.பஷீர் கனவில் வந்தது ஆச்சரியமாக இருந்தது.

நான் 2007யில்தான் பஷீரை முதல் முறையாக படித்தேன் என்று நினைக்கிறேன்.அப்போது பஷீர் பல தேசங்கள் சென்று தனியாக வாழ்ந்தார் என்று படித்தேன்.நானும் என் வாழ்க்கையில் தனியாக சில காலமாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.2012யில் பெங்களூரில் வேலை கிடைத்தது.இங்கே வந்தவுடன் தனியாக வீடு எடுத்து தங்கினேன்.மூன்று வருடம் சென்றுவிட்டது.தனிமை ஒரு வரமாகவும் ஒரு சாபமாகவும் என் முன்னே நிற்கிறது.தனிவழியிலோர் ஞானி புத்தகத்தில் ஒரு இடம் வருகிறது.பஷீர் ஏரனாகுளத்தில் கே.சி.ஜார்ஜ் என்பவரோடு வசிக்கிறார்.அப்போது ஜார்ஜ் பஷீரிடம் கொஞ்சம் காசு தந்துவிட்டு வெளியே வேலையாக சென்றுவிடுகிறார்.அந்த நேரத்தில் ஒரு வறியவர் பசி கொண்டு பஷீரிடம் காசு கேட்கிறார்.அவர் உண்மையிலேயே பசியால் வாடுகிறார் என்பதை அறியும் பஷீர் அவரிடம் அந்த காசை கொடுத்துவிடுகிறார்.பஷீர் அந்த வேலை உணவு உண்ணவில்லை.நான் அதை படித்த போது உண்மையிலேயே உடைந்துவிட்டேன்.மனிதர்கள் கீழ்மையும் தீமையுமான குணங்களாலானவர்கள் என்பதை பஷீர் உணர்ந்திருந்தார் என்று கவிஞர் சுகுமாரன் ஒரிடத்தில் எழுதியிருந்தார்.அது உண்மை.ஆனால் பஷீர் அந்த கீழ்மையையும் தீமையையும் ஒரு விளையாட்டாக மாற்றுகிறார்.அதனூடாக பெருங்கருணையை முன்வைக்கிறார்.அதுவே அவரது ஆன்மிகம்.அவர் தனிவழியிலோர் ஞானி.


No comments: