இந்த வாரம் தந்தி டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர்
ருத்ரன் மனநலம் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.நல்ல நிகழ்ச்சி.ருத்ரன்
நன்றாக பேசினார்.எனக்கு அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது சில எண்ணங்கள்
தோன்றியது.ஒரு பெண் தன் கணவரை காரணம் இல்லாமல் மிக கடுமையாக திட்டுகிறேன் என்றார்.அவர்
மீது சந்தேகம் வருகிறது என்றும் ஆனால் அது தேவையற்ற சந்தேகம் என்று தனக்கு தெரிந்தே
அவ்வாறு செய்கிறேன் என்றும் சொன்னார்.வேறொரு பெண் தன் கணவர் தன்னை இந்த வேலையை செய்து
முடிக்க வில்லையா என்பது போன்ற சாதாரண கேள்விகளை கேட்டால் கூட தன்னால் அதை தாங்கிக்கொள்ள
முடியவில்லை , மிக ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறேன் என்றார்.முதல் பெண் நான் இப்படி நடந்து
கொள்வது எனக்கு தவறு என்று தெரிகிறது. பிள்ளைகளும் வளர்ந்துவிட்டார்கள், அப்படி இருக்கையில்
இது போல தவறாக சந்தேகிக்கும் தொனியில் நடந்து கொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது
என்றார்.தன்னுடைய தாய் தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே இறந்துவிட்டதாகவும்
அப்போது தன் வீட்டுக்கு சித்தியாக வந்தவரின் வருகை தன்னை பாதித்தாகவும் அவர் சொல்ல
முயன்றார்.அதற்குள் ருத்ரன் நீங்கள் சித்தியை எல்லாம் இதற்குள் இழுக்காதீர்கள், இது
ஒரு சாதாரண விஷயம் என்று சில அறிவுரைகள் சொன்னார்.
தன்னுடைய சித்தி தவறான வழியில் வீட்டுக்குள் வந்தவர் என்றும்
அதைப்போன்ற சில பெண்கள் தன் கணவருடன் பணிபுரியலாம் என்றும் அந்தப் பெண்ணுக்கு தோன்றியிருக்கலாம்.அப்படியான
ஒரு முடிச்சை தான் அவர் போட விரும்பினார் என்று எனக்கு தோன்றியது.எப்படியும் இருக்கலாம்.ஒரு
ஆண் நேயர் அழைத்து தனக்கு வயதாகி வருவதாகவும் திருமணம் நடக்கவில்லை என்றும் மனச்சோர்வு
அதிகரித்து இருப்பதாகவும் வருந்தினார்.எந்த பெண்னை பார்த்தாலும் இந்தப் பெண் நமக்கு
சரியாக வரமாட்டார் என்ற எண்ணம் தோன்றி விடுவதாகவும் சொன்னார்.தான் ஒரு பெண்னை காதலித்ததாகவும்
அந்தப் பெண் ஒரு ஐம்பது வயது நிரம்பிய ஆணுடன் நட்பு வைத்திருப்பதாகவும் சொன்னார்.அவரே
தொடர்ந்து நட்பாக பழகுவது ஒன்றும் தவறில்லைதான் ஆனால் எனக்கு ஏனோ அதை ஏற்றுக்கொள்ள
தெரியவில்லை என்றார்.ருத்ரன் அந்த நேயரின் பிரச்சனைக்கு தன்னமிக்கையின்மையே முக்கிய
காரணம் என்றார்.எனக்கு ருத்ரன் சொன்னது பிடித்திருந்தது.
மனக்குழப்பங்கள் , சோர்வு அல்லது மனநலம் சார்ந்த வேறு பிரச்சனைகள்
வரும் போது மனநல மருத்துவரை நாடுவது நல்ல செயல்தான்.எனக்கு ஒரு விஷயம் தான் குழப்பமாக
இருக்கிறது.இந்த மேலே சொன்ன மூன்று பேரும் தங்கள் கருத்துகளை மிக நிதானமாக தெளிவாக
ருத்ரனிடம் சொன்னார்கள்.அதிலும் அந்த இரு பெண்கள் மிக தெளிவாக பேசினார்கள்.அவர்கள்
பேசுவதை கேட்கும் போது நமக்கு கூட இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களே என்ற எண்ணம்
வரும்.இதில் ஒரு பொறி இருக்கிறது.நாம் நமது சிந்தனைகளை மொழியாக்கி நம்மிடமே சில முறை
சொல்லி ஒரு தொனியை உருவாக்கித்தான் பிறரிடம் சொல்கிறோம்.நானும் இந்த கட்டுரையில் ஒரு
தொனியை உருவாக்குகிறேன்.நாம் மொழி கொண்டு செய்யும் எதிலுமே அப்படி ஒரு தொனி இருக்கத்தான்
செய்யும்.ஆனால் மனநல பிரச்சனைகள் நம்முடையவை.நாம் மட்டுமே அறிந்தவை.அதை பிறரிடம் சொல்லும்
போது நாம் வேண்டுமென்றே ஒரு பாவனையை உருவாக்குகிறோம்.எனக்கு அந்த இரு பெண்கள் பேசுவதை
பார்க்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பாவனை இருப்பதாக தோன்றியது.”நான் நல்ல பெண்,
நான் செய்வது சரியான செயல் இல்லை, அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் இது தொடர்வதை
நான் விரும்பவில்லை” -இந்த பாவனை அவர்களின் பேச்சில் இருக்கிறது.ஆனால் அப்பட்டமாக அதை
பார்த்தால் அந்தப் பெண் தன் கணவர் மீது சந்தேகப்படுகிறார்.மற்றொரு பெண் தன் கணவர் தன்மீது
செலுத்தும் அதிகாரத்தை சகித்து கொள்ள விரும்பாதவராக இருக்கிறார்.இது என்னுடைய பார்வை.அது
ஒரு வேளை உண்மையாக இருந்தாலும் அதை அப்படியே அப்பட்டமாக அவர்கள் ஏற்க மாட்டார்கள்.நம்
மனம் நாம் விரும்பும் வகையில் ஒரு சித்திரத்தை உருவாக்கும்.அதை நாம் ஏற்போம்.பின்பு
அதை மட்டுமே உண்மை என நம்புவோம்.
அந்த ஆண் நேயர் தான் காதலித்த பெண் ஐம்பது வயது ஆணுடன் பழகுவது
நெருடலாக இருக்கிறது என்றும் ஆனால் அப்படி நெருடலாக இருப்பது தவறு என்று புரிகிறது
என்றும் சொன்னார்.இந்திய குடும்ப சூழலில் வளர்ந்த ஒரு ஆணுக்கு தான் காதலிக்கும் பெண்
இன்னொரு ஆணுடன் நட்பாகவே பழகினாலும் தவறாக தோன்றுவதற்கான வாய்ப்புதான் நிறைய இருக்கிறது.அது
இயல்பு.அவர் தன் நெருடலை ஒதுக்கிவிட்டுத்தான் அந்த பெண்னை காதலிக்க வேண்டும் என்றில்லை.அந்தப்
பெண்ணிடம் சொல்லிப்பார்க்கலாம்.அந்தப்பெண்ணுக்கு எது முக்கியம் என்று அந்தப் பெண் முடிவு
செய்யலாம்.இப்படியான நெருடல்களுடன் கூடிய துணை தனக்கு தேவையில்லை என்று அந்தப் பெண்
முடிவு செய்தால் அந்தப் பெண்னை விலகலாம்.நம்மை வருத்திக்கொண்டு நாம் பிறருக்கு நல்லவர்களாக
இருக்க வேண்டியதில்லை.நாம் முக்கியம் என்பவர்கள் நாம் முக்கியமாக கருதுவதை பரிசீலிப்பார்கள்.ஏது
முக்கியம் யார் முக்கியம் என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது.அவரும் ஒரு பாவனையைத்தான்
முன்வைக்கிறார்.தான் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட ஆண்தான் என்றும் ஆனால் இந்த நெருடலை
என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் புலம்பினார்.உறவுகளில் முற்போக்கு பிற்போக்கெல்லாம்
இல்லை.நமக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் பிரதானம்.மற்றவை எல்லாம் பின்னே
தானே வரும்.பிடிக்கவில்லையா விட்டுவிடலாம்.பிரச்சனை பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை
என்பதில் இல்லை.பிரச்சனை பாவனைகளில் இருக்கிறது.நாம் வேறு ஏதோ ஒன்றாக நம்மை காட்டிக்கொள்ள
விரும்புவதால் உருவாகும் பிரச்சனைகள் இவை.நம்மால் மிக சாதாரணமாக அலட்டிக்கொள்ளாமல்
ஒரு உறவில் இருக்க முடியும் என்றால் அந்த உறவு நமக்கு பிடித்திருக்கிறது என்று பொருள்.அதற்கு
அப்பால் உறவுகளை பற்றி நிறைய குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.திருமணம் போன்ற சட்டப்படியான
உறவுக்குள் சென்றுவிட்டால் பிரிவதை பற்றி நிறைய யோசிக்கலாம்.ஏனேனில் அந்த உறவை விட்டு
விலகினாலும் மற்றொரு உறவைத்தான் பெறப்போகிறோம்.அது நல்ல உறவாக இருக்கும் என்பதில்
எந்த உத்தரவாதமும் இல்லை.என் நண்பன் ஒருவனுக்கு சமீபத்தில் விவாகம் ரத்தாகிவிட்டது.என்
நண்பன் எவ்வளவு மன்றாடியும் அந்தப்பெண் விவாகரத்தை பெற்ற திருவேன் என்ற உறுதியுடன்
இருந்தார்.அந்தப் பெண்ணுக்கு என் நண்பன் மீது என்ன புகார்.என் நண்பனுக்கு ஹோட்டலில்
ஒழுங்காக சாப்பிட தெரியவில்லை.ஒரு நிகழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.லெளகீக சாமர்த்தியம்
போதவில்லை என்பது போன்ற சில புகார்கள்.நான் என் நண்பனிடம் இவை உன்னுடைய பிரச்சனைகள்
இல்லை, அந்தப் பெண்ணின் பிரச்சனைகள் என்றேன்.அவன் சோர்வாக சிரித்தான்.அந்தப்பெண் ஒரு
வேளை ஹோட்டலில் நன்றாக சாப்பிடக்கூடிய , கூட்டத்தில் நன்றாக நடந்துகொள்ள தெரிந்த ஒரு
ஆணை பிற்காலத்தில் தேர்தெடுக்கலாம்.அவருக்கு நாம் நம் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
நாம் நம் அகச்சிக்கல்களை பிறரிடம் சொல்லும் போது அதில் ஏதோ
ஒரு பாவனை கலந்துவிடுகிறது என்றுதான் தோன்றுகிறது.நாம் அதைச்சொல்லும் போதே எதிர்தரப்பில்
இருப்பவர்கள் இதைக்குறித்து என்ன கருதுவார்கள் என்ற எண்ணத்தோடே தான் நாம் வாக்கியங்களையும்,காரணங்களையும்,தொனியையும்
உருவாக்குகிறோம்.பாவனைகளை கலைந்து நம்மால் ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா என்று சிந்திக்கலாம்.
சாத்தியமே இல்லைதான்.ஆனால் மனநல மருத்துவர்கள் போன்றவர்களிடம் பேசும் போது அதை ஒரளவுக்கு
அப்பட்டமாக சொல்ல முடியுமா என்று பார்க்கலாம்.ஏனேனில் நாம் அவர்களிடம் பாவனையோடு பேசி
அடையப்போவது ஒன்றுமில்லை.
என் நண்பன் ஒருவன் நல்ல வேலையில் இருந்தான்.இப்போது வேலையை
விட்டுவிட்டான்.கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிறது.எந்த வேலைக்கும் போகவில்லை.தனக்கு
ஏதோ மிகப்பெரிய அகச்சிக்கல் இருப்பதாவும் அதனாலேயே தன்னால் வேலையில் கவனம் செலுத்த
முடியவில்லை என்றும் சொன்னான்.இரண்டு மூன்று மனநல மருத்துவர்களை பார்த்தான்.பின்னர்
அந்த மனநல மருத்துவர்கள் தன்னுடைய பிரச்சனையை சுத்தமாக புரிந்துகொள்ளாமல் ஏதோ கவனச்சிதறல்
என்ற வகையில் மாத்திரைகளும் பயிற்சியும் அளிக்கிறார்கள் என்றான்.தனக்கு இருக்கும் சிக்கல்
மிகப்பெரியது என்றும் அதை குணப்படுத்தினால் மட்டுமே தன்னால் சரியாக வேலைக்கு செல்ல
முடியும் என்று புலம்பினான்.என்னால் மிக நிச்சயமாக சொல்ல முடியும், அவனுக்கு எந்த மனச்சிக்கலும்
இல்லை.அவனுக்கு வேலையில் பிறரை எதிர்கொள்வதில் பயம் இருக்கிறது, கூச்சம் இருக்கிறது.வருடங்கள்
அதிகரிக்க அதிகரிக்க பொறுப்பு கூடுவது இயல்பு.அது அவனுக்கு அச்சத்தை உருவாக்கியது.வேலையை
விட்டுவிட்டான்.அவ்வளவுதான் பிரச்சனை.இதை அவனிடம் சொன்னால் மிக பயங்கரமாக கோபப்படுகிறான்.அவனுக்கு
புரிய வைக்கவே முடியவில்லை.அவனாக ஏதோ ஒரு தருணத்தில் அதை அறிந்து கொள்வதை தவிர அவனுக்கு
வேறு விடியல் இல்லை.பாவனைகள் பொல்லாதவை.என் நண்பனுக்கு சொன்ன அதே பிரச்சனைகள் சிறிய
அளவில் எனக்கும் இருந்தன.நான் ஒரு கட்டத்தில் முடிவு செய்தேன்.நான் கோழை.அது தான் சிக்கல்.பெருநகரம் X சிறுநகரம்,
லட்சியவாதம் X நுகர்வு, விவசாயம் X தொழில், விஞ்ஞானம் X இயற்கை,காந்தி X மார்க்ஸ்,மாசானோபு X ஐன்ஸ்டீன் இவை அல்ல என் சிக்கல் என்று.அதற்கு பின் வேலைக்கு
செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.அந்தப் பெண் தன் கணவரை தான் சந்தேப்படுவது
தவறு, தன் கணவர் தன்னை சந்தேகப்பட்டால் தான் எந்தளவுக்கு புண்படுவோம் என்று சிந்தித்துபார்த்தால்
இந்த பிரச்சனையை வேறு வகையில் அவரால் அணுகமுடியும்.
அப்படியான புரிதலுடன் அதை அப்பட்டமாக ஒரு மனநல மருத்துவரிடம்
சொல்ல முடியும் என்றால் நமக்கான சிகிச்சையும் எளிதாகும்.சரி இதை ஒரு மனநல மருத்துவரால்
கண்டுபிடிக்க முடியாதா என்று கேள்வி உருவாகலாம்.நிச்சயம் எந்த மனநல மருத்துவருக்கும்
அது தெரியும்.ஆனால் பாவனைகளுக்கு பின்னால் உள்ள அப்பட்டமான உண்மை என்ன என்பதை அவர்களாலும்
எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்றே நிணைக்கிறேன்.
No comments:
Post a Comment