அதீத வெளிச்சத்தில் உடையும் கண்ணாடிகள்







சில வருடங்களுக்கு முன் கோவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்தது.அதில் திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் மகன் தன்னார்வலராக கலந்து கொண்டார்.சில பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எப்படி கம்யூனிஸத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்று கேள்வி கேட்டார்கள்.அதற்கு அவர் “Marxism is glamorous” என்று பதில் சொன்னார்.அவருக்கு அப்போது வயது பதினாறு.இப்போது அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருக்கிறாரா என்று தெரியவில்லை.

மார்க்ஸிஸம் கவரக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மை.ஏனேனில் அது உலகை புரட்டி போட்டு விட முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.எதை எல்லாம் நம்மால் புரட்டி போட்டு விட முடியும் என்று நாம் நினைக்கிறோமோ அதன் மீதெல்லாம் ஈர்ப்பு கொள்கிறோம்.பணத்தை, மண்னை, இயற்கையை புரட்டலாம் என்று நினைக்கிறோம்.இறுதியில் அவை நம்மை புரட்டி போட்டு விடுகிறது என்பது வேறு விஷயம்.

ஏன் மார்ஸிஸம் கவரக்கூடியதாக இருக்கிறது என்றால் அது முதலில் சமூகத்தை இரண்டு வர்க்கங்களாக பிரிக்கிறது.பின்னர் அதில் பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து பாட்டாளி சர்வாதிகாரத்தை உருவாக்கி தொழிற்சாலைகள், விவசாயம், சிறு தொழில்கள், பெருந் தொழில்கள் அணைத்தையும் அரசுடைமை ஆக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.முதலாளி தொழிலாளி என்ற வர்க்க பிரிவினை இல்லாத சுரண்டல் அற்ற அற்புதமான சமூகம் உருவாக இயலும் என்ற ஆன்மிக கருத்தை முன்வைக்கிறது.அதனால் அது கவரக்கூடியதாக இருக்கிறது.அது தூய்மையாக இருக்கிறது.அது நம்மை இந்த சமூகத்தில் செயல்பாட்டாளர்களாக , சிந்தனையாளர்களாக நிறுவிக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது.லட்சியவாதங்களால்தான் அதை செய்ய இயலும்.காந்தியம் லட்சியவாதம் தான்.மதிய நேரத்தில் சைக்கிள் ஒட்டுவது போலத்தான் காந்தியம்.திசை இருக்கும், செயல் இருக்கும்,ஆனால் இல்லாதது போல இருக்கும்.அதனால் பலருக்கு அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இல்லை.

அபிலாஷின் ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரம் இதுபோல தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவனாக நமக்கு அறிமுகமாகிறான்.அவன் செங்கதிர் என்ற இடதுசாரி கோட்பாடுகளை உள்ளடக்கிய சிற்றிதழை நடத்துகிறான்.மிகவும் ஏழ்மையான குடும்பம்.அவனுக்கு ஒரு தங்கையும் தம்பியும்.அவனது அம்மாவின் உழைப்பில் தான் குடும்ப ஜீவிதம் நடக்கிறது.நாவலின் காலம் 1991 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை என்று கொள்ளலாம்.

1991 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் பொருளாதார கொள்கைகளில் மாற்றம் வந்தது.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை அரசு ஏற்றது.1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்கிறது.இடதுசாரிகள் பொதுவாக உலகமயமாக்கலை எதிர்த்தார்கள்.ஆனால் அவர்கள் தான் Proletarians of the world unite என்று சொன்னவர்கள்.சாதிக் உலகமயமாக்கலின் தீமை குறித்து பேசுகிறான்.மாற்று சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான்.மிக இறுக்கமான ஒழுக்க மதிப்பீடுகளை கொண்டவனாக இருக்கிறான்.

நாவலின் துவக்கத்தில் அவன் பட்டதாரி இளைஞன்.அவனுடைய வயது இருபதிலிருந்து இருபத்தியைந்துக்குள் என்று வைத்துக்கொள்ளலாம்.அவனுடைய நண்பன் சங்கர்.சங்கரின் பார்வையில் தான் நாவல் சொல்லப்படுகிறது.சங்கர் சாதிக்கை விட வயதில் சிறியவன்.இருவருக்கும் கிட்டத்தட்ட ஐந்த வயது வித்யாசம் இருக்கிறது. வெங்கட், மூர்த்தி என்ற வேறு சில நண்பர்களும் நாவலின் முற்பகுதியில் வருகிறார்கள்.

நாவல் தலைப்பு ரசிகன்.லட்சியவாதத்தின் மீதான ஈர்ப்பு கொண்ட சாதிக் பத்து வருடங்கள் கழித்து சென்னையில் ரஜினி ரசிக மன்றத்தின் செயலாளராக மாறுகிறான்.தீவிர இடதுசாரி சிந்தனையாளனாக இருந்த சாதிக் ரஜினி ரசிகராக மாறும் சித்திரத்தை இந்த நாவல் விவரிக்கிறது.இங்கே உள்ள முக்கிய விஷயம், இடதுசாரி சிந்தனையாளன் ரஜினி ரசிகராக மாறுவது வீழ்ச்சியாக காட்டப்படவில்லை என்பதுதான்.ஏனேனில் சாதிக் எப்போதும் ரசிகனாகத்தான் இருக்கிறான்.அவன் லட்சியவாதங்கள் மீது ரசிக மனநிலையோடு இருக்கிறான்.இப்போது நாம் லட்சியவாதங்கள் இல்லாத ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதனால் இனி லட்சியவாதங்களை பற்றிக்கொண்டிருக்க முடியாது.வேறு ஏதேனும் ஒன்றின் ரசிகனாக மாற வேண்டும்.அதுவரை இடதுசாரிகளாக இருந்தவர்கள் சோவியத் ரஷ்யா வீழ்ச்சி அடைந்த போது தமிழ் தேசியம் பேச ஆரம்பித்தார்கள்.அவர்கள் அண்டோனியோ கிராம்ஷியை எல்லா இடங்களிலும் மேற்கொள் காட்டினார்கள்.இயங்கியல் பொருள்வாத சிந்தனையில் பொருள் தான் முதன்மையானது.மண்ணுக்கு தான் முன்னுரிமை.ஆனால் பின்னர் அவர்களே கருத்தும் முக்கியம் தான், பண்பாடும் முக்கியம் தான், மொழி முக்கியம்தான் என்றார்கள்.மொழி மீட்போம், தமிழ் தேசியம் அடைவோம் என்ற மாறினார்கள்.அது ஒருவகையான பற்றுதல்.வேறு சிலர் மதத்தின் பக்கம் திரும்பினார்கள்.சாதிக் தமிழ் தேசியத்தை கிண்டல் செய்கிறான்.அவன் வழிபடும் இஸ்லாமியன் அல்ல.அவனுக்கு தமிழ் தேசியமும் இல்லை, மதமும் இல்லை.இந்தியாவில் எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட ஒருவனுக்கு இறுதியல் அடைக்கலம் தரும் ஒரே அமைப்பு குடும்பம்.அது எத்தனை குரூர வன்முறைகள் நிறைந்ததாக இருந்தாலும் அதுவே இந்தியாவில் ஒருவனை அநாதையாகமல் காப்பாற்றும் அமைப்பு.சாதிக் வாழ்க்கையிலும் காதலும் திருமணத்திற்கான சாத்தியங்களும் வருகின்றது.சாதிக் அவனுடைய அண்னை இறந்து போன பின் திருவணந்தபுரத்தில் பேரரல் காலேஜில் வேலை செய்கிறான்.அங்கு ரெஜினா என்ற பெண் அவனை காதலிக்கிறாள்.அவனும் காதலிக்கிறான்.ரெஜினாவின் தந்தை திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.ஆனால் சாதிக் இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறான்.இதற்கு ஒரு முக்கிய உளவியல் காரணம் இருக்கிறது.

வைக்கம் முகமது பஷீர் ஏதோ ஒரு கதையில் இந்தியவிற்கு சுதந்திரம் கிடைத்தாக வேண்டும், அதில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்பார்.லட்சியவாதத்தின் முக்கிய விசை நம்மை ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்தில் நிறுவிக்கொள்ள வேண்டும் என்ற இச்சையை ஏற்படுத்துவதுதான்.அதனால்தான் லட்சியவாதிகளால் சோர்வடையாமல் வேலை செய்ய முடிகிறது.ஒரு முறை தியோடர் பாஸ்கரன் காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் தான் இந்தியன் போஸ்டல் சர்வீஸில் தேர்ச்சி பெற்று வடகிழக்கு மாநிலத்தில் வேலை கிடைத்து சென்ற பின் அங்கு நிரந்தரமான வேலை,திருமணம்,குழந்தைகள் அவ்வளவுதானா என் வாழ்க்கை என்று சோர்வடைந்ததை சொல்கிறார்.ஏதேனும் ஒரு துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புவர்கள் இரண்டு வருடங்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்ற ஒரு அரசு அறிவிப்பை பார்க்கிறார்.இரண்டு வருட விடுப்பில் சினிமா துறை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.பின்னர் தான் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என்று சொல்கிறார்.அவர் தன்னை தான் விரும்பிய வகையில் இந்த சமூகத்தில் நிறுவிக்கொண்டார்.இது சிலருக்கு முக்கியம்.எல்லோருக்கும் இல்லை.சாதிக் அப்படி தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.நிறைய வாசிக்கவும், எழுதவும் வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறான்.ரெஜினாவை திருமணம் செய்து கொண்டால் நல்ல வேலை குடும்பம் என்ற நேர்கோட்டான வாழ்க்கை அமைந்து விடும்.தான் விரும்பிய எதையுமே தன்னால் செய்ய இயலாமல் போய் விடும் என்று அஞ்சுகிறான்.அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்கிறான்.ரெஜினா தற்கொலைக்கு முயல்கிறாள்.ரெஜினாவின் தந்தை சாதிக் மீது வழக்கு தொடுக்கிறார்.சாதிக் ஆறுமாத காலம் சிறையில் இருக்கிறான்.

ஒரு பக்கம் லட்சியவாதங்கள் சார்ந்த வீழ்ச்சி , இன்னோரு பக்கம் ரெஜினாவிற்கு தான் செய்த தீங்கு, இவை இரண்டாலும் சாதிக் சிதறுண்டு போகிறான்.ஒழுக்க வாதிகள் சிதறுண்டு போனால் மிகவும் கீழான இடத்தை சென்றடைவார்கள்.ஏனேனில் அதீத ஒழுக்கவாதம் என்பது அதீத தூய்மை.சாதிக் மிகுந்த வெறுமையை அடைகிறான்.

முறையிட ஒரு கடவுள்,நம்ப ஒரு சித்தாந்தம்,உலவ ஒரு வெளி,வாழ ஒரு கனவு,கதை கேட்க ஒரு செவி,பற்றிக்கொள்ள ஒரு கரம் இது எதுவுமே சாதிக்கிற்கு இல்லாமல் போகிறது.அடுத்த சில வருடங்களில் அவன் சென்னை செல்கிறான்.ஈ-பப்ளிஷிங் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான்.நிறைய குடிக்கிறான்.பிரவீனா என்ற ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான்.ஆனால் அவனால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.குற்றவுணர்வு,வெறுமை அவனை துரத்துகிறது.பக்கவாதத்தால் தாக்கப்படுகிறான்..ஒரு முறை ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்ற மேலே செல்பவன் தவறி கிழே விழுந்து இறக்கிறான்.

இந்த ரசிகன் நாவலை நாம் தமிழில் இதே தளத்தில் வந்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி, ஜெயமோகன் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல், அசோகமித்திரன் எழுதிய மானசரோவர் ஆகிய நாவல்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.

அசோகமித்திரனின் மானசரோவர் நாவலில் சத்யன்குமார் என்ற இந்தி சினிமாவின் பிரபல நடிகன் தன் நண்பன் கோபாலின் குடும்பம் சிதறுண்டு போனதற்கு தான் ஒரு முக்கிய காரணம் என்று குற்றவுணர்வு கொள்கிறான்.அவன் திருவாரூர் அருகே ஒரு சித்தரை சந்திக்கிறான்.அவன் சொல்வதற்கு முன்னே அந்த சித்தர் அவனது பிரச்சனைகளை சொல்கிறார்.அங்கு இருக்கும் ஒரு ஆற்றில் குளித்து வர சொல்கிறார்.அதுவே அவனுக்கு மானசரோவர் என்று சொல்கிறார்.அதுவே அவனுக்கான மீட்சியாக அமைகிறது.அது ஒரு எளிய சடங்கு.ஆனால் அந்த சடங்கை செய்வதன் மூலமாக அவன் மீட்சி அடைகிறான்.அவன் இனியான வாழ்வை இனிமையாக வாழ்வதற்கான ஒரு சடங்கு அது.நதி என்பது காலமும் வாழ்க்கையும்.ஒரு முறை ஆற்றில் குளித்து எழுபவன் மறுபிறவி கொள்கிறான்.ஏனேனில் அவன் முழ்கும் போது இருந்த நீர் அல்ல அவன் எழும் போது இருக்கும் நீர்.அது கடந்து விட்டது.அவனும் அவனது கடந்தகாலத்தை கடக்கிறான்.அவன் மீள்கிறான்.

சாதிக்கிற்கு இத்தகைய மீட்சி சாத்தியமில்லாமல் போகிறது.எளிய சடங்குகளை செய்ய ஒன்றை வேறொன்றாக உருவகப்படுத்திக்கொள்ளும் மன அமைப்பு இருக்க வேண்டும்.நதியை வாழ்க்கையாக காலமாக பார்பதற்கு தர்க்கத்திலிருந்து சற்று விலகி இருக்க வேண்டும்.அதற்கு அறியாமை வேண்டும்.சாதிக் அந்த அறியாமையை முழுக்க இழந்து நிற்கிறான்.எப்படி இருட்டில் ஒன்றும் தெரியாதா அப்படி அதீத வெளிச்சத்திலும் ஒன்றும் தெரியாது.

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலில் வரும் சம்பத் திராவிட இயக்கத்தில் ஒரு காலத்தில் தீவிரமாக ஈடுபடுகிறான்.எல்லா லட்சியவாதங்களும் ஓரு கட்டத்தில் முடிகிறது.அந்த காலகட்டம் முடிந்த பின் அதில் ஈடுபட்டவர்கள் கோமாளிகளை போலத்தான் ஆகிறார்கள்.அப்படி கோமாளியாக ஆகாதவர்கள் அந்த லட்சியவாதத்தின் மீது ரசிக மனநிலை அற்றவர்கள்.அவர்கள் மட்டுமே கோமாளியாகமல் தப்பிக்கிறார்கள்.சம்பத் அவன் நம்பிய லட்சியவாதத்தின் காலகட்டம் முடிந்த பின் சாதிக்கை போல சிதறுகிறான்.ஆனால் சாதிக் தான் முழுமையாக சிதைகிறோம், சிதறுகிறோம் என்று அறிந்து அதை அனுமதிக்கிறான், சம்பத் தனக்கு என்ன நேர்கிறது என்று அறியாமலேயே தொலைந்து போகிறான்.காற்று தூக்கி விசுவது போல அவன் தூக்கி விசப்படுகிறான்.

ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும்.அருணாச்சலம் இடதுசாரி சிந்தனையாளன்.தொழிற்சங்கவாதி.அவன் ஒரு கட்டத்தில் அறிவுக்கும் அதிகாரத்திற்குமான தொடர்பை கண்டுகொள்கிறான்.அவன் சிதறுகிறான்.ஆனால் அவன் மீள்கிறான்.கதை கேட்க ஒரு செவியும், பற்றிக்கொள்ள ஒரு கரமும் அவனுக்கு சாத்தியப்படுகிறது.அவன் அவனுடைய மனைவி நாகம்மையின் மூலமாக மீட்சி அடைகிறான்.அறிவின் அதிகாரத்தையும் அறிவின் வெறுமையையும் உணர்பவன் குழந்தைமையின் நிஷ்களங்கத்தையும் ஏதோ ஒரு தருணத்தில் கண்டுகொள்கிறான்.அவன் செயலாற்ற அவன் முன் வாழ்க்கை இல்லை.ஆனால் சிதறி போகாமல் இருப்பதற்கான கிறுஸ்து அவனுக்கு கிடைக்கிறார்.அந்த கிறுஸ்துவால் ஒன்றுமே செய்ய இயலாது.அவர் எந்த அதிசயத்தையும் நிகழ்த்த போவதில்லை.அது ஒரு வகையில் தஸ்தாவெய்ஸ்கியின் கிறுஸ்து.அவர் அவனுடன் இருப்பார்.அதற்கு அப்பால் அவரால் ஒன்றும் செய்ய இயலாது.அவர் அருணாச்சலத்தின் மீட்சியாக இருக்கிறார்.இத்தகைய எந்த தேவதூதனோ அல்லது பற்றிக்கொள்ளும் கைகளோ சாதிக்கிற்கு சாத்தியப்படவில்லை.அப்படி சாத்தியப்படும் கைகளையும் அவன் வேண்டுமென்ற விலக்குகிறான்.அதற்கு காரணம் இருக்கிறது.சாதிக் நாவலின் துவக்கத்தில் தன்னுடைய கிராமத்தில் இருக்கும் போது பக்கத்து வீட்டு கைக்குழந்தை ஒன்றை அவனுடைய தங்கை தன் வீட்டுக்கு எடுத்து வந்து தரையில் கிடத்தியிருப்பாள்.பின்னர் அவள் பள்ளிக்கு சென்றுவிடுவாள்.சாதிக்கும் அவனது நண்பன் சங்கர் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.செங்கதிர் இதழ் வேலைக்காக வெளியே சென்று வரலாம் என்று சாதிக் சொல்வான்.குழுந்தையை விட்டுவிட்டு செல்வது சரியில்லை என்று சங்கர் சொல்வான்.அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று சொல்லி சங்கரை அழைத்து செல்வான் சாதிக்.மாலை வந்து பார்த்தால் குழந்தை இறந்து கிடக்கும்.சாதிக் எந்த குற்றவுணர்வும் கொள்ள மாட்டான்.அழவும் மாட்டான்.இதில் இருப்பது இரண்டு விஷயங்கள்.ஒன்று ரசிக மனநிலை.செங்கதிர் இதழ் நடத்தவதற்கு பின்னால் இருக்கும் ரசிக மனநிலை.இன்னொன்று இறுகி போன மனம்.ஒரு வகை மரத்து போதல்(Numbness).சிலருக்கு பிறரின் துயரை புரிந்துகொள்ள முடியாது, உணரவும் முடியாது.வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு தீவிர எண்ணத்தால் மனம் முழுவதும் உரையாடல்களால் நிரம்பி அந்த அழுத்தத்திலேயே நீண்ட நாட்கள் கடத்துபவர்கள் இப்படியான மரத்து போகும் குணம் உள்ளவர்களாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.கதையின் பிற்பகுதியில் வரும் பிரவீனா என்ற கதாபாத்திரமும் கிட்டத்தட்ட இப்படியானவள்தான்.அதனால் சாதிக்கால் பிறர் தனக்கு அளிக்கும் மீட்சிக்கான பாதைகளை கண்டுகொள்ள முடியவில்லை.குழந்தைக்காக அழ இயலாத சாதிக் தன்னுடைய பிறழ்வுக்காகவும் அழ முடியாதவனாக இருக்கிறான்.அவன் தன் அழிவை இயல்பாக ஏற்கிறான்.அவன் ஒரு வகையில் அதை விரும்புகிறான்.

தஸ்தாவெய்ஸ்கியின் பீடிக்கப்பட்டவர்கள் அல்லது சாத்தான்கள் என்ற நாவலில் வரும் நிகோலய் என்ற கதாபாத்திரத்தோடும் சாதிக்கை ஒப்பிடலாம்.நிகோலய் அவன் வாழும் ஊரில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ரகசிய குழுவின் முக்கிய அங்கத்தினனாக இருக்கிறான்.அவன் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கும் போது பதினான்கு வயது சிறுமியுடன் வல்லுறவு கொள்கிறான்.நாவலின் ஒரிடத்தில் அந்த சிறுமிக்கு பத்து வயது என்றும் இன்னொரு இடத்தில் பதினான்கு வயது என்றும் வருகிறது.அந்த சம்பவத்திற்கு பின் அந்த சிறுமி தற்கொலை செய்து கொள்கிறாள்.அவள் யாரிடமும் இதை சொல்லவில்லை.வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.நிகோலய் சிக்கிக்கொள்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.ஆனால் அந்த சம்பவம் அவனை மிகுந்த குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிறது.அவன் அடிப்படையில் அந்த புரட்சிக்கான குழுவில் ஈடுபடுவதில் பெரிய நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்.ஆனால் அவனுக்கு தன் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க அதில ஈடுபடுவதை தவிர வேறு வழியும் இல்லை.அவன் ஒரு முறை பாதிரியார் டிகோன் என்பவரை சந்தித்து பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சம்பவத்தை சொல்கிறான்.அவன் மனம் மிகவும் அலைகழிந்து கிடக்கிறது.அந்த பாதரியாரிடம் அவன் கிட்டத்தட்ட பாவ மன்னிப்பு கேட்கும் தொனியில் தான் அணைத்தையும் சொல்கிறான்.அப்போது அந்த பாதிரியார் நீ செய்த செயலை போலவும் அதை விட கீழான செயல்களை செய்தவர்களும் அதை குறித்த எந்த அலட்டலும் இல்லாமல் அதன் பின்னான வாழ்வை கழிக்கிறார்கள்.இந்த உலகில் இத்தகைய செயலை செய்தது நீ ஒருவன் மட்டும் இல்லை.நிறைய பேர் இருக்கிறார்கள்.ஆனால் உன்னால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை.நிகோலய் தான் செய்த செயலை அணைவரும் அறியும் வகையில் செய்திதாளில் வெளியீடப்போவதாக சொல்கிறான்.அதற்கு பாதரியார் நீ அப்படி செய்தால் உன் மீது அனுதாபமோ இரக்கமோ அல்லது கோபமோ கூட வராது.மாறாக ஒரு கேலிப்புன்னகையைத்தான் அது உருவாக்கும்.நீ ஒரு கோமாளியாகத்தான் காட்சி அளிப்பாய்,அதனால் உனக்கு எந்த பலனும் இருக்காது.மாறாக ஊருக்கு வெளியே நான் சொல்லும் பாதரியாரிடம் சென்று ஏழு வருடங்கள் ஊழியம் செய்தால் உனக்கான மீட்சி கிடைக்கும் என்று சொல்கிறார்.நிகோலய் அதை ஏற்க மறுக்கிறான்.பாதிரியார் இறுதியில் நிகோலயிடம் நீ உன் செயல்களை பகிரங்கமாக சொன்னால் அது அவமானத்தையே அளிக்கும் என்பதால் நீ அதை சொல்லப்போவதில்லை, அதே நேரத்தில் ஊழியம் செய்யவும் மறுக்கிறாய், அப்படியென்றால் இந்த குற்றவுணர்வால் இதை விட கீழான காரியங்களை நீ செய்வதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறது என்பார்.அப்படியே நிகோலய் பல தீய சம்பவங்கள் நடக்க போகிறது என்று அறிந்தும் அதை தடுக்காமல் விட்டு விடுகிறான்.இறுதியில் அந்த சிறுமியை போலவே தற்கொலை செய்து கொள்கிறான்.நிகோலய் கதாபாத்திரத்தை பல வகையில் சாதிக்குடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.வெறுமை , குற்றவுணர்வு , மீட்சிக்கான வழியற்று திகைத்து நிற்பது என்று இரண்டு கதாபாத்திரங்களையும் பல வகையில் ஒப்பிடலாம்.

மிக இறுக்கமானவர்கள் உடையும் போது பயங்கரமாக சிதறுகிறார்கள்.அவர்களால் மறுபடியும் தங்களை தொகுத்துக்கொள்வது பல நேரங்களில் இயலாமல் போகிறது. சாதிக் ரஜினியின் கட்-அவுட்டில் ஏறி நின்று பால் ஊற்றும் போது தவறி போய் கீழே விழுந்து இறந்து விடுகிறான்.அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை.தவறி போய் கீழே விழுந்து இறந்து விடுகிறான்.தற்செயல் அவனுக்கான மீட்சியாக அமைகிறது.

இந்த நாவல் லட்சியவாதங்களுக்கு பின்னால் இருக்கும் ரசிக மனநிலையும் , அந்த லட்சியவாதங்களின் காலகட்டம் முடியும் போது அந்த ரசிகர்கள் எப்படி கோமாளிகளாக மாறுகிறார்கள் என்பதையும் மிக தீவிரமாக சொல்கிறது.இந்த நாவலின் மிக முக்கியமான குறை இன்றைய காலகட்டத்தின் கரிசனம் சாதிக் மீது இல்லை என்பதே. தொண்ணூறுகளிலிருந்து இன்றைய உலகம் மிக வேகமாக மாறிவிட்டது.ஆண் பெண் உறவுகள், நாம் நம் தனிமையை செலவழிக்கும் விதம், மதிப்பீடுகள், விழுமியங்கள் , குடும்ப உறவுகள் எல்லாமே மிக வேகமாக மாறிவிட்டன.எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த மாற்றங்கள் பெரிய அதிர்ச்சியை அளிக்காமல் இருக்கலாம்.ஆனால் சாதிக் போன்றவர்களுக்கு இந்த காலகட்டத்தை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த சிக்கல் இருக்கிறது.மலை உச்சயில் ஏறியவனுக்குத்தான் விழுந்தால் பலமாக அடிபடும்.சமதளத்தில் செல்பவனுக்கு அல்ல.இந்த கரிசனம் நாவலில் சாதிக் மீது எங்குமே  விழவில்லை.இது ஒரு குறை என்றே நினைக்கிறேன்.

மேலும் தொண்ணூறுகளில் இலக்கிய , அரசியல் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கி வந்தவர்களை பற்றியும் இந்த நாவலில் சில குறிப்புகள் வருகிறது.அவர்கள் தொண்ணூறுகளில் எப்படி இருந்தார்கள் என்பதையும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதையும் இந்த நாவல் சொல்கிறது.அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது அத்தனை கடினமான காரியம் இல்லை.மனிதர்கள் காலகட்டத்தின் மாற்றத்தின் போது வேறு வழி இல்லாமல் மாறியே ஆக வேண்டிய இந்த கோமாளித்தனத்தை அபிலாஷ் இன்னும் சற்று கரிசனத்தோடு சொல்லியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

கடந்த இருபது வருடங்களில் தமிழ் சிற்றிதழ் அறிவுசார் உலகத்தின் லட்சியவாதங்களையும் அவற்றின் வீழ்ச்சியையும் இந்த கால மாற்றத்தின் கரிசனம் இல்லாமல் முன்வைக்கும் நாவலே ரசிகன்.

ரசிகன் – ஆர்.அபிலாஷ் – உயிர்மை வெளியீடு









No comments: