அசோகமித்திரனின் மானசரோவர்
நாவலை நாவல் என்று சொல்வது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.ஏனேனில் இது அடிப்படையில்
ஒரு சிறுகதைக்கான வடிவத்தையே கொண்டிருக்கிறது.தொடக்கம் – முடிச்சு – முதிர்வு அதுவே
மானசரோவர் நாவலின் கதை வடிவம்.கோபால்-சத்யன்குமார் இருவரும் நண்பர்கள்.கோபால் சென்னையில்
ஒரு சினிமா கம்பெனியில் கதை இலாகாவில் பணி புரிபவன்.சத்யன்குமார் இந்தி சினிமா உலகின்
மிக முக்கியமான நாயகன்.சத்யன்குமார் சென்னையில் உள்ள சினிமா கம்பெனி தயாரிக்கும் இந்தி
படத்தில் நடிக்க வரும்போது கோபாலுடனான தொடர்பு ஏற்படுகிறது.பின்னர் சத்யன்குமார் சென்னை
வரும்போதெல்லாம் இருவரும் சந்திக்கிறார்கள்.இருவருக்கும் இலக்கியம் போன்ற விஷயங்களில்
ஆர்வம் இருப்பதால் அவர்களால் இயல்பாகவும் பேசிக்கொள்ள இயல்கிறது.சத்யன்குமாருக்கு கோபால்
மெஹர் பாபாவை நினைவுபடுத்துகிறான்.கோபாலுக்கு சத்யன்குமார் தன் மீது ஏன் இத்தனை அன்பும்
பரிவும் மதிப்பும் கொள்கிறான் என்று புரியவில்லை. அவனுக்கு ஒரு சித்தர் அறிமுகம் கிடைக்கிறது.அவருடனான
பழக்கம் அவனுடைய ஆளுமையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.கோபால் எதன்
மீதும் அதிக பற்று இல்லாதவனாக தன்னையே விலகி நின்று பார்க்கும் பார்வை கொண்டவனாக மாறுகிறான்.
சத்யன்குமார் பெஷாவரில்
பிறந்து பம்பாய் வந்து பின்னர் நடிகனாக வாழ்வில் உயர்வு பெறுகிறான்.இந்திய பிரிவினைக்குப்
பின் தன் தாய் தந்தையரை அவனால் ஒரு போதும் சந்திக்க இயலவில்லை.அவர்கள் உயிருடன்
இருக்கிறார்களா அல்லது மரணமடைந்து விட்டார்களா என்பதையும் அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை.பம்பாயில்
அவன் வீட்டில் அவனை சுற்றி எப்போதும் அவனது உறவினர்கள்.இது நடிகர் திலீப்குமாரை வைத்து
உருவாக்கப்பட்ட புனைவு கதாபாத்திரம் என்பதை எவருமே எளிதல் அறியலாம்.
நாவலின் மையம் பிறழ்வு.கோபாலின்
மனைவி ஜம்பகம் சத்யன்குமார் வீட்டிற்கு வரும் போது அவன் மீதான ஈர்ப்பால் அவனை நெருங்குகிறாள்.அதிர்ச்சியடையும்
சத்யன்குமார் வெளிறிப்போய் ஓடுகிறான்.இதை கோபாலின் மகனும் மகளும் பார்த்துவிடுகிறார்கள்.அடுத்த
சில வருடங்களில் ஜம்பகத்தின் மனம் பிறழ்ந்து விடுகிறது.அதற்கு முன் எப்படியோ கோபாலை
கட்டாயப்படுத்தி தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள்.தன் பிறழ்வின் சாட்சியாக
இருந்த மகனை கொன்றுவிடுகிறாள்.தன் மனைவியால்தான் தன் மகன் கொலை செய்யப்பட்டான் என்ற
உண்மையை கோபால் சத்யன்குமாரிடம் மட்டும் சொல்கிறான்.
கோபாலின் குடும்பம் சிதறுண்டு
போனதற்கு தானும் ஒரு காரணம் என எண்ணும் சத்யன்குமார் குற்றவுணர்வு கொள்கிறான்.உண்மையை
சொல்ல கோபாலை தேடி அலைகிறான்.ஆனால் கோபால் சித்தரை பார்ப்பதற்காக ஊருக்கு சென்று விடுகிறான்.
சியாமளா என்று துணை நடிகை கோபால் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள சத்யன்குமாருக்கு உதவுகிறாள்.சத்யன்குமாருக்கு
சியாமளா மீது பற்று ஏற்படுகிறது.அவளை தன் துணைவியாக்கி கொள்கிறான்.படப்படிப்பு ஒன்றின்
போது தன் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளும் சத்யன் இனியும் கோபலை சந்திப்பதை
தள்ளிப்போடக்கூடாது என்று முடிவு செய்து ராமனாதன் என்னும் சவுன்ட் என்ஜீனியரின் துணையோடு
கோபால் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறான்.
சத்யன்குமார் உண்மையை சொல்வதற்கு முன் அங்குள்ள சித்தர் அனைத்தையும் சொல்கிறார்.கல்லீரல் பாதிப்பு ஒன்றும் செய்யாது என்கிறார்.அங்குள்ள ஆற்றில் குளித்து சத்யன்குமாரை தன் பாவங்களில் இருந்து மீட்சியடைய சொல்கிறார் சித்தர்.அதுவே அவனுடைய மானசரோவர் என்கிறார்.
திலீப்குமாரின் கதை ஒன்றில்
நிறைய குடித்தனங்கள் இருக்கும் வீட்டு கிணற்றில் எலி விழுந்து இறந்து விடும்.இப்போது
என்ன செய்வது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும்.அங்கே வாழும் ஒரு பாட்டி கங்கா
தீர்த்தத்தை கொண்டு வந்து கிணற்றில் ஊற்றுவாள்.இனி ஒன்றும் பிரச்சனையில்லை என்று சொல்லி
சென்று விடுவாள்.இந்த பாட்டி திலீப்குமாரின் பல கதைகளில் வருகிறாள்.அக்ரஹாரத்தில் பூனை
என்ற சிறுகதையில் வருவதும் இதே பாட்டிதான்.பாட்டி கிணற்றில் கங்கா தீர்த்தத்தை ஊற்றியதற்கும்
சித்தர் சத்யன்குமாரை ஆற்றில் குளிப்பதின் மூலமாக மீட்சி அடையலாம் என்று சொல்வதற்கும்
பெரிய வித்யாசமில்லை.வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது.மறுபடியும்
சரி செய்ய இயலாத பிறழ்வு.ஆனால் அந்த பிறழ்வுக்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது.அதை வாழ்ந்தாக
வேண்டும்.அதற்கு நாம் அந்த பிறழ்வை கடந்தாக வேண்டும்.பல நேரங்களில் பிறழ்வின் தாக்கம்
நம் அகத்தில்தான் இருக்கிறது.புற பாதிப்புகள் பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை.ஜம்பகம்
பிறழ்கிறாள்.அதிலிருந்து வெளியே வந்து அவளால் இயல்பான வாழ்வை வாழ இயலவில்லை அல்லது
தெரியவில்லை.அவள் மனம் சிதறிவிடுகிறது.சிதறி விடும் மனதை தொகுத்துக்கொள்ள அவளால் முடியவில்லை.தர்க்கம்
கொண்டோ, அல்லது அபத்த சடங்குகளின் மூலமாகவோ அல்லது மன்னிப்பு கோரியோ நாம் ஒரு பிறழ்வை
கடந்து செல்லலாம்.ஜம்பகத்தால் இதில் எதை ஓன்றையும் செய்ய இயலவில்லை.சத்யன்குமாருக்கு
தர்க்க ரீதியாக இதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று புரியவில்லை.சித்தர் அவனுக்கு
ஒரு அபத்த சடங்கை செய்யச்சொல்லி அதன் மூலமாக அவனுக்கான மீட்சியை அளிக்கிறார்.
அசோகமித்திரனின் தண்ணீர்
நாவலில் இரு சகோதரிகளில் மூத்தவளின் வாழ்வு பிறழ்ந்துவிடுகிறது.அதன் பின்னான வாழ்வை
எப்படி தொகுத்துக்கொள்வது அர்த்தப்படுத்திக்கொள்வது என்று அவள் தன்னளவில் அறிந்து கொள்கிறாள்.பிறழ்வும்
மீட்சியுமே தண்ணீர் நாவலும் மானசரோவர் நாவலும் முன்வைக்கும் மையச்சரடு.நான் வாசித்தவரை
அசோகமித்திரனின் நாவல்களில் இது மிகவும் விசித்திரமானது.அறிவின் துணை கொண்டு நம்மால்
சில விஷயங்களை வாழ்வில் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.சத்யன்குமாருக்கும் கோபாலுக்கும்
சித்தர் ஏதோ ஒரு வகையில் உதவுகிறார்.ஒரு மனநல மருத்துவரிடம் சென்று அவர் அளிக்கும்
மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை உட்கொண்டு சத்யன்குமார் ஒரு வேளை மீளலாம்.ஜம்பகமும்
மீளலாம்.ஆனால் அடிப்படையில் நம் மனச்சோர்வு நீங்க வேண்டும் என்றால் அதன் காரணமான அலைகள்
நம் மனதிலிருந்து முழுவதுமாக நீங்க வேண்டும்.அதை எல்லா நேரங்களிலும் மனச்சோர்வுக்கு
எதிரான மருந்துகளால் செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை.நமது மனச்சோர்வு, பிறழ்வுக்கான
காரணத்தை நாம் எல்லோருமே அறிந்தே இருக்கிறோம். அந்த பிறழ்வின் எண்ண அலைகள் நிற்க வேண்டுமென்றால்
பிறழ்வு உண்மையில் பிறழ்வில்லை என்று ஆழ்மனம் நம்ப வேண்டும்.பிறழ்வு பிறழ்வற்றது என்று
மனம் ஏற்க வேண்டும் என்றால் அணைத்தும் பிறழ்வே அல்லது எதுவுமே பிறழ்வல்ல என்று சொல்லியாக
வேண்டும்.மானசரோவரும் தண்ணீரும் முதலாவதை சொல்கிறது.வாழ்வின் அபத்தத்தை அறிந்தவன் அந்த
அபத்த வாழ்வில் நிகழும் அபத்தங்களை எளிதல் கடக்கிறான்.சாக்கடை நீரும் நண்ணீரும் கலக்கலாம்.அது
இயல்பே என்கிறது தண்ணீர் நாவல்.பிறழ்வை கடக்க ஆற்றில் குளித்து எழும் எளிய சடங்கு போதும்
என்கிறது மானசரோவர்.
மானசரோவர் – அசோகமித்திரன்
– காலச்சுவடு பதிப்பகம்.
No comments:
Post a Comment