ஜேன் வயில்ட் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்







ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஜேன் வயில்ட் பற்றிய ஒரு புனைவு சித்திரமே The Theory of Everything.இந்த திரைப்படம் ஜேன் எழுதிய சுயசரிதையை அடிப்படையாக கொண்டது.ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது ஜேனை ஒரு விருந்தில் சந்திக்கிறார்.கண்டதும் காதல்.ஜேன் அதே பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்துக்கொண்டிருப்பார்.ஸ்டீபன் காலத்தை பற்றி உயர் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்.

அந்த காலகட்டத்தில்தான் அவர் கீழே விழும் பேனாவை எடுக்க சிரமப்படுகிறார்.ரயிலை பிடிப்பதற்காக படிக்கட்டில் ஏறும்போது தடுமாறுகிறார்.ஒரு நாள் பல்கலைக்கழகத்திற்கு வேகமாக செல்லும் போது கீழே விழுகிறார்.அவரை பரிசோதனை செய்யும் மருத்துவர் அவருக்கு இயக்க நரம்பியல்(Motor Neuron) ஒழுங்கின்மை இருப்பதாக சொல்லி அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்கிறார்.அவரது மூளைக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றும் ஆனால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பது , பேசுவது , உண்பது ஆகியவற்றை தன் விருப்பப்படி செய்ய இயலாமல் போகும் என்கிறார்.ஸ்டீபன் அதன்பின் ஜேனை சந்திக்க மறுக்கிறார்.ஆனால் ஜேன் ஸ்டீபனின் இயக்க நரம்பணு ஒழுங்கின்மையை பற்றிய அறிந்தும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.ஸ்டீபனின் தந்தையும் ஜேனிடம் இது சரியான முடிவு அல்ல என்று சொல்கிறார்.ஆனால் ஜேன் ஸ்டீபனை திருமணம் செய்து கொள்கிறார்.ஸ்டீபன் தன் உயர் ஆராய்ச்சியை பரிசீலனை குழுவிடம் சமர்ப்பிக்கிறார்.அவருடைய கோட்பாட்டை குழுவினர் மிகவும் பாராட்டுகின்றனர்.அவர் டாக்டர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிறார்.அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.அடுத்ததாக ஒரு பெண் குழந்தை.ஸ்டீபன் Black holes குறித்து அளிக்கும் விரிவுரையை கவனிக்கும் சக இயற்பியலாளர்கள் அவரை மிகவும் பாராட்டுகிறார்கள்.ஸ்டீபன் உலக அளவில் பலருக்கும் பரிச்சயமான இயற்பியலாளராக மாறுகிறார்.

ஒரு பக்கம் குழந்தைகள், மறுபக்கம் ஸ்டீபன் என்று ஜேன் மிகவும் எரிச்சலும் மனச்சோர்வும் அடைகிறார்.அவரால் தன் இலக்கிய ஆய்வில் கவனம் செலுத்த முடியவில்லை.ஸ்டீபனுக்கு தடியை கொண்டு நடப்பது மிகவும் சிரமமாக மாற அவருக்கு ஜேன் முதலில் சாதாரண சக்கர நாற்காலியையும் பின்னாளில் மின் சக்கர நாற்காலி உபயோகப்படுத்தவும் பழக்கப்படுத்துகிறார்.ஜேனின் மனச்சோர்வை புரிந்து கொள்ளும் அவரது அன்னை அவரை தேவாலயத்தில் ஒத்திசைவு குழுவில் இணைந்து பாடச்சொல்கிறார்.ஜேன் அதை ஏற்று தேவாலயம் சென்று குழுவில் இணைந்து பாடுகிறார்.அங்கு அவருக்கு இசை கலைஞரான ஜோனதான் அறிமுகமாகிறார்.அவர் ஜேனின் வீட்டுக்கு வந்து அவரது மகனுக்கு பியானோ சொல்லித்தருகிறார்.ஜோனதான் ஸ்டீபனின் வீட்டு அங்கத்தினராகிறார்.ஸ்டீபன் தம்பதிகளுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கிறது.அப்போது ஜேனின் அன்னை இந்த குழந்தை ஜோனதானுக்கு பிறந்ததா அல்லது ஸ்டீபனுக்கு பிறந்த்தா என்று கேட்கிறார்.இத்தகைய கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஜேன் அதிர்ச்சி அடைகிறார்.இந்த உரையாடலை கேட்டுவிடும் ஜோனாதான் இனிதான் இங்கு வருவது சரியில்லை என்று சொல்லி விலகிச்செல்கிறார்.ஸ்டீபன் ஜோனதானை தேவாலயத்தில் சந்தித்து அவர் வீட்டுக்கு வர வேண்டும் என்கிறார்.இதற்கிடையில் ஒருமுறை ஸ்டீபன் வெளிநாட்டு பயணம் செல்லும் போது நுரையீரலழற்சியால் பாதிக்கப்படுகிறார்.அப்போது அவருக்கு சிகிச்சை செய்தால் அவரால் பேசவே முடியாமல் போகும் என்னும் போது ஜேன் அவர் உயிருடன் இருப்பதே முக்கியம் என்கிறார்.பின்னர் ஸ்டீபன் பேசுவதற்காக பேசும் இயந்திரம் அவரது சக்கர நாற்காலியில் பொருத்தப்படுகிறது.அந்த இயந்திரத்தின் துணையோடு அவரால் ஒரு நிமிடத்தில் அந்த இயந்திரத்தை நான்கு வார்த்தைகளை பேச வைக்க முடியும்.அவர் கணிணியில் இருக்கும் அகராதியிலிருந்து வார்த்தைகளை தேர்வு செய்து பேச வைப்பது போல அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதற்கிடையில் அவரை பார்த்துக்கொள்வதற்காக ஜேன் ஒரு செவிலியரை நியமிக்கிறார்.காலப்போக்கில் ஸ்டீபனுக்கும் அந்த பெண்ணிற்கும் இடையில் ஒரு பற்றுதல் உருவாகிவிடுகிறது.ஸ்டீபன் ஜேனிடம் தன் The Brief History of Time முடிக்கும் தருணத்தில் தான் அமெரிக்காவிற்கு அந்த செவிலிய பெண்ணோடு செல்ல விரும்புவதாக சொல்வார்.அப்போது ஜேன் தன்னால் இயன்றவரை இத்தனை வருடங்கள் அவரை தான் நன்றாக பார்த்துக்கொண்டதாக சொல்வார்.ஸ்டீபனின் முகத்தில் நீரின் கோடுகள்.அவர்கள் இருவரும் பின்னர் ராணியை சந்திப்பதற்காக ஒன்றாக செல்வதும் அங்கே தன் மூன்று குழந்தைகளை காட்டி ‘பார் , நாம் உருவாக்கியவற்றை’ என்று ஸ்டீபன் ஜேனிடம் சொல்வதோடு திரைப்படம் நிறைவுபெறுகிறது.ஸ்டீபனை விவாகரத்து செய்து ஜோனாதானை ஜேன் பின்னாட்களில் திருமணம் செய்துகொள்கிறார்.அவருடைய ஆராய்ச்சியையும் முடிக்கிறார்.

உண்மையில் இந்த படம் அத்தனை சிறப்பாக எடுக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.அதீத நாடகத்தருணங்களை வேண்டுமென்றே அவர்கள் விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.முக்கியமான காரணம் திரைக்கதை ஆசிரியருக்கும் இயக்குனருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஜேனின் தனிப்பட்ட வாழ்வை கண்ணியமாக காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருந்திருக்கிறது.அவர்கள் இப்போதும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்ற நேரத்தில் அவர்களின் அந்தரங்க வாழ்வை நாம் விரும்பும் வகையில் காண்பிப்பதில் உள்ள அறப்பிழையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.ஜேனும் திரைக்கதையை படித்துவிட்டுதான் ஒப்புதல் அளித்திருப்பார் என்றாலும் இந்த அற உணர்வு பாராட்டுக்குரியது.அந்த அற உணர்வால் இந்த அளவுக்குத்தான் நாடகத்தருணங்களை காண்பிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த படத்தின் நாயகர் ஸ்டீபன் ஹாக்கிங் அல்ல.ஜேன் வயில்ட் தான்.எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் எல்லோருமே பெரும்பாலும் தன்முனைப்பு கொண்டவர்கள்.தங்களை பற்றியே சிந்திப்பவர்கள்.தங்களை பற்றி எண்ணும் போது அவர்களின் ஆக்கங்களையும் சேர்த்துதான்.அதனால் அவர்களால் பெரும்பாலும் பிறரின் துயரத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை.அவர்களுக்கு எவ்வளவு அக்கறை செலுத்தினாலும் அன்பு செலுத்தினாலும் போதாது.அவர்கள் மேலும் மேலும் எதிர்பார்ப்பார்கள்.அவர்கள் எதையுமே தரமாட்டார்கள்.அதனால்தான் அவர்கள் தங்கள் துறையில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அதன் மறுபக்கம் குரூரமானது.அவர்களின் மனைவியும் பிள்ளைகளும் மிகுந்த மனச்சோர்வுக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள்.

ஸ்டீபன் ஹாக்கிங் விஷயத்தில் அவர்களின் உறவு விசித்திர சிடுக்குகளை கொண்டது.ஜேன் ஸ்டீபனின் உடல் பிரச்சனையை அறிந்திருந்தும் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.இது ஒரு தியாகம்.உடனே ஒரு நவீனத்துத்திற்கு பிறகான சிந்தனையாளர் எழுந்து இது தியாகம் அல்ல தன்முனைப்பு அதன் மூலமாக அவர் ஸ்டீபனை சிறுமைப்படுத்துகிறார், பணிவானவராக மாற்றுகிறார் என்று சொல்வார்.அதில் உண்மை இருக்கிறதுதான்.ஆனால் அது மட்டுமல்ல உண்மை.மனிதனால் சக மனிதன் மீது அன்பு செலுத்த முடியும்.இதுவும் உண்மைதான்.ஜேன் ஸ்டீபனின் மீதான காதலால் அன்பால் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.அவர் இரண்டு வருடங்கள் தான் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிய பின்னும் அவர் அதை செய்கிறார்.இத்தனைக்கும் ஸ்டீபன் அப்போது மாணவர் மட்டும்தான்.ஜேனின் செயலில் ஒரு லட்சியவாதம் இருக்கிறது.தான் காதிலத்தவர் ,அன்பு செலுத்தியவர் நோய்மையால் அவதிப்படுகிறார் எண்ணும் போது அவருடன் இருந்து அவருக்கு இன்னும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்ற லட்சியவாதம் அதில் இருக்கிறது.அது ஒரு உயர்ந்த விழுமியம்.ஆனால் ஒரு ஆண் பெண் உறவு பல சிக்கல்களால் ஆனது.அதில் எப்போதும் அகங்கார சீண்டல்கள் இருக்கும்.ஜேன் ஒரு பேட்டியில் ஸ்டீபனிடம் தான் ‘அவர் ஒரு கடவுள் இல்லை என்பதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது’ என்கிறார்.ஜேனால் தன் ஆராய்ச்சிக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை.மேலும் ஜேனின் தியாகமும் அன்பும் அக்கறையும் ஸ்டீபனை தன் இயலாமையை எண்ணி உள்ளுக்குள் எரிச்சலடைய செய்திருக்கும்.அதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறது.நோய்மை உற்றவர்களை அருகிலிருந்து கவனித்து கொள்பவர்களுக்கு ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது.அவர்கள் நோய்மை உற்றவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.அன்பு இருக்கும்.ஆனால் சட்டென்று எரிச்சலும் வரும்.சற்று கவனிக்காமல் விட்டுவிட நேரும்.அந்த நேரத்தில் கவனமின்மையால் அவர்களுக்கு உடல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டால் கவனித்துக்கொள்பவர் குற்றவுணர்வுக்கு உள்ளாவார்.இது ஒரு முரணியக்கம் போல.ஒன்றும் செய்ய முடியாது.இத்தகைய உறவுகளில் அசாதரணமான லட்சியவாதம் இருபக்கமும் இருக்க வேண்டும்.அது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை.ஸ்டீபன் ஹாக்கிங் ஜேன் இல்லாவிட்டாலும் ஒரு வேளை ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியிருப்பார்.இந்த உலகில் பலரும் அவரது அறிவை வியந்து அவருக்கு உதவியிருப்பார்கள்.ஆனால் அவரது உடலையும் உள்ளத்தையும் அறிவையும் நேசித்து அவருடன் வாழ்ந்த ஜேன் ஸ்டீபனின் இன்றைய நிலைக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார் என்பது ஒரு உண்மை.ஜேன் ஒரு வேளை ஸ்டீபனின் உடல் பிரச்சனை காரணமாக அவரை முதலிலேயே விலிகியிருந்தாலும் அவர் விமர்சனத்துக்குரியவர் அல்ல.அதுவும் அவரது விருப்பமே.

இந்த கதையை வேறு மாதிரியும் பார்க்கலாம்.இதில் எந்த லட்சியவாதமும் இல்லை என்று நிறுவலாம்.ஆனால் ஜெயகாந்தன் சொல்வது போல வெங்காயத்தை உரித்து உரித்து பார்த்தால் வெங்காயத்தில் கூட ஒன்றும் இருக்காதுதான்.சேர்த்து சேர்த்து பார்க்க வேண்டும்.சேர்த்தால்தான் நூல் உடையாகிறது.அதுதான் உடலை மறைக்கிறது.ஜேனின் வாழ்க்கை வணக்கத்திற்குரியது.


No comments: