யு.ஆர்.அனந்தமூர்த்தியின்
சம்ஸ்காரா நாவல் மிகவும் புகழ்பெற்றது.மிகப்பெரிய அளவில் புகழும் அளவுக்கு நிச்சயம்
சம்ஸ்காரா ஒன்றும் அத்தனை சிறந்த நாவல் இல்லை.சம்ஸ்காரா நாவலோடு அசோமித்திரனின் பதினேட்டாவது
அட்சக்கோடு நாவலை ஒப்பிடும் போது சம்ஸ்காரா ஏன் இத்தனை தூரம் புகழப்பெற்றது என்ற கேள்வி
இயல்பாகவே எழுகிறது.பதினேட்டாவது அட்சக்கோடு நாவலுக்கும் சம்ஸ்காராவுக்கும் நிறைய ஒற்றுமைகள்
இருக்கின்றன.இரண்டுமே அடையாளத்தை மையப்படுத்துபவை.இரண்டிலுமே மைய கதாபாத்திரம் தன்
அடையாளங்களிலிருந்து விலகிச்செல்ல விரும்புகிறது. பிராணேஸாசார்யார் சற்று வயதானவர்.சந்திரசேகரன்
பதினேட்டு வயது இளைஞன்.ஆச்சாரியார் வசிப்பது சிவமோகாவில் தூர்வாசபுரம் என்ற கிராமத்தில்.சந்திரசேகரன்
செகந்திரபாத் என்ற பெருநகரத்தில் வசிக்கிறான்.ஆச்சாரியார் இறுதியில் தன் அடையாளத்திலிருந்து
வெளியேற இயலவில்லை என்பதை உணர்கிறார்.சந்திரசேகரன் தன் அடையாளங்களிலிருந்து வெளியேறி
வந்துவிடுகிறான்.
பிராணேஸாசார்யார் தன் வாழ்க்கையில்
தன் மரபில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து ஒழக்கநெறிகளையும் கடைப்பிடிப்பவர்.நோயால் அவதியுறும்
தன் துணைவிக்கு சேவகம் செய்பவர்.தன் தெருவில் தனக்கு முற்றிலும் எதிர் வாழ்க்கை வாழும்
நாரணப்பா பிளேக் நோயால் மரணமடைகிறான்.ஆச்சாரியாரின் இல்லாளும் இறந்துபோகிறாள்.நாரணப்பாவின்
பிணத்தை என்ன செய்வது என்பதை அறிந்துகொள்ள மடத்திற்கு செல்லும் அந்த ஊர் மாத்வ
பிரமாணர்களில் சிலர் பிளேக் நோயால் இறந்துபோகிறார்கள்.மாருதியிடம் இதற்கு ஒரு விடை கேட்டு
தவிக்கும் ஆச்சாரியார் இறுதியில் வயிற்றுப்பசியால் மயங்கி பின்னர் சந்தரி என்ற பெண்ணின் ஸ்பரிசத்தில்
முயங்கி முதல் முறையாக தன் ஒழக்கநெறிகளிலிருந்து விடுபட்டு இயற்கையின் முன் மண்டியிடுகிறார்.பின்னர்
தன் ஊரை விட்டு விலகி ஆச்சாரியார் மேளிகே என்ற ஊருக்கு செல்கிறார்.அப்போது புட்டன்
என்ற வழிப்போக்கன் அவரோடு சேர்ந்துகொள்கிறான்.மேளிகேவில் நடக்கும் திருவிழாவில் உணவருந்துகிறார்.அங்கே
நடக்கும் சேவல் சண்டை, ‘ரப்’‘ரப்’ என்ற ஒலி, கள்ளின் நெடி , அந்த மக்களின் கண்கள் இவற்றை பார்க்கும்
ஆச்சாரியார் அவைகளிலிருந்து அந்நியப்படுகிறார்.குழப்பத்தில் அவர் மறுபடியும் தூர்வாசபுரம் நோக்கி செல்கிறார்.
ஆச்சாரியாரால் ஆழ்மன அளவில்
தன் சாதிய அடையாளங்களிலிருந்து வெளியேற முடியவில்லை.அவருடைய முயற்சி நேர்மையானது.ஆனால்
அவர் தோல்வியடைகிறார்.அவரால் அந்த சேவல் சண்டை , போதையேறிய அந்த மக்களின் கண்கள் இதற்கு
மத்தியில் வாழ முடியும் என்று தோன்றவில்லை.அவர் பதறுகிறார்.அவர் குழப்பத்தில் தான்
செய்தவற்றை ஒப்புக்கொள்ள தன் ஊருக்கு செல்கிறார்.அவர் யாரிடம் சென்று எதை ஒப்புக்கொள்ளப்போகிறார்.அங்கே
இருப்பவர்கள் தங்கள் சாதிய மரபுக்கு வெளியே சென்று சிறதளவுவேனும் சிந்திக்க இயலாதவர்கள்.அவர்களிடம்
சென்று அவர் எதை ஒப்புக்கொள்ளப்போகிறார்.உண்மையில் அவர் தன் ஊரில் ஒரு செளகரியத்தை
உணர்கிறார்.அது அவருடைய பிரபஞ்ச வெளி.அவருக்கு பரிச்சயமான தினசரி வாழ்க்கை.மேளிகேவில்
அவர் புதிதாக ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தால் அவர் புதிதான ஒரு தினசரி வாழ்வை கற்க
வேண்டும்.அந்த வாழ்க்கை முறை சார்ந்த சொற்கள், பழக்கவழக்கங்கள், தெருக்கள், கலாச்சார
செயல்பாடுகள் அணைத்தும் வேறாக இருக்கும்.தன் மத்திய வயதில் இதுவரை தான் கற்றதை முழுவதும்
தன் ஆழ்மனதிலிருந்து வெளியேற்றி புதிதாக ஒன்றை புகுத்திக்கொள்ள ஆச்சாரியாரால் இயலவில்லை.அந்த
தோல்வியை சம்ஸ்காரா நாவலில் அனந்தமூர்த்தி நேர்மையாக முன்வைக்கிறார்.அது முக்கியமானது.
நாம் எத்தனையோ கோட்பாடுகளை
பேசலாம், தத்துவங்களை பேசலாம்,அறம் குறித்து பேசலாம்.ஆனால் நம் வாழ்க்கை என்பது தினசரி
தினங்களலானது.தினசரி என்பது மலம் கழிப்பதும்,உண்பதும்,புணர்வதும்,உறங்குவதும் விழிப்பதும்,முடிந்தால்
உழைப்புதும்தான்.உண்பது, புணர்வது,உறங்குவது,விழிப்பதில் இல்லமும் உழைப்பதில் சமூகமும்
வருகிறது.மனிதன் இந்த தினசரி வாழ்வின் செளகரியத்தை மிகவும் விரும்புகிறான்.ஒரு அலுவலகத்தில்
பல வருடங்கள் தொடர்ந்து வேலை செய்பவர் அது தன் தினசரி வாழ்வை ஏதோ ஒரு வகையில் செளகரியமானதாக
வைத்திருப்பதாலேயே ஊதியம் குறைவாக இருந்தாலும் அதிலேயே தொடர்கிறார்.உண்மையில் எந்த
மனிதனுக்கும் மாற்றம் பிடிப்பதில்லை.அவன் நேற்றை போல இன்றும் இன்றை போல நாளையும் இருந்தால்
நிம்மதியாக உறங்குவான்.இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு மாவோயிஸ்டுகள் ஆட்சியை பிடிக்க
போகிறார்கள் என்றால் அப்போது நம் சமூகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் இந்தியாவை
விட்டு வெளியேறுவார்கள்.ஏனேனில் அது அவர்களின் தினசரி வாழ்வை பாதிக்கும்.நமது புரட்சி,
கிளர்ச்சி,பச்சாதாபங்கள்,அறம் எல்லாம் நமது தினசரி வாழ்வை அதிகம் போனால் அரை மணி நேரம்
எடுத்துக்கொள்ளும் என்றால் நாம் அதை அனுமதிப்போம்.ஆச்சாரியார் தன் தினசரி வாழ்வின்
செளகரியத்தை உணர்ந்து மறுபடியும் தூர்வாசபுரம் செல்கிறார்.இடையில் அவர் சந்தரியுடன்
உறவு வைத்துக்கொள்வதும் , மேளிகே செல்வதும் விபத்துகள்.நாரணப்பாவும் உண்மையில் எந்த
கலகமும் செய்யவில்லை.அவன் தனக்கு சாத்தியப்பட்ட செளகரியமான வாழ்வை சந்தரியுடன் வாழ்ந்தான்.அவ்வளவே.
இங்கே பதினேட்டாவது அட்சக்கோடு
நாவலில் சந்திரசேகரன் தன் வயது கூட இல்லாத ஒரு சின்ன பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய
மத அடையாளங்களை சுமந்திருப்பதை உணர்ந்தவனாக அந்த சூரியோதையத்தின் போது ஒடுகிறான்.ஆனால்
சந்திரசேகரனும் ரயில்வேயில் வேலை செய்யும் தன் தந்தை தனக்கு வழங்கிய தினசரி வாழ்வை
வாழ்வதற்கான உழைப்பை மேற்கொண்டு அதே போன்ற செளகரியங்ளோடு வாழ்வான்.இது இந்த இரண்டு
நாவல்களையும் இணைக்கும் புள்ளி.சம்ஸ்காரா நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டதும், ஆங்கிலத்தில்
ஏ.கே.ராமானுஜத்தால் மொழிபெயர்கப்பட்டதும் இதற்கு அதிக புகழை அளித்திருக்கிறது. இந்த
நாவல் ஏன் அதிக புகழை அடைந்தது என்றால் இது மாற்றமின்மையை (Status Quo) வலியுறுத்துகிறது
என்பதால்தான்.காந்தி ஏன் ஒரு phenomenon என்றால் சுதந்திர போராட்டத்தில் எந்த அளவுக்கு அவருடைய அக்கறைகள் இருந்ததோ அதே
அளவுக்கு மலம் கழிப்பது பற்றியும் உண்பது பற்றியும் இருந்தது.அவர்தான் நம் தினசரி
வாழ்வை பற்றி சிந்தித்தார்.அவர் மட்டும் தான் சிந்தித்தார்.
சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி - மொழிபெயர்ப்பு - டி.எஸ்.சதாசிவம் - அடையாளம் பதிப்பகம்
சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி - மொழிபெயர்ப்பு - டி.எஸ்.சதாசிவம் - அடையாளம் பதிப்பகம்
No comments:
Post a Comment