பில்லி பிஸ்வாஸ் மானுடவியல்
துறையில் உயர் கல்வி பெற்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி கல்லூரி ஒன்றில்
பேராசிரியராக பணிபுரிகிறான்.பில்லி பிஸ்வாஸின் தந்தை பிஸ்வாஸ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி.பிஸ்வாஸின்
நண்பன் ரொமி.ரொமியும் பிஸ்வாஸூம் அமெரிக்காவில் ஒரு கோடைக்காலத்தில் ஒன்றாக தங்குகிறார்கள்.அவர்களுடைய
நட்பு பிஸ்வாஸீன் மரணம் வரை தொடர்கிறது.கல்லூரியில் மாணவர்களை அழைத்துக்கொண்டு சத்தீஸ்கர்
பகுதியில் இருக்கும் பழங்குடியினரை புரிந்துகொள்வதற்காக செல்லும் பிஸ்வாஸ் அங்கே காணாமல்
போய்விடுகிறான்.அவனை மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரொமி தன் நண்பர்களின் துணையோடு இரண்டு
வருடங்களாக தேடுகிறான்.அந்த பகுதியின் பழங்குடியின மூப்பரை அழைத்து விசாரிக்கிறான்.பிஸ்வாஸ்
பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.அவன் புலியால் வேட்டையாடப்பட்டு மரணித்திருக்கலாம்
என்று அந்த வழக்கை மூடுகிறார்கள் காவல் துறையினர்.
சில வருடங்கள் கழித்து
, அதாவது பிஸ்வாஸ் இறந்துபோனதாக அனைவரும் ஏற்று பத்து வருடங்கள் கழித்து அவனை ரொமி
சத்தீஸ்கரில் ஒரு வனப்பகுதியில் பார்க்கிறான்.ரொமி அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியராக
பொறுப்பேற்று ஆறு மாதங்களான நிலையில் மிகுந்த வரட்சியால் பாதிக்கப்பட்டியிருக்கும்
அந்த பகுதிகளை பார்த்தவாறு ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் போது பிஸ்வாஸ் பழங்குடியினர்
கூட்டத்திலிருந்து சட்டென்று தாவி முன்வந்து ரொமியோடு பேசுகிறான்.அதிர்ந்து போகும்
ரொமி பின்னர் பிஸ்வாஸின் கதையை கேட்கிறான்.
பிஸ்வாஸ் டெல்லியில் பேராசிரியராக
இருக்கும் போது மீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொள்கிறான்.ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது.ரொமியும்
சீது என்ற பெண்னை திருமணம் செய்துகொள்கிறான்.ஆனால் பிஸ்வாஸின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக
இருக்கிறது.மீனா பணம் , பதவி, அதிகாரம் , செளகரியங்கள் ஆகியவையே மகிழ்ச்சியான வாழ்க்கை
என்று வளர்க்கப்பட்டவள்.அவளால் பிஸ்வாஸின் துயரரும் மனதை பிஸ்வாஸ் எவ்வளவு கதறி அழுதாலும்
புரிந்துக்கொள்ளமுடிவதில்லை.ஒரு மனிதன் கதறி அழும் போது அவன் வேண்டுவது தன் பிரச்சனைக்கான
தீர்வை அல்ல.மாறாக அவன் வேண்டுவது தன் பிரச்சனையை செவிகொடுத்து கேட்பதும் ,புரிந்துகொள்வதும்தான்.மீனாவால்
பிஸ்வாஸூன் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியவில்லை.பிஸ்வாஸ் ரீமா என்ற பெண்னோடு திருமணத்திற்கு
வெளியே உறவு கொள்கிறான்.தன் துயரத்தை அவளிடம் சொல்லி தன் மீது பச்சாதாபத்தை உருவாக்குகிறான்.அவள்
தன்னொடு வைத்துக்கொண்ட உறவை விட அவளிடம் தான் உருவாக்கிய பச்சாதாப உணர்வுதான் தனக்கு
மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது என்று பின்னர் பிஸ்வாஸ் ரொமியுடன் நேர்ப்பேச்சில்
சொல்கிறான்.ரீமாவுடான உறவு ஏற்படுத்தும் குமட்டல், மறுபுறம் மீனாவின் புரிதலின்மை,
வாழ்வின் வெறுமை அவன் காணாமல் போகிறான்.அவன் பழுங்குடி பெண் பிலாசியாவுடன் உடல் உறவு
கொள்கிறான்.பின்னர் அவளை திருமணம் செய்துக்கொண்டு அங்கேயே பத்துவருடங்களாக வாழ்கிறான்.
பழங்குடி மக்கள் அவன் வருகைக்கு
பின்னரே அந்த மலைப்பிரதேசம் சந்திர ஒளியில் இரவில் பிரகாசிக்கிறது என்று நம்புகிறார்கள்.ஒரு
கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்ட தங்கள் இனக்குழுவின் மன்னரின்
தொடர்ச்சி பிஸ்வாஸ்தான் என்று அந்த மக்கள் நிச்சயமான எண்ணம் கொள்கிறார்கள்.பிஸ்வாஸ்
ஒரு முறை புலியை நேருக்கு நேர் சந்திக்கிறான்.புலி அவனை பார்த்த சிறிது நேரத்தில் தன்போக்கில்
சென்றுவிடுகிறது.அந்த புலியை அதன் பிறகு அந்த பகுதியில் யாருமே பார்ப்பதில்லை.ஒரு முறை பாம்பு
கடிப்பட்டு இறக்கும் தருணத்திலிருக்கும் ஒருவனை பிஸ்வாஸ் காப்பாற்றுகிறான்.இதனால் பிஸ்வாஸை
அந்த பழுங்குடி மக்கள் மாந்தீரக சக்தி கொண்ட பூசாரி என்றும் இறந்துபோன மன்னரின்
மறுபிறவி என்றும் நம்பிக்கை கொள்கிறார்கள்.
ரொமியின் மனைவி சீது ஒற்றைத்தலைவலியால்
துடிக்கும் போது பிஸ்வாஸ் தன் மருத்துவ புரிதல்களை கொண்டு அவளை குணப்படுத்துகிறான்.அதன்
பின் அவளுக்கு தலைவலி வருவதே இல்லை.அவன் முற்றிலும் குணமடைகிறாள்.அவள் தன் அறையில்
தனியாக உறங்கிக்கொண்டிருக்கையில் யாரோ வந்து சென்றது அவளுக்கு நினைவிலிருக்கிறது.ரொமி சீதுவிடம் யார் வந்து சென்றது என்பதை சொல்லாமல் தவிர்க்கிறான்.ஆனால் பெண்கள்தான் எப்போதும் கண்ணீரை
ஆயுதமாக பயண்படுத்தக்கூடியவர்களாயிற்றே.ரொமி ஒரு கட்டத்திற்கு பிறகு பொறுக்க முடியாமல்
பிஸ்வாஸ் இறக்கவில்லை மாறாக ஒரு பழங்குடியாக இந்த காட்டில் வாழ்கிறான் , அவனே உன்னை
குணப்படுத்தினான் என்ற உண்மையை சொல்கிறான்.
இப்போது சீது இந்த விஷயத்தை
மீனாவிடம் சொல்ல ரொமியை வற்புறுத்துகிறாள்.சில நாட்கள் கழித்து ஒரு காலைப்பொழுதில்
மீனாவும் அவளுடைய மாமனாரும் ரொமியின் முன் அமர்ந்து தங்கள் மகனை பார்க்க வேண்டுமென்று
தங்கள் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.அதன் பின்னான தேடுதல் வேட்டையில் பிஸ்வாஸ் துப்பாக்கி
குண்டு பட்டு இறந்துபோகிறான்.அவன் இறக்கும் போது போங்கடா தேவிடியாப்பசங்களா என்று ரொமியை
கத்தியவாறு இறந்துபோகிறான்.அவன் ரொமியை மட்டும் அப்படி சொல்லவில்லை.
பிஸ்வாஸீன் பிரச்சனை என்ன.அவன்
மானுடவியல் படித்தவன்.பேராசியராக இருக்கிறான்.உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன்.செல்வந்தன்.அழகான
அன்பான மனைவி.ஆண் குழந்தை.செளகிரயங்கள்,அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கு இருக்கிறது.ஆனால்
அவன் கானாமல் போகிறான்.காம்யுவின் சிசிபஸின் தொன்மம் கட்டுரையில் அவர் ஒரு மனிதன் தற்கொலை
செய்துகொள்வதற்கு காரணம் நாட்டில் அரசியல் நிலவரங்களை சரியில்லை என்பதாலோ அல்லது சூரியனைத்தான்
பூமி சுற்றுகிறது என்பதை நிறுவுவதற்காகவோ அல்ல.அவன் தன் வாழ்வின் வெறுமையாலேயே இறந்துபோகிறான்.ஐந்து
வருடங்குளுக்கு முன் இறந்த தன் குழந்தையின் நினைவால் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்துகொள்கிறார்.மனதின்
வெறுமை மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது.இல்லையென்றால் அவன் குகையில் சாற்றைப்பிழிந்து
ஒவிங்களை வரைந்திருக்க மாட்டான்.கலைகளே தோன்றியிருக்காது.அவன் ஒரு முறை ரொமியிடம் என்
நம் மேல்தட்டு சமூகம் இவ்வளவு உள்ளீடற்று இருக்கிறது என்று புலம்புவான்.ரொமி அவனிடம்
உன்னுடைய நோக்கம் பழங்குடியாக மாறுவதா அல்லது அது ஒரு துவக்கம்தானா என்று கேட்பான்.நீ
கடவுளை அடைவற்கான வழியாக பழுங்குடி வாழ்வை தேர்வு செய்தாயா என்று மேலும் வினவுவான்.புன்னகைக்கும்
பிஸ்வாஸ் கிட்டத்தட்ட அதுபோன்றது தான் என்பான்.
இந்த நாவலின் முக்கிய அம்சம்
இது பழங்குடி வாழ்க்கை என்பது கள்ளங்கபடமற்ற வாழ்க்கை என்ற எளிய சித்திரத்தை அளிக்கவில்லை
என்பதுதான்.பிஸ்வாஸ் இங்கே இவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது என்று ஒரிடத்தில்
சொல்வான்.ஆனால் நகர தனிமனிதனையும் பழங்குடி மனிதனையும் வேறுபடுத்தும் முக்கிய அம்சம்
லட்சிய நோக்கு.பழங்குடி மக்களுக்கு அப்படி எந்த நோக்கமும் இருப்பதில்லை.நகர தனிமனிதன்
வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிக்கோளை உருவாக்கிக்கொள்கிறான்.அதை அடைய துடிக்கிறான்.தேமே
என்று இருக்க நகர மனிதனுக்கு தெரியவில்லை.அவன் பேஸ்புக்கில் லேக்கிட்டுக்கொண்டு, டிவி
பார்த்துக்கொண்டு , செல்போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டு , வாயில் எதையோ
குதப்பிக்கொண்டு , ஒருவரை புணரும் போது வேறு ஒருவரை நினைத்துக்கொண்டு, பணம் சம்பாதிக்க
ஒடிக்கொண்டு, திருமணம் செய்துக்கொள்ள ஒடிக்கொண்டு, பிள்ளைகளை பெற்றுக்கொண்டு என்று
அவன் இரவில் காரின் சிவப்பு விளக்கை பார்த்து ஒடும் நாயைப்போல ஒடிக்கொண்டிருக்கிறான்.எனக்கு
சமயங்களில் ஒரு சித்திரம் நினைவுக்கு வந்தபடியே இருக்கும்.பன்றியின் மடியில் பாலை குடிக்க
முட்டிக்கொள்ளும் பன்றிக்குட்டிகள் போல அல்லவா நாம் முட்டிக்கொண்டிருக்கிறோம் என்று.அந்த
வெறுமையின் தீவிரம் தான் பிஸ்வாஸை பழங்குடியாக மாற்றுகிறது.ஆனால் மறுபுறம் நகர்ப்பன்றி
தன் மடியில் வந்து பால்குடிக்க முட்டாமல் தப்பித்து சென்றவனை தன் மடியை காட்டி இழுத்துவரை
முனைப்பு கொள்கிறது.வர மறுக்கும் பன்றிக்குட்டியை குதறிக்கொல்கிறது.பிஸ்வாஸ் இறந்துபோகிறான்.இப்படியாக
பிஸ்வாஸின் விசித்தர வழக்கு முடிவுக்கு வந்ததாக ரொமி நாவலை முடிக்கிறார்.
இந்த நாவலின் காலம்
1950யிலிருந்து நேரு இறந்த ஆண்டான 1964வரை என்று கொள்ளலாம்.பின்னாட்களில் நக்ஸல்பாரி
அமைப்புகள் சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் உருவானதற்கான காரணங்களின் எளிய சித்திரத்தை இந்த நாவலில் அளிக்கிறது.அருண் ஜோஷி இந்த நாவலை எழுதியிருக்கிறார்.சகாத்திய அகாதெமி விருது பெற்றவர்.எனக்கு
இந்த நாவலை வாசிக்கும் போது இவரில் காம்யுவின் பாதிப்பு இருப்பதை உணரமுடிகிறது.அருண் ஜோஷி தன் தனிப்பட்ட வாழ்க்கையின் பல பகுதிகளை இந்த நாவலில் புனைவாக மாற்றியிருக்கிறார்.அருண்
ஜோஷி செல்வந்தர்.தொழிலதிபர்.பிஸ்வாஸ் போல அவரும் பழங்குடியாக மாற வேண்டும் என்று விரும்பினாரா
அல்லது ரொமி போல இவற்றை பார்த்தவாறு கரையில் மட்டுமே நிற்க விரும்பினாரா என்று நிச்சயமாக
யாராலும் சொல்லமுடியாது.உயிரோடு இருந்தால் அவராலேயே கூட அதை சொல்ல முடியாது.அதுதானே மனித
மனத்தின் விசித்திர வழக்கு.
கவிஞர் சுகுமாரன் இந்த
நாவலைப்பற்றி பல வருடங்களுக்குமுன் உயிர்மையில் எழுதியதால்தான் இதை வாங்கினேன்.அருண்
ஜோஷி உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவரை சந்திக்க டெல்லி சென்றிருப்பேன்.என்னை
பொருட்படுத்தி பேசியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
The Strange case of
Billy Biswas – Arun Joshi – Library of South Asian Literature. – Orient Blackswan
Publications.