கவிஞர் சுகுமாரன்
அழகன். இதழ்களிலும் , பிற ஊடகங்கிளிலும் இவரின் கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஆளுமையாக ஆனார் சுகுமாரன்.அவரின் கட்டுரைகள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக எழுதப்படுவது அல்ல. அந்த கட்டுரையின் எதோ ஒரு கட்டத்தில் தன் கருத்தை மிகவும் தீவிரமான ஒரு தொனியில் முன்வைப்பவர்.சுயம்புலிங்கம் கவிதைகள் பற்றி எழுதும் போது ஒரு விபத்து சம்பவத்தை குறிப்பிட்டு அப்படியாக அவரின் கவிதைகளில் தெரிக்கும் ஒரு அவஸ்தை , ஏளனம் , இவற்றை சுட்டிக்காட்டுவார்.பஷீர் பற்றி ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் , எம்.டி.வாசுதேவன் நாயர், அடூர் கோபாலகிருஷ்ணன் என பலர் எழுதியதை வாசித்திருக்கிறேன்.இது அனைத்தையும் விட சுகுமாரன் , காலச்சுவடு அவரது நூற்றாண்டை முன்னிட்டு வெளியிட்ட இதழில் எழுதிய கட்டுரையை சிறந்த கட்டுரையேன சொல்வேன். தீமையும் கீழ்மையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்று வரிகளில் சுகுமாரன் தனித்து நிற்கிறார். வேறொரு இடத்தில் நானே பூங்காவனம் , பூவும் , காயில்லையா , காயும் என்று மதில்கள் நாவலில் பஷீர் சொல்லும் இடத்தை குறிப்பிட்டு அதுவே பஷீரின் ஆன்மிகம் என்கிறார். நிச்சயமாக சுகுமாரன்தான் பஷீரின் முதன்மை வாசகனாக எனக்குத் தெரிகிறார்.
அவரின் கவிதைகளை பற்றி கருத்து கூறும் அளவுக்கு கவிதைகளை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் அதில் அவரின் இருப்பு சார்ந்த தத்தளிப்பு தொடர்ந்து இருப்பதை கவனிக்கிறேன். சமீபத்தில் ஞாநி வீட்டில் கேணி என்ற இலக்கிய கூட்டம் நடந்தது.பிரபஞ்சன் பேசினார். அப்போது சுகுமாரன் அங்கு வந்திருந்தார். தன் இருப்பை எக்காரணத்தை கொண்டும் கூட்டம் முடியும்வரை யாரும் அறிந்துகொள்ள கூடாது என்பது போல இருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவம் உடையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். கையில் சுஜாதாவின் புத்தகமொன்றை வைத்திருந்தார். எதையோ யோசிப்பதும் , பிரபஞ்சன் முக்கியமானதொரு கருத்தை கூறுகிறார் என்கிற போது அருகில் வந்து கவணிப்பதுமாக நின்றார். அவரின் கவிதை வரி ஒன்று எப்போதும் என் நினைவில் இருக்கும்.ஒவ்வொரு வார்த்தையும் மௌனத்தின் மிச்சம். அதனால் தானோ என்னவோ அவரிடம் பேசவில்லை.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment