கர்ம ஞானி


நான் நினைத்துகொண்டிருந்தேன் வசந்த காலத்தில் விதைக்கப்படும் நெல் , பின்பு விளைந்து அறுவடையின் போது இறந்துவிடுகிறதென்று. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த செயல் ஒவ்வொரு ஆண்டும் மறுபடி மறுபடி நிகழ்ந்தேபடியே இருக்கிறது. அப்படியென்றால் இந்த நிலத்தில் உயிர் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆக அந்த ஆண்டின் மரணமே அந்த ஆண்டின் பிறப்பும் ஆகும். ஆதலால் நாம் அறுவடை செய்யும் நெல் எப்போழுதும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

தன் கர்மத்தின் மூலமாக மட்டும் பிரபஞ்ச தரிசணம் கிடைக்கபெற்ற கர்ம ஞானி. ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தில் அவர் யாரையேனும் மேற்கொள் காட்டுகிறாரென்றால் அது புத்தர் மட்டுமே.யின்-யாங் உணவுமுறையிலிருந்து , ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வரை எல்லாவற்றையும் நிராகரிக்கிறார்.

மாசானோபுவின் "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலை சென்ற வருடம் அவர் இறந்தபின் அதைப்பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி கட்டுரை வழியாக அறிந்து கொண்டேன்.

விவசாய விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அடிக்கடி சோதனைகூடத்திலேயே சுயநினைவு இழந்துவிடுகிறார். மருத்தவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்றபின் ஒரு நாள் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் மலையில் ஏறுகிறார்.அங்கே மரத்துக்கு அடியிலேயே இரவு முழுவதும் தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத நிலையில் துறைமுகத்தை பார்த்தபடியே இருக்கிறார். சூரியோதத்தின் போது நேய்ட் ஹிரான் என்ற பறவை அவரை கடந்து செல்கிறது. அதன் சிறகடிப்பை கேட்கிறார். மனிதருக்கு எல்லாம் புரிந்துவிடுகிறது. தர்க்க அறிவுக்கு எல்லை உண்டு என்று அறிகிறார். வேலையை ராஜினாமா செய்கிறார். இயற்கையை விவசாயம் செய்கிறார். செயற்கை விவசாயத்தை விடவும் இயற்கை முறையே சிறந்தது என்று உறுதி செய்கிறார்.தொண்ணூற்றி ஐந்து வயதில் சென்ற வருடம் இறந்தார். One Straw Revolution என்பதை தவிர The Natural Way of Farming , The Road back to Nature ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.காந்தி விவசாயம் செய்திருந்தால் இயற்கை விவசாயமே செய்திருப்பார் என்று சொல்கிறார்.

அந்த புத்தகம் விவசாயத்தை மையப்படுத்தி பேசும் போதும் அது ஒரு தத்துவ நூல் தான். தர்க்க அறிவுக்கு மீறிய ஒரு நிலை உண்டு , அது மனிதனுக்கு சாத்தியப்படும் என்பதை நடைமுறையில் கண்டுகொள்கிறார். இந்த புத்தகம் ஏற்படுத்திய மனஎழுச்சி நிறைய மாதங்களுக்கு இருந்தன. இப்போது மனம் சற்று சமன் அடைந்துள்ள நிலையில் என்னால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான். மனிதனின் தர்க்க அறிவுக்கு மீறிய ஒரு நிலை மனிதனுக்கு சாத்தியமே. அதை அவன் தன் கர்மத்தின் மூலமும் அடைய முடியும். அந்த நிலையை தியான நிலை என்று சொல்லாமா தெரியவில்லை. அந்த நிலையில் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தின் துளிதான் தான் என்றும் , கடலே அலை, ஆக தானே பிரபஞ்சம் என்பதும் , பிறப்பும் இறப்பும் அதன் உண்மையான அர்த்தத்தில் இல்லை என்ற உணர்தலும் சாத்தியமே.

இந்த கர்ம ஞானிக்கு என் அஞ்சலி.




No comments: