திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான
விஜய் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.அவருடைய
கட்சி நூற்றியெட்டு இடங்களில் வென்று தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இது
மிகவும் வியப்பை அளிக்கக்கூடிய தேர்தல் முடிவு. அநேகமாக அரசியல் தலைவர்கள் உட்பட யாரும்
இதைக் கணிக்கவில்லை.பதினைந்து சதவிகித வாக்குகளை பெறுவார் , இருபதிலிருந்து முப்பது
இடங்களில் வெற்றி பெறுவார் என்றே பலரும் ஊகித்தனர். இந்த முடிவுகள் திமுவிற்கு மிகப்பெரிய
அதிர்ச்சியை அளித்திருக்கிறது. திமுகவின் ஆட்சியில் தொழில் மயம் அதிகரித்திருக்கிறது.பொதுக்
கட்டமைப்பு வளர்ந்திருக்கிறது.தொழில் மயமும் , நகர மயமும் திமுகவின் ஆட்சியில் நன்றாக
பேணப்பட்டன.இந்த ஆட்சி என்றில்லை , எப்போதும் திமுக ஆட்சியில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை
பெற்று வந்திருக்கிறது என்பது தான் உண்மை.முதலீடுகள் பெருகியிருக்கின்றன.இன்றைய சென்னை
இன்றைய சென்னையாக இருப்பதற்கு திமுக பெரும் பங்காற்றிருக்கிறது.எஸ்.நாராயண் தன் திராவிடர்களின்
காலம் நூலில் இதைப்பற்றி விரிவாக எழுதுகிறார்.ஒப்புநோக்க அதிமுக ஆட்சியில் தொழில் துறையின்
வளர்ச்சி குறைவாகவே இருந்திருக்கிறது.
இருந்த போதும் திமுக சென்னையிலேயே தோற்றிருக்கிறது.மேலும்
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தோற்றிருக்கிறார்.இதை அவரது அரசியல் எதிரிகள் கூட இதை
எதிர்பார்க்கவில்லை.பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஓர் ஓட்டாவது விஜய்க்கு செலுத்தப்பட்டிருக்கிறது.
நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்றாலும்
அனைத்து தரப்பினரும் வாக்களித்திருக்கிறார்கள்.ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார்.திமுகவும்
அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு பக்கம் என்றால் பாரதிய ஜனதா உடன் கூட்டணி சேர்ந்த அதிமுக
மறு பக்கம் என்ற மும்முனை போட்டித் தளத்தில் முப்பத்தியைந்து சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறார்
என்பது பெரும் வெற்றி.
தொழில் மயம், நகர மயம் , சுகாதாரம், மருத்துவம், பள்ளிக்
கல்வி, தொழிற் கல்வி போன்ற துறைகளில் தமிழகம்
முன்னேறி இருக்கிறது. சென்னை என்று மட்டும் இல்லாமல் தமிழகம் இந்தியாவிலேயே அதிக அளவில்
நகரமயமான மாநிலங்களில் முதன்மையானது. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி
விட்டது என்பதும் மெய்யே.இங்கு தொழில் , பணம், சாதிப் பற்று என்பதற்கு அப்பால் ஒரு
நல்ல பொதுப் பண்பாட்டு வெளி உருவாகவில்லை. ஒரு சமூகம் நகரமயமாகும் போது அங்கு பொதுப்
பண்பாட்டு வெளிகள் மலர வேண்டும்.
கிராமத்து வாழ்க்கையில் கோயில்கள் சார்ந்த பண்பாட்டுத்
தளம் இருந்தது.மேலும் சாதி பலரையும் கிராமங்களில் இணைக்கிறது.இன்று பெருநகரத்தில் அவை
காணாமல் போகும் போது அதை ஈடு செய்ய பொதுவான பண்பாட்டுத் தளங்கள் உருப்பெற்றிருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் உண்மையில் அத்தகைய ஒரு வெளிக்கான போராட்டம் தான்.விளையாட்டும்
, கலைகளும் தான் அத்தகைய சுற்றத்தை உருவாக்கும்.இப்போது திரை இயக்குனர் பா.ரஞ்சித்
சென்னையில் அத்தகையை நிகழ்வுகளை நடத்துகிறார்.இது பெரிய அளவில் இன்னும் தொடர்ச்சியாக
இளைஞர்களை வெகுவாக ஈர்க்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.பல்வேறு அமைப்புகள் இதை முன்னெடுக்க
வேண்டும்.அது அத்தனை எளிதானதல்ல.ஐரோப்பிய நாடுகளில் பதினேழாவது நூற்றாண்டு வரை கேளிக்கையாட்டங்கள்
மாதங்கள் கடந்து நடந்திருக்கின்றன.அத்தகைய கேளிக்கையாட்டங்களில் அந்த மக்கள் தங்கள்
பிறப்பின் அடிப்படையிலான சமூக அடையாளங்களை கடக்க முடிந்திருக்கிறது.அது இந்த வாழ்வை
மேலும் சுவராசியமானதாக மாற்றியிருக்கிறது.
அத்தகைய பண்பாட்டுத் தளங்கள் இல்லாமல் போனது தான்
விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணம். அவரே அத்தகைய பொதுப் பண்பாட்டு வெளியின் இன்மை
நாயகனாக இருந்து தான் இன்று வெற்றி பெற்றிருக்கிறார்.தன்னை கரைத்துக் கொள்ளக்கூடிய
விளையாட்டும் கலைகளுமே மக்களை நல்வழி படுத்தி அவர்களை மேலும் பண்பட்டவர்களாக மாற்றும்.பெருநகரங்கள்
அதைச் செய்யும் போது மக்கள் மேலும் அக மகிழ்வு கொள்வர்.
நான் எப்போதும் திமுவிற்குத்தான் வாக்களித்திருக்கிறேன்.இந்த
முறையும் அவர்களுக்குத் தான் ஓட்டளித்தேன்.விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா
ஐந்தாண்டுகளாக என்ன செய்தார் என்று தெரியவில்லை.ஆனால் திமுக என்பதால் வாக்கை செலுத்தினேன்.ஆனால்
தவெகவை சேர்ந்த சபரிநாதன் வெற்றி பெற்றிருக்கிறார்.திமுக போன்ற கட்டமைப்பையும் , ஊடகத்தையும்,
பிரச்சாரகர்களையும் கொண்டுள்ள இன்னொரு அமைப்பு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மட்டும்
தான்.லாட்டரி முதலாளி மார்டின் மட்டுமே திமுகவிற்கு அறநூறு கோடிக்கு மேல் கொடையாக கொடுத்திருக்கிறார்.மார்டின்
இப்போது தவெகவில் இருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் மாமனார்.
இத்தகைய பெரிய கட்டமைப்பு , பணம், ஊடக பலம், கூட்டணி
எண்ணிக்கை, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தும் இருந்தும் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.திருமாவளவன்
தங்களுக்கு இந்த முடிவுகள் பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது என்கிறார்.விஜய் ஒரு திரைப்பட
நடிகர்.முதல் முறை களம் காண்கிறார்.ஆனால் யாரும் கணிக்காத வெற்றியை பெற்றிருக்கிறார்.இன்று
சித்தாந்தம் , சாதிப்பற்று, கட்சி கட்டமைப்பு என்பதை தாண்டி பிம்பம் பெரும் பங்காற்றுகிறது.மோதியை
வெற்றி பெற அதே பிம்பம் தான் உதவியது.மோதிக்கு அந்த பிம்பத்தை ஊடகங்கள் உருவாக்கி வழங்கின.அவர்
பெரும் வீரர் என்றார்கள்.டிரம்பிற்கு எதிராக இன்று வரை ஒரு சொல் உதிர்க்காத தீரர் தான்.விஜய்
அதை சினிமா மூலம் உருவாக்கிக் கொண்டார்.
விஜய் ரஜினிகாந்த் போட்ட பாதையில் தான் நடந்து வந்தார்.சினிமாவிலும்
அரசியலிலும்.ஒரு எளிய மனிதர்.பலம் பொருந்திய எதிரி.சமூக நலன் பொருட்டு சத்ருவை துணிவுடன்
எதிர்த்து இறுதியில் வெற்றி பெரும் பிம்பம்.மேலும் சற்று சுட்டியான பையன்.இதைத் தான்
முரட்டுக்காளை முதல் ரஜினி செய்தார்.அதை விஜய் பின்தொடர்ந்தார்.ஆனால் அரசியலில் அவர்
தயங்கி நின்ற இடத்தில் அவரை தாண்டிச் சென்றார் விஜய்.
கலைஞர் கருணாநிதியும் , செல்வி ஜெயலலிதாவும் இறந்தப்
பின்னர் இனி அதிமுக அடுத்த நான்காண்டுகளில் முழுவதுமாக உடைந்துவிடும் என்று எண்ணிய
ரஜினிகாந்த் (அவருக்கு யோசனை கூறியது சிந்தனையாளர் குருமூர்த்தி) தைரியம் பெற்று 2017யில் தான் கட்சி தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை
சந்தித்து ஆட்சியை கைப்பற்றுவேன் என்றார்.அவரின் கணக்கு அதிமுக வலுவிழந்து விடும்
, திமுக மட்டும் தான் , அதை பாரதிய ஜனதா கட்சியின் மறைமுக ஆதரவுடன் எதிர்த்து வெற்றி
பெறலாம் என்று நினைத்தார்.
ஆனால் அவர் சிந்தித்ததற்கு மாறாக அதிமுக எடப்பாடி
பழனிசாமி தலைமையில் வலுவாக ஒன்றினைந்தது.இப்போது இரு பெரும் கட்சிகளுக்கு மத்தியில்
தான் போட்டி போட்டால் பத்து சதவிகித ஓட்டுகளைத்தான் பெற முடியும் என்று அவருக்கு புரிந்துவிட்டது.மேலும்
பாரதிய ஜனதா அவரது கையை முறுக்கி தனது கைப்பாவையாக மாற்றிவிடும் என்பதும் அவருக்கு
விளங்கியது.இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று எண்ணியவருக்கு கோவிட் கைகொடுத்தது.
தமிழருவி மணியன் “நான் நொந்து போய்விட்டேன்” என்று கண்ணீர் மல்கினார்.பாரதிய ஜனதா அனுப்பிய
அர்ஜூன் கிருஷ்ணமூர்த்தி மறுபடியும் அங்கேயே சென்று சேர்ந்துவிட்டார்.
கிட்டத்தட்ட விஜய்யின் கணக்கும் அது தான்.அதிமுக இப்போது
உண்மையிலேயே வலுவிழந்து தான் இருக்கிறது.அதனால் அவர் தனக்கு எதிரி திமுக தான் என்ற
இருமையை கட்டமைத்தார்.ஒரு எளிய புதிய மனிதன்.பலம் பொருந்திய திமுகவை எதிர்க்கிறார்.அவரது
சினிமா பிம்பம் சரியாக பொருந்தி வருகிறது.பிசிறுகள் அற்ற இருமை.ஆனால் அவருக்கு பின்னால்
பாரதிய ஜனதா கட்சி இல்லை. அவருக்கு மத்தியிலும் மாநிலத்திலும் எதாவது வகையில் குடைச்சல்கள்
திமுகவாலும் பாஜகவாலும் இருந்து கொண்டே இருந்தன.அவரின் தந்தை அவர் கட்சி தொடங்குவதை
தவிர தப்பிப்பதற்கு வேறு வழி இல்லை என்றார்.தந்தையின் சொல்லை பொருட்படுத்தாமல் இருப்பது
போல பாவனை செய்த விஜய் பின்னர் பிதா காட்டிய பாதையை தேர்ந்தார்.ரஜினிகாந்த் தொண்ணூற்றியாறில்
வந்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிருக்கலாம்.கிட்டத்தட்ட அதே வயதில் அதே போன்ற ஒரு
வாய்ப்பை ரஜினிகாந்த் தவிர்த்த வாய்ப்பை விஜய் சரியாக பற்றிக்கொண்டார்.
விஜய் இந்த முறை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்
வந்திருப்பார் என்று சொல்ல இயலாது. ஆனால் இந்த முறை முழு வீச்சுடன் போட்டியிட வேண்டும்
என்ற முடிவுடன் வந்தார்.இனி திரும்புவதில்லை என்ற வாக்கை தன் ரசிகர்களுக்கு கொடுத்தார்.அதற்கு
பின்னர் நடந்தவை எல்லாம் தன் போக்கில் அரங்கேறின.அவர் இத்தனை பெரிய வெற்றி பெறுவார்
என்று அவர் எதிர்பார்த்திருக்க எந்தச் சாத்தியமும் இல்லை.ஏனேனில் அப்படியான தரவுகள்
எங்கும் யாருக்கும் கிடைக்கவில்லை.பாரதிய ஜனதாவின் அமித் ஷாவிற்கே தெரியவில்லை.அவர்
ஓரளவு பெறுவார் என்றே அவரும் ஊகித்திருப்பார்.அவருக்கு இளைஞர்கள் மத்தியிலும் , பெண்கள்
மத்தியிலும் இருந்த ஆதரவு , மக்கள் கூட்டம் அனைவரையும் குழப்பியது.
இன்று வெற்று பிம்பங்கள் போதுமானவையாக இருக்கின்றன
என்பதைத்தான் இந்தத் தேர்தல் காண்பிக்கிறது.ஆனால் வெற்று பிம்பங்களும் நல்ல பயன்களை
அளிக்க இயலும்.விஜய்க்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அவர் இடதுசாரிகள், காங்கிரஸ்,
விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி அமைக்கிறார்.இது நல்ல விளைவுகளை உருவாக்கும்.அவருக்கு
இடதுசாரிகள் நல்ல அரணாக இருந்து வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன்.ஆட்சியில் தங்களுக்கு
பங்கு வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னது விஜய்யை வியப்படைய வைத்திருக்க வேண்டும்.அதனால்
தான் செல்வப்பெருந்தகை உள்பட காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யை அவரது அலுவலகத்தில் சந்தித்த
போது அவர் அதற்கு மாறாக கம்யூனிஸ்டுகளை அவர்களது அலுவலகம் சென்று பார்த்தார்.
காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி வைத்தது அவர்கள் சமீப
காலங்களில் எடுத்த துரிதமான சரியான முடிவு.தென்னிந்தியாவில் இதனால் அவர்களுக்கு மேலும்
சில பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும்.இந்தியா கூட்டணியிலிருந்து திமுக
வெளியேறி தவெக இடம்பெறும்.அது மட்டுமில்லாமல் இது இந்திய அளவில் மோதி என்ற வெற்று பிம்பத்தை
மற்றொரு வெற்று பிம்பத்தை கொண்டு உடைக்க முடியும் என்ற சமிக்ஞையை அளித்திருக்கிறது.ஒரு
வேளை தோனி போன்ற ஒருவர் (அல்லது அவரே) நாளை கட்சி தொடங்கினால் அவருக்கு இளைஞர்கள் பெருவாரியாக
வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை இது அளித்திருக்கிறது.அவரைப் போன்றவர்கள் காங்கிரஸூடன்
சேர்ந்தால் பாரதிய ஜனதாவை எளிதில் வீழ்த்தலாம்.
இன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.அதை
எப்படி பெருக்குவது என்று எந்த ஆட்சியாளர்களுக்கும் புரியவில்லை.நொய்டாவில் பத்தாயிரம்
மட்டுமே மாதச் சம்பளமாக பெறும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டுள்ளது.அதைக்
குறித்த செய்திகள் ஊடகங்களில் எங்கும் இல்லை.தொழிலாளர் நலன் சட்டங்கள் முதலாளிகளுக்கு
சாதகமாக மாற்றப்படுகின்றன.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் திருத்தப்பட்டு
மக்களுக்கு கிராமங்களில் கிடைத்த சிறு தொகையும் பறிக்கப்பட்டுள்ளது.உயர் சாதியினர்
வர்க்கமாக ஒன்று திரண்டு தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த செய்யும் முன்னெடுப்புகள்
தான் சட்டங்களாக முகில்கின்றன.முதலாளிகள் தங்கள் மூலதனத்தை மேலும் மேலும் குவிக்க வேண்டும்
என்று வெறி கொண்டு உலகம் முழுக்க ஆட்டம் போடுகிறார்கள்.அவர்களை தடுக்கவோ கேள்வி கேட்கவோ
எந்த அரசுக்கும் துப்பில்லை, திராணியில்லை, தெளிவில்லை.உலகெங்கும்.இந்தியாவில் அதில்
உயர் சாதி என்ற வர்க்கமும் இணைந்து கொள்கிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுங்கிய நிலையிலேயே
இருக்க வேண்டும் என்று அரசே விரும்புகிறது.ஏனேனில் அந்த அரசை நிர்ணயிப்பதே உயர் சாதியினர்
தான்.
இன்றைய தேவை தொழிலாளர் நலன் , விவசாயிகளின் நலன்,
மருத்துவம் , சுகாதாரம் , கல்வி ஆகியவற்றில் அக்கறை கொண்ட இடதுசாரிப் பார்வை கொண்ட
அரசு. அத்தகைய அரசு அமைவது மிகவும் கடினம்.ஏனேனில் முதலாளித்துவம் நீயும் முதலாளி ஆகலாம்
என்ற மாயையை விரித்து மக்களை குழப்புகிறது.மேலும் நம்மை சிதறடிக்கக்கூடிய சாதியப்பற்றும்
, மதப்பற்றுகளும் கடைவிரித்தாடுகின்றன.இதில் தொழில்நுட்பமும் இணைந்து கொண்டு நம்மை
எதிலும் குவிக்க இயலாதவர்களாக திறன் அற்றவர்களாக சிந்திக்க இயலாதவர்களாக மாற்றியிருக்கிறது.தொழிற்
மயமும் , நகர மயமும் பெருகும் சமூகங்களில் பாசிச எண்ணங்கள் மக்களை எளிதல் ஆட்கொள்கின்றன.ஏனேனில்
பெருநகரத்தில் நாம் யாருமில்லாத அனாதை.நமக்கு மற்றமைகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே
இருந்தால் அதை உண்டு செரித்து நாளை கடத்திவிடுவோம்.அவன் கெட்டவன்.அவன் அயோக்கியன்.அவனை
அழித்தால் உன் வாழ்வு சுபிட்சமாகும்.இது போதும்.கடலைப்பருப்பை மெல்வது போல நாம் இந்த
எண்ணங்களை மெல்வோம்.ஆனால் நம் வாழ்வில் எந்த முன்னேற்றமும் நிகழாது.
இங்கு தான் நான் முன்பு சொன்ன விளையாட்டுகளுக்கும்
, கலைகளுக்குமான தேவை உண்டாகிறது.அவை மற்றமை மீதான வெறுப்பை குறைக்கும்.மற்றமையை இல்லாமல்
செய்யும்.ஒருவன் அக மகிழ்வு கொள்ளும் போது அவனுக்கு காழ்ப்பு குறைகிறது.உங்களது உடலும்
மனமும் ஆக்கபூர்வமான இன்பத்தில் இளைப்பாறும் போது அங்கு சகோதரத்துவம் மிளிர்கிறது.
விஜய்யின் ஆட்சி தொழிலாளர்களுக்கு , விவசாயிகளுக்கு
நல்ல திட்டங்களை உருவாக்குமா என்று தெரியவில்லை.ஆனால் இந்த ஆட்சி உருவெடுத்திருப்பது
நல்லது என்று தான் தோன்றுகிறது.விஜய் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு துறையில் உழைத்து
பெரும் பெற்றி பெற்றிருக்கிறார்.அந்தத் துறையின் வணிகத்தை பெருக்கியிருக்கிறார்.முதன்மையான
இடத்திற்கு நகர்ந்திருக்கிறார்.அது ஜனரஞ்சக ஊடகம்.அதனால் அவருக்கு அது பெரிய பலனை அளித்திருக்கிறது.இந்த
உழைப்பை கூட அளிக்காத அளிக்கத் தெரியாத உதயநிதி நாளை முதலமைச்சர் ஆவதற்கு பதிலாக விஜய்
முதலமைச்சர் ஆகலாம்.மேலும் அவருக்கு முழு பெரும்பான்மை கிடைக்காததால் அவர் தன் வெற்று
பிம்பத்திலிருந்து வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் ஆரம்ப கால வாழ்வை பற்றிய சரிதை
திரைப்படமாக வந்திருக்கிறது.அதில் அவர் ஓரிடத்தில் தன் வழக்கறிஞரிடம் சொல்வார்.நான்
ஒரு போதும் ஊடகங்களை சந்திக்க மாட்டேன்.நேர்காணல்கள் அளிக்க மாட்டேன்.அது என்னைப் பற்றிய
ஒரு மாய வெளியை உருவாக்கும்.என் வாழ்க்கை பற்றிய புனைவுகள் பெருக்கும்.அது பயன் அளிக்கும்
என்கிறார்.அவருக்கு அது உதவியது என்றாலும் அவருக்கு அது தீங்கையும் பிற்காலத்தில் கொடுத்தது.ஊடகங்களை
சந்திக்காமல் இருப்பது, உரையாடல்களை தவிர்ப்பதை மோதியும் செய்கிறார்.ஜெயலலிதா செய்தார்.அது
பயன்களைத் தரும்.ஆனால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.அந்த வகையில் கலைஞர் கருணாநிதி
போல இருக்க வேண்டும். பெ.சண்முகம் விஜய் எதையும் உடைத்து பேச வேண்டும் என்றார்.விஜய்க்கு
இடதுசாரிகள் தலைமைக்கான நல்ல விழுமியங்களை கற்றுத் தரலாம்.ஏராளமான நல்ல உதாரணங்கள்
இருக்கின்றன.
கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் ஆட்சி பொறுப்பில் இருந்த
பதிமூன்று ஆண்டுகள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.திரைப்படங்களுக்கு எழுதினார், புத்தகங்களை
வெளியிட்டார், தினமும் முரசொலி அலுவலகம் சென்றார், குங்குமம் பத்திரிக்கையை நடத்தினார்,
அவ்வவ் போது போராட்டங்களையும் நடத்தினார், கட்சியை தலைமை தாங்கினார்.கட்சி சிதறாமல்
இருந்தது.அவர் பதறவில்லை.ஒரு முறை எண்பதில் இந்திரா காந்தியின் துணைக் கொண்டு எம்ஜிஆரின்
ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார்.அதில் தோல்வியுற்ற பின் அவர் அதிகம் அலட்டிக்
கொள்ளவில்லை.அவருக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது.எண்பத்தியொன்பதில் தேசிய அரசியலில்
பங்கு பெற்று விபிசிங் ஆட்சி வருவதற்கு துணை நின்றார்.அவருடைய பேரன் உதயநிதி இந்த முறை
நேரடியாகவே மறைமுகமாகவோ தான் ஆட்சியில் இல்லாவிட்டால் இனி தன் வாழ்வில் அதிகாரத்தையே
பார்க்க முடியாது என்று கதறுகிறார்.தன் தந்தை மீது உப்பு மூட்டை சவாரி செய்து அப்படியே முதலமைச்சர் ஆகிவிடலாம்
என்று பார்த்தவர் இனி தன்னால் எம்எல்ஏ கூட ஆக முடியாது என்று தவித்து தக்காளி விற்கிறார்.பாவம்
, அவருக்கு அவர் மீதும் நம்பிக்கை இல்லை.இந்த முறை விட்டால் இனி கட்சியும் இல்லை ஆட்சியும்
இல்லை என்பது அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது.திமுகவிற்கு ஒரு வேளை உதயநிதி இல்லாத
ஒருவர் தலைவராக பிற்காலத்தில் வந்தால் அது உயிர்தெழும் சாத்தியமிருக்கிறது.அதே போல
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் உருவாக்கியிருக்கும் நிலக்கிழார்கள் மறைந்து திமுகவின்
ஆரம்ப கால எழுச்சி மறுபடியும் மலரும் என்றால் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது.இல்லையென்றால்
திமுகவிற்கு இனி உதயம் இல்லை.
இப்போதைக்கு விஜய்யின் ஆட்சிக்கு வாழ்த்துகள்.நல்லாட்சி
வழங்கட்டும்.மக்கள் செழிப்புறட்டும்.
குறிப்பு – திருமாவளவன் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்
என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.நேரம் – மே 9 – காலை 10:35. நிகழும் சம்பவங்களை பார்த்தால் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம் என்பது
தெளிவாகிறது.அதிமுக திமுக கூட்டணியில் ஆட்சி அமைந்தால் அதில் திருமாவளவன் பாரதிய ஜனதா
கட்சியின் ஆதரவுடன் பங்கெடுத்தால் பங்குனி வெயில் பல்லைக் காட்டிக் கொண்டு அடிப்பது
போல ஒரே ஜோராக இருக்கும்.தவெகதான் பாஜாவின் பி டீம் என்றார்கள்.நடக்கும் கூத்தைப் பார்த்தால்
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவெக தவிர அனைத்தும் பாஜகவின் பி டீம்கள் தான் போலும்.அண்ணா
வளர்த்த கலைஞர் கட்டிக்காத்த கட்சி.இப்படி கிடந்து தவிப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.1949யில் தொடங்கப்பட்ட திமுக 1967யில் ஆட்சிக்கு வந்தது.அவர்கள் தேர்தல்
அரசியலிலேயே 1957யில் தான் பங்கெடுத்தார்கள்.பொறுமையும்
தீவிரமும் துணிச்சலும் சித்தாந்தமும் அவர்களுக்கு இருந்தது.ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றதை
பார்த்த போது வருத்தமாக இருந்தது.இப்போது உதயநிதி சொல்வதற்கு அவர் செவி கொடுக்கிறார்
என்பதை கவனிக்கும் போது அந்த வருத்தம் மறைந்து விட்டது.

No comments:
Post a Comment