என் பால்ய காலத்தின் மனிதர்




பால்ய காலத்தில் நெய்வேலியில் இருந்தபோது சில விடுமுறைகளின் போது பண்ருட்டியிலிருந்த என் சித்தப்பா வீட்டில் சென்று நாங்கள் தங்குவது வழக்கம்.என் சித்தப்பா பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர சபை செயலாளராக இருந்தார்.சிலர் அவரை தலைவரே என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.வீட்டில் இரண்டு அடி அகலமும் ஒரடி நீளமும் கொண்ட லெனின் , மார்க்ஸ், ஸ்டாலின் புகைப்படங்களும் அதில் ஏதோ வாசகங்களும் இருக்கும்.சமயங்களில் கட்சி கூட்டத்திற்காக அவருடைய வீட்டிற்கு வெளியே கம்பங்களை கிடத்தி அதில் கட்சி கொடியை கட்டிக்கொண்டிருப்பார்கள்.ஏதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள் என்ற பிம்பம் அப்போது மனதில் பதிந்துவிட்டது.ஒரு கட்டத்தில் கட்சியில் சேரலாமா என்ற எண்ணம் இருந்தது.இந்த பிம்பம் அநேகமாக 2007யில் என்னுடைய இருபத்தியைந்தாவது வயது வரை இருந்தது.அப்போது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த நந்திகிராம் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.அப்போது வாசித்த ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் புத்தகம், லட்சியவாதங்களுக்கு பின்னால் இருக்கும் கோர முகம் என்று பல விஷயங்கள் பயங்கரமாக குழப்பிவிட்டது.அதன்பிறகு சிறிதுசிறதாக கம்யூனிஸம் போன்ற விஷயங்களின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு போய்விட்டது.ஆனால் இப்போதும் நான் வாக்களிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் நின்றால் அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவேன்.அநேகமாக 2007யில் நிகழ்ந்த கயர்லாஞ்சி சம்பவம் என்னை இன்னொரு வகையில் பயங்கரமாக உலுக்கிவிட்டது.அந்த சம்பவம் , அந்த கிராமத்து மனிதர்கள், உயர் சாதி பெண்கள் அதை வேடிக்கை பார்த்தது என்று மனிதர்கள் மீதான நம்பிக்கையெல்லாம் தகரும் முதல் தருணமாக அது இருந்தது.

என் சித்தப்பா சென்ற வாரம் மரணமடைந்தார்.இயற்கை மரணம். பண்ருட்டியில் அவருடைய வீட்டில் ஒரு கட்டத்தில் ஒன்றோ இரண்டோ பசுமாடுகள் இருந்தன.பேரிங் வியாபாரம் வெகு ஜோராக சென்றுகொண்டிருந்தது. இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.நிம்மதியான குடும்ப வாழ்க்கை.விவசாய நிலங்கள் வாங்கினார்.அவரின் கடையில் நான்கைந்து நபர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.கட்சியில் நல்ல பொறுப்பு..அந்த காலகட்டம்தான் அவர் வாழ்வின் பொற்காலம்.அவரும் என் தந்தையும் இளமையில் மிகவும் வறுமையில் இருந்தனர்.முதலில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை என்ற ஊரில் இருந்தார்கள்.பின்னர் பண்ருட்டி  வந்தார்கள்.என் தந்தை சட்டம் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஐஸ் பேக்டரி வைத்து இருவரும் நடத்தினார்கள்.பின்னர் பேரிங் வியாபாரம்.என் தந்தையின் திருமணம்.ஏதோ மனகசப்புகளால் என் தந்தை நெய்வேலி வந்துவிட்டார்.மிகவும் வறுமையிலிருந்து ஒரளவு நல்ல நிலைமைக்கு வந்த என் சித்தப்பாவிற்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது.அதிலிருந்துதான் அவரின் பொருளாதார சரிவு ஏற்பட்டது.மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்டது.நோய்மை அளிக்கும் மனகசப்புகளால் அவரின் வாழ்க்கை நோக்கு மாறிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.பின்னர் அதிலிருந்து வெளியே வந்து ஒரளவு நன்றாகத்தான் இருந்தார்.ஆனால் பொருளாதார ரீதியாக அவரால் மீளவே முடியவில்லை.ஒரு வகையில் அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கைதான்.சிலம்பம் கற்றிருந்தார்.வீட்டில் சாட்டை வைத்திருந்தார்.பெரிய மீசை வைத்திருப்பார்.மிகவும் இறுக்கமானவர்.அநேகமாக எப்போதும் வேஷ்டிதான் அணிந்திருப்பார்.அவர் என்னிடம் எப்போதும் பெரிதாக பேசியதாக எனக்கு நினைவில்லை.

கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.தீ சட்டென்று வைக்கோலை பற்றிக்கொள்கிறது. ஒரு மனிதினின் உடல் எரிகிறது.முப்பதே வருடங்கள் நிரம்பிய என் வாழ்க்கையில் மனிதர்கள் மீதும் சித்தாந்தங்கள் மீதும் கடவுள் மீதும் எந்த நம்பிக்கையும் அற்ற ஒரு இருண்ட பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.என் பால்ய காலத்தில் லட்சிய வாழ்க்கையின் மீதும் நன்நெறிமீதும் எளிமை மீதும் ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பை உருவாக்கிய அந்த மனிதரை நினைத்துக்கொள்கிறேன்.அந்த நாட்களின் அறியாமை என் வாழ்க்கையை மறுபடியும் பற்றிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அது ஒருவகையில் நான் அவர் மீள் எழுந்து வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வது போலத்தான்.என் வாழ்க்கையில் ஒளி நிரம்பிய காலத்தில் நான் பார்த்து வியந்த ஒரு மனிதர் மறைந்துவிட்டார்.அவருக்கு என் அஞ்சலி.

No comments: