ராஜ் கெளதமன்




பத்திரிக்கையாளர் ஞாநி சென்னையில் நடத்திய கேணி கூட்டத்திற்கு ஒரு முறை ராஜ் கெளதமன் வந்திருந்தார். 2012 என்று நினைக்கிறேன். அந்தப் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.ஓர் ஆளுமையாக அவரை எனக்குப் பிடித்திருந்தது.தன் அறிவின் மீது இருக்கும் செருக்கும் கர்வமும் கவரக்கூடியதாக இருந்தது.

எண்பதுகளின் தமிழ்க் கலாச்சாரம் என்ற சிறிய நூலில் அன்றைக்கு வந்து கொண்டிருந்த பத்திரிக்கைகள் , சினிமா, இலக்கியம், திரைப்பாடல்கள் என்று பல துறைகளைப் பற்றிய கட்டுரைகளின் வழி அவர் முன்வைத்த  விமர்சனங்கள் நிபுணுத்துவம் கொண்டவை . அவரின் "கண்மூடி வழக்கமெலாம் மண்மூடி போக" என்ற வள்ளலார் பற்றிய நூலில் இராமலிங்க அடிகளார் ஒரு முருக பக்தராக இருந்து சிவ பக்தராக மாறி பின்னர் கூறுகின்ற சமயமெல்லாம் பிடித்து கூவுகின்றார் என்ற இடத்திற்கு நகர்ந்ததை பற்றிய தன் எண்ணத்தை எழுதியிருப்பார்.அவர் அதில் மிகவும் புறவயமாக வள்ளலாரை அணுகியிருப்பார். முற்றிலும் புறவயமானது என்பதால் அவரால் வள்ளலாரின் அந்த மெய்யியல் உலகத்திற்குள் செல்ல முடியவில்லை.மதகில் மோதி நிற்கும் வெள்ளம் போல அவரால் அதற்கு அப்பால் அந்த ஆழ்நிலையை தன் எழுத்தில் கொண்டு வர இயலவில்லை.

அவரிடம் இயல்பாகவே ஒரு பகடி செய்யும் தன்மை இருக்கிறது. அவர் எதையும் உன்னதமானதாக பார்க்க விரும்பவில்லை.மார்க்ஸிய நோக்கில் அவர் சமூகத்தை இலக்கியத்தை ஆராய்ந்தார். அந்தப் நோக்கு எனக்கு ஏற்புடையதாக இருந்தது. அவர் எரிக் ஃபிராம் நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.நான் மனவளமான சமுதாயம் நூலை வாசித்திருக்கிறேன். அவருக்கு ஏதோ ஒரு பற்றுதல் தேவைப்பட்டிருக்கிறது, அது எரிக் ஃபிராம்  வழி அவருக்கு கிடைத்திருக்கிறது.

என் அஞ்சலி.


No comments: