நீதியரசர்
சந்திரசூட் ஓய்வு பெறுகிறார். இந்தியாவின் ஐம்பதாவது தலைமை நீதிபதி.இரண்டு
ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். சமீபத்தில் ஒரு வரைவு தீர்ப்பில் அவர்
நீதியரசர் கிருஷ்ணய்யரின் முந்தையை தீர்ப்பை விமர்சித்திருந்தார்.இறுதித்
தீர்ப்பில் அந்த வாசகங்கள் இடம் பெறவில்லை. அதில் கிருஷ்ணய்யர் தன் தீர்ப்பால்
அரசியலமைப்புக்கு குந்தகம் (disservice) விளைவித்துவிட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது.
நீதியரசர்கள்
நாகரத்னாவும் , துலியாவும் முன்னாள் நீதிபதியின் மீது இத்தகைய கடுஞ் சொற்கள் தேவையற்றது என்று
தங்கள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
அரசியலைப்பின்
பிரிவு 39 b வரிகள் -
"சமுதாயத்தின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு , உற்பத்திப்
வளங்களின் (material resources) உரிமையும் அதிகாரமும் பொதுவாய்
பகிர்ந்தளிக்கப்படக்கூடிய வகையில்".
இது அரசுக்
கொள்கையை நெறிப்படுத்தும் காரணிகள் பகுதியில் வருகிறது. அதாவது அரசு வகுக்கும்
கொள்களைகளின் விளைவுகள் மேற்கொண்டவற்றை சாத்தியப்படுத்த வேண்டும் என்று நமது
அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில்
இந்தப் பகுதியில் வருபவை அரசைக் கட்டுப்படுத்தாது. கிருஷ்ணய்யர் மேலே உள்ள
வாக்கியத்தில் உற்பத்தி வளங்கள் என்பதை விரித்து அனைத்து தனியார் சொத்துகளும் அரசு
சொத்துகளும் என்றார். அவர் இவ்வாறு உற்பத்தி வளங்கள் என்பதை அனைத்து தனியார்
சொத்துகள் என்று பொருள் கொண்டதை சந்திரசூட் விமர்சித்திருந்தார்.
இவை குறிப்பிட்ட
ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணய்யரால் எடுத்தாளப்பட்டிருக்கிறது.ஆனால்
நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பொருளாதார தத்துவங்களின் அடிப்படையில் இவற்றை
எழுதவில்லை என்று சொல்லியிருந்தார் சந்திரசூட்.
நீதியரசர்கள்
நாகரத்னாவும் துலியாவும் இதை மறுத்து அவை தனியார் சொத்துகளையும் உள்ளடக்கியதே
என்று குறிப்பட்டிருக்கிறார்கள். மேலும் துலியா தன் தீர்ப்பில் கிருஷ்ணய்யரும்
சின்னப்பா ரெட்டியும் சொன்னத் தீர்ப்பின் பொருளாதாரப் பார்வை இன்றும்
ஏற்றக்கொள்ளக்கூடியதே என்று கூறியிருக்கிறார்.
கிருஷ்ணய்யரை
விமர்சிக்கமாலே சந்திரசூட் தன் தீர்ப்பை சொல்லியிருக்கலாம். சுதந்திர இந்தியாவின்
நீதித்துறை வரலாற்றில் கிருஷ்ணய்யர் , சின்னப்பா ரெட்டி போன்ற சில நீதிபதிகளின்
பெயர்களே அடிக்கடி கேட்கப்படுகின்றன. சின்னப்பா ரெட்டி பிஜாய் இம்மானுவல் வழக்கில்
சொன்ன தீர்ப்பு இன்றும் மனித உரிமைகள் வழக்குகளில் முக்கியமான பார்வையாக
படிக்கப்படுகிறது. அதே போல கிருஷ்ணய்யர் "bail
is the rule, jail is the exception" என்று சொன்னது வெகுவாக மேற்கொள் காட்டப்படுகிறது. அவர்
சிறைத்துறை சட்டவியலையே புதுப்பித்தார். அதற்கு அவருக்கு ஒரு கடிதம் போதுமானதாக
இருந்தது.
உச்சநீதிமன்ற
மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் கரண் தப்பாருடனான நேர்காணலில் வரலாற்றிலிருந்து
சந்திரசூட் மறக்கப்படுவார் என்று சொல்லியிருக்கிறார். அவர் மறக்கப்படுவார் என்றே
நானும் நினைக்கிறேன். அவரால் தன் தலைமை நீதிபதி பிம்பத்தை தாங்கிக் கொள்ள
இயலவில்லை என்று எண்ணுகிறேன். அதன் காரணமாக ஊடகங்களின் முன் வந்து
முற்போக்குத்தனமாக எதையாவது சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது தீர்ப்புகளில் , நடவடிக்கைகளில்
அவை பிரதிபலிக்கவில்லை.இனி அவர் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம்.முன்னாள் தலைமை
நீதிபதிகள் பலரின் பெயர்கள் ஊடகங்களில் வருவதே இல்லை. அது போல சந்திரசூட்டின்
பெயரும் மீடியாக்களில் காணாமல் போகும்.
No comments:
Post a Comment