டார்வினின் வால்


 
தமிழில் இன்று பொதுவாக அனைவருமே யதார்த்தவாதக் கதைகளைத்தான் எழுதுகின்றனர். அதில் உறவுச் சிக்கல்களும் , ஆளுமைச் சிக்கல்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. ஜெயமோகன் இப்படி எழுதுபவர்களுக்கு வரலாற்றிலும் தத்துவத்திலும் அரசியலிலும் ஆர்வமில்லை என்கிறார்.

ஆளுமைச் சிக்கலும் உறவுச் சிக்கலும் சூழலால் தான் நிகழ்கிறது. இன்று ஒருவன் அணுமின் நிலையத்தில் பணிபுரிகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அணுசக்தி குறித்த கேள்வி எழுகிறது.இது அறத்தின் வழி சரியானதா என்று கேட்டுக்கொள்கிறான்.இன்னொருவன் – மரபணு மாற்று விதைகள் உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.அவனுக்கு இதை சந்தைக்கு கொண்டு வருவது நியாயமானதா என்ற சிந்தனை எழுகிறது என்று கொள்வோம். இந்த எண்ணத்தால் அவன் மனப்பிறழ்வு கொள்கிறான் என்று கதை சொல்கிறது.இவற்றை வெறும் ஆளுமைச் சிக்கல் சார்ந்த கேள்விகள் என்று கொள்ள இயலுமா? இதை விரித்தால் நீங்கள் வரலாற்றுக்கும் தத்துவத்திற்கும் தான் போக வேண்டும்.மேலும் இன்றைய உறவுச் சிக்கல்கள் இன்றைய சூழலால் தான் நிகழ்கிறது.மார்க்ஸ் அனைத்து உறவுகளுமே வணிக உறவுகள் தான் என்று சொன்னார். உற்பத்தி முறைமைகள் மாறும் போது உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன.அவற்றை உறவுச் சிக்கல்களின் கதைகள் பிரதிபலிக்கின்றன.இன்று எழுதப்படும் கதைகள் அந்தச் சிக்கல்களை மேலும் விரிக்காமல் ஆராயாமல் இருக்கின்றன என்று ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அதில் உண்மை இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.ஆனால் வரலாறும் , தத்துவமும் , தொன்மமும், உளவியலும் அதை மேலும் விரித்து சொல்வதற்கான வழிகள் மட்டுமே.

தூயனின் டார்வினின் வால் தொகுப்பில் வரலாறும் ,  தொன்மமும் , உளவியலும் இருக்கின்றன. மிக அழகிய மொழியில் மிக தீர்க்கமான பார்வையோடு அமைந்திருக்கின்றன இந்தத் தொகுப்பின் கதைகள்.ஒரு எலியின் வாலை நறுக்குவதின் வழி ஒற்றை நனவலியிலியை கூட்டு நனவிலியிலிருந்து பிரிக்க முடியும்.சூழமைவிலிருந்து அதை தனியே பிரித்து விட்டால் அதனால் பின்னர் எந்தத் தொந்தரவும் இல்லை என்று செல்கிறது டார்வினின் வால் கதை.

டார்வினிய சோஷியலிசம் என்பதைப் பற்றி மேதகு வைஸ்ராய் திரு ராபர்ட் புல்வேர் லிட்டன் என்ற கதையிலும் எழுதியிருக்கிறார்.தக்கன வாழும்,  சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் உயிரிகள் வாழும் என்ற டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டை இன்று நாம் சமூகத்திற்கு பொருந்திவிட்டோம்.டார்வினின் கோட்டுபாடு தான் இன்று முதலாளித்துவம் அளிக்கும் தனிமனித சுதந்திரம்.தனிமனித சுதந்திரத்திற்கு அளவே இல்லை என்பதே இன்றைய பொருள் உற்பத்தி தளத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய வன்முறை.

சமூகம் என்பது மனிதன் உருவாக்கிய ஒரு ஏற்பாடு.அதில் ரூசோ சொல்வது போல ஒரு சமூக ஒப்பந்தம் தேவைப்படுகிறது. தனிச்சொத்து , அதன் பாதுகாப்பு , இந்தளவு தான் தனிச்சொத்து இருக்க வேண்டும் , இந்த அளவு தான் ஏற்றத் தாழ்வு இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகள் இல்லாமல் யாரும் எப்படியும் பொருள் சேர்க்க முடியும் , சந்தை என்பது அனைவருக்குமானது என்கிற போது நிகழும் சமூக மாற்றங்கள் டார்வின் சொல்லும் பரிணாமவியல் கோட்பாடு அல்ல மாறாக மனிதன் உருவாக்கிய வன்முறை.

தூயன் ஆண் பெண் உறவை முதன்மையாக்கி லாஸ்யம் என்ற கதையை எழுதியிருக்கிறார். இந்தக் கதையின் சொல்முறை நன்றாக உள்ளது. தீப்பற்றிய கனவுகள் என்பது ஆத்மநாம் என்ற ஓவியரைப் பற்றியது.அவர் இறந்துவிட்டார் , தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் கதைநாயகன் தன் ஆய்வில் கீழைத்தேய மரபில் தோய்ந்த ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்கிறான்.அவனது நனவிலி கூட்டு நனவிலியில் இணைந்தே இருக்கிறது.அதன் வெளிப்பாடுகள் தான் அவனது கலை வடிவங்கள் என்கிறான்.அதைத் தான் தலைப்பு தீப்பற்றிய கனவுகள் என்கின்றது.

இந்திரஜாலம் குறுநாவல் ஒரு கதையாடலின் வழி எப்படி மக்களை ,ஊரை, குடும்பத்தை குழப்ப முடியும் என்று சொல்கிறது. இது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாற்றையும் தொன்மத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நோய்ச் சொர்க்கம் ஒரு முதியவர் , நடுவயதுக்காரர் , இளைஞர் ஆகியோர் பற்றிய கதை.இவர்கள் எவருக்கும் பெயர்கள் இல்லை.ஞாபகமறதியால் தங்கள் அடையாளங்களைத் தொலைத்து விடுகிறார்கள். மையப்புள்ளி, அரை வட்ட வடிவம் என்று லத்தீன் அமெரிக்க கதைளில் வரும் முறைமைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேதகு வைஸ்ராய் கதையில் மதராஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஞ்சம் அதற்கு வைஸ்ராய் லிட்டன் முன்வைக்கும் தீர்வுகள் பேசப்படுகின்றன.ஒரு பெருங்கதையாடல் நிகழும் அதே சூழலில் சிறுகதையாடல்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பெரும் முடிவுகளை எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.அதை இரகசியம் போலக் காப்பார்கள்.ஆனால் அவை கீழே அடித்தளத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.அது எப்படி கசிகிறது என்று யாருக்கும் புரியாது. மேலும் முக்கியமான தருணங்களில் எடுக்கப்படும் முடிவுகள் , தீர்வுகள் மிகத் தற்செயலாக நிகழ்கின்றன.

தூயனின் கதைகள் மறுவாசிப்புக்கு உகந்தவை. கதைகள் சற்று நீளமாக இருக்கின்றன என்று தோன்றுகிறது.ஆனால் வாசிப்புக்கு அவை பெருந்தடையாக இல்லை. அவரின் பிற நூல்களையும் வாசிக்கும் போது அவரின் கதைவெளியை மேலும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

டார்வினின் வால் – தூயன் – எதிர் வெளியீடு.

புகைப்படம் - Julia Margaret Cameron/ Adam Cuerden - Alfred Steiglitz Collection reference 1949.881, Art Institute of Chicago, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=131628151



புக் பிரம்மா குறிப்புகள் - 3

புக் பிரம்மா மூன்றாம் நாள் நிகழ்வில் தெலுங்கு சிறுகதைகள் பற்றிய அரங்குக்கு சென்றேன்.எவை தெலுங்கு சிறுகதைகள் என்ற விவாதம் நிகழ்ந்தது.அசோகமித்திரன் ஐதராபாத் பற்றி எழுதியதை சுட்டிக்காட்டி அவை தெலுகு சிறகதைகள் என்று கொள்ள முடியுமா என்ற கேள்வியை தன் பேச்சில் கேட்டுக்கொண்டார் விவின மூர்த்தி என்ற எழுத்தாளர்.

அவர் பொதுவாக தெலுகு பாஷையில் எழுதப்பட்ட சிறுகதைகள் தெலுகு சிறகதைகள் தான் என்றார்.தெலுங்கு சிறுகதைகள் தொடங்கிய காலங்களில் எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி பேசின ,ஏழுபது எண்பதுக்கு பிறகு எளிய மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசும் அதே வேளையில் அவர்கள் அதை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும் போராட்டங்களை பற்றியும் பேசின என்றார். தெலுகு கதைகளின் முக்கிய விஷயம் அது சமாஜத்தோடு (சமூகத்தோடு) எப்போதும் தொடர்பில் இருப்பது தான் என்றார்.அது வேறு ஏதோ ஒரு உலகத்தை குறித்து பேசாமல் சமூகத்தை குறித்தே தன் கதைகளில் விவாதித்தது என்றார்.சில குறைகளையும் சொன்னார், குறைகள் எனக்கு சரியாக புரியவில்லை.

முகம்மது காதர் பாபு என்ற எழுத்தாளரிடம் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமிய உலகத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அவர் தன் வாழ்க்கையிலிருந்து ஒரு பதிலைச் சொன்னார்.தன் தாய் இறந்த பின்னர் நிறைய பேர் துக்கம் விசாரித்த போது பலருக்கும் இஸ்லாத்தில் மரணத்திற்கு பின்னான சடங்குங்கள் , முறைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதை அறிந்து கொண்டதாகச் சொன்னார்.நாங்கள் இறந்தவர்களின் உடலை மசூதிக்கு எடுத்துச் செல்வோம், நாற்பது நாட்கள் கழித்து சில சடங்குகளை அனுசரிப்போம்.அதைப் பற்றி யாரும் அறியவில்லை.எங்களோடு எங்கள் அருகில் இருக்கிறார்கள் , ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை , அப்படியென்றால் ஒன்று நாங்கள் அவர்களுக்கு சொல்லவில்லை, அல்லது அவர்களுக்கு அதை அறிய அக்கறையில்லை , ஆகையால் எங்களுக்கு இவை பற்றி சொல்லவே நிறைய இருக்கிறது.ஒரு எழுத்தாளரிடம் வந்து ஏன் இதைப் பற்றி எழுதவில்லை , அதைப்பற்றி எழுதவில்லை என்று கேட்பது அவசியமற்றது. ஒரு எழுத்தாளன் எதை எழுத விரும்புகிறானோ அதைத் தீவிரத்தன்மையோடு எழுதினாலே போதுமானது என்று கோர்வையாகச் சொன்னார்.அவர் மிக நன்றாக பேசினார்.

அதே போல அவரிடம் இப்படித்தான் எழுத வேண்டும் , அதாவது ஓடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழும் குரலாக , ஓடுக்குதலுக்கு எதிராக என்ற தன்மையில் தான் எழுத வேண்டும் என்ற நிர்பந்தம் உங்களுக்குள்ளேயே இருக்கிறதா என்ற இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. ஜீவித கதைகள் எப்போதும் எழுதப்பட்டன.திருமணத்தின் போது மெஹந்தி அணிதல் போன்ற சிறு கொண்டாட்டங்களை எழுதலாம், எழுதப்பட்டுள்ளன.அதனால் எப்போதும் வாத பிரதிவாதங்கள் உள்ள கதைகளைத்தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை , ஆனால் அப்படியான ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பது உண்மைதான் , அதைத் தவிர்த்து எழுத வேண்டும் என்றார்.

எழுத்தாளர் குப்பிலி பத்மா நான் ஒரு பியூட்டி பார்லரில் நிகழ்ந்த கதையை எழுதினால் இது உங்களுக்கு நிகழ்ந்ததா என்பது போன்ற எதிர்வினைகள் வருகின்றன என்றார். இதைப்பற்றி ஜா.தீபா கூட தமிழ் அரங்கில் சொன்னார்.

முகம்மது காதர் பாபு தெலுங்கு சிறுகதைகளில் வஸ்துக்கள் (வஸ்து என்றால் பொருட்கள் என்று வகையில் சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்) மாறியிருக்கின்றன , பிரயோகங்கள் அதிகம் மாறவில்லை என்றார். (அப்படியாக நான் புரிந்துகொண்டேன்).

பூதுரி ராஜிரெட்டி என்பவர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.நல்ல நிகழ்வு.தெலுங்கில் கம்யூனிஸ அமைப்பு தெலுங்கானா பகுதியில் வலுவாக இருந்ததால் ஆரம்ப கால தெலுகு நாவல்கள் , கதைகள் , சுயசரிதைகளில் இடதுசாரி உலகிலிருந்து நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அறுபதுகளில் ஒரு நிலச்சுவான்தார் நக்ஸல்களால் கொல்லப்பட்டப் பின்னர் அவரது மனைவி தன் பதினான்கு குழந்தைகளை தனியாளாக வளர்த்தெடுத்தார்.அவர் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளை வளர்த்துக்கொண்டு தன் கணவரின் கொலை வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.இவற்றைப்பற்றி அவர் ஒரு சுயசரிதை நூல் எழுதியுள்ளார் என்று எழுத்தாளர் காத்யாயனி வித்மகே முந்தைய நாள் நிகழ்ந்த பெண்களின் சுயசரிதை என்ற அரங்கில் பகிர்ந்துகொண்டார்.கட்சி சார் இடதுசாரி அமைப்புகள் பின்னர் வந்த நக்ஸல் அமைப்புகள் ஆகியவை தெலுகு இலக்கிய உலகில் பெரும் பாதிப்பை எழுத்து முறையில் சிந்தனையில் செலுத்தியுள்ளது என்று தோன்றியது.

இந்த புக் பிரம்மா நிகழ்வில் தெலுகு இலக்கிய உலகைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டது எனக்கு உவப்பளிக்கிறது.


புக் பிரம்மா குறிப்புகள் - 2

புக் பிரம்மா நிகழ்வில் டீ குடிக்கச் சென்ற போது இருவரோடு உரையாட நேர்ந்தது.அதில் ஒருவர் நான் ஆரம்ப நிலை வாசகன் , ஜெயமோகனை சந்திக்கத் தான் வந்தேன் என்றார். அந்தத் தான், எனக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.எத்தனையோ அரங்குகள் , நிகழ்த்துக்கலைகள் , எழுத்தாளர்கள் இருக்க ஒருவரை மட்டும் சந்திப்பதால் என்ன பயன் என்று புரியவில்லை.பலருக்கு தமிழைத் தவிர வேறு ஏதேனும் மொழியும் தெரியும்.வேறு மொழி அரங்குகளுக்கு செல்லலாம்.எத்தனையோ தேர்வுகள்.

மத்தேயு பத்தாவது அதிகாரத்தில் - 37வது வசனம் -

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

தாய் தந்தையரை அதிகம் நேசிப்பவன் ,அவர்களுக்கு பாத்திரமானவன் தனக்கு பாத்திரன் அல்ல என்கிறார் இயேசு கிறிஸ்து. தன் தாயை தந்தையை நேசிப்பவன் மரபை நேசிப்பவன்.மரபை நேசிப்பவன் எப்படி தன்னை ஏற்க முடியும் என்கிறார் கிறிஸ்து.Kill your fathers என்ற பதம் உண்டு.

இலக்கியம் வாசிக்கும் போது ஜெயமோகன் வாசிக்கப்படலாம்.ஜெயமோகனை வாசிப்பது இலக்கியத்தை வாசிப்பது ஆகாது. அவர் ஒரு தரப்பு.முக்கியத் தரப்பு.ஆனால் அது போல பல தரப்புகள் உண்டு.ஒரு போதும் பூமணியின் பிறகு போன்ற ஒன்றை ஜெயமோகன் எழுத முடியாது.அது வேறு தளம் , வேறு பார்வை.பூமணியை ஜெயமோகன் வழி அறிவதும் புரிந்துகொள்வதும் கூட பிழைதான்.

நகுலன் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நகுலனை படித்து பின்னர் அதைத் தொகுத்து ஏன் பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஜெயமோனுக்கு பிடிக்காதவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் என்று கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக இலக்கியம் படிக்க வருகிறீர்கள்.ஜெயமோகனை அறிந்து கொள்ளவா?அவரை அறிந்து கொள்வது எப்படி இலக்கியத்தை அறிந்து கொள்வதாகும்.

எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியை பிடிக்கும்.ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி ரஷ்ய இலக்கியம் அல்ல என்பதும் தெரியும்.தஸ்தாயெவ்ஸ்கி ஒருவரை வைத்து ரஷ்ய இலக்கியத்தை நாம் பேச முடியாது. ஜெயமோகன் ஒருவரை வைத்து மட்டும் தமிழ் இலக்கியம் பேச முடியாது.


புக் பிரம்மா குறிப்புகள் - 1

புக் பிரம்மா இரண்டாம் நாள் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.நிறைய தமிழ் எழுத்தாளர்கள்.சிலரிடம் அறிமுகம் செய்து கொண்டு முகமன் தெரிவித்தேன். நன்றாக ஒருங்கிணைப்பட்ட நிகழ்வுகள்.குறை சொல்ல ஒன்றுமில்லை.நான் நான்கு நிகழ்வுகளுக்கு சென்றேன். இரண்டு தமிழ் , இரண்டு தெலுங்கு. தமிழில் சிறுகதைகள் பற்றிய அரங்கும் தலித் இலக்கியம் பற்றிய அரங்கும் இன்று இருந்தன.தலித் இலக்கியம் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தராணி பேசினார்கள்.  நன்றாக பேசினார்கள்.கமலாலயன் ஒருங்கிணைத்தார்.சிறுகதைகள் குறித்த அரங்கில் சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்பரமணியன், தீபா பங்கு பெற்றனர். எம்.கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.சிறுகதைகள் குறித்த அரங்கு இன்னும் சற்று குவிமையம் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது. 

நான் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் அதிகம் பேசுவதோ கேட்பதோ இல்லை.தெலுங்கு இலக்கியம் குறித்த அறிமுகமும் இல்லை.எனக்கு  சென்னைத் தெலுங்கு,தென் ஆற்காடு , வட ஆற்காடு பகுதிகளின் தெலுங்கு புரியும். அரங்கில் பேசப்படும் தெலுங்கு விளங்குமோ என்ற சந்தேகம் இருந்தது.சரி செல்வோம் என்று தோன்றியது.ஆச்சரியமாக அவர்கள் பேசுவது நன்றாக புரிந்தது. தெலுங்கு நாவல்கள் குறித்த அரங்கில் நிறை கூட்டம்.அரங்கு நிறைந்திருந்தால் எக்ஸ்ட்ரா சேர்கள் போட்டார்கள்.அரங்கில் சு.வேணுகோபலை பார்த்தேன்.நன்றாக பேசினார்கள்.தெலுங்கில் தலித் நாவல்கள் ,அவை சினிமா ஆகாமல் இருப்பதற்கான காரணங்கள், பிற மொழிகளுக்கு மொழியாக்கங்கள் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அதே போல மற்றொரு அரங்கு தெலுங்கு மொழியில் பெண்களின் சுயசரிதைகள்.மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பு.சி.மிருணாளினி என்பவர் தன் எண்ணங்களைத் திறம்பட தொகுத்து சரளமாக பேசினார்.சுயசரிதையில் பாலியல் சார்ந்த பார்வைகளை பேசும் போது அதை சிலோகிக்கும் நாம் பிற பலவீனங்களைப் பற்றி பேசுகிறோமா என்று கேட்டார்.அதாவது ஒருவர் தன் பணியாளர்களை எப்படி நடத்தினார், குழந்தைகளை எப்படி நடத்தினார் என்பதைக் குறித்து அதே போன்ற ஒரு வெளிப்பாட்டை அவர்கள் வைக்கிறார்களா? அப்படி இல்லையென்றால் பாலியல் சார்ந்த பார்வைகள் மட்டும் ஏன் முன்வைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.காத்யாயனி வித்மகே ஆண்களின் சரிதை புற உலகை பற்றிப் பேசுகின்றன, பெண்களின் சரிதைகள் அக உலகம் குறித்த சித்திரத்தை அளிக்கின்றன.இவை இரண்டும் சேர்ந்து ஒரு காலகட்டத்தின் பார்வையை தருகின்றன என்றார்.

மேலும் மிருணாளினி பேசும் போது நாம் என்னதான் சுயசரிதை எழுதினாலும் அதை நாம் மனதளவில் சற்று எடிட் செய்து தான் பிரசுரிக்கிறோம் என்றார்.கணவர், அத்தை , மாமா , பிறர் என்று எவரைப் பற்றியும் எழுதும் போது நாம் இந்தச் சமூகத்தில் அவர்களோடு ஜீவிக்க வேண்டிய வகையில் தான் எழுத முடியும், அப்படி எழுவதே நல்லது என்றார்.சில உதாரணங்களைச் சொல்லி எத்தனை தீவிரமான விஷயங்களையும் ஹாஸ்யத்தோடு சொல்ல முடியும் என்றார்.

சுநீல் கிருஷ்ணனனோடும் , கார்த்திக் பாலசுப்பரமணியனோடும் சற்று நேரம் பேச முடிந்தது.ஜெயமோனைச் சுற்றி பலர் நின்றுகொண்டும் பின்னர் அமர்ந்து கொண்டும் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் செல்லவில்லை.

புத்தக அங்காடியில் தமிழ் ஸ்டால்கள் அதிகம் இல்லை.மகனுக்கு சில காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கினேன்.இனிமையான நாள்.


பாரடைஸ்

 


அபிலாஷ் பாரடைஸ் திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறார்.அவர் எழுதியுள்ளதற்கு மாறாக எனக்குத் திரைப்படம் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படம் போலிய பெண்ணியவாதத்தையோ அல்லது பெண்ணியவாதத்தையோ முன்வைக்கும் படம் அல்ல.

சீதையின் அக்கினிப்பிரவேசம் பற்றியும் ராமன் ராவணனை கொலை செய்ததை பற்றியும் கதையில் பலரும் பேசுகிறார்கள். இந்தக் கதையின் மையமான வாதம் அந்தப் பெண்ணின் பார்வை அல்ல.தமிழர்களோ இஸ்லாமியர்களோ சிங்களர்களோ கூட இல்லை. இதில் அந்த நாயகனின் உறுதித்தன்மையே மையக் கதையாடலாக இருக்கிறது. அவன் தொடர்ந்து உறுதியாக பிடிவாதமாக தன் களவாடப்பட்ட பொருள் குறித்த பதற்றத்தோடு இருப்பதையே கதை முதன்மைப்படுத்துகிறது .எனக்கு என் பொருள் வேண்டும் என்பதற்கு அப்பால் அவனால் சிந்திக்க இயலவில்லை.

முதலில் அந்தப் பெண்ணும் இயல்பாக அவனோடு காவல் நிலையம் செல்கிறாள்.அதுவரை அவளுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.அங்கு அழைத்து வருபவர்களை அவளால் அடையாளம் காட்ட இயலவில்லை.தன் கணவரின் தீர்க்கமான முடிவு அவளைக் குழப்புகிறது. இங்கிருந்து தான் அவர்களுக்குள் மன கசப்பு உண்டாகுகிறது. அவன் அந்த விடுதியிலோ , காவல் நிலையத்திலோ ,அந்தத் தமிழர் தாக்கப்படும் போதோ , அவன் இறக்கும் போதோ, அது பெரிய சிக்கலாக உருவெடுக்கும் போதோ அந்த விடுதியின் உதவியாளரை காவல் துறை ஆய்வாளர் சந்தேகிக்கும் போதோ அவன் தன் பிடிவாதத்தை விட்டிருக்கலாம்.

அவன் தொலைத்தவை முக்கியமான பொருட்கள் தான். அவன் கைப்பேசியோடும் கணினியோடும் தான் அதிக நேரம் செலவிடுகிறான் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் வரும் பதற்றம் தான் அவனுக்கும். எப்படியாவது தொலைத்ததை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கும்.அதுவும் அது தன் தொழிலுக்கு முக்கியமானதாக இருக்கும் போது பதற்றமும் ஏக்கமும் மேலும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் அந்த உறுதியிலிருந்தும் பிடிவாதத்திலிருந்தும் அவன் இறுதிவரை விலகி வருவதே இல்லை.தன் முன் நிகழும் எதையும் அவன் கண் கொண்டு பார்க்கவே இல்லை.அவன் அகம் புறத்தை பார்க்க மறுக்கிறது.அவன் இலங்கை சென்றாலும் விடுமுறையில் இல்லை.அவனது அழுத்தமே அங்கு நிகழும் அனைத்துக்கும் காரணம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.அதை அவன் உணரவும் விரும்பவில்லை.மருத்துவமனைக்கு செல்பவன் அங்கிருந்து திரும்பிவிடுகிறான்.அவன் யதார்த்தத்தை எதிர் கொள்ளத் தயங்குகிறான்.

அவன் தன் பிடிவாதத்தை பொருந்தாத பழைய சட்டையை  போல கழற்றியிருக்க முடியும்.ராமர் தன் பிடிவாதத்தை விட்டிருந்தால் லங்கை அழிந்திருக்காது , சீதையே ராவணனை கொன்றிருப்பாள் என்பதான புரிதலும் உண்டானது.

நாயகி நாயகனை கொல்லும் தருணம் ஒரு விபத்து தான். அது அவள் திட்டமிட்டு நிகழ்த்துவது அல்ல.அந்தத் தருணத்தில் தனக்கிருந்த பதற்றத்தாலும் எரிச்சலாலும் செயலின்மையாலும் தான் அவள் அவனை சுடுகிறாள்.இங்கே நாயகன் ராமனாகவும் இருக்கலாம் ராவணனாகவும் இருக்கலாம். 

இறந்து போன மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபால் ஒரு பேட்டியில் பிடிவாதம் குறித்து பேசியிருப்பார்.பிடிவாதம் இயல்பில் ஒரு அருவெருக்கதக்க குணம்.நாம் மிகவும் உறுதித்தன்மையோடு இருந்தால் பிறருக்கு நம்மை பிடிக்காமல் போய்விடும்.ஆனால் மனித உரிமை ஆர்வலராக என்னுடைய பிடிவாத குணம் எனக்கு உதவுகிறது என்று சொல்லியிருப்பார்.

இந்தத் திரைப்படம் மற்றமை குறித்த அக்கறை அற்ற உறுதித்தன்மை குறித்தே பேசுகிறது. மேலும் ஒரு பெண்ணிற்கு முகமைகள் தேவையில்லை என்பதையும் சொல்கிறது.அதை இந்தக் கதை அந்தப் பெண் கதாபாத்திரத்தின் உருமாற்றமாக சொல்லவில்லை.அந்தப் பெண் இயல்பிலேயே அப்படியானவளாக சுய விருப்பு வெறுப்புகள் கொண்டவளாகவே இருக்கிறாள்.சீதை அழுது கொண்டுதான் இருந்திருப்பாள் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று வினவுகிறாள்.சமண ராமாயணத்தில் சீதை தான் ராவணனை கொல்கிறாள், ராமன் தேரோட்டியாக இருக்கிறான் என்கிறாள்.

பிடிவாதங்களை களைந்து மற்றமை மீது கொள்ள வேண்டிய அக்கறையே இந்தத் திரைப்படத்தின் கதையாடல்.நல்ல திரைப்படம்.

குறிப்பு : இந்தத் திரைப்படத்தை பற்றி எழுதும் எண்ணம்  முன்னர் இல்லை. அபிலாஷ் எழுதியதை படித்தப் பின்னர் என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முடிந்தது.எழுதவும் வாய்த்தது.அவர் பதிவுக்கு நன்றி.


நிர்மால்யம்

 


சமீபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் நிர்மால்யம் திரைப்படம் பார்த்தேன். அவரின் முதல் படம். எத்தகைய தேர்ந்த இயக்குனராக அதில் மிளிர்ந்திருக்கிறார். அவருக்கு சினிமா குறித்த முழுமையான புரிதல் முதல் படத்தின் போதே இருந்திருக்கிறது. காட்சி கோணங்கள், சட்டகங்கள், ஒளியமைப்பு, படத்தொகுப்பு, இசை என்று அனைத்து துறைகளிலும் தேர்ந்த படம். கலைகள் , இசை , இலக்கியம் போன்றவற்றை போஷித்துவந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சோஷியலிச சமூகம் தோன்றும் போது தன் அக்கறைகளை மாற்றிக் கொள்கிறது. அப்போது அந்தக் கலைகளை மட்டுமே சார்ந்து இயங்கி வந்த மனிதர்கள் , அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், விழுமியங்களின் வீழ்ச்சி ஆகியவற்றை நிர்மால்யம் முன்வைக்கிறது.

இந்தத் திரைப்படம் ஒரு காலகட்டத்தின் மாற்றத்தை பதிவு செய்திருக்கிறது. ஒரு குடும்பம் முழுதாக சிதைந்து போவதை பாவனைகள் அற்று காண்பிக்கிறது.ராமசந்திர பாபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவரின் முதல் படம் என்று நினைக்கிறேன். அவரது சகோதரர் தான் ரவி.கே.சந்திரன் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழில் ஜானி திரைப்படத்தின் ஒளிப்பதிவை பார்த்து வியந்திருக்கிறேன்.அதிலும் வித்யாசாகரும் , ஜானியும் சந்தித்து கொள்ளும் இரவு நேர முதல் காட்சி.அந்தக் காட்சியின் ஒளியமைப்பு வசீகரிக்கக்கூடியதாக இருந்தது.அதே போல அரவிந்தனின் சில திரைப்படங்களின் ஒளிப்பதிவு.மணி கெளல் இயக்கிய நஸர் திரைப்படத்தின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கும்.இந்த வரிசையில் நிர்மால்யமும் இருக்கிறது.
ஓர் எழுத்தாளர் தன் முதல் திரைப்படத்தையே இத்தகைய ஆளுமைத்திறனுடன் இயக்கியிருக்கிறார் என்பது நம்மை ஆச்சரியம் கொள்ளச் செய்கிறது.



பிஜாய் இம்மானுவல்

 



கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் 2023 அக்டோபர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி நடந்த கிறிஸ்தவ மதப்பிரிவின் பிராத்தணைக் கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அந்த மதப்பிரிவின் பெயர் ஜெகோவாவின் சாட்சியங்கள்.குண்டு வெடிப்பை நிகழ்த்தியவரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் தான்.

இந்தியாவில் சில மனித உரிமை வழக்குகள் புதிய பார்வைகளை ,சட்டங்களை , சட்டத்திருத்தங்களை உருவாக்கியிருக்கின்றன.அவற்றில் ஒன்று பிஜாய் இம்மானுவல் என்ற மாணவருக்கும் கேரள அரசுக்கும் நிகழ்ந்த வழக்கு.அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது.வழக்கின் இறுதித் தீர்ப்பு பிஜாய் இம்மானுவேலுக்கும் பிற மாணவர்களுக்கும் சாதகமாக அமைந்தது.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஜெ.இம்மானுவல்.இவர் மன்னனம் ஊரில் இருந்த கே.யி.கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தார்.இவருடைய மகன் பிஜாயும் மகள்கள் பினுவும் பிந்துவும் கிடங்கூர் என்ற ஊரிலிருந்த என்எஸ்எஸ் உயர்நிலைப் பள்ளியில் 1985ஆம் ஆண்டு படித்து வந்தனர்.இவர்கள் ஜெகோவாவின் சாட்சியங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பிஜாயும் அவரது சகோதரிகளும் அவர்களின் மதக் கோட்பாட்டின் படி இறைவனைத் தவிர வேறு எவரையும் துதிப்பதில்லை, வணங்குவதில்லை என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்தனர்.இந்தப் பிரிவினர் தேசியம் , மொழி, அரசு ஆகியவற்றிலிருந்து விலகியே இருக்கின்றனர்.அவர்கள் இதில் உறுதியாக உள்ளார்கள்.இதன் காரணமாக உலகம் முழுக்க அவர்களுக்கும் அரசுகளுக்கும் முரண்கள் உருவாகி வழக்குகள் நிகழ்ந்திருக்கின்றன.

பிஜாய் இம்மானுல் (அவரது சகோதரிகளும்) பள்ளியில் காலையில் நிகழும் பிராத்தணைக் கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை.அவர்கள் எப்போதும் பாடியதில்லை.அவர்களுக்கு முன் அந்தப் பள்ளியில் படித்த அவரது சகோதரிகளான பீனாவும் பெஸ்ஸியும் பாடியதில்லை.அதே நேரத்தில் அவர்கள் தேசிய கீதம் பாடப்படும் போது பிறரை பாட விடாமல் தடுக்கவில்லை. எழுந்து மரியாதை செய்யாமலும் இருக்கவில்லை.இதை செய்தித்தாள் வழியாக அறிந்த சட்டசபை உறுப்பினர் ஒருவர் இதைப் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.உண்மை அறிய ஒரு ஆணையம் நிர்ணயிக்கப்பட்டது.அந்த ஆணையம் அந்தக் குழந்தைகள் பற்றிய அறிக்கையில் அவர்கள் தங்கள் சமயத்தின் நெறிப்படி தேசிய கீதம் பாடவில்லை என்றும் அதே நேரத்தில் அவர்கள் ஒழுங்கை கடைப்படிக்கும் பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்று சொல்லியிருந்தது.இருந்த போதும் பள்ளி இயக்குனரகம் அந்தக் குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கச் சொல்லி தலைமை ஆசிரியருக்கு கட்டளையிட்டது.அந்தக் குழந்தைகளின் தந்தை வி.ஜெ.இம்மானுவல் பள்ளியில் முறையிட்ட போது தலைமை ஆசிரியர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்திருக்கிறார்.

இதை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் பிஜாய் இம்மானுவல் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. முதலில் ஒரு நீதிபதியின் தலைமையிலான அமர்வு குழந்தைகள் நீக்கப்பட்டது சரிதான் என்று உத்தரவிட்டது.பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும் அதையே உறுதி செய்தது.உயர் நீதி மன்றம் தேசிய கீதத்தின் எந்தச் சொல் ஜெகோவா சாட்சியத்தின் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்று ஆராய்ந்தது.அப்படி எந்த சொல்லும் இல்லை என்பதால் அவர்கள் தேசிய கீதத்தை பாடாமல் இருந்தது தவறு தான் என்று சொல்லி பிஜாயும் அவரது சகோதரிகளும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டது பிழையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார் வி.ஜெ.இம்மானுவல்.நீதியரசர்கள் ஓ.சின்னப்பா ரெட்டி, எம்.எம்.தத் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை வேறு கோணத்தில் பார்த்தார்கள்.உயர் நீதி மன்றத்தில் தேசிய கீதத்தில் உள்ள எந்தச் சொல் ஜெகோவாவின் சாட்சியத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் அவர்கள் பாடாமல் இருந்தது சட்டப்படி பிழையா என்பதை கவனித்தார்கள். அவர்கள் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்றார்கள்.பிறர் பாடுவதை தடுக்கவில்லை.அவர்கள் பாடவில்லை என்பதே குற்றம்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(அ) – சுதந்திரமாக பேசுவதற்கும் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்குமான உரிமையை அனைத்து இந்தியப் பிரஜைகளுக்கும் அளிக்கிறது.அதே நேரத்தில் 19(2) – இந்த உரிமைகள் மீதான வரையறைகளை உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் சொல்கிறது.இந்திய இறையான்மை , ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு, மற்ற நாடுகளுடான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம், ஒழுக்கநெறி, நீதிமன்ற அவமதிப்பு, குற்றம் செய்யத் தூண்டுதல் , அவதூறு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த வரையறைகளை அரசு இயற்றுவதை 19(1) தடுக்காது என்றும் சொல்கிறது.அதே நேரத்தில்  இந்த வரையறைகளை ஒரு சட்டத்தின் வழி தான் உருவாக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25(1) – பொது ஒழுங்கு மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் தங்கள் சமயத்தை கடைபிடிப்பதற்கும் , பின்பற்றுவதற்கும் , பரப்புவதற்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக கூறுகிறது.பிரிவு பத்தொன்பதும் இருபத்தியெந்தும் அடிப்படை உரிமைகள் பகுதியில் வருகின்றன.

அடிப்படைக் கடமைகள் பகுதியில் 51A(அ) பிரிவின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அரசியலமைப்பின் படி நடக்க வேண்டும்.அதன் நிறுவனங்களையும் லட்சியங்களையும் மதிக்க வேண்டும், தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் மதிக்க வேண்டும் என்று சொல்கிறது.

இவைத் தவிர தேசக் கெளவரத்தை அவமதித்தல் தடுப்புச் சட்டத்தில் தேசியக் கீதம் பற்றி பிரிவு மூன்று தேசியக் கீதம் இசைக்கப்படும் போது பாடுவதை தடுத்தாலோ அல்லது குழப்பத்தை விளைவித்தாலோ அவருக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது. இங்கு தேசிய கீதம் பாடாமல் இருப்பது குற்றமாக சொல்லப்படவில்லை. பிறர் தேசிய கீதம் பாடுவதை தடுப்பதோ அல்லது தேசிய கீதம் பாடும் போது குழப்பம் விளைவிப்பதோ குற்றமாக கருதப்படுகிறது.

கேரளக் கல்விச் சட்டத்திலும் தேசிய கீதம் குறித்து தனித்து எதையும் குறிப்பிடவில்லை.கேரள அரசு தன் தரப்பு வாதத்தை வலுவாக்க 1961யிலும் 1970யிலும் கேரள பொது அறிவிப்புக்கான இயக்குனரகம் கொடுத்த சுற்றறிக்கைகளை சான்றுகளாக காண்பித்தது. ஆனால் இந்தச் சுற்றறிக்கைககள் சட்டங்கள் அல்ல.அப்படியே அவற்றை கணக்கில் கொண்டாலும் அவற்றில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டாலும் ஒருவர் மன ஓர்மையோடு தெளிவான தர்க்கத்தோடு பாடாமல் இருப்பதை இந்தச் சுற்றறிக்கைகள் தடுக்கவில்லை என்று நீதியரசர்கள் சொன்னார்கள்.அந்தச் சுற்றறிக்கையே அனைத்து சமயங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

பிஜாய் முதலான மாணவர்களை கட்டயாப்படுத்தி பாடச் செய்வது உண்மையில் பிரிவு 19(1) (அ)வுக்கும் 25(1) க்கும் எதிரானதாக இருக்கும்.மேலும் இந்த வழிமுறையை அவர்களின் சமயம் அங்கீகரிக்கிறது.இதன் பொருட்டு உலகம் முழுக்க அவர்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்திருக்கிறார்கள்.அவர்களின் சமயக்கருத்துகள் படி தேவனின் ராஜ்ஜியம் மட்டுமே இருக்கிறது.மனிதர்கள் உருவாக்கிய அமைப்புளான தேசம் , அரசு போன்றவற்றை அவர்கள் ஏற்பதில்லை.அதே நேரத்தில் அவர்கள் அதை எதிர்ப்பதும் இல்லை.அவர்களின் சமயம் சொல்லும் நெறிகளின் படி அவர்கள் வாழ விரும்புகிறார்கள்.அது இந்திய அரசியலமைப்பின் படியும் உருவாக்கப்பட்ட சட்டங்களின் படியும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது , அதனால் அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் நீதியரசர்கள்.

சட்டயியலில் லோன் எல்.ஃபுல்லர் (Lon L.Fuller) , ஹச்.எல்.ஏ.ஹார்ட் (H.L.A. Hart) , ரொனால்ட் டவார்க்கின் (Ronald Dworkin), ஜான் ஃபின்னிஸ் (John Finnis) ஆகியோர் முக்கியமாக கருதப்படுகிறார்கள்.ஜான் ஃபின்னிஸ் மரபான செவ்வியல் இயற்கை சட்டக் கோட்பாட்டுக்காக வாதாடினார்.லோன் எல்.ஃபுல்லர் நவீன இயற்கை சட்டக் கோட்பாட்டை பற்றிய வரைவை பேசினார்.ஏ.எல்.ஏ.ஹார்ட் சட்ட நேர்காட்சிவாதத்தை முன்மொழிந்தார்.இவர்கள் எல்லோரும் சட்டத்தின் சட்டகத்தை பற்றி பேசினார்கள்.அதாவது சட்டங்கள் எப்படி இயற்றபட வேண்டும் , முதன்மைச் சட்டங்களாக எவை இருக்க வேண்டும் , இரண்டாம் கட்ட சட்டங்களாக எவை இருக்க வேண்டும் என்று சட்ட உருவாக்கத்தை பற்றி பேசினார்கள்.சட்டத்தின் சட்டகங்கள் எவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்று வரையறைத்தார்கள்.

ரொடால்ட் டவார்க்கின் இவற்றிலிருந்து மாறுபட்டு சட்டத்தை எப்படி பொருள் கொள்வது என்பதை பற்றி விவரித்தார்.அதாவது சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன.இப்போது வழக்குகள் நிகழ்கின்றன.வழக்கறிஞர் வாதாடுகிறார்.சட்டப் புத்தகங்கள் இருக்கின்றன.நீதிபதிகள் இவற்றை ஆராய்கின்றனர்.இந்தச் சட்டங்களை எப்படி பொருள் கொள்வது , அர்த்தப்படுத்திக் கொள்வது , உட்பொருள் கண்டறிவது என்பது பற்றி அவர் சொன்னார்.அவர் நீதிபதிகளை நோக்கி பேசினார் என்று சொல்ல முடியும்.

பிஜாய் இம்மானுவல் என்ற மாணவன் தேசிய கீதம் பாடவில்லை.அவன் தன் மன ஓர்மையோடு தன் சமயம் சொல்லும் நெறிகளை உள்வாங்கி அதன் படி ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறையின் காரணமாக தேசிய கீதம் பாடவில்லை.இந்திய அரசியலமைப்பு ஒருவருக்கு பேசுவதற்கும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் உரிமை இருப்பதை அங்கீகரிக்கிறது. அதே போல ஒருவர் தன் சமயத்தை கடைப்பிடிப்பதற்கும் , பயில்வதற்கும், பரப்புவதற்கும் உரிமை உண்டு என்று சொல்கிறது.இவை அடிப்படை உரிமைகள் என்று சொல்லப்படுகின்றன.

தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதும் ஒரு கடமையாக பார்க்கப்படுகிறது.பிஜாய் இம்மானுலின் இந்த வழக்கு ஒரு வகையில் ரொனால்ட் டவார்க்கின் பார்வையை சொல்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த வழக்கு. இங்கே இந்த இரண்டு தரப்புகளையும் சீர்தூக்கி பார்த்து அதன் படி சட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.அந்தச் சிறுவர்கள் தாங்கள் மிகத் தீவிரமாக ஏற்கும் ஒரு சமயக் கருத்தின் முன்னிட்டு மன ஓர்மையோடு மன உறுதியோடு தெளிவான புரிதலோடு தேசிய கீதம் பாடாமல் இருக்கிறார்கள்.அவர்கள் அதை ஒரு மறுப்பாகவோ , கலகமாவோ செய்யவில்லை.அவர்களின் உரிமையாக பார்க்கிறார்கள்.மேலும் அவர்கள் பிறருக்கு தொந்தரவு அளிக்கவில்லை. தேசிய கீதம் பாடும் எழுந்து நிற்கவும் செய்கிறார்கள்.தேசம் , அரசு , ராணுவம் போன்ற எந்த அமைப்பையும் அவர்கள் ஏற்கவில்லை.அவை மனிதர்கள் உருவாக்கியவை.அதனால் அதை அவர்கள் வணங்குவதில்லை.இது நமக்கு வித்யாசமானதாகவும் , வேடிக்கையானதாவும் கூட தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு அது அவர்களின் சமய நம்பிக்கை சார்ந்த செயலாக இருக்கிறது.அதே நேரத்தில் சமயம் சார்ந்த நம்பிக்கை என்பதற்காக நாம் அனைத்தையும் அனுமதிக்க இயலாது என்றே அரசியலமைப்பு சொல்கிறது.பொது ஒழுங்குக்கும் , நெறிமுறைக்கும் உட்பட்டே அவை அனுமதிக்கப் படுகின்றன. ஒருவர் பேசுவதற்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் உரிமை உண்டென்றாலும் அதுவும் வரையறைக்கு உட்பட்டவைதான்.

இந்த வரையறைகளுக்கு உட்பட்டு பார்க்கும் போதும் கூட இந்தச் சிறுவர்கள் தேசிய கீதம் பாடாமல் இருப்பதை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குகின்றனர் நீதியரசர்கள் ஓ.சின்னப்பா ரெட்டியும் எம்.எம்.தத்தும்.நமது மரபு ஏற்பமைவை (Tolerance) சொல்லித்தருகின்றது. நமது தத்துவங்கள் ஏற்பமைவை போதிக்கின்றன.நமது அரசியலைப்பு ஏற்பமைவை நிகழ்த்துகிறது.நாம் அதை நீர்த்துப் போகச் செய்யாமல் இருப்போம் என்று தீர்ப்பை நிறைவு செய்கிறார்கள்.

இன்று நாம் ஹிஜாப் குறித்து விவாதங்களை கேட்டு வருகிறோம்.இது குறித்த வழக்கு மூன்று பேர் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடை பெற்று பின்னர் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது.உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் மிக அவசியமான சமய வழக்கா என்ற கேள்வியைக் கேட்டு விடை காண முயன்றது.அப்படியான எதையும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களால் நிறுவ இயலவில்லை .உயர் நீதிமன்றத்தில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற சட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு முறையீடுக்கு வந்தது.உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஹமந்த் குப்தாவும் சுதான்ஸூ துலியாவையும் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது.

ஹமந்த் குப்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறில்லை என்று சொன்னார்.சுதான்ஸூ துலியா பிழை என்றார்.நம் முன் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.ஒன்று குழந்தைகள் , அதிலும் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற தேர்வு.மற்றது பள்ளிச் சீருடை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற தேர்வு.ஒன்று உரிமை மற்றது கடமை.இவற்றை சீர்தூக்கி பார்க்கும் போது குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று சொல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் சுதான்ஸூ துலியா.இருவரும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால் இது மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிபதியின் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கும் பிஜாய் இம்மானுவல் வழக்கும் பல இடங்களில் பொருந்துகின்றன.சில இடங்களில் வேறுபடவும் செய்கின்றன.ஜெகோவாவின் சாட்சியம் சமயத்தில் தேசிய கீதத்தை பாடாமல் இருப்பதை அவர்களின் சமயத்தின் நெறியாக கொள்வதற்கு வலுவான தரப்பு அவர்களுக்கு இருந்தது.ஹிஜாப் விஷயத்தில் அது சரிவர நிறுவ இயலவில்லை. சட்டத்தில் இதை அவசியமான சமய வழக்குகள் (Essential Regular Practices) என்று குறிப்பிடுகின்றனர்.அதே நேரத்தில் இரண்டு வழக்குகளிலும் அது முக்கியமான விஷயமாக இருக்கவில்லை.

நீதியரசர் சுதான்ஸூ துலியா அவசியமான சமய வழக்கு என்று கோணத்தில் முறையீட்டாளர்கள் வாதாடி இருக்கத் தேவையில்லை என்று தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்.அவசியமான சமய வழக்குகள் என்பன ஒரு அமைப்பு ஒன்றைச் செய்யும் போது எழுப்ப வேண்டிய கேள்வி.ஒரு அமைப்பு அது செய்யும் சடங்கு அல்லது பழக்கத்தை அவசியமான வழக்கம் என்று நிறுவ அவசியமான சமய வழக்குகள் பற்றிய கிரந்தங்கள் குறித்த விளக்கத்தை நீதிமன்றங்களில் கூறலாம்.அதாவது பிராமணர்கள் தான் அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்று ஒருவர் வாதிட்டால் இந்து சமயத்தின் எந்த கிரந்தங்களின் படி இவை அவசியமான சமய வழக்குகள் என்று நிறுவ வேண்டும்.ஆனால் ஒரு தனி நபர் தன் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரால் ஒரு செயலைச் செய்யும் போது அது அவசியமான சமய வழக்கு என்று நிறுவ வேண்டியதில்லை என்று சுதான்ஸூ துலியா தன் தீர்ப்பில் கூறுகிறார்.

வழக்கறிஞர் கெளதம் பாட்டியா இந்த வழக்கை பற்றி தன் The Unsealed Covers நூலில் குப்தா தன் தீர்ப்பில் ஒழுக்கத்தை குறித்தே தொடர்ந்து கவலைப்படுகிறார் என்கிறார்.இந்திய அரசியலமைப்பு பிரிவான 14 சமத்துவம் குறித்து பேசுகிறது.சீருடை சமத்துவத்தை நிறுவ ஒரு அவசியமான வழிமுறை என்றார் ஹமந்த்.மேலும் குழந்தைகளுக்கு பள்ளியில் சீருடை அணிய கட்டாயப்படுத்துவது ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் என்கிறார். பிரிவு 19(1) , 25(1) பள்ளியில் சீருடை விவாகரத்தில் செல்லுபடி ஆகாது என்றார் ஹமந்த். ஆனால் துலியா ஒரு பெண்ணை பள்ளி நுழைவாயிலில் நிறுத்தி அவளது பர்தாவை கழற்றச்சொல்வது அவளது தனிப்பட்ட வாழ்க்கைகுள் பிரவேசிப்பதாக மாறும் என்கிறார்.

இங்கே எது முதன்மையானது என்பதே முக்கியம். பிஜாய் தேசிய கீதம் பாடாததால் அவரை பள்ளியிலிருந்து நீக்கியிருந்தால் இன்று அவர் படித்திருக்க மாட்டார்.ஹிஜாப் அணியும் பெண்கள் ஹிஜாப் அணியாமல் வந்தால் தான் படிக்க இயலும் என்பது அவர்கள் வாழ்வை மேலும் பின்னுக்குத் தள்ளுவது.அவர்கள் தங்களை இப்படித்தான் வெளிப்படுத்துக் கொள்வோம் என்கிறார்கள்.அமைப்பு அப்படியான மீறல்களை ஏற்றுக்கொள்வதன் வழியே அவர்களுக்கு கல்வியை அளிக்க முடியும் என்றால் இதில் என்ன பிழை இருக்க முடியும்.மேலும் இன்றைய இந்துத்துவ அரசுகள் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முனையும் போது சிறுபாண்மை சமூகங்கள் தங்களின் அடையாளங்களை மேலும் இறுகப் பற்றிக் கொள்வது இயல்பாகவே நிகழ்கின்றன.இந்த அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.அவர்கள் அந்த அடையாளங்களை சூட்டியும் கொள்கின்றனர்.

நீதியரசர் சின்னப்பா ரெட்டி சொல்வது போல துலியா சொல்வது போல எது அவசியம் என்பதே பிரதானம்.ரொனால்ட் டவார்க்கின் சட்டம் உறுதியான பாறைகளில் எழுதப்பட்ட சொற்கள் அல்ல என்கிறார்.அவை இறுதி உண்மைகள் அல்ல.எல்லோரும் ஒளிப்படங்கள் எடுக்க முடியும்.ஆனால் சிலர் மட்டும் சரியான கோணம் , சரியான சட்டகம் , குறிப்பிட்ட அளவிலான ஒளியைக் கொண்டு மிக அற்புதமான காட்சி ஒவியங்களை உருவாக்குகிறார்கள். அதே போல சட்டங்கள் எங்கும் இருப்பவை தான்.அதைக் கொண்டு மக்களுக்கு என்ன செய்ய இயலும் , ஓடுக்கப்பட்ட மக்களை எப்படி மேலெற்ற இயலும் என்பது சட்ட வல்லுனர்கள் கைகளிலும் நீதியரசர்கள் கைகளிலும் இருக்கின்றது.நீதியரசர்கள் கிருஷ்ண்ய்யர் , சின்னப்பா ரெட்டி போன்றோர் அத்தகையோர்.அவர்கள் வழி நீதித்துறை செல்ல வேண்டும்.இன்றைய சூழல் அதற்கு எதிர் திசையில் செல்கிறது என்றாலும் இவை மாறும்.மாற்றம் நம்மிலிருந்து துவங்க வேண்டும்.

(தளம் இதழில் பிரசுரமான கட்டுரை)

புகைப்படம் : © Mangostar/stock.adobe.com