|
|
||||
|
|
நான் மனித உரிமைச் சட்டங்கள் பற்றிய ஒரு பட்டயப் படிப்பு
படித்தேன். இறுதித் தேர்வு எழுதவில்லை.இனி எழுதும் எண்ணமும் இல்லை. அந்தப் படிப்பில்
ஒரு பாடம் சர்வதேச அமைப்பில் மனித உரிமைகளுக்கான சட்டங்களும் அவற்றின் அமலாக்கமும்.அரவிந்த்
நரேன் நடத்தினார்.எனக்கு அந்த வகுப்புகள் பிடித்திருந்தன.அவர் தன் பாடத்தின் பகுதியாக
பிலிப் சாண்ட்ஸ் என்பவர் எழுதிய கிழக்கு மேற்கு தெரு (East West
Street) என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்ற பரிந்துரைத்தார்.
பிலிப் சாண்ட்ஸ் வழக்கறிஞர் , பேராசிரியர்.அவர் தன்
மூதாதையர்களின் ஊரான லிவீவ் நகரம் பற்றியும் அந்த ஊரில் வாழ்ந்த இருவர் எப்படி மனித
உரிமைகளுக்கான சர்வதேச சட்டங்களை உருவாக்கினார்கள் என்பது பற்றியும் இந்தப் புத்தகத்தில்
விவரிக்கிறார்.
பிலிப் சாண்ட்ஸின் தாய் வழி தந்தை லியான் லிவீவ் நகரத்தில்
வசித்தார்.லியானின் தாய் லிவீவ் நகரத்தின் பக்கத்து ஊரான சோல்கீவ் என்ற ஊரில் வளர்ந்தார்.லிவீவ்
நகரில் கிழக்கு மேற்கு தெருக்களில் வாழ்ந்த ரஃபேல் லெம்கினும் ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்டும்
மனித உரிமைக்களுக்கான சட்ட வரைவுகளை உருவாக்கினார்கள்.அவை சர்வதேச அமைப்பான ஐ.நாவால்
பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ரஃபேல் லெம்கின் கூட்டுக்கொலை (Genocide)
என்கிற பதத்தை உருவாக்கினார்.எது
கூட்டுக்கொலை என்பதையும் வரையுறைத்தார்.ஹெர்ஷ் லாட்டர்பேக்ட் மானுடத்திற்கு எதிரான
குற்றங்கள் (Crimes against Humanity) என்ற சட்ட வரைவை
உருவாக்கினார்.இவை இரண்டும் இன்று மனித உரிமைகளுக்கான முக்கியச் சட்டங்களாக இருக்கின்றன.
லெம்கினும் லாட்டர்பேக்ட்டும் மனித உரிமைகளுக்கான
சட்டங்களை உருவாக்கினாலும் அவற்றில் முக்கியமான சில வேறுபாடுகள் இருந்தன.லெம்கின் கூட்டுக்கொலைகளை
முன்னிறுத்த விரும்பினார்.ஒரு மனிதக்கூட்டத்தின் மீது அவர்கள் சுமந்து நிற்கும் அடையாளத்தின்
பொருட்டு நிகழ்த்தப்படும் குற்றம் கூட்டுக்கொலை.அந்த தனிமனிதனுடன் அரசுக்கு வேறு எந்த
முரணும் இல்லை.அவர் ஒரு கூட்டத்தை தன் அலகாக கொண்டார்.
லாட்டர்பேக்ட் தனிமனிதனை தன் அலகாக கொண்டார். ஒரு
தனிமனிதனுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களை பற்றியே அவர் பேசினார். தனிமனிதனையே
அலகாக கொள்ள வேண்டும் , கூட்டத்தை அல்ல என்றார்.இருவரும் தங்கள் தரப்பை வலுவாக முன்வைத்தார்கள்.
இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் சில வருட இடைவெளியில் படித்தார்கள்.அவர்களுக்கு ஒரே
ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தார்கள்.
தனிமனிதன் X கூட்டம்.இவை இரண்டும் எப்போதும் சந்தித்து
கொள்கின்றன.எந்த மனிதனும் தனிமனிதன் அல்ல. அனைவரும் அடையாளங்களை தாங்கித்தான் நிற்கிறார்கள்.தேசம்,
இனம் , மொழி,நிறம்,பாலினம்,தொழில்,மதம்,சாதி என்று பல்வேறு அடையாளங்கள் நம் மீது குறிக்கப்படுகின்றன.இந்த
அடையாளங்கள் இல்லாத தனிமனிதன் உலகில் இல்லை.லாட்டர்பேக்ட் ஒரு கூட்டத்தினர் மீது நிகழ்த்தப்படும்
குற்றங்களையும் தனித்தனி மனிதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களாகவே பார்க்க எண்ணினார்.முதலாளித்துவத்தின்
அலகு தனிமனிதன்.இருத்தலியத்தின் சுதந்திரத்தின் அலகும் கூட.தனிமனிதன் என்ற புனைவின்
மீது தான் சுதந்திரம் என்ற விழுமியம் வைக்கப்படுகிறது.பொருள் ஈட்டுவதற்கான சுதந்திரம்,
தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்கான சுதந்திரம், வாழ்வதற்கான சுதந்திரம், வழிபடுவதற்கான
சுதந்திரம், சிந்திப்பதற்கான சுதந்திரம்.மாறாக கூட்டத்தின் மீது சமத்துவம் என்ற விழுமியம்
வைக்கப்படுகிறது.வாய்ப்புகளுக்கான சமத்துவம், சமூகநிலைக்கான சமத்துவம்.அதாவது நாம்
சமத்துவம் என்று பேசும் போது ஒரு சாதி மற்றொரு சாதிக்கு கீழானது அல்ல , ஒரு மதம் மற்றொரு
மதத்தைவிட வேறானது அல்ல, ஒரு தேசம் மற்றொரு தேசத்தை விட உயர்வானது அல்ல என்று சொல்ல
விரும்புகிறாம்.சமத்துவம் என்ற சொல்லில் மனிதர்கள் கூட்டங்களாக அணித்திரள்கிறார்கள்.சமத்துவமத்தில்
அணிகளையும் சுதந்திரத்தில் தனிமனிதர்களையும் நாம் முன்வைக்கிறோம்.
லாட்டர்பேக்ட்டின் குடும்பத்தினர் யூதர்கள் என்பதால்
அவர்கள் கொல்லப்பட்டனர்.அவருடைய ஒரே ஒரு உறவினர் இன்கா போருக்கு பின் உயிருடன் இருப்பது
தெரிந்து அவரின் அழைப்பில் பேரில் இங்கிலாந்தில் அவருடன் சென்று சேர்ந்தார்.தன் குடும்பத்தினர்
யூதர்கள் என்ற அடையாளத்தை கொண்டிருந்ததால் கொல்லப்பட்டனர் என்ற போதும் அவர் தனிமனிதர்கள்
மீதான குற்றங்களையே முன்னிறுத்த விரும்பினார். ஏனேனில் அதுவே சட்டத்தின் முன் நிரூபிக்க
எளிதானதாக அமையும்.இரண்டாவது காரணம் நாம் கூட்டுக்கொலைகளை பற்றிச் சொல்லும் போது ஒரு
கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மீது நிகழ்த்தும் வன்முறை என்றே அதை முன்வைக்கிறோம்.ஒரு
தனிமனிதன் ஒரு கூட்டத்தின் மீது நிகழ்த்திய வன்முறை என்று அல்ல.ஜெர்மனியர்கள் X யூதர்கள்
என்ற எதிரிடை அங்கே வந்துவிடுகிறது.அப்போது நமது சொல்லாடல் இயல்பாகவே வன்முறை நிகழ்த்திய
தனிமனிதர்களை விடுத்து அந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தனது எதிரியாக பாவிக்கிறது.இந்த
இரண்டு காரணங்களால் அவர் தனிமனிதன் இன்னொரு தனிமனிதன் மீது நிகழ்த்தும் வன்முறைகளை
மானுடத்திற்கு எதிரான குற்றங்களாக வரையுறைத்தார்.
லாட்டர்பேக்ட்டின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை
தான்.இரண்டாம் உலகப்போரின் காலக்கட்டத்தில் போலந்தின் ஆட்சியாளராக ஹான்ஸ் ப்ராங்க்
இருந்த போது தான் லாட்டர்பேக்ட்டின் குடும்பத்தினரும் லெம்கினின் குடும்பத்தினரும்
இந்த நூலை எழுதிய பிலிப் சாண்ட்ஸின் குடும்பத்திரும் யூதர்கள் என்பதால் கொல்லப்பட்டனர்.
நியூரம்பர்க் விசாரணையில் அவர் மீது கூட்டுக்கொலை என்ற குற்றம் முன்வைக்கப்பட்டாலும்
தீர்ப்பில் அவருக்கு மானுடத்தின் மீதான குற்றங்களுக்குத்தான் தண்டனை அளிக்கப்பட்டது.
ஹான்ஸ் ப்ராங்க் ஒரு ஜெர்மானியர் என்பதற்காகவோ அவர் ஹிட்லரின் கீழ் ஆட்சி செய்தார்
என்பதற்காகவோ அவருக்கு தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் ஒரு தனிமனிதராக இந்தக் குற்றங்களில்
பங்கு வகித்தாரா என்றே ஆராயப்பட்டார்.ஒரு தனிமனிதராக அவர் தன்னை இந்த குற்றச் செயல்களிலிருந்து
விடுவித்துக்கொண்டிருக்க இயலுமா என்ற கேள்வியே விசாரணையில் முன்வைக்கப்படுகிறது. மனிதன்
தனக்கு அளிக்கப்பட்ட சட்டகத்திற்கு வெளியே செல்ல இயலுமா என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது.நாம்
சொல்லும் நிர்ணயவாதமும் சுதந்திர இச்சையும் இங்கே முன்னுக்கு வருகின்றன.
சுதந்திரம் சுதந்திர இச்சையை ஏற்கிறது.அதாவது மனிதன்
முன் எப்போதும் தேர்வுகள் இருக்கின்றன.மனிதன் தனக்கான பாதையை எப்படிப்பட்ட கையறு நிலையிலும்
தேர்வு செய்ய முடியும் என்று நாம் எண்ணுகிறோம்.இருத்தலியவாதம் , முதலாளித்துவம் இரண்டும்
சுதந்திர இச்சையை முதன்மைபடுத்துகின்றன.ஹான்ஸ் ப்ராங்க ஒரு வழக்கறிஞர்.அவர் மெல்ல ஹிட்லரின்
நம்பத்தகுந்த முதன்மை வட்டத்துக்குள் வருகிறார்.அவர் போலந்தின் தலைமை ஆளுனரானார்.லட்சக்கணக்கான
யூதர்களின் கொலைக்கு அவரும் ஒரு காரணியாக இருக்கிறார்.ஜெர்மனி சட்டம் படி ஹான்ஸ் ப்ராங்க்
செய்தது குற்றம் அல்ல.ஆனால் அவை மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்.
பொதுவாக உலகெங்கும் கிரிமினல் குற்றங்கள் ஒரு சட்டம்
அமலுக்கு வருவதற்கு முன் நிகழ்ந்தவற்றை கணக்கில் கொள்ளக்கூடாது என்றே சொல்கின்றன.No
Retrospective act.இந்திய அரசியலமைப்பிலும் 20(1) இதைச் சொல்கிறது.ஆனால் நியூரம்பர்க விசாரணைகள் ஹான்ஸ் ப்ராங்க் உள்ளிட்ட
இருபத்தியொரு பேர் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்களை கொண்டு தண்டிக்கப்பட்டார்கள் என்று
பார்க்கலாம்.அல்லது அவை தேசங்கள் உருவாக்கிக்கொள்ளும் சட்டங்களை மீறிய உலகு தழுவிய
பொது அறத்தை முன்வைக்கும் காலம் கடந்த சட்டங்கள் என்றும் கொள்ள முடியும்.
ஹச்.எல்.ஏ.ஹார்ட் சட்டத்துறைக்கான நேர்க்காட்சிவாதத்தை
முன்வைத்தவர்.லான் பியூலர் புது இயற்கை சட்டக் கோட்பாட்டை முன்வைத்தார். ஹார்ட் நியூரெம்பர்க்
விசாரணை ஹான்ஸ் ப்ராங்க் உள்ளிட்டோருக்கான தண்டனையை எப்போதைக்குமான பொதுச் சட்டம் என்கிற
அடிப்படையில் வழங்கக்கூடாது என்றார்.அப்படியொரு பொதுச் சட்டம் இருக்க இயலாது.அவர்கள்
ஜெர்மனியிலிருந்த சட்டங்களின் அடிப்படையில் தங்கள் செயல்களை செய்தனர்.நாம் வேண்டுமென்றால்
இந்த ஒரு முறை புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களை கொண்டு அவர்களை தண்டிக்கலாம் என்றார்.லான்
ஃபுல்லர் அப்படியல்ல, ஜெர்மனி உருவாக்கிய சட்டங்கள் பிழையானவை.அதனால் அதை கணக்கில்
கொள்ளத் தேவையில்லை என்றார்.இயற்கை சட்டக் கோட்பாடு மானுடப் பொதுவிற்கு எப்போதைக்குமான
சட்டங்கள் உள்ளன என்ற வாதத்தை முன்வைக்கிறது.ஒரு வகையில் நியூரம்பர்க்கில் வழங்கப்பட்ட
தீர்ப்பு லான் ஃபுல்லர் வழியிலான பார்வையை ஏற்கிறது என்று சொல்லலாம்.
நியூரம்பர்க் தீர்ப்பில் கூட்டுக்கொலை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும்
பின்னர் 1948ஆம் ஆண்டு ஐ.நா.சபை கூட்டுக்கொலைகளுக்கான
சாசனத்தை முன்மொழிந்தது.பின்னர் பல்வேறு நாடுகள் அவற்றை ஏற்றன.கூட்டுக்கொலைக்காக இன்று
உலகின் பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கின்றன.
லெம்கின் திருமணம் செய்து கொள்ளவில்லை.இறுதிக்காலத்தில்
தனிமையும் வறுமையும் நோய்மையும் கொண்டிருந்தார்.1959யில்
மரணமடைந்தார்.லாட்டர்பேக்ட் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகித்து 1960யில் மரணமடைந்தார்.இருவருக்கும் குற்றங்கள் மீதான மாறுப்பட்ட பார்வை இருந்தது.இரண்டும்
மானுட நலத்தை முன்வைத்து முன்மொழியப்பட்டன.அவை இன்று மானுடத்திற்கான அரண்களாக சர்வதேச
அமைப்பில் இருக்கின்றன.அவர்கள் இருவரும் ஒரே நகரில் கிழக்கு மேற்கான தெருவில் ஒரே காலக்கட்டத்தில்
வாழ்ந்தார்கள் என்பது சற்று வியப்புக்குரியது தான்.
East West Street - Philipe Sands
No comments:
Post a Comment