2023

 



நான் இந்த ஆண்டில் மனித உரிமைகளுக்கான பட்டயப் படிப்பு படித்தேன்.அநேகமாக அனைத்து வகப்புகளிலும் பங்குபெற்றேன். சட்டம் பற்றிய அறிமுகம் , சட்டவியல் பற்றிய அறிமுகம் , இந்தியாவில் மனித உரிமை மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கான அமைப்புகள் ஆகிய பாடங்கள் எடுக்கப்பட்டன.நல்லாசிரியர்கள்.நான் இறுதிப் பரீட்சை மட்டும் எழுதவில்லை.ஆனால் இந்த வகுப்புகளால் நான் பயன் பெற்றேன்.எனக்கு அவை பிடித்திருந்தன.எனக்கு இவை புதிய உலகை அறிமுகப்படுத்தின. இதுவரை கேள்விபட்டியிராத பெயர்கள் , கோணங்கள். நான் இலக்கியத்தின் பொருட்டே இவற்றை படிக்க விரும்பினேன். இலக்கியமும் மானுட உரிமைகளுக்கான ஒரு ஏற்பாடு தான்.

தற்காப்புக் கலை (Martial Arts) வகுப்பில் சேர்ந்தேன்.கராத்தே, டே குவான் டூ ஆகியவற்றை உள்ளடக்கியது.யிட் பெல்ட் முடித்து ஜூனியர் எல்லோ பெல்ட் பெற்றேன். தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது.செல்வேன்.இது எனக்கு முக்கியமாகத் தோன்றியது.எனக்கு உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்ல ஆர்வம் இருப்பதில்லை.தற்காப்புக் கலைகள் மகிழ்ச்சி அளிப்பவை.தொடர் பயிற்சி அவசியம்.

இந்த வருடம் வாசித்த புத்தகங்களில் முக்கியமானது கிருஷ்ண ஐயர் பற்றிய சுயசரிதையும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்  பற்றிய சரிதையும்.இந்த வருடம் வேலை பளூ சற்று நிறையவே அதிகம்.வழி என்ற ஒரு கதை எழுதினேன்.வனம் இதழில் பிரசுரமானது.எனக்கு அந்தக் கதை அடைந்த இறுதி வடிவம் பிடித்திருந்தது.நான் கதைகளில் ஒரு லயம் உருவாக வேண்டும் என்று விரும்புவேன்.ஒரு தாளம்.

நான் குறிப்பிட்ட ஒரு வகை மாதிரியில் கதைகள் எழுதத் துவங்கியதில் வழி என்ற கதை ஒரு வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து கதைகள் எழுத வேண்டும்.கட்டுரைகள் எழுத வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி சில கட்டுரைகள் சேர்த்து புத்தகம் கொண்டு வர வேண்டும்.சட்டம் பற்றி மேலும் பயில வேண்டும்.எனக்கு மாயங்கள் ஜாலங்கள் உள்ள கதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டு. அப்படியான சில கதைகளை என்னுடைய சட்டகத்திற்குள் எழுத வேண்டும்.தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

கதைகளைப் படிப்பது எத்தனை சுவராசியமானது என்று இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. நமக்கு அது எத்தனை பெரிய நன்மையை அளிக்கிறது.நாம் இலக்கியத்திற்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.நேரமின்மை ஒரு பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள் வளர்கிறார்கள்.அவர்களின் இருப்பே மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

வரும் வருடத்தில் பாலஸ்தீனத்தில் போர் ஓய்ந்து அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலுக்கு திரும்ப வேண்டும்.அவர்கள் நம் குழந்தைகள் இல்லையா.உரிமைகள் யாசித்து பெறுவது அல்ல.அவற்றை இந்த உலகம் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்ய வேண்டும்.அதற்கான வலுவான அமைப்புகள் உருவாக வேண்டும்.அதற்கு இலக்கியமும் சட்டமும் போராட வேண்டும்.நாம் நம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.மானுடம் வெல்ல வேண்டும்.

Photo by Markus Spiske - Unsplash



No comments: