மற்றமை - சில குறிப்புகள்

தீபன்  என்கிற பிரஞ்சுப் படம் பார்த்தேன்.2015யில் வெளிவந்த திரைப்படம்.எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்திருக்கிறார்.கான் தங்கப்பனை விருது பெற்றிருக்கிறது.அகதிகளாக பிரான்ஸூக்கு செல்லும் மூன்று பேர் ஒரு குடும்பமாக மாறும் சித்திரத்தை தீபன் திரைப்படம் அளிக்கிறது. தீபன், யாழினி, இனியாள் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலியான ஆவணங்களைத் தயாரித்து பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு தீபனுக்கு ஒரு அடுக்ககத்தின் காப்பாளராக வேலை கிடைக்கிறது.அங்கே நிகழும் பிரச்சனைகளின் ஊடே மெல்ல அந்த மூவருக்கு மத்தியில் உருவாகும் பற்று, நேசம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தீபன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷோபா சக்தி ஒரு வித அயர்ச்சியை படம் முழுக்க உடலில் முகத்தில் கொண்டு வருகிறார். அந்தக் குழந்தை கதாபாத்திரமாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகத் தேர்ந்த நடிப்பு. அவரின் நடிப்பில் இருக்கும் முதிர்ச்சி ஆச்சரியம் அளித்தது.அந்த மூவரும் பிரிந்து போகாமல் ஒன்றாக இணைந்து குடும்பமாக முகிழ வேண்டும் என்று படம் பார்க்கும் போது மனம் அவாவியது. மனிதன் தன்னை மிகவும் வருத்திக்கொள்வது குடும்பத்தை உருவாக்கத்தான். பின்னர் அந்த குடும்பமே இன்னல்களும் வன்முறையும் நிரம்பியதாக இருக்கலாம். ஆனால் குடும்பம் என்கிற அமைப்பு இன்றும் மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. ஷோபா சக்தியின் நடிப்பை பார்த்த போது 96 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தால் விஜய் சேதுபதியை விட நன்றாக நடித்திருப்பார் என்று தோன்றியது.

*

பி.ஏ.கிருஷ்ணன் தொடர்ந்து திராவிட இயக்கங்களின் பிராமண வெறுப்பை பற்றி எழுதுகிறார். இந்துத்துவ இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது திராவிட இயக்கினத்தினரும் இது போல நிறைய செய்திருக்கிறார்கள் என்று எழுதுகிறார். அவர் இந்துத்துவ இயக்கங்களையும் திராவிட இயக்கங்களையும் ஒன்றாக பாவிக்க விரும்புகிறார்.இரண்டிலும் மற்றமை மீது வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது, இது தவறு , பிழையானது, கண்டித்தால் இரண்டையும் கண்டிக்க வேண்டுமே தவிர ஒன்றை சரியாக்கி மற்றதை பிழையாக கொள்ள இயலாது என்கிறார். அவருடைய ஆவேசம் பல நேரங்களில் இந்துத்துவ இயக்கங்களை விட திராவிட இயக்கங்கள்  மீது தான் உள்ளது. அவர் தன்னை மார்க்ஸியர் என்று சொல்லிக் கொள்கிறார்.மார்க்ஸியமும் ஒரு மற்றமையை உருவாக்கியது. அதன் பொருட்டு கம்யூனிஸக் கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதோ அங்கெல்லாம் மிகப்பெரிய அழித்தொழிப்புகள் நிகழ்ந்தன. ஒரு லட்சியவாதத்தின் துணைக்கொண்டு அவை நிகழ்த்தப்பட்டன.ஸ்டாலினை விதந்தோதும் பி.ஏ.கிருஷ்ணனுக்கு சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த மற்றமை உருவாக்கமும் கொலைகளும் பிரச்சனைகளாகத் தெரியவில்லை போலும். 

இங்கே மற்றொரு விஷயத்தை நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.வர்க்கத்தையும் அடையாளத்தையும் இணைத்தே  இன்று நாம் மற்றமையை அணுக இயலும். இரண்டில் ஒன்றை விடுத்து ஒன்றை கொண்டால் பிழை தான் நிகழும். இந்துத்துவம் கொள்ளும் மற்றமை அடையாளத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர். வர்க்க அடிப்படையில் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை தலித்துகளின் பொருளாதார நிலையை போலவே உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.எந்த பெருநகரத்தின் சேரிப்பகுதிகளுக்குச் சென்றாலும் அங்கே இஸ்லாமியர்களை பெருமளவில் பார்க்க இயலும்.வர்க்க அடிப்படையில் அவர்கள் ஏழைகள்.தலித் முஸ்லிம் என்ற புத்தகத்தை ஹெச்.ஜி.ரசூல் எழுதியிருக்கிறார்.திராவிடர்களின் மற்றமை பிராமணர்கள். தமிழ் பிராமணர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் அரசியலில் ,கலையில் அன்று முதன்மையானவர்களாக இருந்தார்கள். பல பிராமணர்கள் நிலச்சுவான்தார்களாக இருந்தார்கள். 

சிறுபான்மை + எளியோர் என்ற இந்துத்தவ மற்றமையும் பெரும்பான்மை + வலியோர் என்ற திராவிட மற்றமையும் நேர் எதிரானவை. இரண்டும் ஒன்றல்ல.ஆனால் திராவிடத்தின் அப்படியான மற்றமை பிழையானதா என்றால் பிழையானது தான். ஆனால் அது அரசியல் அதிகாரத்தை அடைய உருவாக்கப்பட்ட ஒரு கதையாடல்.இன்று திராவிட இயக்கங்கள் எதன் பொருட்டோ உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இன்று தமிழகத்தில் இடைநிலை சாதியினர் தான் அரசியலில் , கலைத்துறைகளில்,அதிகாரத்தில் முதன்மையான பங்கை வகிக்கிறார்கள்.இனி அந்த கதையாடல் தேவையற்ற ஒன்று என்று திராவிட இயக்கங்களுக்கே தெரியும். அது பி.ஏ.கிருஷ்ணனுக்கும் தெரியும்.இரண்டையும் இணைத்துப் பேசி இந்துத்துவத்தின் மற்றமைகளோடு திராவிட மற்றமைகளை கலப்பது பிழையானச் செயல்.இந்துத்துவ எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல்.ஒரு மார்க்ஸியர் இப்படிச் செய்ய மாட்டார்.

*

2021

இந்த வருடம் ஜனவரி 10ஆம் தேதி முறையிட ஒரு கடவுள் சிறுகதைத் தொகுப்பு கோயில்பட்டியில் மணல் வீடு இலக்கிய நிகழ்வில் வெளியிடப்பட்டது. முதல் புத்தகம்.முதல் சிறுகதைத் தொகுப்பு. சற்று மகிழ்ச்சியாக இருந்தது.நான் சிறுகதைகள் எழுதுவேன் , தொகுப்பாக கொண்டு வருவேன் என்று முன்னர் எண்ணவில்லை. 2015யில் எதேர்ச்சையாக பெனுகொண்டா சென்று வந்ததை புனைவாக மாற்ற முயன்று பூதக்கண்ணாடி சிறுகதை உருவானது.காலச்சுவடுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.அதன் பின் தொடர்ந்து எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது.ஆறு வருடங்கள் கழித்து 2021 தொகுப்பு வெளியானது.

கட்டுரைகள் எழுதினாலும் புனைவுகளை எழுதும் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.2021யில் ஒரு கதை எழுதிப் பார்த்தேன். நன்றாக வரவில்லை. முறையிட ஒரு கடவுள் தொகுப்பில் உள்ளது போல எழுதக்கூடாது என்று எண்ணுகிறேன்.மேலும் அந்த மனநிலை இப்போது இல்லை.பிறரை பிரதானமாக்கும் கதைகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.2022 இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எழுத வேண்டும்.

ஏப்ரல் மாதம் 21ம் தேதி தந்தை இறந்து போனார். தந்தையின் மரணம் ஒரே நேரத்தில் அமைதியையும் இன்மையையும் ஏற்படுத்தியது. இப்போது இன்மை மட்டுமே தொடர்கிறது.நண்பன் நேதாஜியின் மரணம் என்னை உலுக்கிவிட்டது.என் நீண்ட நாள் நண்பன். நீங்கள் புதிய காதலியைக் கூட பெற்றுவிடலாம் ஆனால் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது.இரு சிறு குழந்தைகள்.அவனது மனைவி இந்த துயரத்தை கடந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். பெரும் பணி அவருக்காக காத்திருக்கிறது.

செப்டம்பர் வரை சென்னையில் இருந்தேன்.அதன் பின் அங்கு இருக்க பிடிக்கவில்லை.குடும்பத்துடன் பெங்களூரு வந்து விட்டேன்.வீட்டிலிருந்தே வேலை செய்வதில் நிறைய சலுகைகள் இருக்கின்றன. சலிப்பும் உண்டு. இந்த மென்பொருள் துறையில் நான் விரும்பும் வரை இருக்க இயலும் என்ற நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கிறது.வேலைக்கு தேவையானவற்றை படிக்க வேண்டும்.2022யில் அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.

தி.ஜா.பாண்டியராஜூ இயக்கியுள்ள நகுலன் பற்றிய ஆவணப்படத்திற்கு சப்-டைட்டில்கள் செய்து கொடுத்தேன்.அதை அவர் பயன்படுத்திக் கொள்வாரா  என்று தெரியவில்லை ,ஆனால் சப்-டைட்டில்களுக்காக அந்த ஆவணப்படத்தை பல முறை பார்க்க வேண்டி இருந்தது. நகுலன் பற்றி தமிழ் சூழலில் இருக்கும் பல பிம்பங்கள் இந்த ஆவணப்படம் வந்தால் உடையும். அதில் பணி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கனலி கொண்டு வந்த நகுலன் சிறப்பிதழில் ஒரு கட்டுரை எழுதினேன்.அதே போல ஷங்கர்ராமசுப்ரமணியன் கொண்டு வர இருக்கும் நகுலன் இதழுக்கும் கட்டுரை எழுதியிருக்கிறேன்.ஜனவரியில் வரும். தமிழினியிலும் வனத்திலும் தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய கட்டுரைகள் எழுதினேன்.அனைத்து கட்டுரைகளையும் நன்றாக எழுத முடிந்தது.பக்தீன் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.நன்றாக எழுத முடிந்தால் பிரசுரமாகும். வேலை அழுத்தத்திற்கு மத்தியில் வாசித்து தொகுத்து எழுதுவது சில நேரங்களில் சவாலாக இருந்தது.அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை சரியாகச் செய்தால் அனைத்து பணிகளையும் திறன்பட செய்ய முடியும் என்று எண்ணுகிறேன்.2022யில் 2021யில் எழுதியதை விட நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும். சிறுகதைகள் எழுத வேண்டும்.

முறையிட ஒரு கடவுள் தொகுப்பை ஏதோ ஒரு வகையில் என்னளவில் அடையாளத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.அடுத்த தொகுப்பில் பிறர் தான் பேசுபொருளாக இருக்கும். நான் மிகத் தீவிரமாக நம்பும் ஒரு கருத்தின் அடிப்படையிலேயே என்னால் கதைகளை எழுத இயலுகிறது. ஒரு படிமத்தின் துணைக்கொண்டோ , அல்லது ஒரு நிகழ்வின் அடிப்படையிலோ என்னால் எழுத இயலவில்லை. அது ஒரு தோல்விதான் , ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை.கருத்தின் அடிப்படையில் தான் என்னால் தொகுத்து சிந்திக்க முடிகிறது. அதே நேரத்தில் அந்தக் கருத்து ஒரு புனைவாக மாற வேண்டும் என்றால் அதன் மீது எனக்குத் தீவிரமான நம்பிக்கை இருக்க வேண்டும். என்னளவில் அதை நான் முழுமையாக ஏற்றாக வேண்டும்.அப்போது தான் அதை என்னால் புனைவாக மாற்ற இயலுகிறது. முன்னர் அடையாளமின்மை, அபத்தம் என்பதாக எனக்கு சில கருத்துகள் இருந்தன.இடையில் சில காலம் எந்த எண்ணமும் இல்லை.அதனால் கதைகளும் எழுத முடியவில்லை. இப்போது அவற்றிலிருந்து நான் விலகி வந்து விட்டேன். நகுலனின் புனைவுகளும் கவிதைகளும் எனக்கு புதிதான ஒரு கருத்தை அளித்திருக்கிறது. அந்தக் கருத்தின் துணைக்கொண்டே நான் எனது கதைகளை எழுதவிருக்கிறேன். 

இந்த வருடம் அதிகம் வாசிக்கவில்லை , ஆனால் வாசித்தவற்றை கூர்மையாக வாசித்தேன். வரும் வருடம் முழுக்க முழுக்க சிறுகதைகளையும் , நாவல்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அதைப்பற்றி கட்டுரைகளையும் எழுதுவேன். 2022யின் பிரதான திட்டம் அதுதான். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும். 2022 அல்லது 2023யில் கட்டுரைத் தொகுப்பை கொண்டு வருவேன்.

இந்த ஆண்டு போலில்லாமல் வரும் ஆண்டு கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைந்து அனைவரும் அவரவர் இயல்பு வாழ்க்கை முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு அப்பால் கேட்பதற்கு ஒன்றுமில்லை.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


மம்தா பானர்ஜி

 

மம்தா பானர்ஜி தொடர்ந்து 34 வருடங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்த இடதுசாரி கூட்டணியை முறியடித்து ஆட்சிக்கு வந்தார். மேற்கு வங்கம் தொழில் துறையில் மிகவும் பின் தங்கி இருந்ததால் அதற்கான தீர்வாக டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தியை சிங்கூரில் கொண்டு வர புத்ததேவ் பட்டாச்சார்யா முயன்றார்.நந்திகிராமில் ஒரு தொழிற்பேட்டையை உருவாக்க விரும்பினார்.இரண்டுக்கும் மிகப்பெரிய எதிர்பியக்கம் நடத்தினார் மம்தா பானர்ஜி. நானோ கார் உற்பத்தி குஜராத்துக்கு சென்றது. நந்திகிராம் தொழிற்பேட்டைத் திட்டம் கைவிடப்பட்டது.அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி அடைந்தது.இடதுசாரிகளுக்கு அது மிகப்பெரிய வீழ்ச்சி.அதன் பின் வங்கத்தில் அவர்கள் இன்று வரை மீளவில்லை. இனி அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்கள் இன்று கேரளத்தில் மட்டும் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் மிகச் சிறிய அளவில் என்றாலும் தேசம் முழுவதும் இடதுசாரிகளுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.பிஹார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அவர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள்.வங்கத்தை மம்தா வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை.ஆனால் அவரால் வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அடைய முடியாமல் தடுக்க முடிந்தது. அது அவருக்கு தேசிய அளவில் கவனத்தை அளித்திருக்கிறது.தேசிய கதையாடலுக்கு எதிரான வங்கத்து கதையாடலை அவரால் உருவாக்க முடிந்தது அவரது வெற்றிக்கு ஒரு காரணம்.
 
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதாக இருந்தது.அவரது கோரிக்கைகளை காங்கிரஸால் ஏற்க இயலவில்லை. கன்னையா குமார் போன்றோர் காங்கிரஸில் இணைவதற்கான எண்ணத்தை அவர் தான் உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.இப்போது அவர் திரினாமூல் காங்கிரஸில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணிபுரியத் தொடங்கி உள்ளார். கோவா, அஸாம் , திரிபுரா , மேகாலயா என்று திரினாமூல் காங்கிரஸில் அணி சேர்ப்பு நிகழ்வு நடந்து வருகிறது.மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சர் தான் பிரசாத் கிஷோருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகே திரினாமூல் காங்கிரஸில் இணைந்ததாக சொல்லியிருக்கிறார். மறுபுறம் சரத்பவார் , மம்தா, கெஜ்ரிவால் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்கக்கூடும்.ஆம் ஆத்மி இப்போதைக்கு டெல்லியிலும் , பஞ்சாபிலும் வலுவான கட்சியாக உள்ளது.தேசியவாத காங்கிரஸ் மஹாரஷ்டிராவில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.
 
ஆனால் கர்நாடகம்,தெலுங்கானா, கேரளம், தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் முக்கியக் கட்சியாக உள்ளது.அதே போல மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் இப்போதும் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சிதான். உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்த நிலையில் சமாஜ்வாதி கட்சி உள்ளது.பிஹாரில் ஐக்கிய ஜனதா தளமும் , ராஷ்டிரிய ஜனதா தளமும் முக்கிய கட்சிகள்.மேலும் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும் கட்சி வைத்துள்ளார். இந்தக் கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணியில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.லாலு பிரசாத் யாதவ் பாரதிய ஜனதாவுக்கு செல்ல வாய்ப்பு குறைவு. காங்கிரஸ் இப்போது வலுவிழந்த கட்சிதான் என்றாலும் அதன் இருப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளது.அது இன்னொரு கட்சியின் தலைமையின் கீழ் தன்னை பொருத்திக் கொள்ள துணியாது. ராகுல் காந்தியின் செயல்முறை மாறினால் அல்லது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வந்தால் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி அடையும்.ஆனால் எதிர்கட்சிகள் பிரிந்திருந்தால் 2016யில் அதிமுக வெற்றிபெற்றது போல பாரதிய ஜனதா கட்சி 2024லும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. காங்கிரஸ் இல்லாமல் மம்தாவால் பாரதிய ஜனதாவை வெல்வது சாத்தியமில்லை.பிரசாந்த் கிஷோர் நினைத்தாலும் முடியாது. ஒரு வேளை அவர்கள் 2029 தேர்தலுக்காக இப்படியான அமைப்பை உருவாக்க முனையலாம்.இந்த முறை தங்களால் எந்தளவு வெற்றி பெற முடிகிறது என்பதை அவர்கள் சோதித்துப் பார்க்கலாம்.
 
மம்தா பானர்ஜிக்கு சித்தாந்தம் என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை.அவர் வெற்றி பெற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்பவர். மோதி ,அமித் ஷா போல அவரும் கடின உழைப்பாளி. அதைத் தவிர்த்து அவர் வருவதால் கூட்டாட்சி தத்துவம் மாநில சுயாட்சி போன்றவை வலுப்பெற வாய்ப்பு உள்ளது.எழுபத்தியேழில் ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது.அப்போது அத்வான ரேடியோ அமைச்சராக இருந்தார்.வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.மொரார்ஜி தேசாய் சில காலமும் சரண் சிங் சில காலமும் பிரதமராக இருந்தார்கள்.இரண்டாவது விடுதலை இயக்கம் என்று அது சொல்லப்படுகிறது.அப்போது ஜெயபிரகாஷ் நாரயணனின் மாணவர்கள் என்ற அரசியலுக்கு வந்தவர்கள் தான் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் எல்லாம்.மூன்று வருடங்களில் ஆட்சி கலைந்தது.ஆனால் அது காங்கிரஸ் இல்லாத முதல் ஆட்சி. அதற்கு முன்னரே காங்கிரஸ் இரண்டாக உடைந்தது என்பதையும் நாம் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.எண்பத்தொண்பதிலும் தொண்ணூற்றியாறிலும் கூட்டணி ஆட்சி உருவானது.அவை இரண்டுமே இரண்டு வருடங்களே நீடித்தன. இரண்டும் கலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது.
 
அது போன்ற காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி இப்போது உருவாகி ஆட்சி அமைப்பது அத்தனை எளிதானதாக தெரியவில்லை.பாரதிய ஜனதா கட்சி இன்று வலுவான வாக்கு வங்கி உள்ள மிகப்பெரிய கட்சி.அதை அத்தனை எளிதில் முறியடிப்பது சாத்தியமில்லை.இன்று மோதி அலை என்று ஒன்று இல்லை. வங்கத்தில் தோற்றிருக்கிறார்கள்.பஞ்சாப்பில் அவர்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.உத்திரப்பிரதேசத்தில் அவர்களுக்கு கடினமான போட்டி இருக்கும். உத்திரப்பிரதேசத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திசைகாட்டியாக அமையும்.ஆட்டங்கள் பிறழ் ஆட்டங்கள் எதிர் ஆட்டங்கள் என பூமித் தளத்தின் பொழுதுகள் மெல்ல விடிந்தன என்று பகடையாட்டம் நாவலில் யுவன் சந்திரசேகர் எழுதியது போல வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ஆட்டங்களை நாம் பார்க்கவிருக்கிறோம். ஆனால் எப்படிப்பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வராத வகையில் ஆட்டங்கள் இருக்க வேண்டும்.பார்ப்போம்.