ஏன் வேண்டும் இந்த திராவிடம்

 



1967யிலிருந்து தொடங்கி இப்போது வரையான திராவிட இயக்கங்களின் அரசாட்சியை பற்றிய தன் பார்வையை எஸ்.நாரயண் திராவிடர்களின் காலம் (The Dravidian Years) என்ற தன் நூலில் அளித்திருக்கிறார்.1

1958 வரை கல்கத்தாவில் பள்ளிப் படிப்பை படித்த நாரயண் சென்னை கிறுஸ்துவக் கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வருகிறார்.தமிழராக இருந்தாலும் அவர் அதுவரை தமிழகத்தில் இருக்கவில்லை.1965யில் இந்திய ஆட்சிப் பணியாளர் தேர்வில் தேர்தெடுக்கப்பட்டு ஒரு வருடப் பயிற்சி முடிந்து தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.அடுத்த ஒரு வருடத்தில் காங்கிரஸின் ஆட்சிக் காலம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கிறது.

பிராமணர் அல்லாதோர் உருவாக்கிய நீதிக்கட்சி 1920யில் மதராஸ் மாகாணத்தில் ஆட்சி அமைக்கிறது.அந்தத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை.பின்னர் 1930களில் நீதிக்கட்சி வலுவிழக்கிறது.சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியின் பிரிவும் இணைந்து திராவிட இயக்கம் உருவாகிறது.அதே காலத்தில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் சைவத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.தனித்தமிழ் இயக்கம் பிராமணர்கள் இடத்தில் வேளாளர்களை முன்வைக்க விரும்பியது.திராவிட இயக்கம் பிராமணர்களின் இடத்தில் பிராமணர் அல்லாதோரை கொண்டு வர முயன்றது.தனித்தமிழ் இயக்கத்தை விட திராவிட இயக்கம் சற்று விரிந்த பார்வையை கொண்டிருந்தது என்று சொல்ல முடியும்.

திராவிட இயக்கம் உருவானபின்னர் ஈ.வே.ரா தேர்தல் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை.சமூக மாற்றமே அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எண்ணினார்.அவர் மணியம்மையை திருமணம் செய்து கொண்டதும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க விரும்பாததும் திராவிட இயக்கத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக வாய்ப்பளித்தது.சுதந்திரம் வரை திரைப்படங்களை தன் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய காங்கிரஸ் இயக்கம் அதன் பின் அதைத் தொடரவில்லை. அண்ணாதுரை , கருணாநிதி ஆகியோர் திரைத்துறையில் பங்கெற்று திராவிட அரசியல் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பராசக்தி ஒரு செவ்வியல் அரசியல் திரைப்படம்.திராவிட இயக்கத்தின் நோக்கம் , அது எப்படி பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வேறுபட்டது என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம்.

கம்யூனிஸ்ட் கட்சி 1952க்கு பிறகே தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது.அப்போது திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டது.கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் பலர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கத் தொடங்கினர்.ஒரு கற்பனையான வசந்த காலத்தை விட சாத்தியப்படக்கூடிய எதிர்காலம் அதிகம் கவரக்கூடியதாக இருந்திருக்கிறது.கருணாநிதி ஏன் பொதுவுடைமை அரசியலை தவிர்த்து திராவிட கழகத்தை நோக்கி பயனப்பட்டார்.அதற்கு முக்கியமான காரணம் அவர் சிறுவயதில் கண்டு அனுபவித்த சாதிய வேற்றுமையே காரணமாக இருந்திருக்க முடியும்.ஒரு தனிமனிதனின் அகங்காரத்தை சீண்டும் எதுவும் அவனுள் ஆழமான பாதிப்பை செலுத்துகிறது.பொதுவுடைமை இயக்கம் வர்க்கத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. சாதிய வேற்றுமைகளை அது அங்கீகரிக்கவில்லை.தஞ்சை மாவட்டங்களில் நிகழ்ந்த விவசாய போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் வர்க்க போராட்டமாக மட்டுமே பார்த்தது.

காங்கிரஸ் தோல்வி அடைந்து திமுக வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நாராயண் சொல்கிறார்.

1.  அப்போது இருந்த அரிசி பஞ்சம் 

2.  இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றியமைக்க கொண்டுவரப்பட இருந்த சட்டமும் அதற்கு எதிரான போராட்டங்களும்.

1957 தேர்தலிலிருந்தே திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. திமுகவின் வெற்றியே கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றி அடைய முடியாமல் செய்தது. நாத்திகம் , சுயமரியாதை போன்றவற்றில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை. திராவிட இயக்கம் பகுத்தறிவு(Rationalism) பேசிய போது பொதுவுடைமை இயக்கம் புற யதார்த்தத்தை(Empiricism) முன்வைத்தது.பொதுவுடைமை இயக்கம் நிலச்சுவான்தார்களையும் , முதலாளிகளையும் வர்க்க அடிப்படையில் எதிரியாக முன்வைக்கையில் திராவிட இயக்கம் பிராமணர்களை எதிரயாக கட்டமைத்தது.வர்க்க அடிப்படையிலான அணித்தேர்வை விட திராவிடத்தின் பெயரிலான அணித்தேர்வு எளிதானதாக இருந்தது.இதற்கு சமூக அமைப்பும் ஒரு காரணமாக இருந்துள்ளது.அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிராமணர்கள் இருபத்தியைந்து சதவீகித்தினர் இருந்திருக்கிறார்கள்.பெரும்பாலானோர் நிலச்சுவான்தார்கள்.நவீன முதலாளித்துவம் பெரிய அளவில் அப்போது உருவாகவில்லை.பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருந்தன.மேலும் அப்போது படித்து வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைகளில் அமர வேண்டும் என்பதற்கு அப்பால் வேறு கனவுகள் இருக்கவில்லை.திராவிட இயக்கம் ஒரு pragmatic இயக்கம்.அதுவும் அதன் வெற்றிக்கான காரணமாக அமைந்தது. ஏனேனில் திராவிட இயக்கம் முன்வைத்தது பிராமணர்கள் நீக்கப்பட்டு அந்த இடத்தில் பிராமணர் அல்லதோர் வர வேண்டும் என்பது தான்.பிராமணர்கள் ஆட்சியில் அதிகாரத்தில், இலக்கியத்தில் சட்டத்துறையில் , பத்திரிக்கைத்துறையில் , தொழில்துறையில், விவசாயத்தில் , புரோகிதத்தில் இருந்தார்கள். இவைகளிலிருந்து அவர்களை நீக்கி அந்த இடத்தில் பிராமணர் அல்லாதோரை கொண்டு வர வேண்டும். பிராமணர் அல்லாதோர் என்பது பிராமணர்களை முன்வைப்பதால் அதற்கு மாற்றான ஒரு பெயரை தேடும் போது திராவிடம் கிடைக்கிறது.அதற்கு ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொண்ட போது அனைத்தும் எளிதானது.

திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் பிராமண எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்தாலும் ராஜாஜி திமுகவை 1967 தேர்தலில் ஆதரித்தார்.இதுவே திராவிட இயக்கங்களின் பிராமண எதிர்ப்பு சமூகத்தில் பிராமணர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவலில் வரும் அமைச்சர் சமூகப் பிரச்சனைகள் குறித்து எவ்வித அலட்டலும் இல்லாமல் மது குறித்தும் பெண்கள் குறித்தும் மட்டுமே சிந்திப்பவராக இருக்கிறார்.குருதிப்புனல் போன்ற ஒரு தட்டையான நாவலை எழுதுவது கடினம்.அதற்கு ஒருவர் நிறைய மெனக்கெட வேண்டும்.குருதிப்புனல் தவறான சித்திரத்தை முன்வைக்கிறது.1967யிலிருந்து 1977வரையான ஆட்சிக்காலமே இன்றைய தமிழகத்திற்கான அடித்தளத்தை அளித்த இரண்டாவது முக்கியமான ஆட்சிக்காலம்.முதலாவது காமராஜரின் ஆட்சிக்காலம்.அப்போது அரசுப்பள்ளி,மதிய உணவு, உள்கட்டமைப்பு, தொழில்துறை, நீர்ப்பாசனம் ஆகியற்றில் கவனம் செலுத்தப்பட்டது.பல பொதுத்துறை நிறுவனங்கள் அப்போதுதான் தமிழகத்தில் தொடங்கப்பட்டன.

அதன் பின்னர் 1967யில் திமுக வந்த போது அண்ணாதுரை ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரசி அளிக்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குகுறுதியை நிறைவேற்ற விரும்பினார்.ஆனால் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்.பின்னர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் வகையில் மாற்றத்தை கொண்டு வந்தார்.அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 1969யில் அண்ணாதுரை இறந்தபின்னர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.இந்தக் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களை நாரயண் சொல்கிறார்.

அதுவரை பெரும்பாலும் உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களே அதிகாரிகளாக இருந்தார்கள்.ஆங்கிலேயரின் ஆட்சியில் அதிகாரகளாக வந்தவர்களே பெரும்பகுதி இருந்தார்கள்.அவர்கள் இந்தக் காலத்தில் ஒன்று ஒய்வு பெற்றார்கள் அல்லது டெல்லிக்கு இடம் பெயர்ந்து போனார்கள்.மெல்ல அதிகாரத்துறையில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் வந்தார்கள்.இவர்கள் கிராமங்களிலிருந்தும் சிறுநகரங்களிலிருந்தும் வந்தவர்கள்.

இரண்டாவது அது வரை மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசியல் அமைப்பிலிருந்தவர்களுக்கும் நேரடியான தொடர்பு ஏதும் இருக்கவில்லை.ஆனால் திமுகவின் காலத்தில் உள்ளூர் கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வை வழங்க கோரினார்கள்.எஸ்.பி.அம்பரோஸ் என்ற இந்திய ஆட்சிப் பணியாளர் இந்த மாற்றத்தை கண்டு ஆச்சரியம் கொண்டதாக நாரயண் பதிவு செய்துள்ளார்.அதுவரை இருந்த ஆட்சியர்களுக்கு அது மிகப்பெரிய திகைப்பை அளித்திருக்கிறது.ஆனால் புதிதாக வந்த ஆட்சியர்கள் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.மேலும் புதிதாக வந்தவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீதான சாய்வு இருந்தது.அதனால் சமூக நீதி திட்டங்கள் எளிதல் செயல்படுத்தப்பட்டன.அதுவரை கிராமங்களில் கர்ணம் என்ற முறை இருந்தது.கர்ணம் இப்போது இருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கு உள்ள அதிகாரத்தை கொண்டது.இது பரம்பரையாக வரும் அதிகாரம்.மேலும் கணக்காளர், வேலையாள் அனைவரும் பரம்பரையாக வருபவர்கள்.இதிலும் திமுக மாற்றத்தை கொண்டு வந்தது.கிராம நிர்வாக அதிகாரி உருவாக்கப்பட்டார்.கிராம நிர்வாக அலுவலகம் வருவாய்த் துறையுடன் இணைக்கப்பட்டது.இதே போல சி.பா.ஆதித்தனார் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி மக்கள் எளிதில் அங்கிருந்து கடன் பெறும் வகையில் மாற்றங்களை உருவாக்கினார்.பொது விநியோக முறையும் தமிழகம் முழுக்க முறையாக இந்தக் காலத்தில் கொண்டு செல்லப்பட்டது.

1971யில் இன்னும் பெரிய அளவில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பற்றியது.பெரிய அளவில் வெற்றி பெற்றவுடன் ஏற்படும் கவனக்குறைகளும் அதிகார மமதையும் திமுகவின் ஆட்சிக்காலத்திலும் வந்தது.மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், தலித்துகள் திராவிட இயக்கத்தில் பெரிய அளவில் வளர இயலவில்லை.1973க்கு பிறகு இந்திரா காந்திக்கும் கருணாநிதிக்குமான உரையாடல் நின்று போனது.அவசரகால நிலையை கருணாநிதி எதிர்த்தார்.1976யில் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.சர்காரியா ஆணையம் அமைக்கப்பட்டு வீராணம் திட்டத்தில் நடந்த ஊழல் விசாரிக்கப்பட்டது.ஆனால் அதில் பெரிய அளவில் அவர்களுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.கருணாநிதி அதுவரை தனியாரிடமிருந்த பேருந்து போக்குவரத்தை அரசுடைமை ஆக்கினார்.அதில் கூட அரசு தனியாருக்கு எந்த வித நஷ்டஈடும் வழங்கவில்லை.அதுவரை அளிக்கப்பட்டிருந்த உரிமைகளை புதுப்பிக்காமல் விட்டனர்.இந்தக் காலத்தில் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.எம்ஜிஆருக்கு திராவிட சித்தாந்தத்திலோ பிராமண எதிர்ப்பிலோ பெரிய நம்பிக்கை இருக்க வில்லை.தொழில் துறையை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.ஆனால் அவருக்கு ஏழை மக்களின் மீது உண்மையான அன்பும் பசி குறித்த புரிதலும் இருந்தது.1980யில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரஸூம் கூட்டணி அமைத்தன.அதில் அந்தக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஒரு வேளை எம்ஜிஆர் மீது மக்களுக்கு இருந்த ஆதரவு குறைந்துவிட்டதோ என்று எண்ணிய கருணாநிதி ஆட்சியை கலைக்க வற்புறுத்தினார்.1977யில் தேர்தலில் தஞ்சை பகுதியில் இந்திரா காந்திக்கு நாடாளுமன்றத் தொகுதியை அளிப்பதாக சொன்ன எம்ஜிஆர் அதை செய்யவில்லை.பின்னர் அவர் மங்களூர் தொகுதில் போட்டியிட்டார்.அந்த எரிச்சலும் இந்திரா காந்திக்கு இருந்தது.அவர் எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்தார்.இதை எம்ஜிஆர் எதிர்ப்பார்க்கவில்லை.ஆனால் அவர் மறுபடியும் பெரும் வெற்றி பெற்றார்.

இந்த முறை ஆட்சிக்கு வந்தபின் மதுவிலக்கை நீக்கினார்.அவர் மதுவிலக்கை நீக்கியதற்கும் சத்துணவை கொண்டு வந்ததற்கும் தொடர்பு உள்ளதாக நாரயண் எண்ணுகிறார்.ஏனேனில் சத்துணவு மூலம் மதுவிற்பனை குறித்த எதிர்மறை எண்ணத்தை மக்கள் மத்தியிலிருந்து போக்க அவர் விரும்பினார்.மேலும் அவர் இதை அதிகாரிகளிடமிருந்தோ ஆலோசகர்களிடமிருந்தோ பெறவில்லை. அவருக்கு இந்த சத்துணவு எண்ணம் எப்படியோ உருவாகியிருக்கிறது.அது செயல்வடிவம் பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர் இதை முக்கிய பணியாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றினார்.இதை செயல்படுத்துவதில் அவர்களுக்கு பெரும் சிக்கல் இருந்திருக்கிறது.அப்படியும் அது முழுமையாக நிறைவேற்றப்பட்டது.நாரயண் அதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்களை சொல்கிறார்.ஒன்று அதிகாரிகளுக்கு எம்ஜிஆர் மீதிருந்த அச்சம் மற்றும் தமிழகத்தின் தனிச்சிறப்பாக நாரயண் கருதும் அதன் ஆற்றல் மிக்க அதிகார அமைப்பு.

அப்போது உலக வங்கியும் இது போன்றே ஒரு செயல்திட்டத்தை கொண்டு வர விரும்பியது.அதுவும் சத்துணவோடு இணைந்து வடிவம் பெற்றது.சத்துணவு திட்டம் குறித்து அப்போது மிகப்பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களே வந்துள்ளது.அப்போது மன்மோகன் சிங் திட்டக் கமிஷனின் துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.அவர் இந்த திட்டத்திற்கான செலவு குறித்த கேட்ட கேள்வியை விரும்பாத எம்ஜிஆர் சந்திப்பு அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.ஆனால் பின்னர் சத்துணவு திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.இன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.1984யில் எம்ஜிஆர் நோய் முற்றி அமெரிக்க சென்றார்.சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினாலும் முன் போல அத்தனை செயலூக்கத்தோடு இருக்கவில்லை.ஆனாலும் அரசு இயந்திரம் எப்போதும் போலவே செயல்பட்டிருக்கிறது.தமிழகம் போல அல்லாது வேறு சில மாநிலங்களில் தலைமைச் செயலகத்திற்கு பணிபுரிவோர் மதியத்திற்கு மேலேதான் வருகிறார்கள் என்கிறார் நாரயண்.

எம்ஜிஆர் ஒரு தற்செயல் நிகழ்வு போல சுயநிதி கல்லூரிகளுக்கான துவக்கத்தை தமிழகத்தில் தொடங்கி வைத்தார்.அதை அவர் தொலை நோக்கம் கொண்டு செய்ததாக சொல்ல இயலாது.அப்போது எம்ஜிஆருடன் இருந்த பல அரசியல்வாதிகள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொடங்கினர்.எம்ஜிஆர் இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை கொண்டு வந்தார்.இது மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஐம்பது சதவிகதமாக மாற்றப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் , தலித்துகளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரிய அளவில் முன்னேறவில்லை.வருமான உச்ச வரம்பை இட ஒதுக்கீட்டில் ஒரு அலகாக சேர்த்த போது எழுந்த எதிர்ப்பை கண்டு எம்ஜிஆர் அந்த திட்டத்தை பின்வாங்கினார்.ராமதாஸூக்கு போராடினால் வெற்றி சாத்தியம் என்ற சமிக்ஞையை அந்த பின்வாங்கல் அளித்தது.மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் போராடினார்.பிற்படுத்தப்பட்டோரிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.மொத்த இட ஒதுக்கீடு 69 சதவிகிதம் ஆனது.இந்தியாவிலேயே இதுதான் அதிக அளவிலான இட ஒதுக்கீடாக இருக்கிறது.

1987யில் எம்ஜிஆரின் மரணத்திற்கு பின் 1989யில் திமுக பதிமூன்று வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்தது.அப்போது வி.பி.சிங் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார்.மண்டல் கமிஷன் அறிக்கை செயலாக்கம் பெற்றது.ஜெயலலிதா 1970களின் இறுதியில் திரைப்படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை.சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்ட போது அந்த திட்டத்தை தமிழகம் முழுக்க கொண்டு செல்ல ஜெயலலிதா பணிக்கப்பட்டார்.பின்னர் 1984 அவர் ராஜ்ய சபா உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார்.அவரின் முதல் உரையை கேட்க இந்திரா காந்தி வந்திருக்கிறார்.அந்தக் காலகட்டத்தில் தான் அவருக்கு ராஜீவ் காந்தி அறிமுகமாகிறார்.பின்னர் 1991 ராஜீவ் காந்தியை கொண்டு திமுகவின் ஆட்சியை கலைக்கிறார் ஜெயலலிதா.

ஒரு வலுவான ஆளுமையாக இருந்தாலும் ஜெயலலிதாவிற்கு தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த எந்தப் புரிதலும் அறிதலும் இருக்கவில்லை என்கிறார் நாரயண்.அவர் கட்சியினர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.மிகச் சிலர் மட்டும் தன்னை எளிதல் சந்திக்க இயன்ற வகையில் தன் இடத்தை வைத்துக்கொண்டார்.அவரும் எம்ஜிஆர் போல தொழில் துறையில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் இருந்த சில அமைச்சர்கள் திராவிட கழகத்தின் தொடக்கத்திலிருந்தே இருந்தவர்கள்.அவர்கள் ஊக்கத்துடன் செயல்பட்டனர்.நாரயண் இரண்டு உதாரணங்களை தருகிறார்.ஒன்று சுகாதாரத்துறை அமைச்சர் முத்துசாமி தமிழகம் முழுக்க இருக்கும் மருத்துவமணைகளுக்கு தேவையான மருந்துகள்,கருவிகள் ஆகியவற்றை வாங்கி மருத்துவமணைகளுக்கு கொண்டு செல்ல ஒரு மையப்படுத்திய அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கிறார்.அதற்கான காரணங்களை நான்கு பக்கத்தில் தமிழில் எழுதி தன் செயலாளருக்கு அனுப்புகிறார்.அந்த எண்ணம் செயல்வடிவம் பெறுகிறது.அதே போல பொது விநியோக முறையில் விஸ்வநாதன் கொண்டு வந்த மாற்றங்களும் செயல்வடிவம் பெற்றன.பின்னர் விஸ்வநாதன் அமைச்சர் பதவியிலிருந்து விலகி வேலூரில் பொறியியல் கல்லூரி தொடங்கினார்.

நாரயண் தமிழகத்தில் அரசாங்கம் கொண்டு வந்த சத்துணவு திட்டம் , முத்துசாமி கொண்டு வந்த மையப்படுத்திய மருந்து கொள்முதல் திட்டம் ,பொது விநியோக முறை போன்றவை எப்படி பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பதை புத்தகத்தில் மறுபடி மறுபடி ஆச்சரியத்துடன் சொல்கிறார்.1930களிலேயே உருவாகிவிட்ட நுகர்வோர் அமைப்புகள், பொதுவுடைமை இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் செய்த போராட்டங்கள் அதன் வழி உருவான சமூக விழிப்புணர்வு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக சொல்கிறார். அரசியல் அமைப்புகள் அதிகார அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் முறையும் தமிழகத்திற்கே உரித்தானது என்கிறார்.வட இந்தியாவில் கிராமங்களில் வட்டார அரசியல் பெரும் பாதிப்பை செலுத்தவில்லை என்கிறார்.மேலும் மாவட்ட ஆட்சியரின் கீழ் இருக்கும் அதிகார அமைப்பு , ஒவ்வொரு திட்டத்திற்கும் மிகக் கவனமாக வடிவம் தந்து அதை பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒருவர் பொறுப்பு என்று பிரித்துக் கொடுத்து அந்த திட்டம் செயல் வடிவம் பெற ஊக்கத்துடன் பணியாற்றுகிறது என்கிறார்.ஒரிசாவில் தமிழகம் போல கொண்டுவரப்பட்ட மையப்படுத்திய மருந்துகள் ,கருவிகள் கொள்முதல் திட்டம் தோல்வியடைந்திருக்கிறது.

காமராஜர் காலத்தில் கல்வித்துறைக்கு கொடுக்கப்பட்ட கவனம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றம், புதிதாக உருவான தொழில் துறைகள் , அதன் வழி உருவான நகரமயமாக்கம், எம்ஜிஆர் காலத்தில் துவங்கப்பட்ட சுயநிதி கல்லூரிகள், சத்துணவு திட்டம் ஆகியவை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் திறன் கொண்ட மனிதவளத்தை பெருக்கியது. இதற்கு இணைக் கதையாக 1991யில் இந்தியாவில் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வந்தார்கள். மனிதவளம் அதிகம் உள்ள தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் உருவாகின.1990யில் 2311ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 1997யில் 11320ரூபாயாக மாறுகிறது. மாநில நிகர உள்நாட்டு உற்பத்தி 1990யில் 12633 கோடிகளிலிருந்து 1997யில் 66754 கோடியாக உயர்ந்திருக்கிறது.இதில் ஜெயலலிதாவின் பங்கு பெரிதாக இல்லை என்பதும் உண்மை.

1996யில் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி உழவர் சந்தை , சமத்துவபுரம் போன்ற திட்டங்களை கொண்டுவந்தார்.உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்.தன் மகன் ஸ்டாலினை சென்னையின் மேயர் ஆக்கினார்.தொழில்துறை மேலும் முன்னேறியது.1969யிலிருந்து கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் சமூக நீதி , மாநில சுயாட்சி,தொழில் துறை சார்ந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு நலம் பேணும் அரசாக மட்டுமே செயல்பட்டது.திமுக அதிமுகவால் இந்த விஷயத்தில் எதிர்மறையாக பாதிக்கப்பட்டது.மெல்ல சமூக நீதி , திராவிட இயக்க சித்தாந்தங்கள் பின்னகர்ந்தன.1999யிலிருந்து 2014வரை தொடர்ச்சியாக மத்திய அரசின் ஆட்சியில் திமுக பங்கெற்றது.அதன் வழி தமிழகத்திற்கான நலத்திட்டங்களை திமுகவால் கொண்டு வர முடிந்தது. 1991க்கு பிறகு 2011 வரை இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தது.2006 தேர்தலில் இரண்டு ரூபாய்க்கு அரிசி, இலவச தொலைக்காட்சிப் பெட்டி போன்ற திட்டங்களால் திமுக ஆட்சிக்கு வந்தது. ப.சிதம்பரம் திமுகவின் தேர்தல் அறிக்கையே 2006 தேர்தலின் கதாநாயகன் என்று சொன்னதை குறிப்பிடுகிறார் நாரயண். திராவிட இயக்க சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்வது முற்றிலும் பின்னகர்ந்து மக்கள் நலன் பேணும் அரசின் திட்டங்களை முன்வைத்து மட்டுமே தேர்தல்களை சந்திக்கும் காலம் தொடங்கியது.

மேலும் இந்தக் காலத்தில் திமுகவில் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியது.2011 தேர்தலில் ஜெயலிலதா 2006யில் பெற்ற தோல்வியால் மேலும் நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தார்.2011யில் ஆட்சிக்கு வந்த அதிமுக மறுபடியும் 2016யிலும் ஆட்சிக்கு வந்தது.2021 தேர்தலை பெரும் தலைவர்கள் இல்லாமல் சந்திக்க இருக்கிறது தமிழகம்.

1960களில் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த மாற்றங்களே தமிழகத்தின் வளர்ச்சிக்கான காரணமாக இருந்திருக்கிறது. 2011க்கான காலத்தின் சில புள்ளி விபரங்களை நாரயண் தருகிறார்.

  • 2003யிலிருந்து 2013வரையான காலத்தில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒன்பது சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
  • 1991யிலிருந்து 2001வரையான பத்தாண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 11.1 சதவிகிதமாக இருந்திருக்கிறது.இது இந்தியா மாநிலங்களிலேயே மிக குறைந்த சதவிகிதம்.
  • 2011 வாக்கில் தமிழகத்தின் தனி நபர் வருமானம் 114000 ரூபாய்.
  • 2011 தமிழகத்தில் 8.5 லட்சம் சிறு குறு தொழில்கள் இருந்திருக்கின்றன.
  • மொத்த மாநில உள்ளாட்டு உற்பத்தி(GSDP) வருடத்திற்கு 5.46 சதவீகிதம் உயர்ந்திருக்கிறது.
  • வறுமை வருடத்திற்கு 3.31 சதவீகிதம் குறைந்திருக்கிறது.

வருமானம் தவிர்த்து சத்துணவு , இலவச கல்வி, புத்தகங்கள், பொது விநியோக முறை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சேயை எதிர்நோக்கும் தாய்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் என்று பிரத்தியேக திட்டங்கள்,ஏழைக்களுக்கான உதவிகள் என்று தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த ஒரு மக்கள் நலன் நாடும் அரசாக தமிழகம் திராவிடர்களின் காலத்தில் மாறியிருக்கிறது.

இன்றைய தமிழகத்தின் நிலையை பற்றியும் தன் எண்ணங்களை இறுதியில் தொகுக்கிறார் நாரயண்.மாணவர்களுக்கு மடிக்கணிணி, வாகனங்கள் அளிக்கப்படுகின்றன.அம்மா கேண்டீன், அம்மா நீர் என்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.2011க்கு பிறகு தொழில் முதலீடுகளில் தமிழகம் முன் போல முதன்மை மாநிலமாக இருக்கவில்லை.ஐடி போன்ற துறைகளில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை விட முன்னேறியிருக்கின்றன.2017க்கு பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த தொடர் போரட்டங்களை பற்றியும் நாரயண் விசேஷமாக குறிப்பிடுகிறார்.தமிழகத்தில் ஒரு வித அமைதியற்ற சூழல் இருந்தது.இப்போது அது தொடரவில்லை என்றாலும் தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட மக்கள் தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்கிறார் நாரயண்.நிதிப்பற்றாக்குறையில் இன்று தமிழகம் முதன்மையான மாநிலமாக இருக்கிறது.மேலும் சரக்கு மற்றும் சேவை வரி தொழில் துறை அதிகம் வளர்ந்துள்ள தமிழகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்கிறார்.

எந்த காரணங்களுக்காக திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டதோ அவை இன்று நிறைவேறியிருக்கின்றன.இன்று இருக்கும் திராவிட கட்சிகளுக்கும் திராவிட இயக்கத்தின் துவக்கத்திற்கான காரணத்திற்கும் பெரிய தொடர்பு இல்லை.அவை தங்கள் பெயரில் திராவிடம் என்ற பெயரை தாங்கி இருக்கிறது.அவை நீடிக்கின்றன.அவ்வளவுதான்.இரு பெரும் கட்சிகளும் மாநில கட்சிகள் என்பது தமிழக அரசியலின் தனிச்சிறப்பு.மற்ற மாநிலங்களில் ஒரு மாநிலக் கட்சி ஒரு தேசியக் கட்சி என்று இருப்பதால் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கின்றது.தமிழகத்தில் அது சாத்தியமில்லாமல் இருப்பதே பாரதிய ஜனதா கட்சியை எரிச்சல் அடைய வைக்கிறது.பிராமணர்கள் நீக்கப்பட்டு தொழில்,அரசு,பண்பாடு ஆகியவற்றில் பிறர் வர வேண்டும் என்பதையும் தாண்டி மாநில சுயாட்சி குறித்து திராவிட இயக்கங்கள் பேசியிருக்கின்றன.ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என்று முரசொலி மாறன் ஒரு நூலை எழுதியிருக்கிறார்.இந்தியா பல்வேறு பண்பாட்டுத் தேசியங்களை உள்ளடக்கிய ஒரு ஒன்றியம்.துணைக்கண்டம்.அதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.இந்தியா என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே உருவாக்க முனைவது தேவையற்றது.சுதந்திரத்திற்கு முன்னர் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும் கூட்டாட்சி அமைப்பை பிரித்தாணிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டம் பரிந்துரைத்தது.ஜின்னா அப்படியான ஒரு கூட்டாட்சி அமைப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் மவுண்ட்பேட்டன் திட்டத்தில் மையப்படுத்திய அதிகாரத்தை கொண்ட மத்திய அரசு முன்வைக்கப்பட்டது.ஜின்னாவின் தனி நாடு கொள்கையை மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொண்டது.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை கொண்ட தேசமாக இந்தியா இருப்பது இந்தியாவை மேலும் உயிர்ப்புள்ளதாக வைத்திருக்க உதவும். மம்தா பானர்ஜி சமீபத்தில் இந்தியாவிற்கு நான்கு தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்று சொன்னார்.இன்று மாநில சுயாட்சியை வலுவாக முன்னெடுக்கும் கட்சியோ தலைமையோ இந்திய அளவில் யாருமில்லை.இன்று திராவிட கட்சிகளில் கூட அதைப் பற்றி பேசக்கூடியவர்கள் எவருமில்லை.ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படவிருந்த காலத்தில் ப.சிதம்பரம் கலைஞர் கருணாநிதியை சந்தித்தார்.அப்போது கலைஞர் வலுவான மாநிலங்கள் இருந்தாலே வலுலான மைய அரசு இருக்க இயலும் என்று தன் எண்ணத்தை சொல்லியிருக்கிறார்.தேசிய கட்சிகள் ஆட்சி புரிந்த உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை விட தமிழகம் தொழில் துறையில் மனித வளத்தில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.இத்தனைக்கும் உத்திர பிரதேசம் எண்பது மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்.உத்திர பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தவர்கள் பின்னர் பிரதம மந்திரி ஆகியிருக்கிறார்கள்.ஆனால்  உத்திர பிரதேசம் முன்னேறவில்லை.ஆந்திரத்தில் என்.டி.ராமராவ் தெலுகு தேசம் கட்சியை தொடங்கிய பின்னர் தான் ஆந்திரம் முன்னேறியது.

தமிழகத்தின் மாநில கட்சிகளின் காலம் இன்னும் சில வருடங்களாவது இருக்கும்.தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அடித்தளங்களால் தமிழகம் தொழில் துறையில், கல்வித்துறையில் ஒரளவு தொடர்ந்து வளரவே செய்யும்.பண்பாட்டுத் தளத்தில் தமிழகம் பெரும் வறுமையை இன்று சந்தித்து வருகிறது.அதற்கும் திராவிட இயக்கங்களே காரணம்.இன்று திராவிட இயக்கங்களை விமர்சிப்பவர்கள் அதை பண்பாட்டுத் தளத்திலேயே விமர்சிக்கிறார்கள்.அதற்கான மாற்றம் வர வேண்டும் என்கிறார்கள்.ஜல்லிக்கட்டு போராட்டம் உண்மையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமே அல்ல.அது நமது பண்பாட்டு வெறுமையை , உள்ளீடு அற்ற தண்மையை உணர்த்திய போராட்டம்.எங்களுக்கு பண்பாட்டு வெளிகளை, கொண்டாட்ட வெளிகளை , மஞ்சள் மாலைப் பொழுதுகளை கொடுங்கள் என்று இளைஞர்கள் இறைஞ்சிய போராட்டம். மேலும் ஊழல்,சாதிய அடையாளங்கள் இறுக்கமடைந்திருப்பது, எந்தவித சித்தாந்தமும் இல்லாமல் நடைமுறைத் தேவையை மட்டுமே கொண்ட அன்றாட அரசியல் என்ற மற்ற பிரச்சனைகளும் இன்று இருக்கின்றன.கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது அரசியல்வாதிகளான நாங்கள் செய்த பெரும் தவறு மக்களையும் பிறழச்செய்துவிட்டதுதான் என்றார்.அந்த பிறழ்வை திராவிட இயக்கங்களும் செய்திருக்கின்றன.இவற்றை அடுத்தடுத்து வர இருக்கும் அரசுகள் எப்படி எதிர்கொள்ள போகிறது என்று பார்க்கலாம்.

குறிப்பு – இந்தக் கட்டுரை எஸ்.நாரயண் எழுதிய திராவிடர்களின் காலம் (The Dravidian Years) என்ற நூலை முதன்மையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.  

The Dravidian Years - S.Narayan – Oxford University Press

 

No comments: