யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கிருஷ்ணப்பன் கெளடா என்பவன் ஐம்பதாவது வயதில் தன் வாழ்வை நினைத்துப்பார்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நாவல் அவஸ்தை.யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியுள்ளார். தமிழவன் மொழிபெயர்த்திருக்கிறார். 1996யில் தமிழில் முதல் பதிப்பு வந்துள்ளது.கிருஷ்ணப்பன் கெளடா கோபால கெளடா என்ற புகழ்பெற்ற சோஷியலிஸ்ட் தலைவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புனைவு.இந்த நாவல் பின்னர் திரைப்படமாக கூட வந்திருக்கிறது. இந்த நாவல் குறித்து சர்ச்சை எழுந்து வழக்கும் நடந்துள்ளது.
எனக்கு இந்த நாவலை வாசித்த போது ஏற்பட்ட ஆச்சர்யம் இப்படியான ஒரு நாவல் தமிழில் எழுதுவது சாத்தியமா என்பதை பற்றித்தான். உதாரணத்திற்கு தமிழில் தோழர் ஜீவாவின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆதாரமாக வைத்து ஒரு புனைவு எழுதப்படும்போது அந்தப் புனைவு அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இப்போது இருக்கின்ற பிம்பத்தை சார்ந்தே இருக்குமென்றால் பெரிய சிக்கல்கள் இருக்காது. ஆனால் எந்த வகையிலாவது அந்த பிம்பம் சற்றெனும் மாறுமென்றால் அல்லது சிதறுமென்றால் அந்த நாவலை எழுதியவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.நாவலைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும்.பதிப்பாளரும் எழுத்தாளர் கடும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.
கிருஷ்ணப்பன் கெளடா ஒரு கிராமத்தில் வளர்ந்து சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவன் ஆகிறான்.சட்டசபை உறுப்பினன் ஆகிறான்.அவன் முதல் மந்திரி ஆகும் வாய்ப்பும் வருகிறது.கிருஷ்ணப்பன் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டையும் அவனது ஐம்பதாவது வயதில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் எண்ணிப்பார்க்கிறான்.அவனுக்கு பொதுவுடைமை சித்தாந்தத்தை சொல்லித்தந்த அண்ணாஜி, அவனைப் படிக்க வைத்த மகேஸ்வரய்யன், அந்த ஊரில் இருக்கும் பைராகி சாமியார் , தன் காதலி கெளரி ஆகியோரை பற்றியும் தனது கிராமத்தை பற்றியுமே அவன் அதிகம் சிந்திக்கிறான்.அவன் வாழ்வில் அவன் முன் எப்போதும் தேர்வுகள் இருக்கின்றன.எதைத் தேர்வது என்பது குறித்து அவன் அதிகம் குழப்பம் கொள்கிறான்.பைராகி சாமியாரை பார்த்து இந்தக் கேள்வியை கேட்கிறான்.
"ஒவ்வொரு தடவை என்ன செய்வதென்று புரியவில்லை.பல்வேறு சாத்தியப்பாடுகள் எதிரில் தோன்றுகின்றன.எதற்காக ஜீவிக்க வேணுமென்று தெரியவில்லை."
நம்முன் உள்ள பல்வேறு சாத்தியப்பாடுகளில் நம் சுதந்திர இச்சைக் கொண்டு நாம் தேர்கிறோம் என்பது இருத்தலியவாதம்.உங்களது தேர்வும் அமைப்பின் தேர்வே என்பது அமைப்பியம்.கிருஷ்ணப்பன் எதைத் தேர்வு செய்வது என்பது குறித்து கொள்ளும் குழப்பமே இந்த நாவலை உயிர்ப்புள்ளதாக்குகிறது. தமிழவன் தமிழகச் சூழலில் இது இல்லாவிட்டால் அது என்ற இரு துருவ பிம்ப கட்டமைப்பே எல்லாத் தளங்களிலும் நிகழ்கிறது என்கிறார்.இதற்கான மாற்றாக அவஸ்தை நாவல் உள்ளது என்று சொல்கிறார்.அவர் சொல்வது உண்மை.
கோவை ஞானி இறந்த போது அபிலாஷ் அவரை கலாச்சார இந்துத்துவாதி என்று சொன்னார்.ஒன்று நீங்கள் மதம் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் நீக்கம் செய்ய வேண்டும்.மதத்தின் சிறு கூறு ஒருவனிடம் இருந்துவிட்டால் கூட அவன் மறுதரப்பில் இணைக்கப்படுகிறான்.அப்படியென்றால் கிருஷ்ணப்பனை எதில் சேர்ப்பது.அவன் அண்ணாஜியின் வழி பொதுவுடைமை தத்துவத்தை பயில்கிறான்.மகேஸ்வரய்யன் மூலம் தாந்த்ரீக மரபை கற்கிறான்.புரோகிதர் அவனுக்கு பாரதம் கற்றுத்தருகிறார். அவன் சிந்திக்கும் திறன் கொண்ட ஒர் ஆளுமையாக தன் கல்லூரி காலங்களில் பரிணமிக்கிறான்.
அவனை ஏதேனும் ஒர் அடைப்பில் சிக்க வைத்துவிட்டு பெருமூச்சுவிடும் நம் பதற்றங்களுக்கு அப்பால் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.நாம் பிம்பங்களை தொழ விரும்புகிறோம்.பிசிறுகளை பற்றி நமக்கு கவலை இருப்பதில்லை.
கிருஷ்ணப்பன் தன் உதவியாளர் நாகேஷிடம் இவ்வாறு சொல்கிறான்.
"நாம் கொண்டு வரும் முன்னேற்றம் எல்லாம் , நல்லதையே செய்யும் என்று உண்மையாய் நம்பி இருக்கவில்லை...ஆனால் சுற்றியுள்ள சிறுமைகளுக்கும் துக்கங்களுக்கும் எதிராய்ப் போராடுவது தேவை என்பது மட்டும் தெளிவாய்ப் புரிகிறது....
போராடத்தான் வேண்டும்.வாழ்வைச் சிறுமைப்படுத்தும் தமஸை விரட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அதாவது நம் செயல்களின் விளைவு இப்படியும் போகும், அப்படியும் போகும் என்கிற ஆதங்கத்தை இழந்துவிடாமல்"
நம் முன் தேர்வுகள் உள்ளன.குழப்பம் உள்ளது.குழப்பம் செயலை தடுக்கக் கூடாது.அதே நேர்த்தில் மூர்க்கத்தோடு செயல் புரியவும் கூடாது.கிருஷ்ணப்பன் இப்படியான புரிதல்கள் மூலமே தன் வாழ்வை கட்டமைத்துக் கொள்கிறான்.பெரும் ஆளுமையாக பரிணமிக்கிறான்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவல் புகழ்பெற்றது. அந்த நாவல் ஒருவன் மரபை முற்றிலுமாக துறப்பது அத்தனை எளிதானதல்ல என்பதை வலியுறுத்தும் நாவல்.எளிய நாவல்.அதனுடன் ஒப்பிடும் போது அவஸ்தை அபாரமான நாவல்.அவசியம் வாசிக்கப்பட வேண்டியது.
அவஸ்தை - யு.ஆர்.அனந்தமூர்த்தி - மொழிபெயர்ப்பு தமிழவன் - அடையாளம் வெளியீடு.
புகைப்படம் - By HPNadig - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2572640
No comments:
Post a Comment