2019


2019 ஆம் ஆண்டு சிக்கல்கள் ஏதும் இல்லாத வருடமாக இருந்தது.இந்த ஆண்டிலும் பெங்களூரில் வீடு மாற வேண்டியிருந்தது.வேலையில் பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லை.அடுத்த வருடம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.வேலை சார்ந்தும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.இரண்டு குழந்தைகளை சமாளிப்பதற்குள் நாள் முடிந்துவிடுகிறது.இந்த வருடம் நன்றாக வாசித்தேன்.விஷ்ணுபுரம் நாவலையும் கிருஷ்ணன் அதற்கு எழுதிய விமர்சன நூலையும் முன்வைத்து எழுதிய கட்டுரை நிறைவான அனுபவமாக இருந்தது.உலவ ஒரு வெளி , ஜனனம் ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதினேன்.ஜனனம் மணல் வீடு இதழில் வரும் என்று நினைக்கிறேன்.வரும் 2020யில் முதல் சிறுகதை தொகுப்பு பிரசுரமாகும்.

ட்டய்கு ரியோக்கன் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை முன்வைத்து எழுதும் கட்டுரைகளை தொடர வேண்டும்.இவற்றை அடுத்தடுத்த வருடங்களில் புத்தகங்களாக கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.பெளத்தம்,திரைப்படங்கள்,பெருநகரங்கள் - தொழில்மயம் - அந்நியமாதல் - அடையாளம் பற்றிய கட்டுரைகளையும் புத்தக விமர்சனங்களையும்  தொடர்ந்து எழுத வேண்டும்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்!


செந்தமிழ்க்கிழார் என்பவர் எழுதியுள்ள "நீங்களும் கோர்டில் வாதாடலாம்" என்ற சிறு புத்தகம் தனி பிராது (Private compliant) தாக்கல் செய்து அதை எப்படி வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றங்களில் நடத்துவது என்பதை பற்றிய நடைமுறைகளை பற்றி விளக்குகிறது.இதில் காவல் துறை அதன் நடைமுறை, நீதிமன்றங்கள் அதன் பிரிவுகள் மற்றும் நடைமுறை, தனி பிராதை எப்படி தாக்கல் செய்வது , வழக்கில் தோற்றால் மேற்கொண்டு செய்ய வேண்டிய மேல் முறையீடு , சீராய்வு மனு ஆகியவற்றை பற்றி ஒரளவு விளக்கமாக சொல்கிறது.

ஒரு எழுத்தாளனுக்கு 

1. இந்திய அரசியல் சாசனம் (Indian Constitution)
2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC)
3. இந்திய உரிமையியல் நடைமுறைச் சட்டம் (CPC)
4. இந்திய சாட்சிய சட்டம்(Indian Evidence Act)
5. இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code)

ஆகிய ஐந்து புத்தகங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.தமிழ் எழுத்தாளன் நிச்சயம் தனி பிராது கொடுக்கும் அளவுக்கு தைரியமானவர் இல்லை என்பது உண்மைதான்.ஆனால் மேலே சொல்லியுள்ள ஐந்து புத்தகங்கள் பற்றி எளிய அறிமுகமாவது ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.இவை அனைத்தும் தமிழில் கிடைக்கிறது.

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் ! - செந்தமிழ்க்கிழார் - நர்மதா புத்தகம்.

இந்துத்துவ அரசியலின் வீழ்ச்சி



இந்துத்துவ இயக்கங்கள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சில விஷயங்களை முக்கியமாக வலியுறுத்தி வருகிறது.கஷ்மீர் பிரச்சனையில் அதன் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம் போன்றவை அதில் முக்கியமானவை.வலதுசாரி இயக்கங்கள் எப்போதும் தங்கள் பொற்காலத்தை இறந்தகாலத்தில் தேடுகிறார்கள்.அதனால் அவர்கள் எப்போதும் வரலாற்றை திருப்பி எழுதுவதில் முனைப்புடன் இருக்கிறார்கள்.1984யில் இரண்டு இடங்களில் மட்டும் வென்ற பாரதிய ஜனதா கட்சி 1998யில் ஆட்சியை பற்றியது.பிறகு 2014யில் பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.வலதுசாரி இயக்கங்கள் உலகம் முழுதும் என்ன செய்வார்களோ அதையே இங்குள்ள வலதுசாரி இயக்கங்களும் செய்துள்ளது.ஒரே மொழி,ஒரே ஜனசக்தியாக ஒன்றிணைவதன் அவசியம் போன்றவை அதில் முக்கியமானவை.கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை தரும் இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது.பொது சிவில் சட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்றாலும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அயோத்தியில் இதுவரை சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதனால் தான் வேறு இடத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள முக்கிய விஷயம் இனி இந்துத்துவ அரசியல் எங்கும் செல்ல இயலாது என்பதுதான். ராம ஜென்ம பூமிக்கான போராட்டம் தான் பாரதிய ஜனதா கட்சி தேசிய அரசியலில் ஒரு வலுவான கட்சியாக உயர்வதற்கான வழியை வழங்கியது.இனி இப்படியான ஒரு போராட்ட களத்தை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று யாத்திரை செல்வதும் மக்களை திரட்டுவதும் சாத்தியமில்லாதது.குறியீட்டு தளத்தில் இந்துத்துவ அரசியில் அதன் எல்லையை தொட்டு விட்டது.இனி அந்த இயக்கத்திற்கு செல்வதற்கு வழி இல்லை.அது கீழே சரிந்துதான் ஆக வேண்டும்.பண்பாட்டு தளத்திலான அடையாள அணித்திரள்வு இனி வேறு ஒரு விஷயத்தை முன்வைத்து உருவாக்க முடியாது.அதனால் தான் எப்போதும் வெற்றியின் களிப்பில் இயக்கங்கள் சோர்வும் கவலையும் கொள்கின்றன.

திராவிட இயக்கங்களுக்கு இந்தி எதிர்ப்பு ஒரு பெரிய வரமாக அமைந்தது.அப்படியான ஒரு எதிர்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்காவிட்டால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்திருக்க முடியாது.இப்போது எவ்வளவு முயன்றாலும் அப்படியான ஒரு இந்தி எதிரப்பு அலை உருவாக வாய்ப்பில்லை.அதே போல இந்துத்துவ அரசியலுக்கும் இனி தன்னை முழுமையாக திரட்டிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.என்பதுகளின் இறுதியில் உருவான இந்துத்துவ அலை மெல்ல இந்த முப்பது வருடங்களில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது.மலை உச்சிக்கு செல்லும் ஒருவன் கீழே இறங்கி வருகிறான்.மலை ஏறும் எவரும் எவரேஸ்ட் சிகரங்களில் குடியிருப்பதில்லை.இனி காங்கிரஸ் கட்சி அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் ஒரு தலைவரை கண்டுபிடிக்க வேண்டும்.அவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும்.இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.இரண்டு கட்சிகள் இருக்க கூடாது.ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக மாற வேண்டும்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 1 போன்ற அரசாங்கம் மறுபடி அமைய வேண்டும். அதை நோக்கி இந்துத்துவம் தவிர்த்த மாற்று அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும்.மண் பயனுற வேண்டும்.

அருண்மொழி


அருண்மொழி இறந்துவிட்டார் என்ற செய்தியை படித்தேன்.மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.மிக நல்ல மனிதர்.அவர் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார்.அவருக்கு திரைத்துறையில் , அரசியலில், இலக்கிய, நாடகத்துறையில் இருக்கும் பலரை நன்கு தெரியும்.சென்னையின் எந்தப் பகுதிக்கும் கூகிள் மேப்பை விட சிறந்த வழி சொல்வார்.சென்னையில் எங்கு சென்றாலும் அங்கு சென்று சந்திக்க ஒரு நண்பர் இருப்பார்.

நான் அவரை அவர் பிரசாத் ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருந்த போது சந்தித்தேன்.அவர் தான் நான் இயக்கிய ராவ் சாஹிப் என்ற குறும்படத்திற்கு பல உதவிகள் செய்தார்.அவரின் உதவி இல்லாதிருந்திருந்தால் அந்த குறும்படத்தை எடுத்திருப்பேனா என்று தெரியவில்லை.யாரையும் சுரண்டாதவர்.சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ விடுமுறைக்கு சென்னைக்கு சென்றிருந்த போது , மகனுக்கு பேராக்கு காட்ட சாலிக்கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது அவரும் இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்தார்.பார்த்து பேசினேன்.அது தான் கடைசியாக பேசியது என்று நினைக்கிறேன்.சென்னை செல்லும் போது அவர் நடத்தி வரும் நடிப்பு பள்ளிக்கு சென்று அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.அது இனி நடக்காது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.மூன்று முழு நீளத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.ஏழாவது மனிதன் படத்திற்கு அவர் வசனம் எழுதினார்.திருநங்கைகளின் பிரச்சனைகள் பற்றி உண்மையான அக்கறை அவருக்கு இருந்தது.அதை சார்ந்து சில படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார்.சமீபத்தில் நடிப்பு பள்ளி நடத்தி வந்தார்.அவர் நாளை காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று பத்து பேரிடம் சொல்வார்.இறுதியில் பதினொராவதாக ஒருவரை பார்க்க சென்று விடுவார்.அவருக்கு என் அஞ்சலி.

(நவம்பர் 9ஆம் தேதி பேஸ்புக்கில் எழுதிய பதிவு)

 

 

அந்நியமாதலும் தீர்வும்




எரிக் ஃபிராம் ( Erich Fromm) மனவளமான சமுதாயம் (Sane Society) நூலில் மனிதனுக்கு அடிப்படையிலேயே இயற்கையிலிருந்து விலகி செல்வதற்கான இருத்தலிய சிக்கல் இருப்பதை சொல்கிறார்.அவனால் விலங்குகளை போல இயற்கையோடு இயைந்து இருக்க இயலாது.ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட கனியை உண்பது அந்த விலகிச்செல்லும் விருப்புறுதியைத்தான் குறிப்புணர்த்துகிறது என்கிறார்.எப்படி ஒரு மனிதக் குழுந்தை பிறந்து எழுந்து நடக்க நீண்ட வருடங்கள் எடுத்துக்கொள்கிறதோ அதே போல மனித சமூகம் இயற்கையிலிருந்து விலகி வர நீண்ட நெடுகாலம் எடுத்துக்கொண்டது.கடந்த நான்காயிரம் ஆண்டுகளில் தொடர்ந்து மனிதன் மிகப்பெரிய அளவில் பாய்ச்சலை நிகழ்ந்திருக்கிறான்.அவன் இன்று தொழில் மய சமூகத்தில் வேலை பிரிவனைகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் முதலாளிய அல்லது சோஷயலிச சமூகத்தில் வாழ்கிறான்.இந்த வேலை பிரிவினை அவனை அந்நியப்படுத்துகிறது.இந்த அந்நியமாதல் அவனுக்குள் மன அசதியை ஏற்படுத்துகிறது.அந்நியப்படும் அவன் அருவமான உலகில் வாழ்கிறான்.பருண்மையான உலகம் அவனுக்கு அருவமானதாக மாறுகிறது.

அவன் ஜனநாயக அரசியலில் பங்கு பெறுகிறான்.ஆனால் அதிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறான்.அவன் உலகம் அருவமாகிறது.பஸ்ஸில் பயணித்த ஐம்பத்திரண்டு பேர் மரணம், நிலநடுக்கத்தில் பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர் போன்ற செய்திகள் நம்மை உலுக்கவதில்லை.நம்மை அழ வைப்பதில்லை.இது படைப்பிலிருந்து விலகும் மனிதன் அடையும் அந்நியமாதல்.இந்த அந்நியமாதல் அவனது தனிப்பட்ட வாழ்ககையில் , அவன் பங்கெடுக்கும் ஜனநாயக அரசியலில் , அவனது ஓய்வு நேர விருப்பங்களில்,  அவனது வேலையில் , உறவுகளில், வாழ்க்கை பற்றிய நோக்கில் எல்லாம் பாதிப்பு செலுத்துகிறது என்கிறார் எரிக் ஃபிராம்.இதற்கு அவர் அளிக்கும் தீர்வுகள் தான் மிகவும் எளிமையானதாக இருக்கிறது.வேலை பிரிவினைகள் தான் அந்நியமாதலுக்கான காரணம் , அவன் செய்யும் வேலையின் முழுமையை அவனுக்கு உணர்த்துவதன் வழி அவனது அந்நியமாதலை குறைக்க முடியும் என்கிறார்.

எரிக் ஃபிராம் இந்த தீர்வுக்கு வர முக்கிய காரணம் அவரது மார்க்ஸிய பார்வை.அவர் வரலாறு இந்த திசையில் தான் செல்ல முடியும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.விஞ்ஞானம் , தொழில்நுட்பம் , இயற்கையை வசப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மனிதன் திரும்ப வாய்ப்பில்லை என்கிறார்.அதனால் கிராம பொருளாதாரத்தை அவர் ஒரு தரப்பாக கூட முன்வைக்கவில்லை.ஆதாம் ஏவாள் உண்ட விலக்கப்பட்ட கனி என்பது மனிதனுக்கு இயல்பாகவே இருக்கும் அறிந்துகொள்வதற்கான விருப்புறுதியில் உருவாவது.அதனால் அவன் இப்போது வரலாற்றில் இருக்கும் இந்த இடத்திற்கு வந்துதான் ஆக வேண்டும்.சமூகத்தில் தகாப்புணர்ச்சி நீக்கமும் , இயற்கையிலிருந்து விலகலும் ஒன்றுதான் என்கிறார்.அதாவது அது இப்படித்தான் நிகழ்ந்தாக வேண்டும்.வேறு எப்படியும் அது இருக்க வாய்ப்பில்லை என்கிறார்.இந்த இயற்கையிலிருந்து நீங்குதல் தந்தை பிம்பத்திடம் அடிபணியும் பண்பை உருவாக்குகிறது என்கிறார்.

இப்படியான பல சட்டகங்கள் வழி அவர் வந்தடையும் தீர்வு எளிமையானதாகவும் Status quoவை நிலைநிறுத்துவதாகவும் இருக்கிறது.இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.முதலாளிகள் இந்த பரிசீலனைகள் ஏற்றுக்கொள்வார்கள்.ஒரளவு வரை நடைமுறை படுத்தவும் செய்வார்கள்.ஏனேனில் இது அவர்களின் உற்பத்தியை பெருக்க உதவுக்கூடும்!

இந்த அந்நியமாதலுக்கு அவர் அளிக்கும் மற்றொரு தீர்வு கூட்டுக்கலை விழாக்கள்.இன்று மதம் சார்ந்த சடங்குகள் இல்லாத நிலையில் தனிமனிதன் நவீனக்கலை வடிவங்களை நோக்கி செல்கிறான்.ஆனால் அதில் அவன் தன்னை இழப்பதில்லை.இந்த உலகத்தை தன் தலையால் மட்டும் அறிந்தால் போதாது என்கிறார் எரிக் ஃபிராம்.தன்னை முழுமையாக கரைத்துக்கொள்ளக்கூடிய கிராமத் திருவிழாக்கள் போன்ற கூட்டுக்கலைகள் வேண்டும் , அது கலாச்சார தளத்தில் அவனது அந்நியமாதலுக்கான தீர்வாக இருக்கும் என்கிறார்.

இதில் கூட்டுக்கலை பற்றிய அவரின் தீர்வு பெருநகரங்களில் நடைமுறை படுத்துவது நல்ல விளைவுகளை உருவாக்கும்.ஆனால் வேலை பிரிவினை உருவாக்கும் அந்நியமாதல் , அதனால் அனைத்தையும் அருவமாக உணர்தல் என்ற சிக்கலில் இருந்து விடுபட அவன் வேலை செய்யும் பண்டம் அல்லது சேவை பற்றிய முழுமை உணர்வை பெற வேண்டும் என்ற தீர்வு வேறு என்ன வழி இருக்கிறது என்ற அடிப்படையிலான பார்வை.அவருடைய தீர்வுகள் பெருநகர தொழில்மய சமூகங்களுக்கு மாற்று இல்லை என்ற நிச்சயமான முடிலிருந்து உருவாகுகிறது.அவர் காந்தியை எங்குமே குறிப்பிடவில்லை.ஹெர்பர்ட் மார்க்யூஸா இந்த வேறு வழி இல்லை என்ற கலகமற்ற பார்வையைத்தான் விமர்சிக்கிறார்.

ராஜ் கெளதமன் மொழிபெயர்த்திருக்கிறார்.மொழிபெயர்ப்புகள் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக அமைந்துள்ள புத்தகம் இது.ராஜ் கெளதமன் இதை மிகவும் விரும்பி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.அவர் எரிக் ஃபிராம் பற்றி நீண்ட அறிமுகம் ஒன்றை அளித்திருக்கிறார்.அந்த அறிமுகம் எரிக் ஃபிராம் முன்வைக்கும் பார்வையை புரிந்து கொள்ள பெரிய அளவில் உதவுகிறது.

மனவளமான சமுதாயம் - எரிக் ஃபிராம் -  மொழிபெயர்ப்பு ராஜ் கெளதமன் - காலச்சுவடு பதிப்பகம்

புகைப்படம் - By Müller-May / Rainer Funk, CC BY-SA 3.0 de, https://commons.wikimedia.org/w/index.php?curid=43921778

உலவ ஒரு வெளி





என் பெயர் கதிர். என் தந்தையின் பெயர் அர்ஜூனன்.அவர் விவசாய கூலி.நான் திருக்கோயிலூர் விழுப்புரம் சாலையில் இருக்கும் வில்லிக்குப்பம் என்ற கிராமத்தின் காலனியை சேர்ந்தவன். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் திருவெண்ணெய்நல்லூர் கோவிலில்தான் கம்பன் வந்து பாடிச்சென்றதாக சொல்வார்கள். நான் எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.பன்னிரெண்டாம் வகுப்பு வரை பக்கத்து கிராமமான திருகுறிச்சியில் படித்தேன்.நான் என் வகுப்பின் முதல் மாணவனாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.எனக்கு திருக்கோயிலுரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் படிக்க இடம் கிடைத்தது. சென்னையில் கிறிஸ்டியன் கல்லூரியில் முதுகலை படித்தேன்.அங்கேயே எம்.பில் படிக்க முடிந்தது.பின்னர் மத்திய பல்கலைகழகத்தில் உயர் ஆராய்ச்சியில் சேர்ந்தேன்.நான் இயற்பியலுக்கும் மேற்குலகின் தத்துவத்திற்குமான உறவை புரிந்துகொள்ள மிகவும் பிரயாசைப்பட்டேன்.அவை குறித்து பிற்காலத்தில் நிறைய எழுத வேண்டும் என்று கனவு கண்டேன்.ஆங்கிலத்தில் சொல்லப்படும் Atom என்ற வார்த்தைக்கு இதற்கு மேல் பிரிக்கமுடியாதது என்று பொருள்.தமிழில் அணு என்கிறோம்.அணு அளவு என்ற வார்த்தையை நாம் பிரயோகிக்கிறோம்.இன்று நீண்ட தூரம் வந்து விட்டோம்.அணுவை பிளந்து அணு சக்தி அணு குண்டு எல்லாம் உருவாக்குகிறோம்.இன்று அணுவில் இருக்கும் நுண்துகள்கள் குறித்துதான் உலகில் மிகப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் நிகழ்கிறது.அதை அறிவதன் வழியாக பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.நியூட்ரினோவை புரிந்துகொள்ள ஆராய தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.சூழிலியாளர்கள் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள்.தெகார்தே , காண்ட் என்று துவங்கிய மேற்குலகின் தத்துவ கேள்விகள் அதன் வழி உருவான பார்வைகள் நவீன இயற்பியலுக்கு வித்திட்டது.ஐன்ஸ்டீன் சாத்தியப்பட்டார்.ஐன்ஸ்டீன் நியூட்டனின் காலத்தில் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.அந்த அறிவுச்சூழலே அப்போது இல்லை.ஐன்ஸ்டீன் உருவாகி வர மேக்ஸ்வேல்லின் ஒளி பற்றிய கணிப்பு , நியூட்டனின் இயற்பியல் விதிகள் , லொரன்சு ,கலிலீயோ போன்றோரின் கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டன.

ஒரு பார்வை உருவாகி வர எத்தனை நூற்றாண்டுகள் ஆகிறது. ஒரு வேளை நமது சாதி பற்றிய பார்வைகள் மாறுவதற்கு கூட அத்தனை நூற்றாண்டுகள் ஆகக்கூடும்.நான் நன்றாக படித்தேன்.கால்பந்து விளையாடுவேன்.பார்வேர்ட்.எனக்கு பள்ளியில் அமைந்த ஆசிரியர்கள் மீது எனக்கு எந்த புகாரும் இல்லை.ஆனால் ஆரம்ப பள்ளி, இடைநிலை பள்ளிகளில் ஏன் நூலகங்கள் அமைக்கப்படுவதில்லை என்றுதான் எனக்கு இன்றும் புரியவில்லை.நூலகத்திற்கு என்று ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரங்கள் ஏன் ஒதுக்கப்படுவதில்லை.

என் சிறுவயதில் அன்னைக்கும் என் தந்தைக்கும் அடிக்கடி மனக்கசப்பு முற்றி என் அன்னை அவளின் அன்னை வீட்டிக்கு சென்றுவிடுவாள்.என் அன்னை என் தந்தையை எந்தளவு நேசித்தார் என்று தெரியவில்லை.என் அன்னை என் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் நான் கேள்விப்பட்டதுண்டு.என் அன்னையின் வீட்டில் எல்லோரும் இப்போது கிறுஸ்துவர்களாக மாறிவிட்டார்கள்.அவர்களுக்கு என் தந்தையை பிடிக்காது.என் அன்னை வீட்டாளர்கள் கிராமத்தில் இல்லை.விழுப்புரத்தில் இருக்கிறார்கள்.கான்கீரிட் வீடு.மொசைக் தரை என்பதால் குண்டூசி விழுந்துவிட்டால் எடுப்பது கடினமாக இருக்கும்.என் அன்னையின் அன்னை எப்போதும் கையில் எதாவது ஒரு துணியை வைத்து தைத்து கொண்டே இருப்பார்.விழும் ஊசியை சில முறை நான் எடுத்துதந்திருக்கிறேன்.என் அன்னையின் அன்னை எங்களை அவர்களோடே விழுப்புரத்தில் இருந்துவிட சொல்லியிருக்கிறார்.என் அன்னையின் மனம் கலிலீயோ தேவாலயத்தில் பார்த்து அதிசயத்த ஊசலி போல ஆடிக்கொண்டிருக்கும்.இறுதியில் அவள் என் தந்தையை தேடி வந்து விடுவாள்.இவர்களின் மனக்கசப்பு எனக்கு மனித உறவுகள் மீதே ஒர் அச்சத்தை அளித்தது.என் தந்தை குடிக்க மாட்டார்.பீடி பிடிப்பார்.என் அன்னை அவரை நேசித்தாள் என்றே இப்போது தோன்றுகிறது.ஆனால் அதை மீறிய ஏதோ ஒன்று அவளுக்குள் ஒர் ஊசலை உருவாக்கியது.என் அன்னை அடிக்கடி அவளது அன்னை வீட்டிற்கு சென்று விடுவதால் என் தந்தை சில காலம் நான் அவரது தங்கை வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வரச் சொன்னார்.இரண்டு வருடம் அப்படி சென்று வந்தேன்.எனக்குள் இது சிறுவயதிலிருந்தே தனிமையை உருவாக்கிவிட்டது. நான் என் அன்னையின் மடியில் படுத்து உறங்கியிருக்கிறேனா, அவள் என்னை எந்தளவு சீராட்டினாள் , எடுத்து கொஞ்சியிருக்கிறாள் , தெரியவில்லை. ஒரு முறை என்னை கால்பந்து அணியில் சேர்த்து கொள்ளவில்லை என்று அழுதேன்.மறுநாள் நான் அழுதது அருவெருப்பை உருவாக்கியதாக என் அன்னை சொன்னாள்.நான் கால்பந்து விளையாடுவேன்.நண்பர்களுடன் பேசுவேன்.ஆனால் எப்போதும் நான் தனி ஆள் தான்.நாம் யார் மீதாவது அதீத பற்று வைத்து அவர்கள் நம்மை பிரிந்துவிட்டால் நாம் என்ன செய்வது , ஏன் மனிதர்கள் பிரிந்துவிடுகிறார்கள்.ஏன் மனிதர்கள் மனிதர்களை உதாசீனம் செய்கிறார்கள்.மனிதர்களால் மனிதர்களை எந்தவித அகங்காரமும் இல்லாமல் நேசிக்க முடியாதோ.எனக்கு இதெல்லாம் உண்மையில் புரியவில்லை.

நான் ஒரு முறை இடைநிலை பள்ளியில் படித்த போது யாரோ ஒரு அரசியல் தலைவரை கைது செய்துவிட்டார்கள் என்று சொல்லி பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள்.என் பள்ளியிலிருந்து என் கிராமத்துக்கு எட்டு கிலோ மீட்டர்.என் கிராமத்திலிருந்து பத்தாவது படித்துக்கொண்டிருந்த ரகுராமன் என்னை அவனது சைக்களில் ஏற்றிக்கொண்டான்.அன்று நல்ல காற்று வீசியது.சாலையின் இருபுறங்களிலும் புளியமரங்கள்.சிறிது தூரம் சென்ற பின் நான் அயர்ந்து போய் அவன் முதுகில் சாய்ந்து தூங்கிவிட்டேன்.அவன் என்னை இறக்கி விடும் போது நான் வீட்டிற்கு சென்று குளிக்க வேண்டும் என்று சொன்னான். வகுப்பறையில் எஸ்.சி எஸ்.டி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சில முறை கணக்கு எடுப்பார்கள்.சில முறை ஆசிரியர்கள் உங்களுக்கு இவ்வளவு மார்க் எடுத்தால் போதும் என்று நினைத்து படிக்காதீர்கள் , நிறைய தெரிந்து கொள்ள படியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.அதைத் தவிர்த்து பார்த்தால் பெரிதாக சாதிய பாகுபாடு எனக்கு தெரிந்து இல்லை.என் தந்தை அர்ஜூனன் வேலை செய்யும் கொல்லியில் நானும் சில முறை விடுமுறைகளில் அறுவடை செய்ய ,நீர் பாய்ச்ச, காவல் காக்க என்று செல்வேன்.அப்போது என் தந்தையை அவர்கள் பெயர் சொல்லி வாடா போடா என்று அழைப்பார்கள்.சிறு வயதில் இருந்தே அப்படி பார்த்து பழகி இருந்ததால் எனக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை.ஆனால் கல்லூரிக்கு சென்ற பின் என் தந்தை அப்படி அழைக்கப்படுவதை அசெளகரியமாக உணர்ந்தேன்.ஆனால் நான் எதுவும் கேட்டதில்லை.என் வயதேயான கொல்லி குத்தகைகாரனின் மகன் கூட அப்படித்தான் அழைப்பான்.நான் அதன் பின் கொல்லிக்கு அதிகம் செல்வதில்லை.எங்கள் ஊரில் எப்போதும் எல்லா தெருக்களும் மிக அழகாக சுத்தமாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.என் காலனிப்பகுதி எப்போதும் அழுக்காக இருக்கும். எங்கள் ஊரில் காலனிக்கும் ஊருக்கும் என்று இரண்டு தனித்தனி நீர்த்தொட்டிகள்.ஊரில் ஒரு பெருமாள் கோயில் மற்றும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது.எங்கள் பகுதியில் ஒரு மாரியம்மன் கோயிலும் பெந்தகோஸ்தே தேவலாயமும் இருக்கிறது.எங்கள் பகுதியை சேர்ந்த பத்து சதவிகித்தினருக்கும் அதிகமானோர் கிறுஸ்துவத்திற்கு மாறிவிட்டார்கள்.என் அன்னையும் கிறுஸ்துவத்திற்கு மாறிவிட்டாள்.என் தம்பியும் நானும் தந்தையும் மாறவில்லை.என் அன்னையும் சில முறை கொல்லி வேலைக்கு செல்வாள்.என் தந்தைக்கு சரியாக எழுத படிக்கத் தெரியாது.என் அன்னை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தாள்.அவளது பள்ளி சான்றிதழ்களை எங்கோ தொலைத்துவிட்டாள்.பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அதற்கான ட்ரூ காப்பியை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காததால் அவள் மேற்கொண்டு படிக்கவில்லை.அவள் வைத்திருந்த விவிலயத்தை எடுத்து அடிக்கடி வாசிப்பேன்.இப்போது நினைத்து பார்க்கும் போது இயேசு கிறுஸ்து தேவகுமாரன் என்பதை விட அவர் ஒரு புரட்சியாளர் என்று தான் தோன்றுகிறது.அவர் நான் பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள் சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன் என்கிறார்.தன் தந்தைக்கு மாமிக்கு பாத்திரமானவன் தனக்கு பாத்திரமானவன் இல்லை என்கிறார்.தந்தையிலிருந்து மாமியிலிருந்து தன்னை பிரித்து கொள்வதென்றால் மரபில் இருந்து பிரித்து கொள்வதுதானே.அதுவரை சொல்லித்தரப்பட்டதை மீறுவது தானே.மரபில் இருந்து பிரிவோரே இயேசு கிறுஸ்துவின் பாத்திரமாக முடியும்.ஆனால் இந்தியர்களுக்கு எப்போதும் மாறாத மரபு சாதிய மரபு.

நான் கல்லூரிக்கு சென்ற பின்னர் எனக்கு ஊக்கத்தொகை கிடைத்தது.நான் நன்றாக கால்பந்து விளையாடிதால் என்னை கல்லூரி அணியில் சேர்த்துக்கொண்டனர்.நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்ததால் முதல் வருடம் ஆங்கிலத்தில் படிக்க சற்று தடுமாறினேன்.சின்ன தடுமாற்றம் தான்.பின்னர் எனக்கு படிப்பில் எந்த சிக்கலும் இல்லை.முதுகலையில் குவாண்டம் மெக்கானிக்கஸை சிறப்பு பாடமாக எடுத்தேன்.எம்.பில்லும் அதிலேயே தான் செய்தேன்.என்னைச் சார்ந்து என் வீட்டில் யாருமில்லை.எனக்கு வரும் ஊக்கத்தொகை என் செலவுக்கு போதுமானதாக இருந்தது.கல்லூரி ஆண்டுக்கட்டணத்தை தந்தை செலுத்திவிடுவார்.என் தம்பி இப்போது கணிதத்தில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.அவனுக்கு மேற்கொண்டு படிக்கும் ஆர்வம் இல்லை.அவன் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இடைநிலை பள்ளி ஆசிரியராகவிடும் எண்ணத்தில் இருக்கிறான்.நானும் அப்படியான எண்ணத்தோடே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறன்.நான் உயர் ஆராய்ச்சியில் படிப்பதற்காக தமிழகத்தை விட்டு வெளியே இந்த மத்திய பல்கலைகழகத்திற்கு வந்தது என்னை மனரீதியில் வெகுவாக வலுவிழக்கச் செய்துவிட்டது.

நான் இந்த பல்கலைகழகத்தில்தான் முதல்முறையாக ஒரு புழுவாக உணர்ந்தேன்.தமிழகத்தில் நான் படித்த போது கல்லூரிகளில் அரசியல் அணிதிரள்வு நிகழவில்லை.சாதி இந்திய ஒற்றுமை.ஆனால் தமிழகத்தில் நான் படித்த கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான அணித்திரள்வுகள் நான் இளங்கலை முதுகலை படிக்கும் போது இல்லை.சட்டக்கல்லூரிகளில் மட்டும் ஒரளவு இருந்தது.இப்போது அந்த நிலை சற்று மாறி வருகிறது என்று நினைக்கிறேன்.இன்றும் சாதி அடிப்படையிலான குழுக்கள் உருவாகவில்லை என்றாலும் இன்று யார் என்ன சாதி என்ற புரிதலும் அந்த சாதி படிநிலையில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற அறிதலும் இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இருக்கிறது.தொண்ணூறுகளில் உருவான சாதிக்கட்சிகளுக்கும் இன்று தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகியிருக்கும் சாதி பிரக்ஞைக்கும் தொடர்பு உள்ளது.

சாதிய கட்சிகளின் நோக்கம் என்ன.எண்கள்.ஆதிகாலத்து மனிதன் தனக்கு பத்து விரல்கள் இருந்ததால் பத்தை கொண்டு எண்ணினான்.இன்றும் தசப்தங்கள் நமக்கு கூட்டல் கழித்தலுக்கு ஏதுவாக இருக்கிறது.ஆயிரத்தி நூற்றி பத்து ரூபாயிலிருந்து பதினெட்டு சதவிகிதத்தை கணக்கிடுவதைவிட பத்து சதவிகிதத்தை கணக்கிடுவது எளிதானதாக இருக்கிறது.இன்று புள்ளியியல் மிகவும் வளர்ந்து நிற்கும் துறை.ஜனநாயகத்தில் எண்கள் மிகவும் முக்கியமான சக்தியாக இருக்கிறது.பாராளுமன்றத்தில் சட்டமன்றத்தில் மட்டுமல்ல சமூகத்தில் கூட எண்கள் மிகவும் முக்கியமான இடத்தை பெற்று வருகிறது.எண்கள் சூழ் உலகு.இந்த எண்கள் அதிகம் இருந்தால் அதிகாரத்தை அடைய முடியும்.அதிகாரத்தை அடைந்தால் எதையும் அடைய முடியும்.சாதிய அணித்திரள்வு மத அடிப்படையிலான கூட்டத்தை விட இன அடிப்படையிலான கூட்டத்தை விட மேலும் வேர் கொண்டது.அத்தகைய சாதிய கட்சியை உருவாக்குவது அதிகாரத்தை அடைவதற்கான நல்ல வழி.சாதி கட்சித் தலைவருக்கு தன் சாதியின் மீது அபிமானம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை.அவர் தன் மகளை அல்லது மகனை வேற்று சாதி ஆணுக்கு பெண்ணுக்கு கட்டித்தரலாம்.ஆனால் அவனது சாதிக்காரர்கள் சாதிக்குள் திருமணம் செய்து சாதியை வளர்க்க வேண்டும்.சாதிய எண்களை கூட்ட வேண்டும்.தமிழகத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட சாதியாக தன் சாதி இருக்க வேண்டும் என்று சாதித்தலைவர் ஆசைப்படுகிறார்.அப்போது அவர் அந்த சாதிக்கூட்டத்தின் தலைவராக அரசவையில் அமர்ந்து ஆட்சி செய்யலாம்.இதனால் தான் சாதிய கணக்கெடுப்பு நடத்தச்சொல்லி சாதித்தலைவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.மற்றொரு பக்கம் வேறு எந்த வகையிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தெரியாதவர்கள் கூட்டத்தில் ஒருவனாக கரைந்து போக தன்னை அந்த சாதிக்கட்சியில் இணைத்து கொள்கிறார்கள்.இப்படியான தெரியாதவர்கள் மதக்கட்சியிலும் போய் சேர்ந்துகொள்கிறார்கள்.இனக்குழு அமைப்புகளில் உறுப்பினராகிறார்கள்.பின்னர் கொடி தூக்குகிறார்கள்.கோஷம் போடுகிறார்கள்.கண்ணாடிகளை உடைக்கிறார்கள்.சட்டையை பிய்த்து கொள்கிறார்கள்.ஏதேனும் பதவியில் சென்று அமர்ந்துகொள்கிறார்கள்.கல்லூரி துவங்குகிறார்கள்.பட்டங்கள் வழங்குகிறார்கள்.தன் வாலை தானே விழுங்கும் பாம்பு போல ஒரு வாழ்க்கை.

நான் பல்கலைகழகத்தில் சேர்ந்த பின்னர் ஒரு புழுவாக உணர்ந்தேன்.என்னை அப்படித்தான் பலர் பார்த்தனர்.நான் விவேகானந்தரின் புகைப்படம் ஒன்றை என் அறையில் முன்னர் மாட்டியிருந்தேன்.நான் அதுவரை எந்த குழுவிலும் இருந்ததில்லை.மூன்று வருடத்தில் இந்த ஆராய்ச்சியை முடித்து திஸிஸை சமர்பித்து வெளியே சென்று நான் விரும்பியபடி இயற்பியலுக்கும் தத்துவத்திற்குமான உரையாடலை பற்றி எழுத வேண்டும்.நல்ல பல்கலைகழகத்தில் அல்லது கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர வேண்டும்.நான் விரும்பும் பெண்ணுடன் உரையாடி காதலித்து திருமணம் செய்து வாழ வேண்டும்.ஆனால் இது எதுவும் நடக்கவில்லை.இனி நடக்க போவதுமில்லை.நான் முதல் வருடம் முடிவடைவதற்குள் அம்பேத்கர் குழு ஒன்றில் இணைந்தேன்.அப்போது விவேகானந்தர் எனக்கு முற்றிலும் தேவையற்றவராக மாறிவிட்டார்.காந்தி புனே ஏர்வாடா சிறையில் வைத்து அம்பேத்கரை இரட்டை வாக்குரிமைக்கான கோரிக்கையை திரும்ப பெறச் செய்தார்.பின்னர் அதற்கு பதிலாக தனித்தொகுதிகள் உருவாகின.இந்த பிரதிநித்துவம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது.கடந்த நூறு வருடங்களை எடுத்துக்கொண்டால் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.மெல்ல மெல்ல அந்த மாற்றம் நிகழ்கிறது.ஜனநாயகத்தில் அப்படித்தான் நிகழ முடியும்.மாவோ போல கலாச்சார புரட்சியை கொண்டு வந்து ஏழு கோடி மக்களை கொல்வதற்கு பதில் இது எத்தனையோ மேலானது.ஆனால் இன்று அதன் மறுபக்கம் ஊர் சேரி என்ற இறுக்கம் மேலும் வலுவடைகிறது.இதைத்தான் என்னால் புரிந்துகொள்ளவே இயலவில்லை.கல்வி சாதியை அழிக்கும் என்று தானே நமது தலைவர்கள் நினைத்தார்கள்.ஏதோ ஒரு வகையில் படித்து அல்லது படிக்காது பெருநகரங்களில் அதிகாரம் நோக்கி செல்லும் கூட்டத்தினருக்கு சேவை செய்யும் மற்றொரு கூட்டத்தை உருவாக்க இந்த அமைப்பே ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்கிறது என்று தோன்றுகிறது.அந்த சேவை செய்யும் கூட்டத்தை உருவாக்கவே சாதி என்ற அமைப்பு தேவைப்படுகிறது.நீங்கள் பெருநகரத்து சேரிகளை பார்த்திருக்கக்கூடும்.பெருநகரங்களும் ஊர் சேரி என்று பிரிந்துதான் இருக்கிறது.

காந்தி சாதிய பிரச்சனையை தனிமனித பிரச்சனையாக பார்த்தார்.அம்பேத்கர் அதை இந்து அமைப்பின் பிரச்சனையாக பார்த்தார்.தனிமனிதனை குற்றவுணர்வு கொள்ள செய்வதன் வழி சாதி அற்ற சமூக அமைப்பு உருவாகும் என்று காந்தி கனவு கண்டார்.இந்து அமைப்புக்கு வெளியே பெளத்த மதமும் பெருநகர உருவாக்கமும் சாதியிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று அம்பேத்கர் கனவு கண்டார்.இரு கனவுகளும் பொய்த்துவிட்டது.அல்லது அம்பேத்கரின் கனவுகளில் இன்னும் சில வாய்ப்புகள் தென்படலாம்.நான் அப்படியான ஒரு அம்பேத்கர் குழுவில் இனைந்தேன்.அங்கே இடதுசாரி குழுக்கள், மற்ற அம்பேத்கரிய குழுக்கள், வலதுசாரி குழுக்கள் எல்லாம் இருந்தன.இடதுசாரி குழுக்களிலும் அவர்களுக்குள் நிறைய வேற்றுமை இருந்தன.காந்திய அமைப்பு ஒன்று கூட இல்லை.இடதுசாரிகளுக்கு எங்களுடன் அன்பும் இல்லை பகையும் இல்லை.அம்பேத்கரிய குழுக்களில் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் இணைந்தே இருந்தோம்.ஆனால் நான் ஏன் இந்த குழுவில் சேர வேண்டும்.நான் இங்கு படிக்க வந்தேன்.எனக்கு ஏன் குழுவின் அடையாளங்கள்.நான் இந்த படிப்பை முடித்து வெளியே சென்று பெரு வாழ்வு வாழ வேண்டும்.நான் ஏன் ஒரு எண்ணாக மாற வேண்டும்.ஏன் ஒரு அடையாளத்தை தூக்கி சுமக்க வேண்டும்.நான் ஏன் அரசியல் படுத்தப்படவேண்டும்.நான் உண்மையில் என் படிப்பை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் நீங்கள் ஒரு குழுவாக மாறாவிட்டால் அங்கே இருப்பது கடினம்.நீங்கள் எழுத படிக்கத் தெரியாமல் அங்கே வந்து அமர்ந்துவிட்டதாகவே எல்லோரும் கருதுகிறார்கள்.அப்படி இல்லை என்று கத்திச்சொல்ல குழு தேவைப்படுகிறது.இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் சிலர் எங்களுக்கு பரிவாக பேசுவார்கள்.எங்களை பார்த்து நாங்கள் பாவம் என்பார்கள்.அதற்கு பதிலாக அவர்கள் என் சட்டையை பிடித்து முகத்தில் காறி உமிழலாம் என்று தோன்றும்.வலுதுசாரிகள் எங்களை பொருட்டாக மதிப்பதில்லை.பேராசிரியர்கள் எங்களுக்கு எதாவது புரியுமா என்று புருவம் தூக்கி பார்ப்பார்கள்.என் கைடு என்னை எடுத்துக்கொண்டதற்கே நான் நன்றிக்குரியவனாக இருக்க வேண்டும் என்று கருதினார்.நான் என் நன்றியை எப்படி காண்பிப்பது என்று புரியாமல் இருந்தேன்.கூட்டங்களில் பேசினேன்.எங்கள் குழுவின் கொள்கைகளை சொன்னேன். ஆனால் நான் உள்ளுக்குள் தினமும் தனித்து போய் கொண்டிருந்தேன்.எனக்கு நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தினமும் தோன்றிக்கொண்டிருந்தது.பேசிக்கொண்டிருந்த பேராசிரியர்கள் கூட விலகிச்செல்ல ஆரம்பித்தனர்.என் கைடு எனக்கு ஆராய்ச்சிக்கான தலைப்பை கொடுக்கவே ஒரு வருடம் எடுத்துக்கொண்டார்.எங்கள் பல்கலைகழகத்தில் ஒரு பன்றி மேய்ப்பாளனின் மகன் படித்தான்.அவன் தற்கொலை செய்து கொண்டான்.அவன் தமிழகத்தை சேர்ந்தவன்தான்.கடலூர் மாவட்டம்.விருத்தாசலம் தாலுக்கா.கம்மாபுரம் ஒன்றியம்.நல்லூர் என்ற கிராமம்.அதைப்பற்றிய செய்தியை நீங்கள் எந்த செய்தித்தாளிலாவது வாசித்திருக்கக்கூடும்.பன்றி மேய்ப்பாளனின் மகன் உயர் ஆராய்ச்சி வரை எப்படி சென்றான் என்று வாய் விரித்திருக்கவும் கூடும்.உங்களுக்கு இதெல்லாம் புரியாது.இப்பொது நான் தற்கொலை செய்து கொண்டதை பற்றிக்கூட உங்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை.தற்கொலை கோழைகளின் செயல் என்று நீங்கள் சொல்லக்கூடும்.சரிதான் விரியன் பாம்புகுட்டிகளே.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக எங்கள் குழு கோஷம் எழுப்பியது. மரண தண்டனைக்கு எதிராக கோஷம் போட்டது முக்கியம் அல்ல.உண்மையில் எங்களுக்கு அதிகாரத்தின் எந்த தீர்ப்புக்கும் எதிராக எதையாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் கிட்டத்தட்ட நிஹிலிஸ்டுகள் ஆகிக்கொண்டிருந்தோம்.எங்கள் நோக்கம் எதிர்ப்பது மட்டுமே என்றாகிவிட்டது.ஆனால் இந்த எதிர்ப்பினால் நாங்கள் எதை கட்டி எழுப்ப போகிறோம்.தெரியவில்லை.நான் கோஷம் எழுப்பி கோஷம் எழுப்பி சோர்வடைந்திருந்தேன்.என்னுடன் இருந்தவர்களும் சோர்ந்து போயிருந்தார்கள்.அன்று நான் கோஷம் போட்டுக்கொண்டிருந்த போது நீண்டு வளர்ந்திருந்த அகோக் என்ற ஒருவன் வந்து என்னை கோஷம் எழுப்புவதை நிறுத்தச்சொல்லி அதட்டினான்.நான் அவனை அடித்துவிட்டேன்.என் ஒட்டுமொத்த சோர்வையும் திரட்டி அவனை நான் குத்தினேன்.சட்டையை கிழித்தேன்.பின்னர் எங்கள் குழுவை கேலி செய்து அவன் பேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவுக்கு பேஸ்புக்கில் மற்றொரு பதிவாக மன்னிப்பு கேட்கச் சொன்னோம்.அவன் மன்னிப்பு கேட்டான்.அவனை கிளம்ப சொன்னோம்.அவன் முறைத்தான்.நான் அவன் தலையில் தட்டி ஒரு வசவுச் சொல்லை சொல்லி போடா என்றேன்.நான் மேலும் வெறுமைக்குள் சென்று சேர்ந்தேன்.சுண்ணாம்பு போன்ற வெறுமை.

அந்த நிகழ்வுக்கு பின்னர் எங்கள் மீது இரண்டு வலதுசாரி அமைப்புகள் துனை வேந்தரிடம் புகார் தந்தது.எங்களை பல்கலைகழகத்திலிருந்து நீக்கச்சொல்லி அழுத்தம் தந்தனர்.கூட்டம் கூடி கத்தினர்.அவருக்கு எங்கள் மீது கருணை இருந்தது.துனைவேந்தர் எங்களை பல்கலைகழகத்திலிருந்து நீக்கவில்லை.மாறாக அங்கே சில இடங்களில் மட்டுமே நாங்கள் உலவ முடியும் என்று கட்டளையிட்டார்.அதாவது உலவுவதற்கான வெளி சுருக்கப்பட்டது.வகுப்புக்குச் செல்லலாம்.நூலகத்திற்கு செல்ல முடியும்.ஹாஸ்டலை காலி செய்ய சொல்லிவிட்டார்கள்.பிற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.மீறினால் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.நாங்கள் போராட்டம் நடத்தத் துவங்கினோம்.ஊர் சேரியில் தான் எங்களுக்கு உலவுவதற்கான வெளி சுருக்கப்பட்டது.இங்கும் சுருக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.நாங்கள் போராட்டம் நடத்தினோம்.இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்வதற்கான எந்த சமிக்ஞையும் இல்லை.நான் இனி செய்ய ஒன்றுமில்லை.ஆராய்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை.வகுப்புகளுக்கு செல்வதில்லை.நான் எதற்காக இந்தப் பல்கலைகழகத்தில் சேர்ந்தேனோ அதிலிருந்து விலகி வெகு தொலைவு வந்துவிட்டேன்.நான் இனி இந்த ஆராய்ச்சியை முடித்து சமர்பித்து பட்டம் பெற எந்த சாத்தியமும் இல்லை.என் பால்ய காலத்திலிருந்து எனக்குள் இருந்த தனிமை பேரருவம் கொண்டுள்ளது.நான் ஒரு போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.நான் ஆராய்ச்சி முடித்து பட்டம் பெற்று பணியில் சேர்ந்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ விரும்பினேன்.என் தனிமை மேலும் என்னை இறுக்குகிறதே தவிர நான் கூட்டத்தில் அமைப்பில் முழ்க இயலாதவனாக இருக்கிறேன்.என் கண் முன்னே என் காலம் கரைந்துவிட்டது.இதோ எனக்கு இருபத்தியேழு வயதாகிவிட்டது.என் கனவுகளை எட்டிப் பிடிக்கும் தொலைவில் கூட நான் இல்லை.மரியான் படத்தின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன என்ற பாடல் பக்கத்து அறையிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.எனக்கு காதலி இல்லை.என் அறையிலிருந்த விவேகானந்தரின் புகைப்படம் எங்கே போனது என்றே தெரியவில்லை.வெறும் முப்பத்தொன்பது வயது வாழ்ந்த அவர் எத்தனை பெரிய ராமகிருஷ்ண மிஷனை உருவாக்கிவிட்டு போய்விட்டார்.அவர் அந்த மிஷன் ஒரு போதும் ஒரு மதமாக மாறிவிடக்கூடாது என்று விரும்பினார்.அப்படியே நிகழ்ந்தது.அதன் வழி எத்தனை மாணவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள்.நேர்மறையாக எதையாவது செய்யும் போது அதில் நண்மையாக எதாவது நிகழத்தான் செய்கிறது.

சிசிபஸின் தொன்மத்தில் ஆல்பர் காம்யூ தற்கொலைதான் மிக முக்கியமான தத்துவ பிரச்சனை என்று சொன்னார்.உண்மைதான்.அவமானம், பேரிழப்பு, மரணம் போன்ற கையறு நிலை ஆகிய சூழல்களில்தான் மனிதர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளத் தோன்றுகிறது.முனிஸிபாலிட்டி தண்ணீர் விடவில்லை என்று யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேனா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல முடியும்.நான் அவமானப்படவில்லை.மாறாக நான் பெரிதாக எதையோ இழந்துவிட்டதை போலவே உணர்கிறேன்.காலத்தை நான் இழந்துவிட்டேன்.இனி திரும்ப பெற இயலாத காலம்.என் வயிற்றில ஒரு பெரிய வெற்றிடம் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது.இனி அதை ஒன்றும் செய்ய இயலாது.நான் இந்த உலகில் எதையாவது பற்ற விரும்பினேன்.

முறையிட ஒரு கடவுள்
நம்ப ஒரு சித்தாந்தம்
உலவ ஒரு வெளி
வாழ ஒரு கனவு
கதை கேட்க ஒரு செவி
அடையாளத்திற்கு ஒரு பணி
பற்றிக்கொள்ள ஒரு கரம்.

நவீன மனிதன் முறையிட இருக்கும் ஒரு கடவுள் இயேசு கிறுஸ்து என்றுதான் நினைக்கிறேன்.ஆனால் நான் முறையிட்டதில்லை.நுண்ணுணர்வு உள்ள ஒருவன் இங்கே ஒவ்வொரு அசைவிலும் சாதியை பார்க்க முடியும்.நீங்கள் பெற்றிருக்கும் இந்த தோல் நிறம், அறிவு , சமூக அந்தஸ்து , பணம் , செளகரியங்கள் , பாலினம் , சாதி, மதம் , இனம், நாட்டுரிமை இவைகளுக்காக நீங்கள் போராடவில்லை.சரி.நீங்கள் பணத்திற்காக , அந்தஸ்துக்காக , செளகரியங்களுக்காக , அறிவுக்காக போராடியிருக்கலாம்.ஆனால் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்.நீங்கள் பலவற்றை இலவசமாக பெற்றீர்கள்.அறிவை பெறும் அறிவு இலவசமாக பெறப்பட்டது.Apriori.இலவசமாக பெற்றீர்கள்.இலவசமாக கொடுங்கள் என்கிறார் தேவகுமாரன்.நீங்கள் இலவசமாக எதையும் கொடுக்க வேண்டாம் , ஆனால் இவைகளை உங்கள் சொத்தாக கருதாதீர்கள்.இந்த பூமி பந்து இத்தனை பெரிய பிரபஞ்ச வெளியில் ஒரு தூசு மட்டுமே.நமது இருப்பு மிக அற்பமானது.அற்பமான இந்த இருப்பை வைத்துக்கொண்டுதான் நாம் டினோசராக மாற முயல்கிறோம்.நீங்கள் எவ்வளவு முயன்றாலும் நீங்கள் ஒரு நீர்க்குமழிதான்.இந்த பூமியே ஒரு நீர்க்குமழிதான்.

என் கனவுகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.என் வெளி சுருக்கப்பட்டுள்ளது.எனக்கு அடையாளம் இல்லை.நான் கூட்டத்தில் ஒருவன் இல்லை.எனக்கு எந்த சித்தாந்த்திலும் நம்பிக்கை இல்லை.அம்பேத்கர் பெளத்தம் நம்மை சாதியிலிருந்து விடுவிக்கும் என்று நம்பினார்.நமது பக்கத்து தேசத்திலேயே பெளத்த பேரினவாதம் எப்படி அரை நூற்றாண்டுக்கு மேலாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டது என்பதை நாம் பார்த்தோம்.ஈழத்தமிழன் தன் மகனுக்கு கெளதம், சித்தார்த்தன்,நாகார்ஜூனன் என்ற பெயர்களை வைக்க இயலுமா என்று தெரியவில்லை.ஆனால் தமிழ்நாட்டின் தமிழன் வைக்க முடியும்.அப்படியானால் இரு தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.மனிதர்கள் அடிப்படையில் பிறழ்வானர்கள் என்று நினைக்கிறேன்.மிருகங்கள் தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் இயல்புடையது.மனிதர்களுக்கும் அந்த இயல்பு உள்ளது.இந்த பிறழ்வும் தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் இயல்பும் இருக்கும் வரை எந்த சித்தாந்தமும் நம்மை மீட்க போவதில்லை.மனிதனுக்கு மீட்சி இல்லை.

நான் இயற்பியல் வழி இயற்கையை அறிய முயல்பவன்.நான் காலம் முழுதும் வேண்டியது என் கதை கேட்க ஒரு செவியும் பற்றிக்கொள்ள ஒரு கரமும்.ஏனோ அப்படி எதுவும் நிகழவே இல்லை.நான் மிகவும் தனித்து விடப்பட்டிருக்கிறேன்.என் அன்னை தேவாலயத்தில் மண்டியிட்டு தேவகுமாரனை வணங்குகிறாள்.என் தந்தை பீடி பிடித்துக்கொண்டிருக்கிறார்.என் தம்பி தன் நண்பர்களுடன் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறான்.எனது நண்பர்கள் வெளியில் நாளைக்கான போராட்டத்தை பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நான் இந்த கடிதத்தை எழுதிகொண்டிருக்கிறேன்.நான் எழுதும் கடைசி கடிதம்.இதோ நான் இந்த பிரபஞ்ச வெளியில் ஒரு தூசாக மாறிவிடப்போகிறேன்.நான் ஒரு எண்ணாக ஓட்டாக மாறிவிட்டேன்.நான் அடையாள அணிச்சேர்க்கையில் சென்று சேர்ந்துவிட்டேன்.இந்தத் தற்கொலை ஒர் அறிவிப்பு.நான் இந்த வாழ்வை நான் விரும்பும் வகையில் வாழ விரும்பினேன்.ஆனால் வாழ்க்கை என்னை வேறு வகையில் இழுத்துச் சென்றுவிட்டது.அதை நான் மறுக்கிறேன்.அதுவே இந்த தற்கொலைக்கான காரணம்.எப்போதும் தத்துவத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.நியதி மற்றும் சுதந்திர இச்சை.எனது இந்த தற்கொலை முடிவு நியதியின் வழி நடக்கிறதா அல்லது அது என் சுதந்திர இச்சையின் விளைவா.நுண்துகள்கள் பற்றிய ஆராய்ச்சி ஏதேனும் ஒரு நாள் இதற்கான பதிலை சொல்லிவிடக்கூடும்.அன்று எனது தற்கொலை அமைப்பால் நேர்ந்த ஒன்றா அல்லது என் தேர்வா என்று நாம் முடிவு எடுக்கலாம்.இரண்டில் எது உண்மை என்றாலும் என் தற்கொலை ஒரு விளைவு மட்டுமே.காரணம் நான் இல்லை அல்லது நான் மட்டுமே இல்லை. இந்த மட்டுமே என்பதற்கு மட்டும் தான் நுண்துகள்கின் ஆராயச்சி பதில் சொல்லும்.தேவலாயத்தில் பிராத்தித்து கொண்டிருக்கும் என் அன்னைக்கு நான் இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.அன்னையே , நரிகளுக்கு குழிகளும் , ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு.மனித குமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை.

நன்றி
கதிர்

(தமிழினி இணைய இதழில் வெளியான சிறுகதை)

Photo by Outcast India on Unsplash




பெளத்தமும் விஷ்ணுபுரமும்


நாகார்ஜூனரும் அவர் சீடர் ஆரியதேவரும்


ஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் மற்ற பகுதிகளான ஸ்ரீபாதம் மற்றும் மணிமுடி பற்றி அவர் இலக்கியரீதியிலான விமர்சனம் எதையும் முன்வைக்கவில்லை.

பெளத்தத்தின் பிரிவுகளான வைபாஷிகம் , மத்தியமிகம், யோகாசாரம் ஆகிய தரிசனங்கள் ஞான சபையில் விவாதிக்கப்படுகிறது.வைபாஷிக மரபினைச் சார்ந்த பிட்சு நாகநந்த மகாபாதர் வாதத்தின் முதல் கேள்வியாக “பவதத்தரே தங்கள் தருக்கத்தில் ஆத்மா பற்றிய கருத்து என்ன?” என்கிறார்.அதற்கு பவதத்தர் கீழ் வரும் பதிலை அளிக்கிறார்.

“அன்னமயகோசத்தின் உள்ளே பிராண , அசுத்த , சுத்த , ஆனந்த , சின்மய கோசாங்களைத் தாண்டி உட்சென்றால் தெரியும் சதானந்த கோசமே ஆத்மாவாகும்.அது தூய பிரகாசம் கொண்டது.புலன்களின்றியே தன்னை உணர்வது.எந்த வடிவில் பிரம்மம் உள்ளதோ அந்த வடிவமே அதற்கும்.பிரமாண்டத்தின் ஆத்மா பிரம்மம்.உடலின் பிரம்மமே ஆத்மா.அவை வேறு வேறு அல்ல.ஏழு உலகங்களும், ஏழு கோசங்களும் பிரம்மத்தையும் ஆத்மாவையும் பிரதிபலிக்கின்றன.அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் , ஆத்மாவுமே சத் என்று அறிவான்.ஆத்ம தரிசனம் பிரம்மதரிசனமேயாகும்.ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது.பனித்துளிகள் எல்லாமே சூரியனை பிரதிபலிக்கின்றன.ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பேயாகும்.” என்று பதில் அளிக்கிறார்.

இங்கே பவதத்தர் அளிக்கும் விளக்கும் ஆதி வேதாந்த தரிசனம்.பிற்கால வேதாந்தங்களான அத்வைதமும் இதே பார்வையை தான் முன்வைக்கிறது.பெளத்த வைபாஷிக பிரிவை சார்ந்த நாகநந்தரிடம் பவதத்தர் புலன்களின் தர்மத்தையும் மகாதர்மத்தையும் இணைத்து கேள்வி கேட்டு ஒரே தர்மம் ஏன் ஆசைகளையும் துக்கங்களையும் உருவாக்கவும்,அவற்றை அழிக்க காரணமாக அமையவும் வேண்டும் என்கிறார்.இதற்கான பதிலை சரியாக நாகநந்தரால் கூற முடியவில்லை.

கிருஷ்ணன் இங்கு சிறிய எழுத்து தர்மம் மகாதர்மம் ஆகியவற்றை பற்றிய விளக்கத்தை அளிக்கிறார்.பால் தர்மம்.தயிர் தர்மம்.பால் தயிராக மாறுவது மகாதர்மம்.பால்தான் தயிராக முடியும்.தண்ணீர் அல்ல.இந்த மகாதர்மம் என்பது இரு பொருட்களின் தர்மத்தையும் புறத்தையும் கொண்டு உருவாகும் நியதி.இதுவே மகாதர்மம்.பொருட்களின் உள்ளார்ந்த தர்மங்களும் புற உலகமும் முயங்கியே அடுத்த நிலை நிகழ்கிறது.நீர் வழி படூஉம் புனை போல என்ற புறநானூற்று பாடல் முன்வைக்கும் ஆஜிவிக தரிசனம் முழு நிர்னயவாதம்.ஆனால் பெளத்தம் முன்வைக்கும் மகாதர்மம் சார்புநிலை நிர்னயவாதம்.

இரண்டாவதாக நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தை முன்வைத்து சூனியவாதியான மகாநாமர் ஞான சபையில் விவாதம் செய்கிறார்.பவதத்தர் மனிதப் பிரக்ஞையை ஏற்கிறீர்களா என்று மகாநாமரை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.பருப்பிரபஞ்சம் பற்றியும் அதே கேள்வியை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.அப்படியென்றால் சூனியத்தை சூனியம் பார்க்கும் போது எப்படி பருப்பிரமை விளைந்தது என்று கேள்வி கேட்கிறார்.அதற்கு மகாநாமர் அறியமுடியாமையே இறுதி விடையாக இருக்க முடியும் என்கிறார்.அறியமுடியாமை என்பது கூற முடியாமை.நியாய மரபுப்படி விவாதத்தை விட்டு விலகிவிட்டீர்கள் என்று சொல்லி அவரை வாதத்தில் முறியடிக்கிறார்.

விவாதத்தின் தொடகத்தில் மகாநாமர் சூனியவாதம் பற்றி விளக்கம் அளிக்கிறார்.அறிபடு பொருள் , அறியும் பொருள், அறிவு ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவை என்கிறார்.மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது என்கிறார்.பின்னர் அவரே இம்மூன்றும் இல்லை என்கிறார்.எதுவுமே இல்லை என்கிறார்.முதல் விளக்கமும் அடுத்த விளக்கமும் முரணாக இருக்கிறது.அமைப்பியம் எதுவுமே அது அதன் சூழமைவால் தான் அர்த்தம் கொள்ளப்படுகிறது என்கிறது.அதாவது சாலையில் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு அது பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய பிறவற்றோடு இருக்கும் சூழமைவால் தான் வாகனத்தை நிறுத்தவேண்டும் என்ற அர்த்தம் கொள்கிறது.தனியாக சிவப்பு நிறத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை.அதற்காக அவை இல்லை என்று பொருள் கொள்ள இயலாது.இதுவே சூன்யவாதத்திற்கும் பொருந்தும்.தனியாக பொருட்கள் இல்லை.அல்லது தனியாக அவற்றை அர்த்தம் கொள்ள இயலாது.

பெளத்தம் பிரத்யட்சம் , அனுமானத்தை அறிதல் முறைகளாக கொள்கிறது.சுருதியை அது அறிதல்முறையாக கொள்ளவில்லை.அப்படியாக அது வேதத்தை நிராகரிக்கிறது.ஆன்மாயின்மை,நிலையின்மை,நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் வாழ்வின் மூன்று உண்மைத் தன்மைகள்.இந்த உலகில் தனித்த பேரிருப்பு என்று எதுவும் இல்லை.மகாதர்மம் தனித்த பேரிருப்பு அல்ல.அது எதையும் இயக்குவதில்லை.இயக்கத்தின் நியதியை சுட்டுவதற்கான தொகுப்பு பெயரே மகாதர்மம்.மகாதர்மம் பொருட்களின் இயங்குதளத்திலேயே வெளிப்படுகிறது.அதனால் மகாதர்மம் பிரம்மம் அல்ல.அது எதையும் உருவாக்கவில்லை.

மூன்றாவதாக பெளத்தத்தின் யோகாசார தரிசனத்தை சார்ந்த அஜிதன் ஞான சபை விவாதத்தில் தன் தரப்பை முன்வைக்கிறான்.வசுபந்தர் அசங்கர் ஆகிய ஞானிகளின் வழிவந்த திக்நாகரின் சீடன் அஜிதன்.திக்நாகர் முன்வைக்கும் யோகாசாரம் விஞ்ஞானவாதம் என்றும் சொல்லப்படுகிறது.சித்தம் மாத்திரம் உள்ளது என்னும் மெய்ஞான மரபு.அதாவது காட்சிப் பிரபஞ்சம் மனதால் மட்டுமே உருவாகுகிறது.இங்குள்ள அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டுமொத்த மனமே பிரபஞ்தத்தை உருவாக்குகிறது.அதையே ஆலய விஞ்ஞானம் என்று வசுபந்து நிலைநாட்டுகிறார் என்கிறான் அஜிதன்.புறப்பொருட்கள் கனம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது.மாறிக்கொண்டே இருக்கும் பொருளின் ஒரு சுட்டுப் பெயர் நாம் அந்த பொருளுக்கு வழங்குவது.எந்தப் பொருளும் அதன் நிறைவில் இல்லை.நிறைவில் இல்லாத பொருள் இல்லை என்றே கொள்ளப்படும்.ஆகையால் நாம் பொருளாக உணர்வது நம் மனத்தால் தான் என்கிறான் அஜிதன்.சூன்யவாதம் அறிபவன், அறிபடு பொருள், அறியும் பொருள் ஆகியவற்றின் சார்பு நிலையிலேயே நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொல்வதற்கு மாற்றாக யோகாசாரம் மனம் மட்டுமே உள்ளது மற்றவை இல்லை என்ற இடத்திற்கு நகர்கிறது.மேலும் அனைத்து மன விஞ்ஞானங்களும் இனைந்த ஒட்டுமொத்த மனமே ஆலய விஞ்ஞானம் என்றும் அந்த ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்து எழுந்தது என்றும் சொல்கிறான்.மேலும் காலமே மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என நம் கண்முன் எழுந்தருளுகிறது என்று கால தரிசன சூத்ரம் பற்றி சொல்கிறான்.இதில் காலத்தை நேர்கோடாக கொள்ளலாகாது என்றும் , அதை சூழற்சியாக கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான்.அஜிதன் வாதத்தில் வெற்றி பெறுகிறான்.விஷ்ணுபுரத்தின் ஞானாதிபதாயாக பதவி ஏற்கிறான் அஜிதன்.சந்திரகீர்த்தி நகரை ஆள்கிறான்.பெளத்த ஆட்சி அடுத்த இரு நூறு ஆண்டுகள் விஷ்ணுபுர நகரை ஆள்கிறது.

கிருஷ்ணன் தன் நூலில் பெரும்பாலும் நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தையும் விளக்கியும் விஞ்ஞானவாதத்தை மறுத்தும் தன் வாதத்தை முன்னெடுக்கிறார்.இந்த நூலில் அவர் இரண்டு விஷயங்களை செய்கிறார்.ஒன்று விஷ்ணுபுரம் நாவலில் மத்தியமிக தரிசனத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அதை விளக்கி அதுவே சரியான தரிசனம் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.மற்றது விஷ்ணுபுரம் நாவலில் வரும் அஜிதன் சொல்லும் விஞ்ஞானவாதத்தை மறுத்து அளிக்கும் விளக்கங்கள்.மறுபுறம் திக்நாகர் முன்வைக்கும் விஞ்ஞானவாதத்தையும் மறுக்கிறார்.அதாவது நாவலில் விஞ்ஞானவாதத்தை அஜிதன் முன்வைக்கும் போது செய்யும் வாதங்களில் உள்ள பிழைகளையும் சொல்கிறார்.அதே நேரத்தில் விஞ்ஞானவாதமும் பிழையான வாதம் என்கிறார்.

விஞ்ஞானவாதம் மனம் மட்டுமே உள்ளது என்கிறது.ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்த எழுந்த ஒன்று என்று அஜிதன் கூறுகிறான்.மகாதர்மம் தனித்த பேரிருப்பு என்கிறான்.காலம் மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என்கிறான்.இதற்கு கிருஷ்ணன் கீழ்க்கண்ட மறுப்புகளை சொல்கிறார்.

1. விஞ்ஞானம் எனும் கூட்டு ஏழு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.அவை:

அ  - ஐந்து அடிப்படைப் புலனுணர்வுகள்
ஆ - மன உணர்வுகள்(எண்ணங்களால் உருவானவை)
இ  - பகுத்து ஆராய்ந்தறியும் அறிவு,புத்தி(Intellectual discriminating consiousness)
ஈ   - எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.

இறுதியாக சொல்லப்பட்டுள்ள ஆலய விஞ்ஞானம் வெளியுணர்வுக்கு வராமல் உள்மன ஆழத்தில் உறைந்திருக்கும் வேட்கைகளும் மற்றும் குணங்களுமாகிய சக்திகளை அதாவது புருஷர் என்று கூறப்படுபவரின் சாரமாக இருக்கும் இந்த சக்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.ஒவ்வொரு உயிரையும் உந்தி இயக்கும் சக்திகளாகிய 
  • பவதண்ஹா(வாழவேண்டும், இப்பிடியாக வேண்டும், அப்படியாக வேண்டும் என்ற வேட்கை)
  • காமதண்ஹா(இன்ப வேட்கை)
  • விபவதண்ஹா(அழிவு வேட்கை) 
ஆகிய இச்சாசக்திகளின் மற்றும் குணங்களாகிய சக்திகளின் ஒரு கூட்டே இந்த ஆலய விஞ்ஞானம்.
2. காரணங்களையும் சூழ்நிலைகளையும் ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு தோன்றுகின்றது,மாறுகின்றது,மறைகின்றது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்புதான் தர்மம்.பிரபஞ்சத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் ருது நியமம்,பீஜா நியமம்,கம்ம நியமம்,சித்த நியமம் மற்றும் தம்ம நியமம் ஆகிய ஐந்து நியமத் தொகுதிகள் ஒன்றோடொன்று பின்னியிணைந்துள்ளது.இவ்வாறு இணைந்துள்ள தொகுதிகளில் அடங்கும் இயற்கை விதிகளின் சார்புடைமையையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கும் அடிப்படை விதிகளின் தொகுப்பே மகாதர்மம்.

3. மகாதர்மம் ஆலய விஞ்ஞானம் எப்படிப் பரிணமிக்கின்றது என்று அதன் பரிணாமப் படிமுறையை நிர்ணயிக்கிறது.அது ஆலய விஞ்ஞானத்தை உண்டாக்குவதில்லை.

4. அஜிதன் கூறும் காலச்சக்கர தரிசனம் பற்றி இந்த விளக்கத்தை அளிக்கிறார்.

  1. வண்டுதான் வட்டப்பாதையை இயக்குகின்றதே ஒழிய வட்டப்பாதை வண்டை இயக்குவதில்லை.தன்னிச்சையாகச் செயல்படும் வண்டு சில கட்டுப்பாடுகளுக்கும் நியதிகளுக்கும் ஆட்பட்டுள்ளது என்பது உண்மையே.ஆனால் அதைக்கொண்டு வட்டப்பாதை வண்டை இயக்குகின்றது என்று கூறுவது போலியான வாதம்.அது போலவே வாழ்க்கைச் சக்கரம் ஆலய விஞ்ஞானத்தை இயக்குவதில்லை என்பதும் , ஆலய விஞ்ஞானத்தை ஆக்கும் பேராசைகளும் , பற்றுகளும்தான் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றும் விசைகளாக இருக்கின்றன.ஆலய விஞ்ஞானத்தின் பரிணாமச் சுழற்சியே வாழ்க்கைச் சக்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது. 
  2. காலம் நீண்டுகொண்டுதான் போகிறது.சுழல்வதில்லை.சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தம் மையக்கோட்டையும் சுற்றிச் சுழல்கின்றன.ஆகையால் , பகலும் இரவும் மாறிமாறி உண்டாகின்றன.பகல் இரவாகிறது.இரவு பகலாகிறது.பிறப்பு,இறப்பு,மறுபிறப்பு,மறுஇறப்பு என்று வாழ்க்கைச் சக்கரமே சுழன்று கொண்டேயிக்கின்றது.வாழ்க்கைச் சக்கரமே காலச்சக்கரமாகவும் உருவகிக்கப்படுகின்றது என்பது பொருத்தமாக இருக்கும்.
  3. வஜ்ஜிரயான பெளத்தம் கூறும் காலச்சக்கர தரிசனத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் அது புற உலகையும் அக உலகையும் ஆராய்ந்து பார்த்து இயக்கத்தில் இரண்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைக் காட்டுகின்றது.அண்டத்தின் உருவாகவே பிண்டமும் இருக்கின்றது.பிரபஞ்சங்களும் சூரிய குடும்பங்களும் ஏன் விண்வெளியில் சுழலும் அனைத்துமே , பிறப்பு , வளர்ச்சி, தேய்வு , மரணம் என்று தொடர்ந்து நிகழ்கின்ற வட்டச் சுழற்சிகளுக்கு ஆட்பட்டவைதான்.கோள்களின் சுழற்சிகளை ஆராய்ந்து பார்த்து அவற்றின் அடிப்படையில் நாட்களையும் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பதற்கு காலச்சக்கர தரிசனம் ஒரு தனிச்சிறப்பான முறையை வகுத்து வழங்கியுள்ளது.
  4. காலத்தையும் வஜ்ஜிராயன பெளத்தம் ஒரு தெய்வமாக உருவகித்து வழிபடுகின்றது.ஆனால் இதிலிருந்து வஜ்ஜிராயன பெளத்தம் காலத்தை ஒரு ஆதிமாகசக்தியாக , தனிப்பெரும் பொருளாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூற முடியாது.
அஜிதன் மனம் மட்டுமே உள்ளது என்கிறான்.பவதத்தர் உள்ளது சத் மற்றதெல்லாம் அசத் என்கிறார்.இரண்டுமே புற உலகை இல்லை அல்லது மாயை என்று ஏற்கிறது.வசுபந்தர் அசங்கர் வழி திக்நாகர் உருவாக்கிய யோகாசாரம் என்ற தரிசனம் விஞ்ஞானவாதத்தை முன்வைத்தது.பின்னர் கெளடபாதர் யோகாசாரம் சார்ந்து தன் தத்துவத்தை உருவாக்குகிறார்.அவரின் வழி வரும் சீடரான ஆதிசங்கரர் அத்வைத்தை முன்வைக்கிறார்.இருப்பது பிரம்மம் மட்டுமே மற்றதனைத்தும் மாயை என்று சொல்கிறார்.பவதத்தர் ஆதிசங்கரர் சொல்வதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார்.அஜிதனும் அதையே தான் மனம் என்று சொல்கிறான்.அப்படியென்றால் அத்வைத தரிசனமே பல்வேறு வடிவங்களில் பெளத்தமாகவும் வேறு பல தரிசனங்களாவும் இங்கு ஞானத்தளத்தில் இருக்கிறது என்ற பார்வையை ஜெயமோகன் உருவாக்குகிறாரா என்று கிருஷ்ணன் கேள்வி எழுப்புகிறார்.அப்படியென்றால் இரண்டு தரிசனங்களுக்குமான வித்யாசம் வெறும் சொற்பிரயோகங்கள் சார்ந்த்து மட்டும்தானா.அந்த சொற்கறால் நிகழும் தர்க்கரீதியான போர் மட்டுமே இந்த விவாதங்கள் , மற்றபடி எல்லாம் ஒன்றுதான் என்ற பார்வையைத்தான் விஷ்ணுபுரத்தின் கெளஸ்துபம் பகுதி முன்வைக்கிறதா என்று கிருஷ்ணன் வினவுகிறார்.

ஆதிசங்கரர்

பெளத்ததில் பல்வேறு தரிசனங்கள் இருக்கும் போது ஏன் அத்வைத்தத்தின் முந்தைய வடிவமாக கருதப்படும் யோகாசாரம் விஷ்ணுபுரத்தில் ஞானசபையில் வெற்றி பெறும் தத்துவமாக புனையப்பட்டுள்ளது என்ற கேள்வி சரியான கேள்விதான்.அது மத்தியமிகமாகவோ அல்லது வைபாஷிகமாக இருந்திருக்கலாம்.ஆனால் இந்த யோகாசாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் அது அத்வைதத்தின் முந்தைய வடிவம் என்பதால் தானா என்பதே ஓட்டுமொத்தமாக கிருஷ்ணனின் புத்தகத்தில் எழுப்பப்படும் கேள்வி.தெரியவில்லை.

ஆனால் மணிமுடி பகுதியில் விஷ்ணுபுரம் நகரின் செம்பர் குல மூப்பன் விஷ்ணுவாக வீற்றிருப்பது செம்பர் குலத்தில் நீலமூப்பன்தான் என்கிறார்.தொடர்ந்து மூப்பன் செம்பர் குல மரபின் தொன்மத்தை விளக்குகிறார்.இதற்கும் ஆதி வேதாந்தந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.அது மூத்தார் வழிபாடு.அந்த செம்பர் குல மூப்பன் சொல்வது போலத்தான் நாவல் முடிவடைகிறது.பிரளயம் வருகிறது.நான்கு பக்கமும் இதழ்கள் விரிய அதிபிரமாண்டமான ஒரு தாமரை மலர் அதன் நடுவே கரிய பீடத்தில் வேததத்தன் அமர்ந்திருக்க , வேதத்தனை தாமரை இதழ்கள் பொதிந்து மூடிக்கொள்கிறது.இவற்றை படிக்கும் போது விஷ்ணுபுரம் நாவல் எந்த தரப்பையும் முன்வைக்கவில்லை என்று சொல்ல முடியும்.பழங்குடி செம்பர் சமூகம் , அவர்களின் தொன்மம், அதன் வழி உருவாகும் சடங்குகள், அந்த ஊர்களை பேரரசுகள் கைப்பற்றுவது, அப்போது பழங்குடிகள் ஊரை விட்டு வெளியேறுவது, அவர்களின் தெய்வங்கள் பேரரசின் தெய்வமாக மாறுவது , அந்த தொன்மம் ஒரு தரிசனமாக மாறுவது என்று இது ஒரு வரலாற்று பார்வையையும் முன்வைக்கிறது.மேலும் விஷ்ணுபுரம் நாவலில் வரும் சங்கர்ஷணனின் மகாபத்மபுராணம் இந்த விஷ்ணுபுரம் நாவலையே போலச்செய்து காட்டுகிறது.அது ஒரு காவியம்.விஷ்ணுபுரமும் ஒரு காவியமாக முன்வைக்கப்படுகிறது.இதில் எந்த தரப்பையும் தனித்தரப்பாக கொள்ள முடியாது.வைணவத்தில் பெரும் தொன்மமாக இருக்கும் நம்மாழ்வார் ஸ்ரீபாத பகுதியில் பயங்கரமாக பகடி செய்யப்படுகிறார்.பவதத்தரின் மகனான விஷ்ணுதத்தன் பின்னர் சித்தனாகிறான்.அவன் எல்லா தரிசனங்களும் உண்மையே.ஆனால் தர்க்கத்தளத்தில் அது வெறும் சொற்போராக மட்டுமே இருக்கும் என்கிறான்.ஏனேனில் அந்த தரிசனங்களை ஒரு எல்லை வரை மட்டுமே மொழியால் விளக்க முடியும் என்று காசியபனுக்கு சொல்கிறான்.

இருந்தபோதும் கெளஸ்துபம் பகுதியில் அநேகமாக வெற்றிபெறுவதும் ஒன்றுதான் தோல்வியடைவதும் ஒன்றுதான் என்ற பார்வை ஏன் வைக்கப்படுகிறது, ஏன் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் வேறு வேறாக இருக்கக்கூடாது என்ற கேள்வி முக்கியமானதுதான்.ஆதி வேதாந்தமும் பெளத்தமும் ஒன்று தான் என்ற பார்வை இங்கே முன்வைக்கப்படுகிறது.இது அவசியமற்றது.பெளத்தம் வேறு ஆதி வேதாந்தம் வேறு.பெளத்தமும் மத்தியமிகமும் தன் பார்வையை வேதாந்தம் வழி பெறவில்லை.வேதங்களை அவை அறிதல் முறையாக ஏற்கவில்லை.இது பல தளங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை காணமுடிகிறது.

இந்த நாவல் வரும் காலம் ஐந்தாம் நூற்றாண்டிலருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரையானதாக இருக்கலாம் என்கிறார் கிருஷ்ணன்.பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை விஷ்ணுபுரம் நாவலை வாசித்தேன்.அப்போது மணிமுடி பகுதியில் ஸ்ரீபாத பகுதியில் வருபவர்கள் ஐதீகங்களாக தொன்மங்களாக கதைகளாக தரிசனங்களாக மாறிவிடுவார்கள்.எனக்கு அது மட்டும் ஈர்த்தது.ஆனால் கிருஷ்ணனின் இந்த நூலை வாசிப்பதற்காக விஷ்ணுபுரத்தை மீள்வாசிப்பு செய்த போது இந்த நாவலின் கட்டமைப்பு, சொற் வளம்,அதன் கனவுத்தன்மை அனைத்தும் மிகவும் ஈர்ப்பத்தாக இருந்தது.ஜெயமோகனுக்கு யானைகளை பற்றி சொல்லி மாளவில்லை.ஸ்ரீபாத பகுதியில் வீரன் என்ற யானை பற்றியும் , இரண்டாம் பகுதியில் அங்காரகன் என்ற யானை பற்றியும் அத்தனை விரிவாக எழுதுகிறார்.ஒரு குழுந்தையின் குதூகுலத்துடன் யானைகளை கண்டு ரசித்தியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.அதை எழுதி எழுதித்தான் தீர்க்க முடியும்.எழுதினாலும் தீராது போலும்.இரண்டாம் பாகத்தில் பிராமணர்கள் உணவு உண்ணும் பகுதி நாவலின் மிகச்சிறந்த புனைவுப் பகுதி.நாவலில் தொடர்ந்து ஜெயமோகன் வைதீக மரபு சாதி அடிப்படையில் தண்டனைகளை வழங்கிய விதம்,சூர்யதத்தரின் கொடுங்கோல் ஆட்சி,லெளகீகத்தளத்திற்கு வெளியே எதும் அறியாத பிரமாணர்களின் அக்கறையின்மை என்று தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.சந்திரகீர்த்தியின் பெளத்த ஆட்சி காலத்தில் அத்தனை ஆயிரம் இரவலர்கள் உணவு அருந்த வரும் காட்சியை பார்க்கும் நரோபா இந்த நகரத்தில் இத்தனை இரவலர்களாக என்று வியக்கிறான்.இவர்களுக்கு பெளத்த ஆட்சியில் தான் நகருக்குள் வந்து அண்ணவிகாரத்தில் உணவு அருந்த உரிமை வந்தது என்றும் அதற்கு முன்னர் ஆயிரம் வருடங்களாக மகாமுற்றங்களில் இந்த மக்களுக்கு அனுமதி இருந்ததில்லை என்பதும் சொல்லப்படுகிறது.

திருவடி, பிங்கலன் வழி காமம் மனிதனின் ஆதார விசை என்ற பார்வை நாவலில் வருகிறது.திருவடி லலிதாங்கி என்ற இளம் தாசிப்பெண்னை அத்தனை நெருக்கமாக பார்க்கிறான்.அவளின் முழுங்கையில் மெல்லிய மயிர்கள் இருப்பதைக் காண்கிறான்.வீரன் என்ற யானை மதம் கொண்டு தெருவில் அலைவதால் அங்கே பெருங்குழப்பம் ஏற்படுகிறது.மக்கள் கூட்டம் சிதறிச்செல்கிறது.அந்தக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ளும் லலிதாங்கியை பத்திரமாக அவள் இல்லம் சென்று சேர்க்கிறான் திருவடி.பின்னர் அவன் ஒரு போதும் சமநிலைக்கு திரும்புவதில்லை.அவன் தினமும் அவள் இல்லம் இருக்கும் கணியைகர் தெருக்கு சென்று அங்கு நின்று பாடித்திரும்புகிறான்.அவன் தன் பாடல்களில் பரிபூரண சுய அழிப்பை அடைகிறான்.அது ஒரு உன்மத்த உளறல் என்று மணிமுடி பகுதியில் மாதவன் எண்ணிக்கொள்கிறான்.அவன் திருவடி ஆழ்வார் ஆகிறான்.சாதி கடந்த திருமணங்களை செய்து வைக்கிறான்.லலிதாங்கி திருவடிக்கு ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் இசையின் வழி பாடல்களின் வழி அங்கிருந்து வெகுதூரம் மானுடம் தழுவும் தரிசனம் நோக்கி செல்கிறான்.ஒரு ஆதித்துயர்.ஆனால் அதன் ஆதார விசை காமம்.இது பிங்கலன் விஷயத்திலும் நிகழ்கிறது.அவன் லட்சுமி என்ற சங்கர்ஷணனின் மனைவியுடன் கொள்ளும் உறவின் வழி தன் தரிசனத்தை அடைகிறான்.அதை யோக சக்கரமாக வளர்தெடுத்து யோனியை அதன் மையமாக உருவகிக்கிறான்.மற்றவை அனைத்தும் ஸ்திரீலிங்கமாகவும் புருஷலிங்கமாவும் உருவகிக்கிறான்.ஆனால் பின்னர் வஜ்ராயன பெளத்தத்தில் ஒரு கூறாக இணைக்கப்பட்ட யோகசக்கரத்தில் நிகழ்ந்த திரிபுகளும் இழிவான பயிற்சிகளுமே ஒருவகையில் இந்தியாவில் பெளத்தத்தின் சீர்கேட்டிற்கும் அவப்பெயருக்கும் இறுதியில் அதன் வீழ்ச்சிக்கும் மறைவுக்கும் காரணங்களாயின என்கிறார் கிருஷ்ணன்.

எனக்கு இந்த நாவலையும் கிருஷ்ணனின் விமர்சன நூலையும் வாசிக்கும் போது ஒரு விஷயம் முக்கியமாக பட்டது.சுயம் சுயமின்மை.அத்வைதம் ஆன்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பு என்கிறது.ஆன்மா அழிவற்றது என்கிறது.பிரம்மம் X பிரபஞ்ச மாயை என்ற இரு நிலைகளை போல அழிவற்ற ஆன்மா X அழிந்துபோகும் உடல் என்ற இருநிலைகளும் அதில் இருக்கிறது.அழிந்துபோகும் உடல் இழிவானது , அதனால் உடல் உழைப்பு கீழானது , உடல் உழைப்பாளிகள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இதிலிருந்து வந்திருக்கலாம்.மேலும் நானே சச்சிதானந்த சொரூபம் என்பதில் நான் என்ற சுயம் மேலெழுகிறது.அதுவே தன்னை,தன் மொழியை , தன் இனத்தை , தன் சேத்தை , தன்னலத்தை முன்வைக்கும் வாதங்களை தர்க்க ரீதியாக முன்னெடுத்து செல்ல வழி செய்கிறது.மனம் மட்டுமே உள்ளது என்ற விஞ்ஞானவாதமும் பொருள் மட்டுமே உள்ளது என்ற லோகயதமும் இரு எல்லைகள்.தனித்த சுயம் இல்லை.எல்லாம் சார்பு நிலைகளில் இயங்குகின்றன என்ற நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனம் சுயத்தை மறுக்கவுமில்லை, சுயத்தை கொண்டாடவுமில்லை.சார்புநிலையில் இருக்கும் போது அனைத்தும் ஒரே முக்கியத்துவம் கொள்கிறது.தனிமனிதன் , ஆன்மா போன்றவைக்கு எதிரானது சார்புநிலைத் தத்துவம்.ஆலய விஞ்ஞானத்தை கார்ல் யுங் சொல்லும் கூட்டு நனவிலியோடு இணைத்து பார்த்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் எதுவுமே தனித்த முழுமுதல் பேரிருப்புகள் என்பதை மத்தியமிக மார்க்கம் நிராகரிக்கிறது.அது சரியென்றே படுகிறது.மேலும் அமைப்பியம் போன்ற கோட்பாடுகளுடன் சார்புநிலை தத்துவத்தை இணைத்து புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில் கல்யாணராமன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.இந்த நூலின் ஒரே குறை இந்த அணிந்துரைதான்.கல்யாணராமன்தான் பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் கவிதைகள் குறைபாடுகளுடன் இருக்கிறது என்று பதறி காலச்சுவடில் கட்டுரை எழுதியவர்.இந்த அணிந்துரையிலும் நிறைய பதறியிருக்கிறார்.அவருக்கு இலக்கியமும் தெரியவில்லை , தத்துவமும் தெரியவில்லை.எல்லாவற்றிலும் எப்போதும் அவரால் சதியை கண்டுபிடிக்கமுடிகிறது.ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்களை சென்னை திருமங்கலத்தின் ஜங்ஷன் அருகே இருக்கும் அவருடைய அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்து பேசினேன்.அப்போது ஜெயமோகனை பலரும் இந்துத்தவர் என்கிறார்களே , இந்த நூலை வாசித்ததன் வழியாக உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறதா என்று கேட்டேன்.இந்த நூல் வழி அப்படி ஒரு எண்ணம் ஏற்படவில்லை என்று சொன்னார்.நிச்சயம் தமிழில் எழுதப்பட்டுள்ள மகத்தான நாவல்களில் ஒன்று விஷ்ணுபுரம்.ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூல் எழுத என்ன காரணம் இருந்ததோ அதே காரணங்கள் கிருஷ்ணனின் நூலுக்கும் பொருந்தும்.ஜெயமோகன் தன் முன்னுரையில் இத்தகைய படைப்புக்கு அவசியமான விரிவான விமரிசன உரையாடல் நடைபெறவில்லை என்ற படுகிறது என்கிறார்.மேலும் நமது காவிய , சிற்ப மரபுடன் இப்படைப்புக்கு உள்ள உறவும், இந்திய சிந்தனை மரபும் , தமிழக வரலாறும் இதில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ள முறையும் விமரிசனம் பரிமாற்றம் மூலம் தெளிவடையக் கூடியவை என்கிறார்.அத்தகைய ஒரு விமரிசன நூல்தான் கிருஷ்ணனின் இந்த ஆக்கம்.

நூல்கள்
1. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா வெளியீடு – (இப்போது வேறு பதிப்பகங்கள் வழி வெளியாகிறது என்று நினைக்கிறேன்)
2. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் பெளத்தக் கருத்துக்கள் – ஓ.ரா.ந.கிருஷ்ணன் – மெத்தா பதிப்பகம்.

புகைப்படங்கள்

1.நாகார்ஜூனரும் ஆரியதேவரும் - https://commons.wikimedia.org/w/index.php?curid=21908468
2.ஆதிசங்கரர் - https://commons.wikimedia.org/w/index.php?curid=186869


இருத்தலே சாராம்சம்



நிர்ணயம் - Photo by Antoine Beauvillain on Unsplash



உங்களை ஒருவன் கன்னத்தில் அறைந்துவிடுகிறான்.நீங்கள் அவனை திரும்ப கன்னத்தில் அறைந்துவிடுகிறீர்கள்.கணக்கு தீர்ந்துவிடுகிறது.உங்களுக்கு ஒருவன் துரோகம் இழைத்துவிடுகிறான்.நீங்கள் அவனை பழிக்குப்பழி வாங்க முற்படுகிறீர்கள்.கோபத்தில் உங்கள் கன்னம் சிவக்கிறது.கண்கள் துடிக்கிறது.இரவு படுத்தால் தூங்க முடியவில்லை.எந்த வேலையை செய்தாலும் அந்த துரோகம் உங்களை தொந்தரவு செய்கிறது.நீங்கள் அவனை செருப்பால் அடிக்கிறீர்கள்.அவன் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள்.அன்றிரவு நீங்கள் நன்றாக தூங்க முடியும்.ஆனால் அவன் ஏன் துரோகம் செய்தான், அவனுக்கு என்ன அவசியம், அவன் ஏன் என்னை தேர்வு செய்தான், அவன் தரப்பின் நியாயம் என்ன என்று சிந்திக்கும் போது உங்களது வன்மம் ஒரு பக்கம் அவனது தரப்பு மறுபக்கம் என்ற தொடர் உரையாடல் உங்களை சுழற்றியடிக்கும்.நீங்கள் இன்னும் உக்கிரமான மன அழுத்தத்தை அடைவீர்கள்.உங்களால் மன்னிக்கவும் இயலாது, பழிவாங்கவும் முடியாது.ஒரு வகை செயலின்மை தளத்தை சென்று சேர்வீர்கள்.ஒரு தூய உயிரியல் பிண்டம் திருப்பித் தாக்கும் , துரோகத்திற்கு பழிவாங்கும். ஆனால் அதீத பிரக்ஞை கொண்டவன் செயலின்மை தளத்தையை அடைகிறான். அப்படியான அதீத பிரக்ஞையால் துன்பப்படுவனின் குறிப்புகள் தான் நிலவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள்1.தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் இந்த நிலவறையாளனின் தொடர்ச்சி இருக்கிறது.அலெக்ஸி (சூதாடி) , ரஸ்கோல்நிகோவ் (குற்றமும் தண்டனையும் ) , நிகோலய் (பீடிக்கப்பட்டவர்கள்) , அர்காடி (பதின்) , இவான் ( கரமசோவ் சகோதரர்கள்) ஆகிய கதாபாத்திரங்கள் நிலவறையாளனின் சகோதரர்கள்.ரஸ்கோல்நிகோவ் நிலவறையாளன் போலவே வாழ்கிறான்.அலெக்ஸி போலவே நிலைவறையாளனும் எழுதக்கூடியவன்.இருவரும் தொழில் முறை எழுத்தாளர்கள் அல்ல.வேறு வழியில்லாமல் எழுதுபவர்கள்.அவர்கள் எழுதுபவை ஒரு வகை குறிப்புகள்.

கட்டற்ற சுதந்திர விருப்புறுதிக்கு எதிராக தத்துவத்தில் சொல்லப்படுவது நியதி.ஒர் ஆணின் உடல் தசைகள் இறுக்கமாக இருக்கும்.அவன் பொதுவில் பலரின் முன் தன் உணர்வுகளை காண்பிக்க மாட்டான்.தனக்கான வெளியை உருவாக்குவதே ஒர் ஆணுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.அதுவே அவனது அகங்காரத்தை நிறைவு செய்கிறது.இப்படி ஆணுக்கான சாராம்சங்கள் நிர்யணம் பெறுகிறது.இது போல பெண் குறித்து , குடும்பம் குறித்து , அரசாங்கம் குறித்து நாம் சில சாராம்சங்களை நிர்ணயக்கிறோம். உதாரணமாக மார்க்ஸ் நிலவுடைமை சமூகம் முதிர்ந்து முதலாளித்துவம் தோன்றும்.முதலாளித்துவத்தில் தொழிலாளி X முதலாளி என்ற இரண்டு வர்க்கங்கள் மட்டுமே இருக்கும்.தொழிலாளர்கள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்கள்.பாட்டாளி சர்வாதிகாரம் உருவாகும்.பின்னர் ஒடுக்கப்படுபவன் , ஒடுக்கப்படுவர்கள் என்ற பாகுபாடு அற்ற ஆன்மிக சமூகம் மேலெழும் என்று எண்ணினார்.இந்த நிலவறையாளன் இந்தக் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் தான் மார்கஸ் தனது இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எழுதிக்கொண்டிருந்தார்.மார்கஸ் மனிதனின் மகிழ்ச்சி வருங்காலத்தில் இருக்கிறது என்று கூறினார்.இதுவரை இருந்த காலங்களில் எப்போதும் மனிதன் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்பதிலிருந்து தான் இடதுசாரி இயக்கமே தோன்றுகிறது.ஆசிய உற்பத்தி முறை பற்றி அவர் அறியும் போது அவர் அதை தன்னளவில் தொகுத்துக் கொள்கிறார்.அதை வரலாற்று பொருள்முதல்வாதத்தில் ஒரு இடத்தில் வைக்கிறார்.ஆனால் அது அடுத்த பொருள் உற்பத்தி நிலையை நோக்கி நகரும் என்கிறார்.ஏனேனில் அவரின் இஷ்டலோகம் ஆசிய உற்பத்தி முறையில் இல்லை, அல்லது அதில் செய்யப்படும் சிறு சிறு மாற்றங்களில் இல்லை.அது சோஷியலிச சமூகத்தின் முதிர்வில் மட்டுமே இருக்கிறது.ஆகையால் ஆசிய உற்பத்தி சமூகமும் அங்கு வந்து சேர்தாக வேண்டும்.பின்னர் சுரண்டலற்ற சமூகம் சாத்தியப்படும்.இங்கே ஒரு நிர்ணயம் உருவாக்கப்படுகிறது.இந்த நிர்ணயம் நிகழ்ந்தாக வேண்டும்.அதை செய்ய லெனினும் , ஸ்டாலினும் , மாவோவும் முயன்றார்கள்.பின்னர் தோற்றார்கள்.கடவுள் பலி கேட்பது போல எதிர்கால நிர்ணயங்கள் அதற்கான மனிதபலியை பெற்றுக்கொள்கிறது.

நிர்ணயங்கள் கற்பனாவாத்திலிருந்து துவங்குகிறது.அந்திப் பொழுதில் காதலர்கள் தங்களுக்குள் கொஞ்சி குழாவி திளைத்திருக்க, குழந்தைகள் கடலில் கால் நனைத்து ஆர்ப்பரித்து மணலில் விழுந்து புரள ,இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ,யுவதிகள் கூடி ரகசியம் பேச , குடும்பத்தினர் அமர்ந்து அந்தியை சுகிக்க, சூரியன் மறைந்து கொண்டிருக்கும் அந்தக் அந்திக் கற்பனாவாதக் காட்சி மகிழ்ச்சியை முன்வைக்கிறது.ஆனால் அந்த மகிழ்ச்சி அந்த சமூக கட்டமைப்பில் ஒரு பகுதி மட்டுமே.அங்கு அரசு, காவல்துறை, சிறைச்சாலை , மனநல மருத்துவமனை எல்லாம் பக்கத்தில் இருக்கிறது.அது அந்த அந்திக் காட்சியில் மட்டும் இல்லை.காட்சிக்கு வெளியே அதே கடற்கரையில் விபச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது.போதை மருந்து விற்பனை ஆகிறது.அதை ஒரு வகையில் அனுமதித்து ஒரு வகையில் தண்டிக்கிறது அரசு.ஆனால் இந்த கற்பனாவாதக் காட்சி லட்சியவாதம் நோக்கி நம்மை அழைத்து செல்கிறது.லட்சியவாதம் நிர்ணயவாதத்தை முன்வைக்கிறது.இங்கே மகிழ்ச்சி என்பது காதலர்களும் , குழந்தைகளும் ,இளைஞர்களும், பெண்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த அந்திக் காட்சி.அந்தக் காட்சியில் சுரண்டல் இல்லை.அதுவே மகிழ்ச்சிக்கான திறவுகோல்.இப்போது இந்த மொத்த சமூகமும் அதை நோக்கி பயணப்பட வேண்டும்.ஏனேனில் அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது.இப்போது அப்படியான ஒரு நிர்ணயத்தை முன் வைக்கும் சமூக அமைப்பின் கருத்தியலை ஏற்காதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.அவர்கள் மனித சமூகத்தின் மகிழ்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லி அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்.இப்போது சமூகம் தூய்மை அடைகிறது.இப்போது அந்தியில் மொத்த சமூகமும் கடற்கரையில் அமர வேண்டும்.எல்லோரும் இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூவ வேண்டும்.ஒரு அதிகாரி வந்து எல்லோரும் கூவுகிறார்களா என்று கண்கானிப்பார்.கூவாதவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

உங்கள் காலைத் தொழுகை முடிந்து விட்டதா.
அவ்வளவுதான் உங்கள் காலை உணவு
ஊர் சுற்றாமல் ஒழுங்காய் போய்த் தூங்குங்கள் 

என்கிறார் ஆத்மாநாம்.

தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறையாளன் இந்த மகிழ்ச்சி நோக்கிய நிர்ணயங்களையும் இந்த நிர்ணயங்கள் உருவாக காரணமாக இருந்த கற்பனாவாதத்தையும் கேள்வி கேட்கிறான்.இந்த நிர்ணயவாதத்திற்கு எதிராக இருத்திலியத்தில் முன்வைக்கப்படும் முக்கியமான கோட்பாடு சுதந்திர விருப்புறுதி.இரண்டும் இரண்டும் நான்கு போலத்தான் மனிதன் நடந்து கொள்வான் என்று விஞ்ஞானம் தொடரந்து தன் கோட்பாடுகளை முன்வைத்து வருகிறது.இன்று தரவுகள் சூழ் உலகில் இதுவரையான தனிமனிதனின் தரவுகளின் அடிப்படையில் அவன் அறியப்படுகிறான்.அவன் எதை வாங்குவான் , அவனுக்கு எதை கொடுக்கலாம் என்று தீர்மானிக்கிறது அரசும் , நவீன முதலாளித்துவமும்.அவனை ஒரு அட்டவனையில் பொருத்துகிறது.அவன் அந்த அட்டவனையில் ஒரு எண் மட்டுமே.மற்றவையுடன் கூட்டி பெருக்கி வகுத்து குறைத்து அவன் அடுத்து என்ன செய்வான் என்பதை நிர்ணயிக்க முடியும்.ஆனால் நிலவறையாளன் நீங்கள் எவ்வளவு தான் ஒரு மனிதனை அட்டவனைக்குள் பொருந்த முற்பட்டாலும் அவன் அதை திமிறிக்கொண்டு வெளியில் வந்தே தீருவான் என்கிறான்.அவன் திமிருவான் என்பதும் உங்கள் அட்டவனையில் இருக்கும் என்றால் அவன் மனப்பிறழ்வு அடைந்துவிடுவான்.அப்படியாக உங்கள் அட்டவனையிலிருந்து அவன் தப்பித்து விடுவான்.மனிதனுக்கு மகிழ்ச்சி தேவையில்லை.மனிதனுக்கு சூரியன் ஏன் கிழக்கில் தோன்றுகிறது என்பதற்கான தர்க்கம் கூட தேவையில்லை.அவனுக்கு தொடர்ந்து பயணப்பதற்கான சாலை மட்டுமே தேவை.இலக்கு கூட வெறும் இலக்கிற்காக மட்டுமே.மனிதன் அந்த இலக்கை நோக்கி பயணிப்பான்.ஆனால் இலக்கை அடைந்துவிடுவோம் என்று தோன்றினால் அந்த பயணத்தை தொடர இலக்கை மாற்றுவான் , அல்லது பிறழ்வான்.அந்த தேவையும் அதை உருவாக்குவதற்கான சுதந்திர விருப்புறுதியும்தான் மனிதனின் ஆதார ஏக்கம் என்கிறான் நிலவறையாளன்.


சுதந்திர இச்சை - Photo by Shane Rounce on Unsplash

மகிழ்ச்சியின் பொருட்டு மனிதர்களை ஒரு வழிப்படுத்தி அதை நோக்கி அவர்களை பயணிக்க வைக்க முடியும் என்பதை நிலவறையான் மறுக்கிறான்.மனிதன் தனக்கு தீங்கு அளிக்கும் விஷயங்களை தவிர்த்து பயணிப்பான் என்றாலும் அவன் தன்னை முழுக்க சிதைக்கக்கூடிய செயலையும் செய்வான்.அவனது சுதந்திர விருப்புறுதியின் தேவையும் ஏக்கமுமே அவனை இயக்குகிறது.அதனால் உங்கள் மகிழ்ச்சி நோக்கிய பயணத்தின் பேரூரையை சற்று நிறுத்தி வையுங்கள் என்கிறான்.மனிதன் அடிப்படையில் பிறழ்வானவன்.அதனால் கருத்தியல் கொண்டு எழுப்பப்படும் மாளிகைகள் உண்மையில் சலிப்பை உருவாக்குகிறது என்கிறான் இந்த எதிர்நாயகன்.

நாவலின் இரண்டாம் பகுதியில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வேலையில் இருந்த போது நடந்த சில சம்பவங்களை பற்றிச் சொல்கிறான் நிலவறையாளன்.அவன் அப்போலன் என்ற முதிய வயது வேலையாளுடன் ஒரு குடியிருப்பில் வாழ்கிறான்.அவனுக்கு நண்பர்கள் இல்லை.அவன் யாருடனும் பழகுவதில்லை.அவன் புத்தகங்கள் வாசிக்கிறான்.கனவு காண்கிறான்.விலைமாதுக்களிடம் செல்கிறான்.அவனது பால்ய காலம் மகிழ்ச்சி அற்றது.பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தன்னுடன் படித்த பள்ளித் தோழர்கள் இருந்தாலும் அவன் யாருடனும் தொடர்பில் இல்லை. அலுவலர் ஒருவர் சாலையில் அவனை நேருக்கு நேராக கடக்கும் போது அவனை பொருட்படுத்தாமல் செல்கிறார்.எப்போதும் இவன் தான் ஒதுங்கி செல்ல வேண்டியிருக்கிறது.தன் இருப்பு முற்றிலுமாக பொருட்படுத்தாமல் ஆக்கப்படுவதை சகித்துக்கொள்ள இயலாமல் ஒரு நாள் அந்த அலுவலர் நேருக்கு நேர் வரும் போது ஒதுங்காமல் செல்கிறான்.இருவரும் தோளோடு தோள் உரசிக் கொள்கிறார்கள்.இப்போதும் அந்த அலுவலர் ஒதுங்கிச் செல்லவில்லை.ஆனால் தன் இருப்பு பொருட்படுத்தப்பட்டு விட்டது என்று அவன் உவகை கொள்கிறான். .யாரையும் சந்திக்காமல் இருக்கும் தனிமையிலிருந்து விடுபட வெளியே செல்ல முடிவெடுக்கிறான்.பள்ளித் தோழர்கள் அவனை பொருட்படுத்தவில்லை.ஆனால் அவர்களை சென்று சந்திக்கிறான்.அவர்கள் ஒரு விருந்துக்கு செல்ல முடிவு செய்கிறார்கள்.இவனை அவர்கள் அழைக்கவில்லை.அவனாக தானும் கலந்து கொள்ள விரும்புவதாக கெஞ்சுகிறான்.விருந்தில் அவனாக சென்று கலந்தும் கொள்கிறான்.அங்கு அவன் பிறரை அவமானப்படுத்துகிறான்.அவர்கள் பதிலுக்கு அவனை அவமானப்படுத்துவதில்லை.மாறாக அவனை யாரும் கண்டு கொள்ளமால் விட்டுவிடுகிறார்கள்.அவர்கள் கிளம்பிச் சென்றபின் அவர்களை துரத்திக்கொண்டு விலைமகளிர் விடுதிக்கு செல்கிறான்.அங்கு அவர்கள் இல்லை.சென்றுவிடுகிறார்கள்.லிசா என்ற விலைமாதுவை எதிர்கொள்கிறான்.தான் பள்ளித் தோழர்கள் மத்தியில் அடைந்த அவமானத்தை போக்க லிசாவை அவமானப்படுத்துகிறான்.அவளின் இப்போதைய நிலை எத்தனை கீழ்மையானது என்பதை அவளுக்கு உணர்த்துகிறான்.இதிலிருந்து அவள் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்கிறான்.தனது அதிகாரத்தை அவள் மீது செலுத்துகிறான்.அவளின் ரட்சகனாக தன்னை காண்பித்துக்கொள்கிறான்.பின்னர் அவனது சொற்களை ஏற்று அவனை சந்திக்க வருபவளை ஐந்து ரூபள்கள் கொடுத்து அவமானப்படுத்தி அனுப்புகிறான்.

அவன் முதல் பகுதியில் சொல்லும் சுதந்திர விருப்புறுதி என்ற கோட்பாடுடன் இரண்டாம் பகுதியின் பகுதிகளை இணைத்துப் பார்க்க முடியும்.முதலில் அவனால் சமூகத்தில், அலுவலகத்தில் பொருந்தி போக இயலவில்லை.படிப்பது , கனவு காண்பது , விலைமாதுக்களிடம் செல்வது என்று அவன் வாழ்கிறான்.தனிமை பொறுக்க முடியாமல் பள்ளித் தோழர்களை சந்தித்தாலும் அவனால் அவர்களோடு சிரித்து பேசி குடித்து விசிலடித்து மகிழ முடியவில்லை.பின்னர் லிசா என்ற விலைமாது அவன் வீட்டுக்கு வருகிறாள்.அவளை அரவனைத்து அவளை ஏற்று அவன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ விரும்பவில்லை. அப்படியான ஒரு வாழ்வை அவன் கனவு காண்கிறான்.ஆனால் நிஜத்தில் அவளை துரத்துகிறான்.அவமானப்படுத்துகிறான்.தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டே அவளிடம் அன்றிரவு ரட்சகனாக காட்டிக்கொண்டதாக சொல்கிறான்.நீ என்ன ஆனால் எனக்கென்ன , நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று அவளை தூற்றுகிறான்.அவள் விடைபெறுவதாக சொல்லிச் செல்கிறாள்.அவளை மேலும் அவமானப்படுத்த முந்தைய இரவுக்காக ஐந்து ரூபள்களை தருகிறான்.பின்னர் அதை நினைத்து வருந்துகிறான்.இந்த தொடர் நிகழ்வுகளில் அவன் எங்குமே மகிழ்ச்சியாக இருப்பதன் பொருட்டு ஒரு செயலை செய்யவில்லை.தன் இருப்பை நிலைநிறுத்தும் பொருட்டு , தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு தன் செயல்களை செய்கிறான்.லிசா மகிழ்ச்சியாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, தனக்கு இந்த உலகமே நரகத்துக்கு செல்லும் என்றாலும் தன் தேநீர்தான் முக்கியம் என்கிறான்.

விலைமாதுக்கள் விடுதியில் லிசாவிடம் பிரசங்கம் செய்யும் நிலவறையாளன் தான் அவ்வாறு செய்ததற்கு முக்கிய காரணம் தான் வேறு எங்கோ அடைந்த அவமானமே காரணம் என்கிறான்.எங்கோ அடையும் தாழ்வுணர்ச்சியும் , அவமானமும் வேறு இடத்தில் நம்மை முற்போக்கு முகமூடியை அணிய கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் தொடர்ந்து வருகிறது.அப்படி என்றால் முற்போக்கு கோட்பாட்டாளர்களின் உண்மையான நோக்கம் எங்கோ அடைந்த அவமானத்தை துடைக்கும் அதிகார விளைவா அல்லது உண்மையான மனித நேயமா என்று தஸ்தாயெவ்ஸ்கி வினவுகிறார். பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வழியே அவனது மாணவர்கள் அவரது முற்போக்கு கருத்தியல்களை கற்கிறார்கள்.ஆனால் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வார்வாரா என்ற பெண்மணியை இருபது வருடங்களாக தொடர்ந்து காதலிப்பார்.அந்த நிறைவேறாத காதலின் துன்பத்தில் அவமானத்தில் உருவானதுதான் அவரது கருத்தியல் வடிவங்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி பகடி செய்கிறார்.

அந்த பகடியின் தீவிர வடிவத்தையே லிசாவிடம் சொல்கிறான் நிலைவறையாளன். நல்லொழுக்கம் கொண்டு மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி சாப்பாட்டு மூட்டையை தூக்கிக்கொண்டு வேலைக்கு செல்லும் உள்ளீடற்ற வாழ்க்கை வெறுமை நிரம்பியது.தியாகங்களை வேண்டுவது.தினசரி அட்டவனையை கொண்டது.அந்த வாழ்க்கையை வாழ அதை மகத்துவப்படுத்த நாவல்களில் நாடகங்களில் கவிதைகளில் கதாநாயகன் வருகிறான்.அவன் ஒழுக்கமானவன்.தியாகங்கள் செய்பவன்.தன்னலம் அற்றவன்.மானுடத்தை நேசிப்பவன்.விளிம்பில் உள்ள மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுபவன்.அத்தகைய நாவல்களில் வரும் நாயகன் வழி தங்கள் பழக்கப்பட்ட வாழ்வை எதிர்கொள்கிறார்கள் மக்கள் என்கிறான் நிலவறையாளன்.ஆனால் தான் எதிர்நாயகன்.இதற்கு மேல் எழுதினால் அது உங்களின் உள்ளீடற்ற வாழ்வை மேலும் துலங்கச்செய்து மேலும் சலிப்படைய வைக்கும் என்று தன் குறிப்புகளை நிறுத்திக்கொள்வதாக சொல்கிறான்.

நாவலில் வரும் எதிர்நாயகன் , முதல் வாக்கியத்தில் நான் ஒரு நோயாளி , நான் நல்லவன் அல்ல என்கிறான்.தொடர்ந்து என் நுரையிரல் கெட்டுபோய்விட்டது.என் நுரையிரல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.நான் மருத்துவர்களை சென்று பார்க்கப்போவதில்லை.நான் மருத்துவர்களை மதிக்கிறேன்.நான் படித்தவன்.ஆனால் மூடநம்பிக்கை உள்ளவன் என்று தொடர்கிறான்.ஒவ்வொரு வாக்கியமும் அடுத்த வாக்கியத்தை மறுக்கிறது.முதல் மூன்று நான்கு வரிகளிலேயே நிலைவறையாளன்   தன்னைப் பற்றி முழுமையாக சொல்லிவிடுகிறான்.இயங்கியல் என்கிற வார்த்தையை விட இங்கு முரணியக்கம் சரியான வார்த்தையாக தெரிகிறது.மனிதன் முரணான சிந்தனைகளின் வழி இயங்குகிறான்.பகுத்தறிவு பேசிக்கொண்டிருப்பவர் திடீரென்று தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது ஜோதிட நிலையங்களுக்கு செல்கிறார்.அப்போது அவரது பகுத்தறிவு அவருக்கு தடையாக இல்லை.சாதி குறித்து தொடர்ந்து எதிர்வினை ஆற்றுபவர் சாதிப்பற்று கொண்டவராக இருக்கிறார்.பெண்ணியம் பேசுபவர் பெண்னை சுரண்டுகிறார்.இவை மனிதர்கள் போலியானவர்கள் என்பதால் மட்டுமல்ல.மனிதர்கள் முரணாக சிந்திக்கக்கூடியவர்கள் என்பதாலும்தான்.மனிதன் தன் சிந்தனைக்கு கட்டுண்டவன் கிடையாது.சிந்திப்பதனால் அல்ல , உள்ளார்ந்த தன் சுதந்திர விருப்புறுதி உருவாக்கும் தேவையாலும் ஏக்கத்தாலுமே மனிதன் இருக்கிறான் என்கிறான் நிலைவறையாளன்.

ஒரு வேளை நம் புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் ஆகிவிட்டால் நாம் எதன் அடிப்படையில் வாழ்வோம் , எதை பற்றிக்கொள்வோம் என்று வினா எழுப்புகிறான்.அவனே நிரம்ப படித்தவன்.அதனால் அதீத பிரக்ஞை உணர்வு கொண்டவன்.ஆனால் அவனே அந்த படித்த கருத்தியல்களின் தளைகளிலிருந்து விடுபட்டு சுதந்திர விருப்புறுதி குறித்தும் தூய உயிரியல் பிண்டமான மனிதனின் தேவை மற்றும் ஏக்கம் குறித்தும் பேசுகிறான்.

குற்றமும் தண்டனையும் நாவலிலும் விலைமாது வருகிறாள்.விளிம்பில் இருப்பவள்.சோனியா ரஸ்கோல்நிகோவை மீட்கிறாள்.ஆனால் இந்த நாவலில் அவன் முழுக்க தனித்திருக்கிறான்.இங்கும் ஒரு விலைமாது வருகிறாள்.விளிம்பில் இருப்பவள்.அவளை பற்றிக்கொள்வதன் வழி அவன் மீள முடியும்.சமூக மனிதனாக மாற முடியும்.அவனது மீட்புகளை அவனே தட்டிவிடுகிறான்.அவனுக்கும் ரஸ்கோல்நிகாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு , ரஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தியலின் அடிப்படையில் இரு கொலைகளை செய்கிறான்.பின்னர் வருந்துகிறான்.மன்னிப்பு கேட்கிறான்.மீள்கிறான்.பாவம் -  மன்னிப்பு – தியாகம் – மீட்பு என்ற கிறுஸ்துவ கருத்தியலை அந்த நாவல் முன்வைக்கிறது.ஆனால் நிலைவறையாளன் நிறைய படித்து அதீத பிரக்ஞை கொண்டவனாக இருந்தாலும் அவனில் ஒரு முரண் இருக்கிறது.அவன் அதே கருத்தியல்களை சந்தேக்கிறான்.படித்தவன் , ஆனால் நான் மூட நம்பிக்கை கொண்டவன் என்கிறான்.நீதி குறித்து அவனுக்கு தீர்மானமான எண்ணங்கள் இல்லை. “தீர்மானத்தின் ஆணிகள் அறையப்படாத சவப்பெட்டி என்று என் கபாலத்தைச் சொல்லலாம் நீங்கள்” என்ற யுவன் சந்திரசேகரின் கவிதை வரி நிலைவறையாளனுக்கு கச்சிதமாக பொருந்தும்.அவனுக்கு கருத்தியல் மீது நம்பிக்கை இல்லை , அதனால் அவன் பாவம் குறித்து அலட்டிக்கொள்வதில்லை.பாவம் இல்லாததால் மீட்சியும் இல்லை.அவன் லிசாவை அவமானப்படுத்தியதற்காக துயரப்படுகிறான்.ஆனால் அதை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை.ஒரு வேளை மறுபடியும் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்டால் மறுநாள் அவளை வெறுக்க வேண்டியிருக்கும்.இத்துடன் இதை விட்டுவிடுவதுதான் சரி என்கிறான். செயற்கையான மகிழ்ச்சியை விட துயரம் மேலானது என்கிறான்.அவன் துயரத்தை பிரக்ஞையுடன் ஏற்கிறான்.அதன் வழி பாவம் – மன்னிப்பு – தியாகம் – மீட்பு என்ற கிறுஸ்துவ கருத்தியலை நிராகரிக்கிறான். 

ஆல்பர் காம்யு எழுதிய வீழ்ச்சி நாவல் இந்த நிலைவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள் நாவலின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.அந்த நாவலும் தன்னுரை பாணியில் அமைந்திருக்கும்.நிலைவறையாளன் ஒரிடத்தில் நான் பூச்சியாக மாற முடியவில்லை என்கிறான்.நமக்கு காப்காவின் உருமாற்றம் நாவல் நினைவுக்கு வருகிறது.தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த நாவல் இருத்தலிய கோட்பாடு சார்ந்த முக்கியமான வரைவை உருவாக்கியது.சுதந்திர விருப்புறுதி மனிதனின் சாராம்சம்.அதுவே அவனை மனிதனாக இருக்க வைக்கிறது.அது நசுக்கப்படும் என்றால் அவன் தப்பிக்க விழைவான்.வேறு வழி இல்லை என்றால் மனப்பிறழ்வு கொள்வான் என்பதே நிலைவறையாளனின் செய்தி. மனிதனுக்கு நிழல் இருப்பது போல மனிதன் உருவாக்கும் அமைப்புகளுக்கும் , கருத்தியல்களுக்கும் நிழல் இருக்கிறது என்கிறார் கார்ல் யுங்.பிறழ்வு மனிதனின் இருப்பை அனுமதிக்கிறது.ஒழுக்கமான பிசிறுகள் அற்ற வாழ்க்கை நிலையானது.மரணமுற்றது. அவன் பிறழ்வில் உயிர்ப்புடன் இருக்கிறான். இருத்தலே சாராம்சமாகிறது.

மனிதர்களை முற்போக்கு தத்துவங்கள் கொண்டோ அல்லது பிற்போக்கு தத்துவங்கள் கொண்டோ வழிநடத்தாமல் விட்டுவிடுவதே சிறந்தது என்கிறான் நமது எதிர்நாயகன்.வசந்தம் எதிர்காலத்தில் அல்லது இறந்தகாலத்தில் இருக்கட்டும்.ஆனால் மனிதர்கள் துயரப்பட்டு ,சண்டைபோட்டு ,காதலித்து, அதிகாரம் செலுத்தி , அதிகாரத்துக்கு கட்டுபட்டு , பயணத்திற்காக இலக்குகளை உருவாக்கி, பின்னர் திசைமாற்றி, கலகம் செய்து தங்கள் வாழ்வை வாழ்வார்கள்.வாழ்க்கை அடிப்படையில் இருப்பு சார்ந்தது.அதன் போக்கில் விடுங்கள் என்கிறான்.மகிழ்ச்சிக்கான திறவுகோல் உங்கள் கைகளில் இருக்கலாம்.ஆனால் மனிதனின் பிரச்சனை திறவுகோலை கொண்டு கதவை திறந்து உள்ளே சென்ற பின் என்ன செய்வது என்பதுதான்.அதனால் மகிழ்ச்சி என்ற திறவுகோலை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.மனிதன் தன் நிழலுருவத்தை கண்டு அஞ்சி எளிமையாக வாழ்வான்.நீங்கள் ஒழுங்காய் போய்த் தூங்குங்கள் என்கிறான்.நாயகர்களும் நாயகிகளும் தூங்கலாம்.

  
1.  நிலவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள் – Notes from the Underground – Fyodor Dostoevksy - Translated by Richard Pevear and Larissa Volokhonsky – Everyman’s Library.

(தமிழினி இணைய இதழில் வெளியான கட்டுரை)