எரிக் ஃபிராம் ( Erich Fromm) மனவளமான சமுதாயம் (Sane Society) நூலில் மனிதனுக்கு அடிப்படையிலேயே இயற்கையிலிருந்து விலகி செல்வதற்கான இருத்தலிய சிக்கல் இருப்பதை சொல்கிறார்.அவனால் விலங்குகளை போல இயற்கையோடு இயைந்து இருக்க இயலாது.ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட கனியை உண்பது அந்த விலகிச்செல்லும் விருப்புறுதியைத்தான் குறிப்புணர்த்துகிறது என்கிறார்.எப்படி ஒரு மனிதக் குழுந்தை பிறந்து எழுந்து நடக்க நீண்ட வருடங்கள் எடுத்துக்கொள்கிறதோ அதே போல மனித சமூகம் இயற்கையிலிருந்து விலகி வர நீண்ட நெடுகாலம் எடுத்துக்கொண்டது.கடந்த நான்காயிரம் ஆண்டுகளில் தொடர்ந்து மனிதன் மிகப்பெரிய அளவில் பாய்ச்சலை நிகழ்ந்திருக்கிறான்.அவன் இன்று தொழில் மய சமூகத்தில் வேலை பிரிவனைகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் முதலாளிய அல்லது சோஷயலிச சமூகத்தில் வாழ்கிறான்.இந்த வேலை பிரிவினை அவனை அந்நியப்படுத்துகிறது.இந்த அந்நியமாதல் அவனுக்குள் மன அசதியை ஏற்படுத்துகிறது.அந்நியப்படும் அவன் அருவமான உலகில் வாழ்கிறான்.பருண்மையான உலகம் அவனுக்கு அருவமானதாக மாறுகிறது.
அவன் ஜனநாயக அரசியலில் பங்கு பெறுகிறான்.ஆனால் அதிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறான்.அவன் உலகம் அருவமாகிறது.பஸ்ஸில் பயணித்த ஐம்பத்திரண்டு பேர் மரணம், நிலநடுக்கத்தில் பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர் போன்ற செய்திகள் நம்மை உலுக்கவதில்லை.நம்மை அழ வைப்பதில்லை.இது படைப்பிலிருந்து விலகும் மனிதன் அடையும் அந்நியமாதல்.இந்த அந்நியமாதல் அவனது தனிப்பட்ட வாழ்ககையில் , அவன் பங்கெடுக்கும் ஜனநாயக அரசியலில் , அவனது ஓய்வு நேர விருப்பங்களில், அவனது வேலையில் , உறவுகளில், வாழ்க்கை பற்றிய நோக்கில் எல்லாம் பாதிப்பு செலுத்துகிறது என்கிறார் எரிக் ஃபிராம்.இதற்கு அவர் அளிக்கும் தீர்வுகள் தான் மிகவும் எளிமையானதாக இருக்கிறது.வேலை பிரிவினைகள் தான் அந்நியமாதலுக்கான காரணம் , அவன் செய்யும் வேலையின் முழுமையை அவனுக்கு உணர்த்துவதன் வழி அவனது அந்நியமாதலை குறைக்க முடியும் என்கிறார்.
எரிக் ஃபிராம் இந்த தீர்வுக்கு வர முக்கிய காரணம் அவரது மார்க்ஸிய பார்வை.அவர் வரலாறு இந்த திசையில் தான் செல்ல முடியும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.விஞ்ஞானம் , தொழில்நுட்பம் , இயற்கையை வசப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மனிதன் திரும்ப வாய்ப்பில்லை என்கிறார்.அதனால் கிராம பொருளாதாரத்தை அவர் ஒரு தரப்பாக கூட முன்வைக்கவில்லை.ஆதாம் ஏவாள் உண்ட விலக்கப்பட்ட கனி என்பது மனிதனுக்கு இயல்பாகவே இருக்கும் அறிந்துகொள்வதற்கான விருப்புறுதியில் உருவாவது.அதனால் அவன் இப்போது வரலாற்றில் இருக்கும் இந்த இடத்திற்கு வந்துதான் ஆக வேண்டும்.சமூகத்தில் தகாப்புணர்ச்சி நீக்கமும் , இயற்கையிலிருந்து விலகலும் ஒன்றுதான் என்கிறார்.அதாவது அது இப்படித்தான் நிகழ்ந்தாக வேண்டும்.வேறு எப்படியும் அது இருக்க வாய்ப்பில்லை என்கிறார்.இந்த இயற்கையிலிருந்து நீங்குதல் தந்தை பிம்பத்திடம் அடிபணியும் பண்பை உருவாக்குகிறது என்கிறார்.
இப்படியான பல சட்டகங்கள் வழி அவர் வந்தடையும் தீர்வு எளிமையானதாகவும் Status quoவை நிலைநிறுத்துவதாகவும் இருக்கிறது.இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.முதலாளிகள் இந்த பரிசீலனைகள் ஏற்றுக்கொள்வார்கள்.ஒரளவு வரை நடைமுறை படுத்தவும் செய்வார்கள்.ஏனேனில் இது அவர்களின் உற்பத்தியை பெருக்க உதவுக்கூடும்!
இந்த அந்நியமாதலுக்கு அவர் அளிக்கும் மற்றொரு தீர்வு கூட்டுக்கலை விழாக்கள்.இன்று மதம் சார்ந்த சடங்குகள் இல்லாத நிலையில் தனிமனிதன் நவீனக்கலை வடிவங்களை நோக்கி செல்கிறான்.ஆனால் அதில் அவன் தன்னை இழப்பதில்லை.இந்த உலகத்தை தன் தலையால் மட்டும் அறிந்தால் போதாது என்கிறார் எரிக் ஃபிராம்.தன்னை முழுமையாக கரைத்துக்கொள்ளக்கூடிய கிராமத் திருவிழாக்கள் போன்ற கூட்டுக்கலைகள் வேண்டும் , அது கலாச்சார தளத்தில் அவனது அந்நியமாதலுக்கான தீர்வாக இருக்கும் என்கிறார்.
இதில் கூட்டுக்கலை பற்றிய அவரின் தீர்வு பெருநகரங்களில் நடைமுறை படுத்துவது நல்ல விளைவுகளை உருவாக்கும்.ஆனால் வேலை பிரிவினை உருவாக்கும் அந்நியமாதல் , அதனால் அனைத்தையும் அருவமாக உணர்தல் என்ற சிக்கலில் இருந்து விடுபட அவன் வேலை செய்யும் பண்டம் அல்லது சேவை பற்றிய முழுமை உணர்வை பெற வேண்டும் என்ற தீர்வு வேறு என்ன வழி இருக்கிறது என்ற அடிப்படையிலான பார்வை.அவருடைய தீர்வுகள் பெருநகர தொழில்மய சமூகங்களுக்கு மாற்று இல்லை என்ற நிச்சயமான முடிலிருந்து உருவாகுகிறது.அவர் காந்தியை எங்குமே குறிப்பிடவில்லை.ஹெர்பர்ட் மார்க்யூஸா இந்த வேறு வழி இல்லை என்ற கலகமற்ற பார்வையைத்தான் விமர்சிக்கிறார்.
ராஜ் கெளதமன் மொழிபெயர்த்திருக்கிறார்.மொழிபெயர்ப்புகள் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக அமைந்துள்ள புத்தகம் இது.ராஜ் கெளதமன் இதை மிகவும் விரும்பி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.அவர் எரிக் ஃபிராம் பற்றி நீண்ட அறிமுகம் ஒன்றை அளித்திருக்கிறார்.அந்த அறிமுகம் எரிக் ஃபிராம் முன்வைக்கும் பார்வையை புரிந்து கொள்ள பெரிய அளவில் உதவுகிறது.
மனவளமான சமுதாயம் - எரிக் ஃபிராம் - மொழிபெயர்ப்பு ராஜ் கெளதமன் - காலச்சுவடு பதிப்பகம்
புகைப்படம் - By Müller-May / Rainer Funk, CC BY-SA 3.0 de, https://commons.wikimedia.org/w/index.php?curid=43921778
No comments:
Post a Comment