நிர்ணயம் - Photo by Antoine Beauvillain on Unsplash |
உங்களை ஒருவன் கன்னத்தில் அறைந்துவிடுகிறான்.நீங்கள் அவனை திரும்ப கன்னத்தில் அறைந்துவிடுகிறீர்கள்.கணக்கு தீர்ந்துவிடுகிறது.உங்களுக்கு ஒருவன் துரோகம் இழைத்துவிடுகிறான்.நீங்கள் அவனை பழிக்குப்பழி வாங்க முற்படுகிறீர்கள்.கோபத்தில் உங்கள் கன்னம் சிவக்கிறது.கண்கள் துடிக்கிறது.இரவு படுத்தால் தூங்க முடியவில்லை.எந்த வேலையை செய்தாலும் அந்த துரோகம் உங்களை தொந்தரவு செய்கிறது.நீங்கள் அவனை செருப்பால் அடிக்கிறீர்கள்.அவன் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள்.அன்றிரவு நீங்கள் நன்றாக தூங்க முடியும்.ஆனால் அவன் ஏன் துரோகம் செய்தான், அவனுக்கு என்ன அவசியம், அவன் ஏன் என்னை தேர்வு செய்தான், அவன் தரப்பின் நியாயம் என்ன என்று சிந்திக்கும் போது உங்களது வன்மம் ஒரு பக்கம் அவனது தரப்பு மறுபக்கம் என்ற தொடர் உரையாடல் உங்களை சுழற்றியடிக்கும்.நீங்கள் இன்னும் உக்கிரமான மன அழுத்தத்தை அடைவீர்கள்.உங்களால் மன்னிக்கவும் இயலாது, பழிவாங்கவும் முடியாது.ஒரு வகை செயலின்மை தளத்தை சென்று சேர்வீர்கள்.ஒரு தூய உயிரியல் பிண்டம் திருப்பித் தாக்கும் , துரோகத்திற்கு பழிவாங்கும். ஆனால் அதீத பிரக்ஞை கொண்டவன் செயலின்மை தளத்தையை அடைகிறான். அப்படியான அதீத பிரக்ஞையால் துன்பப்படுவனின் குறிப்புகள் தான் நிலவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள்1.தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் இந்த நிலவறையாளனின் தொடர்ச்சி இருக்கிறது.அலெக்ஸி (சூதாடி) , ரஸ்கோல்நிகோவ் (குற்றமும் தண்டனையும் ) , நிகோலய் (பீடிக்கப்பட்டவர்கள்) , அர்காடி (பதின்) , இவான் ( கரமசோவ் சகோதரர்கள்) ஆகிய கதாபாத்திரங்கள் நிலவறையாளனின் சகோதரர்கள்.ரஸ்கோல்நிகோவ் நிலவறையாளன் போலவே வாழ்கிறான்.அலெக்ஸி போலவே நிலைவறையாளனும் எழுதக்கூடியவன்.இருவரும் தொழில் முறை எழுத்தாளர்கள் அல்ல.வேறு வழியில்லாமல் எழுதுபவர்கள்.அவர்கள் எழுதுபவை ஒரு வகை குறிப்புகள்.
கட்டற்ற சுதந்திர விருப்புறுதிக்கு எதிராக தத்துவத்தில்
சொல்லப்படுவது நியதி.ஒர் ஆணின் உடல் தசைகள் இறுக்கமாக இருக்கும்.அவன் பொதுவில் பலரின்
முன் தன் உணர்வுகளை காண்பிக்க மாட்டான்.தனக்கான வெளியை உருவாக்குவதே ஒர் ஆணுக்கு மகிழ்ச்சியை
அளிக்கிறது.அதுவே அவனது அகங்காரத்தை நிறைவு செய்கிறது.இப்படி ஆணுக்கான சாராம்சங்கள்
நிர்யணம் பெறுகிறது.இது போல பெண் குறித்து , குடும்பம் குறித்து , அரசாங்கம் குறித்து
நாம் சில சாராம்சங்களை நிர்ணயக்கிறோம். உதாரணமாக மார்க்ஸ் நிலவுடைமை சமூகம் முதிர்ந்து
முதலாளித்துவம் தோன்றும்.முதலாளித்துவத்தில் தொழிலாளி X முதலாளி என்ற இரண்டு வர்க்கங்கள்
மட்டுமே இருக்கும்.தொழிலாளர்கள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்கள்.பாட்டாளி சர்வாதிகாரம்
உருவாகும்.பின்னர் ஒடுக்கப்படுபவன் , ஒடுக்கப்படுவர்கள் என்ற பாகுபாடு அற்ற ஆன்மிக
சமூகம் மேலெழும் என்று எண்ணினார்.இந்த நிலவறையாளன் இந்தக் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்த
சமயத்தில் தான் மார்கஸ் தனது இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எழுதிக்கொண்டிருந்தார்.மார்கஸ்
மனிதனின் மகிழ்ச்சி வருங்காலத்தில் இருக்கிறது என்று கூறினார்.இதுவரை இருந்த காலங்களில்
எப்போதும் மனிதன் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்பதிலிருந்து தான் இடதுசாரி இயக்கமே
தோன்றுகிறது.ஆசிய உற்பத்தி முறை பற்றி அவர் அறியும் போது அவர் அதை தன்னளவில் தொகுத்துக்
கொள்கிறார்.அதை வரலாற்று பொருள்முதல்வாதத்தில் ஒரு இடத்தில் வைக்கிறார்.ஆனால் அது அடுத்த
பொருள் உற்பத்தி நிலையை நோக்கி நகரும் என்கிறார்.ஏனேனில் அவரின் இஷ்டலோகம் ஆசிய உற்பத்தி
முறையில் இல்லை, அல்லது அதில் செய்யப்படும் சிறு சிறு மாற்றங்களில் இல்லை.அது சோஷியலிச
சமூகத்தின் முதிர்வில் மட்டுமே இருக்கிறது.ஆகையால் ஆசிய உற்பத்தி சமூகமும் அங்கு வந்து
சேர்தாக வேண்டும்.பின்னர் சுரண்டலற்ற சமூகம் சாத்தியப்படும்.இங்கே ஒரு நிர்ணயம் உருவாக்கப்படுகிறது.இந்த
நிர்ணயம் நிகழ்ந்தாக வேண்டும்.அதை செய்ய லெனினும் , ஸ்டாலினும் , மாவோவும் முயன்றார்கள்.பின்னர்
தோற்றார்கள்.கடவுள் பலி கேட்பது போல எதிர்கால நிர்ணயங்கள் அதற்கான மனிதபலியை பெற்றுக்கொள்கிறது.
நிர்ணயங்கள் கற்பனாவாத்திலிருந்து துவங்குகிறது.அந்திப்
பொழுதில் காதலர்கள் தங்களுக்குள் கொஞ்சி குழாவி திளைத்திருக்க, குழந்தைகள் கடலில் கால்
நனைத்து ஆர்ப்பரித்து மணலில் விழுந்து புரள ,இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ,யுவதிகள்
கூடி ரகசியம் பேச , குடும்பத்தினர் அமர்ந்து அந்தியை சுகிக்க, சூரியன் மறைந்து கொண்டிருக்கும்
அந்தக் அந்திக் கற்பனாவாதக் காட்சி மகிழ்ச்சியை முன்வைக்கிறது.ஆனால் அந்த மகிழ்ச்சி
அந்த சமூக கட்டமைப்பில் ஒரு பகுதி மட்டுமே.அங்கு அரசு, காவல்துறை, சிறைச்சாலை , மனநல
மருத்துவமனை எல்லாம் பக்கத்தில் இருக்கிறது.அது அந்த அந்திக் காட்சியில் மட்டும் இல்லை.காட்சிக்கு
வெளியே அதே கடற்கரையில் விபச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது.போதை மருந்து விற்பனை ஆகிறது.அதை
ஒரு வகையில் அனுமதித்து ஒரு வகையில் தண்டிக்கிறது அரசு.ஆனால் இந்த கற்பனாவாதக் காட்சி
லட்சியவாதம் நோக்கி நம்மை அழைத்து செல்கிறது.லட்சியவாதம் நிர்ணயவாதத்தை முன்வைக்கிறது.இங்கே
மகிழ்ச்சி என்பது காதலர்களும் , குழந்தைகளும் ,இளைஞர்களும், பெண்களும், குடும்பத்தினரும்
மகிழ்ச்சியாக இருக்கும் அந்த அந்திக் காட்சி.அந்தக் காட்சியில் சுரண்டல் இல்லை.அதுவே
மகிழ்ச்சிக்கான திறவுகோல்.இப்போது இந்த மொத்த சமூகமும் அதை நோக்கி பயணப்பட வேண்டும்.ஏனேனில்
அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது.இப்போது அப்படியான ஒரு நிர்ணயத்தை முன் வைக்கும் சமூக
அமைப்பின் கருத்தியலை ஏற்காதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.அவர்கள் மனித சமூகத்தின்
மகிழ்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லி அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்.இப்போது
சமூகம் தூய்மை அடைகிறது.இப்போது அந்தியில் மொத்த சமூகமும் கடற்கரையில் அமர வேண்டும்.எல்லோரும்
இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூவ வேண்டும்.ஒரு அதிகாரி வந்து எல்லோரும்
கூவுகிறார்களா என்று கண்கானிப்பார்.கூவாதவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு
அனுப்பப்படுவார்கள்.
உங்கள் காலைத் தொழுகை முடிந்து விட்டதா.
அவ்வளவுதான் உங்கள் காலை உணவு
ஊர் சுற்றாமல் ஒழுங்காய் போய்த் தூங்குங்கள்
என்கிறார் ஆத்மாநாம்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறையாளன் இந்த மகிழ்ச்சி நோக்கிய
நிர்ணயங்களையும் இந்த நிர்ணயங்கள் உருவாக காரணமாக இருந்த கற்பனாவாதத்தையும் கேள்வி
கேட்கிறான்.இந்த நிர்ணயவாதத்திற்கு எதிராக இருத்திலியத்தில் முன்வைக்கப்படும் முக்கியமான
கோட்பாடு சுதந்திர விருப்புறுதி.இரண்டும் இரண்டும் நான்கு போலத்தான் மனிதன் நடந்து
கொள்வான் என்று விஞ்ஞானம் தொடரந்து தன் கோட்பாடுகளை முன்வைத்து வருகிறது.இன்று தரவுகள்
சூழ் உலகில் இதுவரையான தனிமனிதனின் தரவுகளின் அடிப்படையில் அவன் அறியப்படுகிறான்.அவன்
எதை வாங்குவான் , அவனுக்கு எதை கொடுக்கலாம் என்று தீர்மானிக்கிறது அரசும் , நவீன முதலாளித்துவமும்.அவனை
ஒரு அட்டவனையில் பொருத்துகிறது.அவன் அந்த அட்டவனையில் ஒரு எண் மட்டுமே.மற்றவையுடன்
கூட்டி பெருக்கி வகுத்து குறைத்து அவன் அடுத்து என்ன செய்வான் என்பதை நிர்ணயிக்க முடியும்.ஆனால்
நிலவறையாளன் நீங்கள் எவ்வளவு தான் ஒரு மனிதனை அட்டவனைக்குள் பொருந்த முற்பட்டாலும்
அவன் அதை திமிறிக்கொண்டு வெளியில் வந்தே தீருவான் என்கிறான்.அவன் திமிருவான் என்பதும்
உங்கள் அட்டவனையில் இருக்கும் என்றால் அவன் மனப்பிறழ்வு அடைந்துவிடுவான்.அப்படியாக
உங்கள் அட்டவனையிலிருந்து அவன் தப்பித்து விடுவான்.மனிதனுக்கு மகிழ்ச்சி தேவையில்லை.மனிதனுக்கு
சூரியன் ஏன் கிழக்கில் தோன்றுகிறது என்பதற்கான தர்க்கம் கூட தேவையில்லை.அவனுக்கு தொடர்ந்து
பயணப்பதற்கான சாலை மட்டுமே தேவை.இலக்கு கூட வெறும் இலக்கிற்காக மட்டுமே.மனிதன் அந்த
இலக்கை நோக்கி பயணிப்பான்.ஆனால் இலக்கை அடைந்துவிடுவோம் என்று தோன்றினால் அந்த பயணத்தை
தொடர இலக்கை மாற்றுவான் , அல்லது பிறழ்வான்.அந்த தேவையும் அதை உருவாக்குவதற்கான சுதந்திர
விருப்புறுதியும்தான் மனிதனின் ஆதார ஏக்கம் என்கிறான் நிலவறையாளன்.
மகிழ்ச்சியின் பொருட்டு மனிதர்களை ஒரு வழிப்படுத்தி அதை நோக்கி அவர்களை பயணிக்க வைக்க முடியும் என்பதை நிலவறையான் மறுக்கிறான்.மனிதன் தனக்கு தீங்கு அளிக்கும் விஷயங்களை தவிர்த்து பயணிப்பான் என்றாலும் அவன் தன்னை முழுக்க சிதைக்கக்கூடிய செயலையும் செய்வான்.அவனது சுதந்திர விருப்புறுதியின் தேவையும் ஏக்கமுமே அவனை இயக்குகிறது.அதனால் உங்கள் மகிழ்ச்சி நோக்கிய பயணத்தின் பேரூரையை சற்று நிறுத்தி வையுங்கள் என்கிறான்.மனிதன் அடிப்படையில் பிறழ்வானவன்.அதனால் கருத்தியல் கொண்டு எழுப்பப்படும் மாளிகைகள் உண்மையில் சலிப்பை உருவாக்குகிறது என்கிறான் இந்த எதிர்நாயகன்.
சுதந்திர இச்சை - Photo by Shane Rounce on Unsplash |
மகிழ்ச்சியின் பொருட்டு மனிதர்களை ஒரு வழிப்படுத்தி அதை நோக்கி அவர்களை பயணிக்க வைக்க முடியும் என்பதை நிலவறையான் மறுக்கிறான்.மனிதன் தனக்கு தீங்கு அளிக்கும் விஷயங்களை தவிர்த்து பயணிப்பான் என்றாலும் அவன் தன்னை முழுக்க சிதைக்கக்கூடிய செயலையும் செய்வான்.அவனது சுதந்திர விருப்புறுதியின் தேவையும் ஏக்கமுமே அவனை இயக்குகிறது.அதனால் உங்கள் மகிழ்ச்சி நோக்கிய பயணத்தின் பேரூரையை சற்று நிறுத்தி வையுங்கள் என்கிறான்.மனிதன் அடிப்படையில் பிறழ்வானவன்.அதனால் கருத்தியல் கொண்டு எழுப்பப்படும் மாளிகைகள் உண்மையில் சலிப்பை உருவாக்குகிறது என்கிறான் இந்த எதிர்நாயகன்.
நாவலின் இரண்டாம் பகுதியில் பதினைந்து வருடங்களுக்கு
முன்னர் வேலையில் இருந்த போது நடந்த சில சம்பவங்களை பற்றிச் சொல்கிறான் நிலவறையாளன்.அவன்
அப்போலன் என்ற முதிய வயது வேலையாளுடன் ஒரு குடியிருப்பில் வாழ்கிறான்.அவனுக்கு நண்பர்கள்
இல்லை.அவன் யாருடனும் பழகுவதில்லை.அவன் புத்தகங்கள் வாசிக்கிறான்.கனவு காண்கிறான்.விலைமாதுக்களிடம்
செல்கிறான்.அவனது பால்ய காலம் மகிழ்ச்சி அற்றது.பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தன்னுடன்
படித்த பள்ளித் தோழர்கள் இருந்தாலும் அவன் யாருடனும் தொடர்பில் இல்லை. அலுவலர் ஒருவர்
சாலையில் அவனை நேருக்கு நேராக கடக்கும் போது அவனை பொருட்படுத்தாமல் செல்கிறார்.எப்போதும்
இவன் தான் ஒதுங்கி செல்ல வேண்டியிருக்கிறது.தன் இருப்பு முற்றிலுமாக பொருட்படுத்தாமல்
ஆக்கப்படுவதை சகித்துக்கொள்ள இயலாமல் ஒரு நாள் அந்த அலுவலர் நேருக்கு நேர் வரும் போது
ஒதுங்காமல் செல்கிறான்.இருவரும் தோளோடு தோள் உரசிக் கொள்கிறார்கள்.இப்போதும் அந்த அலுவலர்
ஒதுங்கிச் செல்லவில்லை.ஆனால் தன் இருப்பு பொருட்படுத்தப்பட்டு விட்டது என்று அவன் உவகை
கொள்கிறான். .யாரையும் சந்திக்காமல் இருக்கும் தனிமையிலிருந்து விடுபட வெளியே செல்ல
முடிவெடுக்கிறான்.பள்ளித் தோழர்கள் அவனை பொருட்படுத்தவில்லை.ஆனால் அவர்களை சென்று சந்திக்கிறான்.அவர்கள்
ஒரு விருந்துக்கு செல்ல முடிவு செய்கிறார்கள்.இவனை அவர்கள் அழைக்கவில்லை.அவனாக தானும்
கலந்து கொள்ள விரும்புவதாக கெஞ்சுகிறான்.விருந்தில் அவனாக சென்று கலந்தும் கொள்கிறான்.அங்கு
அவன் பிறரை அவமானப்படுத்துகிறான்.அவர்கள் பதிலுக்கு அவனை அவமானப்படுத்துவதில்லை.மாறாக
அவனை யாரும் கண்டு கொள்ளமால் விட்டுவிடுகிறார்கள்.அவர்கள் கிளம்பிச் சென்றபின் அவர்களை
துரத்திக்கொண்டு விலைமகளிர் விடுதிக்கு செல்கிறான்.அங்கு அவர்கள் இல்லை.சென்றுவிடுகிறார்கள்.லிசா
என்ற விலைமாதுவை எதிர்கொள்கிறான்.தான் பள்ளித் தோழர்கள் மத்தியில் அடைந்த அவமானத்தை
போக்க லிசாவை அவமானப்படுத்துகிறான்.அவளின் இப்போதைய நிலை எத்தனை கீழ்மையானது என்பதை
அவளுக்கு உணர்த்துகிறான்.இதிலிருந்து அவள் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்கிறான்.தனது
அதிகாரத்தை அவள் மீது செலுத்துகிறான்.அவளின் ரட்சகனாக தன்னை காண்பித்துக்கொள்கிறான்.பின்னர்
அவனது சொற்களை ஏற்று அவனை சந்திக்க வருபவளை ஐந்து ரூபள்கள் கொடுத்து அவமானப்படுத்தி
அனுப்புகிறான்.
அவன் முதல் பகுதியில் சொல்லும் சுதந்திர விருப்புறுதி
என்ற கோட்பாடுடன் இரண்டாம் பகுதியின் பகுதிகளை இணைத்துப் பார்க்க முடியும்.முதலில்
அவனால் சமூகத்தில், அலுவலகத்தில் பொருந்தி போக இயலவில்லை.படிப்பது , கனவு காண்பது
, விலைமாதுக்களிடம் செல்வது என்று அவன் வாழ்கிறான்.தனிமை பொறுக்க முடியாமல் பள்ளித்
தோழர்களை சந்தித்தாலும் அவனால் அவர்களோடு சிரித்து பேசி குடித்து விசிலடித்து மகிழ
முடியவில்லை.பின்னர் லிசா என்ற விலைமாது அவன் வீட்டுக்கு வருகிறாள்.அவளை அரவனைத்து
அவளை ஏற்று அவன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ விரும்பவில்லை. அப்படியான ஒரு வாழ்வை அவன்
கனவு காண்கிறான்.ஆனால் நிஜத்தில் அவளை துரத்துகிறான்.அவமானப்படுத்துகிறான்.தன் அதிகாரத்தை
நிலைநிறுத்தும் பொருட்டே அவளிடம் அன்றிரவு ரட்சகனாக காட்டிக்கொண்டதாக சொல்கிறான்.நீ
என்ன ஆனால் எனக்கென்ன , நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று அவளை தூற்றுகிறான்.அவள்
விடைபெறுவதாக சொல்லிச் செல்கிறாள்.அவளை மேலும் அவமானப்படுத்த முந்தைய இரவுக்காக ஐந்து
ரூபள்களை தருகிறான்.பின்னர் அதை நினைத்து வருந்துகிறான்.இந்த தொடர் நிகழ்வுகளில் அவன்
எங்குமே மகிழ்ச்சியாக இருப்பதன் பொருட்டு ஒரு செயலை செய்யவில்லை.தன் இருப்பை நிலைநிறுத்தும்
பொருட்டு , தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு தன் செயல்களை செய்கிறான்.லிசா மகிழ்ச்சியாக
இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, தனக்கு இந்த உலகமே நரகத்துக்கு செல்லும் என்றாலும்
தன் தேநீர்தான் முக்கியம் என்கிறான்.
விலைமாதுக்கள் விடுதியில் லிசாவிடம் பிரசங்கம் செய்யும்
நிலவறையாளன் தான் அவ்வாறு செய்ததற்கு முக்கிய காரணம் தான் வேறு எங்கோ அடைந்த அவமானமே
காரணம் என்கிறான்.எங்கோ அடையும் தாழ்வுணர்ச்சியும் , அவமானமும் வேறு இடத்தில் நம்மை
முற்போக்கு முகமூடியை அணிய கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில்
தொடர்ந்து வருகிறது.அப்படி என்றால் முற்போக்கு கோட்பாட்டாளர்களின் உண்மையான நோக்கம்
எங்கோ அடைந்த அவமானத்தை துடைக்கும் அதிகார விளைவா அல்லது உண்மையான மனித நேயமா என்று
தஸ்தாயெவ்ஸ்கி வினவுகிறார். பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வழியே அவனது மாணவர்கள் அவரது முற்போக்கு கருத்தியல்களை
கற்கிறார்கள்.ஆனால் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வார்வாரா என்ற பெண்மணியை இருபது வருடங்களாக
தொடர்ந்து காதலிப்பார்.அந்த நிறைவேறாத காதலின் துன்பத்தில் அவமானத்தில் உருவானதுதான்
அவரது கருத்தியல் வடிவங்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி பகடி செய்கிறார்.
அந்த பகடியின் தீவிர வடிவத்தையே
லிசாவிடம் சொல்கிறான் நிலைவறையாளன். நல்லொழுக்கம் கொண்டு மகிழ்ச்சியான எதிர்காலத்தை
நோக்கி சாப்பாட்டு மூட்டையை தூக்கிக்கொண்டு வேலைக்கு செல்லும் உள்ளீடற்ற வாழ்க்கை வெறுமை
நிரம்பியது.தியாகங்களை வேண்டுவது.தினசரி அட்டவனையை கொண்டது.அந்த வாழ்க்கையை வாழ அதை
மகத்துவப்படுத்த நாவல்களில் நாடகங்களில் கவிதைகளில் கதாநாயகன் வருகிறான்.அவன் ஒழுக்கமானவன்.தியாகங்கள்
செய்பவன்.தன்னலம் அற்றவன்.மானுடத்தை நேசிப்பவன்.விளிம்பில் உள்ள மனிதர்களின் வாழ்வில்
ஒளி ஏற்றுபவன்.அத்தகைய நாவல்களில் வரும் நாயகன் வழி தங்கள் பழக்கப்பட்ட வாழ்வை எதிர்கொள்கிறார்கள்
மக்கள் என்கிறான் நிலவறையாளன்.ஆனால் தான் எதிர்நாயகன்.இதற்கு மேல் எழுதினால் அது உங்களின்
உள்ளீடற்ற வாழ்வை மேலும் துலங்கச்செய்து மேலும் சலிப்படைய வைக்கும் என்று தன் குறிப்புகளை
நிறுத்திக்கொள்வதாக சொல்கிறான்.
நாவலில் வரும் எதிர்நாயகன்
, முதல் வாக்கியத்தில் நான் ஒரு நோயாளி , நான் நல்லவன் அல்ல என்கிறான்.தொடர்ந்து என்
நுரையிரல் கெட்டுபோய்விட்டது.என் நுரையிரல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.நான்
மருத்துவர்களை சென்று பார்க்கப்போவதில்லை.நான் மருத்துவர்களை மதிக்கிறேன்.நான் படித்தவன்.ஆனால்
மூடநம்பிக்கை உள்ளவன் என்று தொடர்கிறான்.ஒவ்வொரு வாக்கியமும் அடுத்த வாக்கியத்தை மறுக்கிறது.முதல்
மூன்று நான்கு வரிகளிலேயே நிலைவறையாளன் தன்னைப்
பற்றி முழுமையாக சொல்லிவிடுகிறான்.இயங்கியல் என்கிற வார்த்தையை விட இங்கு முரணியக்கம்
சரியான வார்த்தையாக தெரிகிறது.மனிதன் முரணான சிந்தனைகளின் வழி இயங்குகிறான்.பகுத்தறிவு
பேசிக்கொண்டிருப்பவர் திடீரென்று தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது ஜோதிட நிலையங்களுக்கு
செல்கிறார்.அப்போது அவரது பகுத்தறிவு அவருக்கு தடையாக இல்லை.சாதி குறித்து தொடர்ந்து
எதிர்வினை ஆற்றுபவர் சாதிப்பற்று கொண்டவராக இருக்கிறார்.பெண்ணியம் பேசுபவர் பெண்னை
சுரண்டுகிறார்.இவை மனிதர்கள் போலியானவர்கள் என்பதால் மட்டுமல்ல.மனிதர்கள் முரணாக சிந்திக்கக்கூடியவர்கள்
என்பதாலும்தான்.மனிதன் தன் சிந்தனைக்கு கட்டுண்டவன் கிடையாது.சிந்திப்பதனால் அல்ல
, உள்ளார்ந்த தன் சுதந்திர விருப்புறுதி உருவாக்கும் தேவையாலும் ஏக்கத்தாலுமே மனிதன்
இருக்கிறான் என்கிறான் நிலைவறையாளன்.
ஒரு வேளை நம் புத்தகங்கள் எல்லாம்
இல்லாமல் ஆகிவிட்டால் நாம் எதன் அடிப்படையில் வாழ்வோம் , எதை பற்றிக்கொள்வோம் என்று
வினா எழுப்புகிறான்.அவனே நிரம்ப படித்தவன்.அதனால் அதீத பிரக்ஞை உணர்வு கொண்டவன்.ஆனால்
அவனே அந்த படித்த கருத்தியல்களின் தளைகளிலிருந்து விடுபட்டு சுதந்திர விருப்புறுதி
குறித்தும் தூய உயிரியல் பிண்டமான மனிதனின் தேவை மற்றும் ஏக்கம் குறித்தும் பேசுகிறான்.
குற்றமும் தண்டனையும் நாவலிலும்
விலைமாது வருகிறாள்.விளிம்பில் இருப்பவள்.சோனியா ரஸ்கோல்நிகோவை மீட்கிறாள்.ஆனால் இந்த
நாவலில் அவன் முழுக்க தனித்திருக்கிறான்.இங்கும் ஒரு விலைமாது வருகிறாள்.விளிம்பில்
இருப்பவள்.அவளை பற்றிக்கொள்வதன் வழி அவன் மீள முடியும்.சமூக மனிதனாக மாற முடியும்.அவனது
மீட்புகளை அவனே தட்டிவிடுகிறான்.அவனுக்கும் ரஸ்கோல்நிகாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு
, ரஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தியலின் அடிப்படையில் இரு கொலைகளை செய்கிறான்.பின்னர் வருந்துகிறான்.மன்னிப்பு
கேட்கிறான்.மீள்கிறான்.பாவம் - மன்னிப்பு
– தியாகம் – மீட்பு என்ற கிறுஸ்துவ கருத்தியலை அந்த நாவல் முன்வைக்கிறது.ஆனால் நிலைவறையாளன்
நிறைய படித்து அதீத பிரக்ஞை கொண்டவனாக இருந்தாலும் அவனில் ஒரு முரண் இருக்கிறது.அவன்
அதே கருத்தியல்களை சந்தேக்கிறான்.படித்தவன் , ஆனால் நான் மூட நம்பிக்கை கொண்டவன் என்கிறான்.நீதி
குறித்து அவனுக்கு தீர்மானமான எண்ணங்கள் இல்லை. “தீர்மானத்தின் ஆணிகள் அறையப்படாத சவப்பெட்டி என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்” என்ற யுவன் சந்திரசேகரின் கவிதை வரி நிலைவறையாளனுக்கு
கச்சிதமாக பொருந்தும்.அவனுக்கு கருத்தியல் மீது நம்பிக்கை இல்லை , அதனால் அவன் பாவம்
குறித்து அலட்டிக்கொள்வதில்லை.பாவம் இல்லாததால் மீட்சியும் இல்லை.அவன் லிசாவை அவமானப்படுத்தியதற்காக
துயரப்படுகிறான்.ஆனால் அதை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை.ஒரு வேளை மறுபடியும் அவளிடம்
சென்று மன்னிப்பு கேட்டால் மறுநாள் அவளை வெறுக்க வேண்டியிருக்கும்.இத்துடன் இதை விட்டுவிடுவதுதான்
சரி என்கிறான். செயற்கையான மகிழ்ச்சியை விட துயரம் மேலானது என்கிறான்.அவன் துயரத்தை
பிரக்ஞையுடன் ஏற்கிறான்.அதன் வழி பாவம் – மன்னிப்பு – தியாகம் – மீட்பு என்ற கிறுஸ்துவ
கருத்தியலை நிராகரிக்கிறான்.
ஆல்பர் காம்யு எழுதிய வீழ்ச்சி
நாவல் இந்த நிலைவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள் நாவலின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.அந்த
நாவலும் தன்னுரை பாணியில் அமைந்திருக்கும்.நிலைவறையாளன் ஒரிடத்தில் நான் பூச்சியாக
மாற முடியவில்லை என்கிறான்.நமக்கு காப்காவின் உருமாற்றம் நாவல் நினைவுக்கு வருகிறது.தஸ்தாயெவ்ஸ்கியின்
இந்த நாவல் இருத்தலிய கோட்பாடு சார்ந்த முக்கியமான வரைவை உருவாக்கியது.சுதந்திர விருப்புறுதி
மனிதனின் சாராம்சம்.அதுவே அவனை மனிதனாக இருக்க வைக்கிறது.அது நசுக்கப்படும் என்றால்
அவன் தப்பிக்க விழைவான்.வேறு வழி இல்லை என்றால் மனப்பிறழ்வு கொள்வான் என்பதே நிலைவறையாளனின்
செய்தி. மனிதனுக்கு நிழல் இருப்பது போல மனிதன் உருவாக்கும் அமைப்புகளுக்கும் , கருத்தியல்களுக்கும்
நிழல் இருக்கிறது என்கிறார் கார்ல் யுங்.பிறழ்வு மனிதனின் இருப்பை அனுமதிக்கிறது.ஒழுக்கமான
பிசிறுகள் அற்ற வாழ்க்கை நிலையானது.மரணமுற்றது. அவன் பிறழ்வில் உயிர்ப்புடன் இருக்கிறான்.
இருத்தலே சாராம்சமாகிறது.
மனிதர்களை முற்போக்கு தத்துவங்கள்
கொண்டோ அல்லது பிற்போக்கு தத்துவங்கள் கொண்டோ வழிநடத்தாமல் விட்டுவிடுவதே சிறந்தது
என்கிறான் நமது எதிர்நாயகன்.வசந்தம் எதிர்காலத்தில் அல்லது இறந்தகாலத்தில் இருக்கட்டும்.ஆனால்
மனிதர்கள் துயரப்பட்டு ,சண்டைபோட்டு ,காதலித்து, அதிகாரம் செலுத்தி , அதிகாரத்துக்கு
கட்டுபட்டு , பயணத்திற்காக இலக்குகளை உருவாக்கி, பின்னர் திசைமாற்றி, கலகம் செய்து
தங்கள் வாழ்வை வாழ்வார்கள்.வாழ்க்கை அடிப்படையில் இருப்பு சார்ந்தது.அதன் போக்கில்
விடுங்கள் என்கிறான்.மகிழ்ச்சிக்கான திறவுகோல் உங்கள் கைகளில் இருக்கலாம்.ஆனால் மனிதனின்
பிரச்சனை திறவுகோலை கொண்டு கதவை திறந்து உள்ளே சென்ற பின் என்ன செய்வது என்பதுதான்.அதனால்
மகிழ்ச்சி என்ற திறவுகோலை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.மனிதன் தன் நிழலுருவத்தை கண்டு
அஞ்சி எளிமையாக வாழ்வான்.நீங்கள் ஒழுங்காய் போய்த் தூங்குங்கள் என்கிறான்.நாயகர்களும்
நாயகிகளும் தூங்கலாம்.
1. நிலவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள் – Notes from the Underground – Fyodor Dostoevksy - Translated by Richard Pevear and Larissa Volokhonsky – Everyman’s Library.
(தமிழினி இணைய இதழில் வெளியான கட்டுரை)
No comments:
Post a Comment