BOX கதைப் புத்தகம்




யுத்தத்திற்குப் பிறகான காலத்தில் வன்னிப் பகுதியின் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் கதை இந்த BOX கதைப்புத்தகம்.ஷோபா சக்தியின் 'ம்'  நாவலை வாசித்திருக்கிறேன்.யுத்தம் ஏற்படுத்தும் பிறழ்வுகளை பற்றியது 'ம்' நாவல்.இந்த கதைப் புத்தகத்தின் பிரதியை நீங்கள் கையில் வைத்துக்கொண்டு வாசிக்கும் போது உங்கள் மனம் அந்தப் பிரதியை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும்.'ம்' நாவலை விட தொழில்நுட்பத்தில் இந்த நாவலில் நிறையவே முதிர்ந்திருக்கிறார் ஷோபா சக்தி.அவர் இந்த நாவலை வடிவமைத்திருக்கும் விதம் அபாரமானது.மிக எளிமையான மொழியை அவர் தேர்ந்திருக்கிறார்.ஆனால் இந்த எளிமையை எதிர்கொள்ள உங்களுக்குத்தான் தெம்பு இருக்க வேண்டும்.

தொடர்ந்து நிர்வாணம் ஒரு தண்டனையாக, ஒரு கருணையாக ,  ஒரு எதிர்ப்பாக , இயல்பானதாக என்று பல்வேறு தளங்களில் இந்த நாவலில் வந்துகொண்டே இருக்கிறது.கார்த்திகை என்கிற சந்த என்கிற சந்த ஸ்வஸ்திக தேரர் என்கிற துறவிச் சிறுவன் இந்த கதையின் மைய கதாபாத்திரம்.அவன் கதை முழுதும் காக்கி நிற அரைக்காற்சட்டையும் , நீலநிற  அரைக்கை மேற்சட்டையும் அணிந்திருக்கிறான்.அவனது கால்களில் செருப்புகளோ சப்பாத்துகபளோ இல்லை.அந்தச் சிறுவன் நன்றாக கொழுத்திருக்கிறான்.அவன் தாடைப் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் செழிப்பான தசை மடிப்புகள் உருள்கிறது.பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை ஒத்திருக்கும் அவனது முக உடல் அடையாளங்கள் உங்களை துன்புறுத்தக்கூடியவை.

முள்ளிவாய்க்கால் போரின் பின்பு செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்ப வந்து ஒரு வருடம் கூட ஆகாத அந்த கிராம மக்களை ராணுவம் அந்த ஊரை விட்டு போகச் சொல்கிறது.அவர்களை செட்டிகுளம் முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அங்கு ராணுவம் செய்த கொடூரங்களை அங்கிருக்கும் மக்கள் சிறுவன் கார்த்திகைக்கு நடித்துக் காட்டும் இடங்கள் நம்மை பதறச்செய்பவை.மகிழ்ச்சியான பாதுகாப்பான ஒரு வாழ்க்கை இருக்கக்கூடும் என்பது கூட அந்த மக்களுக்கு மறந்துபோய்விடுகிறது.பெரிய பள்ளன் குளம் என்ற அந்த ஊரின் பெயரை கார்த்திகைக் குளம் என்று மாற்ற அந்த கிராமத்து மக்கள் விரும்புகிறார்கள்.கார்த்திகை என்கிற இளைஞன்தான் அந்த கிராமத்திலிருந்து ராணுவத்தால்  கொலை செய்யப்பட்ட முதல் மனிதன்.அந்தப் பெயரை தான் அந்த கிராமத்து மக்கள் அந்த ஊருக்கு வரும் சிறுவனுக்கு வைக்கிறார்கள்.

உண்மை கதைகளை தொகுத்ததற்கு அப்பால் தன் பங்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.பாரிஸ் நகரத்தை சேர்ந்தவரான மெதடிஸ்த திருச்சபையின் விசுவாசம் மிக்க ஊழியராக டைடஸ் லெமுவேல் 
பெரிய பள்ளன் குளத்தில் 1928ல் பாட சாலைகளை உருவாக்குகிறார்.அவர் அதற்கு முன் 'டுகோபோர்' நிர்வாண சங்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.பரிதி,காற்று,நீர் மற்றும் நிர்வாணம் என்பது அச்சங்கத்தினரின் அடிப்படை  கொள்கை.அவர் உருவாக்கும் பாடசாலையில் பெரிய பள்ளன் குளத்தின் ஆறன் படிக்கச் செல்லும் போது வெள்ளான் முறிப்பிலிருந்து வந்த ஆட்கள் ஆறனையும் அவன் குடும்பத்தையும் நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்.அங்கே அவரின் தொடர் முயற்சியால் அந்த ஊர் பிள்ளைகள் படிக்கத் துவங்குகிறார்கள்.டைடஸ் லெமுவேலின் மனைவியும் குழந்தைகளும் சில வருடங்களில் இறந்து போகிறார்கள்.வைத்திய சாஸ்திரம் கற்கும் லெமுவேல் தீண்டப்படாமலிருந்த அந்தக் கிராமத்து மக்களின் மலத்தையும் மூத்திரத்தையும் எச்சிலையும் சீழையும் காயங்களையும் தீண்டி அந்த மக்களை சுகப்படுத்துகிறார்.அவர் பின்னர் மழைத் தூறல் நாள் ஒன்றில் நார்க் கட்டிலில் முழு நிர்வாணமாக இறக்கிறார்.ஆறன்  டைடஸ் லெமுவேல் என்கிற ஆதாம் சுவாமியின் உடல் மீது வெண்ணிறத் துணியை போர்த்துகிறான்.

அதே பெரிய பள்ளன் குளத்தில் 1985களில் அமையாள் கிழவியின் மகனான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட கார்த்திகையை நிர்வாணப்படுத்தி கொல்கிறார்கள் ராணுவத்தினர்.அவனது இயக்கப்பெயர் ஆதாம்.கார்த்திகை என்ற அமையாள் கிழவியின் மகன் கொல்லப்படும் போது ராணுவத்துக்காரன் கோமத என்கிறான்.அமையாள் கிழவியின் கிளி அவரை சீண்டும் வகையில் கோமத என்று சொல்கிற போது அமையாள் கிழவி அதைக் கொல்கிறார். முள்ளிவாய்க்காலின் போர் முடிந்து பெரிய பள்ளன் குளம் ராணுவத்தால் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட நாளில் அமையாள் கிழவி அந்தக் குளத்தில் நிர்வாணமாக இறந்து கிடக்கிறார்.

கார்த்திகை என்கிற சந்த என்கிற சந்த ஸ்வஸ்திக தேரர் என்கிற துறவிச் சிறுவன் அமையாள் கிழவியின் நிர்வாணத்தை தான் அணிந்திருந்த காவிநிற சீவிர ஆடையை போர்த்தி அவன் நிர்வாணம் கொள்கிறான்.மதவாச்சியின் பாரம்பரியமிக்க குடும்பமான ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன் , மதவாச்சியின் பெரிய விகாரை இளந்துறுவியின் கதை ஆழ்படிமமாக நமக்குள் பதிந்திருக்கும் கெளதம புத்தரை கிளர்தெழுந்து பதறச்செய்கிறது.

மடாலயத்திலிருந்து காணாமல் போகும் அந்த இளந்துறவி இறுதியில் அவனின் தாயை பார்த்து அம்மா! ஒரு நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை என்கிறான்.இந்த கதையில் நிர்வாணம் போல பெட்டி (BOX) என்கிற மற்றொரு படிமமும் வருகிறது.அமையாள் ஊரை ஆங்கிலேயேர்கள் பெட்டியாக வளைத்து முழுமையாக காலி செய்கிறார்கள்.இறுதிப்போரில் ஆனந்தபுரத்தில் பெட்டி அமைத்து போராட்டத்தை முழுமையாக சிதைக்கிறது ராணுவம்.எழுத்தாளர் ஒஸ்கார் லிங்கோ இலங்கையில் இருக்கும் பாலியில் விடுதிகளைப் பற்றி அறிய அங்கு வருகிறார்.அப்போது ஒரு விடுதியில் இருக்கும் பெண்கள் அவரை சுற்றி பெட்டி வடிவில் நிற்கிறார்கள்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள் இந்த சில பக்கங்களை படிக்கலாம்.

தமிழ் தேசியம், இந்து தேசியம் என்று நாம் பல தேசியங்களை தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்க வேண்டும்.பின்னர் நிலைக்கண்ணாடியில் நம்மை நிர்வாணப்படுத்திக்  கொண்டு நம் அகங்காரத்தின் மீதும் அடையாளங்களின் மீதும் காறி உமிழலாம்.பின்னர் நமது அடையாளத்தையும் அகங்காரத்தையும் உடுத்திக்கொண்டு தலைவாரி பெளடர் அடித்து பல்லிளித்துக்கொள்ளலாம்.

BOX கதைப் புத்தகம் - ஷோபா சக்தி - கருப்புப் பிரதிகள்.

No comments: