மிதக்கும் இருக்கைகளின் நகரம், காகங்கள் வந்த வெயில் , சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை , அச்சம் என்றும் மரணம் என்று இரண்டு நாய்க்குட்டிகள்,ராணி என்று தன்னையறியாத ராணி ஆகிய ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதை தொகுப்புகளிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆயிரம் சந்தோஷ இலைகள்.
அம்மா நீங்கிய அறையில் குழந்தை தன் முகத்தை முறையாக ஸ்பரிசிக்கிறது கண்ணாடியில்.எச்சில் வழியக் கடவுளைத் தீண்டுகிறது முதலும் முடிவுமாய்.அதன் பிறகு அந்தக் குழந்தை வளர்ந்து பெரு நகரங்களுக்கு வேலை தேடி வந்து விடுகிறது.அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்த ஊர் மரணித்துவிட்டது.அதிசயமாய் வளர்ந்து முலைபருத்த அவனது இளவயது சிநேகதிகள் அடையாளம் தெரியாமல் கடந்து செல்கின்றனர்.பயணத்தில் எதிர் இருக்கையில் வந்து அமர்கிறாள் அவள்.அவளின் பக்க வகிடெடுத்த கேசத்தில் நரைக்கத் தொடங்கியிருக்கும் புள்ளியில் அழுந்திச் சிதறியிருக்கிறது குங்குமம்.அப்போது அவர்கள் இடையில் பல ரயில்கள் வந்து போகிறது.ஆத்மாநாம் அமிழ்ந்த கிணறு இப்போது அவனுக்கு குளியலறையாகியிருக்கிறது.நெடுநாட்களாக வரவேற்பரையிலேயே தங்கிவிட்டதாய் உணர்கிறான்.வேலைக்கான நேர்காணல்கள் அலுத்துவிட்டது.அப்போது அவனின் கவனமில்லாமலேயே வளர்ந்துவிட்ட பெண் குழந்தை குறித்து வியப்பு ஏற்படுகிறது.அவன் குழந்தையாக இருந்த போது அவன் சிரம் தொட்ட தாதி.இடுப்புகள் மாறி அமர்ந்து முத்தங்கள் அலுப்பேற்படுத்த தந்தையின் தமக்கையரோடும் மூதாதையரோடும் அவன் இருந்த காலம் ஒன்று இருந்தது.ஆனால் அந்தப் பிராயம் விரைவில் கடந்துவிடுகிறது.இன்று பெருநகரத்தில் தனியறையில் அவனுடன் பாயில் உறையும் எறும்புகள் அவன் அரசன் என்பதை அறியும்.
பருவத்தில் மறுகரையில் நின்று அழைத்துச் செல்வான் கிருஷ்ணன் என காத்திருந்தாள் கெளரி.ஆனால் பின்னர் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்துவிட்டதை உணர்கிறாள்.அவளின் தலைகோதி சிரம்பற்ற கிருஷ்ணன் இல்லை.முன்னர் அவனது பருவத்தில் சிமெண்ட் நிற காரில் சூரியன் வரும்போதே குதிரைவால் சடையுடன் ஓடைக்குப் படகு செலுத்த வந்தவர்கள் இப்போது வருவதில்லை.படகு இப்போது தனியே நின்று கொண்டிருக்கிறது.
பின்னர் சிறுநகரத்தை விட்டு பெருநகரம் வருபவனுக்கு சூரிய உதயத்தில் வேலை கிடைக்கிறது. சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லி வீடுகளின் கதவை தட்டுகிறான்.அவர்களிடம் பின்னர் இறைஞ்சும் தொனியில் உங்கள் நாயைக் கொஞ்சம் பிடித்துக் கொள்ளுங்கள் நான் வெளி்யேறுகிறேன் என்று சொல்லி அடுத்த வீட்டுக்குச் செல்கிறான்.அவன் வீடு திரும்புகையில் மெஹ்திஹசனின் இசையில் அவனது வீடு மழைக்கால வீடாகிறது.அவனது குரலில் பாயில் படுத்துறங்கும் அரசன் எறும்புகளுடன் சேர்ந்து கனவு காண்கிறான்.பெருநகரத்தில் தனிமையில் யாருமற்று இருக்கும் அவன் தன் நண்பன் ரகசியப் புன்னகையுடன் எதிர்வரக் கூடுமென சாலையை கடக்கிறான்.
ஒரு நாளின் மதியப்பொழுதில் சிறுமி விமலா இறந்து போனதை வீடுகள்தோறும் சொல்லிக்கொண்டிருந்தது வெயில்.மணிபாப்பா இறந்து போனதையும் சிறுமி சுபாஷிணி இறந்து போனதையும் சுவரொட்டிகளில் பார்க்கிறான்.அவர்களைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ள இயலவில்லை என்பதையும்.சூரிய உதயத்தில் விற்பனை பிரதிநிதியாக இருந்தவன் இப்போது பறவைகள் விற்கும் வேலைக்கு மாறிவிடுகிறான்.இப்போது அவன் பெயர் லாரன்ஸ்.வெயில் வரும்வரை தான் இப்பறவைகள் விலை போகின்றன.சீக்கிரம் உங்கள் சிறுவனை அழைத்து வாருங்கள் என்கிறான்.ஆனால் அந்த நகரத்தில் சிறுவர்களே இல்லை என்பதையும் அறிகிறான்.பின்னர் அவன் புதிதாக ஒரு வேலையில் சேர்கிறான்.அவனுக்கு தங்குவதற்கு விசாலமான அறை ஒன்று வழங்கப்படுகிறது.ஒரு அரசனுடையதைப் போல் கழிகிறது எனது நாட்கள் என அம்மாவுக்கு தனது அடுத்த கடிதத்தை எழுதத் தொடங்கிறான்.பெருநகரத்தில் அலைந்து திரிகையில் என்றோ ஒரு நாள் யுவன் சந்திரசேகரனை தன் இருபத்திநாலாவது வயதில் சந்திக்கிறான்.யுவன் சந்திரசேகர் சாம்பவாத் புலியின் விதியும் ஜிம்கார்பெட்டின் விதியும் எங்கேயோ சந்திக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பதை சொல்லிக் கொடுக்கிறார்.சிதறடிக்கப்பட வேண்டிய கபாலம்தான் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்கிறான்.
பெரு நகரத்தில் சாயங்காலம் மூட்டத்துடன் கவிழத் தொடங்குகிறது.சிறு நகரத்தில் இந்த பழந்தன்மை வாய்ந்த சாயங்காலம் எதைச் சொல்லப் போகிறது தன் அம்மாவுக்கு என்று நினைத்துக்கொள்கிறான்.தலை கோதும் சிறு கணம் போல இந்த அந்தியும் அவளை கடக்குமா என்று எண்ணுகிறான்.தங்குவதற்கு விசாலமான அறை கொடுக்கப்பட்ட வேலைக்கு அவன் பொருத்தமற்றவன் என அவன் மீது புகார்கள் அதிகரிக்கிறது.அவனுக்கு சிங்கத்துக்குப் பல் துலக்கும் எளிய வேலை வழங்கப்படுகிறது.ஆனால் சிங்கம் அவன் அருகில் பல் துலக்க செல்கையில் உறுமுகின்றது.அதைப்பற்றி பறவைகளிடம் புகார் தெரவிக்கிறான்.பறவைகள் ஈ..ஈ… எனப் புரிந்தும் புரியாமலும் இளிக்கின்றன.
தன் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்துவிட்டன கிருஷ்ணா என்று சொன்ன கெளரி பின்னர் ஜோசப் தெய்வநாயகத்தின் மனைவியாகி்ய சில காலத்துக்குள்ளேயே கெளரி அம்மாளாக மாறி விடுகிறாள்.ஜோசப் தெய்வநாயகம் லேட். ஜோசப் தெய்வநாயகம் ஆகிறார்.அதன் பின் கெளரி அம்மாள் மூன்று முறை மட்டுமே சிரிக்கிறார்.கெளரி கெளரி அம்மாள் ஆனதும் பால்யத்தில் விளையாடிய கிருஷ்ணனைப் பாதியில் விட்டதிலும் கிறுஸ்துவுக்கு வருத்தம்தான் என்று அவன் கருதுகிறான்.
நவீன குமாஸ்தாக்களின் தற்கால அடையாளமாகிவிட்ட மோட்டார் சைக்கிளை அவர்களிடமிருந்து எப்படி மீட்பது என்று ஒரு நாள் அவன் தீவிரமாக சிந்திக்கிறான்.அவனுடைய மோட்டார் சைக்கிள் இரவில் உலவவும் வேட்டையாடவும் கூட தனியே வீட்டை விட்டு வெளியேறும்.அவனது மேட்டுநிலத்தில் அதன் முன்சக்கரம் ஒரு சரளைக் கல்லை நொறுக்கும் போது சூரியன் அடிவானில் இறங்கத் தொடங்கும்.அப்போது அவன் சே குவேராவாகவும் ஆகக்கூடும்.
எறும்புகளுடன் பாயில் உறங்கும் அரசன் மருத்துவமனையில் ஒரு புதிய மருந்துக்காக தயாராகிறான்.இனி உபாதைகள் ஒரு துர்க்கனவென விலகிவிடும்.காலைச் சூரியனை இனி மன அழுத்தம் இன்றி காபியுடன் பருகத் தொடங்கலாம் என்று ஏங்குகிறான்.இதுவரை படிந்துகிடந்த சோர்வை வளர்ந்த நகங்களைப் போல வெட்டிக் களைந்து விடலாம்.ஆனால் தாதியின் கால் குதிரைச் சதைப்பகுதியில் நமது கவனம் படரும் போது உறக்கமூட்டும் மருந்துகள் அவன் இமைகளை அழுத்தத் தொடங்குகிறது.
சரியான வேலையில் இல்லாமல் பாயில் உறங்கும் அரசன் , தன் சிறுநகரத்தை பெரு நகர வீதிகளில் சுமைந்தலைபவன் கவிஞனும் ஆகிறான்.உலகின் மிகச் சில்லிட்ட அருநீர்ச் சுனையில் அவனும் முதிய கவிஞனும் திளைத்திருக்கிறார்கள்.பெண்கள் குறித்துப் பேசுகிறார்கள்.சமதளத்தில் உள்ள ஒரு அழகிய யுவதியுடன் இருவருமே ஒரு தற்காலிக காதலில் ஆழ்ந்திருக்கிறார்கள்.பின்னர் அந்த முதிய கவிஞர் படிக்கல்லின் மேலேறி ஈர உடையை முறுக்கிப் பிழிகிறார்.பின்னர் அவர்களின் ஈரங்கள் உலர்ந்து விடுகிறது.அவர்கள் தங்களின் உலகங்களுக்கு செல்கிறார்கள்.
அவன் காதலிக்கிறான்.அவன் தன் உதட்டிலிருந்து தன் காதலியின் இதழுக்கு சாக்லெட் திரவத்தை இடம் மாற்றும்போது என்றுமில்லாத நடன அசைவில் அவள் உடைகளை சுழன்று களையும்போது தாதிக்கும்,தாய்க்கும் பிறகு யாருமே தீண்டாத காதுமடலை அவள் பற்றிக் கடிக்கும்போது அவன் வீட்டின் சிறுமரத்தினடியில் கொம்புள்ள சில வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன.செம்பருத்தியை காணும் போது காதலியின் முலைகள் நினைவில் பிரசன்னம் கொள்வதைத் அவனால் தவிர்க்கவே இயலவில்லை.பின்னர் அவன் முலை ஒரு கனி அல்ல.முலைகளை நான் மலரென்றே அழைப்பேன் என்று முடிவுக்கு வருகிறான்.
அவன் சிறுவனாக இருந்த போது மிருதுளா வாரியர் எடுத்த புகைப்படத்திலிருந்த உதட்டுச் சுழிப்பு அவன் வளரும் தோறும் மறையத் துவங்குகிறது.மீன் பிடிக்கத் தேவையான தூண்டில்கள்,வலைகள்,காத்திருப்பின் இருள் அறியாத உதட்டுச் சுழிப்பை சிரிக்கையில் மறைக்கத்தெரியாத அந்த சிறுவயதில் மீனுக்கு பதிலாக தலைப்பிரட்டைகளை எடுத்துச்செல்கிறான்.அந்த பிராயத்தில் எடுத்துச்சென்ற அந்த தலைப்பிரட்டையின் பெயர் சந்தோஷம் என்று இப்போது அதற்கு பெயர் சூட்டுகிறான்.
பெருநகரம் வந்து வெந்நீரால் உடல் முழுவதையும் நனைத்தபோது அவன் தனிமையை முதல் முறை உணர்கிறான்.தவிட்டுக்குருவிகளை வேடிக்கை பார்த்து புதிய காலணிகளை பறிகொடுத்த போது உலகின் மீது அவனுக்கு முதல்முறை அவநம்பிக்கை படர்கிறது.தலையணையின் அடியில் சிறிய கத்தியை தீட்டி உறக்கத்தை தொலைத்த போது முதல் கொலைக்கு தயாராகிறான். பெருநகரத்தின் கோடையாக திரண்டு வந்த அழுகையை சிறுநகரத்தில் வாழும் அவன் அம்மா புறக்கணித்த போது அவன் முன் உலகம் இரு கதைகளாய் பிளக்கிறது.
வேறு ஒரு முறை பெருநகரத்திலிருந்து தன் சிறுநகரத்திற்கு செல்லும் போது நெடுஞ்சாலை உணவகத்தில் நிற்கிறது பேருந்து.அங்கு ஒலிக்கும் இசை யாரோ ஒருவரின் துக்கத்தை யாருக்கோ அவசர அவசரமாய் பட்டுவாடா செய்து விடுகிறது.இளநீர் இல்லாத இளநீர் ஒன்றை அவன் பருகிறான்.உணவு இல்லாத உணவொன்றைப் புசிக்கிறான்.நிலவற்ற நிலவை வெறிக்கிறான்.இரவற்ற இரவில் காதலுக்கு இலக்கற்று அலையும் நம் மனமூட்டத்தின் மனச்சித்திரம் தானா இந்த நெடுஞ்சாலை உணவகம் என்று நினைத்துக்கொள்கிறான்.
அவனது மகள் தன் குட்டி நாவால் உலகை அறியத் துவங்குகிறாள்.அவளுக்கு நிலவுகள்,ஒட்டகங்கள்,கதைகள்,கடவுளர்கள் எல்லாவற்றையும் அவளது சிறு கையளவு வடிவங்களாய் மாற்றி பரிசுகளென விரிக்கிறான்.அவற்றை அவள் தன் இருகை பற்றி நாவால் அறியத் தொடங்கும் போது அவன் வேலைக்காக நகரம் விட்டு செல்கிறான்.மறுபடியும் ஒரு நேர்காணல்.அவனை அமரச்செய்ய இருக்கை இல்லை என்று நேர்காணலை செய்ய வேண்டியவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.இறுதியில் நேர்காணல் முடிந்து எழும் போது அவன் கால்கள் மரத்திருக்கிறது.அவனுடைய கால்கள் கையிலிருந்தது தெரியாமல் வணக்கம் சொல்லி விடைபெறுகிறான்.
வேலை நிமித்தம் காலையில் பேருந்து நிலையத்தில் நிற்கிறான்.இன்னும் யார் பார்வைக்கும் அறிய வராத ஒருவனின் சடலத்தின் மீது ஏறத்தொடங்கும் வெயில் நாயே உனக்கு வந்தனம் என்கிறான்.அவன் தன் நேர்காணல்களுக்கும் வேலைக்கும் அணிந்த ஷூ கிழிந்து நைந்து தோல் சிதைந்து நெகிழ்ந்திருக்கிறது.கருணை பணிவு பிரார்த்தனை மரணம் காதல் நிச்சயமின்மை அனைத்தையும் சுமந்திருக்கும் பழுதப்பட்ட கண்களுடன் அவை வீதியை வெறிக்கின்றன.
ராணி என்று தன்னையறியாத ராணியை பார்த்து மரணம் எதுவென கேட்கிறான்.புலன்களை ஒவ்வொன்றாகச் சாத்தி ஒளிகசியும் துளைகள் அனைத்தையும் மெழுகினால் அடைத்து கடைசியில் அவனைச் சூழும் இருள் தான் மரணம் என்று அவள் சொல்கிறாள்.அவன் மரணத்துக்காக காத்திருக்கிறான்.இந்த வாழ்க்கை பிரயாணத்தை யாரிடமும் பகிர இயலாமல் ஆக்கும் இந்த மாய பெருநகரம் கொடுக்கும் தனிமை போன்றது இந்த மரணம் என்று அறிவிக்கிறான்.
மேன்சனில் மொட்டை மாடிக்கு துணிகளை உலரப்போட செல்கிறான்.காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் துணிகளைப் பார்க்கும் போது துயரமாய் இருக்கிறது.மாடியின் விளிம்புச்சுவர் அருகே சென்று வானத்தின் விளிம்பில் வெட்டி நிற்கும் நகரத்தின் கட்டிடங்களைப் பார்க்கிறான்.மிகவும் உயரம் குறைந்த விளிம்புச்சுவர் அது.மரணம் சமீபத்தில்தான் இருக்கிறது.மரணம் அடையும் அவனை சிதையிலிட்டு எரித்தனர்.அவன் எரிந்த குழியில் நீரூற்றி தானியம் உதிர்த்தனர்.காற்றிலாடும் கதிராவேன்,சூரியன் ஆவேன்,சுதந்திரமும் அழகும் மேனியில் பூரிக்கும் சின்னஞ்சிறு குருவியாவேன், இறுதியில் தான் குதிரை ஆவேன் என்று சூழுரைக்கிறான்.
சிறுநகரத்திலிருந்து பெருநகரங்களை நோக்கி படித்து வரும் இளைஞர்கள், பெருநகரங்களில் அவர்கள் போகும் நேர்காணல்கள், பொருத்தமற்ற வேலைகள்,பிராயத்தின் நினைவுகள்,தனிமை,வேலைக்கான நேர்காணல்களுக்கு சென்று கொண்டிருக்கும் போதே தன் பெண் குழந்தை வளர்ந்து விட்டதை நினைத்து திகைக்கும் கணங்கள், புணர்ச்சி என்ற ஒன்றே நடப்பதில்லை, புணர்ச்சி பற்றிய புனைகதைதான் மொத்தமும் என்று உணர்வது,மரணம் தனிமை போன்ற ஒன்றுதான் என்று அறியும் தருணம் என்ற தொண்ணூறுகளுக்கு பிறகு வந்த ஒர் உலகத்தின் கதைதான் இந்த ஆயிரம் சந்தோஷ இலைகள்.இதில் நீங்கள் இருக்கிறீர்கள்.நான் இருக்கிறேன்.நாம் இருக்கிறோம்.இது தான் இந்த நூற்றாண்டின் படித்து பெரு நகரம் வந்து வேலையில் அமரும் பல இளைஞர்களின் கதை.துயரமும் மரணத்தை சமீபத்தில் பார்க்கும் அந்தக் கணங்களுக்கும் அப்பால் அவ்வவ்போது திருவிழாவும் வருகிறது.அது தான் ஆயிரம் சந்தோஷ இலைகளின் தருணம்.
திருவிழா
மழையில் குளித்த
மாமரம்
சற்றே தாழ்ந்து
முருங்கைக்கிளை
மீது வடிக்கிறது
துளிபாரம் தாளாத
இலைகள்
தங்கையென நின்றிருக்கும்
பப்பாளி இலைகளில்
சொரிகிறது.
தொடங்கிவிட்டதா
உங்கள் பண்டிகை
என்று அந்த பெருநகரத்தில் வாழும் சிறுநகரத்து சிறுவன் உவகை கொள்கிறான்.அப்போது அவன் ஆயிரம் சந்தோஷ இலைகளை தரிசிக்கிறான்.
ஆயிரம் சந்தோஷ இலைகள் - ஷங்கர்ராமசுப்ரமணியன் - பரிதி பதிப்பகம்.