நான்
பெங்களூரில் இருந்த போது என் வீட்டு எதிரில் ஒரு மகளிர் தங்கும் விடுதி
இருந்தது.ஒரு நாள் இரவு பன்னிரெண்டு மணி அளவில் நிறைய சத்தம்.ஜன்னல் வழியாக
வெளியே பார்த்த போது ஒரு ஆட்டோ டிரைவருக்கும் அந்த விடுதி பெண்ணுக்கும்
ஏதோ சண்டை.சற்று நேரம் நின்றதில் புரிந்த விஷயம் அந்த ஆட்டோ ஓட்டுநர்
அந்தப் பெண்ணிடம் அதிக பணம் கேட்கிறார்.பெண் முடியாது
என்கிறார்.வாக்குவாதம்.சட்டென்று அந்தப் பெண் அந்த ஆளை அடிக்க
ஆரம்பிக்கிறார்.அந்த ஆள் நீ பணமே தர தேவையில்லை என்று கை எடுத்து
கும்பிட்டு அனுப்பி வைக்கிறார்.பிறகு எதையோ முணுமுணுக்கிறார்.அந்தப் பெண்
மறுபடி வந்து அடிக்கிறார்.அவர் ஆட்டோ கம்பியில் தன் கையை கெட்டியாக
பிடித்துக்கொள்கிறார்.இது ரமலான் மாதம் நான் நோண்பில் இருக்கிறேன்
என்கிறார்.நீ வா நாம் போலீஸ் ஸ்டேஷன் செல்லலாம் என்கிறார் அந்தப் பெண்.அவர்
நீங்கள் கிளம்புங்கள் என்கிறார்.அவரது ஆண் உறுப்பில் எத்துவது போல செய்கை
செய்கிறார் அந்தப் பெண்.இறுதியில் அந்த ஆட்டோகாரர் வண்டியை கிளப்பி
சென்றுவிடுகிறார்.அந்தப் பெண் அந்த ஆளை அடித்ததால் கை வலி தாங்க முடியாமல்
கையை உதறிக் கொண்டு சிறிது நேரம் ரோட்டில் நடந்து விட்டு பின்னர் விடுதிக்குள்
செல்கிறார்.இரண்டு நாட்கள் கழித்து அதே பெண் அந்த விடுதியை நிர்வகிக்கும்
பெண்ணின் கணவரிடம் சண்டை போடுகிறார்.போலீஸை அழைப்பேன் என்று
கத்துகிறார்.அந்த ஆட்டோ ஓட்டுநர் போல இவர் பயப்படவில்லை.காவலர்கள்
வந்தார்கள்.எல்லோரையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார்கள்.மாலை
வீடு திரும்பும் போது அந்தப் பெண் விடுதியிலிருந்து காலி செய்யப்ட்டார்
என்பது தெரிந்தது.அந்த விடுதி நிர்வாகி காவலருக்களுக்கு தேநீர்
கொடுத்துக்கொண்டிருந்தார்.
அந்த ஆட்டோ ஓட்டுநர் அதிக பணம்
வசூலித்தார் என்றே வைத்துக்கொண்டாலும் எது அந்தப் பெண்னை அவரை அடிக்கும்
துணிச்சலை அளித்தது.அந்த ஓட்டுநர் ஏன் ஆட்டோ கம்பியை இரு கைகளாலும்
பிடித்துக்கொண்டு எந்த சூழலிலும் அந்தப் பெண்னை திருப்ப தாக்கிவிடக்கூடாது
என்று நின்றார்.நீங்கள் பெண் என்பதால் உங்களிடம் கண்ணியமாக
நடந்து கொள்கிறேன் என்று மறுபடி மறுபடி சொல்கிறார்.அவர் ஏன் போலீஸ் நிலையம்
செல்ல பயந்தார்.போலீஸ் நிலையம் செல்லலாம் என்ற துணிச்சல் அந்தப்
பெண்ணுக்கு மட்டும் எப்படி வந்தது.
ஒரு பெண் பொது வெளியில்
ஒருவன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தால் அது எந்த சந்தேகத்திற்கும்
இடம் தராத விவிலிய உண்மையாக கருதப்படுகிறது.ஏன்.சமீபத்தில் ஒரு பெண் ஒரு ஓலா கார் ஒட்டுநர் மீது புகார் தெரிவித்தார்.அவர் கைது செய்யப்பட்டார்.அந்தப் பெண் கொடுத்த புகார் உண்மை என்று எப்படி எல்லோருக்கும் தெரியும்.எது அந்தப் பெண் சொல்வது உண்மை என்று எந்த சந்தேகமும் இல்லாமல் எல்லோரையும் ஏற்கச் செய்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார்.அப்போது ஒருவர் நீங்கள் சொல்வது போல
அவர் ஒன்றும் பெரிய ஆள் எல்லாம் இல்லை , அவர் என்னிடம் தவறாக
பேசியிருக்கிறார் என்றார்.இந்த சம்பவம் நிகழ்ந்து ஐந்து வருடங்கள்
ஆகிறது.இப்போது அவர் ஒரு பொது நல விஷயத்திற்காக போராடும் போது அதன் காரணமாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீது
அந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை.ஏன்
பியூஷ் மீதான ஊடக வெளிச்சத்தை பார்த்த பின் அதை சொல்கிறார்.இத்தனை நாள்
பியூஷ் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாரா? பேஸ்புக்கில் கூட அவர்
இருக்கிறாரே? கேள்வி கேட்க வேண்டியது தானே.பியூஷ் மனுஷ் தான் கடுமையாக
நடந்து கொண்டது உண்மை, அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்,ஆனால் ஏன் இந்த
விஷயத்தை இப்போது எழுப்புகிறார் என்கிறார்.குறைந்தபட்சம் அவர் பிணையில் வெளிவரும் வரையில் காத்திருந்து புகாரை பொதுவில் வைத்து அவரின் பதிலை கேட்டிருக்கலாம்.இத்தகைய புகார் ஒரு வேளை அவர் மீது வலுவான ஆதாரமாக மாறி அவர் தவறானவர் , பிணையில் வரும் தகுதியற்றவர் என்பதாக மாறியிருந்தால் இன்னும் சில காலம் அவர் சிறையில் காலம் கழிக்கவேண்டி வந்திருக்கும்.
நாகராஜ் மஞ்சுளே
சய்ரத் என்ற படம் எடுத்து வெற்றி பெறும் போது அவருடைய முன்னாள் மனைவி அவர்
தனக்கு இழைத்த புகாரை பொதுவில் வைக்கிறார்.நாகராஜ் முறையாக விவாகரத்து
பெற்றிருக்கிறார்.அவருடைய முன்னாள் மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர் மேல்
முறையீடு செய்யலாம்.ஆனால் அவர் ஊடகங்களில் பேசுகிறார்.யாரோ நாகராஜ் மீது
நல்லெண்ணம் கொண்டவர்கள் அவரின் முன்னாள் மனைவியை அவ்வாறு இப்போது செய்தால்
நிறைய காசு கேட்க முடியும் என்று சொல்லி இருக்கலாம்.முறையாக விவாகரத்து
பெற்று பிரிந்தவர் மீது எப்படி புகார் செய்ய முடியும்.பெண்ணிய வாதிகள்
நாகராஜ் செய்தது பெரிய பிழை என்கிறார்கள்.விவாகரத்து பெற்றது பிழை இல்லை.ஜீவனாம்சம் அதிகம் வேண்டும் என்றால் அதற்கான வழிகள் இருக்கிறது.
சரி,அதே பெண்ணியவாதிகள்
ஒரு பெண் ஒரு ஆணுடன் காதலில் அல்லது திருமண உறவில் இருந்து அவருக்கு
பிடிக்கவில்லை என்றால் விலகிச்செல்வதற்கான உரிமை உண்டு
என்கிறார்கள்.அப்போது அந்த உரிமை ஆணுக்கும் உண்டு தானே.சில வருடங்களுக்கு
முன் செய்திதாளில் வாசித்த ஒரு வழக்கு.ஒரு பெண்ணும் ஆணும் ஒன்றாக ஒரே
வீட்டில் எட்டு வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.எட்டு
வருட முடிவில் அந்த ஆண் தன் வீட்டில் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து
கொள்ள முடிவு செய்கிறார்.அந்தப் பெண் பாலியல் வல்லுறவு புகாரை அந்த ஆள்
மீது தொடுக்கிறார்.நீதிபதியிடம் அந்த ஆள் நாங்கள் எட்டு வருடங்கள் ஒன்றாக
இருந்தோம்,ஆனால் இப்போது எப்படி அந்தப் பெண் பாலியல் வல்லுறவு புகாரை
கொடுக்க முடியும் என்கிறார்.அதற்கு நீதிபதி நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் எட்டு
வருடங்கள் ஒன்றாகத்தானே இருந்தீர்கள் , இப்போது தானே பிரிந்து வேறு பெண்னை
திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் , அதனால் புகாரை எதிர் கொள்ளுங்கள்
என்கிறார்.இப்படியாக உடன்பாட்டுடன் நிகழ்ந்த உறவு வல்லுறவாக மாறி புகாரில்
முடிகிறது.அந்தப் புகார் ஏற்கவும் படுகிறது.
தன்னுடன் எட்டு
வருடங்கள் ஒன்றாக இருந்த பெண் என்னை விடுத்து வேறு ஒரு ஆணை திருமணம்
செய்துக்கொள்ள செல்கிறாள் என்று எந்த ஆணும் புகார் தெரிவிக்க
முடியாது.அப்போது நமது பெண்ணியவாதிகள் அது அந்தப் பெண்ணின் உரிமை
என்பார்கள்.ஏன் ஒரே விஷயம் சலுகையாகவும் ,உரிமையாகவும் மாறுகிறது.ஒரு ஆண்
பெண்களை தொந்தரவு செய்யும் போது பொறுக்கி என்கிறோம்.பெண் தொந்தரவு செய்யும்
போது ஏமாற்றும் போது என்ன பெயர் சொல்லி அழைப்பது.இருக்கிற பெயர்களை
உதிர்த்தால் பெண்ணியவாதிகள் குற்றம் என்கிறார்கள்.அப்படியென்றால் புதிய
சொற்களையாவது உருவாக்க வேண்டும்.
எங்கெல்லாம் வேண்டுமோ அங்கே
சலுகையாக , எங்கு சாத்தியமோ அங்கு உரிமையாக மாறுவது எப்படி பெண்ணியம்
ஆகும்.ஆண்களில் அப்பாவிகள் இருக்கிறார்கள், பொறுக்கிகள்
இருக்கிறார்கள்.பொதுவாக எதையும் சொல்ல முடியாது.அப்படியாக
பெண்களில் அபலைகள் இருக்கிறார்கள.சுரண்டுபவர்கள் இருக்கிறார்கள்.பொதுவான
பெண் பிம்பம் என்று எதுவும் இல்லை.
தலித்தியம் சார்ந்த
உரையாடல்கள் தொடங்கி இன்று அரசியல் சக்தியாக மேலெழுந்து அவர்கள் அதிகாரத்தை
நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.ஏன் பெண்ணியம் சார்ந்த எந்த
உரையாடலும் இங்கே பெரிதாக நிகழவில்லை.ஏன் அவை கேலிக்குரியதாக மாறுகிறது.ஏன்
எந்த வகையான அரசியல் எழுச்சியும் நிகழவில்லை.ஏனேனில் உரையாடலில் நோக்கம்
இல்லை.தலித்தியம் இயல்பாகவே நகரமயமாதல் , தொழில்மயமாதல், அமைப்பாக்கம்
பெறுவது, அரசியல் சக்தியாக மேலெழுவது, கலை இலக்கியங்களை
பயன்படுத்திக்கொள்வது என்று வலுவான தரப்பாக இருக்கிறது.முக்கியமாக
அம்பேத்கர், அயோத்திதாசர், டி.ஆர்.நாகராஜ் போன்ற மேதைகள் பேசும் போது தலித்
பிரச்சனையை வரலாற்று தளத்தில் வைத்து பேசினார்கள்.இன்று ஒரு தலித்
கஷ்டப்படுவதற்கு இன்றைய மேல் சாதியினர் காரணம் இல்லை.அது ஒரு வரலாற்று
நிகழ்வு என்பதை அவர்கள் தங்கள் எழுத்தில் பேச்சில் தொடர்ந்து
முன்வைத்தார்கள்.ஏன் பெண்ணிய தளத்தில் அப்படியான எதுவும் இல்லை.மறுபடி
மறுபடி வெற்று கோஷங்கள்.வரலாற்று புரிதல்கள் அற்ற வெற்று அதிரடி
வாதங்கள்.சில உடனடி லாபங்களுக்கு அப்பால் இவை எதையும் தரப்போவதில்லை.
பெண்ணிய
கோஷங்கள் எழுப்பும் அநேக பெண்கள் தங்கள் கணவரை அவர்களின்
பெற்றோரிடமிருந்து பிரித்து தங்களது பெற்றோரிடம் ஒரே வீட்டில்
வாழ்கிறார்கள்.அல்லது தங்கள் பெற்றோர் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில்
வாழ்ந்து பெண்ணிய தத்துவத்தை முன்னெடுக்கிறார்கள். சுதந்திரம், தன்
வாழ்வை தானே முடிவு செய்து கொள்வதற்கான உரிமை, தன்னிடம் தவறாக நடந்து
கொள்பவர்களை எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன துணிச்சல், நினைத்தால் எந்த
இடத்திற்கும் செல்லலாம், அதற்கு இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்
என்கிற உரையாடல் , பாலியலுக்கு அப்பால் இருக்கும் பெண் உடல் குறித்த
உரையாடல், பெண் என்பதற்கான சலுகையை வேலை இடத்தில் பெறாமல் இருப்பது,அபலையாக
நடித்து ஆணை சுரண்டாமல் இருப்பது என்று பெண்ணியவாதம் பல தளங்களில் செல்ல
முடியும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் பதினெட்டு வயதில் இந்தியா வந்து ஹிப்பி போல
வாழ்ந்து செல்கிறார்.பின்னர் ஆப்பிள் என்கிற பெரிய நிறுவனத்தை
உருவாக்கிறார்.பதினெட்டு வயதில் சும்மா சம்மந்தமே இல்லாமல் சுற்றி திரிய
அவருக்கு இருந்த சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு சாத்தியப்பட வேண்டும்.அப்போது
அவளும் ஆப்பிள் போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவாள்.பாரதி கங்கையின்
படித்துறையில் அமர்ந்து கவியாகும் போது ஒரு பெண்ணும் வீட்டை துறந்து
படித்துறையில் அமரந்து கவியாக ஆகும் உரிமை இருக்கிறது.சுதந்திரம்.அதுதான்
பெண்ணியம்.அதை நோக்கி பேசுவதே பெண்ணிய உரையாடல்.மற்றபடி சும்மா ஒருவனை
பயமுறுத்த போலீஸில் பிடித்துக்கொடுத்து விடுவேன் என்பதும் அபலையாக நடித்து
உதவிகளை பெறுவதும், ஊடக வெளிச்சம் கிடைக்க புகார் தெரிவிப்பதும் எங்கும்
கொண்டு செல்லாது.
No comments:
Post a Comment