பிறழ்வும் மீட்சியும்









அசோகமித்திரனின் மானசரோவர் நாவலை நாவல் என்று சொல்வது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.ஏனேனில் இது அடிப்படையில் ஒரு சிறுகதைக்கான வடிவத்தையே கொண்டிருக்கிறது.தொடக்கம் – முடிச்சு – முதிர்வு அதுவே மானசரோவர் நாவலின் கதை வடிவம்.கோபால்-சத்யன்குமார் இருவரும் நண்பர்கள்.கோபால் சென்னையில் ஒரு சினிமா கம்பெனியில் கதை இலாகாவில் பணி புரிபவன்.சத்யன்குமார் இந்தி சினிமா உலகின் மிக முக்கியமான நாயகன்.சத்யன்குமார் சென்னையில் உள்ள சினிமா கம்பெனி தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்க வரும்போது கோபாலுடனான தொடர்பு ஏற்படுகிறது.பின்னர் சத்யன்குமார் சென்னை வரும்போதெல்லாம் இருவரும் சந்திக்கிறார்கள்.இருவருக்கும் இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இருப்பதால் அவர்களால் இயல்பாகவும் பேசிக்கொள்ள இயல்கிறது.சத்யன்குமாருக்கு கோபால் மெஹர் பாபாவை நினைவுபடுத்துகிறான்.கோபாலுக்கு சத்யன்குமார் தன் மீது ஏன் இத்தனை அன்பும் பரிவும் மதிப்பும் கொள்கிறான் என்று புரியவில்லை. அவனுக்கு ஒரு சித்தர் அறிமுகம் கிடைக்கிறது.அவருடனான பழக்கம் அவனுடைய ஆளுமையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.கோபால் எதன் மீதும் அதிக பற்று இல்லாதவனாக தன்னையே விலகி நின்று பார்க்கும் பார்வை கொண்டவனாக மாறுகிறான்.

சத்யன்குமார் பெஷாவரில் பிறந்து பம்பாய் வந்து பின்னர் நடிகனாக வாழ்வில் உயர்வு பெறுகிறான்.இந்திய பிரிவினைக்குப் பின் தன் தாய் தந்தையரை அவனால் ஒரு போதும் சந்திக்க இயலவில்லை.அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது மரணமடைந்து விட்டார்களா என்பதையும் அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை.பம்பாயில் அவன் வீட்டில் அவனை சுற்றி எப்போதும் அவனது உறவினர்கள்.இது நடிகர் திலீப்குமாரை வைத்து உருவாக்கப்பட்ட புனைவு கதாபாத்திரம் என்பதை எவருமே எளிதல் அறியலாம்.

நாவலின் மையம் பிறழ்வு.கோபாலின் மனைவி ஜம்பகம் சத்யன்குமார் வீட்டிற்கு வரும் போது அவன் மீதான ஈர்ப்பால் அவனை நெருங்குகிறாள்.அதிர்ச்சியடையும் சத்யன்குமார் வெளிறிப்போய் ஓடுகிறான்.இதை கோபாலின் மகனும் மகளும் பார்த்துவிடுகிறார்கள்.அடுத்த சில வருடங்களில் ஜம்பகத்தின் மனம் பிறழ்ந்து விடுகிறது.அதற்கு முன் எப்படியோ கோபாலை கட்டாயப்படுத்தி தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள்.தன் பிறழ்வின் சாட்சியாக இருந்த மகனை கொன்றுவிடுகிறாள்.தன் மனைவியால்தான் தன் மகன் கொலை செய்யப்பட்டான் என்ற உண்மையை கோபால் சத்யன்குமாரிடம் மட்டும் சொல்கிறான்.

கோபாலின் குடும்பம் சிதறுண்டு போனதற்கு தானும் ஒரு காரணம் என எண்ணும் சத்யன்குமார் குற்றவுணர்வு கொள்கிறான்.உண்மையை சொல்ல கோபாலை தேடி அலைகிறான்.ஆனால் கோபால் சித்தரை பார்ப்பதற்காக ஊருக்கு சென்று விடுகிறான். சியாமளா என்று துணை நடிகை கோபால் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள சத்யன்குமாருக்கு உதவுகிறாள்.சத்யன்குமாருக்கு சியாமளா மீது பற்று ஏற்படுகிறது.அவளை தன் துணைவியாக்கி கொள்கிறான்.படப்படிப்பு ஒன்றின் போது தன் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளும் சத்யன் இனியும் கோபலை சந்திப்பதை தள்ளிப்போடக்கூடாது என்று முடிவு செய்து ராமனாதன் என்னும் சவுன்ட் என்ஜீனியரின் துணையோடு கோபால் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறான்.

சத்யன்குமார் உண்மையை சொல்வதற்கு முன் அங்குள்ள சித்தர் அனைத்தையும் சொல்கிறார்.கல்லீரல் பாதிப்பு ஒன்றும் செய்யாது என்கிறார்.அங்குள்ள ஆற்றில் குளித்து சத்யன்குமாரை தன் பாவங்களில் இருந்து மீட்சியடைய சொல்கிறார் சித்தர்.அதுவே அவனுடைய மானசரோவர் என்கிறார். 

திலீப்குமாரின் கதை ஒன்றில் நிறைய குடித்தனங்கள் இருக்கும் வீட்டு கிணற்றில் எலி விழுந்து இறந்து விடும்.இப்போது என்ன செய்வது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும்.அங்கே வாழும் ஒரு பாட்டி கங்கா தீர்த்தத்தை கொண்டு வந்து கிணற்றில் ஊற்றுவாள்.இனி ஒன்றும் பிரச்சனையில்லை என்று சொல்லி சென்று விடுவாள்.இந்த பாட்டி திலீப்குமாரின் பல கதைகளில் வருகிறாள்.அக்ரஹாரத்தில் பூனை என்ற சிறுகதையில் வருவதும் இதே பாட்டிதான்.பாட்டி கிணற்றில் கங்கா தீர்த்தத்தை ஊற்றியதற்கும் சித்தர் சத்யன்குமாரை ஆற்றில் குளிப்பதின் மூலமாக மீட்சி அடையலாம் என்று சொல்வதற்கும் பெரிய வித்யாசமில்லை.வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது.மறுபடியும் சரி செய்ய இயலாத பிறழ்வு.ஆனால் அந்த பிறழ்வுக்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது.அதை வாழ்ந்தாக வேண்டும்.அதற்கு நாம் அந்த பிறழ்வை கடந்தாக வேண்டும்.பல நேரங்களில் பிறழ்வின் தாக்கம் நம் அகத்தில்தான் இருக்கிறது.புற பாதிப்புகள் பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை.ஜம்பகம் பிறழ்கிறாள்.அதிலிருந்து வெளியே வந்து அவளால் இயல்பான வாழ்வை வாழ இயலவில்லை அல்லது தெரியவில்லை.அவள் மனம் சிதறிவிடுகிறது.சிதறி விடும் மனதை தொகுத்துக்கொள்ள அவளால் முடியவில்லை.தர்க்கம் கொண்டோ, அல்லது அபத்த சடங்குகளின் மூலமாகவோ அல்லது மன்னிப்பு கோரியோ நாம் ஒரு பிறழ்வை கடந்து செல்லலாம்.ஜம்பகத்தால் இதில் எதை ஓன்றையும் செய்ய இயலவில்லை.சத்யன்குமாருக்கு தர்க்க ரீதியாக இதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று புரியவில்லை.சித்தர் அவனுக்கு ஒரு அபத்த சடங்கை செய்யச்சொல்லி அதன் மூலமாக அவனுக்கான மீட்சியை அளிக்கிறார்.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் இரு சகோதரிகளில் மூத்தவளின் வாழ்வு பிறழ்ந்துவிடுகிறது.அதன் பின்னான வாழ்வை எப்படி தொகுத்துக்கொள்வது அர்த்தப்படுத்திக்கொள்வது என்று அவள் தன்னளவில் அறிந்து கொள்கிறாள்.பிறழ்வும் மீட்சியுமே தண்ணீர் நாவலும் மானசரோவர் நாவலும் முன்வைக்கும் மையச்சரடு.நான் வாசித்தவரை அசோகமித்திரனின் நாவல்களில் இது மிகவும் விசித்திரமானது.அறிவின் துணை கொண்டு நம்மால் சில விஷயங்களை வாழ்வில் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.சத்யன்குமாருக்கும் கோபாலுக்கும் சித்தர் ஏதோ ஒரு வகையில் உதவுகிறார்.ஒரு மனநல மருத்துவரிடம் சென்று அவர் அளிக்கும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை உட்கொண்டு சத்யன்குமார் ஒரு வேளை மீளலாம்.ஜம்பகமும் மீளலாம்.ஆனால் அடிப்படையில் நம் மனச்சோர்வு நீங்க வேண்டும் என்றால் அதன் காரணமான அலைகள் நம் மனதிலிருந்து முழுவதுமாக நீங்க வேண்டும்.அதை எல்லா நேரங்களிலும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளால் செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை.நமது மனச்சோர்வு, பிறழ்வுக்கான காரணத்தை நாம் எல்லோருமே அறிந்தே இருக்கிறோம். அந்த பிறழ்வின் எண்ண அலைகள் நிற்க வேண்டுமென்றால் பிறழ்வு உண்மையில் பிறழ்வில்லை என்று ஆழ்மனம் நம்ப வேண்டும்.பிறழ்வு பிறழ்வற்றது என்று மனம் ஏற்க வேண்டும் என்றால் அணைத்தும் பிறழ்வே அல்லது எதுவுமே பிறழ்வல்ல என்று சொல்லியாக வேண்டும்.மானசரோவரும் தண்ணீரும் முதலாவதை சொல்கிறது.வாழ்வின் அபத்தத்தை அறிந்தவன் அந்த அபத்த வாழ்வில் நிகழும் அபத்தங்களை எளிதல் கடக்கிறான்.சாக்கடை நீரும் நண்ணீரும் கலக்கலாம்.அது இயல்பே என்கிறது தண்ணீர் நாவல்.பிறழ்வை கடக்க ஆற்றில் குளித்து எழும் எளிய சடங்கு போதும் என்கிறது மானசரோவர்.

மானசரோவர் – அசோகமித்திரன் – காலச்சுவடு பதிப்பகம்.
                                                                   

சார்வாகமும் அத்வைதமும்





தேவி பிரசாத் சட்டோபாத்யாயா


ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலில் ஆறு தரிசனங்களாக சாங்கியம்,நியாயம்,வைசேஷிகம்,யோகம்,பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.சாங்கியத்தை அவர் ஒரு தரிசனமாக முன்வைக்கவில்லை.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் என்ற புத்தகத்தில் சாங்கியம்,யோகம், நியாய வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் மற்றும் லோகாயதம் அல்லது சார்வாகம் என்ற ஆறு தரிசனங்களை முன்வைக்கிறார்இதில் நியாயத்தையும் வைசேஷிகத்தையும் ஒரே தரிசனமாக்குகிறார்.சார்வாகத்தை முதன்மைப்படுத்துகிறார்.ஜெயமோகனின் நூலில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறார்.தேவி பிரசாத்தின் நூலில் ஜைன தத்துவம் பற்றியும் புத்தரின் காலத்தில் பெளத்தம் எவ்வாறு உருவானது என்பதையும் பிற்காலத்தில் அது எவ்வாறு மஹாயான பெளத்தமாகவும் ஈனயான பெளத்தமாகவும் பிரிந்தது என்பதையும் பற்றியும் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகனின் நூலில் அனைத்து தரிசனங்களை பற்றியும் ஒரே அளவிலான விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருந்தாலும் பிற்கால வேதாந்த தரிசனங்களில் அத்வைதம் பற்றி எழுதும் போது அதுவே இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த தரிசனம் என்று முன்வைக்கும் தொனி உள்ளது.தேவி பிரசாத்தின் நூலில் அவர் அடிப்படையில் எல்லா தரிசனங்களையும் கருத்துமுதல்வாதம் என்றும் பொருள்முதல்வாதம் என்றும் பிரிக்கிறார்.சாங்கியம் பிரகருதியை பற்றி மட்டும் பேசும் போது பொருள்முதல்வாத தளத்தில் இருந்தது என்றும் பின்னர் அதில் புருஷன் இணைந்த போது எப்படி கருத்துமுதல்வாத தரப்பாக மாறியது என்றும் சொல்கிறார்.யோகம் ஒரு தரிசனமே அல்ல என்கிறார்.நியாய வைசேஷிகம் அறிவுத் தோற்றவியல் மற்றும் மூல மெய்பொருள் ஆய்வு ஆகியவற்றில் மிக முக்கியமான சாதனைகளை செய்திருந்தாலும் அவையும் கருத்துமுதல்வாத தரப்பிலிருந்து சிலவற்றை பிற்காலத்தில் பெற்றுக்கொண்டது என்று வருத்தம் கொள்கிறார்.பூர்வ மிமாம்சம் பற்றி சொல்கையில் அது முழுக்க முழுக்க பொருள்முதல்வாதத்தை முன்வைத்த தரப்பு என்கிறார்.ஆனால் அனைத்தையும் விட லோகயாதம் அல்லது சார்வாகம் எப்படி ஒரு முழுமையான பொருள்முதல்வாத தரிசனமாக நம் மரபில் இருக்கிறது என்றும் அதை நாம் அவசியம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் நூல் முழுக்க அதைப்பற்றியே அவரது முழு கவனமும் இருக்கிறது.இது ஒரு குறை என்றே தோன்றுகிறது.

பூர்வ மீமாம்சம் பற்றி சொல்கையில் மந்திரங்கள் என்பது பிராத்தனையாக இல்லாமல் எப்படி கட்டளையிடுபவையாக இருக்கிறது என்றும் பூர்வ மீமாம்சர்கள் எப்படி வேதாந்த தரப்பை தீவிரமாக எதிர்த்தார்கள் என்றும் எழுதுகிறார்.பூர்வ மீமாம்சம் பற்றி படிக்கும் போது இன்றைய புரோகித மரபு அதிலிருந்துதான் வந்தது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.மொழி குறித்தும் உச்சரிப்பு குறித்தும் அவர்களே முக்கியமாக ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார்கள்.அவர்கள் கடவுளிடமும் தேவர்களிடமும் இறைஞ்சுவது இல்லை.மாறாக அவர்கள் யாகங்கள் மூலம் மந்திரங்கள் சொல்லி கட்டளையை பிறப்பிக்கிறார்கள்.அதற்கு தேவர்கள் கட்டுப்பட்டாக வேண்டும்.அவர்களது யாகங்கள் முழுக்க முழுக்க லெளகீகம் சார்ந்தவை.இதனால் பூர்வ மீமாம்சம் எப்படி ஒரு பொருள்முதல்வாத தரப்பாக இருந்தது என்று தேவி பிரசாத் நிறுவுகிறார்.

வேதாந்த தரப்பு பற்றி சொல்லும் போது அந்த தரிசனத்தை முன்வைத்த எல்லோரும் உழைப்பிலிருந்து அந்நியமானவர்கள்.ஒரு சமூகத்தில் பலர் உடல் உழைக்க அதிலிருந்து உருவாகும் உபரியை பெற்று வாழும் சிலரின் சிந்தனை வளரச்சியே கருத்துமுதல்வாதமாக நம் மரபில் தோன்றியது.உடல் உழைப்பு உலகை திருஷ்டிக்க வைக்கிறது.இது உண்மை என்று ஏற்க வைக்கிறது.ஆனால் உழைப்பிலிருந்து விலகியவர்கள் இந்த லெளகீக பொருள்சார்ந்த உலகின் எண்ணங்களிலிருந்து விலகி பூடகமான ஞானத்தை முன்வைக்கிறார்கள்.இதில் ஒரு சமூகத்தில் உழைக்காதவர்கள் பிரமாணர்களும் ஷத்திரியர்களும்தான்.அவர்களின் தரிசனமே கருத்துமுதல்வாதம்.இத்தகைய கருத்துக்களால் கர்மம் ஞானத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கப்பட்டது.இதனால் கர்மம் வெறுக்கப்பட்டது.ஆகையால் நம் இந்தியாவில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளராமல் நாம் முடங்கிவிட்டோம்.லோகாயத மரபை மேலெடுத்து அதை தவிர்த்த பிறவற்றை நிராகரித்து லெளகீகமான பொருள்முதல்வாத தரிசனத்தை வளர்க்க வேண்டும்.அதன் மூலம் விஞ்ஞானத்தையும்,இயற்கையை வெல்லும் அறிவையையும், தொழில்நுட்பத்தை பெருக்கும் ஆற்றலையும் நாம் நம் மரபிலிருந்து பெற முடியும் என்கிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

நம் சமூகத்தில் முதலில் பொருள்முதல்வாத தரப்புகளே இருந்திருக்கலாம் என்றும் பின்னர் பலரை உழைக்க வைத்து அதிலிருந்து பெறும் உபரியால் வாழும் சிலர் இருக்கக்கூடியதான சமூக அமைப்பால்தான் கருத்துமுதல்வாத தரப்பு உருவானது என்கிறார் தேவி பிரசாத்.ஜெயமோகன் இந்த கருத்துக்கு மாறாக முதலில் ஆன்மிகவாத தரப்பே நம் சமூகத்தில் இருந்திருக்க முடியும் என்றும் பின்னர்தான் பொருள்முதல்வாத தரப்பு உருவாகியிருக்க முடியும் என்கிறார்.ஜெயமோகன் சொல்வதில் உண்மை இருக்கிறது.இன்றும் பழங்குடிகளை நாம் பார்க்கிறோம்.அவர்களிடம் மூத்தார் வழிபாடும், நீத்தார் வழிபாடும்,இயற்கை வழிபாடும், சடங்குகளும்தானே இருக்கிறது.பல பழங்குடிகள் ஏதேனும் ஒரு வகையில் ராமாயணத்தோடும் மகாபாரதத்தோடும் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.அதெப்படி பொருள்முதல்வாத சிந்தனையாக வளர்ந்திருக்க முடியும்.சமூகங்கள் ஓரிடத்திலேயே நிலையாக தங்கி உற்பத்தி செய்து அதில் வரும் உபரியால் சமூக அமைப்பு உருவாகி சிலர் கல்வி கற்று அதன் மூலமே தர்க்கம் உருவாகியிருக்க முடியும்.அதிலிருந்துதான் நியாயத்தை முன்வைத்து அதற்கு முன்னே ஏதேனும் ஒரு வடிவில் இருந்திருக்கக்கூடிய எண்ணங்களை நம்பிக்கைகளை தர்க்கப்படுத்தி தரிசனங்களாக அறிஞர்கள் முன்வைத்திருக்க முடியும்.

இந்த இரண்டு நூல்களுமே அறிமுக நூல்கள்தான்.இதில் தேவி பிரசாத்தின் நூலை தமிழில் வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.எனக்கு இந்த மொழிபெயர்ப்பை இன்னும் செம்மைபடுத்தலாம் என்று தோன்றுகிறது.இந்திய தத்துவ மரபில் தோன்றிய தரிசனங்களை இன்னும் விரிவாக அறிந்துகொள்வதற்கு தாஸ்குப்தா, கே.தாமோதரன், ஹரியண்ணா, ஷெர்பாட்ஸ்கி ஆகியாரின் நூல்களையும் வாசித்தாக வேண்டும் என்றும் தோன்றுகிறது.

ஒரு தரிசனம் சில காலம் கழித்து வேறொன்றாக மாற்றம் கொள்கிறது என்ற எண்ணத்தை இந்த நூல்களை வாசிக்கும் போது அறிகிறோம்.இது எவ்வாறு நிகழ்கிறது என்று நினைக்கும் போது அது அந்த காலத்தின் அவசியம் என்றே தோன்றுகிறது.உதாரணமாக ஈ.வே.ரா கடவுள் இல்லை என்று கோட்பாட்டுடன் முன்வைத்த திராவிடக் கழகத்தை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாக மாற்றியதன் மூலமாகத்தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர முடிந்தது.கோசாம்பி பெளத்தம் குறித்தும் ஜைனம் குறித்தும் சொல்லும் போது அசைவை உணவை உண்ணும் ஒரு சமூகத்தில் இப்படி சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று சொல்லும் தரிசனங்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. மாறாக அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பெரிய உடல் உழைப்பு , வேட்டையாடுதல் ஆகியவை இல்லாமலேயே உணவு சேகரிப்பு மூலம் ஆரோக்கியமான உணவு கிடைத்திருக்கிறது.அதனால்தான் அந்த தரிசனங்கள் இங்கு நிலைபெற்றது என்கிறார்.ஆக ஒரு தரிசனம் அல்லது கருத்து ஒரு சமூகத்தில் நிலைத்திருக்கிறது என்றால் அது யாராலோ உற்பத்தி செய்து மட்டுமே முன்வைக்கப்படுவதில்லை மாறாக அது மக்களாலும் ஏதோ ஒரு வகையில் ஏற்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் பல்வேறு உயர் நீதிமன்றங்களால் தீர்ப்புகள் எழுதப்படும்.ஏனேனில் அதை சமூகம் அனுமதிக்கும்.சமூகம் அனுமதிப்பதையே நீதிமன்றங்கள் தீர்ப்பாக எழுதுகின்றன.அதுவே பாராளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் சட்டங்களாக இயற்றப்படுகின்றன.சார்வாகமும் அத்வைதமும் மக்களிடமிருந்து தோன்றி பேரறிஞர்களால் தர்க்கப்படுத்தி தரிசனங்களானவை.ஏன் சில தரிசனங்கள் தேங்கியும் சில தரிசனங்கள் வளர்ச்சியும் பெற்றன.நாம் அதை கண்டடைவதன் மூலமாக நம் மூதாதையர்களின் கருத்துகளையும்,எண்ணங்களையும்,நம்பிக்கைகளையும் கண்டடையலாம்.

நூல்கள்:

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா – மொழிபெயர்ப்பு – வெ.கிருஷ்ணமூர்த்தி – படைப்பாளிகள் பதிப்பகம்.
 
இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்.


ஜேன் வயில்ட் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்







ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஜேன் வயில்ட் பற்றிய ஒரு புனைவு சித்திரமே The Theory of Everything.இந்த திரைப்படம் ஜேன் எழுதிய சுயசரிதையை அடிப்படையாக கொண்டது.ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது ஜேனை ஒரு விருந்தில் சந்திக்கிறார்.கண்டதும் காதல்.ஜேன் அதே பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்துக்கொண்டிருப்பார்.ஸ்டீபன் காலத்தை பற்றி உயர் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்.

அந்த காலகட்டத்தில்தான் அவர் கீழே விழும் பேனாவை எடுக்க சிரமப்படுகிறார்.ரயிலை பிடிப்பதற்காக படிக்கட்டில் ஏறும்போது தடுமாறுகிறார்.ஒரு நாள் பல்கலைக்கழகத்திற்கு வேகமாக செல்லும் போது கீழே விழுகிறார்.அவரை பரிசோதனை செய்யும் மருத்துவர் அவருக்கு இயக்க நரம்பியல்(Motor Neuron) ஒழுங்கின்மை இருப்பதாக சொல்லி அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்கிறார்.அவரது மூளைக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றும் ஆனால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பது , பேசுவது , உண்பது ஆகியவற்றை தன் விருப்பப்படி செய்ய இயலாமல் போகும் என்கிறார்.ஸ்டீபன் அதன்பின் ஜேனை சந்திக்க மறுக்கிறார்.ஆனால் ஜேன் ஸ்டீபனின் இயக்க நரம்பணு ஒழுங்கின்மையை பற்றிய அறிந்தும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.ஸ்டீபனின் தந்தையும் ஜேனிடம் இது சரியான முடிவு அல்ல என்று சொல்கிறார்.ஆனால் ஜேன் ஸ்டீபனை திருமணம் செய்து கொள்கிறார்.ஸ்டீபன் தன் உயர் ஆராய்ச்சியை பரிசீலனை குழுவிடம் சமர்ப்பிக்கிறார்.அவருடைய கோட்பாட்டை குழுவினர் மிகவும் பாராட்டுகின்றனர்.அவர் டாக்டர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிறார்.அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.அடுத்ததாக ஒரு பெண் குழந்தை.ஸ்டீபன் Black holes குறித்து அளிக்கும் விரிவுரையை கவனிக்கும் சக இயற்பியலாளர்கள் அவரை மிகவும் பாராட்டுகிறார்கள்.ஸ்டீபன் உலக அளவில் பலருக்கும் பரிச்சயமான இயற்பியலாளராக மாறுகிறார்.

ஒரு பக்கம் குழந்தைகள், மறுபக்கம் ஸ்டீபன் என்று ஜேன் மிகவும் எரிச்சலும் மனச்சோர்வும் அடைகிறார்.அவரால் தன் இலக்கிய ஆய்வில் கவனம் செலுத்த முடியவில்லை.ஸ்டீபனுக்கு தடியை கொண்டு நடப்பது மிகவும் சிரமமாக மாற அவருக்கு ஜேன் முதலில் சாதாரண சக்கர நாற்காலியையும் பின்னாளில் மின் சக்கர நாற்காலி உபயோகப்படுத்தவும் பழக்கப்படுத்துகிறார்.ஜேனின் மனச்சோர்வை புரிந்து கொள்ளும் அவரது அன்னை அவரை தேவாலயத்தில் ஒத்திசைவு குழுவில் இணைந்து பாடச்சொல்கிறார்.ஜேன் அதை ஏற்று தேவாலயம் சென்று குழுவில் இணைந்து பாடுகிறார்.அங்கு அவருக்கு இசை கலைஞரான ஜோனதான் அறிமுகமாகிறார்.அவர் ஜேனின் வீட்டுக்கு வந்து அவரது மகனுக்கு பியானோ சொல்லித்தருகிறார்.ஜோனதான் ஸ்டீபனின் வீட்டு அங்கத்தினராகிறார்.ஸ்டீபன் தம்பதிகளுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கிறது.அப்போது ஜேனின் அன்னை இந்த குழந்தை ஜோனதானுக்கு பிறந்ததா அல்லது ஸ்டீபனுக்கு பிறந்த்தா என்று கேட்கிறார்.இத்தகைய கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஜேன் அதிர்ச்சி அடைகிறார்.இந்த உரையாடலை கேட்டுவிடும் ஜோனாதான் இனிதான் இங்கு வருவது சரியில்லை என்று சொல்லி விலகிச்செல்கிறார்.ஸ்டீபன் ஜோனதானை தேவாலயத்தில் சந்தித்து அவர் வீட்டுக்கு வர வேண்டும் என்கிறார்.இதற்கிடையில் ஒருமுறை ஸ்டீபன் வெளிநாட்டு பயணம் செல்லும் போது நுரையீரலழற்சியால் பாதிக்கப்படுகிறார்.அப்போது அவருக்கு சிகிச்சை செய்தால் அவரால் பேசவே முடியாமல் போகும் என்னும் போது ஜேன் அவர் உயிருடன் இருப்பதே முக்கியம் என்கிறார்.பின்னர் ஸ்டீபன் பேசுவதற்காக பேசும் இயந்திரம் அவரது சக்கர நாற்காலியில் பொருத்தப்படுகிறது.அந்த இயந்திரத்தின் துணையோடு அவரால் ஒரு நிமிடத்தில் அந்த இயந்திரத்தை நான்கு வார்த்தைகளை பேச வைக்க முடியும்.அவர் கணிணியில் இருக்கும் அகராதியிலிருந்து வார்த்தைகளை தேர்வு செய்து பேச வைப்பது போல அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதற்கிடையில் அவரை பார்த்துக்கொள்வதற்காக ஜேன் ஒரு செவிலியரை நியமிக்கிறார்.காலப்போக்கில் ஸ்டீபனுக்கும் அந்த பெண்ணிற்கும் இடையில் ஒரு பற்றுதல் உருவாகிவிடுகிறது.ஸ்டீபன் ஜேனிடம் தன் The Brief History of Time முடிக்கும் தருணத்தில் தான் அமெரிக்காவிற்கு அந்த செவிலிய பெண்ணோடு செல்ல விரும்புவதாக சொல்வார்.அப்போது ஜேன் தன்னால் இயன்றவரை இத்தனை வருடங்கள் அவரை தான் நன்றாக பார்த்துக்கொண்டதாக சொல்வார்.ஸ்டீபனின் முகத்தில் நீரின் கோடுகள்.அவர்கள் இருவரும் பின்னர் ராணியை சந்திப்பதற்காக ஒன்றாக செல்வதும் அங்கே தன் மூன்று குழந்தைகளை காட்டி ‘பார் , நாம் உருவாக்கியவற்றை’ என்று ஸ்டீபன் ஜேனிடம் சொல்வதோடு திரைப்படம் நிறைவுபெறுகிறது.ஸ்டீபனை விவாகரத்து செய்து ஜோனாதானை ஜேன் பின்னாட்களில் திருமணம் செய்துகொள்கிறார்.அவருடைய ஆராய்ச்சியையும் முடிக்கிறார்.

உண்மையில் இந்த படம் அத்தனை சிறப்பாக எடுக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.அதீத நாடகத்தருணங்களை வேண்டுமென்றே அவர்கள் விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.முக்கியமான காரணம் திரைக்கதை ஆசிரியருக்கும் இயக்குனருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஜேனின் தனிப்பட்ட வாழ்வை கண்ணியமாக காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருந்திருக்கிறது.அவர்கள் இப்போதும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்ற நேரத்தில் அவர்களின் அந்தரங்க வாழ்வை நாம் விரும்பும் வகையில் காண்பிப்பதில் உள்ள அறப்பிழையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.ஜேனும் திரைக்கதையை படித்துவிட்டுதான் ஒப்புதல் அளித்திருப்பார் என்றாலும் இந்த அற உணர்வு பாராட்டுக்குரியது.அந்த அற உணர்வால் இந்த அளவுக்குத்தான் நாடகத்தருணங்களை காண்பிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த படத்தின் நாயகர் ஸ்டீபன் ஹாக்கிங் அல்ல.ஜேன் வயில்ட் தான்.எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் எல்லோருமே பெரும்பாலும் தன்முனைப்பு கொண்டவர்கள்.தங்களை பற்றியே சிந்திப்பவர்கள்.தங்களை பற்றி எண்ணும் போது அவர்களின் ஆக்கங்களையும் சேர்த்துதான்.அதனால் அவர்களால் பெரும்பாலும் பிறரின் துயரத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை.அவர்களுக்கு எவ்வளவு அக்கறை செலுத்தினாலும் அன்பு செலுத்தினாலும் போதாது.அவர்கள் மேலும் மேலும் எதிர்பார்ப்பார்கள்.அவர்கள் எதையுமே தரமாட்டார்கள்.அதனால்தான் அவர்கள் தங்கள் துறையில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அதன் மறுபக்கம் குரூரமானது.அவர்களின் மனைவியும் பிள்ளைகளும் மிகுந்த மனச்சோர்வுக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள்.

ஸ்டீபன் ஹாக்கிங் விஷயத்தில் அவர்களின் உறவு விசித்திர சிடுக்குகளை கொண்டது.ஜேன் ஸ்டீபனின் உடல் பிரச்சனையை அறிந்திருந்தும் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.இது ஒரு தியாகம்.உடனே ஒரு நவீனத்துத்திற்கு பிறகான சிந்தனையாளர் எழுந்து இது தியாகம் அல்ல தன்முனைப்பு அதன் மூலமாக அவர் ஸ்டீபனை சிறுமைப்படுத்துகிறார், பணிவானவராக மாற்றுகிறார் என்று சொல்வார்.அதில் உண்மை இருக்கிறதுதான்.ஆனால் அது மட்டுமல்ல உண்மை.மனிதனால் சக மனிதன் மீது அன்பு செலுத்த முடியும்.இதுவும் உண்மைதான்.ஜேன் ஸ்டீபனின் மீதான காதலால் அன்பால் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.அவர் இரண்டு வருடங்கள் தான் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிய பின்னும் அவர் அதை செய்கிறார்.இத்தனைக்கும் ஸ்டீபன் அப்போது மாணவர் மட்டும்தான்.ஜேனின் செயலில் ஒரு லட்சியவாதம் இருக்கிறது.தான் காதிலத்தவர் ,அன்பு செலுத்தியவர் நோய்மையால் அவதிப்படுகிறார் எண்ணும் போது அவருடன் இருந்து அவருக்கு இன்னும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்ற லட்சியவாதம் அதில் இருக்கிறது.அது ஒரு உயர்ந்த விழுமியம்.ஆனால் ஒரு ஆண் பெண் உறவு பல சிக்கல்களால் ஆனது.அதில் எப்போதும் அகங்கார சீண்டல்கள் இருக்கும்.ஜேன் ஒரு பேட்டியில் ஸ்டீபனிடம் தான் ‘அவர் ஒரு கடவுள் இல்லை என்பதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது’ என்கிறார்.ஜேனால் தன் ஆராய்ச்சிக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை.மேலும் ஜேனின் தியாகமும் அன்பும் அக்கறையும் ஸ்டீபனை தன் இயலாமையை எண்ணி உள்ளுக்குள் எரிச்சலடைய செய்திருக்கும்.அதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறது.நோய்மை உற்றவர்களை அருகிலிருந்து கவனித்து கொள்பவர்களுக்கு ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது.அவர்கள் நோய்மை உற்றவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.அன்பு இருக்கும்.ஆனால் சட்டென்று எரிச்சலும் வரும்.சற்று கவனிக்காமல் விட்டுவிட நேரும்.அந்த நேரத்தில் கவனமின்மையால் அவர்களுக்கு உடல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டால் கவனித்துக்கொள்பவர் குற்றவுணர்வுக்கு உள்ளாவார்.இது ஒரு முரணியக்கம் போல.ஒன்றும் செய்ய முடியாது.இத்தகைய உறவுகளில் அசாதரணமான லட்சியவாதம் இருபக்கமும் இருக்க வேண்டும்.அது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை.ஸ்டீபன் ஹாக்கிங் ஜேன் இல்லாவிட்டாலும் ஒரு வேளை ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியிருப்பார்.இந்த உலகில் பலரும் அவரது அறிவை வியந்து அவருக்கு உதவியிருப்பார்கள்.ஆனால் அவரது உடலையும் உள்ளத்தையும் அறிவையும் நேசித்து அவருடன் வாழ்ந்த ஜேன் ஸ்டீபனின் இன்றைய நிலைக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார் என்பது ஒரு உண்மை.ஜேன் ஒரு வேளை ஸ்டீபனின் உடல் பிரச்சனை காரணமாக அவரை முதலிலேயே விலிகியிருந்தாலும் அவர் விமர்சனத்துக்குரியவர் அல்ல.அதுவும் அவரது விருப்பமே.

இந்த கதையை வேறு மாதிரியும் பார்க்கலாம்.இதில் எந்த லட்சியவாதமும் இல்லை என்று நிறுவலாம்.ஆனால் ஜெயகாந்தன் சொல்வது போல வெங்காயத்தை உரித்து உரித்து பார்த்தால் வெங்காயத்தில் கூட ஒன்றும் இருக்காதுதான்.சேர்த்து சேர்த்து பார்க்க வேண்டும்.சேர்த்தால்தான் நூல் உடையாகிறது.அதுதான் உடலை மறைக்கிறது.ஜேனின் வாழ்க்கை வணக்கத்திற்குரியது.