எம்.யுவன் கவிதைகள்

யுவன் மூன்று அல்லது நான்கு வயதில் கொக்கின் பெயர் கொக்கு என்று அறிகிறார்.பிற்காலத்தில் கொக்கு என்றால் வெண்மையென கற்கிறார்.பின்னர் கொக்கு என்பது அழகு என்றும் விடுதலையை குறிக்கலாம் என்றும் புரிந்துகொள்கிறார்.மேல் அதிகாரி வேலையிடத்தில் ஏசும் போதும் வெய்யில் கசகசக்கும் போதும் கொக்கின் மிருதுவை உணர்கிறார்.இனி வரும் காலங்களில் கொக்கு தன்னில் என்னவாக உருமாற்றம் அடையும் என்று உருமாற்றம் கவிதையில் அவரிடமே கேட்டுக்கொள்கிறார் (உருமாற்றம்).கொக்கை நாம் ஒரு சித்தாந்தமாகவோ இன்னொரு மனிதனாகவோ மாற்றிப் பார்க்கலாம்.சித்தாந்தங்களின் மீதும் மனிதர்களின் மீதும் நமக்கு உருவாகும் பிம்பம் காலம் தோறும் மாறியபடி இருக்கிறது.சிறுவயதில் இருந்த தாய் என்ற வார்த்தையின் பிம்பம் அல்ல இன்றிருக்கும் எனது பிம்பம்.அதனால் தான் யுவன் தன் விலாசத்தை தீர்மானத்தின் ஆணிகள் அறையப்படாத சவப்பெட்டி என்று என் கபாலத்தைச் சொல்லலாம் நீங்கள் என்கிறார் ( விலாசம் ).ஆனால் அவர் கருத்தியலின் குழப்பங்கள் தேவையில்லை என்று புரிந்து நெருப்பின் செயல் திறனும் பெளதீகப் பயன்பாடும் போதுமென்று விலகும்போது ஜ்வாலையின் நாட்டியம் உள்ளே ஒரு கனப்பை உருவாக்குகிறது.(ஜ்வாலையின் நாட்டியம்).

அதே நேரத்தில் பெண் விடுதலையை முன்னிட்டோ ஆணின் விடுதலையை முன்னிட்டோ நடக்கும் ஊர்வலத்தில் தன்னை இணைத்துக்கொள்ள இயலாமல் நவீன யுவன் ஊர்வலம் முடிந்த வெளியில் ஒர் அனாதையாக தனிமையின் போதையில் நிற்கிறான்(ஊர்வலம்).குழம்பிப்போய் கருத்துகளோடு ஒன்றவும் முடியாமல் விலகவும் முடியாமல் விகாரமாய் விழுந்து கிடக்கும் அரக்கியின் தொடையென நீண்டு பரந்த தெருவில் மழைக்குச் சுவரண்டின ஆட்டுக் குட்டிகளுடன் தனியனாய் நிற்கிறான் நவீன யுவன்( தனிமை - இந்த முறை ஆட்டுக் குட்டிகளோடு)

காலத்தை ஒரு நீண்ட நேர்க்கோடாக பார்க்கலாம்.ஒரு சுழற்சியாக பார்க்கலாம்.காலமற்ற வெளியாக பார்க்கலாம்.காலம் இடமாக காட்சி அளிக்கலாம்.நாம் வரையறுத்து வைத்திருக்கும் மூன்று காலங்களுக்கு வெளியே தன்னை நீட்டித்தும் கொள்ளலாம்.யுவன் ஒரு கண்ணாடியில் தன் குறுந்தாடியை சரிசெய்கிறார்.கைதவறி கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கிவிடுகிறது.பாரத்துக்கொண்டிருந்த கண்ணாடி - கீழே விழும் போது - பாரத்துக்கொண்டிருக்கிறார் யுவன் கீழே விழுந்து நொறுங்கும் கண்ணாடியை.(நீட்சி).இங்கே காலத்தின் இறுக்கமான கோடுகள் தளர்கின்றன.நிகழ்வு நாம் வரையறுத்து வைத்திருக்கும் கோடுகளுக்கு வெளியே தன்னை நிகழ்த்தி ஒரே நிகழ்வாக மாறுகிறது.

யுவனுக்கு பிடிக்கும் என்றறியாமலே ஒலியெழுப்புகின்றன பறவைகள் , சித்தனின் ஆசியென தலையை வருடி வீழ்கிறது அருவி, அவர் விழித்து எழாத போதும் விடிந்து விடுகிறது பொழுது.கவிதையின் கணமொன்றைக் கண்கள் துழாவ காலடியில் பாய்ந்து மறைகிறது கணங்களின் பிரவாகம்.( பிரவாகத்தில் ஒரு துளி )

ஒரே நேரத்தில் ஒரே உலகத்தில் வெவ்வேறு இடங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.யுவன் தன் சிறுகதையை ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பவதற்காக தபால் நிலையம் சென்றுகொண்டிருக்கிறார்.அப்போது லாரிச்சக்கரத்தில் சிக்கி அரைப்படுகிறது ஒரு பன்றி.நிர்யணம் பெறாத புதிர்க் கணங்களொன்றில் அந்த பன்றி மரணத்தை நோக்கியும் யுவன் போஸ்ட்டாபீஸை நோக்கியும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் அந்த பன்றி அங்கே லாரிச்சக்கரத்தில் அரைப்படுவதற்கும் யுவன் தபால் நிலையம் விரையும் போது அதை பார்பதற்கும் இந்த பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.ஒட்டுமொத்த உலகமும் ஒரு நிகழ்வாக அங்கே மாறுகிறது.மேலே பிரவாகத்தில் ஒரு துளி கவிதையில் சொல்லப்படுவது போல அதுவே காலடியில் பாய்ந்து மறையும் கணங்களின் பிரவாகம்.

ஆனால் இந்த மனிதன் பன்றியும் தானும் பிரவாகத்தின் ஒரு துளி என்று எண்ணியவாறு செயல் அற்று நிற்க முடியாது.இன்றைய நாள் இன்னொரு நாள் தான்.ஆனால் அந்த இன்னொரு நாளில் சில வரிகளை படித்தாக வேண்டும்.சில ஸ்வரங்களை கேட்டாக வேண்டும்.முத்தம் கொடுத்தாகத்தான் வேண்டும்.கடன்கள் உயிர்ப்பு பெறுகின்றன.இது இன்னொரு நாளாக மாறும் தான் என்றாலும் இன்றைய நாளுக்கான செயல்கள் நவீன யுவனுக்கு பயமாகத்தான் இருக்கிறது.(இன்று).

கருத்தியல்களின் மீது தீவிரமான அவநம்பிக்கையை கொண்டிருக்கிறான் இன்றைய மனிதன்.தான்டவ மூர்த்திக்கு காலில் சுளுக்கு தொடங்கிவிட்டது.சிலுவை ஏந்தியவன் இழைப்புளியும் கையுமாய் சிலுவையிலிருந்து இறங்கி போனான்.விடுதலை பற்றி பேசிய கிழவன் காணாமல் போய்விட்டான்.சிறைப்பட்ட ராணியை மீட்க கணிப்பொறியில் போராடுகிறான் இன்றைய நவீன யுவன்.இன்றைய காலத்தில் தலைகீழாய் நடக்கும் மனிதர்களை பார்த்து நகைக்கின்றன வெளவால்கள்(வேறொரு காலம்).

ஒரே சமயத்தில் நிகழும் பல்வேறு மெய்மைகளை எண்ணியவாறு இருக்கும் நவீன யுவன் , கருத்தியல் குறித்த ஆழ்ந்த அவநம்பிக்கையால் தனித்துவிடப்படும் நவீன யுவன், தன் தினசரி வாழ்க்கைக்கு வெளியே கருத்தியல் தளத்தில் செயல் வடிவமாக எதை செய்கிறான்.

உறைபனிச்  சரிவில்
விறைத்த
வீரனின் பிரேதக்
கண்களில் மிச்சமிருக்கிறது
பூமியல் எங்கும்
வரையப்படாத கோடு.
அணுவை
அணு புணர்ந்து
எழும்பிய
நாய்க்குடைக் காளான்களின்
நிழலில்
வசித்தல் மறுத்து
இறுதி உயிரும்
நீங்கின பிற்
மீந்த
முப்பரிமாண வரைபடத்தின்
குறிக்கப்படாத மூலையில்
ஒதுங்கி நின்றிருந்தேன்
'என்னதான் நடக்கிறது' என
வேடிக்கை பார்த்த
வாறு.

இடமற்ற காலத்தில் என்னதான் நடக்கிறது என வேடிக்கை பார்த்தவாறு நிற்கிறான் நவீன யுவன்.ஒரே நிகழ்வாக அனைத்தும் மாறும் காலத்தில் தாண்டவமூர்த்திக்கு சுளுக்கு தொடங்கி விடும் காலத்தில் வாழும் நவீன யுவன் ஒரு கையறு நிலையில் தனிமையில் 'என்னதான் நடக்கிறது' என வேடிக்கை பார்த்தவாறு நிற்கிறான்.

                    - இன்மை இதழில் எழுதிய ஆசிரியர் பக்க கட்டுரை

No comments: