அருவுருவம்








 
ஒரு மாணவன் தன் ஞானத்தேடலுக்கான குருவை தேடி அலைகிறான்.ஊருக்கு வெளியே நீளமான வெண்தாடியும் பெரிய மீசையும் காவி வேஷ்டியும் அணிந்த துறவி ஒருவரை பார்க்கிறான்.அவர் மிகவும் இறுக்கமாக இருக்கிறார்.யாரிடமும் பேசவில்லை.அவரை நெருங்கிச்சென்று தான் கொண்டுவந்த பாலையும் வேர்க்கடலையையும் தருகிறான்.வாங்கி உண்கிறார்.அவனை பற்றி விசாரிக்கிறார்.பிரகாசமாக சிரிக்கிறார்.அவன் அப்போது அவரது வெண்தாடியை பற்றி இழுக்கிறான்.வலி பொறுக்கமுடியாமல் அவனை எட்டி உதைக்கிறார்.அவர் அடித்த அடியில் அங்கிருந்து ஒடி வீட்டுக்கு சென்றுவிடுகிறான்.அடிப்பட்ட வலி தாங்காமல் இனி ஞானமும் வேண்டாம் தேடலும் வேண்டாம் என்று சுருண்டு படுக்கிறான்.ஆனால் அவரை மறுபடியும் பார்க்கும் ஆவலோடு அடுத்த நாள் செல்கிறான்.அப்போது அவருக்கு சுட்ட பனம் கிழங்குகளை கொடுக்கிறான்.வாங்கி உண்கிறார்.அருகில் அமரவைத்து அவன் பெயரை கேட்கிறார்.என் பெயர் ராஜன் என்கிறான்.உங்கள் பெயர் என்ன? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்.நீங்கள் நிஜமான சாமியார்தானா என்று கேட்கிறான்.நன்றாக சிரித்துவிட்டு ஒரு உதை விடுகிறார்.அவன் மறுபடியும் ஒடுகிறான்.மறுபடியும் அடுத்தநாள் வருகிறான்.இது தொடர்கிறது.

காதலில் திருமணத்தில் அல்லது நட்பில் புதிதாக ஒன்றிணையும் இருவர் முதிலில் மற்றவரை இறுக்கமானவர் என்று நினைத்து விலகியிருக்கலாம்.பின்னர் மற்றவர் அவ்வளவு இறுக்கமானவர் இல்லை என்று தெரிந்தபின் அவரை எங்காவது சீண்டலாம் புண்படுத்தலாம்.அப்போது அவர் தன்னை மூடிக்கொள்கிறார்.அப்படி என்றால் அவர் நெகிழ்வானவர் இல்லையா என்று குழம்பி அருகில் சென்றால் அவர் மனம் விட்டு பேசுகிறார்.இப்போது அவரை மேலும் சீண்டுகிறாம்.அவர் மேலும் மூடிக்கொள்கிறார்.அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் புரியாமல் உறவு தொடர்கிறது அல்லது முடிகிறது.

புதிதாக ஒரு வேலையை தொடங்குகிறோம்.அப்போது இந்த வேலையை நம்மால் எளிதாக செய்துவிட முடியும் என்று நிணைக்கிறோம்.செய்ய ஆரம்பித்த இரண்டாவது நாளில் இது என்னால் இயலாது என்று ஒடுகிறாம்.கொஞ்ச தூரம் ஒடியபின் நம்மால் செய்ய முடியும் என்று நினைத்து மறுபடியும் தொடங்குகிறோம்.மனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவுகள், மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள், மனிதர்களுக்கும் இயந்திரங்களுமான உறவுகள், மனிதர்களுக்கும் இயற்கையுக்குமான உறவுகள், நமக்கும் நமக்குமான உரையாடல்களில் எல்லாம் இந்த நெகிழ்வும் இறுக்கமும் ஒரு முரணியக்கம் போல தொடர்ந்து நடக்கிறது.

யின்-யாங் முன்வைக்கும் நண்மையில் சிறதளவு தீமையும் தீமையில் சிறிதளவு நண்மையும் போல நெகிழ்வும் இறுக்கமும் நம்மை சுற்றி பல தளங்களில் நிகழ்கின்றன.

பிரமளின் கவிதை

அருவுருவம்

தூரத்துச் செம்பாறை
சமீபத்திற்குக் களிமண்ணாயிற்று,
கால்பட்டு உள்வாங்கி
கடித்தது.
‘பாம்பு’ என்று பதறி ஒடி
ஆசுவாசும் ஆகி
காலைப் பரிசோதித்து
ரத்தம் கண்டு
கடிவாயின் மேல்
வேட்டிக் கரையால்
கட்டுப் போட்டு
உயிரைக் கையில் பிடித்தபடி
விஷத்தின் வேலையை
எதிர்பார்த்து ஏமாந்து
திரும்பி
தூரத்துச் செம்பாறை
சமீபத்துக்குக் களிமண்ணான
ஸ்தலுத்துக்கு வந்து
கால்பட்டு உள்வாங்கிய
பிலத்தில் எட்டிப்
பார்த்தால்
விளிம்புப் பற்களை
சிரித்துக் காட்டிற்று
களிமண்ணின் அடியில் ஒரு
செம்பாறை.

இந்த கவிதையில் ஒருவன்  தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு உருவம் செம்பாறையாக தெரிகிறது.அருகில் வந்து பார்க்கும் போது களிமண் என்று கண்டுகொள்கிறான்.களிமண் என்பது நம் விருப்பத்திற்கு ஏற்ப உருமாற்றலாம் என்பதால் ஒரு உதை விடுகிறான்.செம்பாறையில் கால்பட்டு ரத்தம் வருகிறது.பாம்புதான் கடித்துவிட்டது என்று ஒடுகிறான்.பிறகு விஷம் இல்லை என்று தெரிந்தபின் அருகில் வந்துபார்த்தால் களிமண்ணுக்கு அடியில் செம்பாறை இருக்கிறது.மனிதர்கள் எல்லாருமே அருவுருங்கள் தான்.உறவுகள் எல்லாமே அருவுருங்கள்தான்.எளிதாக ஒருவரை நம்வசப்படுத்திவிட முடியும் என்கிற போது அவர் ஒரு உதைவிட்டு நம்மைவிட்டு விலகிச்சென்றுவிடுகிறார்.நம்மால் அவரை நெருங்வே முடியாது என்கிற போது அவர் நம்மை தேடி வந்து குடைநிழலை அளிக்கிறார்.செம்பாறை களிமண்ணாகவும் களிமண் செம்பாறையாகவும் மாறியபடி இருக்கிறது.

(இன்மை இணைய இதழில் வந்த கட்டுரை)


 

No comments: