மீட்சி

 
இன்மையின் பாடல் குறும்படத்தில் ஒரு காட்சி

2011 ஆம் ஆண்டின் இறுதிகளில் வேலையில்லாமல் சிவனே என்று வீட்டிலிருந்த காலகட்டத்தில் என் உணர்வுகளை கொலை செய்த சம்பவங்கள்,மாறி மாறி புதிது புதிதாக ஏற்பட்ட உடல்நலக்கோளாறுகள், மருத்துவமனை , காத்திருப்பு,பரிசோதனைகள், பயம், அச்சம் என்று தொடர்ச்சியாக நிறைய சம்பவங்கள் 2012யிலும் 2013யிலும் நடந்துவிட்டன.மேலே குறிப்பிட்ட சம்பவங்களால் ஏற்பட்ட கசப்பு, எரிச்சல், அவமானம், அயர்ச்சி, களைப்பு,மன அழுத்தம் என்று எத்தனையோ உணர்ச்சி கொந்தளிப்புகள் என்னை உருக்குலைத்தன.கடந்த இரண்டு வருடங்களே இதுவரையான என் வாழ்க்கையில் மிகுந்த துயரம் நிரம்பிய ஆண்டுகளாக இருந்திருக்கின்றன.சமயங்களில் மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி கூட வந்திருக்கிறது.வலி என்றால் தத்துவார்த்தமான வலி அல்ல.நிஜமான வலி.வலி அதிகமாகி சமயங்களில் இடது கையும் குடையும்.வலியும் அயரச்சியும் களைப்புமாக பயங்கரமாக கழிந்தன என் பொழுதுகள்.

இந்த கசப்பிலிருந்து , அயர்ச்சியிலிருந்து வலியிலிருந்து என்னை இரண்டு புத்தகங்கள் மீட்டெடுத்தன.ஒன்று தஸ்தாவெய்ஸ்கியின் சூதாடி நாவல்.மற்றொன்று ஆல்பர் காம்யூவின் வீழ்ச்சி நாவல்.இரண்டுமே எனக்க்காக எழுதப்பட்டது போல இருந்தன.எனக்கான வரிகளை எப்போதும் தஸ்தாவெய்ஸ்கியிடமும் காம்யூவிடமும் என்னால் கண்டுகொள்ள முடிகிறது.முன்னர் இதேபோல தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலும் காம்யூவின் அந்நியன் நாவலும் என்னை காப்பாற்றயிருக்கின்றன.இந்த இரண்டு புத்தகங்களை வாசித்த பின்னர்தான் நான் என்னை மிகுந்த வலிக்கு உள்ளாக்கிய பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு மீன்டேன்.

பெளதீகமான வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டுமென்றால் வாசிப்பும் படைப்புமே வழி.இன்மையின் பாடல் என்ற குறும்படத்தை சென்ற ஆண்டின் இறுதியில் இயக்கினேன்.எஸ்.எஸ்.ராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.நான் இதுவரை மூன்று குறும்படங்கள் இயக்கியிருக்கிறேன்.முதல் குறும்படம் நண்பர்களோடு சேர்ந்து எடுத்தது.இரண்டாவது பாரதி மணி நடித்தார்.இந்த எல்லா குறும்படங்களிலும் மைய கதாபாத்திரம் ஸ்ரீனிவாசராவ்தான்.நான் இந்த வலைதளத்தில் எழுதிய சில சிறுகதைகளில் கூட ஸ்ரீனிவாசராவ் என்ற பெயரை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.நெடுங்குருதி நாவலில் ஸ்ரீனிவாசராவ் என்ற கம்யூனிஸ்டு வருவார்.ராமய்யாவின் குடிசை என்ற பாரதி கிருஷ்னகுமார் இயக்கிய ஆவணப்படத்தில் ஸ்ரீனிவாசராவ் என்று கீழ்வெண்மணி மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டு தலைவர் பற்றிய குறிப்பு வரும்.அந்த பெயர் மிகவும் பிடித்துவிட்டது.அந்த பெயரையே தொடர்ந்து குறும்படங்களின் மைய கதாபாத்திரத்திற்கு சூட்டினேன்.ஸ்ரீனிவாசராவை நான் எதற்காக புனைவு கதாபாத்திரமாக உருவாக்கினேனோ அந்த காரணம் இந்த இன்மையின் பாடல் குறும்படத்தோடு முடிந்துவிட்டது.தன் அடையாளங்களிலிருந்து வெளியேறி அபத்தத்தின் உச்சத்தை கண்டுகொள்ளும் ஒரு ஆன்மிக தருணமும் , வாழ்க்கை முறையுமே என் ஸ்ரீனிவாசராவ்.இனி ஏதேனும் ஒரு குறும்படத்தையோ , சிறுகதையோ எழுதினால் அதன் மைய கதாபத்திரமாக ஸ்ரீனிவாசராவ் இருக்க மாட்டார்.ஏதேனும் ஒரு காட்சியில் வேடிக்கை பார்க்கும் மனிதராக அவர் வருவார்.இந்த குறும்படம் சில தொழில்நுட்ப பிழைகளை கொண்ட படம்தான்.அவை அடுத்த குறும்படத்தில் சரிசெய்துகொள்ளக்கூடிய பிழைகள் தான்.படத்தின் வேலைகள் அநேகமாக முடிந்துவிட்டது.பின்னனி இசை மட்டும் சேர்க்க வேண்டும்.தமிழில் எடுக்கப்பட்ட முக்கியமான குறும்படங்களில் ஒன்றாக எப்போதும் இன்மையின் பாடல் இருக்கும்.நான் ஒரு குறும்படத்தை எப்படி எடுக்க விரும்பினேனோ அதன் பெரும்பகுதியை இதில் செய்திருக்கிறேன்.தரிசன ரீதியாகவும் எனக்கு மிகவும் திருப்தி அளித்த குறும்படம் இது. ஒரு வகையில் இதுவே நான் இயக்கிய முதல் குறும்படம்.இந்த குறும்படம் இனியான வாழ்வின் இனிய தொடக்கம் போல இருக்கும் என்று தோன்றுகிறது.

அபிலாஷ், நிலாரசிகன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இன்மை இணைய இதழில் என்னையும் இணைந்துகொள்ள அபிலாஷ் சொன்னார்.அதுவும் இந்த வருடத்தின் ஒரு நல்ல விஷயம்.சில நண்பர்கள் வாழ்வில் வருவது நம்முடைய நல்லூழ்.ஆல்பர் காம்யூ பற்றிய ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆவல் உருவாகியிருக்கிறது.அடுத்த வருடத்தின் இறுதிக்குள் எழுதி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.ஒரளவுக்கு அயர்ச்சியிலிருந்தும் வலியிலிருந்தும் மீண்டிருக்கிறேன்.ஒரு புதிய தொடக்கம் போல இந்த ஆண்டிலிருந்து வாழ்க்கை நன்றாக இருக்கமென்று ஒரு குழந்தைதனமான எண்ணம் சமயங்களில் தோன்றுகிறது.பார்ப்போம்.




No comments: