அருவுருவம்








 
ஒரு மாணவன் தன் ஞானத்தேடலுக்கான குருவை தேடி அலைகிறான்.ஊருக்கு வெளியே நீளமான வெண்தாடியும் பெரிய மீசையும் காவி வேஷ்டியும் அணிந்த துறவி ஒருவரை பார்க்கிறான்.அவர் மிகவும் இறுக்கமாக இருக்கிறார்.யாரிடமும் பேசவில்லை.அவரை நெருங்கிச்சென்று தான் கொண்டுவந்த பாலையும் வேர்க்கடலையையும் தருகிறான்.வாங்கி உண்கிறார்.அவனை பற்றி விசாரிக்கிறார்.பிரகாசமாக சிரிக்கிறார்.அவன் அப்போது அவரது வெண்தாடியை பற்றி இழுக்கிறான்.வலி பொறுக்கமுடியாமல் அவனை எட்டி உதைக்கிறார்.அவர் அடித்த அடியில் அங்கிருந்து ஒடி வீட்டுக்கு சென்றுவிடுகிறான்.அடிப்பட்ட வலி தாங்காமல் இனி ஞானமும் வேண்டாம் தேடலும் வேண்டாம் என்று சுருண்டு படுக்கிறான்.ஆனால் அவரை மறுபடியும் பார்க்கும் ஆவலோடு அடுத்த நாள் செல்கிறான்.அப்போது அவருக்கு சுட்ட பனம் கிழங்குகளை கொடுக்கிறான்.வாங்கி உண்கிறார்.அருகில் அமரவைத்து அவன் பெயரை கேட்கிறார்.என் பெயர் ராஜன் என்கிறான்.உங்கள் பெயர் என்ன? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்.நீங்கள் நிஜமான சாமியார்தானா என்று கேட்கிறான்.நன்றாக சிரித்துவிட்டு ஒரு உதை விடுகிறார்.அவன் மறுபடியும் ஒடுகிறான்.மறுபடியும் அடுத்தநாள் வருகிறான்.இது தொடர்கிறது.

காதலில் திருமணத்தில் அல்லது நட்பில் புதிதாக ஒன்றிணையும் இருவர் முதிலில் மற்றவரை இறுக்கமானவர் என்று நினைத்து விலகியிருக்கலாம்.பின்னர் மற்றவர் அவ்வளவு இறுக்கமானவர் இல்லை என்று தெரிந்தபின் அவரை எங்காவது சீண்டலாம் புண்படுத்தலாம்.அப்போது அவர் தன்னை மூடிக்கொள்கிறார்.அப்படி என்றால் அவர் நெகிழ்வானவர் இல்லையா என்று குழம்பி அருகில் சென்றால் அவர் மனம் விட்டு பேசுகிறார்.இப்போது அவரை மேலும் சீண்டுகிறாம்.அவர் மேலும் மூடிக்கொள்கிறார்.அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் புரியாமல் உறவு தொடர்கிறது அல்லது முடிகிறது.

புதிதாக ஒரு வேலையை தொடங்குகிறோம்.அப்போது இந்த வேலையை நம்மால் எளிதாக செய்துவிட முடியும் என்று நிணைக்கிறோம்.செய்ய ஆரம்பித்த இரண்டாவது நாளில் இது என்னால் இயலாது என்று ஒடுகிறாம்.கொஞ்ச தூரம் ஒடியபின் நம்மால் செய்ய முடியும் என்று நினைத்து மறுபடியும் தொடங்குகிறோம்.மனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவுகள், மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள், மனிதர்களுக்கும் இயந்திரங்களுமான உறவுகள், மனிதர்களுக்கும் இயற்கையுக்குமான உறவுகள், நமக்கும் நமக்குமான உரையாடல்களில் எல்லாம் இந்த நெகிழ்வும் இறுக்கமும் ஒரு முரணியக்கம் போல தொடர்ந்து நடக்கிறது.

யின்-யாங் முன்வைக்கும் நண்மையில் சிறதளவு தீமையும் தீமையில் சிறிதளவு நண்மையும் போல நெகிழ்வும் இறுக்கமும் நம்மை சுற்றி பல தளங்களில் நிகழ்கின்றன.

பிரமளின் கவிதை

அருவுருவம்

தூரத்துச் செம்பாறை
சமீபத்திற்குக் களிமண்ணாயிற்று,
கால்பட்டு உள்வாங்கி
கடித்தது.
‘பாம்பு’ என்று பதறி ஒடி
ஆசுவாசும் ஆகி
காலைப் பரிசோதித்து
ரத்தம் கண்டு
கடிவாயின் மேல்
வேட்டிக் கரையால்
கட்டுப் போட்டு
உயிரைக் கையில் பிடித்தபடி
விஷத்தின் வேலையை
எதிர்பார்த்து ஏமாந்து
திரும்பி
தூரத்துச் செம்பாறை
சமீபத்துக்குக் களிமண்ணான
ஸ்தலுத்துக்கு வந்து
கால்பட்டு உள்வாங்கிய
பிலத்தில் எட்டிப்
பார்த்தால்
விளிம்புப் பற்களை
சிரித்துக் காட்டிற்று
களிமண்ணின் அடியில் ஒரு
செம்பாறை.

இந்த கவிதையில் ஒருவன்  தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு உருவம் செம்பாறையாக தெரிகிறது.அருகில் வந்து பார்க்கும் போது களிமண் என்று கண்டுகொள்கிறான்.களிமண் என்பது நம் விருப்பத்திற்கு ஏற்ப உருமாற்றலாம் என்பதால் ஒரு உதை விடுகிறான்.செம்பாறையில் கால்பட்டு ரத்தம் வருகிறது.பாம்புதான் கடித்துவிட்டது என்று ஒடுகிறான்.பிறகு விஷம் இல்லை என்று தெரிந்தபின் அருகில் வந்துபார்த்தால் களிமண்ணுக்கு அடியில் செம்பாறை இருக்கிறது.மனிதர்கள் எல்லாருமே அருவுருங்கள் தான்.உறவுகள் எல்லாமே அருவுருங்கள்தான்.எளிதாக ஒருவரை நம்வசப்படுத்திவிட முடியும் என்கிற போது அவர் ஒரு உதைவிட்டு நம்மைவிட்டு விலகிச்சென்றுவிடுகிறார்.நம்மால் அவரை நெருங்வே முடியாது என்கிற போது அவர் நம்மை தேடி வந்து குடைநிழலை அளிக்கிறார்.செம்பாறை களிமண்ணாகவும் களிமண் செம்பாறையாகவும் மாறியபடி இருக்கிறது.

(இன்மை இணைய இதழில் வந்த கட்டுரை)


 

மீட்சி

 
இன்மையின் பாடல் குறும்படத்தில் ஒரு காட்சி

2011 ஆம் ஆண்டின் இறுதிகளில் வேலையில்லாமல் சிவனே என்று வீட்டிலிருந்த காலகட்டத்தில் என் உணர்வுகளை கொலை செய்த சம்பவங்கள்,மாறி மாறி புதிது புதிதாக ஏற்பட்ட உடல்நலக்கோளாறுகள், மருத்துவமனை , காத்திருப்பு,பரிசோதனைகள், பயம், அச்சம் என்று தொடர்ச்சியாக நிறைய சம்பவங்கள் 2012யிலும் 2013யிலும் நடந்துவிட்டன.மேலே குறிப்பிட்ட சம்பவங்களால் ஏற்பட்ட கசப்பு, எரிச்சல், அவமானம், அயர்ச்சி, களைப்பு,மன அழுத்தம் என்று எத்தனையோ உணர்ச்சி கொந்தளிப்புகள் என்னை உருக்குலைத்தன.கடந்த இரண்டு வருடங்களே இதுவரையான என் வாழ்க்கையில் மிகுந்த துயரம் நிரம்பிய ஆண்டுகளாக இருந்திருக்கின்றன.சமயங்களில் மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி கூட வந்திருக்கிறது.வலி என்றால் தத்துவார்த்தமான வலி அல்ல.நிஜமான வலி.வலி அதிகமாகி சமயங்களில் இடது கையும் குடையும்.வலியும் அயரச்சியும் களைப்புமாக பயங்கரமாக கழிந்தன என் பொழுதுகள்.

இந்த கசப்பிலிருந்து , அயர்ச்சியிலிருந்து வலியிலிருந்து என்னை இரண்டு புத்தகங்கள் மீட்டெடுத்தன.ஒன்று தஸ்தாவெய்ஸ்கியின் சூதாடி நாவல்.மற்றொன்று ஆல்பர் காம்யூவின் வீழ்ச்சி நாவல்.இரண்டுமே எனக்க்காக எழுதப்பட்டது போல இருந்தன.எனக்கான வரிகளை எப்போதும் தஸ்தாவெய்ஸ்கியிடமும் காம்யூவிடமும் என்னால் கண்டுகொள்ள முடிகிறது.முன்னர் இதேபோல தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலும் காம்யூவின் அந்நியன் நாவலும் என்னை காப்பாற்றயிருக்கின்றன.இந்த இரண்டு புத்தகங்களை வாசித்த பின்னர்தான் நான் என்னை மிகுந்த வலிக்கு உள்ளாக்கிய பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு மீன்டேன்.

பெளதீகமான வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டுமென்றால் வாசிப்பும் படைப்புமே வழி.இன்மையின் பாடல் என்ற குறும்படத்தை சென்ற ஆண்டின் இறுதியில் இயக்கினேன்.எஸ்.எஸ்.ராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.நான் இதுவரை மூன்று குறும்படங்கள் இயக்கியிருக்கிறேன்.முதல் குறும்படம் நண்பர்களோடு சேர்ந்து எடுத்தது.இரண்டாவது பாரதி மணி நடித்தார்.இந்த எல்லா குறும்படங்களிலும் மைய கதாபாத்திரம் ஸ்ரீனிவாசராவ்தான்.நான் இந்த வலைதளத்தில் எழுதிய சில சிறுகதைகளில் கூட ஸ்ரீனிவாசராவ் என்ற பெயரை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.நெடுங்குருதி நாவலில் ஸ்ரீனிவாசராவ் என்ற கம்யூனிஸ்டு வருவார்.ராமய்யாவின் குடிசை என்ற பாரதி கிருஷ்னகுமார் இயக்கிய ஆவணப்படத்தில் ஸ்ரீனிவாசராவ் என்று கீழ்வெண்மணி மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டு தலைவர் பற்றிய குறிப்பு வரும்.அந்த பெயர் மிகவும் பிடித்துவிட்டது.அந்த பெயரையே தொடர்ந்து குறும்படங்களின் மைய கதாபாத்திரத்திற்கு சூட்டினேன்.ஸ்ரீனிவாசராவை நான் எதற்காக புனைவு கதாபாத்திரமாக உருவாக்கினேனோ அந்த காரணம் இந்த இன்மையின் பாடல் குறும்படத்தோடு முடிந்துவிட்டது.தன் அடையாளங்களிலிருந்து வெளியேறி அபத்தத்தின் உச்சத்தை கண்டுகொள்ளும் ஒரு ஆன்மிக தருணமும் , வாழ்க்கை முறையுமே என் ஸ்ரீனிவாசராவ்.இனி ஏதேனும் ஒரு குறும்படத்தையோ , சிறுகதையோ எழுதினால் அதன் மைய கதாபத்திரமாக ஸ்ரீனிவாசராவ் இருக்க மாட்டார்.ஏதேனும் ஒரு காட்சியில் வேடிக்கை பார்க்கும் மனிதராக அவர் வருவார்.இந்த குறும்படம் சில தொழில்நுட்ப பிழைகளை கொண்ட படம்தான்.அவை அடுத்த குறும்படத்தில் சரிசெய்துகொள்ளக்கூடிய பிழைகள் தான்.படத்தின் வேலைகள் அநேகமாக முடிந்துவிட்டது.பின்னனி இசை மட்டும் சேர்க்க வேண்டும்.தமிழில் எடுக்கப்பட்ட முக்கியமான குறும்படங்களில் ஒன்றாக எப்போதும் இன்மையின் பாடல் இருக்கும்.நான் ஒரு குறும்படத்தை எப்படி எடுக்க விரும்பினேனோ அதன் பெரும்பகுதியை இதில் செய்திருக்கிறேன்.தரிசன ரீதியாகவும் எனக்கு மிகவும் திருப்தி அளித்த குறும்படம் இது. ஒரு வகையில் இதுவே நான் இயக்கிய முதல் குறும்படம்.இந்த குறும்படம் இனியான வாழ்வின் இனிய தொடக்கம் போல இருக்கும் என்று தோன்றுகிறது.

அபிலாஷ், நிலாரசிகன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இன்மை இணைய இதழில் என்னையும் இணைந்துகொள்ள அபிலாஷ் சொன்னார்.அதுவும் இந்த வருடத்தின் ஒரு நல்ல விஷயம்.சில நண்பர்கள் வாழ்வில் வருவது நம்முடைய நல்லூழ்.ஆல்பர் காம்யூ பற்றிய ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆவல் உருவாகியிருக்கிறது.அடுத்த வருடத்தின் இறுதிக்குள் எழுதி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.ஒரளவுக்கு அயர்ச்சியிலிருந்தும் வலியிலிருந்தும் மீண்டிருக்கிறேன்.ஒரு புதிய தொடக்கம் போல இந்த ஆண்டிலிருந்து வாழ்க்கை நன்றாக இருக்கமென்று ஒரு குழந்தைதனமான எண்ணம் சமயங்களில் தோன்றுகிறது.பார்ப்போம்.




மாற்று பொருளாதாரத்தின் குறியீடு









ஊழல் ஒரு முக்கிய பிரச்சனை.ஊழலை ஒழிக்க வேண்டும்.அதற்கு வலுவான லோக்பால் வேண்டும்.அது சாத்தியப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அன்னா ஹசாரேவும் அதை தொடர்ந்து தற்போது அரவிந்த் கேஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள்.தன்னால் லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை என்று காரணம் கூறி அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.டெல்லி மக்கள் கேஜ்ரிவால் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வாக்களிக்கவில்லை.உண்மையில் இந்தியா போன்ற பல்வேறு இன மக்களும் பல்வேறு மொழிகளும் உள்ள தேசத்தில் சர்வலோக நிவாரணியை உருவாக்க முனையும் எதுவுமே போலித்தனமானதுதான்.முன்னர் கம்யூனிஸ்ட்டுகள் பாட்டாளி சர்வாதிகாரம் என்று சொன்னதற்கும் இந்த லோக்பால் போன்றவற்றுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.மேலும் ஊழல் அற்ற இந்தியா நல்லாட்சியை வழங்கும் என்பது விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறை இல்லை.அது மாணவர்களை பார்த்து ஆசிரியர் ஒழுங்காக படித்தால் பிற்காலத்தில் நல்ல வேலைக்கு செல்லமுடியும் என்று சொல்வது போலத்தான்.மாணவர்கள் படித்து வேலைக்கு வந்தபின் தெரிந்துகொள்கிறார்கள் படித்திருக்கவிட்டாலும் இதை விட அதிகமாக சம்பாதிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்று.ஊழல் அற்ற இந்தியா என்பது ஒரு ஒழுக்க போதனை.மராத்தியில் டோம்விவாலி பாஸ்ட் என்ற திரைப்படம் தான் தமிழில் எவனோ ஒருவன் என்று மாற்றம் செய்து வந்தது.டோம்பிவாலி பாஸ்ட் படத்தில் நாயகனின் தந்தை ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்.இந்த விஷயம் தமிழில் இல்லை.ஆனால் நாயகன் நங்கநல்லூரை சேர்ந்தவன்.இதில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது.நம் சமூகம் ஒழுக்கமற்று போய்விட்டது.நாம் மறுபடியும் ஒழுக்கத்தை கடைபிடித்தால் இந்தியா நன்றாக முன்னேறிவிடும் என்பதுதான் படத்தின் சாரம்.இந்த விஷயத்திற்கு மேல் ஆம் ஆத்மி கட்சியினரும் இதுவரை எதையும் சொல்லவில்லை.இந்த அடிப்படையில்தான் அந்த கட்சியின் சட்ட அமைச்சரும் அவர் உடன் இருந்தவர்களும் ஆப்பரிக்க பெண்கள் சென்ற டாக்ஸியை மறித்து அவர்களை போதை மருந்து உட்கொண்டார்கள் என்பதை நிரூபிக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள் என்று சட்ட அமைச்சரிடம் எல்லோரும் கேட்ட போது அவர் நம் சமூகத்தில் ஒழுக்கம் கெட்டுவிட்டது என்று புலம்பினார்.

ஏன் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வரவேற்பு இடதுசாரிகளுக்கும், உண்மையான காந்தியவாதிகளுக்கும்,தலித் அமைப்புகளுக்கும் கிடைக்கவில்லை.ஏனேனில் ஆம் ஆத்மி கட்சி எதையும் மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை.அவர்கள் இப்போது இருக்கும் அமைப்பில் ஒழுக்கத்தை கொண்டுவந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.அதாவது நம் சமூகம் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதில் மாற்றமின்மையை(Status Quo) எதிர்பார்க்கிறது.

வருமான வரி கட்ட வேண்டிய ஊதியத்தை பெறும் எத்தனையோ மத்திய தர வர்க்கத்தினர் தங்கள் வருமான வரியை குறைப்பதற்காக போலியான வீட்டு வாடகை ரசீதுகள், மருத்துவ ரசீதுகள் ஆகியவற்றை உருவாக்குகிறார்கள்.அதன் மூலம் ஒரு தொகையை வருமான வரி சலுகையாக பெறுகிறார்கள். எத்தனையோ பரிவர்த்தனைகள் ரசீது இல்லாமல் செய்யப்படுகிறது.ரசீது இருந்தால் வரி கட்டவேண்டியிருக்கும். எங்கேனும் வரியை குறைப்பதற்கான சாத்தியங்கள் உண்டென்றால் அதை செய்ய எல்லோருமே முயற்சிக்கிறோம்.பெரிய அளவில் நிலங்கள் வைத்திருப்பவர்கள் வரியே கட்டுவதில்லை. வீடு கட்டும் முன் நாம் முனிசிபாலிட்டியிடமும் கார்ப்ரேஷனிடமும் காட்டும் வீட்டின் மாதிரி போல நாம் வீடு கட்டுவதில்லை. நாம் இப்படித்தான் இருக்கிறோம்.இந்த மக்கள்தான் ஆம் ஆத்மி கட்சியை ஆதிரிக்கிறார்கள்.இவர்கள் தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் செய்கிறார்கள் என்று புகார் சொல்கிறார்கள்.

என் தந்தைதான் எங்கள் தலைமுறையின் முதல் பட்டதாரி.என்னுடன் படித்த பல தலித் மாணவர்கள் அவர்கள் தலைமுறையின் முதல் பட்டதாரிகள்.சுதந்திரம் கிடைத்த காலத்தில் தமிழ்நாட்டில் அநேகமாக வேளாளர்களும் பிரமாணர்களும் படித்து பெருநகரங்களை நோக்கி சென்றார்கள்.மற்ற சாதியினர் விகிதாசார அளவில் மிக குறைவாக இருந்துள்ளனர்.அதன்பின் நேரு ஆட்சியில் இங்கே தமிழகத்தில் காமராஜர் கொண்டுவந்த கல்வித்திட்டத்தில் பல இடைநிலை சாதியினர் முதல்முறையாக படித்து பட்டதாரிகள் ஆனார்கள்.இந்தியாவில் என்பதுகளில் எடுக்கப்பட்ட நிறைய படங்களில் வேலையில்லாமால் அவதிப்படும் இளைஞர்கள் வருவார்கள்.தமிழில் அதற்கு மிக சரியாக பொருந்திய முகம் சந்திரசேகர்.ஐம்பதுகளில் அறுபதுகளில் படிக்க ஆரம்பித்த தலைமுறை பி.ஏ., எம்.ஏ படித்து பெருநகரங்களில் வேலையில்லாமல் அலைந்தனர்.அரசாங்கத்தால் வேலையை உற்பத்தி செய்யமுடியவில்லை.கிராம பொருளாதாரம் என்பதும் குறைந்து வந்த சூழலில் இங்கு தனியார்மயமாக்கலின் அந்நிய முதலீட்டின் அவசியம் எழுந்தது.நரசிம்மராவ் அமைச்சரவையில் தாராளவாத பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது.அந்த காலகட்டத்தில் வேறு யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்.இங்கே படித்து பெருநகரங்களை நோக்கிவரும் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தாக வேண்டும்.அதற்கு தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும்.அதற்கு அன்னிய முதலீடு அவசியமாகிறது.இன்று கிராம பொருளாதாரம் என்பது அநேகமாக இல்லை என்ற சூழல் உருவாகி வருகிறது.இளைஞர்கள் விவசாயத்தை,நெசவை தங்கள் தொழிலாக ஏற்பதில்லை.பெருநகரங்களுக்கு இளைஞர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.இன்று படித்து பெருநகரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் அமர்வது இயல்பான அவசியமான விஷயமாக கீழ் மத்திய தர, மத்திய மத்திய தர வர்க்கத்தில் இருக்கிறது.எந்த பெற்றோரும் தங்களின் தொழிலை பிள்ளைகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று விரும்புவதில்லை.அவர்கள் படித்து பெருநகரங்களிலும் வெளிநாடுகளுக்கும் சென்று வேலை செய்ய வேண்டும் என்பது ஒரு கனவாக அல்ல ஒரு இயல்பான விசை போல எல்லோர் மனதிலும் இருக்கிறது.

கிராமங்களும் சிற்றூர்களும் காலியாகி வருகிறது.இன்று பெருநகரங்களின் மக்கள் தொகை தினத்தோறும் அதிகரித்தப்படியே இருக்கிறது.நமது விழுமியங்கள் மாறிக்கொண்டு வருகிறது.நாம் இன்று வந்து அடைந்துள்ள இடம் தாராளவாத பொருளாதார கொள்கையால் உருவானது அல்ல.அது நாம் சோஷியலிச பாணியிலான அரசை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த போதே உருவாகிவிட்டது.அது தவறும் இல்லை.ஏனேனில் இங்கு கிராம அமைப்பும் அதன் மையத்திலிருந்த சாதி அமைப்பிற்குமான மாற்று அதுவாகவே இருந்தது.அம்பேத்கரும் , நேருவும் அதை முன்னெடுத்ததற்கான அவசியமும் தேவையும் இருந்தது.இங்கே எழுப்பவேண்டிய முக்கியமான கேள்வி இந்தியா போன்ற மிக அதிக அளவிலான மக்கள் தொகை கொண்ட நாடு பெருநகரங்களில் வாழமுடியுமா என்பதே.இந்த கேள்வியைத்தான் ஹிந்து சுவராஜ் நூலில் காந்தி கேட்கிறார்.பெருநகரங்களில் வாழும் இந்தியா குப்பைத்தொட்டி போல ஆகிவிடும் என்கிறார் காந்தி.இங்கு நேரு காலத்தில் சோஷியலிச பாணியில் அரசு இயந்திரத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.அதைச்சார்ந்து கல்வியும் அமைக்கப்பட்டது.ஆனால் காலப்போக்கில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே பெருகிவரும் படித்த வேலைத்தேடி அலையும் இளைஞர்களுக்கு போதாது என்கிற போது ஏற்பட்ட மாற்றத்தால் நாம் இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம்.மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா அத்தகைய மாற்றத்தை உருவாக்க முனைந்தபோதுதான் அவர் திரினாமூல் காங்கிரஸால் வீழ்த்தப்பட்டார்.இன்று சூழியல் சார்ந்து நிறைய உரையாடல்கள் நிகழ்கிறது.கிராமங்களையும் சிற்றூர்களையும் அப்பத்தாக்களையும் ஏங்கி சிலர் நினைவேக்கம் சார்ந்த கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுகிறார்கள்.நாட்டார் கலைகள் மீட்கப்பட வேண்டும் என்று சிலர் அதை ஆவணப்படுத்துகிறார்கள்.இவைகளில் உள்ள மையச்சரடு வளர்ச்சியும் அதன் பிரச்சனைகளும்.வளர்ச்சி என்பது தொழில் துறையின் முன்னேற்றம் என்பதாகவே நாம் புரிந்துகொள்கிறோம்.தொழில் துறை முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நிலங்கள் வேண்டும்.நிலங்கள் வேண்டுமென்றால் விவசாய நிலங்களும் காடுகளும் தேவைப்படுகிறது.சூழியல் துறை என்பதை முடிந்தவரை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு தொழில்கள் தொடங்குவதற்கான சாத்தியங்களை பற்றியே இன்றைய அரசுகள் சிந்திக்கின்றன.வருடந்தோறும் மின்சார தேவை அதிகரித்தபடியே இருக்கிறது.அதையோட்டி மின்சார உற்பத்தி பெருகியாகவேண்டிய அவசியம் எழுந்தபடியே இருக்கிறது.இன்று தொழில் வளர்ச்சியை ஆதிரப்பவர்களும் அதை எதிர்ப்பவர்களும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து கல்லூரிக்கு அனுப்பி பின்னர் அவர்கள் ஒரு நல்ல வேலைக்கு சென்று சேர்வதையே விரும்புகிறார்கள்.எல்லோருமே ஒரே அமைப்பிற்குள் தான் இருக்கிறார்கள்.இந்தியாவை ஐரோப்பிய நாடுகளோடோ , அமெரிக்கவோடோ , சிங்கப்பூரோடோ ஒப்பிடுவது முட்டாள்தனம். இந்தியாவோடு ஒப்பிடக்கூடிய ஒரே நாடு சீனா மட்டுமே.மக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் நாம் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடிய ஒன்று சீனா.இன்று சீனாவில் கிராம மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள் என்ற செய்தியே நமக்கு வாசிக்ககிடைக்கிறது.

இன்று வளர்ச்சி என்ற மையத்தை வைத்து கிராமத்து , சிற்றூரின் தனிமனிதனை பார்க்கும்போது அவன் முதலில் இந்த அமைப்பின் கல்வியை கற்றாக வேண்டும்.பின்னர் பெருநகரத்திற்கு குடிபெயர வேண்டும்.பின்னர் அவன் அந்த பெருநகரத்தின் மனிதனாக அதன் அமைப்பை ஏற்றக்கொள்ளக்கூடியவனாக அதன் அலகுகளை தன்னுடைய அலகுகளாக கொண்டவனாக மாற வேண்டும்.இதில் வெற்றி பெற்றவர்கள் மேல் மத்திய , மத்திய மத்திய தர வர்க்கத்தினராக மாற்றம் அடைகிறார்கள்.தோல்வி அடைந்தவர்கள் அல்லது அந்த வழியில் செல்ல சாத்தியம் அற்றவர்கள் இந்த மத்திய , மேல் தர வர்க்த்தினருக்கு பெருநகரத்தில் பணிசெய்யக்கூடிய இடத்தை சென்று சேர்கிறார்கள்.தொழில் நிறுவனங்களை கொண்ட நகரங்களின் மக்கள் தொகை பெருகி வருகிறது.அவை காலப்போக்கில் பெருநகரங்களாக மாற்றம் அடைகின்றன.இதுதான் வாழ்க்கைமுறை , இதுதான் சூழற்சி ,இதற்கு மாற்றோ , இதற்கு வேறான வாழ்க்கைமுறையோ இல்லை என்ற தளத்தை அநேகமாக கலைஞர்கள், இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் , ஆன்மிகவாதிகள் எல்லோரும் அடைந்துவிட்டார்கள்.

காந்தி மத நல்லிணகத்தை போதித்தார் என்பது இன்று முக்கியமில்லை.அதாவது அதை நாம் காந்தியை முன்வைத்துதான் பேச வேண்டும் என்றில்லை.அதை ஒரு இடதுசாரி தரப்பாக கூட முன்வைக்கலாம்.இன்று காந்தியின் தளம் மாற்று பொருளாதாரமே.காந்தியை நாம் அதை வைத்தே முன்னெடுக்க வேண்டும்.ஏனேனில் வேறு எவரும் அவர் சொன்னதை சொல்லவில்லை.அம்பேத்கரோ , நேருவோ , சோஷியலிஸ்டகளோ, கம்யூனிஸ்ட்களோ அவர் சொன்னதை ஏற்கவில்லை.ஜே.சி.குமாரப்பா மட்டுமே காந்தி சொன்னதை முன்னெடுத்தார்.காந்தி ஏன் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமையை வழங்கப்படுவதை எதிர்த்தார் , ஏன் இந்திய சாதி அமைப்பு முற்றலுமாக இல்லாமல் போவதை ஏற்க தயங்கினார் என்பதை நாம் காந்தியின் ஹிந்து சுவராஜை முன்வைத்துதான் புரிந்துகொள்ள முடியும்.

காந்தி தொழில் நிறுவனங்களையும் அதனால் உருவாகும் பெருநகரங்களையும் கொண்ட இந்தியாவை ஏற்க தயங்கினார்.அவர் ஒரு மாற்று தரப்பை முன்வைத்தார்.பெருநகரத்தில் ஒரு மனிதன் அந்த அமைப்பின் மனிதனாகவே இருப்பான்.ஆனால் அவர் விரும்பிய ராமன் அமைப்பு அற்றவனாக சுயம்புவாக இருப்பதற்காக சாத்தியங்கள் உண்டு என அவர் கருதினார்.அதை தக்க வைக்க கிராமமும் சாதி அமைப்பும் தேவை என்று நம்பினார்.பின்னர் சாதி குறித்த தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டார்.ஆனால் அவரால் இறுதிவரை கிராம அமைப்பை முற்றிலுமாக நிராகரிக்க முடியவில்லை.அதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருப்பதாக அவர் வாதிட்டார்.அம்பேத்கரும் , நேருவும் அவர்களின் நிலைப்பாடுகளின், நம்பிக்கைகளின் அவசியங்களின் அடிப்படையில் அதை எதிர்த்தனர்.ஆனால் இன்றைய நாளில் பெருநகரத்தின் மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதை அளவுகோலாக வைத்து வளர்ச்சியை நோக்கினால் நாம் காந்தியை புரிந்துகொள்ளலாம்.

கம்யூனிஸ அரசின் அமைப்பில் உருவாகும் தனிமனிதனுக்கும் முதலாளித்துவ அரசின் அமைப்பில் உருவாகும் தனிமனிதனுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.இருவருமே அமைப்பின் மனிதர்கள்.அவர்களுக்கு தனியாக எந்த அலகுகளும் இல்லை.கம்யூனிஸ அமைப்பில் நிறுவனங்கள் மக்களுடையதாக இருக்கம்.அது நடைமுறையில் அரசினுடையது.முதலாளித்துவ அமைப்பில் அது தனிமுதலாளிகள் அல்லது கார்ப்ரேட்களிடம் இருக்கும்.மற்றபடி ஒரு சாமானியனின் பார்வையில் அதில் எந்த பெரிய மாறுதலும் இல்லை.இங்கே அவனுடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், பாலியல் இச்சையின் வெளிபாடுகள், பொழுதுபோக்கு, அரசியல் சிந்தனைகள் என அணைத்தையுமே அந்த அமைப்பே உருவாக்குகிறது.அதில் நமக்கு எந்த பங்கும் இல்லை.நாம் அந்த அமைப்பு எந்திரம் உருவாக்கும் மெழுகு பொம்மைகள்.நம் கலாச்சாரம் , எதிர் கலாச்சாரம், அ-கலாச்சாரம் எல்லாவற்றையும் அதுவே தீர்மானிக்கிறது.நீங்கள் ஜடை வளர்த்து தாடி வைத்து கரகோஷம் எழுப்பி குடித்து என்று எப்படிவேண்டுமானாலும் இந்த அமைப்புக்கு எதிராக உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் எல்லா எதிர் நிலைப்பாடுகளும் இந்த அமைப்பின் உள்ளே இருப்பவையே.அதை இந்த அமைப்பு கண்டுகொள்ளாது.மாறாக அதை ஒரு மோஸ்தராக மாற்றிவிடும்.கம்யூனிஸ அரசுகளை போல முதலாளித்துவ அரசுகள் எழுத்தாளர்களை கலைஞர்களை ஒடுக்காது.மாறாக அவர்களுக்கு நீதி உதவி அளிக்கும்.இந்த அமைப்பின் எல்லா சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கும்.மக்களை நோக்கி அரசாங்கத்திற்கு எதிராக அறத்தின் குரலை எழுப்பும் எழுத்தாளனை அழைத்து கெளரவிக்கும்.ஏனேனில் இன்றைய மனிதனும் எழுத்தாளனும் இந்த அமைப்பிற்கு வெளியே இல்லை என்பதை அது அறியும்.எந்த சிந்தனையும் மனிதனை அதன் மையத்தை விட்டு விலக்க வாய்ப்பு இல்லை என்பதை அது அறியும்.முடிந்தால் காந்தி குறித்த ஒரு கருத்தரங்கத்தை அது பெரிய அளவில் ஏற்பாடு செய்யும்.மனிதன் குழம்பிபோகிறான்.எழுத்தாளனின் பைனாவின் முள் பின்நவீனத்துவ சூழல் காரணமாக மையத்தை இழக்கிறது.மாற்று சினிமா,நவீன நாடகங்கள் வெகு ஜோராக நடப்பதற்கான அனைத்தையும் அரசே செய்யும்.

காந்தி அமைப்பிற்கு வெளியே ஒரு மனிதனை யத்தனித்தார்.இதுவே காந்தியை மற்ற அனைத்து சிந்தனையாளர்களையும் விட தனித்து நிற்க செய்கிறது.தோரே வால்டனில் தனிமனிதனாக இருந்த இரண்டு ஆண்டுகளை நீட்டித்து வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் தனித்து தன்னை தானே ஆட்சி செய்துகொண்டு வாழமுடியும் என்றால் அவன் காந்தியின் தனிமனிதன் ஆகிறான்.அதுவே காந்தியின் இஷ்டலோகம்.அந்த மனிதனுக்கு மின்சார உற்பத்தி தேவையில்லை.அவனுக்கு தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தியாகி வரும் எந்த பொருளும் தேவையில்லை.அவன் தனக்கு தேவையானவற்றை அவனை உற்பத்தி செய்துகொள்கிறான்.காந்தியின் தனிமனதின் குடும்பம் அற்றவனாக இருப்பான்.அதனால் அவன் உடைமைதன்மை அற்றவனாக இருப்பான்.அவன் தன் ஆடைகளை தானே நெய்து , தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து , மாலை நேரங்களில் கவிதைகள் எழுதி வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்வான்.காந்தியின் தனிமனிதன் கவிதை எழுதுவானா என்று எனக்குத்தெரியவில்லை.ஆனால் ஒய்வு நேரத்தில் அவன் ஒரு சொரூப நிலையில் மழையை பாரத்துக்கொண்டு அமர்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

இன்றைய சூழலில் காந்தியின் தனிமனிதன் சாத்தியமா என்றால் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அது ஒரு இஷ்டலோகம். மனிதன் இருமையை விசாரித்தான் என்ற பிரமளின் வரியை போல நமது வாழ்க்கைமுறை கிரேக்க காலத்திலிருந்து உருவாகி வந்த தத்துவ சிந்தனையின் விளைவு.தஸ்தாவெய்ஸ்கி தொடர்ந்து தன்னுடைய நாவல்களில் இன்று நாம் வந்து அடைந்திருக்கும் விஞ்ஞான வாழ்வின் தளத்தையை குறித்தே கவலைப்படுகிறார்.அவர் தன் மக்கள் தங்கள் மரபை விட்டு விலகிச்செல்லாமல் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறார்.ஒரு போதும் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை போல மாறக்கூடாது என்கிறார்.அவர் விஞ்ஞான உலகில் மனிதன் அடையும் ஆன்மிக மரணத்தை பற்றியே பேசினார்.இங்கே தஸ்தாவெய்ஸ்கியையும் காந்தியையும் இணைத்துப்பார்க்கலாம்.

காந்தி முன்வைத்த இஷ்டலோகத்தின் மனிதன் இன்னும் பலகாலங்களுக்கு சாத்தியமே இல்லை.ஆனால் இது இலக்கியங்களில் சாத்தியமான ஒன்று.கலைகளில் சாத்தியமான ஒன்று.மின்சாரம் அற்ற , தன் உடைகளை தானே நெய்யக்கூடிய தன் உணவை தானே உருவாக்கக்கூடிய குடும்பம் அற்ற தனிமனிதன் இலக்கியங்களில் உருவாகி வரலாம்.அவன் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து பேசலாம்.குடும்பம் அற்றவன் கம்யூன் போன்ற சூழலில் வாழலாம்.அத்தகைய மனிதனை அந்த ஊரின் மனிதர்கள் விநோதமாக பார்ப்பதாக அல்லாமல் அந்த ஊரே அப்படி இருப்பதாக படைக்கலாம்.அந்த ஊர் தேசமற்றதாக இருக்கலாம்.அந்த ஊர் அமைப்பற்றதாக இருக்கலாம்.அதாவது அப்படியான இஷ்டலோகத்தின் சாத்தியங்கள் நமது இலக்கியங்களில் உருவாகி வரவேண்டும்.காந்தி முன்வைத்த அமைப்பின் சிக்கல்கள் இன்றைய நடைமுறை தளத்தில் என்ன என்பதை அம்பேத்கரிய பார்வையில் முன்வைக்கலாம்.மார்க்ஸிய பார்வையில் முன்வைக்கலாம்.மார்க்ஸியமும் தலித் சிந்தனையும் காந்திய சிந்தனைகளும் இலக்கியத்தில் ஒன்றோரு ஒன்று உரையாடலாம்.அதன் மூலம் உருவாகிவரும் சிந்தனை புதிய தளங்களை நோக்கி நம்மை இட்டுச்செல்லலாம்.அது காந்தி முன்வைத்த சுவராஜின் சிக்கல்களையும் சாத்தியங்களையும் நமக்கு உணர்த்தலாம்.காந்திய மாற்று பொருளாதார சிந்தனைகளை ஜே.சி.குமாரப்பா முன்னெடுக்க முயன்றார்.ஆனால் அதன்பின் அந்த தளத்தில் காந்தி எங்குமே முன்வைக்கப்படவில்லை.காந்தி மாற்று பொருளாதாரத்தின் குறியீடாக வருங்காலங்களில் அதன் உண்மையான அர்த்தத்தில் மாறவேண்டும்.அதை இலக்கியங்களும் கலைகளும் செய்ய வேண்டும்.அதன் மூலம் நாம் அகமகிழ்ச்சி கொண்ட ஒரு தனிமனிதனை வருங்காலத்தில் சிருஷ்டிக்க முடியும்.காந்தி மாற்று பொருளாதாரம் குறித்து முன்வைத்த சிந்தனைகளை முன்வைத்து ஏன் கலைகளும் இலக்கியங்களும் உரையாட வேண்டும் என்றால் இன்றைய சூழலில் அதுவே மாற்று தரப்பு.அதுவே நீங்கள் இந்த அமைப்பை எதிர்த்து கேள்வி கேட்பதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறது.அதுவே மாற்றமின்மை என்ற தளத்திலிருந்து மாற்றத்திற்கான அவசியங்கள் குறித்த உரையாடல்களுக்கு அழைத்துச்செல்கிறது.ஏன் அதை கலையும் இலக்கியங்களும் செய்ய வேண்டுமென்றால் அதுவே கலையின் பணி.The Purpose of art is to negate.