பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் கதையின் நாயகன் சிறுவயதிலிருக்கும் போது அவனது தோழி அவள் வளர்க்கும் நாய் இறந்துவிட்டதால் அதன் சமாதியில் ஒவ்வொரு வருடமும் அதன் நினைவுதினத்தின் போது பூச்சண்டு வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொல்லி விட்டு பிறகு படிப்பதற்காக ஏதோ ஒரு ஊருக்கு சென்று விடுவாள்.நமது நாயகன் வருடம் தோறும் தவறாமல் அந்த சமாதிக்கு அஞ்சலி செலுத்தி வருவான்.அவள் வளர்ந்து பெரியவளாகி மறுபடியும் ஊருக்கு வரும் போது ஒரு முறை அவளை அங்கு அழைத்து செல்வான்.அவள் அந்த சம்பவத்தை அநேகமாக மறந்தே போயிருப்பாள்.ஏதோ சிறு வயதில் சொன்ன ஒரு விஷயத்தை இத்தனை வருடம் பைத்திகாரத்தனமாக கடைப்பிடித்து வருவதை பார்த்து எரிச்சலடைந்து கடிந்து கொள்வாள்.ஏதோ ஒரு காலகட்டத்தில் காதலில் அடையும் தோல்வியால் அதையே நினைத்து வாழ்வை தொலைத்துவிடுபவர்கள் இந்த மேலே சொன்ன கதையின் நாயகன் போல மாறிவரும் காலத்தை எதிர்கொள்ள திராணி அற்றவர்கள் தான்.காலம் கணந்தோறும் நம் முன் மாறியபடி இருக்கிறது.இதில் பழையதை நினைத்து குற்றவுணர்வு கொள்வதும் , ஏங்குவதும்,வதைத்துக்கொள்வதும் அபிலாஷ் ஒரு இடத்தில் சொல்வது போல காலத்தில் உறைந்து நிற்பது தான்.செய்திதாள்களில் தினசரி "காதல்" என்ற பெயரிலான பல கொடூர சம்பவங்களை பார்க்க முடிகிறது.கொலை செய்தல், தற்கொலை செய்தல், முகத்தில் ஆசிட் ஊற்றுவது, தன் காதலரின் தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் ஏற்றுவது என்று எல்லா வகையான மூர்கத்தனமான வன்மங்களையும் பார்க்க முடிகிறது. இதை செய்வது பெரும்பாலும் ஆண்கள்தான் என்றாலும் சில செய்திகளில் பெண்களையும் பார்க்க முடிகிறது.தான் காதலித்தவர் தன்னை காதலிக்காத போது ஒருவர் தற்கொலை செய்து கொள்வதுதான் மிகவும் மூர்க்கமான செயல்.அதன் மூலமாக மற்றவரை நாம் நிரந்தர குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிறோம்.வாழ்நாள் முழுவதும் அந்த வதையை அவர்கள் சுமக்க வேண்டும்.இது எத்தனை கொடூரமான செயல்.நம்மால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது எந்த அளவுக்கு நம்மை தொந்தரவு செய்யும் என்பதை நாம் சிந்திப்பதில்லை.பெரும்பாலும் தற்கொலைகள் ஒரு பழிவாங்கும் நடிவடிக்கையே. அன்பு எந்த ஒரு சந்தர்பத்திலும் வன்மம் நிரம்பிய வெறுப்பாக மாற முடியும்.காதல் விஷயத்தில் அதற்கு முக்கிய காரணம் நாம் செலுத்தும் அன்பு நமக்கு திரும்ப தரப்படாத போது ஏற்படும் அவமான உணர்வு.அவமானத்தின் போது நாம் இதுவரை எந்த அளவுக்கு அன்பு செலுத்தினோமோ அந்த அளவுக்கு வெறுப்பை வளர்த்துக்கொள்கிறோம்.அவமான உணர்வுடன் இதில் புரிந்துகொள்ளப்படாத அன்பு, நிராகரிப்படும் அன்பு ஏற்படுத்தும் வலி யும் இருக்கிறது.ஆனால் பெரும்பாலும் அவமான உணர்வுதான் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வைக்கிறது.சிலர் தங்களை வதைத்து கொள்கிறார்கள், சிலர் தாங்கள் காதலித்தவரை வதைக்கிறார்கள்.
காதலின் அற்புத விஷயம், நம்மால் அந்தரங்கமாக நமது அகங்காரத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு நாம் காதலிப்பவரின் முன் மண்டியிட முடிகிறது என்பதுதான். ஒருவன் தன் அன்னையிடமோ , தந்தையிடமோ,உடன் பிறந்தவர்களிடமோ, நண்பனிடமோ அப்படி நடந்துகொள்ள முடியாது.குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் தன் சகோதரி துனியாவிடமோ, தன் அன்னையிடமோ,தன் நண்பன் ரஸூமுகினிடமோ தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை.மாறாக சோனியாவிடமே அவ்வாறு செய்கிறான்.அவளிடம் மட்டும்தான் அவனால் தன் அகங்காரத்தை கழற்றிவிட்டு மண்டியிட முடிகிறது.இதை தவிர்த்து ஒருவன் தன் வாழ்வில் ஒருவரிடம் தன் அகங்காரத்தை முழுக்க ஒதுக்கிவிட்டு நிற்க முடியும் என்றால் அது அவன் தன் ஞான தேடலில் கண்டடையும் குருவிடம் மட்டும் தான்.அந்த வகையில் காதல் ஒரு மிகப்பெரிய விடுதலை.காதலின் மற்றொரு நல்ல விஷயம் காதலின் போது தான் நாம் காதலிக்கும் எதிர் பாலினரும் நம்மை போன்ற எளிய மனிதர் என்கிற உண்மை நமக்கு புரிகிறது.இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரி, அலுவலகம் என்று பல இடங்களில் மிக ஆரோக்கியமான நட்பார்ந்த முறையில் பழகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.ஒருவரிடம் காதல் தோன்றி பின்னர் சில காரணங்களினால் மறைவதும் மிக குறைந்த காலத்திலேயே வேறு ஒருவரை காதலிப்பதும் சாத்தியமே.காதலில் தோற்றவர் வேறு ஒருவரை காதலிக்காமல் இருக்கிறார் என்றால் அவருக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை என்பது தான் முக்கிய காரணம்.வேறு காரணங்களில்லை.தங்கர்பச்சான் படங்களில் வருவது போல காதலித்த பெண்ணின் செருப்பை பாதுகாப்பது போன்ற Fetish சமாச்சாரங்கள் பைத்திக்காரத்தனமானவை.அவருடைய பள்ளிக்கூடம் படத்தில் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் காதலித்தவர்கள் , பின்னர் தங்கள் துணைவர்களுக்கு தெரியாமல் தொலைபேசியில் பேசிக்கொள்வது போன்ற காட்சி வரும்.மிக ஆபாசமான காட்சி.செருப்பை வைத்துக்கொள்வதும்,துணைவருக்கு தெரியாமல் பேசி நெகிழ்வதும் என்ன மாதிரியான உணர்வு.ஒன்று ஆரோக்கியமான வெளிப்படையான உரையாடல் இருக்க வேண்டும் அல்லது இந்த எளிய விஷயத்தை புரிந்துகொள்ளும் திராணியற்ற துணைவர் கிடைத்தால் தொடர்பு கொள்வதை நிறுத்த வேண்டும்.அதை விடுத்து மறைமுகமாக பேசி நெகிழ்ந்து கொள்வது ஆபாசமன விஷயம்.நம் சினிமா காதலை பற்றி முற்றிலும் தவறான பிம்பங்களை மட்டுமே உருவாக்கி இருக்கிறது.ஒரளவு அதை முதிர்ச்சியாக இதுவரை பேசிய இயக்குனர் செல்வராகவன் மட்டுமே.அசோகமித்திரனின் டைரி சிறுகதையில் பதினாறு வயதில் ஒருவன் காதல் தோல்வியை தாங்கிக்கொள்ளலாம், இருபது வயதில் சாத்தியம், இருபத்தியைந்து வயதில் கூட சாத்தியம் , ஆனால் முப்பதில் முடியவே முடியாது என்று ஒரு வரி வரும்.ஒரளவு உண்மையான வரிகள் தான்.ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் மற்றொருவரின் வெளியை ,சுதந்திரத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் நம்முடைய உடைமையாக்கி கொள்ளும் மணப்பாண்மைதான் பெரும்பாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.நாம் காதலித்த ஒருவர் பல்வேறு காரணங்களினால் நம்மை காதலிக்காமல் போகலாம்,அல்லது பல்வேறு காரணங்களினால் திருமணம் நிகழாமல் போகலாம்.ஆனால் சில வருடங்கள் கழித்து அவரை நாம் சந்திக்கும் சூழலில் நாம் உடலளவிலும் , மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பதை வெளிப்படுத்திக்கொள்வதே நாம் அவர்களுக்கு தரும் அன்பின் பரிசு.ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.
2 comments:
அனுபவம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும்...
அன்பின் பரிசு அருமை... வாழ்த்துக்கள்...
அலசலுக்கு நன்றி...
நன்றி.அசோகமித்திரன் எழுதிய முதல் ரேடியோ நாடகத்தின் பெயர் அன்பின் பரிசு.
Post a Comment