Adoration of the Lamb - இடது பக்கம் கீழே இருப்பது Just Judges என்ற திருடப்பட்ட ஒவியம் |
கிளெமன்ஸ் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை எல்லோரிடமும் பொதுவில் தெரிவிக்கிறார்.அதற்காக அவர் அழுது மார்பில் அடித்துக்கொள்வதில்லை.சரியான வார்த்தைகளை தேர்கிறார்.அவருடைய தவறுகளை பட்டியலிடுகிறார்.அப்போது உங்களையும் அவருடன் இணைத்துக்கொள்கிறார்.உங்கள் இருவருக்குமான பொது தோல்விகளை பேசுகிறார்.அப்போது நாம் எல்லோரும் குற்றம் புரிந்தவர்கள் என்ற முறையில் சகோதரர்களே என்று சொல்லிவிடுகிறார்!ஆனால் அதில் அவர் விடுதலையை உணர்கிறார்.அவர் முதலில் தன் குற்றத்தை எந்த வித சமரசமும் இல்லாமல் ஒப்புக்கொள்கிறார்.பின்னர் அதன் மூலமாக இந்த மானுடத்தின் நீதிபதி ஆகிறார்.அப்படியாக மறுபடியும் அவர் மேலே உயர்ந்த இடத்திற்கு சென்றுவிடுகிறார்.இந்த நாவல் சாராம்சத்தில் மனிதனின் ஆதார குணங்களை பற்றி பேசுகிறது.கிளெமன்ஸ் எல்லா இடங்களிலும் மேலே உயரத்தில் இருக்க விரும்புகிறார்.கப்பலில் பயணிக்கும் போது மேலடுக்கில் இருக்க விரும்புகிறார்.கடல் மட்டத்திலிருந்து வெகு உயரத்திலிருக்கும் மலையில் நிற்க விரும்புகிறார்.அவருக்கு மனித எறும்புகளுக்கு மத்தியில் கீழே இருக்க விருப்பமில்லை.அவரின் செயல்கள் அளித்த மன நிறைவு அவரை எங்கோ ஒரு உயரத்தில் அதீத சுய மதிப்பு கொண்டவராக இருக்க செய்கிறது.தன் வாடிக்கையாளர் ஒருவர் தன்னால் பணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறும் போது அது தேவையில்லை , மாறாக அவருக்கு எதாவது பண உதவி வேண்டுமா என்று கேட்டு விட்டு , வேறு யாரும் இவ்வாறே நடந்து கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு விடைபெறுகையில் மிகுந்த மகிழ்ச்சியும் உவகையும் அடைகிறார்.ஒருவன் தன் நற்செயலை பற்றி சொல்லும் போது , அல்லது யோசிக்கும் போது அது தன்னுடைய பிறவி குணம் என்று சொல்கிறான்.ஆனால் ஒரு தவறை நிகழ்த்தும் போது அதற்கான காரணத்தை சொல்கிறான்.அப்போது இருந்த சூழல், தன் பிரச்சனைகள் என்று பட்டியலிடுகிறான்.அதனால் தான் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கோருவது கருணையை.ஆம், நாம் இழைத்த குற்றங்களுக்கு நாம் கோருவது கருணையே.நமது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பல பக்கங்கள் ஒருவரின் குற்றத்தை எதன் பொருட்டு குறைக்கலாம் என்பது பற்றி தான் பேசுகிறது.நான் ஒருவரை மிகவும் புண்படுத்தும்படி பேசியிருக்கிறேன்.பின்னர் அவரிடம் மன்னிப்பு கோரியபோது நான் மிகவும் நல்லவன் என்றும் ஏதோ சந்தர்ப்ப சூழல் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டதாகவும் இது ஒரு தற்காலிக விஷயமே என்றும் சொன்னேன்.இப்போது நினைத்து பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது.எந்த சிறிய அல்லது பெரிய குற்றத்தை செய்தவரும் இதையே தான் செய்வார்.நாம் நமது குற்றங்களுக்கான பொறுப்புணர்வை ஏற்க தயங்குகிறாம்.கிளெமன்ஸ் ஒரு முறை காரில் பயணம் செய்யும் போது சிகப்பு விளக்கு எரிவதால் சிக்னலில் நிற்கிறார்.அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் காரர் அவரது காருக்கு முன் தன் வண்டியை நிறுத்துகிறார்.சிக்னல் பச்சை நிறத்திற்க்கு மாறிய பின் முன் இருந்தவரால் மோட்டர் சைக்கிளை இயக்க முடியவில்லை.அவர் கொஞ்சம் விலகி கொண்டால் தான் செல்ல முடியும் என்று கிளெமன்ஸ் சொல்கிறார்.வாக்குவாதம் நீளவே கிளெமன்ஸ் காரிலிருந்து வெளியே வந்து மோட்டார் சைக்கிள் ஒட்டுநரை நோக்கி செல்கிறார்.அப்போது வேறொருவர் கிளெமன்ஸை தடுத்து மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பவரை தாக்க முனைவது தவறு என்கிறார்.இதற்கிடையில் மோட்டார் சைக்கிள் இயங்கவே அவர் வண்டியை கிளப்பிக்கொண்டு கிளெமன்ஸை தட்டிவிட்டு செல்கிறார்.என்ன நடந்தது என்பதை யூகிக்க முடியாமல் கிளெமன்ஸ் மறுபடி காரை நோக்கி செல்கிறார். கிளெமன்ஸை தடுத்து அறிவுறத்தியவர் அவரை முட்டாள் கழுதை என்று கத்திவிட்டு செல்கிறார்.அவரோடு சிக்னலில் நின்றுகொண்டிருந்த எவரும் அந்த நிகழ்வை மறந்துபோயிருப்பார்கள்.ஆனால் கிளெமன்ஸ் அந்த நிகழ்வை மறுபடி மறுபடி தன் மனதில் நிகழ்த்திப்பார்க்கிறார்.தன்னை கழுதை என்று திட்டியவனை அடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் காரனை விரட்டி பிடித்து மடக்கி அவனை மண்டியிட வைக்க வேண்டும் என்ற படச்சுருளை அவருக்குள் மறுபடி மறுபடி நிகழ்த்திக்கொள்கிறார்.அவர் மறுபடியும் தன்மதிப்போடு சமூகத்தில் நடப்பதில் ஏதோ தயக்கம் கொள்கிறார்.அந்த வன்மம் அவரை நிம்மதி இழக்க செய்கிறது.தான் கண்ணியமானவன் என்ற பிம்பத்தை அது உடைக்கிறது.நதியில் விழுந்து மரணமடைந்த பெண்னை காப்பாற்ற துணியாமல் தாமதாமாகிவிட்டது இனி காப்பாற்ற சாத்தியமில்லை என்ற சமாதானாத்தோடு நடந்து சென்ற கணத்தை நினைவுகொள்வதோடு அவர் தன்னை பற்றிய முழுமையை அடைகிறார்.அவர் இதுவரை செய்த உதவிகள் எல்லாமே போலியானவை.அத்தகைய செயல்கள் அவருக்கு அளித்த சுயநிறைவை தன்மதிப்பை அவர் வெகுவாக நேசித்தார்.மொத்தத்தில் அவர் தன்னை மட்டுமே நேசித்தார்.அவர் மிகவும் விரும்பி செய்த செயல்களில் கூட அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லை.அந்த பெண்னை காப்பாற்றாமல் போனதை நினைக்கும் போது தன் அக்கறைகள் எந்தளவுக்கு என்று கேட்டு கொள்கிறார்.நம்மை இழக்கக்கூடிய ஒரு அக்கறையை உதவியை பிறருக்கு செய்ய நாம் முனைவதில்லை.தியாகம் நம்மை முன்நிறுத்தவே செய்யப்படுகிறது.நாம் செய்யும் எல்லா செயல்களும் நமக்கானவையே.
மத்திய காலகட்டத்தில் Little-ease என்ற வகையிலான சிறைகள் இருந்திருக்கின்றன.அவைகளில் ஒருவர் நிற்கவோ அமரவோ படுத்துறங்கவோ முடியாது.அதாவது அப்படி ஒரிடத்தில் சில காலம் இருப்பவன் நாம் குற்றம் செய்திருக்கிறோம் அதனால் இந்த தண்டனை, குற்றமற்ற அறியாமை நிரம்பிய வாழ்க்கை என்பது நன்றாக உடலை விரித்து நிம்மதியாக உறங்குவது தான் என்பதை உணர்கிறான்.இதை வடிவமைக்க ஒருவருக்கு சமயமோ கடவுளோ தேவை இல்லை.வேறோரு சிறை பற்றி விவரிக்கிறார்.இங்கு மனிதர்கள் நின்றுகொண்டிருப்பார்கள்.கதவு அவர்களின் தாடை வரை இருக்கும்.வந்து போகும் சிறை அதிகாரிகள் கைதிகளின் முகத்தில் காறி உமிழ்வார்கள், அப்போது அதை துடைக்க அவர்களால் முடியாது.ஆனால் கண்களை மூடிக்கொள்ள அனுமதி உண்டு.இப்படிப்பட்ட சித்ரவதைகளை வழங்க மனிதனுக்கு கடவுளோ சமயமோ தேவையில்லை.அது மனிதனால் இயல்பாக செய்ய முடிந்த செயலே.கிளெமன்ஸ் தான் வாழ்ந்த இரட்டை வாழ்க்கையை வெறுக்கிறார்.தான் உண்மையில் பிறரை காதலிக்கவோ , நேசிக்கவோ அக்கறை கொள்ளவோ இல்லை.நான் காதலிக்கபட வேண்டும் என்று விரும்பினேன்.பரஸ்பர காதல் அல்ல.நான் காதலிக்கப்பட வேண்டும்.அதன் மூலம் நான் மேலும் உயரத்தில் இருக்க வேண்டும்.நான் மற்றவர்களை தேவையான போது பயன்படுத்திக்கொள்ள குளிர்பதனப் பெட்டியில் வைப்பது போல அவர்களை வைக்க விரும்பினேன் என்று சொல்கிறார்.
ஆல்பெர் காம்யூ 1956ஆம் ஆண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார்.இவரும் இவரின் துனைவியாரும் ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்ற ஒப்புதலோடே திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஆனால் காம்யூவின் காதல் வாழ்க்கை அவருடைய துனைவியாருக்கு மன அழுத்தத்தை அளிக்கிறது.அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.அது காம்யூவை வெகுவாக பாதிக்கிறது.இந்த நாவல் கிட்டத்தட்ட காம்யூவின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லலாம்.காம்யூவிற்கும் காசநோய் இருந்தது.கிளெமன்ஸ் தான் வாழ்க்கையில் இரண்டு செயல்களில் மட்டுமே அதன் சட்டங்களை ஒப்புக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டதாக சொல்கிறார்.ஒன்று விளையாட்டு , மற்றொன்று நாடகம்.காம்யூ கால்பந்தாட்டக்காரராக இருந்திருக்கிறார்.நாடகங்களை எழுதியும் இயக்கியும் இருக்கிறார்.
இயேசு கிறுஸ்து பற்றி கிளெமன்ஸ் குறிப்பிடுகிறார்.கிறிஸ்துவிற்கு தான் முழுக்க தவறுகள் எதுவுமே செய்யவில்லை என்ற எண்ணம் இருந்ததில்லை.அவர் பொருட்டு கொல்லப்பட்ட குழந்தைகளை , குழந்தைகளை இழந்து வாடிய ராகெல்லின் துயரத்தை அவர் அறிந்திருந்தார்.அந்த துயரத்தை , குற்றவுணர்வை அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவர் மரணமடைந்தார்.இதில் பிரச்சனை என்ன வென்றால் நம்மை அவர் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.நம்மால் அவரை போல செய்ய இயலவில்லை.கிளெமன்ஸ் வட ஆப்பிரிக்கா பகுதிகளில் முகாம்களில் சில காலம் இருக்கிறார்.அப்போது குழுவில் அவர்களுக்கு இடையே அவர் போப் என்று அங்கீகரிக்க படுகிறார்.அங்கே ஒரு படிநிலை தேவைப்படுகிறது.இவரின் கட்டளைகளை அங்கே உள்ளவர்கள் ஏற்கிறார்கள்.அங்கே எப்போதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.ஒரு முறை இறந்து போகும் நிலையிலிருக்கும் வேறொருவரின் தண்ணீரை இவர் அருந்துகிறார்.அவர் எப்படியும் இறந்து போகும் நிலையில் இருந்ததால் அவரை விடவும் தான் தான் மற்றவர்களுக்கு அதிகம் பயன்படுபவான இருக்க முடியும் என்பதே அதற்கு அவர் அளிக்கும் விளக்கம்.அந்த நிகழ்வோடு குழுவை கலைத்துவிடுகிறார். சகோதரத்துவம், சமதர்மம் மனிதனால் முடியாது என்கிறார்.இந்த நாவல் முழுக்க முழுக்க மனிதனின் ஆதார குணங்களான அதிகாரம், மனிதனால் பிறரை எந்தளவுக்கு குரூரமாக நடத்த முடியும் என்பதையும், காதல் , அன்பு, சகோதரத்துவம், என்று நாம் இந்த ஜனநாயக யுகத்தில் நின்று கொண்டு பேசியபடி இருக்கும் வார்த்தைகளுக்கு பின்னால் உள்ள கோர முகத்தை பற்றி பேசியபடி செல்கிறது.இது நமது வீழ்ச்சியை பற்றி பேசுகிறது.இந்த நாவல் உங்களை பற்றி பேசவில்லை.ஆனால் உங்களோடு பயணிக்கிறது.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த துரோகத்தை, கொலையை , திருட்டை, ஏமாற்றத்தை நீங்கள் அறியாமலே பட்டியல் இட வைக்கிறது.நாம் எத்தனை சுயநலவாதிகள் என்பதை எந்த வித இரக்கமும் இல்லாமல் பேசுகிறது.தஸ்தாவெய்ஸ்கிக்கும் காம்யூவிற்கும் இருக்கும் முக்கிய வித்யாசம் காம்யூவின் உலகில் மீட்சி இல்லை.நாம் பொதுவாக சமயம் , கருத்தியல் ஆகியவற்றால் தான் இத்தனை பெரிய அநீதிகளை மனிதனால் செய்ய முடிந்திருக்கிறது என்று சொல்கிறோம்.ஆனால் காம்யூ இந்த நாவலில் மனிதனால் இயல்பாகவே இதை எல்லாம் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிறுவுகிறார்.நீங்கள் உங்கள் குற்றங்களை பட்டியலிட்டு பாவ மன்னிப்பு கேட்க முடியாது.உங்களுக்கு எந்த கருணையும் இல்லை.பகிரங்கமாக ஒப்புக்கொள்வதின் மூலமாக நீங்கள் உங்களின் பாசாங்கின் , பாவனைகளின் முகத்தை கிழிக்கிறீர்கள்.அவ்வளவுதான்.பிறர் உங்களுக்கான தீர்ப்பை எழுதுவதற்கு முன்னால் நீங்களே அதை செய்கிறீர்கள்.அதன் மூலம் உங்களை சுற்றி இருக்கும் மக்களின் கேலியான சிரிப்பொலியிலிருந்து தப்புகிறீர்கள்.மேலும் உங்கள் குற்றங்களை எந்தவித கருணையின் எதிர்ப்பார்ப்பில்லாமல் ஒப்புக்கொண்டதால் நீங்கள் நீதிபதி ஆகுகிறீர்கள்.அப்போது மானுடத்தை உங்களோடு சேர்த்துக்கொண்டு நீங்களும் அவர்களும் உங்களது பொதுவான குற்றங்கள் மூலமாக சகோதரத்துவத்தை உணரலாம்!அவ்வளவே.
Just Judges என்ற திருடப்பட்ட ஒவியம் இவரிடம் இருக்கிறது.அதை மூன்று நாடுகளின் காவலர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த ஒவியத்தில் நீதிபதிகள் அறியாமையின் குறியீடான செம்மறி ஆட்டுக்குட்டியை தேடி செல்கிறார்கள்.ஆனால் நீதியும் அறியாமையும் எப்போதோ பிரிக்கப்பட்டுவிட்டது.இன்று நீதி இறைவனின் பெயரால் வழங்கப்படுகிறது.ஆனால் விலைமாதுவை நோக்கி 'Neither do i condemn thee!' என்று மென்மையாக சொன்னவரின் பெயரால் நீதி வழங்கப்படுகிறது.அப்படிப்பட்ட ஒவியத்தை திருடியதற்காக தான் காவலர்களால் கைது செய்யப்பட்டால் அது நன்றாக இருக்கும் என்று கருதுகிறார் கிளெமன்ஸ்.அது எல்லாவற்றையும் எளிதாக்கிவிடும்.அதற்குபின் தனக்கு மரணம் குறித்த பயம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லும் கிளெமன்ஸ் இறுதியில் இவ்வாறாக முடிக்கிறார்.மறுபடியும் அந்த இளம் பெண்னை நதியில் குதிக்க சொல்லலாம்.அப்போது நமக்கு அவரை காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அப்போதும் தாமதாகிவிடலாம்.எப்போதும் தாமதமாகித்தான் விடுகிறது!அதிர்ஷடவசமாக!
No comments:
Post a Comment