குற்றங்களும் பிம்பங்களும்

 

பொதுவாக குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் ஏன் பல வருட நட்பு இருந்தது அல்லது தொடர்பு இருந்தது என்ற கேள்வி  அனைத்து வகை சுரண்டல் சார்ந்த குற்றங்களிலும் முன்வைக்கப்படுகிறது.பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல் , உணர்வுச் சுரண்டல் என்று பல வகையான சுரண்டல்களில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.உண்மையில் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் உருவாகும் உறவும் ஆழமான பிணைப்பு கொண்டது தான்.காதல் போன்ற பந்தம்.அந்தப் பிணைப்பு பல நேரங்களில் வலுவானதாகவும் அமைகிறது.அந்த உறவு ஒரு விஷ சுழற்சி போல இயங்குகிறது.அதில் சில நேரங்களில் குற்றவாளியும் மகிழ்ச்சியின்றி பயணிக்கிறார்,குற்றமிழைக்கப்பட்டவரும் பயணிக்கிறார்.காதல் கொண்ட இருவர் ஒருவரை ஒருவரை அறிந்துக் கொள்வது போலவே இது போன்ற துர் உறவுகளிலும் அறிதல் நிகழ்கின்றது.

நாம் யார் என்பது குறித்து நம்மிடையே ஒரு பிம்பம் இருக்கிறது.நான் சர்வோத்தமன் , நெய்வேலியில் வளர்ந்தேன், பொறியியல் படித்தேன், கணினித்துறையில் வேலை செய்கிறேன்,  மனைவி குழந்தைகளுடன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன், கதைகள் கட்டுரைகள் எழுதுவேன் என்று ஒரு பட்டியல் கொண்ட பிம்பத்தை நான் என்னில் சேகரித்து வைத்திருக்கிறேன்.இவற்றுடன் நான் கொண்ட விழுமியங்களும் நம்பிக்கைகளும் அதில் இருக்கும்.ஆங்கிலத்தில் Spirit என்று சொல்லலாம்.ஆனால் இது ஆன்மா அல்ல.ஆடி பிம்பம்.இது தான் ஒரு மனிதன் தனது நேற்றையும் நாளையையும் இன்றையும் இணைத்து ஓர் இணைவை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.இதுதான் ஒரு அறுபடாத தொடர்ச்சியை தக்க வைக்க உதவுகிறது.

இந்த பிம்பத்தில் ஒருவன் சிறுவனாக பவுடர் பூசி தலை வாரி மிட்டாய் மென்றவாறு தன் தாய் தந்தையருடன் அமர்ந்திருக்கிறான்.அங்கு அவன் மிக பாதுகாப்பாக இருக்கிறான்.இந்த பிம்பம் உடைபடாத வரை மனிதனுக்கு பிரச்சனையில்லை.ஆனால் அந்த ஆடியில் அவன் காணாமல் போய்விட்டால் அவன் சிதறுகிறான்.காவல் நிலையங்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது சில நேரங்களில் உடைகள் அற்று நிர்வாணமாக நிறுத்தப்படுகின்றனர்.அது அவனை அவமானம் கொள்ளச் செய்வதற்காக மட்டும் நிகழ்த்தப்படுவது அல்ல.அவன் தன்னுள் கொண்டுள்ள அந்த பிம்பத்தை உடைப்பதற்காகவும் தான்.அதனால் தான் காவல் நிலையங்களிலிருந்து பின்னர் வெளிவரும் பலர் சில காலத்திற்கு எந்தச் செயலிலும் ஈடுபட முடியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.ஒருவன் தன்னைப்பற்றி கொண்டுள்ள சமூக மதிப்பீடு , பிம்பத்தை நொறுக்குவது தான் இத்தகைய தண்டனைகளுக்கு பின்னால் உள்ள உளவியல்.அவன் வெளியே சென்று தன் பழைய செயல்களை செய்யக்கூடாது என்பதற்காக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறை.

பெண்களும் ஆண்களும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் சில நேரங்களில் இது காரணமாக அமைகிறது.அவனது ஆன்மாவை (ஸ்பிரிட்) கொன்று இனி நீ ஒன்றுமில்லை  , நீ ஒரு சக்கை என்று சொல்வது தான் இந்தச் செயலுக்கு பின்னால் உள்ள காரணம்.பெரும்பாலான சுரண்டல்களும் இதைத்தான் செய்கின்றன.ஆனால் அதை பெளதிகமான பருப்பொருளாக நம்மால் சில நேரங்களில் காண இயலாது.சுரண்டல்களின் ஆதார விசை பிம்ப வழிபாடும், நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் தான்.சில நேரங்களில் சிலர் வேலையின் பொருட்டு , ஒரு வாய்ப்பின் பொருட்டு சுரண்டலை பொறுத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் அது நம்பிக்கையால் நிகழலாம்.பொருளாதாரச் சுரண்டல்கள் அப்படித்தான் நிகழ்கின்றன.வேறு சில தந்தை , குரு , ஆசிரியர் போன்ற பிம்ப வழிபாட்டால் நிகழ்பவை.

இதில் சுரண்டுபவர் முதலில் செய்வது சுரண்டுபவரை ஆராய்வது தான்.பின்னர் தன் சுரண்டலை மெல்லத் துவங்குகிறார்.பாதிக்கப்படுபவர் தன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்பதை கவனிக்கிறார்.எதிர்ப்பு இல்லாத போது அதை தொடர்கிறார்.இதில் பாதிக்கப்படுவர்களுக்கு தாங்கள் எதையோ இழக்கிறோம் என்ற எண்ணம் இத்தகைய உறவின் துவக்கத்திலேயே இருக்கும்.ஆனால் அது இன்னது என்று அவர்களால் சொல்ல இயலாது.குழப்பம் அடைவார்கள்.எப்போதும் இந்தச் சுரண்டும் நபரை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.குற்றவாளியின் தரப்பு நியாயத்தை தங்களுக்குள் விளக்கிக்கொள்வார்கள்.தர்க்கப்படுத்தி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது , நாம் தான் தேவையின்றி அலட்டிக்கொள்கிறோம் என்று சமாதானம் கொள்வார்கள்.ஆனால் அவர்களால் அந்த உறவு தொடங்குவதற்கு முன்னர் இருந்தது போல மகிழ்ச்சியாக இருக்க இயவவில்லை என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.மன அழுத்தம் கொள்வார்கள்.எப்போதும் அவர்களுக்குள் ஓர் உரையாடல் இருக்கும்.அவர் தான் அணிந்திருக்கும் உடைகளை யாரோ தனக்குத் தெரியாமல் திருடுகிறார்கள் என்ற எண்ணத்தை அடைவார்.ஆனால் உண்மையில் அப்படித்தானா என்ற குழப்பமும் அவருக்கு இருக்கும்.மேலே சொன்ன நம்பிக்கை போன்ற காரணங்களால் அந்த உறவு நீடிக்கவும் செய்யும்.

உடல் அளவில் நிர்வாணப்படுத்தி தண்டிப்பது , வன்புணர்வு செய்து தண்டிப்பது போன்றது தான் சுரண்டலும்.இது போன்ற சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர் மனச்சோர்வு , தனிமை, குற்றவுணர்வு , அவமானம் , தற்கொலை உணர்வு, உடல் வலி , வன்மம்  ஆகியவற்றை அனுபவக்கின்றனர்.இதில் உளவியல் ரீதியில் அவரது பிம்பம் உடைக்கப்படுகிறது.சிலர் இத்தகைய உறவில் ஈடுபடத்துவங்கிய ஆரம்ப நாட்களில் வெகுவாக எடை இழப்பார்கள்.தங்களை சுருக்கிக்கொள்வார்கள்.நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவார்கள்.உடைக்கப்பட்ட ஆடியில் அவர் கேலிச்சித்திரமாகிறார்.ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தான் பாதிக்கப்படுகிறோம் என்று புரியத் துவங்கும்.இந்த உறவில் சிக்கல் இருக்கிறது என்று உணர்வார்கள்.ஆனால் பாதிக்கப்பட்டவரின் பிம்பம் உடைந்துவிட்டது.அதை மறுபடியும் கட்டியெழுப்பதற்கான கச்சாப்பொருட்கள் சுரண்டப்பட்டவரிடம் இருப்பதாக அவர் நம்புகிறார்.கிட்டத்தட்ட தன் உடலை மறைக்க தேவையான உடை தன்னைச் சுரண்டியவரிடம் மட்டுமே இருப்பதாக அவர் நம்பத் தலைப்படுகிறார்.அது வெளியில் கிடைக்காது என்கிற வகையிலேயே அவரின் உரையாடல்கள் அமையும்.அவர் தன்னைச் சுரண்டியவரிடம் இறைஞ்சுவார்.மிரட்டுவார்.தன்னால் இயன்ற அனைத்து வழிமுறைகளையும் செய்துப் பார்ப்பார்.சுரண்டுபவர் அவரைப் பார்த்து இளித்தப்படியே இருப்பார்.அல்லது மேலும் குழப்புவார்.உடையை கொடுப்பது போல கொடுத்து பிடுங்கிக் கொள்வார்.அது ஒரு விஷச் சுழற்சி போலச் சுழன்றபடியே இருக்கும்.பின்னர் ஏதோ ஒரு கட்டத்தில் இருவரும் உறவை முறித்துக்கொள்வார்கள்.பெரும்பாலும் சுரண்டுபவர் தான் உறவை முறிப்பார்.ஏனேனில் அவருக்கு அடுத்த இரை கிடைத்திருக்கும்.இந்த விடைபெறுதலுக்குப் பிறகும் இந்த உறவுகள் இருவர் நினைவிலும் நீடிக்கும்.

பாதிக்கப்பட்டவர் அந்த உறவின் முடிவில் தான் முழுமையற்றவராக மாறிவிட்டோம் என்பதை உணர்வார்.கண்ணாடியில் முகம் பார்க்கும் போது தன்னில் ஏதோ ஒன்று குறைகிறது என்று கவலை கொள்வார்.அவர் கோபம், அவமானம், துயரம் , குற்றவுணர்வு என்று பல்வேறு உணர்வு நிலையில் தகித்தப் படியே இருப்பார்.ஓர் இடத்தில் அமர இயலாமல் தவிப்பார்கள்.ஏனேனில் அவரது பிம்பம் உடைக்கப்பட்ட நிலையிலேயே நொறுக்கப்பட்ட நிலையிலேயே தான் இருக்கிறது.அதை அவரால் மீட்க இயலவில்லை.மெல்ல தன்னைச் சுரண்டியவரை எப்படி பழிவாங்கலாம் என்று எண்ணத் துவங்குவார்.

1. உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது.

2. பொருளாதாரத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது. வேலையில் இருந்து நீக்க வைப்பது அல்லது தொழிலை முடக்க முனைவது.

3. சுரண்டியவருக்கு தெரிந்த நபர்களுக்கு அவரைப்பற்றிய சுய ரூபத்தை தெரியப்படுத்துவது.

4. பொதுவில் முன்வைப்பது.

5. புறக்கணித்து முன்செல்வது.

6.  மன்னிப்பை கோருவது.

இதில் பாதிக்கப்பட்டவர் தன்னால் இயன்ற வகையில் ஒன்று பழிவாங்குவார் அல்லது புறக்கணித்துச் செல்வார் அல்லது மன்னிப்பை கோருவார்.இதனால் தான் பல நேரங்களில் பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தவை சட்டென்று வெளியில் வருகின்றன.பாதிக்கப்பட்டோரை பொறுத்தவரை அவை எப்போதோ நிகழ்ந்தவை அல்ல , அவர்களுக்கு அது முந்தைய நாள் நடந்த நிகழ்வு போல இருக்கும்.அந்த உரையாடல்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தபடியே இருக்கும்.சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர் கோருவதெல்லாம் எந்த ஆனாலும் இல்லாத ஒரு எளிய மன்னிப்பை மட்டுமே.ஏனேனில் அது பாதிக்கப்பட்டவரை ஒரு மனிதராக பொருட்படுத்துகிறது.அவரின் கேலிச்சித்திரம் நேர் செய்யப்படுகிறது.அவர் தன் ஆடி பிம்பத்தை மறுபடியும் பெறுகிறார்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு சிலர் தங்கள் முந்தைய பிம்பத்தை திரும்ப பெறுகின்றனர்.அவர் தன் தாய் தந்தையருடன் அமர்ந்து மிட்டாய் மென்றவாறு பேராக்கு பார்க்கத் துவங்குகிறார்.மனம் அந்த ஏகாந்த நிலையை அடையும் போது அவர் தன் வேலைகளை முன் போல செய்யத் தொடங்குவார்.சிலர் ஒரு போதும் முன் போல் இயங்க இயலாத வகையில் முழுமையாக சிதறிப்போய் விடுகின்றனர்.சிலர் தன்னைச் சுரண்டியவரிடமே சென்று சேர்ந்துவிடுகிறார்கள்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை பாதித்தவனிடமே சென்று சேர்கிறார்.

ஆனால் எப்போதும் சுரண்டியவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமான அந்த உறவு ஒரு பிணைப்பு நீடித்துக்கொண்டே தான் இருக்கும்.சுரண்டியவரின் துணை அறியாத சில இரகசியங்களை பாதிக்கப்பட்டவர் அறிவார்.சிலர் சில காலம் கழித்து அணைத்தையும் மறந்து எளிமையாக உரையாடக் கூடியவர்களாகவும் மாற்றம் கொள்வார்கள்.காலம் சிலரை கனிய வைக்கும்.மறக்க வைக்கும்.சுரண்டுபவரும் எல்லா நேரங்களிலும் திட்டமிட்டு இவற்றை நிகழ்த்துவதில்லை.அது நிகழத் துவங்குகையில் அவர் திட்டமிடத் துவங்கிறார்.ஆனால் பல நேரங்களில் சுரண்டுபவர்களிடம் ஒரு Pattern இருக்கும் என்றே உளவியலில் சொல்லப்படுகிறது.அனைத்தையும் கறுப்பு வெள்ளையில் நம்மால் அடைக்க முடியாது என்பதும் உண்மைதான் .உறவுகள் அது அப்படித்தான் என்ற சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று இருக்கிறது.அது இத்தகைய விஷச் சுழற்சி கொண்ட உறவுகளுக்கும் பொருந்தும்.

இத்தகைய விஷயங்களை சரியாக சொல்வதற்கு புனைவு தான் சரியான வாகனம் என்று இதை எழுதும் போது உணர்கிறேன்.உளவியலாளர்களால் இன்னும் நன்றாக விளக்க முடியும்  என்று நினைக்கிறேன்.

No comments: