நகுலனின் மூன்று , ஐந்து ஆகிய கவிதைத் தொகுப்புகள் இராமயணத்தை அடிப்படையாக கொண்டவை.ஐந்து கவிதைத் தொகுப்பில் குகன், விராதன், சவரி, சடாயு, வீடனன் ஆகியோரைப் பற்றியே எழுதியிருக்கிறார்.இவர்கள் எவருமே இராமயணத்தின் மையக் கதாபாத்திரங்களோ எதிர் கதாபாத்திரங்களோ அல்லர்.ஆனால் இந்தப் பாத்திரங்கள் அனைத்திற்கும் மையச்சரடு ஒன்றுண்டு.தன்னையழித்தல்.மூன்று தொகுப்பில் உள்ள உறங்குகின்ற கும்பகர்ணன் பகுதியும் ஐந்து தொகுப்பில் உள்ள வீடனன் தனிமொழியும் நகுலனின் உலகை நமக்கு ஒளிபுக உணர்த்துபவை.நகுலனின் நினைவுப்பாதை நாவல், ஐந்து , மூன்று , மழை மரம் காற்று,கோட்ஸ்டாண்ட் ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரின் தத்துவத்தை இன்னும் தெளிவாக கூறுபவையாக அமைந்திருக்கின்றன.
ஒரு வகையில் வீடனனின் தனிமொழி தான் நகுலனின் தரிசனம் என்று சொல்லிவிடலாம்.பிரத்யட்சமாக காண்பதையே மனிதன் உண்மை என்று எண்ண விரும்புகிறான்.அனைத்து தத்துவங்களும் அறிதல் முறைகள் பற்றி பேசுகின்றன.பிரத்யட்சம், அனுமானம், ஊகம்,தர்க்கம், ஸ்ருதிகள் என்று ஒவ்வொரு தத்துவமும் தனக்கான அறிதல் முறைகளை வரையறுக்கிறது.பிரத்யட்சத்தை கடந்து அருவத்தை உணர்வதை நகுலன் தன் புனைவுகளில் கவிதைகளில் தொடர்ந்து முன்வைக்கிறார்.
கும்பகர்ணன் நான் அரக்கன் என்கிறான்.வீடனன் தன் தனிமொழியில் அந்த நாம-ரூபத்தைத்தான் கேள்வி கேட்கிறான்.என்னை நான் என்று நான் ஒரு போதும் மயங்குவதில்லை என்று மறுபடி மறுபடி சொல்கிறான். பிறப்பால் இனத்தால் உருவாகும் அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதல் தான் நகுலன் முன்வைக்கும் உலகம். வீடனன் தான் பிறப்பாலோ இனத்தாலோ கட்டுண்டவன் அல்ல என்கிறான்.கும்பகர்ணன் வீடனனிடம் அடிப்படையில் நான் ஒரு அரக்கன் , ஸ்தூலத்தைச் சூக்குமாக்கும் வித்தையை நாங்கள் வெறுக்கிறோம்,ரத்தமும் சதையுமாகத்தான் நாங்கள் இந்த உலகைத் தரிசிக்கிறோம்.நாங்கள் அரக்கர்கள், எங்களுக்குக் கனவுகள் பலிக்க வேண்டும், காமம் தீர வேண்டும் , இங்கு நம் வழிகள் பிரிகின்றன என்று தன் உரையை முடிக்கிறான்.
கும்பகர்ணன் தன் செயல்களை நியாயப்படுத்திச் சொல்ல அரக்கர்களின் உலகப் பார்வை அவர்களின் குணங்கள் ஆகியவற்றையே பயன்படுத்திக் கொள்கிறான்.இந்த அடையாளங்கள் இந்த செயல்களை அங்கீகரிக்கின்றன என்று கும்பகர்ணன் சொல்கிறான். இவை சரியானவை தவறானவை என்ற தர்க்க விவாதத்திற்குள் அவன் செல்லவில்லை.கும்பகர்ணன் தாங்கள் சூடிக்கொள்ளும் அர்க்கர்கள் என்ற அடையாளத்தின் வழி தங்கள் செயல்களுக்கான நியாயங்களை உருவாக்கிறான்.அந்த அடையாளங்களை அழித்து விட்டால் அவனால் அவர்களது செயல்களை தர்க்கப்படுத்தி ஒரு வரிக் கூட சொல்ல இயலாது.
வீடனன் இதைத்தான் கேள்வி கேட்கிறான்.விகுதியை பகுதியாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறான். ஏதோ ஒன்று நாம-ரூபமாகத் தன்னை கிளை பரப்பிக் கொண்டு இவ்விகலம் முழுவதும் வியாபகமுற்று இருக்கிறது என்று கொள்வதும் அந்த ரூபம் தான் மூல தத்துவம் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று வீடனன் எண்ணிக்கொள்கிறான்.தன் பெரிய அண்ணாவாலும் இளைய அண்ணாவாலும் நாம ரூபத்தை தாண்டிய ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படுகிறான்.தன்மையிலிருந்தே உருவம் என்று சொல்கிறான்.
சித்தாந்தம், சாதி, இனம், சமயம், மொழி, உடல், நினைவுகள் ஆகியவற்றின் வழி நாம் நமக்கான அடையாளங்களை சூடிக்கொள்கிறோம்.சித்தாந்தத்தின் தர்க்கங்கள் நம்முடைய தர்க்கங்கள் ஆகின்றன.உருவத்திலிருந்து தன்மை உருவாகிறது.நாம் நமது என்றும் என்னுடையது என்றும் சொல்லிக்கொள்வது அந்த சித்தாந்தத்தின் வழி உருவான தத்துவத்தைத்தான்.அதுவே ஒருவனின் பிரத்யட்ச உலகமாக ஆகிறது.உருவம் கொண்டு ஒருவன் அடையும் அருவம் அந்த சித்தாந்தத்தின் தன்மையில்தான் இருக்கிறது.இவற்றை தாண்டிய ஒரு அருவம் உள்ளது என்றும் அந்த அருவத்திலிருந்து தனக்கான உருவத்தை அடைய முடியும் என்றும் மனிதன் எண்ணும் போது அடையாளங்களிலிருந்து விடுபடலாம் என்பது நகுலன் முன்வைக்கும் தர்க்கம்.
முன்னர் குறிப்பிட்டது போல ஐந்து கவிதைத் தொகுப்பில் அவர் குகன் , சடாயு, சவரி, விராதன் , வீடனன் ஆகியோர் பற்றி எழுதியிருப்பதில் இருக்கும் இணைக்கும் சங்கலி அவர்கள் தங்களை இழப்பது தான்.காத்திருத்தல்,பணிதல்,தன்னுயிர் நீத்தல்,சாபத்திலிருந்து விடுபடுதல், தன் அடையாளத்தை களைந்து வெளியேறுதல் என்று அவை மற்றமை பற்றிய அக்கறையை முதன்மைப்படுத்துகிறது.நகுலன் தன் படைப்புகளில் மூன்று விஷயங்களை செய்கிறார்.ஒன்று அடையாளம் களைதல் என்னும் நிலை.இரண்டாவது மற்றமை குறித்த உணர்வு.மூன்றாவது அடையாளம் களைந்து இரண்டறக் கலத்தல்.பிறிதாகுதல்.
அடையாளம் களைய நமக்கு தடையாக இருப்பவை பால், உடல், நினைவு, இனம் , சாதி, மதம், சமூக அடுக்கு, சித்தாந்தங்கள் ஆகியவை.திரெளபதி அவள் வந்து போகும் அர்ச்சுனன் என்ற கவிதையில் வந்து போகும் அர்ச்சுனன் என்ற வரி ஒரு நிலையற்றத் தன்மையை குறிக்கிறது.திடமான ஸ்திரமான ஒரு அடையாளத்திலிருந்து விலகி ஒரு பாயம்(flux) நிலையை நோக்கிச் செல்கிறது வந்து போகும் அர்ச்சுனன் கவிதை.மற்றமையை வேண்டி நிற்கிறது.அதே போல கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் அடையாளத்தை சுமக்கும் உடல் இல்லாமல் போதல் என்ற நிலையைப் பற்றி பேசுகிறார்.
இந்த அடையாளங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளுதல் என்பது உலகு நீக்கிய ஒரு தரிசனத்தை முன்வைப்பதற்காக அல்ல.அல்லது உலகு கடந்த நிலையை அடைவதற்காக அல்ல.அவை மற்றமை குறித்த அக்கறையை உள்ளடக்கியவை.வீடனன் பிறப்பென்ற பேதைமை நீங்கி ராமனுக்கு நான் ஆட்பட்டேன் என்கிறான்.கும்பகர்ணன் இராவணனிடம் வீடனன் பற்றி சொல்லும் போது அவன் தன் பிள்ளைத்தன்மை நீங்கிவிட்டான் என்கிறான்.பிள்ளைத்தன்மை என்பது பிறப்பின் பால் வரும் பேதைமை.வீடனன் அந்த பிள்ளைத்தன்மை நீங்கி இராமனிடம் சென்று சேர்கிறான்.நகுலன் மற்றமை குறித்த அக்கறையோடு நின்றுவிடுவதில்லை.மற்றமையோடு ஒன்றாகுதல் என்பது நகுலன் படைப்புகளில் தொடர்ந்து வரும் மற்றொரு எண்ணம்.
தான் இராமனைக் கைகூப்பித் தொழுதது பற்றிச் சொல்லும் போது , உண்மையில் யார் யாரைத் தொழுதார்கள் , நான் இராமனிடமிருந்து என்னை வேறாகத் கருதவில்லை, கைகூப்பித் தொழுதல் என்பது யோக முத்திரை , இது தான் கடைசி வார்த்தை என்கிறான்.வீடனன் தன்னை மற்றமையில் கண்டுகொள்கிறான்.மற்றமையாகவே ஆகிறான்.இதுதான் நகுலன் முன்வைக்கும் தரிசனம்.இது அவரது அனைத்துப் படைப்புகளிலும் இருக்கிறது.வீடனன் தனிமொழியில் தெளிவாக பதிவாகியிருக்கிறது.
கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் எல்லைகள் என்ற கவிதை
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப-சிதலங்கள் , இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் – இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்.
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது.நடுவில் யாரோ
ஒருவர் அவனை நோக்கி
“நீங்கள்? ” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.
மேதைகளின் சிற்ப சிதலங்கள் ,இருப்பவர்களின் மிரட்டல் ஆகிய இரண்டையும் அவன் கடக்கிறான்.மேதைகளின் சிற்ப சிதலங்கள் என்பவை சித்தாந்தங்களும் , கோட்பாடுகளும், மதங்களும் அன்றி வேறென்ன.நம்மை இந்த சிற்ப சிதலங்களின் வரையறைகள் கட்டுப்படுத்துகின்றன.நகுலன் அவற்றை மீறுவது குறித்து பேசவில்லை, மாறாக அதைக் கடப்பதை பற்றியே தன் படைப்புகளில் பேசுகிறார்.அவனுக்கு அவன் பெயர் கூட மறந்துவிட்டது என்பது அவன் தன் அடையாளங்களிலிருந்து முழுக்க வெளியேறிவிட்டான் என்பதையே குறிக்கிறது.
கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் வரும் புகழ்பெற்ற ராமச்சந்திரன் கவிதை நாம-ரூபங்கள் சூட்டும் அடையாளங்களிலிருந்து விடுபடுதல் என்பதைப் பற்றிதான் பேசுகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது / எல்லாம் என்பது மனிதனை மையப்படுத்தும் பார்வையை கேள்விக்கு உட்படுத்துகிறது.மனிதன் அனைத்தையும் மாற்றும் வல்லமை உள்ளவன் என்பது இருபதாம் நூற்றாண்டில் வலதுசாரி இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் ஏற்றுக்கொண்ட எண்ணம்.அதை நகுலன் தொடர்ந்து தன் படைப்புகளில் மறுக்கிறார்.மேலும் மனிதன் முழுமையானவன், ஸ்திரமான அடையாளங்களைக் கொண்டவன் என்பதையும் நகுலன் ஏற்கவில்லை.
இவர்கள் என்ற கவிதையில்
பிரக்ஞையின்றித் தங்களைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
…
என்று எழுதுகிறார்.இந்த தான் என்ற பிரக்ஞையிலிருந்து எப்படி நழுவுவது விடுபடுவது என்பதை பற்றி மழை மரம் காற்று கவிதைத் தொகுப்பில் விரிவாகச் சொல்கிறார்.
…பல விஷயங்களிலிருந்து
காற்றுச் சலிப்பது
இலை அசைவது
திடீரென்று சூரியப்பிராகசத்தில்
இலைகள்
வாடித் தவழ்வது
நமக்குத் தெரியாது
என்கிறார்.மேலும்
..விறகு வெட்டி!
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!
என்கிறார். நகுலன் இங்கு என் நிழலை வெட்டு என்று குறிப்பிடுகிறார்.என்னை வெட்டு என்றல்ல. நிழல் என்பதை ஆனவம் , அகங்காரம், அடையாளம்,தர்க்கம்,பிரக்ஞை என்று அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சொரூப நிலையை பற்றி மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் இப்படி சொல்கிறார்.
என்னை விட்டுச் செல்லும்
நழுவல்
விடிந்தால்
உலகம் நமக்குக் காத்துக்
கொண்டிருக்கிறது;
அதிலிருந்து
இப்படிக் கழன்று கொள்வதில்
தான் நமது
விமோசனம்
அடுத்த நாள் விடிந்தால் தன் லெளகீக பரபரப்புகளுக்குள் நம்மை அமிழ்த்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த சொரூப நிலை அவசியம் என்பதையும் தொடர்ந்து தன் படைப்புகளில் முன்வைக்கிறார். அந்த விடுபடுதல் பால் திரிந்து , நினைவுகளிலிருந்து தப்பி, உடலைக் கழற்றி, பிரக்ஞையிலிருந்து நழுவி என்ற பல்வேறு நிலைகளில் நகுலன் படைப்புகளில் வருகின்றன. இந்த விடுபடுதல் வழி அவர் ஒரு ஆன்மிக நிலையை அத்வைத தத்துவத்தை சொல்லவில்லை என்பதே என் எண்ணம்.அவர் சக மனிதனை மட்டுமே இங்கு மற்றமையாக கூறுகிறார்.
மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் தன் கூற்றை மேலும் வலுவாகச் சொல்ல “இவனும் வெகுதூரம் சென்று திரும்பி வந்தவன் தான் சொல்கிறான்” என்று திருமூலரைப் பற்றி சொல்லிவிட்டு திருமந்திரத்தின் கீழ்கண்ட பகுதியை சுட்டுகிறார்.
எழுந்திடங் காணில் இருக்கலுமாகும்
பரந்திடங்காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே.
கொழுந்தன் – சுடர் , குவலயம் – உலகம்
பார்ப்பதி – சக்தி
ஞானலிங்கமாகிய ஒளி மயமான சுடரைக் கண்டால் உலகம் தோன்றும்.எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும், தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகப் பற்றின் – சக்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.1
இந்த மந்திரத்தை நகுலன் கூறும் நிழலை வெட்டு என்பதுடன் பொருத்திப் பார்க்கலாம்.மேலும் நகுலன் தொடர்ந்து உருவத்திலிருந்து அருவம் நோக்கிய பயணத்தைப் பற்றி தன் நினைவுப்பாதை நாவலில், வீடனனின் தனிமொழியில் எழுதுகிறார்.மனிதன் உருவத்தை கடந்து அருவத்தின் உண்மையை அறிய வேண்டும் என்று நகுலன் தன் படைப்புகளில் தொடர்ச்சியாக பதிவுசெய்கிறார்.
நகுலனின் அருவம் உலகம் பொய் என்ற நிலையை நோக்கி பேசவில்லை.அது மற்றமையில் இரண்டறக் கலக்கும் ஒரு அவாவுதலை பற்றியே பேசுகிறது.பெளதீகமான உலகம் இல்லாமல் ஆகிறது என்ற கருத்தை நகுலன் சொல்வதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.நகுலனின் ஸ்டேஷன் கவிதையை நான் இந்தப் பொருளில் புரிந்து கொள்கிறேன்.
ஸ்டேஷன்
ரயிலை விட்டிறங்கியதும்
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.
இந்தக் கவிதையையும் யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கவிதையையும் நாம் கவனித்தால் அதில் அவர் மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம்.பெளதீகமான புற உலகை இல்லாமல் செய்யும் அத்வதை நோக்கிலிருந்து விலகி பிறிது என்ற எண்ணம் அற்ற ஓர் பக்தி நிலையை பற்றி நகுலன் கவனம் கொள்கிறார்.
என்னைப் பார்க்க வந்தவர்
எனச் சொல்லிச் சென்றார்
என்ற கவிதையில் பிறிரை புரிந்து கொள்ளவும் பிறரை அறியவும் விடாமல் தன்னையே ஸ்தாபித்துக்கொள்ள மனிதன் எந்தளவு பிரயத்தனப்படுகிறான் என்பதை கூறுகிறார்.
இந்த நான் என்ற பிரக்ஞையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதையும் உருவங்களிலிருந்து அருவங்கள் நோக்கிய பயணத்தையும் முன்வைப்பவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் கவிதைகள் பக்திக் கவிதைகளும் கூட.இங்கு மற்றமை கடவுளாக இல்லாமல் மற்றொரு மனிதனாக இருக்கிறது.மற்றமை குறித்த அக்கறை தான் அனைத்து பொதுநல செயல்களுக்குமான முதல் படி. நகுலன் அதை நோக்கி நம்மை அழைத்துச்செல்கிறார்.நாம் செல்வோம்.
1 - திருமந்திரம் விரிவுரை – ஜி.வரதராஜன்
ஷங்கர் ராமசுப்ரமணியன் தொகுத்த நகுலன் 100 அருவம் உருவம் நூலில் இடம்பெற்ற கட்டுரை.