ஆனந்த் டெல்டும்டே |
கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்திருக்கின்றன.கம்யூனிஸ்ட்கள் வர்க்க அடிப்படையில் மட்டுமே சமூகத்தை பார்க்க விரும்புகிறார்கள்.ஏழை X பணக்காரன்,முதலாளி X தொழிலாளி,ஆளும் வர்க்கம் X பாட்டாளி வர்க்கம் என்ற பிரிவினையின் அடிப்படையில் சமூகத்தை பகுத்து பார்க்கிறார்கள்.அவர்கள் சாதியின் அடிப்படையிலான வேறுபாடுகளை அங்கீகரிக்க விரும்புவதில்லை.இதற்கான காரணத்தை ஆனந்த் டெல்டும்டே தன் சாதியின் குடியரசு(Republic of caste) நூலில் விளக்குகிறார்.சமூகத்தை மார்க்ஸ் இரண்டாக பிரித்தார்.அவை அடித்தளமும் மேற்கட்டுமானமும்.அடித்தளம் என்பது பொருள் உற்பத்தி நிகழும் தளம்.மேற்கட்டுமானம் என்பது கருத்துத் தளம்.கருத்து உற்பத்தி தளம் என்று இதைச் சொல்லலாம்.மேற்கட்டுமானத்திற்கும் அடித்தளத்திற்குமான இயங்கியல் தான் சமூகத்தை இயக்குகிறது.பொருள் உற்பத்தி தளத்திலான மாற்றம் மேற்கட்டுமானத்தை பாதிக்கும் என்கிறது மார்க்ஸியம்.அதனால் தான் அது இயங்கியல் பொருள்முதல்வாதம்.பொருள் தான் முதன்மையானது.கருத்து அல்ல.ஆனால் கிராம்ஷி போன்ற சிந்தனையாளர்கள் கருத்து தளத்திலான மாற்றங்களும் அடித்தளத்தில் விளைவுகளை உருவாக்கும் என்று சொன்னார்கள்.அவர்கள் சொல்லி அரை நூற்றாண்டு கடந்து விட்டது.ஆனால் இன்று வரை இந்தியக் கட்சி கம்யூனிஸ்டுகள் அதைப்பற்றிய அக்கறையை வளர்த்துக்கொண்டதாக தெரியவில்லை.அவர்கள் சாதியை ஒரு கருத்தாக பார்க்கின்றனர்.அதாவது பொருள் உற்பத்தி தளத்திலான உற்பத்தி கருவிகளின் உடைமை மாற்றத்தால் சாதி மறைந்து போகும் என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகின்றனர்.ஆனால் சாதி வர்க்கத்தினுள் மற்றொரு வர்க்கமாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை அவர்கள் இன்று வரை ஏற்கத் தயாராக இல்லை.இதுவே அம்பேத்கரிய இயக்கங்களும் கம்யூனிஸ கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட இயலாமல் தடுக்கும் முக்கியச் சுவர்.கம்யூனிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவற்கு இருக்கும் முக்கிய காரணம் இத்தகைய வேறுபாடுகள் பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கு பதிலாக பிரிக்கிறது என்பது தான்.
ஆனால் சாதி என்பது பண்பாட்டுத் தளத்திலானது அல்ல.அது ஒரு கருத்தல்ல.அது பொருள் உற்பத்தி தளத்திலான யதார்த்தம்.அது ஒரு பருப்பொருள் என்றே கொள்ள வேண்டும்.சாதியும் வர்க்கமும் ஒன்று தான்.இங்கு சாதி அடிப்படையிலேயே தொழில்கள் செய்யப்பட்டன.இன்று படிப்பு, திறமை என்பதன் அடிப்படையில் கிடைக்கும் வேலை அன்று சாதியின் அடிப்படையில் அளிக்கப்பட்டது.படிப்பு, திறமை ஆகியவற்றின் இடத்தில் சாதி இருந்தது.அது ஒரு வேலைப் பிரிவினைக்கான ஏற்பாடாகவும் இருந்திருக்கிறது.ஆகவே சாதியை வர்க்கமாகவே பார்க்க வேண்டும்.இன்று தலித் சமூகம் சந்தித்து வரும் இன்னல்கள் அவர்கள் தலித்துகள் என்பதாலேயே நிகழ்கின்றன.அவர்கள் ஏழைகள் என்பதால் அல்ல.அவர்கள் தலித்துகளால் இருப்பதால் ஏழைகளாக இருக்கிறார்கள்.ஏழைகளாக இருப்பதால் தலித்துகளாக இல்லை.கிராமங்களில் பெருநகரங்களில் பெரும்பாலான தலித்துகள் சேரிப்பகுதிகளில் தான் வாழ்கிறார்கள்.அவர்கள் கூலி வேலைதான் செய்கிறார்கள்.கிராமங்களின் பெருநகரங்களின் சேரிப்பகுதிகளின் அவல நிலைகள் நம்மை அறைந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் நாம் அந்த புற யதார்த்தத்தை காண விரும்பவில்லை, ஏற்க விரும்பில்லை.
இந்தியாவில் பெருவாரியான தலித்துகளும் இஸ்லாமியர்களும் வறிய நிலையில் கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.சிறைகளிலும் அவர்களின் எண்ணிக்கையே அதிகம்.சிறைச்சாலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இஸ்லாமியர்களாகவும் தலித்துகளாகவும் பழங்குடிகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்படும் அநீதிகளுக்கு இந்திய சமூகம் செய்யும் பிராயச்சித்தம்.இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி ஆறாவது ஷரத்து அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிலும் முக்கியமாக பட்டியலினத்தவர்களின் பழங்குடியினரின் படிப்பிலும் பொருளாதாரத்திலும் அதிக அக்கறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.மேலும் அவர்களை அநீதியிலிருந்தும் சுரண்டலிருந்தும் காக்க வேண்டும் என்று சொல்கிறது.இவை அரசின் கொள்கைகளை நெறிப்படுத்தும் காரணிகள் பகுதியில் வரும் ஷரத்து.அதாவது இவை அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு ஆற்ற வேண்டும்.அவர்கள் சுரண்டப்பட்டார்கள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.இவை காரணங்கள்.அதனால் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.அவர்கள் பின்தங்கிவிட்டார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.மாறாக இந்த சமூகம் அவர்களை ஒடுக்கியதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் மத்திய அரசு தொண்ணூறுகள் வரை பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீட்டையும் தரவில்லை.வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் ஆணையம் தந்த பரிந்துரைகளின் படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தியது.அதுவரை பட்டியல் இனத்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே மத்திய அரசு இட ஒதுக்கீடு அளித்தது.சாதி அடிப்படையிலான அரசியலுக்கு இது வித்திட்டது என்று சொல்லப்படுகிறது.மேலும் மண்டல் X கமண்டல் என்று மத அரசியல் பெரிய அளவில் இந்தியாவில் தொண்ணூறுகளுக்கு பின்னர் வளர்ந்ததற்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முக்கிய காரணமாக அமைந்தது.பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியம் தானா என்பதில் பல முரண்பட்ட வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.அடிப்படையில் இட ஒதுக்கீடு பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியனருக்கும் தான்.பிற்படுத்தப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவர்களை போலவே பொருளாதாரத்திலும் சமூக அடுக்கிலும் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள்.உயர்த்தப்பட்ட சாதியினரைவிட நல்ல பொருளாதாரச் சூழலிலும் சமூக அடுக்கிலும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.பிற்படுத்தப்பட்டோரின் நிரை மிகப்பெரியது.அவர்களுக்கான இட ஒதுக்கீடு எப்போதும் விவாதங்களை உருவாக்க வல்லது தான்.அதில் இரு தரப்பிலும் நியாயங்கள் இருக்கின்றன.
வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததற்கு இரண்டு அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார் ஆனந்த்.ஒன்று அன்று வளர்ந்த வந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்து மதத் சொல்லாடலை பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நீர்த்துப்போகச் செய்யும் என்று அவர் எண்ணினார்.அதே போல காங்கிரஸூக்கு இந்தி பேசும் மாநிலங்களில் இருந்த வாக்கு வங்கியை அது குறைக்கும் என்று நினைத்தார்.ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவத்தை கொண்டு ஆட்சிக்கு வந்து விட்டது.நவதாராளவாதம் அவர்களுக்கு உதவியது.நவதாராளவாதம் மனிதனை கையறு நிலைக்குத் தள்ளுகிறது.கையறு நிலைக்குச் செல்பவன் சாதியிலும் மதத்திலும் அடைக்கலம் தேடுகிறான்.எங்கெல்லாம் முதலாளித்துவம் அதி வேகமாக வளர்கிறதோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையிலான வலதுசாரி அமைப்பு பெரும் சக்தியாக மாறும்.
ஆனால் இட ஒதுக்கீட்டில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் என்கிறார் ஆனந்த் டெல்டும்டே.இட ஒதுக்கீடு இன்று வரை அரசாங்க வேலைகளில், தேர்தலில், கல்லூரி படிப்புகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.தேர்தலில் இருக்கும் இட ஒதுக்கீடு உண்மையில் எந்த பலனையும் தரவில்லை.ஏனேனில் மைய நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் தான் தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.அவை தலித் மக்களுக்கு என்று எந்த கொள்கைகளையும் தனியாக வகுப்பதில்லை.பஞ்சாயத்து தேர்தல்களில் தலித் சமூகத்தினருக்கு அளிக்குப்படும் தொகுதிகளில் அவர்கள் போட்டியிடவும் வெல்லவும் பணிபுரியவும் பெரும் தடைகள் உள்ளன.தமிழகத்தில் மட்டுமே அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.அவற்றை தன் புத்தகத்தில் பட்டியலிடுகிறார் ஆனந்த்.பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கும் தனித் தொகுதிகளில் தலித் வகுப்பினர் மட்டும் ஓட்டு செலுத்தினால் வேட்பாளர் வெற்றி பெற இயலாது.எந்த தனித்தொகுதியிலும் தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கப் போவதுமில்லை.பிற சாதிகளின் ஆதரவும் வேட்பாளருக்கு தேவைப்படுகிறது.அப்படியென்றால் தலித் மக்களின் நலன் பொருட்டு மட்டுமே அவரோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ எவ்வாறு கொள்கை வகுக்க இயலும்.இன்று தேர்தலில் நாம் தேர்தெடுக்கும் தலித் வேட்பாளர்கள் தலித் சமூகத்தை பிரிதிநித்துவப் படுத்துவதில்லை.அவர்கள் ஒரு தலித் அடையாளத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள்.அது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கிறது.அவ்வளவு தான் சாத்தியமாகவும் இருக்கிறது.அம்பேத்கர் தேர்தலில் தோற்றிருக்கிறார்.அம்பேத்கர் கொண்டு வந்த இரட்டை வாக்குரிமை தலித்துகளை சரியாக பிரதிநித்துவப் படுத்தும் திட்டமாக இருந்தது.ஆனால் காந்தி ஏர்வாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்து அதை பிடிவாதமாக மாற்றினார்.காந்தி நினைத்தது போலவே இன்று தலித் சமூகம் இந்து சமூகத்திலிருந்து பிரிந்து போகவும் இல்லை , பிரதிநித்துவப்படவும் இல்லை.
தனித் தொகுதிகள் உண்மையில் அடையாளச் சின்னங்கள் போல மட்டுமே செயல்படுகின்றன.தலித் சமூகங்களின் விகிதாச்சாரத்தின் அளவுக்கு அவர்கள் பிரதிநித்துவப் படுத்தப்படுவதில்லை.அதாவது ஒருவர் எப்படி பிராமணராக இருப்பதாலேயே பிராமண சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த இயலாதோ அதே போல ஒருவர் தலித்தாக இருப்பதாலேயே தலித் சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த இயலாது.அவர் தலித் மக்களால் மட்டுமே தேர்தெடுக்கப்படுகையிலேயே அவர் தலித் மக்களை பிரதிநித்துவப்படுத்துகிறார் என்று கொள்ள முடியும்.இன்றைய நாடாளுமன்ற , சட்டமன்ற , பஞ்சாயத்து தேர்தல்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை.அந்தத் தொகுதியின் பெருவாரியான மக்கள் யாரை தேர்தெடுக்குகிறார்களோ அவர்களே பிரதிநிதி.அவர் தொகுதியின் பிரதிநிதி மட்டுமே.தலித்துகள் பிரதிநிதி அல்ல.
ஆனால் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பயன் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் பள்ளிப்படிப்பில் சமச்சீரான பாடத்திட்டங்களை இந்தியா முழுமைக்கும் இன்றுவரை கொண்டு வர முடியவில்லை.பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நுழைவுத் தேர்வுகள் உயர் கல்விக்கு ஒரே போல உருவாக்கப்படுகிறது.பெருநகரத்து பள்ளிக்குழந்தைகளுக்கும் சிறு நகரத்து பள்ளிக் குழந்தைகளுக்கும், உயர்த்தப்பட்ட சாதி பள்ளிக்குழந்தைக்கும் தாழ்த்தப்பட்ட சாதி பள்ளிக் குழந்தைகளுக்கும் இங்கு பாடத்திட்டங்கள் ஒன்று போல இல்லை.ஆசிரியர்கள் ஒன்று போல இல்லை.பள்ளி கட்டமைப்பு ஒன்று போல இல்லை.அவர்களின் சமூக மூலதனம் ஒன்று போல இல்லை.அவர்களின் சமூக அஸ்தஸ்து ஒன்று போல இல்லை.அவர்களின் வாங்கும் சக்தி ஒன்று போல இல்லை.ஆனால் நுழைவுத்தேர்வு ஒன்று போல இருக்கிறது.கல்லூரி படிப்பை ஒரு தாழ்த்தப்பட்டவர் அடைய பல்வேறு தடைகள் இருக்கின்றன.அத்தனை தடைகளையும் கடந்து தான் ஒருவர் கல்லூரிப்படிப்பை அடைய முடிகிறது.தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் பொது பிரிவுக்குமான கட் ஆஃப் மதிப்பெண்களின் வித்யாசம் குறைவாகத்தான் இருக்கின்றன.சிறப்பு வகுப்புகள் வழியாகவும் சமூக மூலதனத்தின் வழியாகவும் மற்ற பிரிவினர் கல்லூரிகளுக்கு செல்வதை விட தலித் சமூகத்தினர் அதிலும் கிராமப்புறங்களிலிருந்து செல்வது சாதனைதான் என்கிறார் ஆனந்த்.
இன்று உயர் வகுப்பினருக்கான பத்து சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் யோகேந்திர யாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள் ஒரு முக்கியமான கோணத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.எப்போதும் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களில் தகுதி பிரதான வாதப்பொருளாக இருக்கிறது.இட ஒதுக்கீட்டால் தகுதி அற்றவர்கள் வேலைக்கு வந்து விடுகிறார்கள், பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று சிலர் கூச்சலிடுகின்றனர்.இதனால் பணியின் தரம் குறைந்துவிடுகிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.இப்போது உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால் அதே தரமும் தகுதியும் குறையும் என்று முன்பு கூச்சலிட்டவர்கள் சொல்லவில்லை.அப்படியென்றால் இத்தனை நாள் நீங்கள் போட்ட கோஷங்கள், மண்டல் ஆணையம் அமுலுக்கு வந்த போது செய்த போராட்டங்கள் அவை உங்களுக்கு இல்லை என்பதால் தான் என்பது நிரூபணம் ஆகிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
இட ஒதுக்கீடு மற்றொரு முக்கியமான விவாதத்தை உருவாக்குகிறது. இட ஒதுக்கீட்டில் எப்போதும் ஒடுக்கப்பட்ட பிரிவில் இருக்கும் முன்னேறிய சமூகங்கள் குடும்பங்கள் தான் அதிக பலனை அடைகிறார்கள்.பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைத்து இட ஒதுக்கீடு இடங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் தான் தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அருந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது.கலைஞர் கருணாநிதி தன் ஆட்சியில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினார்.கலைஞர் கருணாநிதிக்கு புகழ் சேர்க்க இந்த ஒரு முடிவு போதுமானது.ஆனால் இட ஒதுக்கீட்டில் எப்போதும் முன்னேறிய சமூகங்களும் குடும்பங்களும் அடுத்தடுத்த தலைமுறையிலும் இடங்களை பெறுவது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.இதை தடுக்க ஏதேனும் வழி இருக்குமா என்று விவாதிக்க அம்பேத்கரின் மகன் பிரகாஷ் அம்பேத்கர் ஒரு கருத்தரங்கை நடத்தினார்.அதில் இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களே மறுபடி மறுபடி பயன் பெறுகிறார்கள்.அதை எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதித்தார்கள்.சாதியை இட ஒதுக்கீட்டுக்கான அலகாக கொள்ளாமல் ஒரு தனிக்குடும்பத்தை அலகாக கொள்ள வேண்டும்.இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பட்டியல் இனத்தவர்கள் பயன் பெறாத பட்டியல் இனத்தவர்கள் என்று அவர்கள் இரண்டாக வகுக்கப்பட வேண்டும்.படிப்பு , வேலை ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டால் பயன் அடையாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இறுதியாக இடங்கள் இருந்தால் அவற்றை அளிக்கலாம் என்ற தீர்மானத்தை அவர்கள் அடைகிறார்கள்.இது ஓரளவு பயன் அளிக்கும் எண்ணம் தான் என்கிறார் ஆனந்த்.இதன் வழி இட ஒதுக்கீடு என்பது எப்போதைக்குமானது என்பது மாற்றத்திற்கு உள்ளாகிறது.இட ஒதுக்கீட்டால் பயன் பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போது மெல்ல சாதி மீதான பிடிமானங்களை இழக்க வேண்டிய அவசியத்தை அது உருவாக்கும் என்கிறார் ஆனந்த்.இதை பிற்படுத்தப்பட்டோருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
இட ஒதுக்கீடு உண்மையில் பெரும் பலனை அளிக்கும் ஒரே துறை கல்லூரிப் படிப்பு மட்டும் தான். சாதி ஒழிய வேண்டும் என்றால் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எப்போதும் ஒரு சாதியினருக்கு நிலையானதாக இருக்காத வகையில் அதை மாற்ற வேண்டும்.அப்படி மாற்ற வேண்டும் என்றால் அதன் அலகு சாதி என்பதிலிருந்து குடும்பம் என்பதற்கு மாற வேண்டும்.ஒரு குடும்பத்தின் தாய் தந்தையர் இட ஒதுக்கீட்டை பெற்றிருந்தால் பிள்ளைகளுக்கு முன்னுரிமை இல்லை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் இட ஒதுக்கீடு அது எவருக்கு அவசியமோ அவருக்கு சென்று சேரும்.இனி தான் சார்ந்திருக்கும் சாதியால் தனக்கு பயன் இல்லை என்பவர் சாதி சங்கங்களில் இருப்பதை தவிர்ப்பார்.காலச்சக்கரத்தின் சூழற்சியில் அது சாதி ஒழிப்புக்கு பயன் அளிக்கக்கூடும்.அதே நேரத்தில் சாதிகள் அற்ற , சாதி சங்கங்கள் அற்ற இந்தியா இருக்க முடியும் என்பதை நமது அரசியல்வாதிகளால் கற்பனை கூட செய்ய முடியாது என்பது உண்மை தான்.ஆனால் ஒரு குடிமைச் சமூகம் தன் வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.அவை எப்போதாவது நிறைவேறக்கூடும்.
குறிப்பு – ஆனந்த் டெல்டும்டே எழுதிய சாதிகளின் குடியரசு நூலில் இட ஒதுக்கீடு பற்றியும் , சாதி வர்க்க முரணியக்கம் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகளில் உள்ள தகவல்கள் , கருத்துகள், தர்க்கங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.அவரின் வாதங்கள் மிகவும் கூர்மையானவையாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் எனக்குத் தோன்றுகிறது.சில இடங்களில் என்னுடைய கருத்துகள் இருந்தாலும் இந்தக் கட்டுரை பெரும்பாலும் அவரின் கருத்துகளையே எதிரொலிக்கிறது,சுருக்கிக் கூறுகிறது.