ஜெயமோகனுக்கு இது அறுபதாம் ஆண்டு.மணி விழா.குன்றாத ஊக்கத்துடன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர்.தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.விமர்சகர். திரைக்கதை ஆசிரியர்.பண்பாட்டு ஆளுமை.இந்தியத் தத்துவம், இந்திய நாடு , இந்தியத் தொன்மங்கள், புராணங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் , தனித்தமிழ் , திருவிதாங்கூரின் வரலாறு பண்பாடு ஆகியவற்றின் மீது தீவிர ஈடுபாடும் ஆர்வமும் வாசிப்பும் கொண்டவர்.அவற்றை குறித்து அதிகம் எழுதியுள்ளார்.அவர் இன்னும் பல்லாண்டு மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்வு வாழ வேண்டும்.அவர் விரும்பும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஜெயமோகன் தமிழில் இன்று அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களுள் ஒருவர்.ஜெயமோகன் ஏன் அதிகம் வாசிக்கப்படுகிறார் என்ற கேள்வி என்னுள் உள்ளது.சமீபத்தில் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரையில் 2005யில் ஜெயமோகன் இணையத்தில் எழுதத் தொடங்கிய பின்னர் அவருக்கு புது வாசகர்கள் வந்தார்கள் என்று எழுதியிருந்தார்.இந்த வரியை விரித்து சிந்திந்த போதே இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது.ஜெயமோகனின் மொழி சரளமானது.புனைவுகளில் வாசிப்பவரை சலனப்படுத்தும் நாடகீயத்தருணங்களை மிகச் சரியாக கட்டமைப்பவர்.கட்டுரைகளில் அவரின் நோக்கத்தை நிறுவ தர்க்கங்களை மிகச் சரியாக அடுக்கிக்கொண்டு செல்வார்.பிறரின் மாற்றுப் பார்வையையும் தன் கட்டுரைகளில் பேசி அதற்கான பதிலையும் சொல்லிவிடுவார்.ஓரக்கண் பார்வை என்று இதைச் சொல்கிறார் பக்தீன்.சம்மட்டி கொண்டு அடிக்க வேண்டும் என்றாலும் பூங்கொத்தை கொடுக்க வேண்டுமென்றாலும் அதற்கேற்ப அவரால் மொழியை எளிதாக கையாள முடியும்.அவர் சொல்ல விரும்புவதை மிகத் துல்லியமாகவும் தக்க படிமங்கள் உவமைகள் உருவகங்கள் கொண்டு விரித்தெடுக்கும் வகையிலும் அவரால் எழுத முடியும்.
ஆனால் இவற்றை வேறு பல எழுத்தாளர்களும் செய்யக்கூடும்,செய்கிறார்கள்.ஜெயமோகன் அதிகம் வாசிக்கப்படுவதற்கு மொழி நடை மட்டும் காரணம் அல்ல.அவர் அதிகம் எழுதுவது ஒரு காரணம் என்றாலும் அதுவும் ஒரு பகுதி தான்.அவரது கருத்தியல்கள் அவரது வாசகப் பரப்புக்கு முக்கிய காரணம்.ஜெயமோகன் எழுத வந்த காலம் தொண்ணூறுகளின் தொடக்க காலம்.இந்தியா தாராளமயமாக்கலையும் உலகமயமாக்கலையும் அனுமதித்த காலமும் அது தான்.
இந்தியாவில் கடந்து முப்பது வருடங்களில் மத்திய தர வர்க்கம் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.இந்த வர்க்கத்தினர் பெரு நகரங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் குடி பெயர்ந்திருக்கிறார்கள்.மத்திய தர வர்க்கம் என்பது தன்னுள் பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கியது. கீழ் மத்திய தர வர்க்கம், மத்திய மத்தியதர வர்க்கம் , மேல் மத்திய தர வர்க்கம் என்று இவற்றை வகைப்படுத்தலாம்.உயர் வர்க்கத்தினரும் ஒரு வகையில் மத்திய தர வர்க்கத்தினர் தான்.சுந்தர் பிச்சையை அப்படியான உதாரணமாக சொல்ல முடியும்.
இந்த மத்திய தர வர்க்கத்தினர் பொறியியல் படித்து மேலாண்மை படித்து மருத்துவம் படித்து பெருநகரங்களுக்கு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்வத்தை சேர்த்தார்கள்.அவர்களின் தொழில்களில் வேலைகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.தங்கள் தலைமுறையிலேயே பலர் முதல் முறையாக நிலத்தையும் வீட்டையும் வாங்கினார்கள்.குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைத்தார்கள்.இவர்களுக்கு தாங்கள் செய்யும் தொழில் குறித்தோ வேலை குறித்தோ எந்த அறச்சிக்கலும் கேள்விகளும் இருப்பதில்லை.அவர்கள் குடியேறும் வெளிநாடுகளின் எந்த செயலும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து கிராமங்களிலிருந்து பண்பாட்டு ரீதியில் விலகிவிடுகிறார்கள். அவர்களுக்கு திருவிழாக்கள் , கோயில்கள், பண்டிகைகள் ,சடங்குகள், வெளி ஆகியவை இல்லாமல் போகின்றன.இவை பண்பாட்டுத் தளத்தில் ஒரு அந்நியமாதலை ஏற்படுத்துகின்றது.இந்த அந்நியமாதலை எப்படி போக்குவது என்று புரியாமல் பலரும் தவிக்கிறார்கள்.அமெரிக்காவில் இருக்கும் பலர் ஏதேனும் தமிழ் சங்கங்களின் இணைந்து பொங்கலின் போதும் தீபாவளியின் போதும் சில கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.பயணம் செல்கிறார்கள்.இசை கற்கிறார்கள்.சினிமா பயில்கிறார்கள்.இலக்கிய நூல்களை வாசிக்கிறார்கள்.
இத்தகைய செயல்களும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.அவர்களின் பண்பாட்டு அந்நியமாதலை அவர்கள் இழந்த வேர்களை மறுபடியும் தங்களுக்கு எது அளிக்கும் என்பது குறித்த ஒரு ஏக்கம் அவர்களுக்கு உண்டு.மகரிஷி மகேஷ் யோகி,ஓஷோ,ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,சத்குரு ஜகி வாசுதேவ் என்று அறுபதுகளிலிருந்தே இத்தகைய மத்திய தரவர்க்கத்தினருக்கான சாமியார்கள் உருவாகி வந்திருக்கிறார்கள்.இந்த வர்க்கத்தினருக்கு எந்த காரணத்தை கொண்டும் அவர்களின் வேலையை ,புது வாழ்விடத்தை,தொழிலை விட விருப்பம் இல்லை.உண்மையில் அவர்களுக்கு அதில் எந்த குழப்பமும் இல்லை.இந்த சாமியார்களும் அவற்றை விடுங்கள் என்று சொல்வதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்றைய முதலாளித்துவ அமைப்பின் பொருள் உற்பத்தி முறையைத் தவிர வேறு வகையான உற்பத்தி முறைகள் இருக்க இயலும் என்பதை ஒரு உரையாடலுக்குக் கூட அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.அவர்களுக்குத் தேவை எல்லாம் கோடை காலத்தில் சென்று வருவதற்கான ஒரு மலைப்பிரதேசம்,பள்ளத்தாக்கை கடப்பதற்கு ஒரு வாகனம்,நதியில் செல்ல ஒரு படகு,நீண்ட பயணத்திற்கு பிறகு அமர மரநிழல்,ஓடையை தாண்ட உறுதியான கால்கள்.
இவற்றை எது அளிக்கும் என்று அவர்கள் பார்க்கிறார்கள்.மேலே சொன்ன சாமியார்கள் ஓரளவு அந்த இடத்தை பூர்த்தி செய்கிறாகள்.ஆனால் அதற்கு மேல் தர்க்க ரீதியாக தங்களின் பண்பாட்டு அந்நியமாதலை அகற்றும் ஒரு பிரதி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.ஜெயமோகன் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்.சடங்குகள் அற்ற இந்து மதம், சாதிகளை பொருள் உற்பத்தி தளத்தில் வைத்து பார்க்கும் பார்வை,சாதிகள் இறுக்கமானவை அல்ல தளர்வானவை என்ற விளக்கம்,இன்றைய விஞ்ஞான உலகில் பத்துக் கைகளை கொண்ட கடவுளின் படிமத்தை ஏற்றுக் கொள்வதற்கான தர்க்கம் , இந்திய நிலம் பற்றிய நவீன மொழியிலான தொன்மக் கதைகள் ,மாற்று பொருள் உற்பத்தி முறைகளில் உள்ள வன்முறையை எடுத்துச்சொல்லும் சொல்லாடல்கள், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தனி மனிதர்கள் பற்றிய போதனைக் கதைகள், தனி மனித ஓழுக்கத்தை பண்பை விதத்தோதும் நீதிக் கதைகள், காந்தி என்ற நவீனத் தொன்மம் கொண்டு பல வகையிலும் Status Quoவை நிலைநிறுத்தும் நோக்கு ஆகியவை இவர்களுக்கு தேவைப்படுகிறது. ஜெயமோகன் அதை நிறைவு செய்கிறார்.அவர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள்.அவரை வைத்து அமைப்புகளை அமைக்கிறார்கள்.அமைப்பாக மாறுகிறார்கள்.ஜெயமோகனுக்கு அவர்கள் தேவை என்பதை விட அவர்களுக்கு ஜெயமோகன் தேவைப்படுகிறார்.
இந்த மத்திய தர வர்க்கத்தினருக்கு ஒரு ஆன்மிகம் தேவைப்படுகிறது.இந்த ஆன்மிகம் இயற்கையும் மனிதனும் ஒன்றே என்ற அத்வைத்த நோக்கை உள்ளடக்கிய ஆன்மிகம்.இந்த ஆன்மிகம் நம்மை சுற்றி நிகழும் வன்முறைகளை ஏற்றத்தாழ்வுகளை கடந்து செல்வதற்கு வழி செய்கிறது.முதலாளித்துவம் அடிப்படையில் மனிதனின் இச்சையின் மீது கட்டப்பட்டுள்ளது.தன்னை பெருக்கிக்கொள்ள நிலை நிறுத்துக்கொள்ள எந்த மனிதனும் ஆசைப்படுகிறான்.அந்த இச்சையை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை முதலாளித்துவ சமூகங்கள் அளிக்கின்றன.இங்கே கட்டுகளே இல்லை.சமத்துவம், சகோதரத்துவம்,சுதந்திரம் என்பதை அநேகமாக எல்லா முதலாளித்துவ சமூகங்களும் ஏற்றுக்கொள்கின்றன.சமத்துவமும் சுதந்திரமும் ஒரு போதும் ஒன்றாக இணைந்து செயல்பட இயலாது.சமத்துவம் என்பது எல்லோருக்கும் ஒரு ஓட்டு என்ற சமத்துவம் மட்டும் அல்ல.அது பொருளாதார தளத்திலான சமத்துவத்தையும் உள்ளடக்கியது தான்.அத்தகைய ஒரு சமத்துவம் ஒரு போதும் முதலாளித்துவ அமைப்பில் இருக்கவே முடியாது.ஏற்றதாழ்வுகள் மிகப் பெரிய அளவில் முதலாளித்துவ சமூகங்களில் இருக்கின்றன என்பதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.அது அப்படித்தான் இருக்க இயலும் என்பதையும் நாம் அறிவோம்.ஆனால் நீங்கள் சொல்லும் மாற்று சமூகங்களில் மட்டும் என்ன பாலாறும் தேனாறுமா ஓடுகிறது என்று இந்த மத்திய தர வர்க்கத்தினர் கேட்பார்கள்.அதே போல இப்படியான பார்வைகளை கொண்டோரை பார்த்து உங்கள் மகன்களை மகள்களை அமெரிக்கா , ஐரோப்பா போன்ற நாடுகளுக்குத்தானே அனுப்புவீர்கள் என்றும் கேட்பார்கள்.அவர்கள் தங்களுக்கு எந்த வகையிலான குற்றவுணர்வும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.மனதில் பளுவே இருக்கக்கூடாது.மற்றமை குறித்த அக்கறையும் புரிதலும் இன்றி இருக்க விரும்புகிறார்கள்.தன் ஆளுமைச்சிக்கல், தன் பண்பாட்டு அந்நியமாதல் , தன் ஆன்ம ஈடேற்றம் என்பதற்கு அப்பால் இவர்களுக்கு பண்பாட்டுத் தளத்தில் வேறு தேவைகள் இல்லை.
ஜெயமோகனின் ஏழாம் உலகம் பிச்சை எடுப்பவர்கள் பற்றிய உலகத்தை பேசும் நாவல்.அதில் பிச்சைக்காரர்கள் பண்டங்கள் போல மாற்றப்படுகிறார்கள்.மனிதனுக்கு நமது அரசியலமைப்பு அளிக்கும் எந்த உரிமையும் இல்லாமல் வாழ்கிறார்கள்.மிகப் பெரிய அவலம்.ஆனால் அந்த நாவலில் அப்படியான பாதாளத்திலும் அவர்கள் அளவில் அந்த வாழ்க்கை கொண்டாட்டம் நிரம்பியதாக உள்ளது என்பது அடிகோடிடப்படுகிறது.நீங்கள் நினைப்பது போல அந்த வாழ்க்கை அழுகையும் புலம்பல்களும் மட்டும் கொண்டதல்ல என்பது நிறுவப்படுகிறது.இது மத்திய தர வர்க்கத்தினருக்கு தேவைப்படும் ஒரு பார்வை.அவர்கள் அந்த வாழ்க்கையை பார்க்கிறார்கள்.அச்சச்சோ என்கிறார்கள்.ஆனால் அதை கடக்க வேண்டும்.கடந்து செல்ல அந்த வாழ்க்கையும் அதனளவில் அழகானதுதான் என்ற பார்வை உருவாக்கப்படுகிறது.
இந்தப் பார்வைகள் உருவாக்கப்படுகின்றன.இவை வலிந்து செய்யப்படுகின்றன.ஜெயமோகனின் ஏழாம் உலகமும் அதன் அடிப்படையில் உருவான நான் கடவுளும் வித்யாசமான பார்வைகளை கொண்டுள்ளன என்பதை நாம் கவனிக்கலாம்.அந்தக் கொடூரத்தை கொடூரம் என்று நான் கடவுள் சொல்கிறது.ஏழாம் உலகம் சொல்லவில்லை.கற்றது தமிழ் வந்த போது ஜெயமோகன் அந்த திரைப்படத்தை விமர்சித்து எழுதியிருந்தார்.ஏனேனில் அது மத்திய தர வர்க்கத்தினரை தொந்தரவு செய்கிறது.அது பிழையான பார்வை என்று சொன்னார்.உங்களின் பிரச்சனைகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய தர வர்க்கத்தினர் சொல்ல விரும்பினார்கள்.ஜெயமோகன் அதைச் சொன்னார்.உங்களுக்கும் வாசல்கள் திறந்தே இருக்கின்றன.முன்னேறி வாருங்கள் என்பார்கள் மத்திய தர வர்க்கத்தினர்.இந்த வாசகத்தை பிரதிநித்துவப்படுத்துபவர்கள் தான் ஜெயமோனும் , அப்துல் கலாமும் , ஏ.ஆர்.ரஹ்மானும்.
இன்று மற்றமை உருவாக்கமும் அதன் மீதான வெறுப்பும் மிக எளிதாக கட்டமைக்கபடுகின்றன.ஆனால் அவர்களை பார்த்து மத்திய தர வர்க்கத்தினர் சொல்தெல்லாம் நீங்கள் மைய நீரோட்டத்திற்கு வாருங்கள் என்பது தான்.தனி அடையாளங்கள் கொள்ளாதீர்கள்.தனி பண்பாட்டு நிகழ்வுகளை கொண்டாடதீர்கள்.எங்களைப் போல இருங்கள்.எங்களோடு இருங்கள் என்கிறார்கள்.அப்படி இருக்க முடியவில்லை என்றால் அது உங்களின் பிரச்சனை என்கிறார்கள்.சாலை விரிவாக்கத்திற்காக மின்சார உற்பத்திக்காக கனிம வளங்களுக்காக காட்டை அழிப்பது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்காது.பெருநகரங்களில் மட்டும் சாலை ஓரங்களில் மரங்கள் இருக்க வேண்டும் என்று போராடுவார்கள்.பழங்குடிகளை பார்த்து நீங்கள் ஏன் இன்னும் பழங்குடிகளாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
இவர்கள் ஆம் ஆத்மி கட்சியையும் பாரதிய ஜனதா கட்சியையும் ஆதரிக்கிறார்கள்.மத்திய தர வர்க்கத்து லிபரல் ஆம் ஆத்மியை ஆதரிக்கிறார்.மத்திய தர வர்க்கத்து இந்துத்துவா சார்பாளர் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கிறார்.லிபரல் வலதுசாரி இவை இரண்டுக்கும் அதிக தூரம் இல்லை.இவர்கள் இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள்.லஞ்சம் ஊழல் இவற்றை தவிர்த்துவிட்டால் போதும் இந்தியா வல்லரசாகி விடும் என்று பேசுவார்கள்.அன்னா ஹாசாரேவை ஜெயமோகன் ஆதரித்தார் என்பதை நாம் இவற்றுடன் இணைத்து பார்க்கலாம்.அன்னா ஹசாரேவின் லோக் பால் போராட்டம் தான் 2014யில் பாரதிய ஜனதா கட்சி வருவதற்கான காரணம்.
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியும் இந்த மத்திய தர வர்க்கத்தினரின் பெருக்கமும் இணைந்தே நிகழ்ந்திருக்கின்றன.ஆம் ஆத்மியும் வளர்ந்திருக்கிறது.இன்று பாரதிய ஜனதா கட்சியை எளிதில் தோற்கடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அதற்கு காரணம் இந்துத்துத்தின் வளர்ச்சி அல்ல மத்திய தர வர்க்கத்தின் பெருக்கமும் அவர்களின் ஆதரவும் தான். ஆன்ம ஈடேற்றம்,பண்பாட்டு வெளி, ஊழல் அற்ற அரசு, அதிகம் காசு கேட்காத ஆட்டோ ஓட்டுனர் , ஓழுங்கான சாலைகள், இந்து மதத்தின் சடங்குகளை புண்படுத்தாத தலைவர்கள் அவர்களுக்கு இவை போதுமானவை.கலை இலக்கியங்களை மத்திய தர வர்க்கத்தினர் தங்களின் ஆளுமை வளர்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறார்கள்.ஒருவர் கூட அதை மறுதலிப்பதற்கான ஆயுதமாக பார்க்க மாட்டார்கள்.
மத்திய வர்க்கத்தின் மனிதன் கருத்தியல் அதிகாரங்கள் அழிவை உருவாக்கும் , அவை தேவையற்றவை என்று சொல்வான்.ஆனால் மறு தளத்தில் அவன் தன் தொழிலில் வேலையில் கோட்பாடுகளை கொண்டே ஒரு சிறு விஷயத்தையும் செய்வான்.அறுபதுகளில் நகரம் நோக்கி வந்தவர்களுக்கு நவீன வாழ்க்கை குறித்து இருந்த பண்பாட்டுச் சிக்கல்களை ஜெயகாந்தன் தன் கதைகளில் பேசினார். தொண்ணூறுகளில் அதை இன்னும் விரிந்த தளத்தில் ஜெயமோகன் பேசத் துவங்கினார்.
நடைமுறையில் சாத்தியமில்லாத இஷ்டலோகங்களை மனிதன் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறான்.இந்திய அரசியலமைப்பே ஒரு இஷ்டலோகம் தான்.இன்றும் நம் சமூகம் இந்திய அரசியலைப்பு விரும்பிய வகையில் முழுமையாக முகிழவில்லை.ஆனால் அதை நோக்கிய பயணம் உள்ளது.அப்படித்தான் கருத்துத்தளத்தில் உருவாக்கப்படும் அனைத்து இஷ்டலோகங்களும்.அவை ஒரு சாத்தியத்தை குறித்து பேசுகின்றன.மனிதன் தன் முன் இருக்கும் சிக்கலை எப்படி கடப்பது என்று சிந்திப்பவன்.அந்தத் தீர்வை வைத்து கோட்பாடுகளை உருவாக்குபவன்.அந்தக் கோட்பாடுகளை வைத்து சமூகத்திலும் சோதனைக்கூடங்களிலும் புதிய சாத்தியங்களை பரிசோதிப்பவன்.இதுதான் மனிதன்.இப்படித்தான் மனிதன் வாழ்ந்து வருகிறான்.இன்று நாம் அடைந்துள்ள அனைத்தும் மனிதனின் இந்த விருப்புறுதியால் உருவானவை.இந்த உலகம் மனிதனுக்கானது.மனிதனுக்கும் மனிதனுக்குமான பிரச்சனைகளே முக்கியமானவை.மனிதன் எதன் பொருட்டும் எப்போதும் இயற்கையிடம் மண்டியிடப்போவதில்லை.மனிதன் சமர் செய்வான்.தப்பிப்பான்.வியூகங்கள் வகுப்பான்.நாமும் இயற்கையும் ஒன்றே என்பது போன்ற தரிசனங்கள் உண்மையில் வன்முறையை விளைவிக்கின்றன.
நம் சமூகத்தில் பொருள் உற்பத்திக்கான வாழ்க்கை முறையையும் பண்பாட்டுத் தளத்திலான வாழ்க்கை முறையையும் மிக நேர்த்தியாக கச்சிதமாக பிரித்துக்கொண்டவர்கள் பிராமணர்கள்.அவர்களுக்கு இந்த இரண்டு வாழ்க்கை முறைகளின் மீது எந்த வித குழப்பமும் இல்லை.இன்று அவர்கள் கடல் கடந்து பயணிப்பதற்கு தயங்குவதில்லை.பஞ்சகச்சம் கட்டுவதற்கு யாருடைய உதவியை கோருவதும் இல்லை.இன்று அதே போல இந்த இரண்டு வாழ்க்கை முறைகளுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ள மற்ற சமூகங்களும் முனைகின்றன.அதற்கு அவர்களுக்கு ஜெயமோகன் தேவைப்படுகிறார்.
மேலும் இந்த மத்திய தர வர்க்கத்தினருக்கு ஒரு ஆளுமைச் சிக்கல் உண்டு.ஆங்கிலத்தில் Enmeshment என்று சொல்வார்கள்.இவர்களுக்கு தந்தை என்ற பிம்பம் முக்கியமானது.தந்தைக்கு பிடித்தது அவர்களுக்கு பிடிக்கும்.தந்தைக்கு பிடிக்காதது அவர்களுக்கு பிடிக்காது.ஜெயமோகன் நகுலன் முக்கியமற்ற எழுத்தாளர் என்றால் அவர்களுக்கும் நகுலன் முக்கியமற்ற எழுத்தாளர் தான்.அசோகமித்திரன் சிறந்த எழுத்தாளர் என்றால் சிறந்த எழுத்தாளர் தான்.ஏன் அப்படி என்றால் ஜெயமோகன் சொல்லிவிட்டார் அவ்வளவுதான்.இந்த ஆளுமைச் சிக்கல் பண்பாட்டு அந்நியாமாதலில் இருந்தும் உருவாகிறது.நம் குடும்ப அமைப்புகளும் ஒரு காரணம்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய பொருள் உற்பத்தி முறை தான் நாம் வாழ்வை பெரிய அளவில் கட்டமைக்கிறது.உங்கள் மாலைப் பொழுதுகள் வேலைப் பொழுதுகளால் நிர்ணயம் பெறுகின்றன.உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை உங்களுக்கு தெரியவே தெரியாது.அறிமுகம் கூட இருக்காது.ஆனால் மனிதன் அடிப்படையில் ஒரு மந்தை.அவன் சமூகமாக வாழப் பிறந்தவன்.அவனது வாழ்க்கை மெய் வாழ்க்கையிலிருந்து மெய் நிகர் வாழ்க்கைக்கு நகர்ந்து செல்கிறது.அவன் வாழ்க்கை போன்ற வாழ்க்கையை வாழ்பவன்.ஆழமான நட்புகளும் உறவுகளும் அமையும் சாத்தியமற்றவன்.அவனுக்கு சாமியார்களும் , மனநல மருத்துவர்களும் , இழந்த பண்பாட்டை மீட்டுருவாக்கி அளிக்கும் பிரதிகளும் தேவைப்படுகின்றன.
உண்மையில் கலையின் நோக்கம் மறுதலிப்பது என்றே நான் கருதுகிறேன்.கண்ணாடியில் தன்னைப் பார்த்து உடையை சரி செய்து கொள்வதற்கான கருவிகள் அல்ல இலக்கியங்கள்.அவை மற்றமை உருவாக்கத்தின் ஊற்றுகளை கண்டறிய முயல்பவை.மற்றமையில் நம்மை அடையாளம் காண வழிவகுப்பவை.மற்றமையை அடையாளம் காணவும், மற்றமையை புரிந்து கொள்ளவும், மற்றமையில் தன்னை இணைத்துக்கொள்ளவும் இலக்கியங்கள் பெரும் பங்காற்றுக்கின்றன என்று நான் எண்ணுகிறேன்.பண்பாட்டு விஷயங்களை பேசுவதற்கான ஒன்றாக மட்டும் இலக்கியம் இல்லை என்பது என் எண்ணம்.அது மாற்று பொருள் உற்பத்தி முறைகளை பற்றிய இஷ்டலோகங்களை உருவாக்க முடியும்.அப்படியான பிரதிகள் பிரச்சாரங்கள் அல்ல.எனக்கு இதை கற்றுக் கொடுத்தவர் நகுலன்.
இந்த கட்டுரை ஜெயமோகன் என்னும் எழுத்தாளர் அதிகம் வாசிக்கப்படுவதற்கான காரணத்தை விளக்கிக் கொள்ள முயலும் ஒரு பார்வை மட்டுமே.நான் விசுவாசியும் அல்ல, அவிசுவாசியும் அல்ல.நான் என்றும் எந்த நிலையிலும் எந்த அமைப்பிலும் என்னை பொருந்திக்கொள்ள இயலாதவன்.தனியன்.நான் ஜெயமோகனை தொடர்ந்து வாசிக்கவே செய்கிறேன்.ஜெயமோகனின் படைப்புகளில் விஷ்ணுபுரம் முக்கியமான ஆக்கம் என்பது என் எண்ணம்.பின்தொடரும் நிழலின் குரல் பேசும் கருத்தியலின் அதிகாரம் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களால் பல்வேறு கதைத்தளங்களில் சொல்லப்படும் ஓன்று தான்.ஆனால் விஷ்ணுபுரம் நாவல் சங்கர்ஷணன், திருவடி, பிங்கலன், அஜிதன் வழி மிகப் பரந்த தளத்தில் பயனிக்கிறது.நான் அதைக்குறித்து ஒரு கட்டுரை முன்னர் எழுதியிருக்கிறேன்.அவரின் மற்ற நாவல்கள் குறித்து கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.அவர் மீது நன் மதிப்பும் , அன்பும் எனக்கு உண்டு.இதை சொல்ல காரணம் எனக்கு அவர் மீது எந்தக் காழ்ப்பும் இல்லை என்று சொல்வதற்குத்தான்.இப்படி விளக்கும் அளவுக்கு சூழல் இருக்கிறது என்பது தான் அவலம்.
அன்று வளர்ந்து வந்த முதலாளித்துவத்திற்கான எதிர்வினைகளாக தஸ்தாயெவ்ஸ்கியின் ஆக்கங்களை பார்க்க முடியும் என்று சொல்பவர்கள் உண்டு.தஸ்தாயெவ்ஸ்கி கத்தொலிக்க மதத்தையும் அதன் எதிர்வினையாக உருவான சோஷியலிசத்தையும் நாத்திகவாதத்தையும் எதிர்த்தார்.யூதர்களை குறித்து உயர்வாக அவருடைய புனைவுகளில் எதுவும் எழுதப்படவில்லை.புரட்சி சிந்தனைகளின் ஊற்று தனி மனித சிக்கல்களாக இருக்கலாம் என்று சிந்தித்தார்.ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி தான் எதை வலியுறுத்த விரும்பினாரோ அதன் மறுபக்கத்தையும் தீவிரமாக புனைவுகளில் பேசினார்.அந்த பன்னொலித்தன்மையால் அவரின் ஆக்கங்கள் இன்றும் முக்கியமாகின்றன.அந்த பன்னொலித்தன்மையே அவரை ரஷ்ய மரபு கிறுஸ்தவத்தின் பிரச்சாரகராக மாற்றாமல் காத்தன.ஜெயமோகனின் ஆக்கங்களில் அப்படியான பன்னொலித்தன்மை எந்தளவு உள்ளது என்பதை நாம் பரிசீலிக்கலாம்.
Photo by mauro mora on Unsplash
No comments:
Post a Comment