தனிப்பெருங்கருணை





பேயருவி போல வெயில் கொட்டிக் கொண்டிருந்தது.பேருந்திலிருந்து எல்லோரும் வேகமாக இறங்கினார்கள். ஒருவன் பேருந்து கண்ணாடியின் மீது முதற்கல்லை எரிந்தான்.வயதோகியின் முகச்சுருக்கங்கள் போல கண்ணாடியில் கீறல்கள் விழுந்தது.இரண்டாவது, மூன்றாவது , நான்காவது என்று தொடர்ந்து கற்களை வீசிய போது கண்ணாடி பெரிய பெரிய துண்டுகளாக உடைந்தது.ஒரு உருளைக் கட்டையில் துணியைக் கட்டி தீ வைத்து பேருந்தின் டீசல் டேங்க் மூடியை கழற்றி உள்ளே எறிந்து விலகி பின்னால் சென்றான் மற்றொருவன்.சிறிது நேரத்தில் டேங்க் வெடித்து பேருந்தை தீப்பற்றியது.கரும்புகை மேலெழுந்தது.பற்ற வைத்தவன் பித்து பிடித்தவன் போல நின்றான்.அவன் அனைவரையும் திரும்பத் திரும்ப பார்த்தான்.பேருந்திலிருந்து இறங்கியிருந்தவர்கள் விலகி ஓடினர்.கடைக்காரர்கள் ஷட்டர்களை கீழே இறக்கினர்.பேருந்தின் நடத்துனரும் ஓட்டுனரும் அருகிலிருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தனர்.அவர்களின் முகங்களில் கரும்பசை பீடித்திருந்தது.

ஒரு பிரேதம் எரிவது போல பேருந்து எரிந்துகொண்டிருந்தது.உலோகத்தை தீயின் நாவுகள் உருக்கும் ஓசை எங்கும் கேட்டது.அங்கே சட்டென்று இருளும் அச்சமும் சூழ்ந்தது.மக்கள் கூச்சலிட்டுக்கொண்டுனர்.சிறுவர்கள் தெருக்களிலிருந்து சாலைக்கு ஓடி வந்தனர்.காகங்கள் கரைந்து கொண்டு இடம் விட்டு பறந்தன.தீயனைப்பு வண்டிகள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்திருந்தது.போலீஸார் வரும்போது அங்கிருந்து எல்லோரும் கலைந்து சென்றுவிட்டிருந்தார்கள்.பேருந்தை கிரேனில் கட்டி போலீஸ் நிலைத்திற்கு அருகில் இருக்கும் மைதானத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.

மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஒரு மர பெஞ்சில் அமர்ந்து சிகரெட் பிடித்தனர்.அதில் ஒருவன் அப்போது தான் பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தான்.ஒல்லியான இறுக்கமான உடல்.ரத்னா திரையரங்கில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.கடைகள் திறந்திருந்தன.வண்டிகள் சாலையில் சென்றன.முன்பக்கம் ஓடு வேய்ந்திருந்த தன் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த ஸ்ரீரங்கநாதன் தனது செல்லம் டப்பாவை திறந்து இரண்டு வெற்றிலைகளை எடுத்து காம்பை கிழித்து நுணியை நறுக்கி ரோஜா நிற சுண்ணாம்பை தடவி சீவிலை வைத்து வாயிலிட்டு மென்ற போது ஊர் முழு இயல்புக்கு திரும்பியிருந்தது.சாலையின் எதிரில் அமர்ந்திருந்த போலீஸ்காரர்கள் அவரைப் பார்த்து சலாம் வைத்தனர்.அவரும் பதில் சலாம் வைத்து தலையசைத்தார்.அவர் வீட்டின் எதிரிலிருந்த புளியமரத்தின் கீழ் பழுப்பு நிறத்திலான பசுமாடு ஒன்று அமர்ந்து அசை போட்டுக்கொண்டிருந்தது.காபி கப்பை நீட்டினாள் பார்கவி.செம்பு பாத்திரத்திலிருந்த தண்ணீரால் வாயைக் கொப்பளித்தார் ஸ்ரீரங்கநாதன்.மரத்தூணில் சாய்ந்தவாறு எதிர்சாரியில் இருந்த போலீஸ்காரர்களை பார்த்தாள் பார்கவி.

"விளூ இங்கா என்னி தினாலு உண்டுதுரு நைனா."

"ஒக்கடி இரண்டு தினாலு.அந்தே.வெல்தாரு."

என்று சொல்லியவாறு காபியைய் பருகினார்.எதிர்சாலையில் மேல்மாடியில் சட்டையில்லாமல் அமர்ந்து வக்கீல் பாஷ்யம் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரது மகன் அருகில் நின்றான்.தலையில் கட்டியிருந்த வெண்துண்டை அவிழ்த்து ஈரக்கூந்தலை நீவினாள் பார்கவி.பார்த்துக்கொண்டிருக்கையிலே சிறு பிள்ளை போல இருந்தவள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாள்.அவளது அன்னையின் முகம்.வரும் மார்கழியில் இருபத்தியிரண்டு வயது ஆகிவிடும்.வரன்கள் வந்தாலும் எதுவும் சரியாக இல்லை.கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் ஸ்ரீரங்கநாதன்.போலீஸ்காரர்கள் அவளைப் பார்ப்பதை உணர்ந்தவள் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.  

வக்கீல் பாஷ்யம் அன்றைய செய்தித்தாளை தீவிரமாக படித்தார்.போலீஸ்காரர்கள் கீழே மர பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்த்து இவங்க எப்ப நைனா போவாங்க என்றான் அவரது மகன்.

"நெடு போத்தாரு.வாலு போயினவனக்க பெஞ்சினி எத்துக்கினு ஒச்சி லோப்பல பெட்டே."

"அவங்க எடுத்து வைக்க மாட்டாங்களா நைனா."

"செப்பிந்து செய்ரா" என்று சொல்லிவிட்டு மறுபடியும் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.

தமிழ்நாடு சலூன் கடைக்காரர் ஒவ்வொரு மரப்பலகையாக எடுத்து வெளியே வைத்து கடையைத் திறந்தார்.ஸ்ரீரங்கநாதன் எழுந்து ரோட்டோரத்திற்கு வந்து நின்றார்.பேருந்து எரிந்த சுவடே தெரியவில்லை.சங்கரன் சைக்கிளில் வந்தான்."அங்கிடி பீஹம் எத்துகுனி ராமா" என்று அழைத்தார் ஸ்ரீரங்கநாதன்.சங்கரன் சைக்கிளில் வந்து நிற்கவும் பார்கவி சாவியை எடுத்துக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.சங்கரன் அவளிடம் சாவியை வாங்கிக்கொண்டான்."தீயொரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற" என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார் ஸ்ரீரங்கநாதன்.

ஸ்ரீரங்கநாதனின் மகன் இன்னும் அறையில் உறங்கிக்கொண்டிருந்தான்.அவனது அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தன.தாழ்வாரத்தில் பாய்லரில் நீர் கொதித்துக்கொண்டிருந்தது.பித்தளை அண்டாவில் வெண்ணீரைப்பிடித்தார்.பை வைத்த கதர் ஜிப்பாவையும் கதர் வேஷ்டியையும் கழற்றி கொடியில் மாட்டினார்.துண்டை கட்டிக்கொண்டு வெண்ணீரில் தண்ணீரை அளாவி நாராயணா என்று சொல்லியவாறு தலையில் நீரை ஊற்றினார்.வானத்தை பார்த்து கைகளை கூப்பி வணங்கினார்.அவரது வெண்ணிறத்தாடியை நீவி விட்டவாறு தலையை துவட்டினார்.மர அலமாரியை திறந்த போது அது கீறிச்சிட்டுக்கொண்டு மெல்லத் திறந்தது.பை வைத்த கதர் ஜிப்பாவை எடுத்து மாட்டினார்.வேஷ்டியை அணிந்து கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.ராமன் எழுந்து வந்து தாழ்வாரத்தில் அமர்ந்தான்.

அன்று இரவு மெடிக்கல்ஸை மூட வெகு நேரம் ஆகிவிட்டது.மூடியிருந்த பெல்ட் டிரெடர்ஸ் கடையின் வெளியே பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தான் முருகன்.முருகனை சுற்றி   இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.அவர்கள் கெக்களித்து சிரிக்கும் சத்தம் ஸ்ரீரங்கநாதனுக்கு கேட்டது.முருகன் ஏதோ ஒரு பழைய பாடலை பாடினான்.மறுபடியும் எல்லோரும் சிரித்தனர்.போலீஸார் பஸ் கண்ணாடிகளை உடைத்தவனையும் பஸ்ஸை எரித்தவனையும் பிடித்துக்கொண்டு போய்விட்டாலும் முருகனை கைது செய்யவில்லை.முருகன் சொல்லித்தான் எஸ்.ஆர்.எஸ் பஸ் உடைத்து எரிக்கப்பட்டது என்பது தவளைகள் நீரிலும் நிலத்திலும் இருக்கும் என்பதை அறிந்தவர்கள் அறிந்திருந்தனர்.ஆனால் அன்று முருகன் அங்கு இல்லை என்பதால் போலீஸார் அவனை கைது செய்யவில்லை.கைது செய்யப்பட்டவர்களும் அவன் பெயரை சொல்லப்போவதில்லை.

முருகன் அங்கிருந்து எழுந்து சாலையின் நடுவில் வந்து நின்றான்.சுற்றும் முற்றும் பார்த்தான்.கைகளை கால்களை ஆட்டினான்.பிறகு மெடிக்கல்ஸை நோக்கி நடந்தான்.ஸ்ரீரங்கநாதன் கல்லாவில் அமர்ந்து கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார்.“என்ன நாயுடு சார்.கடையை இன்னும் மூடலையா” என்று கேட்டான்.பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக்கொண்டிருந்தவர் பதில் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்தார்.”சங்கரா ஒரு விக்ஸ் டப்பா கொடு , ஒரே சளி” என்று சொல்லிக்கொண்டே காதூ என்று குரலெழுப்பி எச்சிலை வரவழைத்து அருகில் மண்தரையில் தூப்பினான்.பனிக்காலத்துல வெளிய இருந்தா சளிதான் பிடிக்கும்” என்று சொல்லி வீக்ஸ் டப்பாவை எடுத்து வெளியே வைத்தான் சங்கரன்.”சங்கரா நீ என்ன வேனுமானாலும் பேசு, ஆனா சீக்கரம் ஒரு நா சங்கரா சங்கரானு சொல்லப் போற” என்று சொல்லி காசை கொடுத்துவிட்டு டப்பாவை எடுத்துக்கொண்டு சென்றான்.

நல்ல கரிய பெருத்த உடல்.பெரிய தோள்கள்.பெரிய கட்டம் போட்ட லுங்கியும் வெள்ளை சட்டையும் தான் முருகனின் காஸ்ட்யூம்.எப்போதும் சவரம் செய்து பவுடர் அடித்த முகம்.கன்னங்கள் கருத்திருக்கும்.அடிக்கடி தமிழ்நாடு சலூனுக்கு சென்று தண்ணீரை பாட்டிலிலிருந்து பீச்சி ஈரப்படுத்தி முடியை திருத்தமாக சீவுவான்.மீசை ஒழுங்காக நறுக்கப்பட்ருக்கிறதா என்று பார்த்துக்கொள்வான்.பி.ஏ.ஹிஸ்டரி படித்திருந்தான்.ஏதெனும் ஏஜென்ட் எடுத்து பிறகு கடையை ஒழுங்காக நடத்தாமல் கடையை மூடுவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.அப்போதைக்கு சிமெண்ட் ஏஜென்ட் எடுத்து கடையை இரண்டு மாதங்களுக்கு மேல் திறக்காமல் மூடிவைத்திருந்தான்.ஒரு முறை அவனை நத்தம் ஊரை சேர்ந்த மூன்று பேர் சுற்றி வளைத்து அரிவாள் கொண்டு தலையில் வெட்டியும் உயிர் பிழைத்தான்.இப்போதும் இரவுகளில் நத்தம் ஊரை கடந்து செல்லும் போது பைக்கில் அவனுடன் அருவாளும் துனைக்கு ஒருவனும் இருப்பார்கள்.சங்கரன் ஷட்டரை இழுத்து மூடி பூட்டி சாவியை ஸ்ரீரங்கநாதனிடம் கொடுத்தான்.

"இன்னிக்கி மாதிரி இனி சீக்கரமே வந்துரு."

"வந்துடறேன் ஐயா."

"பழைய பழக்கத்தை எல்லாம் சுத்தாம விட்டுரு."

"விட்டாச்சுயா."

சரி என்று தலையசைத்து தன் வீட்டை நோக்கி நடந்தார் ஸ்ரீரங்கநாதன்.சங்கரன் சைக்கிளை எடுத்துக்கொண்டு எதிர்திசையில் சென்றான்.எல்லா கடைகளும் மூடியிருந்தன.கணேஷ் மளிகைக்கடை மட்டும் இன்னும் திறந்திருந்தது.சரக்கு வருவதற்காக காத்திருக்கூடும் என்று எண்ணிக்கொண்டார்.வக்கீல் பாஷ்யத்தின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.பாஷ்யத்தின் மனைவி கத்துவது சாலை கடந்து கேட்டுக்கொண்டிருந்தது.பாஷ்யம் எதுவும் பேசாமல் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரது மகன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.பெல்ட் டிரேடர்ஸ் கடைக்கு வெளியே நாற்காலிகள் மட்டும் இருந்தன.முருகன் சென்றிருந்தான்.வீட்டை அடைந்த போது ராமன் திண்ணையில் அமர்ந்திருந்தான்.அவனிடம் எதுவும் பேசாமல் “அம்மா பார்கவி, பீகம் எத்தி பெட்டுமா” என்று சொன்னவாறு உள்ளே சென்றார்.தன் அறைக்குள் சென்ற ராமனை சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ஸ்ரீரங்கநாதன் அழைத்தார்.

"இட்டா ஒச்சி கூர்சொப்பா."

"ஏமி நைனா."

"இட்லா ரா."

ராமன் தன் தந்தையின் அருகில் சென்றான்.தன் அருகிலிருந்த மர நாற்காலியில் அமரச் சொன்னார். 

"இங்கா என்னி தினாலு இட்லானெ உண்ட போத்தாவு."

ராமன் ஒன்றும் சொல்லவில்லை.பார்கவி இரு தட்டுகளும் தோசையும் தக்காளி சட்னியும் கொண்டு வந்து வைத்தாள்.அவளும் அங்கே மரத்தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.

"கடையில போயி உக்காரலாமில்ல.பொழுது போகும்.நாலு பேர பாக்கலாம்."

ராமன் எழுந்து உள்ளே செல்ல யத்தனித்தான். 

"சரி , சரி நான் ஒன்னும் சொல்லல , நீ சாப்பிடு" என்று தட்டில் தோசை வைத்து தந்தாள்.அதன் பிறகு அங்கு யாரும் எதுவும் பேசவில்லை.ராமன் முற்றத்தில் கை கழுவியபின் வெளியே சென்று தின்னையில் அமர்ந்தான்.

யாரோ தனியாக நடந்து செல்லும் செருப்படி சத்தம் கேட்டது.எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது.வீட்டின் முன்னிருந்த முருங்கைமரத்தின் இலைகளை பற்றினான்.அவை பனியில் ஈரமாக இருந்தன.சாலை வாகனங்கள் அற்று அமைதியாக இருந்தது.சட்டையை முழுதாக அணியாமல் ஒரு கையை மட்டும் உள்ளே விட்டவாறு தெருவில் ஓடிக்கொண்டிருந்தான் காசி.ஒல்லியான தேகம்.ஆறடிக்கும் அதிகமான உயரம்.தெற்றுப்பல்.தொலைவில் அவனது அன்னையின் குரல் அவனை அழைப்பது கேட்டது.காசி எப்போதும் நிறைய தூரம் செல்லமாட்டான்.ரத்னா திரையரங்கம் வரை சென்று அங்கிருந்து எதிரிலிருந்த ரைஸ் மில் மைதானத்தில் சிறிது நேரம் நின்று விட்டு மறுபடியும் வீட்டை நோக்கி செல்வான்.காசி ராமனை விட இரண்டு மூன்று வயது மூத்தவன்.பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எதனாலோ எப்படியோ அவன் மனம் சிதறிவிட்டது.சிதறிய மனம் அதன் பின் கூடவே இல்லை.அவனது தந்தை ஹிந்தி கற்பிக்கும் ஆசிரியர்.காசி அவரது ஒரே மகன்.காசி அனைத்து இந்திய ஐஐடி நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாக வெற்றி பெற்றான்.சென்னை ஐஐடியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது அவனது செயல்களில் மாற்றங்கள் தெரிந்தன.வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் எழுந்து வெளியே சென்றான்.இரவுகளில் விடுதியில் இல்லாமல் இலக்கற்று அலைந்தான்.அவன் மனம் ஓர்மை கொள்ள முடியாமல் சிதறியது.அதன் காரணமும் யாரும் அறியவில்லை.அதன் பின் கல்லூரியில் தொடர இயலாது என்று முடிவான பின்னர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.கிட்டத்தட்ட அடுத்த ஏழேட்டு வருடங்களில் மெல்ல மெல்ல அவன் முழுவதும் சிதறியிருந்தான்.சிறிது நேரத்தில் காசி பூனூலை பற்றியபடி மறுபடியும் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.ராமனை பார்த்து கையசைத்தான்.ராமனும் கையசைத்தான்.

ராமனுக்கும் காசியை போலவே ஒல்லியான தேகம்.காசியை விட கொஞ்சம் குறைவான உயரம்.மீசை தாடியை சவரம் செய்யாமல் ஒழங்காக முடி வெட்டாமல் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது என்பதான வாழ்க்கை முறையை கொண்டிருந்தான் ராமன்.மாலைகளில் இலக்கற்று சிறிது நேரம் நடப்பது தவிர்த்து அவன் மற்ற நேரங்களில் வீட்டில் முடங்கியிருந்தான்.ராமன் பி.பார்ம் முடித்து சென்னையில் மருத்துவ நிறுவனத்தில் தரக் கட்டுப்பாடு பிரிவில் வேலையில் சேர்ந்தான்.கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை அருகே நண்பன் நரேந்தினுடன் அறை எடுத்து தங்கினான்.இரண்டு மூன்று வருடங்கள் எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தன.மெல்ல அவனது செயல்களில் மாற்றங்கள் தெரிந்தது.அவன் ஓர்மையற்று வேலையில் செய்த பிழைகள், தவறாக அனுப்பிய மின்னஞ்சல்கள் மேலாளர்களால் கவனிக்கப்பட்டு எச்சிரிக்கப்பட்டான்.ஒரு நாள் வீட்டுக்கு வரும் வழி மறந்து போய் நிறைய நேரம் சுற்றிக்கொண்டிருந்தான்.

ராமனுக்கு பாலியல் சிக்கலோ , சித்தாந்த பிரச்சனையோ , குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற பளுவோ , காதல் தோல்வியோ இல்லை.ஆனால் அவன் காலையில் எழுந்தபின்னரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.வேலைக்கு செல்ல முடியாமல் அறையில் முடங்கினான்.நரேந்திரன் அவனை நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.அவர் ஊசிகளை வைத்து உடம்பில் குத்தி உணர்வு இருக்கிறதா என்று கேட்டார்.சுத்தியல் வைத்து முட்டிகளை தட்டினார்.மூளையை விழிப்படையச் செய்யும் மருந்துகளை அளித்தார்.தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், காலை அல்லது மாலையில் சிறுது நேரம் ஓடுங்கள், உங்கள் தசைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறது, அதனால் உடல் சீக்கிரத்தில் சோர்ந்துவிடுகிறது, நிறைய தூக்கம் தேவைப்படுகிறது.உடலை வலுப்படுத்துவது மட்டுமே உங்களை சிக்கலிலிருந்து விடுவிக்கும் வழி என்றார்.

ராமன் அறைக்கு வந்த பின்னர் தன்னை விட வலுவற்ற தசைகளை கொண்ட எத்தனையோ பேர் மிகவும் புத்துணர்ச்சியுடன் ஒரு நாளை எதிர்கொள்கிறார்கள், அப்படி இருக்க இந்த தசை வலுவின்மை மட்டும் தன் சிக்கலுக்கு காரணமாக இருக்குமா என்று யோசித்தான்.அவனுக்கு அவனது சிக்கலின் காரணம் புரியவில்லை.மருத்துவர் சொன்னது போலவே சில நாட்கள் காலையில் எழுந்து ஓடினான்.கராத்தே வகுப்பில் சேர்ந்தான்.ஆனால் எல்லாம் சிறிது காலம் தான்.அவனால் தொடர்ந்து அதை செய்ய இயலவில்லை.மேலும் அவனுக்கு அங்கு இருக்கவும் பிடிக்கவில்லை.வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு வந்தான்.சென்னையிலிருந்து பேருந்தில் வடலூர் வந்தான்.வடலூரில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் வடலூர் சத்தியஞான சபை நிறுத்தத்தில் இறங்கி அங்கு மைதானத்தில் சிறிது நேரம் சென்று அமர்ந்தான்.ஏழு திரைகளை கடந்தால் அங்கே தனிப்பெருங்கருணையாக சுடர் விடும் ஜோதியை தரிசித்தான்.வாடும் மக்களின் பசி போக்க அங்கே அனையாது எரியும் தழலை கண்டான்.உண்மையில் அங்கு அனையாமல் இருப்பது அந்த தனிப்பெருங்கருணைதான்.அந்த தனிப்பெருங்கருனைதான் எரிதழலாக மாறி அண்ணமிடுகிறது என்று எண்ணிக்கொண்டான்.வீட்டுக்கு வந்த போது அவனது அன்னை மட்டும் இருந்தாள்.முதலில் அவன் ஏதோ விடுமுறையில் வந்திருக்கிறான் என்று நினைத்தாள்.பின்னர் தான் அவன் வேலையை ராஜினாமா செய்து விட்டான் என்பதை அறிந்தாள்.

அவனை வீட்டில் யாரும் எதுவும் கேட்கவில்லை.வேலைக்கு போகாவிட்டால் பரவாயில்லை ,மெடிக்கல்ஸ் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து ஸ்ரீரங்கநாதன் அவன் பெயரில் ராமன் மெடிக்கல்ஸ் என்ற கடையை வீட்டின் அருகிலேயே துவங்கினார்.அவன் கடைக்கு வந்து சிறுது நேரமே அமர்வதும் ஸ்டாக்குகளை ஒழுங்காக வாங்கி வைக்காமல் இருப்பதையும் பார்த்தவர் அவர் நால்ரோட்டில் நடத்திக்கொண்டிருந்த பரதன் டெக்ஸ்டைல்ஸ் கடையை மூடிவிட்டு மெடிக்கல்ஸை தன் கண்காணிப்பில் கொண்டு வந்தார்.சங்கரனை வேலையில் அமர்த்தினார்.தன்னால் இனி விவசாயத்தை பார்க்க முடியாது என்று ராமனை கவனிக்கச்சொன்னார்.அவன் அதையும் சரியாக செய்யவில்லை என்றானதும் நிலம் தரிசாக கிடக்கக்கூடாது என்று முடிவு செய்து நாற்பது ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு விட்டார்.

ஒரு மார்கழி மாதத்தின் பின் மதியப் பொழுதில் அவனது அன்னைக்கு லேசாக சளி பிடித்தது.இரண்டு மூன்று நாட்கள் அவளே ஏதோ மாத்திரைகளை எடுத்துக்கொண்டாள்.சரியாக வில்லை.மூச்சுத்தினறலும் இருந்தது.நீமோனியா என்று சொல்லி மருத்துவமர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கச்சொன்னார்கள்.ஒரு வாரத்தில் உடல் நலம் தேறி விடும் என்றார்கள்.மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஸ்ரீரங்கநாதன் அலைந்தார்.ராமன் எந்த உதவியும் செய்யவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் ராமனின் அன்னை மரணமடைந்தார்.தலைமுடியை எடுக்கச் சொன்ன போது ராமன் மறுத்துவிட்டான்.சுடுகாட்டில் ஸ்ரீரங்கநாதன் தன் மனைவியை சிதையிலிட்டார்.அவன் வேலையை விட்டு வந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அவனது அன்னை இறந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.வரும் மார்கழி வந்தால் சரியாக இரண்டு வருடங்கள்.பார்கவிதான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு கல்லூரி செல்கிறாள்.அவளுக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் அந்த வீட்டினுள் காரிருள் புகும் என்று ஸ்ரீரங்கநாதன் அஞ்சினார்.

மார்கழி மாதம் தொடங்கியதும் பார்கவி தினமும் காலையில் ஏதேனும் ஒரு திருப்பாவை பாடலை பாடுவாள்.தொடர்ச்சியும் கணக்கும் வைத்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியதை பாடினாள்.அன்று காலை ராமன் தன் அறையில் எப்போதும் போல தூங்கிக்கொண்டிருந்தான்.பார்கவி தன் அன்னையின் சிவப்பு நிற பருத்தி புடவையை அணிந்திருந்தாள்.தலையில் வீட்டின் பின்புறத்தில் வளர்ந்திருந்த செம்பருத்தி பூவை சூடியிருந்தாள்.நெற்றியில் குங்குமம் ஈட்டிருந்தாள்.திரிகளை வைத்து விளக்கேற்றினாள்.ஆண்டாளுக்கு அவள் கோர்த்த பூமாலையை சூடினாள்.ஸ்ரீரங்கநாதன் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவளைப் பார்த்தார்.அவளது அன்னை போலவே எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கச்சிதமாக அனைத்தையும் செய்தாள்.குழந்தையின் களங்கமின்மையும் பொலிவும் கொண்ட முகம்.விளக்கின் வெளிச்சம் அவளது முகத்தில் பட்டு அவள் மேலும் ஒளி கொண்டவளாக தெரிந்தாள்.தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்று தோன்றவே பூஜை அறையிலிருந்து திரும்பினாள்.ஸ்ரீரங்கநாதன் விசும்பிக்கொண்டிருந்தார்.

"ஏமி நைனா நீலு காவலனா."

"ஏமி லேதுமா.நுவு லெயக்கா."

எழ வந்தவள் பிறகு சம்மனமிட்டு அமர்ந்தாள்.கூர் நாசியை நுனி விரலால் தேய்த்தாள்.அப்படி செய்தால் அவள் பாட துவங்குகிறாள் என்று பொருள்.தனக்குத் தோன்றிய பாடல்களை தோன்றிய விதத்தில் பாடினாள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமிழத் துயிலனைமேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

என்ற பாடலை இரண்டு மூன்று முறை பாடினாள்.ராமன் எழுந்து வந்து தாழ்வாரத்தில் அமர்ந்தான்.பாடி முடித்து பார்கவி வெளியே வந்து ராமன் அருகில் அமர்ந்தாள்."என்ன பாடி எழுப்பிட்டேனா" என்று கேட்டாள்."நல்லா பாடுன" என்றான் ராமன்."நைனா ராமு நெனு பாடிந்தி பாக உந்தினி செப்தாடு" என்று சிரித்தவாறு சொன்னாள்.ஸ்ரீரங்கநாதன் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

வக்கீல் பாஷ்யத்தின் மூத்த மகன் கண்ணன் அவனுடன் கல்லூரியில் படிக்கும் பெண்னை காதலித்திருக்கிறான்.அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டதாக சொல்லி நேற்று இரவு வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான்.அவரது மகனுக்கு இருபது வயது தான் ஆகிறது.வக்கீல் பாஷ்யம் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார்.நேற்று கடையை மூடும் போது அவர் என்னிடம் வந்து பேசினார்.அவர்கள் இவனை எதாவது செய்து விட்டால் தன்னால் தாங்கிக்கொள்ள இயலாது என்று புலம்பினார்.தன்னுடன் பெண் வீட்டாளர்களின் இல்லத்திற்கு வரச் சொல்லி அழைத்திருக்கிறார்.அவர்கள் சென்னையில் இருக்கிறார்கள்.இன்று சென்று நாளை அல்லது மறுநாள் தான் திரும்ப முடியும்.அவர்கள் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.கடைக்கு இன்று மதியம் ஸ்டாக் வரும்.சங்கரன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்.இருந்தாலும் நீ கடையில் சென்று அமர முடியுமா என்று ராமனை பார்த்து கேட்டார்.ராமன் உடனே சரி என்றான்.அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆனால் அவர் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

"அவங்க என்ன ஜாதி நைனா" என்று கேட்டான் ராமன்.

"சைவ பிள்ளமாருனு வக்கீலு சொன்னாரு."

"ம்ம். கண்ணன் இந்தளவுக்கு தைரியசாலியா நைனா."

"எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு."

"நீ இதப்பத்தி என்ன நைனா நினைக்கிற" என்று பார்கவி கேட்டாள்.

"எதப்பத்திமா."

"ஜாதி மாத்தி கல்யாணம் பண்ணிக்கறத பத்தி."

"தெரியலமா.எங்க காலத்துல இதெல்லாம் இல்ல."

"நான் வேற ஜாதி பையன கல்யாணம் பண்ணிக்கலாமா நைனா.அலா செசுகுன்டே நுவு தானிக்கு ஏமி செப்புதுவு."

"தெல்லா மா" என்று சொல்லியபின் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.பார்கவியும் அதன்பின் எதுவும் கேட்கவில்லை.சாவி வாங்குவதற்கு சங்கரன் வந்த போது ராமன் தானும் வருவதாக சொன்னான்.இருவரும் கடைக்கு சென்றார்கள்.

வக்கீலும் ஸ்ரீரங்கநாதனும் வடலூர் செல்ல ரத்னா திரையரங்க ஸ்டாப்பில் சென்று நின்றார்கள். வக்கீல் பாஷ்யத்தின் வீட்டில் புதிதாக வந்திருந்த பெண் வெளியில் அமர்ந்திருந்தாள்.வக்கீலின் இளைய மகன் அங்கும் இங்கும் மாடியில் நடந்து கொண்டிருந்தான்.வக்கீலின் மனைவி கத்திக்கொண்டிருந்தார்.மூத்த மகன் யாரையோ கத்துவது போல அமைதியாக பெண்ணின் அருகில் அமர்ந்திருந்தான்.கடையிலிருந்து இந்தக் காட்சியை பார்த்த ராமனுக்கு கண்ணனை நினைத்து உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

கண்ணன் ராமனை விட ஐந்தாறு வயது சிறியவன்.சிறுவயதில் ஒரு முறை நாஸியாவின் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கண்ணன் சைக்களிலிருந்து இறங்கி நின்று அழுதுக்கொண்டிருப்பதை பார்த்தான்.அவன் அருகில் சென்று என்ன என்று விசாரித்தான்."சைக்கிலு நகரவே மாட்டீங்கிது" என்று சொல்லி அழுதான் கண்ணன்.ராமனுக்கு முதலில் அந்த இருட்டில் ஒன்றும் பிடிபடவில்லை.சிறிது நேரம் பார்த்த போதுதான் அவன் சைக்கிளின் ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த ஜோல்னா பை சக்கரத்தின் ஸ்போக்குகளுக்கு இடையில் சென்று மாட்டிக்கொண்டதை கவனித்தான்.பையை எடுத்து ஒரு சுற்று சுற்றி ஹேண்டில் பாரில் மாட்டி "இப்போது போ" என்றான்.கண்ணனுக்கு அதுவரை ஏன் சைக்கிள் நகரவில்லை தற்போது ஏன் நகர்கிறது என்று எதுவும் புரியவில்லை.இன்று அவன் ஒரு பெண்னை அழைத்து வந்து தைரியாக அமர்ந்திருக்கிறான்.

சிறு வயதில் நாஸியாவின் இல்லத்திற்கு செல்லும் போது அவள் வீட்டின் இருபுறங்களிலும் சாமந்தி பூக்கள் பூத்திருக்கும்.அவளுடைய தந்தை இலவம் பஞ்சுகளை பொதியில் பொதிந்து தைத்துக்கொண்டிருப்பார்.நாஸியாவிற்கு பார்க் கிளப் ஹாலில் திருமணம் நடந்தது.மாப்பிள்ளை ஏதோ பழ வியாபாரம் செய்வதாக சொன்னார்கள்.ஆனால் அந்த விவாகம் ஒரிரு வருடங்களிலே ரத்தாகிவிட்டது.மறுபடியும் அவள் தனது தந்தையின் வீட்டிற்கே வந்து தங்கினாள்.இரண்டாவது திருமணம் நடந்த போது ராமன் ஊரில் இல்லை.இப்போது அவள் கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருப்பதாக அவனது தந்தையை பார்த்த போது சொன்னார்.

பார்கவி வீட்டு சாவியை கொடுத்து விட்டு கல்லூரி செல்ல ரத்னா திரையரங்கின் ஸ்டாப்பில் சென்று நின்றாள்.ஆஞ்சிநேயர் ஸ்ரீராமசந்திரமூர்த்தியையும் சீதாபிராட்டியையும் வணங்கும் படத்திற்கு சங்கரன் மல்லிப் பூக்களை வைத்து ஊதுபத்தி ஏற்றி வணங்கினான்.ஆட்கள் வருவதும் சளி காய்ச்சல் தலைவலி என்று சொல்லி மாத்திரைகள் வாங்கிச் செல்வதுமாக இருந்தார்கள்.சிலர் பிரிஸ்கிரிப்ஸன்களை காட்டி மருந்து வாங்கிச் சென்றார்கள்.ராமன் இருப்பதை பார்த்து என்ன நைனா இல்லையா என்று அநேகமாக எல்லோரும் கேட்டார்கள்.

"ராமு.நீ இன்னிக்கி கடையில வந்து உக்காந்து இருக்கிறதுல உங்க நைனாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.நீ தினமும் வராட்டியும் அடிக்கடி வந்து உக்காரு."

"ம்."

"இன்னும் பழைய பழக்கமெல்லாம் இருக்கா சங்கரு."

"என்னப்பா நீ.அதெல்லாம் இல்ல.விட்டு ரொம்ப நாள் ஆச்சு."

"நிஜமாவேவா."

"நிஜம் தான்ப்பா.கஞ்சாவை விட்டு ரொம்ப நாள் ஆச்சு.இப்போ அப்பப்போ சிகரெட் பிடிக்கிறேன்.அவ்வளவுதான்.அதுவும் டீ குடிக்க வெளிய போன.இல்லனா அதுவும் இல்ல. "

"ம்."

"ராமு.நீ ஜம்முனு வியாபாரத்தை பார்த்துக்கோ.பக்கத்துலேயே ஒரு டாக்டர கொண்டு வந்து ஒரு கிளினிக்க ஆரம்பி.பார்கவி பாப்பாவுக்கு கல்யாணம் செஞ்சு வையி.நீ கல்யாணம் பண்ணிக்கோ.விவசாயம் பாரு.ஜாலியா இருப்பா.நைனா வீட்ல நிம்மதியா இருக்கட்டும்.அவருக்கு உன்னைய நினைச்சுதான் கவல."

"ம்."

ஸ்டாக் வந்ததும் சங்கரன் அவற்றை வாங்கி வைத்து ஏற்கனவே ஸ்ரீரங்கநாதன் எழுதி கையெழுத்திட்டிருந்த காசோலைகளை எடுத்துக் கொடுத்தான்.ராமனுக்கு அங்கு செய்வதற்கு உண்மையில் ஒன்றுமில்லை.

"ராமு, நான் எப்பவும் சாப்பட கொண்டு வந்துடுவேன்.இன்னிக்கி வீட்ல மீன் எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.அதான் போயி சாப்பிட்டு வந்துடறேன்.நீ கடைய பாத்துக்கிவியா" என்று கேட்டு சங்கரன் தன் ஒட்டிய கன்னங்கள் விரிய புன்னகைத்தான்.

"ம்.சரி."

ரத்னா திரையரங்கத்திலிருந்து காலை காட்சி முடிந்து மக்கள் சென்றனர்.எதிரில் பெல்ட் டிரேடர்ஸ் கடையில் பெல்டுகளை வெளிய சாலை வரை நீட்டி வைத்து வெட்டிக்கொண்டிருந்தார்கள்.புளியமரத்தின் நிழலில் நரிக்குறவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.அதில் ஒருவனின் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது.பஞ்சாயத்து போர்டு தலைவரின் மகன் முருகனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தான்.தமிழ்நாடு சலூன் கடைக்காரர் வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்தார்.பரபரப்பாக இருக்கும் கணேஷ் மளிகைக்கடையில் மக்களே இல்லை.ஒருவன் கட்டைகள் கட்டி மேலே ஏறி புதிதாக துவங்கவிருந்த பஜாஜ் இரு சக்கர வாகனங்கள் விற்கும் கடையின் பெயரை நீல வண்ணத்தில் சுவற்றில் எழுதிக்கொண்டிருந்தான்.ராமன் மெடிக்கலுக்கு பக்கத்திலிருந்த வட்டிக்கடையிலிருந்து  செட்டியார் "நாளைக்குதான் கடைசி நாள் , மீட்கலனா நகை ஏலத்திற்கு போயிடும்" என்று யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டிருந்தார்.மத்தியானத்தின் மதப்பை அறிவிக்கும் விதமாக எருமைமாடு ஒன்று சாவதானமாக ரோட்டில் சென்றுக்கொண்டிந்தது.பஞ்சாயத்து போர்டு தலைவரின் மகனிடம் பேசிய பின் முருகன் மெடிக்கலுக்கு வந்தான்.

"என்னப்பா ராமா.சங்கரன் இல்லையா."

"இல்ல வீட்டிற்கு போயிருக்கார்."

"நைனா எங்க."

"வெளிய வேலையா போயிருக்கார்."

"ம்.அப்ப கடைய இன்னிக்கி யாரு பாத்துகிறா."

"நான் தான்."

"உனக்கு எந்த மாத்திர எங்க இருக்குதுனே தெரியாதே.யாராவது கேட்டா எடுத்துக்கொடுக்கக் கூட தெரியாது.நீ எப்படி கடைய பாத்துக்குவ."

"உனக்கு இப்ப என்ன வேனும்."

"என்னாட உனக்குங்குற.நான் பாத்து வளர்ந்த பையன்டா நீ.மரியாதயா பேசு.மயிறு வேனும்.தரியா."

"பக்கத்துல சலூன்ல இருக்கு.போயி பொறுக்கிக்கோ."

"என்னடா சொன்ன கமினாட்டி பயலே" என்று கடை அரைக்கதவின் கொக்கியை விலக்கி உள்ளே வந்தான் முருகன்.அதற்குள் ராமன் எழுந்து கடையின் வாசலுக்கு வந்திருந்தான்.”கடைக்குள்ள வராத வெளிய போ” என்று கத்தினான்.முருகன் ராமனின் சட்டையை பிடித்து முகத்தில் ஒரு அறை விட்டான்.முருகன் தன்னை அடிக்கக்கூடும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத ராமன் கடையை விட்டு முதலில் சாலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்று எண்ணியவாறு முருகனின் முகத்தில் இரண்டு மூன்று குத்துகள் விட்டு வேகமாக பிடித்து தள்ளினான்.ஷட்டரை இழுத்து மூடினான்.முகத்தில் வேகமாக குத்தி தள்ளியதால் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.கீழே விழுந்திருந்த முருகன் மீது முட்டியை மடக்கி வயிற்றில் குதித்தான்.முருகன் வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டான்.ஆவேசம் வந்தவனாக ராமன் தன்னை அறைந்த கையை பிடித்து சுழுற்றினான்.முருகன் “டேய் விடுறா எந்திரிச்சன்னா கொன்னுடுவேன்” என்று கத்தினான்.கையில் கிடைத்த உடைந்த செங்கல்லை எடுத்து ராமன் மீது வீசினான்.அது ராமனின் நெற்றியில் பட்டது.

ராமன் தான் பற்றியிருந்த முருகனின் கையை விட்டான்.ராமனை தன் காலால் ஒரே எத்து எத்தினான் முருகன்.ராமன் சாலையின் நடுவில் சென்று விழுந்தான்.சாலையிலிருந்து எழுந்த ராமனை முருகன் வந்து மறுபடியும் அறைந்தான்.அவன் இடுப்பில் உதைத்தான்.ராமன் சாலையின் மறுபுறம் சென்று உருண்டு விழுந்தான்.புளியமரத்தின் நிழலில் அமர்ந்திருந்த நரிக்குறவர்கள் பயத்தில் உறைந்திருந்தார்கள்.எல்லோரும் அவர்களின் கடைகளுக்கு வெளியே வந்து நின்றுகொண்டிருந்தார்கள்.யாரும் முருகனை தடுக்கவில்லை.”இருடா உன்னைய இன்னிக்கு கொன்னுடுறேன்” என்று கத்தியவாறு ராமனை நோக்கி வந்தான் முருகன்.ராமன் அதற்குள் எழுந்து வேகமாக பாய்ந்து நரிக்குறவன் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கி அதை மறுபுறம் திருப்பி ஓடிவந்த முருகனின் காலில் தாக்கினான்.முருகன் கீழே விழுந்தவுடன் அவனது கால்களில் துப்பாக்கி கட்டை கொண்டு நான்கைந்து முறை தாக்கினான்.இரு கைகளிலும் அதை போலவே தாக்கினான்.பிறகு துப்பாக்கியை கீழே போட்டு விட்டு முருகன் மீது அமர்ந்து அவன் முகத்தில் பல முறை குத்துகள் விட்டான்.நரிக்குறவர்கள் , கடைக்காரர்கள் அவனை வந்து இழுத்தனர்.ராமன் முருகனின் சட்டையை பிடித்து கிழித்தான்.அவனது நெஞ்சில் தன் இரு கரங்களை கோர்த்து குத்தினான்.அதன்பின் ராமன் அவனாகவே எழுந்துவிட்டான்.ராமன் எல்லோரின் கைகளையும் உதறி மெடிக்கல்ஸை நோக்கி நடந்தான்.

ஸ்ரீரங்கநாதன் எல்லா செலவையும் தானே ஏற்றுக்கொள்ளவதாக சொல்லியிருந்தார்.முருகனை ரத்னா திரையரங்கிற்கு அருகிலிருந்த ஆர்.கே. மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். ராமனை சில மாதங்கள் வேறு எங்காவது சென்று தங்கச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.கடையை கொஞ்ச நாட்கள் திறக்காமல் இருப்பது நல்லது என்றும் நினைத்தார்.முருகனின் இடது காலிலும் கையிலும் கட்டு போட்டிருந்தார்கள்.ஸ்ரீரங்கநாதன் ராமனை அழைத்துக்கொண்டு முருகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார்.முருகனின் மனைவி அவனுக்கு சாதம் கொண்டு வந்திருந்தாள்.முருகனின் மகளும் உடனிருந்தாள்.அவர்களை பார்த்ததும் இருவரும் எழுந்து வெளியே சென்றார்கள்.

"நாயுடு சார்.நீங்க போயி எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல."

"இல்ல தம்பு.இவன் அப்படி செஞ்சியிருக்கக்கூடாது."

"பிரச்சனை ஒன்னும் இல்ல.நீங்க கொஞ்சம் வெளிய இருங்க.நான் ராமன் கிட்ட கொஞ்சம் பேசனும்."

"இல்ல தம்பு."

"சார் நீங்க வெளிய இருங்க , ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று முருகன் மறுபடியும் சொன்னான்.

ஸ்ரீரங்கநாதன் வெளியே சென்ற பின்னர் ராமனை அங்கிருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு அருகில் வந்து அமரச்சொன்னான் முருகன்.ராமன் அமர்ந்த பின்னர் முருகன் ராமனை பார்த்து "இதுக்கு முன்னாடி எங்கயாச்சும் சண்டை கத்துக்கிட்டியா" என்று கேட்டான்.

"இல்ல."

"நெஜாமாவே சண்டை எதுவும் கத்துக்கலயா."

"இல்ல."

"ம்.அன்னிக்கி நீ அடிச்சப்போ ஒரு அடி கூட காத்துல சுத்துல.ஒவ்வொரு அடியும் கவனமா கச்சிதமா இருந்துச்சு.எங்க அடிக்கிறோமுனு ஷார்ப்பா அடிச்ச.சண்டை கத்துக்கலனா இப்படி அடிக்கறது கஷ்டம்.உண்மைய சொல்லு."

"இல்லண்ணா.ஒரு மூனு மாசம் கராத்தே கிளாஸ் போனேன்.ஆனால் பெருசா ஒன்னும் கத்துக்கல."

"ம்.என்ன தம்பி அண்ணானு கூப்படுற.அன்னிக்கி அப்படி கூப்படலேயே."

"நீங்க ஏதோ கேக்கவும் எரிச்சல்ல அப்படி பேசிட்டேன்.மன்னிச்சுக்குங்கண்ணா."

"சண்டையை கத்துக்காம இந்தளவு அடிக்கிற.சண்டை கத்துக்கிட்டா இன்னும் நல்லாவே அடிக்கலாம்.இங்க பக்கத்துல வா."

பக்கத்தில் சென்ற ராமனை தன் கைகளால் இழுத்து அரவணைத்துக்கொண்டான் முருகன்.முருகன் சட்டையில் மருந்து நெடி அடித்தது.அப்போது தான் முருகனின் கைகள் எத்தனை வலிமையானது என்பதை ராமன் உணர்ந்தான்.ராமனுக்கு முருகனின் பிடியிலிருந்து விலகி வெளியே வரவே ஒரிரு நிமிடங்கள் தேவைப்பட்டது.

"தோ பாரு தம்பி.நான் உன்னைய அடிச்சிருக்கக்கூடாது.மயிரு கியிருன்னு பேசியிருக்கத் தேவையில்ல.சண்டைய நான் தான் ஆரம்பிச்சேன்.உன் தப்பு ஒன்னுமில்ல.உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.நீ போ.கடைய பாரு.நைனாவுக்கு ரெஸ்டு குடு.என்கிட்ட காசு இல்ல.இல்லன்னா நைனாவ காசு கொடுக்க வேணாம்னு சொல்லியிருப்பேன்."

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லண்ணா."

"சரி.நீ கிளம்பு.என் பசங்க யாரும் உன்கிட்ட பிரச்சனை பண்ணமாட்டாங்க.நீ எதுவும் கவலபடாத."

ராமனுக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.முருகனின் கரங்களை பற்றி சிறிது நேரம் நின்றான்.

"அப்ப நான் வரேண்ணா."

"போயிட்டு வா" என்று சொன்னான் முருகன்.

ஸ்ரீரங்கநாதன் முருகனின் மனைவியிடம் செலவுக்கு வைச்சிக்கோமா என்று சொல்லி பணம் கொடுத்தார்.முருகன் இப்படி எளிதில் விட்டுவிடுவான் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பாரக்கவில்லை.அவர்கள் இருவருக்குள்ளும் என்ன உரையாடல் நடந்தது என்று அவர் எவ்வளவு கேட்டும் ராமன் சொல்லவில்லை.ராமனும் ஸ்ரீரங்கநாதனும் வீடு நோக்கி நடந்தார்கள்.கடையின் அருகே வந்ததும் ராமன் "நான் போயி சாவிய கொண்டு வரேன் , கடைய மூடி வைக்க வேணாம்" என்றான்.

"முருகன் ஆளுங்க ஏதாவது கலாட்டா பண்ணப்போறாங்கடா."

"அதெல்லாம் ஒன்னும் நடக்காது."

ஸ்ரீரங்கநாதனால் எதையும் ஊகிக்க முடியவில்லை என்றாலும் அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ராமன் வக்கீல் பாஷ்யத்தின் மகனிடம் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு வண்டியை எந்த இலக்கும் இல்லாமல் சாலையில் வேகமாக செலுத்தினான்.குள்ளஞ்சாவடி வரை சென்ற பின்னர் மறுபடியும் இல்லம் நோக்கி வண்டியை திருப்பினான்.வடலூர் சபை அருகில் வந்த போது வண்டியை மைதானத்தில் விட்டுவிட்டு அங்கு ஒரு வேப்பமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான்.மேற்கில் வானம் ஆரெஞ்சு நிறத்திலிருந்தது.மனிதர்கள் மெல்ல மறைந்து கொண்டிருந்தார்கள்.எங்கும் பறவைகளின் கீச்சொலிகள்.

முருகன் சொன்னதை ஒவ்வொரு வரியாக தன்னுள் மீட்டான் ராமன்.முருகன் சொல்லும் வரை தான் சண்டையிட்டதின் விதம் குறித்து அவனுக்கே தெளிவில்லை.ஆனால் அவன் சொன்னபின்னர் தான் ராமனுக்கு சில விஷயங்கள் புரிந்தது.சண்டை துவங்கும் போதே முருகனை கடையிலிருந்து வெளியே தள்ளி விட வேண்டும் , இல்லையென்றால் கடையில் பொருட்கள் சேதமாகிவிடும் என்பதை உணர்ந்திருந்தான்.முருகன் போன்ற திடமான ஆளை அடிப்பது எளிதல்ல.ஆனால் பலசாலிகளை கூட முகத்தில் அடித்தால் அவர்கள் சிறிது நேரம் நிலை தடுமாறுவார்கள் என்பது மட்டுமே அவன் கராத்தே வகுப்பில் கற்ற பாடம்.முருகனின் முகத்தில் வலுவாக இரண்டு மூன்று குத்துகள் விட்டு அவன் நிலைதடுமாறிய போது வேகமாக தள்ளியது சண்டையின் முதல் வெற்றி.விழுந்த அவனை எழ அனுமதிக்காமல் முட்டியை மடக்கி வயிற்றின் மீது குதித்ததும் கைகளை திருகியதும் திட்டமிட்டு செய்ததுதான்.மேலும் அப்போதே நரிக்குறவர்கள் கையிலிருந்த துப்பாக்கியை பார்த்திருந்தான்.முருகனை வெறும் கைகளால் அடித்தால் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று உள்ளுணர்ந்தான்.செங்கல்லை எடுத்து முருகன் வீசியது மட்டுமே முருகனுக்கு கிடைத்த வெற்றி.அப்போது முருகன் அவனை சாலையில் தள்ளியதும் இடுப்பில் எத்து விட்டதையும் வாய்ப்பாக பயன்படுத்தி சாலையின் எதிர் பக்கத்திற்கு சென்றான் ராமன்.முருகனை துப்பாக்கி கொண்டு தாக்கும் போது தாடையிலோ மண்டையிலோ முகத்திலோ பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.அவனது கால்களிலும் கைகளிலும் மட்டுமே அடிக்க வேண்டும்,அதுவும் மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் அடிக்கக்கூடாது என்ற கணக்கு வைத்திருந்தான்.அவன் மேல் ஏறி சட்டையை பிய்த்தது சண்டையை முடிவு கொண்டு வரவும் பிறரை அருகில் அனுமதிக்கவும் அவன் ஊகித்த வழி.முருகன் சொன்னது போல அவன் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக தெளிவாக செய்தான்.அவன் மனம் ஓர்மை கொண்டு அத்தனை சமயோஜிதமாக வேலை செய்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.சட்டென்று அவனது உடல் கிளர்ச்சி அடைந்தது.

முருகன் எப்படி இதை சரியாக கணித்தார் என்றும் எண்ணிக்கொண்டான்.வண்டியை எடுத்துக்கொண்டு சாலை வரை தள்ளிக்கொண்டே வந்தான்.சாலையில் வண்டியை நிறுத்தி கிளப்ப எத்தனித்த போது எதிரில் வந்த யுவதியை பார்த்தான்.அவள் பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள்.மிகவும் செளந்தர்யமாக இருந்தாள்.கடந்து சென்ற அவளை பார்த்துக்கொண்டே இருந்தவன் புன்னகைத்தவாறு வண்டியின் கீக்கரை அடித்தான்.வீட்டுக்கு வந்து நிறைய தண்ணீர் ஊற்றி குளித்தான்.மறுநாள் காலை பார்கவியிடம் நானே கடையை திறக்கிறேன் என்று சொல்லி சாவியை எடுத்துக்கொண்டு சென்று கடையை திறந்தான்.ஸ்ரீரங்கநாதன் கடைக்கு செல்லாமல் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை மென்றார்.பார்கவி அவருக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.வாயை கொப்பளித்து காபியை வாங்கி பருகினார்.

"வாலு ஏமி செப்பினாரு நைனா."

"எவருமா."

"அதான் நைனா.கண்ணன் கூப்பிட்டு வந்த பொண்ணு வீட்ல."

"இன்னிக்கு பொண்ண கூட்டிபோக வராங்க மா."

"அப்ப அவங்களுக்கு இஷ்டம் இல்லயா."

"அவங்களுக்கு பொண்ணு மேல கோபம் தான்.அவங்களுக்கு சொந்தமெல்லாம் பெரிசா ஒன்னுமில்ல போலிருக்கு.மத்தபடி இஷ்டம் கஷ்டம் எல்லாம் ஒன்னுமில்லமா.ஜாதி கூட பெரிசா பாக்கற மாதிரி தெரியல.அவங்க ஊரு பக்கமெல்லாம் போயி ரொம்ப நாளு ஆச்சு போல.இப்போ சென்னைலதான் வாசம்.அவங்களுக்கு ஒரே பொண்ணு.காலேஜ் முடிச்சதுக்கு அப்பறம் கல்யாணம் பத்தி பாக்கலாமுனு சொல்றாங்க.வக்கீலும் சரின்னு சொன்னாரு.நல்ல வேளை பிரச்சனை இல்லாம விஷயம் முடிஞ்சுது."

"ம்.அப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களா."

"அப்படித்தான் தெரியுது.ஆனா இவங்க இரண்டு பேரும் அது வரைக்கும் ஒண்ணாயிருக்கனும் , அது தான் முக்கியம்" என்று சொல்லி சிரித்தார் ஸ்ரீரங்கநாதன்.
"நுவு உண்டாவே நைனா" என்று சிரித்தவாறு காபி டம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் பார்கவி.

(தமிழினி இணைய இதழில் பிரசுரமான சிறுகதை)

புகைப்படம் - https://commons.wikimedia.org/w/index.php?curid=2247512

2 comments:

Garunyan Konfuzius said...


தனிப்பெருங்கருணை – சர்வோத்தமன் சடகோபன்

இப்படைப்பின் ஆசிரியர் ஒரு ஆரம்பநிலை எழுத்தாளராகவிருப்பார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
கடத்தெருவொன்றில் சென்றுகொண்டிருந்த பேருந்தைக் கல்லெறிந்து மறித்துச் சில காடையர்கள் தீவைத்துக்கொழுத்துவதுடன் கதை ஆரம்பிக்கிறது. பயணிகள் திபுதிபுவெனக்குதித்தோடுகிறர்கள். தீப்பந்தம் ஒன்றை அதன் டீஸல் டாங்கினுள் செலுத்துவதன் மூலம் பேருந்து வெடித்துச்சிதறுகிறது என்று விபரிக்கப்படுகிறது.
ஒன்று இவ்விபரிப்பு தவறானது, தீப்பந்தத்தை டீஸல் டாங்கினுள் செலுத்தினால் டாங்க் தீப்பிடிக்காது. வேண்டிய ஒக்ஸிஜின் இல்லாமையால் தீப்பந்தம் அணைந்துவிடும்.
எரியும் தீக்குச்சியைச் டாங்கினுள் செலுத்தினால்க்கூட அது தொடர்ந்து எரியாது, அது அணைந்தேபோய்விடும். பேருந்தைக்கொளுத்துபவர்கள் வெளியே டீஸலையோ பெற்றோலையோ ஊற்றிக்கொளுத்துவதுதான் வழக்கம். இவிடத்தில் ஆசிரியரின் கற்பனை சறுக்குகிறது.
//தீயின் நாவுகள் உலோகத்தை உருக்கும் ஓசை எங்கும் கேட்டது. அங்கே சட்டென்று இருளும் அச்சமும் சூழ்ந்தது.// என்று அடுத்து வருகிறது. இரும்பு, அலுமினியமுட்பட எந்த உலோகமும் உருகும்போது அவை ஓசை எழுப்புவதில்லை. வெல்டிங்க் செய்யுமிடங்களில் ஓசை வருகிறதென்றால் அது வெம்மையில் திடுப்பென விரியும் வளி வெடிப்பதாலும் தீப்பிடிப்பதாலும் வருவதேயன்றி உலோகங்கள் ஒலி எழுப்புவதில்லை.
கதையின் ஆரம்பத்தில் வரும் காட்சியொன்று
//தமிழ்நாடு சலூன் கடைக்காரர் ஒவ்வொரு மரப்பலகையாக எடுத்து வெளியே வைத்து கடையைத் திறந்தார்// இதப்படிக்கும் வாசகன் கதை நிகழ்வது ஒரு காலையில் என நினைப்பது இயல்பே. ஆனால் இரண்டாவது பத்தியில் விபரிப்பில் சொல்லப்படுகிறது

//அன்று இரவு மெடிக்கல்ஸை மூட வெகுநேரம் ஆகிவிட்டது.//
//ஸ்ரீரங்கநாதன் கல்லாவில் அமர்ந்து கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார். “என்ன நாயுடு சார், கடையை இன்னும் மூடலையா?”//
மேலேயுள்ள பத்திகளில் ஒரு பகல்கழிந்து அந்திசாய்வது சித்தரிக்கப்படவேயில்லை. அல்லது ஒரு நாள் கழிவதைக்காட்ட ஆசிரியருக்குத்தெரியவில்லை. திடுப்பென இரவாகிறமாதிரி எழுதிச்செல்கிறார்.
இன்னும் நவீனமென்று நினைத்துக்கொண்டு மோசமான வார்த்தைப்பிரயோகங்களைச் செய்கின்றார். எ + காட்டாக // எதனாலோ எப்படியோ அவன் மனம் சிதறிவிட்டது./ சிதறிய மனம் அதன்பின் கூடவே இல்லை./ என்கிறார், மனம் என்பது என்ன வெடிகுண்டோ/ பெற்றோல்குண்டோவல்ல சிதறிப்போவதற்கு. ஒரு விலங்குமூளையின் கலங்களின் ஒட்டு மொத்தக்கூட்டியக்கமே மனம் என்பது. அதன் ஞாபக நிரல்களைக் குண்டென்பதுவும் வெடிப்பென்றும் விபரிப்பது அறியாமை.
புறவயமான விபரிப்புகளால் மாத்திரம் கதையை நக்ர்த்திச்செல்லமுனையும் ஆசிரியர் இத்தனை பாத்திரங்களைப்படைத்துப் பூசிகளைபோல அவற்றைத் திரியவிட்டாலும் அடிப்படையில் என்ன விடயம்பற்றிப்பேசவருகிறார் என்பது துலக்கமாக வாசகனுக்குப்புரியவில்லை. முருகனும் அவன் பண்ணும் அடாவடித்தங்களும் அநாவசியம். ஆசிரியர் சாதியம்பற்றிப்பேசுகிறாரா? மனம்மாறி ஜாதியத்தை உதறிச்செல்லும் கதை மாந்தர்களை முற்படுத்துகிறாரா? கதை மையமின்றி உழல்கிறது.

சர்வோத்தமன் சடகோபன் said...

உங்கள் வாசிப்புக்கும் எதிர்வினைக்கும் நன்றி.