சவுதி அரேபியாவின் மார்க்க அறிஞரான இப்னுதைமியாவின் வழியில் சவுதி மன்னர் இப்னு சவுதின் இணைவில் இமாம் வகாபின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்திய ஒரு சித்தாந்த செயல்வழிப்போக்கு என்று வகாபிசத்தை வரையறுக்கலாம் என்கிறார் ஹெச்.ஜி.ரசூல்.வகாபிசம் இரண்டு விஷயங்களை முதன்மையாக பேசுகிறது.ஒன்று ஷிர்க் மற்றது பித் அத்.ஷிர்க் என்றால் இணைவைத்தல் என்று பொருள்.பித் அத் என்றால் புதுமை.இணைவைத்தலையும் புதுமையையும் மறுப்பது வகாபிசம்.லாயிலாஹ இல்லல்லாஹ் , முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவின் பொருள் அல்லாஹ்வைத் தவிர தெய்வம் இல்லை, முகமது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதாகும்.இலாஹ் என்ற சொல்லுக்கு கடவுள் என்பதைத்தாண்டி வணங்கப்படும் சிருஷ்டிகள் என்ற பொருளும் கொள்ளப்படுகிறது.இதன்படி அல்லாஹ் அல்லாத வேறு பொருள் இல்லை.ஒவ்வொரு பொருளும் அல்லாவாகவே இருக்கிறது என்ற அர்த்தமும் உருவாகுகிறது என்கிறார் ரசூல்.
வகாபிசம் தர்கா வழிபாட்டை தடை செய்கிறது.அது இணைவைத்தல் அதனால் பிழை என்கிறது.மேலும் குரான் , ஹதீஸ் ஆகியவற்றை தவிர்த்து பிற அனைத்தையும் பித் அத் (புதுமை) என்கிறது.வகாபிசம் பகுத்தறிவுக்கு உட்பட்டு அனைத்தையும் விமர்சிப்பதில்லை.அது சிலவற்றை விமர்சித்து சிலவற்றில் மெளனம் காக்கிறது.மைய பெரு மரபை எந்த வகையிலும் விமர்சிக்காத வகாபிசம் சிறு மரபின் வழிபாட்டு முறைகளை மட்டும் விமர்சிக்கிறது.சீறாப்புராணத்தை விமர்சிக்கிறது.மவ்லிது ஓதுதலை ஷீர்க் என்று கூறுகிறது.இசையை மறுக்கிறது.ஆனால் இசை மறுப்பை பற்றி ஹெச்.ஜி.ரசூல் விளக்குகையில் ஏழாம் நூற்றாண்டில் திருக்குர்ஆன் ஓதுவது காதில் விழாமல் தடுப்பதற்காக முரசுகள் கொட்டப்பட்டன.மதுவில் மயங்கிக் கிடந்தவர்கள் நரம்புக் கருவிகளின் இசையை போதைக்கு பயன்படுத்தினார்கள்.ஆனால் இந்த நோக்கங்கள் அற்ற நிலையில் இசை மரபைப் பயன்படுத்த இமாம் கஸ்ஸாலியால் வழிகாட்டுதல்கள் சொல்லப்பட்டுள்ளன என்கிறார்.
வகாபிசம் சமூகவியல் , மானுடவியல் , அழகியல் , வரலாற்று கூறுகளை மறுத்து ஒரு ஒற்றைப்படையான தூய்மை வாதத்தை முன்வைக்கிறது.தவ்ஹீது என்பது ஏகத்துவம்.சூபியிஸம் அல்லாஹ்வைத் தவிர எதுவும் இல்லை , அனைத்தும் அல்லாஹ் என்கிறது.இலங்கையில் உள்ள ஒரு தவ்ஹீது ஜமாத் அமைப்பின் மூலம் தான் அங்கு சமீபத்தில் ஈஸ்டரின் போதான வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.வகாபிசத்தின் நோக்கம் என்ன , அதனால் என்ன பயன்.அது அரபு முதலாளித்துவத்திற்கு வழி வகுக்குகிறது.சவுதி வகாபிசம் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு முதன்மை நீதிமூலதனமாக இருக்கிறது.இவை மத்திய கிழக்கு நாடுகளில் ஷியாபிரிவு ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு உள்நாட்டுப்போரின் மூலமாக முயற்சி எடுக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஒரு அமைப்புக்கும் உலகில் வேறு ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் என்ன உறவு.ஒன்றுமில்லை.சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருக்கும் ஷியா பிரிவு அரசாங்களை அகற்றி ஆட்சியை கைப்பற்ற முனையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் அவர்கள் ஏன் சென்று சேர்கிறார்கள்.வகாபிசம் போன்ற ஒற்றைப்படையான தூய்மைவாதம் உருவாக்கும் ஆன்மிக வரட்சியே ஒரு தனிமனிதனை ஒரு கருத்தியலுக்கான கருவியாக தன்னை உருமாற்றிக்கொள்ள உந்துகிறது.வகாபிசத்தை பொருளாதாரம் , பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் வைத்து ஆராய வேண்டும் என்று ரசூல் வலியுறுத்துகிறார்.
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய சமூகம் அஷ்ரப் , அஜ்லப், அர்சால் என்று மூன்று படிநிலைகளாக பிளவுபட்டு உள்ளது.அஷ்ரப்கள் உயர்த்தப்பட்ட சாதிகளிலிருந்தும், அரபு வழிவந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.சையதுகள், ஷேக்குகள், முகலாயர், பதான்ஸ் போன்றவை அஷ்ரப்களின் உபபிரிவுகளாக உள்ளது.அஜ்லப்கள் இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள்.அர்சால்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள்.விளிம்புநிலை முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை முன்னேற்றம் அடைய சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது.உண்மையில் ஒர் இஸ்லாமிய அமைப்பு இந்த அர்சால் பிரிவு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக போராட வேண்டும்.தர்காவை இடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இந்துத்துவம் ஒற்றைபடையான இந்திய சமூகத்தை முன்வைக்கிறது.இங்கும் ஒரு மனிதன் தன் சிறுமரபுகளிலிருந்து தன் வேர்களிலிருந்து பிடுங்கப்பட்டு பெரு மரபின் தனி மனிதன் ஆகிறான்.அவன் நிலமும் மொழியும் அற்றவன்.இது போன்ற பெரு மரபை ஒற்றைத் தளத்தை முன்வைக்கும் கருத்தியல்கள் இயல்பாகவே நாம் பிறர் என்று மற்றமையை உருவாக்குகிறது.உலகில் உள்ள அனைத்து தீவினைகளுக்கும் அந்த மற்றமையை குற்றம் சாட்டலாம்.அந்த தீங்கை துரத்திவிட்டால்,அழித்துவிட்டால் வருங்காலம் பொற்காலமாக இருக்கும் என்று சொல்ல முடியும்.வலதுசாரி இயக்கங்கள் ஒரு வகையில் நாத்திகவாத இயக்கங்கள்தான்.அழகியல், சமூகவியல், மானுடவியல், வரலாறு போன்ற எந்த அலகுகளும் அதற்கு இருக்காது.அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமயம் சார்ந்து ஒற்றைப்படையான கருத்தியலை உருவாக்குகிறார்கள்.அதன் பின் சமயத்தை விட்டுவிடுவார்கள்.அந்த கருத்தியலை ஒரு நிலத்துடன் இணைக்கிறார்கள்.நாம் என்ற ஒரு ஜனத்திரளை உருவாக்க முனைகிறார்கள்.நாம் என்ற தொகுப்பு வேண்டும் என்றால் பிறர் என்பது தொகுக்கப்பட வேண்டும்.மற்றமையால் ஆபத்து.மற்றமை தூய்மை அற்றது.மற்றமை அழிக்கப்படவேண்டியது.நிலமும் மொழியும் அற்ற தனி மனிதன் அவர்களின் கருத்தியலை பற்றிக்கொள்கிறான்.அந்நியப்படுவனுக்கு இருக்கும் ஒரே புகலிடம் அதிகாரத்தை கைப்பற்றுதல்.அவன் தன் நிலத்தை உலகை கைப்பற்ற முனைகிறான்.நாஜிகள் உருவாக்கிய மற்றமை , வகாபிசம் உருவாக்கும் மற்றமை , இந்துத்துவத்தின் மற்றமை, பெளத்த பேரினவாதத்தின் மற்றமை எல்லாம் ஒன்றுதான்.அது ஒரு கதையாடல் வழி மற்றமையை புனைகிறது.அது புனைவு மட்டுமே.அந்த புனைவின் வழி ஏற்றப்படும் அச்சம், எரிச்சல் வழியாக அந்த அமைப்பு அதிகாரத்தை கைப்பற்றும்.அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் என்ன செய்யும்,நவீன முதலாளித்துவத்தை உருவாக்கும் அல்லது இன்னும் பெரிய அளவில் பெருக்கும்.உலகில் அனைத்து வலதுசாரி இயக்கங்களும் அதை செய்துள்ளது, செய்கிறது.செய்யும்.
இதற்கு மாற்றான கதையாடலை உருவாக்குவது என்பது மானுடவியலை, சமூகவியலை, அழகியலை , சிறு மரபு வரலாற்றை, வரலாற்று முரணியக்கத்தை , பன்மைத்துவத்தை , நவீனத்துவத்திற்கு பிறகான மையம் அற்ற சிறு கதையாடலை முன்வைப்பது ஆகும்.அதன் வழி நவீன முதலாளித்துவத்தை , பெரு மரபு கதையாடலை முறியடிக்க இயலும்.
ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள வகாபிசம் - எதிர் உரையாடல் அந்த சிறுமரபின் கதையாடலை முன்வைக்கும் முக்கிய புத்தகம்.
வகாபிசம் எதிர் உரையாடல் - ஹெச்.ஜி.ரசூல் - பாரதி புத்தகாலயம்.
No comments:
Post a Comment