எண்பத்தெட்டு கதைகள்


திலீப்குமார்காலங்களின் ஊடே, அலைகளின் ஊடே பயணப்பட்டுள்ள தமிழ்க்கதை (The Tamil Story Through the times, through the tides)     என்ற எண்பத்தெட்டு தமிழ்க்கதைகளை உள்ளடக்கிய தொகுப்பை திலீப்குமார் பதிப்பித்துள்ளார்.சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.1913யிலிருந்து 2000 வரையான எண்பத்தெட்டு ஆண்டுகளில் தமிழ் சிறுகதைகள் வந்துள்ள பாதையை தொகுத்து வழங்கும் விதமாக இந்தப் புத்தகம் உருவாக்கப்படுள்ளது.அம்மணி அம்மாள் என்பவர் எழுதிய சங்கல்பமும் சம்பவமும் என்ற சிறுகதை தொகுப்பின் முதல் கதை.1913யில் எழுதப்பட்டுள்ளது.இந்தக் கதை விவேக போதனி என்ற இதழில் வந்துள்ளது.இவரைப் பற்றி வேறு விபரங்கள் அறியப்படவில்லை.சிறுகதை வடிவத்தின் முன்னோடிகளான வ.வே.சு ஐயர் , சுப்பரமணிய பாரதி, ஆ மாதவையா ஆகியோரின் சிறுகதைகள் தொகுப்பில் உள்ளன.இதில் வ.வே.சு ஐயர் எழுதியுள்ள குளத்தங்கரை அரசமரம் மிக நல்ல கதை.பாரதியார் எழுதியுள்ள ரயில்வே ஸ்தனம் என்ற கதைப்பற்றி ஒரு குறிப்பும் உள்ளது.இந்தக் கதை சுதேமித்திரன் இதழில் 1920யில் எழுதப்பட்டுள்ளது.இந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர் மூன்று சகோதரிகளை திருமணம் செய்திருப்பதாக சொல்லப்பட்டுப்பதை சுட்டிக்காட்டி , இஸ்லாமிய வழக்கத்தில் சகோதரிகளை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இல்லை என்று ஒரு இஸ்லாமிய வாசகர் கடிதம் எழுதியிருக்கிறார், அதற்கு பாரதியார் மன்னிப்பும் கேட்டுள்ளார்.மேலும் அதே காலகட்டத்தில் செல்வகேசவராயர் என்பவர் எழுதியுள்ள சுப்பய்யர் என்ற கதையில் சென்னையில் இருந்த ஒரு பூங்கா பற்றிய விவரனைகள் மிக நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.கதையின் இரண்டாம் பகுதியில் அங்கு ஏற்படும் தீவிபத்து அதை தொடர்ந்து நடக்கும் அபத்த நாடகம் என்று தொடர்ந்தாலும் அதன் முதன்மை சிறப்பு அந்த பூங்காவை பற்றிய புற விவரிப்பு தான்.மேலும் விசாலக்ஷ்மி அம்மாள் எழுதியுள்ள ‘மூன்றில் எது ?’ என்ற கதையும் உள்ளது.இவையே தமிழின் ஆரம்பகால சிறுகதை போக்கை பிரிதிநித்துவப்படுத்தும் கதைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 1930களில் மணிக்கொடி இதழில் எழுதத் தொடங்கிய புதுமைப்பித்தன், மெளனி, கு.பா.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,க.நா.சுப்பரமணியம் ஆகியோரின் கதைகள் உள்ளன.புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற கதையான மகாமசானம் அவரை பிரிதிநித்துவப்படுத்தும் கதையாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த மணிக்கொடி காலத்தின் கதைகளிலேயே புற விவரிப்பின் வழி சமூக யதார்த்தத்தை சொல்லும் புதுமைப்பித்தனின் கதை, ஆண் பெண் உறவும் அதன் சிடுக்குகளை சொல்லும் கு.பா.ராஜகோபாலனின் கதை, புற உலகை அகப்படிமங்களாக மாற்றும் மெளனியின் கதை என்று பல்வேறு சிறுகதை போக்குகள் தொடங்கியுள்ளன.சி.சு.செல்லப்பாவிடம் ஹெமிங்வேயின் பாதிப்பு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.ஒரு உக்கிரமான சண்டை,அந்த சண்டையின் பின் உருவாகும் மோனம் ஆகியவை அவருடைய கதைகளில் தொடர்ந்து வருகிறது.வாடிவாசலிலும் இதை நாம் பார்க்க முடியும்.இதையே ஹெமிங்வேவிலும் நாம் பார்க்க முடியும்.

அதே காலகட்டத்தின் வெகுஜன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த கல்கி,தேவன்,எஸ்விவி ஆகியோரின் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.இதில் கல்கி மற்றும் தேவனின் வேறு கதைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.சேர்க்கப்பட்டுள்ள கதைகள் அத்தனை நன்றாக இல்லை.மேலும் இதே காலகட்டத்தில் எழுதிய ரஸிகன், பெண் எழுத்தாளர் குமுதினி ஆகியோர் கதைகள் தொகுப்பில் உள்ளது.

இதைத்தொடர்ந்து லா.சா.ராமமிர்தம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், சார்வாகன், இந்திரா பார்த்தசாரதி, கிருஷ்ணன் நம்பி, நீல பத்மநாபன், ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளது.மணிக்கொடியை தொடர்ந்து வந்த எழுத்து, சரஸ்வதி, தீபம், இலக்கிய வட்டம் ஆகிய ஒன்றன் பின் ஒன்றாக வந்த இலக்கிய இதழ்களில் இந்த எழுத்தாளர்களின் கதைகள் வந்ததையும் ஒவ்வொரு எழுத்தாளரும் ஏதேனும் ஒரு இதழோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர் என்றும் முன்னுரையில் திலீப்குமார் குறிப்பிடுகிறார்.வெகுஜன இதழான விகடனில் எழதிய ஜெயகாந்தன் , தன் ஆளுமையால் தமிழ் எழுத்தாளன் என்பதன் பிம்பத்தையும் தன் கதைகளின் வழியாக வெகுஜன இதழ்களில் எழுதப்படும் கதைகளின் தீவிரத்தன்மை குறித்த எண்ணத்தையும் மாற்றினார் என்பதை திலீப்குமார் முன்னுரையில் குறிப்பிடுகிறார். 

இதே காலகட்டத்தை சேர்ந்ததாக உள்ள சி.என்.அண்ணாதுரை எழுதியுள்ள தனபால் செட்டியார் கம்பெனி கதை எளிய கதையாக இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் இந்தக் கதை மிகவும் நன்றாக இருக்கிறது.பெரும்பாலும் வெகுஜன எழுத்தையும் தீவிர எழுத்தையும் நாம் வகுக்கும் போது புற யதார்த்தத்தை , உரையாடல்களை முதன்மையாக கையாளும் சிறுகதைகளை நாம் வெகுஜன கதைகளாக பார்க்கிறோம்.அதே நேரத்தில் புற யதார்த்தத்திற்கு சம்மந்தமற்ற அக நெருக்கடியை மையப்படுத்தும் கதைகளை தீவிர எழுத்தின் பிரிவில் கொண்டு செல்ல பார்க்கிறோம்.ஆனால் இந்த தனபால் செட்டியார் கம்பெனி கதை புற யதார்தத்தை சித்தரித்து அதன் வழி சமூக விமர்சனத்தை செய்கிறது.கதையில் எங்கும் நேரடியாக எதுவும் விமர்சனம் செய்யப்படவில்லை.இதுவும் முக்கியமான கதைதான்.இன்று இந்த பிரிவுகள் எல்லாம் நீர்த்து போய்விட்டது என்பதும் உண்மைதான்.

அதைத்தொடர்ந்து தி.க.ஸ்ரீனிவாசன் எழுதியுள்ள எல்லைக்கு அப்பால் கதை உள்ளது.இந்தக் கதை நன்றாக இல்லை.பெண் எழுத்தாளர்களான ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, வாஸந்தி, சிவசங்கரி ஆகியோரின் கதைகள் அடுத்ததாக உள்ளது.ராஜம் கிருஷண்னின் மீன்காரி, சூடாமணி எழுதியுள்ள வெளியே நல்ல மழை ஆகிய கதைகள் மிக முக்கியமான கதைகள்.சூடாமணியின் கதை குழுந்தைகளின் உலகில் இருக்கும் வன்முறையை மிக காத்திரமாக சொல்கிறது.இந்த தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.அதே போல ராஜம் கிருஷ்ணனின் கதையும் ஒரு குழந்தையை இழந்துவிட்ட தாயின் பரிதவிப்பை அந்த தாய் அந்தக் குழந்தையின் வடிவில் இருக்கும் இன்னொரு மீனவ சிறுமியை கண்டுகொள்வதும், அந்த சிறுமியை மறுமுறை பார்க்க இயலாமல் போவதும் மிக அற்புதமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.அதே போல வாஸந்தி எழுதியுள்ள பயணம் கதை ஒரு குடும்பத்தில் முதுமை எய்திய பெண் மீது அடுத்தடுத்த தலைமுறையை சேர்ந்த இரு பெண்கள் செலுத்தும் வன்முறையை காட்சி படுத்துகிறது.ஒரு வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளை மிகத் திவீரமாக ராஜம் கிருஷ்ணனின் கதையும் , வாஸந்தியின் கதையும் சொல்கிறது.பொழுது என்கிற சிவசங்கரியின் கதையும் நன்றாக உள்ளது. 

அதைத் தொடர்ந்து எழுபதுகளில் எழுத வந்த சுஜாதா, அம்பை, ந.முத்துசாமி, சா.கந்தசாமி, ராமகிருஷ்ணன்(க்ரியா), விட்டல் ராவ் ஆகியோரின் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளது.இதில் விட்டல் ராவ் எழுதியுள்ள தூரதேசம் கதை சென்னையில் செயின்ட் தாமஸ் மெளன்டில் இருந்த ஆங்கிலோ இந்தியர்கள் பற்றிய கதை.மிக நல்ல கதை.மிக எளிமையான ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத கதை.அதே போல சா.கந்தசாமியின் எதிர்முனையும் நன்றாக இருந்தது.ராமகிருஷ்ணனின் அவளிடம் சொல்லப்போகிறான் கதை நன்றாக இல்லை.சேர்த்திருக்கத் தேவையில்லை.

அதன் பின் எழுபதுகளின் மத்தியில் எழுத வந்தவர்களாக ஆதவன், பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், ராஜேந்திர சோழன்,பாலகுமாரன்,சுப்பரமணிய ராஜூ, ஜெயந்தன், மா.அரங்கநாதன், சி.ஆர்.ரவீந்திரன் ஆகியோரின் கதைகள் உள்ளன.ஜெயந்தன் ஒரு கால்நடை மருத்துவர் என்பதை இந்த தொகுப்பில் உள்ள எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளின் வழி அறிய முடிந்தது.இதில் பாலகுமாரன்,ஜெயந்தன்,பிரபஞ்சன்,ஆதவன்,சி.ஆர்.ரவீந்திரன் மற்றும் பூமணியின் கதைகள் மிக நன்றாக இருக்கிறது.பூமணியின் ஆத்திரம் என்ற கதை ஒரு அமைச்சரின் பந்தோபஸ்திற்காக செல்லும் காவலாளியின் கோபத்தை எரிச்சலை சொல்லிச்செல்கிறது.ஆதவனின் கதை ஒரு எளிய சம்பவத்தின் மூலமாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் விரிசலை , திருமண உறவு புனிதமானது வலுவானது என்று அந்த உறவில் இருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் சூழலில் மிக எளிய விஷயங்கள் கூட அந்த உறவு மெல்லிய காற்றில் சிதறிப்போகும் காகிதக் கூடு போல இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
 
அதைத் தொடர்ந்து எழுத வந்தவர்களின் கதைகளாக கந்தர்வன் ,நாஞ்சில் நாடன், திலீப்குமார்,சுரேஷ் குமார இந்திரஜித், விமாலாதித்த மாமல்லன், தோப்பில் முகமது மீரான், திலகவதி, அ.எக்பர்ட் சச்சிதானந்தம்,சென்பகம் ராமசாமி, சுப்பரபாரதி மணியன், பாவண்ணன், சோ.தர்மன், தமயந்தி, சிவகாமி, ச.தமிழ்செல்வன், மா.காமதுரை ஆகியோரின் கதைகள் உள்ளது.இதில் அ.எக்பர்ட் சச்சிதானந்தம் எழுதியுள்ள ஏழு எழுபது தரம் என்ற கதை ஒரு ப்ரோட்டஸ்டண்ட் கிறுஸ்துவ திருக்கோயிலில் மணிப்பணியாள் வேலை இடத்திற்கு நிகழும் போராட்டங்களை சித்தரிக்கும் கதை.இதில் சாமுவேல் கதாபாத்திரம் இறுதியில் எந்தக் காரணத்தை கொண்டும் பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்க இயலாது என்று சொல்லி செல்லும் இடம் மிகவும் தீவிரமான மன எழுச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.ஒருவன் எத்தனை கொடூரமான வாழ்க்கை சூழலுக்குள் சிக்கிக்கொண்டாலும் அவன் தன் சுயத்தை , சுய கெளரவத்தை காத்திக்கொள்ளும் போது அது அளப்பரிய ஆற்றலையும் நிறைவையும் அளிக்கிறது.மனிதனுக்கு அதை தேவைப்படுகிறது.அதே போல விமாலாதித்த மாமல்லன் எழுதியுள்ள சிறுமி கொண்டு வந்த மலர் அபாரமான கதை.பெரும்பாலும் இந்த காலகட்டத்தின் கதைகளாக உள்ளவை நன்றாக இருக்கிறது.இதில் ச.தமிழ்செல்வனின் குரல்கள் கதை, மா.காமதுரையின் கிட்டினன்,பாவண்ணனின் பழி, சோ.தர்மனின் தழும்பு ஆகியவை சுய கெளரவத்தோடு வாழ்வது மறுக்கப்படுவது, அதற்கு எதிராக செய்யப்படும் கலகம், அல்லது மெளனம் என்ற தளத்திலான கதைகள்.பாவண்ணனின் பழி கதையின் இறுதி முடிவு சட்டென்று ஒரு உலுக்கலை ஏற்படுத்துகிறது.மா.காமதுரையின் கிட்டினன் கதை நாவிதர் கிட்டினனின் மகன் தலை நிமிர்ந்து வருவதை சொல்வதன் வழி ஒரு தலைமுறை மாற்றத்தை குறிப்புணர்த்துகிறது.மிக எளிமையாக பூடகமாக அதை இந்தக் கதை சுட்டக்காட்டுகிறது.அந்த தலைமுறை மாற்றம் பெரிய நாயக்கரிடம் ஏற்படுத்தும் பதற்றத்தையும் கதை பதிவு செய்கிறது.தமயந்தியின் அனல் மின் மணங்கள் ஒரு மீனவ குடும்பத்தால் கைவிடப்படும் ஒரு தாயின் கதை.முன்னர் எழுதியது போல, இதே போன்ற வன்முறையை வாஸ்ந்தி பயணம் என்ற கதையில் எழுதியிருக்கிறார்.நமது குடும்பங்களில் இருக்கும் வன்முறையை, குழந்தைகளின் வன்முறையை பெண் எழுத்தாளர்களின் கதைகளில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.ஏன் ஒரு குடும்பத்தில் உற்பத்தி திறன் அற்று ஒய்ந்து நிற்கும் ஒருவரை அந்த குடும்பம் நிராகரிக்க முனைகிறது.ஏன் அவரை கைவிட விரும்புகிறது.ஏன் எப்போதும் எல்லோரும் உற்பத்தி திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஒரு குடும்ப அமைப்பு ஆசைப்படுகிறது.பெரும்பாலும் குடும்பங்களின் பெரியவர்கள் மீது நிகழும் வன்முறை இந்த பயன்மதிப்பு அற்று போவதனால் வருவதுதான்.

அதன் பின் எண்பதுகளின் மத்தியில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் எழுதவந்தவர்களின் கதைகளாக கோணங்கி, ஜெயமோகன், இமையம், சு.வேணுகோபால், பெருமாள் முருகன், பாமா, உமா மகேஸ்வரி, வேல ராமமூர்த்தி , கோகுல கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் உள்ளன.இதில் கோணங்கியின் இருட்டு கதை மிக அற்புதமாக சிறுவர்களின் உலகத்தை சித்திரிக்கிறது.சிறுவர்களின் உலகம் எத்தனை கொடூரமானதாக இருந்தாலும் அந்த இருட்டின் ஊடே அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் வெளிச்சத்தை மகிழ்ச்சியை இந்தக் கதை காண்பிக்கிறது.உமா மகேஸ்வரியின் மலையேற்றம் கதை ஒரு எளிய தினசரியிலிருந்து மலையேற்றம் நோக்கி செல்லும் பயணத்தையும், அதே நேரத்தில் மலையேற்றம் முடிந்து மறுபடியும் வாழ்க்கை அந்த தினசரிகளுக்குள் சென்று சேர்கிறது என்பதையும் உணர்த்துகிறது.சு.வேணுகோபாலின் கதை முப்பத்தி மூன்று வயது நிரம்பிய மகேந்திரனும் அவனது தாயும் எப்படி மகேந்திரனின் தந்தை இறந்து போக வேண்டும் என்பதை விரும்புகிறார்கள் என்பதை சொல்கிறது.மகேந்திரனுக்கு முப்பத்தி மூன்று வயதாகியும் வேலையும் கிடைக்கவில்லை, திருமணமும் ஆகவில்லை.தந்தை இறந்தால் அவரின் அரசு வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு கிடைக்க வாய்ப்பியிருக்கிறது என்று தாயும் மகனும் ஆசைப்படுகிறார்கள்.அந்த கனவும் இறுதியில் கலைந்து விடுகிறது.பாமாவின் கதை குடும்பத்தின் மூலமாகவும் , பள்ளியின் மூலமாகவும் குழுந்தைகள் எப்படி சாதி பற்றிய முதல் புரிதல்களை அடைகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

தொண்ணூறுகளுக்கு பின்னர் எழுத வந்தவர்களின் கதைகளாக அழகிய பெரியவன், கண்மனி குணசேகரன், மீரான் மைதீன், சுதாகர் கடாக், குமாரசெல்வா, காஞ்சனா தாமோதரன் ஆகியோரின் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது.இரண்டாயிரத்தில் எழுதப்பட்ட என.ஸ்ரீராமின் கிணற்றில் குதித்தவர்கள் கதை இறுதி கதையாக தொகுப்பில் உள்ளது.ரித்விக் கடாக்கின் மீதான பற்றின் காரணமாக சுதாகர் தன் பெயரை சுதாகர் கடாக் என்று வைத்துக்கொண்டதாக எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பில் உள்ளது.

இந்த தொகுப்பில் சாரு நிவேதிதா மற்றும் யுவன் சந்திரசேகரின் கதைகள் இல்லை.ஏன் என்று தெரியவில்லை.பெரும்பாலும் சிறுகதை வடிவமான துவக்கம் – முடிச்சு  - முதிர்வு அல்லது திருப்பம் என்ற அடிப்படையிலான கதைகளே தொகுப்பில் உள்ளன.பரிசோதனை முயிற்சிகள் மிக சொற்பமாக இருந்ததாலும் அவற்றில் சிலவற்றை மொழியாக்கம் செய்ய முற்பட்ட போது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் திலீப்குமார் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

சுபஸ்ரீ கிருஷ்ணசாமி கதைகளை மிகவும் நெர்த்தியாக , கச்சிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.ஒரு தமிழர் பேசும் ஆங்கிலம் போலவே உரையாடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்த தொகுப்பில் உள்ள கல்கி, தேவன் , எஸ்விவி எழுதியுள்ள கதைகளை தவிர்த்து பார்த்தால் பெரும்பாலானவே தீவிரமான உள்ளடகத்தை கொண்டிருக்கின்றன.பெரும்பாலும் சிற்றிதழ்களில் வந்தவை.முதல் நாற்பது கதைகளில் பெரும்பாலும் பிராமணர்கள் கதை மாந்தர்களாக இருக்கிறார்கள்.பின்னர் இடைநிலை சாதியினர் வருகிறார்கள்.அதன் பின் ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளும் குடிபெயர்ந்தவர்களின் கதைகளும் வருகிறது.அநேகமாக இறுதியில் இருக்கும் எந்தக் கதையிலும் பிராமணர்களின் உலகம் இல்லை.மெல்ல பெரிய சமூக மாற்றமே நிகழ்ந்திருக்கிறது.சுப்பைய்யர் கதையிலே சென்னை பெருநகரம் வந்து விடுகிறது.இறுதியில் உள்ள கதைகள் பெரும்பாலும் சிறுநகரத்தை கதைத்தளமாக கொண்டவை.

எனக்கு இந்த தொகுப்பு மிகவும் பிடித்திருந்தது.மிகவும் விரும்பிப் படித்தேன்.திலீப்குமாரும் சுபஸ்ரீ கிருஷ்ணசாமியும் பெரும் பணியை செய்திருக்கிறார்கள்.இது போன்ற ஒரு தொகுப்பு நூல் தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.இரண்டாயிரத்திற்கு பிறகு வந்த கதைகளை தொகுத்து ஒரு தொகை நூலை கொண்டு வந்தால் அதுவும் சுவாரசியமானதாக இருக்கும்.

The Tamil Story  - Edited by Dilip Kumar – Translated by Subashree Krishnaswamy  – Tranquebar press
 


No comments: