கடந்த பத்து பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக இந்திய அளவில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பது சார்ந்து பல்வேறு சட்டங்கள் வந்துள்ளது.சமீபத்தில் பெங்களூரில் பார், பப் போன்ற இடங்களில் சிகரெட் புகைப்பவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.சில அலுவலங்களில் புகைப்பவர்களுக்கு புகைக்கும் ஸோன்கள் உருவாக்கப்பட்டு அங்கு புகைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.சில அலுவலங்களில் அது கூட இல்லை.புகைப்பது குறித்த குற்றவுணர்வு உருவாக்கப்படுகிறது.அலுவலகத்திற்கு வெளியே புகைப்பவன் ரோட்டில் நின்ற படி வாகனங்களின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு புகைக்க முடியாது.திடீரென்று ஒரு காவலாளி வந்து நீங்கள் இங்கே புகைக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிடக்கூடும்.விஸ்ராந்தியாக நின்று கொண்டு புகைத்தவனுக்கு அந்த சாவகாச நிலை தடை செய்யப்படுகிறது.அவனுக்கு அலுவலகம் , அரசு , அதிகாரம், கண்காணிப்பு , சட்டம் எல்லாம் நினைவுறுத்தப்படுகிறது.அதற்குப்பின் அவன் ஸோன்களை தேடி அலைந்து அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நின்று புகைத்து சலித்து வெளியேற வேண்டும்.
சினிமா பார்க்க சென்றால் அங்கே மாரல் சயின்ஸ் வகுப்பே எடுக்கிறார்கள்.ஏன் எல்லா அலுவலங்களிலும் கோயில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் மருத்துவமனைகளிலும் காலை சரியாக பத்து மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவில்லை.ஏன் சினிமா கொட்டகைகளில் மட்டும் இது அவசியமானதாக மாறியது(அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது).மற்றவையும் மக்கள் கூடும் இடங்கள் தானே.சினிமா கொட்டகை கேளிக்கைக்கான இடம்.சிகரெட் பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை பற்றிய எச்சரிக்கை படங்கள் , திரைப்படத்திற்கு முன் திரையிடப்படுகிறது.ஏன் குடிப்பது , மாற்றான் மனைவியை காதலிப்பது, கொலை செய்வது , திருடுவது ,சுத்திகரிப்பு செய்யப்படாமல் தொழிற்சாலை நீரை நதியில் கலக்கவிடுவது, ஆற்று மணலை அள்ளுவது, குழந்தை கடத்தல், பெற்றோரை மதிப்பது,ரீயல் எஸ்டேட் விலையேற்றம்,வரிசையில் நிற்பது, எச்சில் துப்பாமல் இருப்பது,ஹாரன் அடிக்காமல் இருப்பது குறித்தெல்லாம் குறும்படம் திரையிடப்படுவதில்லை.சிகரெட் பிடிப்பது அவசியமற்றது.அதனால் அதிக வரி விதிக்கலாம்.அது புகைப்பது குறித்த குற்றவுணர்வை உருவாக்கலாம்.ஆனால் , ஏன் பெருநகரங்களில் ஒன்பது பேர் அமர்ந்து செல்லும் வாகனத்தை ஒருவன் மட்டுமே ஓட்டிச் செல்லும் போது அவன் மீது அதிக சாலை இடத்தை எடுத்துக்கொள்கிறான் என்ற அடிப்படையில் அதிக வரி வசூல் செய்யப்படுவதில்லை.ஏன் பெருநகரங்களில் அதிகரிக்கும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்தை பயன்படுத்துவது கட்டாயப்படுத்தப்படவில்லை.
பொதுவாக கொண்டாட்ட வெளிகள் , கேளிக்கை கூடுகைகள் , எளிய கேளிக்கைகள் மீது நமக்கு மதிப்போ அக்கறையோ இல்லை.சினிமா கொட்டகைகள் மாரல் சயின்ஸ் வகுப்பறைகள் அல்ல.சிகரெட் புகைப்பது குற்றமும் இல்லை.குற்றவுணர்வுடன் சிகரெட் பிடிப்பதை விட சிகரெட் பிடிக்காமல் இருப்பதே நல்லது.கூக்கரின் ஆவி வெளியேறுவது போல ஒரு சராசரி மனிதனின் தினசரிக்கு சில வெளிகள் அவசியம்.அவனுக்கு கூக்கருக்குள் இருக்கும் அரிசி சோறாக வேண்டும்.ஆனால் கூக்கரிலிரிந்து ஆவி வெளியேறாவிட்டால் அவன் அழுத்தம் தாங்காமல் அலுவலகத்தில் வீட்டில் சிதறத்தான் வேண்டும்.நமது பெருநகரங்களின் மிகப்பெரிய சிக்கலே அதில் பெரிய கொண்டாட்ட வெளிகள் இல்லை என்பதுதான்.ரெஸ்டோ பார் , பப், மால்கள், சினிமா கொட்டகைகள் இவைகள் இருக்கின்றன.ஆனால் பொது வெட்ட வெளி கொண்டாட்டங்கள் அநேகமாக இல்லை.கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கும், அதை யோட்டி நடக்கும் கூத்து , கேளிக்கைகள் போன்ற கொண்டாட்ட வெளி பெருநகரங்களில் உருவாக வேண்டும்.சமீபத்தில் பா.ரஞ்சித் அப்படியான ஒரு நிகழ்வை நடத்தினார்.ஆனால் அதில் ஒரு கருத்தியல் அடிப்படை இருந்தது.அதுகூட தேவையில்லை என்றே நினைக்கிறேன்.வெறுமன கொண்டாட்ட வெளி.வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை அது போன்ற கொண்டாட்ட கூடுகைகள் பெருநகரங்களில் நடக்க வேண்டும்.அதில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான சிவிக் சென்ஸ் அதில் பங்கேற்பவர்களுக்கு இருக்க வேண்டும்.அப்படியான வெளிகள் பல குற்றங்களை தடுக்கும்.பல உளச்சிக்கல்களை போக்கும்.இது போன்ற கொண்டாட்ட வெளிகள் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் சார்ந்து மெரினாவில் அத்தனை பெரிய கூட்டம் கூடியிருக்காது! அரசாங்கத்திற்குத்தான் இத்தகைய வெளிகள் நண்மை பயக்கும்.
சிகரெட் புகைப்பது அதை புகைக்காதவரை பாதிக்கிறது என்பதுதான் அதன் மீதான இறுக்கத்திற்கு பெரிய காரணம்.அதில் உண்மையும் இருக்கலாம்.ஆனால் அப்படி பார்த்தால் நாம் செய்யும் எத்தனையோ செயல்கள் எத்தனையோ பேரை பாதிக்கிறது.ஒரு தொழிற்சாலை உருவானால் ஒரு நதி சீரழிகிறது. தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது.இவையும் பிறர் நலனை பாதிக்கும் செயல் தானே.தெரு நாய்களை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் போராடுகிறது.ஆனால் அந்த தெருநாய்களால் நிகழும் சாலை விபத்துகள் , குழந்தைகள் தாக்கப்படுவது ஆகியவை பற்றி மெளனம் காக்கப்படுகிறது.சிகரெட் புகைப்பது சார்ந்த இன்னும் தளர்வான ஒரு நடைமுறை கடைப்பிடிப்பது நல்லது.நான் புகைப்பதில்லை.புகைப்பது குறித்த மோகம் உண்டு.திடீரென்று புகைக்க துவங்கவும் கூடும்.புகைப்பது குற்றவுணர்வுடன் செய்ய வேண்டிய செயல் அல்ல என்றே நினைக்கிறேன்.கேளிக்கை கூடுகைகள் மாரல் சயின்ஸ் வகுப்பறைகள் அல்ல.வெளியில் நல்ல மழை ஒரே சொரூப நிலை என்கிறார் நகுலன்.சற்றே விஸ்ராந்தியாய் இரு என்கிறார் சுந்தர ராமசாமி.
உங்கள் காலைத் தொழுகை முடிந்ததா ,அவ்வளவுதான் உங்கள் காலை உணவு , ஊர் சுற்றாமல் ஒழுங்காய் போய் தூங்குங்கள் என்று ஆத்மாநாம் சொன்னபின் சபரிநாதன் நான் ஏன் புகைக்கிறேன் கவிதையில் சொல்கிறார்
...
மிருதுவான கேடயம், சாவகாசம், அருட்துணை , நிகலிஸ்டின் முத்திரைமோதிரம்
நான் விரும்புகிறன் அவன் அப்படி நிற்பதை..
அப்படி நிற்கும் ஒருவன் விழிப்படுகையில்
மீண்டும் எமக்கு புகைப்பிடிக்க வேண்டும் போலிருக்கும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்.ஒருவன்
இதை விட அதிகமான அன்புக்குத் தகுதி உள்ளவனாக உணர்கையில்
பகல் முழுதும் கழிப்பறையில் அமர்ந்திருப்பினும் கதவு தட்டப்படாது என்பது
ஞாபகம் வருகையில்
புகைத்தல் கூடாதென்பதற்கான காரணங்களில் பொருளவனுக்கு புரிவதில்லை
.....
தூரத்து அநாதைப் பொட்டிக்கடையுள்ளிருந்து அழைக்கிறார் நாசரேத்தின் ஏசு
காதில் கேட்கிறது என் கழுத்தில் சைட்லாக் இடப்படும் ஒசை
நானென் முகவிளக்கின் சின்ன ஒளிவட்டத்தை நம்பிப் பயணிக்கிறேன்
தேவனே, உண்மையில்
நான் மறந்துவிட்டேன்
நான் ஏன் புகைக்கிறேன் என்பதை.
கழுத்தில் சைட்லாக் இடப்படும் ஒசையை கேட்பவன் தான் ஏன் புகைக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறான்.அவனது காலைத்தொழுகை முடிந்தவுடன் ஒழுங்காய் போய்த் தூங்குச் சொல்லும் சமூகம் , கழுத்தில் சைட்லாக் இடும் சமூகம் , குடிமகன்கள் புகைப்பது குறித்தும், கொண்டாட்ட வெளிகள் குறித்தும், சினிமா கொட்டகைகள் மாரல் சயின்ஸ் வகுப்பறைகளாக மாற்றாமல் இருப்பது குறித்தும் பரிசீலிக்கலாம்.
Photograph © : http://www.muhsinakgun.com/celebrities#/new-gallery-54/
1 comment:
பொது கொண்டாட்ட வெளிகள் சமூகங்களுக்கு தேவை . உண்மைதான். அதற்காக நான் சுவாசிக்கும் காற்றில் புகையை விடும் சக மனிதர்களை பேருந்தில், ரயிலில், திரையரங்கில் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என் அருகே இல்லாமல் என் சுவாசத்தை கெடுக்காமல் எங்கேயோ போய் புகைத்தால் எனக்கு எந்த புகாரும் இல்லை.
கோபமே வராத நான் கோபப்படுவது என்னையும் என் குழந்தையையும் நிக்கோட்டின் முதலியவற்றை திணித்து passive smokerஆக ஆக்குவதற்குதான். ஒரு துளி புகையையும் சகித்துகொள்ள முடியாது.
Post a Comment