சுரேஷ் பிரதீப் எழுதியுள்ள எஞ்சும் சொற்கள் அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு.பன்னிரெண்டு கதைகள்.இந்தக் கதைகளை இரண்டு அல்லது மூன்று தலைப்புகளின் கீழ் தொகுக்கலாம்.சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளை பேசும் கதைகள் என்ற தலைப்பின் கீழ் வீதிகள், எஞ்சும் சொற்கள், ஆழத்தில் மிதப்பது, வரையறுத்தல் ஆகியவற்றை வகுக்கலாம்.பரிசுப்பொருள், மடி, மறைந்திருப்பவை , 446A, அபி , ஈர்ப்பு ஆகியவை ஆண் பெண் உறவை மையப்படுத்திவை.பாரம் , பதினொரு அறைகள் ஆகிய இருகதைகளையும் பால்ய காலத்தின் தனிமை,துயரம் ஒருவனில் உருவாக்கும் ஆளுமைச் சிக்கல் பற்றிய கதைகள் என்று கூறலாம்.
எஞ்சும் சொற்கள் ஒர் அரசு அலுவலகத்தில் சொற்களால் ,சைகைகளால் ஒருவன் சாதி ரீதியில் துன்புறுத்தப்படுவதை பேசும் கதை.கதையில் இறுதியில் கதைச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியிருக்க வேண்டிய ஆனால் சொல்லாமல் விட்டதாக எண்ணிக்கொள்ளும் சொற்களே இந்தக் கதையின் தலைப்பு.தொகுப்பின் தலைப்பும் கூட. வீதிகள் சாதி மாற்று திருமணத்தின் சிக்கல்களை பேசும் கதை. வீதிகள் புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் சாதிய வீதிகள் உண்டு.வரையறுத்தல் ஊரில் சாதி மாற்று திருமணத்தால் நிகழும் வன்முறை பற்றியும் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தை பற்றியும் அந்தக் குடும்பத்திலிருந்து படித்து பண்பாட்டு மானுடவியல் பேராசியராக மேலெழுந்து வரும் பெண் பற்றியும் அவளது சாதி தேவையற்றது என்ற பிரசங்கத்தை பற்றியதுமான கதை.இந்தக் கதை மிக நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.நேர்கோட்டு தன்மையற்று சொல்லப்பட்டிருந்தாலும் எந்த குழப்பமும் அற்று நல்ல மொழிநடையில் முன் பின்னாக நிகழ்வுகளை அடுக்கி சொல்கிறார்.கதையில் அந்தப் பெண் சாதிய அவசியமின்மை பற்றி பிரசங்கிப்பது தேவையற்றது என்று தோன்றியது.ஆனால் அது மிகப்பெரிய அளவில் கதையில் துரத்திக் கொண்டு இருக்கவில்லை.ஆழத்தில் மிதப்பது கதையில் அந்தப் பெண்னை மகேந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க அவளது தந்தையின் இரண்டாம் மனைவி விரும்புகிறாள்.அவளது தந்தை இறக்கும் போது தன் சாதிப்பையனுக்கு அந்தப் பெண்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்.அவள் தத்தெடுக்கப்பட்ட பெண் என்று கதையின் முற்பகுதியில் வந்தாலும் அவள் அவளது தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவளாக இருக்க வேண்டும் என்றும் அவளை தன் சாதிக்குகள் கொண்டு வந்து விட வேண்டும் என்ற விருப்பம் இரண்டாவது மனைவி, இறந்து போன கணவன் ஆகியோரின் ஆழத்தில் இருப்பதான குறிப்பு கதை இறுதியில் வருகிறது.
பரிசுப்பொருள் , மடி , மறைந்திருப்பவை , 446A, அபி, ஈர்ப்பு கதைகள் ஆண் பெண் உறவின் சிக்கல்களை பேசும் கதைகள்.இதில் 446A,மடி,அபி எந்த வகையிலும் தொகுப்புக்கான கதைகள் இல்லை.மிக எளிய கதைகள்.கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஈர்ப்பு கொண்ட இருவர் அதே கல்லூரியில் சில வருடங்கள் கழித்து சந்தித்து கொள்வது, ஒரு பெண்ணின் மீதான காமத்தால் அவளை பின்தொடர்வது , திருமணத்திற்கு வெளியே தோன்றும் உறவு , விவாகரத்து , புதிய உறவும் எளிதல் முடிந்துவிடுவது என்று இந்த கதைகள் எளிதில் கட்டமைக்கக்கூடியவையாக இருக்கின்றது.இன்று எழுதும் யாரும் எழுதக்கூடிய கதைகள்.பரிசுப்பொருள் ,மறைந்திருப்பவை ஒர் ஆண் பெண் உறவில் நொதிக்கும் வன்மம் பற்றி சொல்பவை.பரிசுபொருள் கதையில் உரையாடல் நன்றாக வந்திருக்கிறது.சுரேஷ் பிரதீப்பின் கதைகளில் நான் கண்ட முக்கியமான குறை அப்போது என்னை அவர் சந்தேகித்து விடுவாரோ என்று நான் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டேன் என்பது போன்று ஒருவரின் உளநிலையை விவரிக்க முனையும் வரிகள்.இவை மிக செயற்கையாக பின்னப்பட்டுள்ளது.இவற்றை தவிர்க்கலாம்.ஈர்ப்பு கதை அத்தனை பெரிய கதையாக இருப்பதற்கான தேவை இருக்கிறதா என்று தெரியவில்லை.அந்தக் கதையில் வரும் பெண் பற்றிய அவதாணிப்புகள் அனைத்தும் எளிய அளவில் எங்கெல்லாம் ஆண்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் பேசப்படுபவை.அதை தீவிரமாக சொல்வதாக முன்வைக்கும் தொனி இந்தக் கதையில் இருக்கிறது.
பதினொரு அறைகள் கதையில் கதைத்தலைவனின் அன்னை அவனது சிறுவயதில் அவர்களை விட்டுவிட்டு அவனது தந்தையின் முதலாளியுடன் சென்று விடுகிறாள்.அவளது அன்னை சிறுவயதில் அவளுக்கு கொடுக்கும் பதினொரு அறைகளை அவன் வளர்ந்து அவளது மகனுக்கு கொடுக்கிறான்.இந்தக் கதையில் அவனது அன்னை வீட்டை விட்டு கணவனின் முதலாளியுடன் சென்று விட முடிவு செய்து விடுகிறாள்.தன் கணவன் உணவருந்தும் போது இதைச் சொல்கிறாள்.அடுத்த நாள் கணவனின் முதலாளி அவளை வந்து அழைத்து செல்கிறான்.இரண்டுமே அபத்தமானவை.கணவன் மனைவி உறவில் விலகிச்செல்பவர்கள் நான் சென்று விடுகிறேன் என்று சொல்வதும் அடுத்த நாள் அந்தக் காதலன் வந்து அழைத்துச்செல்வதும் நிகழாதவை.ஒர் உறவில் இருவருக்கும் மன விலக்கம் இல்லாவிட்டால் அந்த உறவு முடிவுக்கு வரும் போது அங்கே மிகப்பெரிய வன்முறை நிகழும்.அதுவும் வீட்டுக்கு வந்து அழைத்து செல்ல அது முறையான திருமண நிகழ்வு இல்லை.அவளாகவே சென்றுவிடுவாள்.பின்னர் ஊரும் வீடும் அறியும்.
பாரம் கதை பால்ய காலத்தில் நிகழும் ஒர் துர் சம்பவத்தால் நிகழும் உளவியல் பாதிப்பை பற்றியது.சுமை அற்று போகும் போது அவன் இறந்து விடுகிறான்.பால்ய காலத்தில் நிகழும் துர் சம்பவங்கள் சிலரை மரத்துப் போக செய்துவிடுகிறது.அவர்கள் ஒர் உறவில் இருந்தாலும் நண்பர்களுடன் இருந்தாலும் எங்கும் தங்களை கரைத்துக்கொள்ள இயலாதவர்கள்.அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.அவர்களின் காலம் எங்கோ உறைந்துவிடுகிறது.இந்தக் கதையில் அந்த விஷயம் நன்றாக வந்திருக்கிறது.
சுரேஷ் பிரதீப்பிடம் நல்ல கிராஃப்ட் இருக்கிறது.சுவாரசியமாக கதை சொல்ல முடிகிறது.இன்னும் விரிந்த தளங்களுக்கு அவர் செல்ல வேண்டும்.வாக்கிய அமைப்புகளில் மட்டும் சில இடங்களில் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. எழுத்துப்பிழைகள் உள்ளது.அடுத்த பதிப்பில் திருத்திவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
எஞ்சும் சொற்கள் - சுரேஷ் பிரதீப் - கிழக்கு பதிப்பகம்
Photograph by Chetan Hireholi on Unsplash