2009 அல்லது 2010யில் நாகார்ஜூனனின் புத்தகம் ஒன்றின் கூட்டம் சென்னை எல்எல்ஏ பில்டிங்கில் நடைபெற்றது.அதில் தமிழவன் பேசினார்.அப்போது திராவிட இயக்கத்தின் வளர்ச்சி ,அறுபத்தியெழில் ஆட்சிக்கு வந்தபோது மாணவர்களாக இருந்த தாங்கள் எத்தனை மகிழ்ச்சி அடைந்தோம் , எப்படி நிலச்சுவான்தார்களும் பணக்காரர்களும் மட்டுமே எம்எல்ஏ ஆகிக்கொண்டிருந்த காலத்தில் மிக எளிய வேலை செய்துகொண்டிருந்தவர்கள், மாணவர்கள் அரசியல் அதிகாரம் நோக்கி வந்தார்கள் என்று பேசினார்.ஆனால் பின்னர் எல்லாம் எப்படி மாறி போய்விட்டது என்றும் பேசினார்.
நீதிக்கட்சியை இடது பக்கம் திருப்ப முயன்று தோற்றார் சிங்காரவேலர் என்று ந.முத்துமோகன் தன் இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற நூலில் எழுதுகிறார்.பிராமணர்களும் சைவப் பிள்ளைமார்களும் அடைந்த கல்வியும் அரசியல் அதிகாரமும் பிற இடைநிலை சாதிகளுக்கு சென்று சேர திராவிட இயக்கம் முயன்றது.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.திராவிட இயக்கம் ஏன் தென்னிந்திய மொழிகளை உள்ளடக்கிய நாட்டை பற்றிய ஒரு கனவை பேசியது என்றால் அப்போது மெட்ராஸ் மாகாணம் இருந்ததால் தான்.அப்போதைய புற உண்மை அது.அதில் தெலுங்கர்களும் , மலையாளிகளும், கன்னடர்களும் , தமிழர்களும் இருந்தார்கள்.மொழி வழி மாநிலம் உருவான பின் திராவிட இயக்கங்கள் தோன்றியிருந்தால் அவை திராவிட நாடு பற்றியே பேசியிருக்காது.அவை தமிழ்நாட்டை பறறி மட்டுமே பேசியிருக்கும்.
உண்மையில் அறுபதுகளில் மாணவர்களாக இருந்த தமிழவன் போன்றவர்கள் திராவிட இயக்கங்கள் பற்றி முக்கியமாக அண்ணாதுரை பற்றியும் கலைஞர் கருணாநிதி பற்றியும் எழுத முழுத்தகுதி உடையவர்கள்.சமீபத்தில் எஸ்.நாராயண் எழுதிய Dravidian Years என்ற புத்தகம் பற்றி நிறைய பேசப்பட்டது.அவர் பிராமணர் தான் என்று நினைக்கிறேன்.அவர் திராவிட இயக்கம் பற்றி முக்கியமாக கலைஞர் கருணாநிதி பற்றி மிக ஆரோக்கியமாக பேசுகிறார்.எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை துவங்கிய போது கலைஞர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வருகையால் கலைஞர் எதிர்மறையாக பாதிக்கப்பட்டார்.இல்லையென்றால் கலைஞரின் தொண்ணூறுகளுக்கு பின்னான ஆட்சி இன்னும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கக்கூடும்.
திராவிட முன்னேற்ற கழகத்தால் தமிழகம் தொழிற்துறையில் சமூக நீதியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.நீங்கள் பெரிய தரவுகள் இல்லாமல் கூட சில விஷயங்களை கவனிக்கலாம்.இன்றும் கர்நாடகம், ஆந்திரா, ஒரிசா, வங்காளம்,உத்தர் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து மென்பொருள் , பொறியியல் , மருத்துவம் போன்ற துறைகளில் பணிபுரியும் பலரும் உயர்த்தபட்ட ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.தமிழகத்தை சேர்ந்தவர்களில்தான் அதிகம் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இருக்கிறார்கள்.இது திராவிட இயக்கங்களால் தான் நிகழ்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் பண்பாட்டு தளத்தில் தமிழகம் ஒர் ஆன்மிக சரிவை தொடர்ந்து கண்டு வருகிறது.இதை வெறுமன உலகமயமாக்கலின் பின்விளைவு என்று மட்டும் சொல்ல முடியாது.இன்று தமிழக கிராமங்களின் , சிறுநகரங்களின் பொது இயல்பு இவை.
1.பணத்தின் மீதான பெரும் இச்சை
2.சாதிப்பற்று
3. ஊர் X சேரி என்ற பிரிவு மேலும் வலுப்பெறுவது
4. எப்போதும் மற்றமையின் மீதான காழ்ப்புணர்ச்சி.
இவை திராவிட இயக்கங்களால் உருவாகவில்லை.ஆனால் இவை திராவிட இயக்கங்களின் ஆன்மிக வரட்சியால் வலுப்பெற்றுள்ளது.
பணம், தன் மக்களுக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்பதை தாண்டி எதன் மீதும் அக்கறை அற்ற ஒரு சமூக அமைப்பின் சிக்கல்கள் இவை.அப்படியான ஒரு சமூகத்தின் அறச்சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஆன்மிக சரிவை பற்றி பேச ஒரு தலைவரோ , இயக்கமோ, துறவியோ உருவாகி வரவில்லை.ஒப்புநோக்க நவீனத் தமிழ் இலக்கியம் மட்டுமே இதைப்பற்றி பேசியிருக்கிறது.
நவீனத் தமிழ் இலக்கியத்தை தொண்ணூறுகளுக்கு முன் பகுக்கும் போது அவை அகத்திணையிலேயே வரும்.கோட்பாடுகள், தலித்தியம் ஆகியவை அறிமுகமான தொண்ணூறுகளுக்கு பின்னரே புறத்திணை கதைகளை பேசத்துவங்குகிறது நவீனத் தமிழ் இலக்கியம்.திராவிட இயக்கங்கள் பற்றி ஏன் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் பேசவில்லை என்றால் தொண்ணூறுகளுக்கு முன்னர் அதன் சட்டகத்திலேயே அது அநேகமாக இல்லை.அது அகப்பயணம் பற்றியே அக்கறை கொண்டது.பின்னர் அது மாற்றம் கொண்டது.இன்று அகத்திணை கதைகளும் புறத்திணை கதைகளும் தமிழ் இலக்கியத்தில் எழுதப்படுகிறது.
நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் பலரும் எப்போதும் வெறுப்பையும் குழு மனநிலையையும் காழ்ப்பையும் சுமந்து அலைபவர்கள்.ஆனால் நவீன தமிழ் இலக்கியம் ஆரோக்கியமானது.தமிழகத்தின் ஆன்மிக மலர்ச்சி நவீனத் தமிழ் இலக்கியத்திலிருந்து துவங்கும்.தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்திலிருந்து அல்ல.
No comments:
Post a Comment