கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய மற்றொராள் திரைப்படத்தில் கணவன்,குழந்தைகளை கைவிட்டு வேறொருவனுடன் சென்று விடுகிறாள் பெண்.பின்னர் சென்று சேர்ந்தவன் ஒரு ஸ்திரி லோலன் என்பதை அறிகிறாள்.கணவனிடம் திரும்பும் போது கணவன் கடற்கரையில் மார்பில் கத்தியால் தன்னையே குத்தி இறந்து கிடப்பதை பார்க்கிறாள்.ஒரு முறை அந்தக் கத்தியால் அவளை கொல்ல வேண்டும் என்று அவளை தேடிச்செல்லும் கணவன் அவளை கொல்லாமல் திரும்பி விடுகிறான்.தன் நண்பனிடம் பேசும் போது அவளை எப்படி கொள்வது ,அவள் ஆட்டுக்குட்டியை போன்றவள் என்கிறார்.அவளை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த மெக்கானிக்கைத்தான் கொல்ல வேண்டும் என்கிறார்.அப்போது நண்பர் யாரையும் கொல்ல வேண்டாம் , உங்கள் மனைவி வந்தால் மறுபடி ஏற்றுக்கொள்வீர்களா எனும் போது அவள் திரும்ப வரும் வாய்ப்பு இருக்கிறதா என்று முகம் மலர்கிறார்.
இறுதியில் நண்பர் அழைத்து வரும் அந்த அந்தியில் கடற்கரையில் தன்னையே குத்தி இறந்து கிடக்கிறார்.இதில் அவர் இரக்கத்தை கோரவில்லை.ஆனால் தன் மனைவியின் தவறுக்கான காரணமாக தன்னைக் கருதுகிறார்.நிஷ்களங்கம் நிரம்பிய ஆட்டுக்குட்டியின் திசைமாறிய பயணத்தின் பிறழ்வின் காரணம் தான் என்று அவர் உணர்கிறார்.அவர் தன் மனைவியின் சிலுவையை சுமக்கிறார்.
இந்தப் படத்தின் திரைக்கதை , காட்சி அமைப்புகள்,நடிப்பு, இசை அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது.ஒரு சிற்றருவி செல்வது போல எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செல்லும் திரைக்கதை.விக்ரம வேதா போன்ற திரைப்படங்களை அப்போதைக்கு ரசிக்கலாம்.ஆனால் அதில் திரைக்கதையை அமைக்க அவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு போராடி உள்ளதை நாம் உணரலாம்.மாறாக இந்தப் படத்தில் காலை எழுந்து காபி குடித்து விட்டு குளித்து காலை உணவை அருந்தும் போது துள்ளி குதித்து உங்கள் மடியில் அமரும் நாய்க்குட்டி போல அத்தனை இயல்பாக இருக்கிறது திரைக்கதை.
சத்யஜித் ரே இயக்கிய சாருலதா திரைப்படத்தில் சாருலதா அன்னையாக விரும்புகிறாள்.ஒரு உக்கிரமான காதலுக்கு அவள் மனம் அவாவுகிறது.ஆனால் இதில் அந்தக் கணவன் பத்திரிக்கையே கதியாக இருப்பதும் காட்டப்படுகிறது.ஏதோ ஒரு வகையில் இவைகளுக்கு மத்தயில் முடிச்சு போடப்படுகிறது.
மற்றொராள் படத்தில் அந்தப் பெண் கடற்கரையில் கணவனுடன் அமர்ந்திருக்கும் போது கொஞ்சிக் கொண்டு செல்லும் இளஞ் ஜோடிகளை பார்த்து கற்பனையில் திளைக்கிறாள்.அவளும் கைகளை பற்றிக்கொண்டு கடற்கரையில் தன் காதலனுடன் குதூகலித்து அவன் தோளில் வெட்கிச் சாய்ந்து பரவசமடைய விரும்புகிறாள்.
இரண்டு திரைப்படங்களிலும் கணவன் காதலை கொண்டாடுபவனாக இல்லை.அவளின் பிறழ்வுக்கு அவனின் முசுடுத்தனம் காரணமாகிறது.
சமீபத்தில் வந்த தரமணி திரைப்படத்தில் கணவனை தவிர்த்து வேறு ஆண்களுடன் பெண்கள் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான காரணம் கணவனின் ஆணாதிக்க மனோபாவம் என்று அவரே சொல்லிவிடுகிறார்.நிச்சயம் மேலே சொன்ன இரண்டு திரைப்படங்களின் subtlety தரமணியில் இல்லை.ஆனால் இந்தப் படங்களில் ஒரு பொதுச்சரடு உள்ளது.அது ஒரு பெண்ணின் சிலுவையை ஆணின் தோளில் ஏற்றுவது.
ஒரே கடல் என்ற மலையாளப் படத்தில் அந்தப் பெண்ணுக்கு மற்றொருவரை பிடித்துவிடுகிறது.அவளின் பிறழ்வுக்கு அவளின் கணவன் காரணம் என்று சொல்லப்படவில்லை.அதே போல அசோகமித்திரனின் மானசரோவர் நாவலில் ஜம்பகத்தின் பிறழ்வு கோபால் மீது ஏற்றப்படவில்லை.ஏன் அவரவர் சிலுவையை அவரவர் சுமக்கக்கூடாது.
No comments:
Post a Comment