இடதுசாரி கட்சிகளின் வீழ்ச்சி


சீதாராம் யெச்சூரிக்கும் பிரகாஷ் காரத்துக்கும் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியை எப்படி எதிர்கொள்வது என்பதில் வேறுபாடு ஏற்பட்டு பிரகாஷ் காரத் தரப்பின் முன்வரைவு அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது.காங்கிரஸூடன் எவ்வித கூட்டணியும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் பிரகாஷ் காரத் தரப்பின் நிலைப்பாடு.காரத் தரப்பு என்பது கேரளத்தின் தரப்பு.கேரளத்தை மட்டுமே கணக்கில் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்களுக்குத்தான் இப்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆதரவு இருக்கிறது.இனி வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்றது.காங்கிரஸூடன் இணைந்து திரிணாமூல் காங்கிரஸை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை பற்றி பிரகாஷ் காரத் தரப்பு கவலைப்படவில்லை.

மார்க்ஸிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட கேரளத்தின் மாநில கட்சி போல ஆகி்விட்டது.திரிபுராவில் அவர்கள் வெல்லாவிட்டால் கேரளம் மட்டுமே அவர்களுக்கு இருக்கும்.எதன் பொருட்டும் அதை இழந்து விடக்கூடாது என்பதே பிரகாஷ் காரத் தரப்பினரின் பதற்றம்.ஒரு வலுவான அரசியல் தரப்பாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள், காரத்தின் அகங்காரத்தால் 123 ஒப்பந்தத்தின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறியது.ஆட்சி கவிழ்ந்து விட வேண்டும் என்று காரத் விரும்பினார்.சமாஜ்வாதி கட்சி ஆதரவு தந்தது.அப்போது இடதுசாரிகளுக்கு நாற்பதுக்கும் மேலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.அதன் பின் தொடர்ச்சியாக இடதுசாரிகள் வலுவிழந்து வருகிறார்கள்.
இப்போது கூட மார்க்ஸிஸ்ட் கட்சியினருக்கு வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.எப்போதோ சீனப்போரின் போது எழுந்த கருத்து வேறுபாடால் இப்போதும் பிரிந்து இருப்பது அவசியமற்றது.ஆனால் அவர்கள் இனி இணைந்தாலும் பெரிய வித்யாசம் எதுவும் வந்துவிடும் என்று தோன்றவில்லை.அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் அதிக பட்சம் ஐந்து இடங்களில் வென்றால் அதிசயம்.

இன்று ஆம் ஆத்மி கட்சியினருக்கு இருக்கும் ஆதரவு கூட இடதுசாரி கட்சிக்கு இல்லை.மாறிவரும் பொருளாதார சூழலில் பெருநகரங்களே வேலைவாய்ப்புக்கான வழி. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வராவிட்டால் இங்கு படித்து வரும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது. சிறுநகரங்களும் கிராமங்களும் வேலைவாய்ப்புகான வழிகள் அற்று இருக்கிறது. பெருநகரத்தின் உருவாக்கம் சாதிகளை அழிக்கும் அதே நேரத்தில் சாதிகளில் சென்று மக்கள் இணைந்து கொள்வதும் நடக்கிறது.இது ஏன், இவை எல்லாவற்றிலும் இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன என்று விவாதித்து , இடதுசாரிகள் தங்கள் கொள்கைகள் முழுவதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஆனால் அங்கு சின்ன விவாதம் கூட நடக்கவில்லை.இடதுசாரிகள் இனி பாராளுமன்றத்தில் வலுவான தரப்பாக ஒலிக்க பல பத்தாண்டுகள் ஆகும்.இதில் பிரகாஷ் காரத் தரப்பு ஏற்கப்பட்டால் என்ன, சீதாராம் யெச்சூரியின் தரப்பு ஏற்கப்பட்டால் என்ன.கேரளம் தாண்டி இதனால் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை.ஆனால் பிரகாஷ் காரத் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக வந்தது அந்தக் கட்சியின் துரதிரிஷ்டம்.சீதாரம் யெச்சூரி வந்தும் எந்த மாற்றமும் நிகழவில்லை.மறுபடியும் காரத் வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.அவர் அதன் மூடு வி்ழாவை நடத்தி முடிப்பார்.

No comments: