தமிழர்கள்




ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தமிழர் X தமிழர் அல்லாதோர் என்ற இருமையை முன்வைத்து செய்யப்படும் விமர்சனங்கள் அதன் தீவிரத்தை அடையும். தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டில் பணக்காரர்களாக இருக்கும் போது தமிழன் தெருவில் நிற்கிறான் என்று ஒரு முறை பழ.நெடுமாறன் ஏதோ ஒரு பேட்டியில் பேசியது நினைவில் இருக்கிறது.கிட்டத்தட்ட இப்படியான ஒரு பிரச்சாரம் தான் தமிழ் தேசியவாதம் பேசும் கட்சிகளால் முன்வைக்கப்படும்.இதற்கும் திராவிடர்கள் X ஆரியர்கள் என்று முன்வைக்கப்பட்ட இருமையும் அந்த ஆரியர்கள் என்பது பிராமணர்கள் என்றும் அவர்கள் அனைத்து அதிகாரத்தையும் பெற்று வாழும் போது திராவிடர்கள் அதாவது பிராமணர்கள் தவிர்த்த பிற சாதி இந்துக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது போன்ற ஒன்று தான் இதுவும்.

இப்போது இவர்கள் உருவாக்கும் இந்த இருமை செல்லுபடியாகுமா என்பதுதான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் முக்கிய விஷயமாக இருக்கும்.அது தான் நாம் தமிழர் போன்ற கட்சிகளின் துருப்புச்சீட்டு.இது மக்கள் மத்தியில் செல்லுபடியாகுமா என்பது யாருக்கும் தெரியாது.மற்றமையின் மீதான துவேஷம்தான் எல்லா தேசியவாதங்களும்.ரஷ்ய தேசியவாதம் அது ஐரோப்பா அல்ல என்பதில் இருக்கிறது.

தமிழகத்தில் தெலுங்கர்கள்,மலையாளிகள்,கன்னடர்கள்,உருதுவை தாய் மொழியாக கொண்ட முஸ்லீம்கள்,செளராஷ்டிரர்கள்,மார்வாடிகள்,ஆங்கிலோ இந்தியர்கள் என்று தமிழை தவிர்த்த பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.இவர்கள் யாரும் தமிழகத்தின் முதல்வராக வரக்கூடாது என்பது முட்டாள்தனம்.அரசியல் அதிகாரத்தை அடைவது அல்ல,அடைய இயலும் என்ற உரிமைதான் ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமானது.அந்த உரிமை இல்லை என்று சொல்லும் போது அவர்கள் இரண்டாம்தர குடிமகன்கள் ஆகிறார்கள்.

No comments: