தமிழர்கள்




ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தமிழர் X தமிழர் அல்லாதோர் என்ற இருமையை முன்வைத்து செய்யப்படும் விமர்சனங்கள் அதன் தீவிரத்தை அடையும். தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டில் பணக்காரர்களாக இருக்கும் போது தமிழன் தெருவில் நிற்கிறான் என்று ஒரு முறை பழ.நெடுமாறன் ஏதோ ஒரு பேட்டியில் பேசியது நினைவில் இருக்கிறது.கிட்டத்தட்ட இப்படியான ஒரு பிரச்சாரம் தான் தமிழ் தேசியவாதம் பேசும் கட்சிகளால் முன்வைக்கப்படும்.இதற்கும் திராவிடர்கள் X ஆரியர்கள் என்று முன்வைக்கப்பட்ட இருமையும் அந்த ஆரியர்கள் என்பது பிராமணர்கள் என்றும் அவர்கள் அனைத்து அதிகாரத்தையும் பெற்று வாழும் போது திராவிடர்கள் அதாவது பிராமணர்கள் தவிர்த்த பிற சாதி இந்துக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது போன்ற ஒன்று தான் இதுவும்.

இப்போது இவர்கள் உருவாக்கும் இந்த இருமை செல்லுபடியாகுமா என்பதுதான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் முக்கிய விஷயமாக இருக்கும்.அது தான் நாம் தமிழர் போன்ற கட்சிகளின் துருப்புச்சீட்டு.இது மக்கள் மத்தியில் செல்லுபடியாகுமா என்பது யாருக்கும் தெரியாது.மற்றமையின் மீதான துவேஷம்தான் எல்லா தேசியவாதங்களும்.ரஷ்ய தேசியவாதம் அது ஐரோப்பா அல்ல என்பதில் இருக்கிறது.

தமிழகத்தில் தெலுங்கர்கள்,மலையாளிகள்,கன்னடர்கள்,உருதுவை தாய் மொழியாக கொண்ட முஸ்லீம்கள்,செளராஷ்டிரர்கள்,மார்வாடிகள்,ஆங்கிலோ இந்தியர்கள் என்று தமிழை தவிர்த்த பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.இவர்கள் யாரும் தமிழகத்தின் முதல்வராக வரக்கூடாது என்பது முட்டாள்தனம்.அரசியல் அதிகாரத்தை அடைவது அல்ல,அடைய இயலும் என்ற உரிமைதான் ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமானது.அந்த உரிமை இல்லை என்று சொல்லும் போது அவர்கள் இரண்டாம்தர குடிமகன்கள் ஆகிறார்கள்.

தமிழகம்

















 

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009யில் வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்.இவர் இங்கிலாந்தில் வாழ்கிறார்.இவர் நோபல் பரிசு பெற்ற போது இவர் சிதம்பரத்தை சேர்ந்தவர், பரோடாவில் படித்தவர் என்பது பல இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.அப்போது சென்னைப் பல்கலைகழகத்திற்கு ஏதோ ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்தார்.அவரை பார்க்க நிறைய கூட்டம்.அன்றைய பேச்சில் அவர் இதே சென்னைப் பல்கலைகழகத்தில் பேச நான் சென்ற ஆண்டும் வந்தேன்.அப்போது கூட்டமே இல்லை.இப்போது ஒரு அகாடமி எனக்கு விருது கொடுத்தவுடன் ஏன் இப்படி கூட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.மேலும் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு ஒன்றில் எனக்கு நிறைய வாழ்த்து மின்னஞ்சல்கள் வருகிறது.இவர்கள் எல்லாம் யார் , இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள், இவர்களின் மின்னஞ்சல்கள் குவிவதால் முக்கியமான மின்னஞ்சலகளை தவறவிடுகிறேன் என்று புலம்பினார்.யாரோ ஒரு ஆசிரியர் சிதம்பரத்தில் வெங்கட்ராமன் என்னிடம் பள்ளியில் படித்தார் என்று நினைவுபிசகாக சொன்னதும் நான் சிதம்பரத்தில் படிக்கவே இல்லை என்று சொல்லி இப்படியான உரிமை கோருதல்களை நக்கலடித்தார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விஞ்ஞானி.அதிகம் போனால் ஒரு மாதம் அவர் மீது ஊடக வெளிச்சம் இருந்திருக்கும்.அதைக்கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவருடைய அத்தனை பேச்சிலும் ஒரு Condescending attitude இருந்ததை பார்க்க முடிந்தது.ஒரு அகாடமியின் அங்கீகாரத்தின் பின் மட்டும் ஏன் என்னை மொய்க்கிறீர்கள், இதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்ற கேள்வி முக்கியமானது தான் .அப்படியென்றால் உங்கள் அக்கறைகள் விஞ்ஞானத்தின் மீதா அல்லது அகாடமியின் விருதின் மீதா என்ற கேள்வி அதை உணர்பவரின் சுயத்தை சீண்டக்கூடியது.நமது இந்திய சமூகம் பணம்,பதவி,செளகரியங்கள்,விருதுகள்,அங்கீகாரம் இவற்றிற்கு அளிக்கும் கெளவரத்தை அதிகாரத்தை பெறாத அறிவுக்கு அளிப்பதில்லை.ஆனால் அதே இந்திய சமூகம் மேலே சொன்னவற்றை துறந்து வாழ்பவர்களை வணங்குகிறது.இது இந்திய மனதின் உளவியல்.இதைக்கூட அவரால் புரிந்து கொண்டு சாதாரணமாக நடந்துகொள்ள முடியவில்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது,ஏனேனில் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று எஸ்.பி.உதயகுமார் சொல்கிறார்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்ற ஒரு விஞ்ஞானி வருவதை விட ரஜினிகாந்த் போன்ற ஒரு நடிகர் வருவது ஆரோக்கியமானது.ஒரு விஞ்ஞானிக்கு சோதனைக்கூடத்திற்கு அப்பால் சமூகத்தை பற்றி தெரிந்ததை விட நடிகர்களுக்கு ஒரளவு தெரியும்.ஒரு இஸ்ரோ விஞ்ஞானியை விட, இயற்பியல் அறிஞரை விட , மருத்துவரை விட வழக்கறிஞர்கள்,வியாபாரிகள்.கலைஞர்கள்,செயல்பாட்டாளர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது.அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் கூட்டு உளவியல் புரிகிறது,தெரிகிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் என்ன பெரிய மாற்றம் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் எப்படியும் தமிழகம் ஒரு வலுவான நல்லாட்சியை பெற வேண்டும்.கடந்த பத்து வருடங்களில் தேங்கியிருக்கும் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல ஸ்டாலின் வந்தால் நன்றாக இருக்கும்.ஆனால் அவர் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளாமல் பழம் கனிந்து தன் மடியில் விழ வேண்டும் என்று எதிர்பார்கிறார்.பழம் கனியும் நேரத்தில் வேறு யாராவது வந்து தட்டி பறிப்பது இயல்பானது.ஒரு சிக்கலான தருணத்தில் தன் வியூகங்களின் வழி அதிகாரத்தை அடைபவர்களிடம் தான் கூட்டம் தலை வணங்கும்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் போராடி தன் இடத்தை பிடித்தார்.தேர்தலில் சில இடங்களில் வென்றார்.அதிமுகவை கைப்பற்றினார்.ஜானகி தன் அரசியல் வாழ்வை அத்தோடு முடித்துக்கொண்டார்.குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்காக அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியாலும்,பாட்டாளி மக்கள் கட்சியாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.அவர் மீது பல வழக்குகள்.அனைத்திலிருந்தும் போராடி வென்றார்.தன் கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.தன்னை எதிர்த்த கட்சிகளுடன் சமரசம் பேசவில்லை.அவர் வழக்குகளிலிருந்து வென்றவுடன் திமுகவில் சேர்ந்தார்.அங்கு தன் வளர்ச்சி தடுக்கப்படுவதை புரிந்துகொண்டு காங்கிரஸில் சேர்ந்தார்.

மன அழுத்தம் தரும் நெருக்கடியான சூழலில் அதை போராடி வெல்பவர்தான் அரசியலில் வெல்கிறார்.நடிகர்களின் மோகத்தால் தமிழகம் சீரழிகிறது என்கிறார்கள்.ஒன்றாக இருந்த ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சியின் முக்கிய காரணம் தெலுகு தேசம் கட்சி.அதை உருவாக்கியவர் என்.டி.ராமராவ்.இன்று அந்தக் கட்சி பிரிந்துவிட்ட ஆந்திரத்தையும் அடுத்த பத்து வருடங்களில் நன்கு வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றிவிடும்.

ஸ்டாலின் தனக்கு நிகராக கட்சியில் யாரும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.அது எல்லா தலைவர்களுக்கும் இருக்கும் எண்ணம் தான்.அதில் தவறில்லை.ஆனால் தன்னால் மட்டுமே தலைமையில் இருக்க முடியும் என்கிறபடியான சமிக்ஞைகளைஅவர் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.இன்றைய ஆட்சி சூழலில் பல்வேறு போரட்டங்களை அவர் செய்யலாம்.ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கலாம்.கட்சியை உடைக்க
முயலலாம்.அவர் எதையும் செய்ய தயங்குகிறார்.அவர் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது கடினம்.தமிழகத்தில் வேறு தலைவர்கள் இல்லை.ஸ்டாலின் தவிர்த்து ரஜினிகாந்த் மட்டுமே மக்கள் அறிந்த கட்சி தலைவராக அடுத்த சட்டமன்ற தேர்தலில் இருப்பார்.டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார்.ஆனால் அவரால் ஆர்.கே.நகரின் வெற்றியை தமிழகம் முழுக்க விரிக்க இயலாது.அவரை மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.விடுதலை சிறுத்தைகள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது அடுத்த தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்.பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.வழக்கம் போல கடலூர்,விழுப்புரம்,தருமபுரி,சேலம் தாண்டி அவர்களால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாது.அவர்களால் தங்களின் சாதிய அடையாளத்தை தாண்டி வரவே முடியாது.

பாரதிய ஜனதா கட்சியுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைக்கப்போவதில்லை.அதனால் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சியை கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை சந்திக்க பா.ஜ.க முயலாது.டிடிவி தினகரன் பக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.அப்படி சென்றால் ஆட்சி கவிழும்.தேர்தல் சீக்கிரம் வரலாம்.காங்கிரஸூம் திமுகவும் கூட்டணியில் தொடரலாம்.அல்லது அந்தக் கூட்டணி மாறலாம்.எப்படியிருந்தாலும் திமுகவிற்கு முக்கிய கூட்டணி கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.ரவிக்குமார் ரஜினிகாந்தை விமர்சித்து பேசியிருந்தாலும் திருமாவளவன் நல்ல விதமாகத்தான் பேசியிருக்கிறார்.எதுவும் நடக்கலாம்.ரஜினிகாந்த் சில இடங்களை வெல்லக்கூடும்.ஆட்சியை பிடிப்பாரா என்று யாருக்கும் தெரியாது.பார்க்கலாம்.தமிழகத்தில் இந்த ஆண்டில் நல்லாட்சி மலரட்டும்.