இந்த வருடத்தின் தொடகத்தில்
வேலை இல்லை.பிப்ரவரி மாதத்தில் சென்னையில் வேலை கிடைத்தது.கடந்த மாதம் பெங்களூரில்
வேறு வேலை கிடைத்தவுடன் இங்கு வந்து விட்டேன்.இந்த வேலை மாற்றத்தின் போது ஒரு மாதம்
இடைவெளி கிடைத்தது.அப்போது வாரத்தின் சில நாட்கள் எல்எல்ஏ நூலகம் சென்று வந்தேன்.தினமும்
இரண்டு மணி நேரம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் வாசித்தேன்.தொடர்ந்து ஒரு வருடம் அல்லது
இரண்டு வருடம் இப்படி எந்த வேலைக்கும் செல்லாமல் வாசித்தால் நன்றாக இருக்கும் என்று
தோன்றியது.ஏன் இந்த நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே ஏற்படவில்லை என்று
எரிச்சலாக இருந்தது.எழுத்தா அல்லது வேலையா எதை முதன்மையாக கொள்வது என்ற எண்ணம் இந்த
வருடம் முழுதும் இருந்தது.நிறைய குழம்பினேன்.வேலை என்று முடிவு செய்தேன்.வேலை மாறி
பெங்களூரு வந்தேன்.
இந்த வருடம் "நடிகர்" என்ற
சிறுகதை எழுதி தளம் இதழுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.சிறுகதை தொகுப்பை கொண்டுவரலாம்
என்று ஆசைப்பட்டேன்.மணல் வீடு ஹரிகிருஷ்ணனிடம் பேசினேன்.எட்டு சிறுகதைகளின் பக்கங்கள்
64 கூட வரவில்லை என்பதால் இன்னும் ஐந்தாறு கதைகளை எழுதியபின் கொண்டுவரலாம் என்றார்.ஆக,நான்
சிறுகதை தொகுப்பை கொண்டுவர ஐந்தாறு வருடங்கள் கூட ஆகலாம்! தஸ்தாவெய்ஸ்கியின் பதின்
நாவல் இந்த வருடம் வாசித்த முக்கிய புத்தகம்.என்னில் ஆழமான பாதிப்பை செலுத்திய புத்தகம்.
வாழ்க்கையில் எதுவுமே நிலையானதல்ல என்ற எண்ணம் இந்த வருடம் வலுப்பட்து.இந்த
எண்ணம் எனக்குள் ஏற்படும் பல்வேறு பதற்றங்களை குறைத்தது.நகுலன்-அசோகமித்திரன்-ஆல்பர்
காம்யூ இவர்களின் புத்தகங்களை வாசித்தது வழியாக இந்த வாழ்வு பற்றிய ஒரு சித்திரம் எனக்குள்
பதிந்துவிட்டது.வாழ்வின் அபத்தம்,அது உருவாக்கும் அடையாளமின்மை என்கிற ஆன்மிக தரிசனம்
அதன் வழி மட்டுமே அனைத்தையும் பார்ப்பது என்ற மனப்பதிவு உருவாகிவிட்டது.இது ஒரு வகையில்
என் தேடலை நிறுத்திவிட்டது.எனக்குள் எப்போதும் ஒரு அவதி இருந்தது.இப்போது அது இல்லை.அதனால்
பெரிதாக எழுதவும் தோன்றவில்லை.பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் விஷ்ணுபுரம் பற்றி எழுதிய
விமர்சன நூலில் பெளத்தம் குறித்த குறிப்பில் மறுபிறவி பற்றி எழுதியிருந்தார்.அது சட்டென்று
மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.வேறு ஒரு பார்வை வழியாக இந்த வாழ்வை பார்க்க வேண்டும்
என்ற எண்ணம் ஏற்படும் போது மட்டுமே கதைகள் எழுத முடியும் என்று தோன்றுகிறது.பார்க்கலாம்.
நான் காதலித்த பெண்னை கடுமையாக
தாக்கி ஒரு கட்டுரையை இந்த வருடத்தில் எழுதியிருந்தேன்.அதை எழுதியிருக்கக்
கூடாது என்று சில நேரங்களில் நினைத்துக்கொள்வேன்.ஆனால் எனக்குள் இருந்த எரிச்சலை அந்தக் கட்டுரையின்
வழி கடந்துவிட முடிந்தது என்றும் இப்போது புரிந்துகொள்கிறேன்.வேறு வழி இருக்கவில்லை.
என் மகன் கெளதம் மீது அதீத
பற்று இந்த வருடத்தில் ஏற்பட்டது.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment