நமது பெருநகரங்கள்






பாலசுப்ரமணியன் முத்துசாமி மணல் வீடு இதழில் “எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று சூரிய ஒளி மின்சாரம் குறித்து எழுதியிருக்கிறார்.அமுல் லால் பகதூர் சாஸ்திரியால் விரிவாக்கம் கண்டது போல கேடா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள சூரிய ஒளி உற்பத்தியாளர் கூட்டுறவு இந்தியா முழுக்க விரிவாக்கம் பெற வேண்டும் என்கிறார்.இது உழவர்களுக்கு உபரி வருமானத்தை அளிக்கும் என்கிறார்.முக்கியமான கட்டுரை.இந்த சூரிய ஒளி மின்சாரம் Production by masses and not mass production, இது காந்தியத் தொழில்முறை என்று சொல்கிறார்.இன்று உற்பத்தியாகும் மின்சாரத்தில் விநியோகம் செய்யும் போது வீணாகிறது , இதை சூரிய ஒளி மின்சார உற்பத்தி மூலம் தடுக்க முடியும் என்பதை முக்கியமான விஷயமாக சொல்கிறார்.வருங்காலங்களில் சூரிய ஒளி மின்சாரம் அந்தந்த மாவட்ட அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மாவட்ட அளவில் விநியோகம் செய்யப்படுமானால் அது கிராமங்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்க முக்கிய வழியாக அமையும்.அனல் மின் நிலையங்களும்,அணுமின் நிலையங்களையும்தான் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.இரண்டும் அதிக பொருட்செலவை கோருபவை.சூரிய ஒளி மின்சார உற்பத்தி கிராமத் தொழிலாக உருவாக வர முடியும் என்பது பாலசுப்ரமணியன் கட்டுரையின் முக்கிய விஷயம்.கிராமங்களும் சிறுநகரங்களும் தன்னளவில் முழுமையை எய்துவது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு முக்கியம்.கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என்றால் சிறுதொழில்கள்,விவசாயம் இவைகளை செய்ய அது பெரிய அளவில் உதவும்.இன்று பெருநகரங்களில்தான் தொழில் நிறுவனங்கள் உருவாகுகின்றன.இந்தியா அமெரிக்காவோ,ஐரோப்பாவோ,சீனாவோ அல்ல.இது இந்தியா.இந்தியா பெரு நகரங்களில் வாழ முடியாது.125 கோடி மக்கள் தொகை கொண்ட தேசம் பெருநகரங்களில் குவிய முடியாது.இதை முன்னறிவித்தவர் காந்தி.அவரின் ஹிந்து சுவராஜ் நூலில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

கிராமங்கள் தங்கள் அளவில் பொருள் ஈட்டக்கூடியவையாக இருக்க வேண்டும்.அங்கு வளரும் குழந்தைகள் அந்த மாவட்டத்திலேயே தங்களுக்கான வேலை வாய்ப்பை பெற முடிய வேண்டும்.அவர்கள் சென்னைக்கும் , பெங்களூருக்கும்,புனேவுக்கும்,மும்பைக்கும் செல்வது குறைய வேண்டும்.அமுல் மூலம் 1 லட்சம் கோடி வருவாய் ஆண்டு தோறும் கிடைக்கும் தொழிலாக இருக்கிறது என்கிறார் பாலசுப்ரமணியன்.இதற்கு குரியனுக்கு பாரதரத்ணா கிடைத்திருக்க வேண்டும்.சூரிய ஒளி மின்சாரத்தின் முக்கிய விஷயம் நிலம்.யார் நிலம் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் சம்பாதிக்க முடியும்.ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பஞ்சமி நில மீட்பு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.நிலமற்றவர்களுக்கு நிலங்கள் கிடைக்க வேண்டும்.அப்போது இது போன்ற சூரிய ஒளி மின்சார திட்டங்கள் அதனுடன் கூடிய விவசாயம்,கால்நடை வளர்ப்பு பல மக்களுக்கு சுய வேலை வாய்ப்பை உருவாக்கும்.கிராமங்களிலிருந்து பெருநகரங்களை நோக்கி வர வேண்டிய அவஸ்தையை குறைக்கும்.இன்றும் சிலர் 100 ஏக்கர் விவசாய நிலத்தை வைத்திருக்கிறார்கள்.எதற்காக ஒருவருக்கு அத்தனை நிலம் இருக்க வேண்டும்.நில உச்சவரம்பு சரியான முறையில் அமல்படுத்தப்பட்டு அவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு நிலமற்றவர்களுக்கு பிரித்து தரப்பட வேண்டும்.

இன்று நமது பொருளியல் முறை முழுக்க பெருநகரங்களை சார்ந்தே இருக்கிறது.மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தில் பெருநகரங்கள் மக்கள் நெருக்கடியால் திணறிக்கொண்டிருக்கிறது.மறுபுறம் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தொகை குறைகிறது.இது அபத்தமான விஷயம்.கோசாம்பி இந்தியா வரலாற்றை பற்றி எழுதும் போது இங்கு மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் இந்திய கிராமங்கள் மாறவே இல்லை.அங்கிருந்த மக்களின் வாழ்க்கை முறை மாறவே இல்லை.அந்தந்த கிராமங்கள் தன்னிறைவாக இருந்ததால் எல்லோருக்கும் தேவையான இயந்திரங்கள் என்று எதையும் உருவாக்கும் அவசியம் இருக்கவில்லை.எல்லோருக்குமானது என்று எதையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லாததால் இங்கு அறிவியல் வளரவில்லை என்கிறார்.அவர் இந்தியா தொழில் துறையில் அறிவியலில் ஐரோப்பா போல வளராமல் போனதற்கான காரணத்தை சொல்கிறார்.ஆனால் இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவாக இருந்தன என்பது முக்கிய விஷயம்.இந்தியா ஏன் பெருநகரங்களில் வாழ வேண்டும்.ஏன் அவர்கள் சிறுநகரங்களையும் கிராமங்களையும் விடுத்து பெருநகரங்களுக்கு குடிபெயர வேண்டும்.பெருநகரங்கள் வளரும் போது பெருந்தொழில்கள் வரவேண்டியிருக்கிறது.பெருந்தொழில்கள் வரும் போது மின்சாரம் பெரிய அளவில் எங்கோ உற்பத்தி செய்யப்பட்டு விநியோகப்பட வேண்டியிருக்கிறது.அந்த பெருநகரத்தில் வேலை செய்வோருக்கு வேலை செய்வோர் வர வேண்டியிருக்கிறது.சாலைகள்,தண்ணீர்,நிர்வாகம்,மருத்துவம்,பள்ளிகள்,கல்லூரிகள்,சுகாதாரம்,உள்கட்டமைப்பு,கூடு மையங்கள்,ரெயில் போக்குவரத்து,உணவகங்கள்,கோயில்கள்,குடியிருப்புகள்,அங்காடிகள் என்று எல்லாமே அங்கு வருகிறது.மனித வளம் அங்கு அதிகம் இருப்பதால் தொழில் தொடுங்குவோர் அங்கு வருகிறார்கள்.நிறுவனங்கள் அங்கு அதிகம் வருவதால் மனித வளம் அங்கு குவிகிறது.இது ஒரு முரணியக்கம் போல நிகழ்கிறது.இன்று பெங்களூரில் ஒரு கிலோ மீட்டர் கடக்க பத்து நிமிடம் எடுக்கிறது.அந்த நகரமே திணறிக்கொண்டிருக்கிறது.

இன்று ஐடிதுறையே மாறிவிட்டது.அவுட்ஸோர்ஸிங் என்ற விஷயம் மெல்ல காலாவதியாகி வருகிறது.இன்னும் இருபது வருடங்களில் அசெம்பளி லைன் வேலைகள் முழுவதும் மனிதர்கள் தேவையற்றதாகி விடும்.பிபிஒ,கால் சென்டர் போன்ற வேலைகளுக்கு மனிதர்கள் தேவைப்பட மாட்டார்கள்.கணினித்துறையில் பொறியாளர் என்பவர் அதன் சரியான அர்த்தத்தில் வேலையில் இருப்பார்.ஏதோ ஒரு நிரலாக்க மொழி தெரிந்திருந்தால் போதும் என்ற நிலை போய் , கணினி அறிவியல் பற்றிய சிறப்பான பொது அறிவும் புதிதாக வரும் நிரலாக்க மொழியை எளிதில் கற்பவரும் தான் அந்த துறையில் இருக்க முடியும்.மேலும் நிறுவனங்கள் தங்களின் ஐடிக்கான விலையை(cost) எந்தளவு குறைக்க முடியுமோ அந்தளவு குறைக்க முனைகிறார்கள்.விலை குறைக்க குறைக்க லாபம்.மனிதர்களே தேவையில்லை என்ற நிலை வந்தால் நிறைய லாபம்.அதனால் அவுட்ஸோர்ஸிங் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவுட்ஸோர்ஸ் செய்கிறார்கள்.மறுபுறம் நிறுவனங்களிடமிருந்து பணியை பெற்று செய்து தரும் அவுட்ஸோர்ஸிங் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் லாபத்தை காட்ட விரும்புகிறார்கள்.இரண்டுமே ஒரே நேரத்தில் சாத்தியமில்லை.மெல்ல ஐடித்துறை நிறைய மாற்றங்களை சந்திக்கும்.உண்மையிலேயே கணினித்துறையில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே இனி அதை கற்பது சரியாக இருக்கும்.அப்போதுதான் அவர்களால் அதில் தாக்கு பிடிக்க முடியும்.

ஏதேனும் ஒரு துறையில் அதிக பொருள் ஈட்ட முடியும் என்றால் நாம் முட்டி மோதி அங்கு செல்கிறாம். மிக அற்புதமான அறிவுத்திறன் படைத்த பலர் ஏதேனும் ஒரு நிரலாக்க மொழியை கற்று அதில் தங்கள் காலத்தை கழிப்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.இங்கு ஒருவர் இயற்பியல் படிக்க வேண்டும் என்றால் அவருக்கு அதற்கான ஆதரவு குடும்ப சூழலில் கூட கிடைப்பதில்லை.எது பொருள் ஈட்டுமோ அதுவே நமக்கான பயிற்சி என்று முடிவு செய்கிறோம்.அதனால் அதில் ஒருவன் தன் முழு ஆற்றலை செலுத்த முடியவில்லை.நம் சமூகம் பொருள் ஈட்டுவது , அதிகாரத்தை அடைவது போன்றவற்றில் காட்டும் ஆர்வம் வேறு எதிலும் காட்டுவதில்லை.இன்று பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் அவர்களின் மாலை நேரங்களை எப்படி கழிப்பது என்று அவர்களுக்கு தெரிவதில்லை.தொலைக்காட்சியின் முன் அமரந்தும்,கணினி முன் அமர்ந்தும்,மொபைலில் எதையாவது பார்த்துக்கொண்டும்,மதுக்கடைகளில் அமர்ந்தும் கழிகிறது காலம்.அறிவியல் ,கலைத்துறைகளில் படிப்பது ஏதோ தேவையற்றது போல பலரும் இன்றும் பார்க்கிறார்கள்.இவைகளுக்கு பின்னால் இருப்பதெல்லாம் பொருள் ஈட்டுவதும் அதிகாரத்தை அடைவதும்தான்.இயல்பாக எளிமையாக வாழ்வது,தனக்கு பிடித்த வேலையை செய்வது என்று எதுவுமே இங்கு இல்லை.படித்து வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதும் அதிகாரத்தை அடைவதும் ஒரு புறம் என்றால் , அந்த வழியில் இல்லாமல் வேறொரு வழியில் அதே பொருளை ஈட்டுவதும் அதிகாரத்தை அடைவதும் என்ற வழியும் நம் சூழலில் இருக்கிறது.பெரு நகரங்கள்,பெருந் தொழில்கள் இதை இந்த இரண்டு தரப்புமே தேர்வு செய்கின்றன.

எந்த ஒரு துறையை மட்டுமே நம்பி ஒரு நகரம் வளர்வது ஆரோக்கியமற்றது.(பெங்களூர் போல).உண்மையில் ஒரளவுக்கு மேல் ஒரு நகரத்தை வளர அனுமதிக்கக்கூடாது.சாலிக்கிராமத்தில் இருபதாயிரத்திற்கு ஒரு சென்ட் என்று வாங்கிய இடங்களில் எல்லாம் ஒரு சதுர அடி பத்தாயிரம் போகிறது.இது என்ன மாதிரியான வளர்ச்சி என்று புரியவில்லை.இங்கு இருப்பது என்ன மாதிரியான பொருளாதார கொள்கைகள் என்றும் தெரியவில்லை.

இந்தியாவை நேருவைவிட,அம்பேத்கரை விட காந்திதான் சரியாக புரிந்து கொண்டார் என்று தோன்றுகிறது.காந்தி பழமையில் இந்தியாவின் பொற்காலத்தை தேடவில்லை.அவர் முன்வைத்த பொற்காலம் உண்மையில் இந்தியாவில் எப்போதும் இருந்ததில்லை.சாதிகளற்ற பெருநகரங்களை விட சாதிகளற்ற கிராமங்கள் மேலானவை.எனக்கு காந்தியின் பொருளியல் கொள்கைகள் தான் முக்கியம் என்று தோன்றுகிறது.மற்றபடி அவர் ஒரு மேல்சாதி இந்துவை குற்றவுணர்வு கொள்ளச் சொல்லும் விஷயங்கள் ஐரோப்பிய பார்வை கொண்டது என்று நினைக்கிறேன்.அந்த இடத்தில் நாம் அம்பேத்கரை நோக்கி செல்ல வேண்டும்.அது அமைப்பின் பிரச்சனை.அமைப்பின் சிக்கல்களை சரி செய்வதன் மூலம் மட்டுமே நாம் சாதிய சிக்கலகளை சரி செய்ய முடியும்.குற்றவுணர்வு கொள்வதால் அல்ல.ஆனால் இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் Feudal மனநிலை உள்ளது.ஒரு அலுவலகத்தில் நமக்கு கீழ் வேலை செய்பவரை நாம் நடத்தும் விதம் நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டது.இது இந்திய மனிதன் சிக்கல் என்று தோன்றுகிறது.இது போவதற்கு நூற்றாண்டுகள் ஆகும்.

இந்தியா கிராம, சிறுநகர பொருளாதாரத்தை நோக்கி தன் கவனத்தை திருப்புவதன் மூலமே வருங்கால தலைமுறையினருக்கு நல்ல காற்று,தண்ணீர்,நெருக்கடியற்ற சாலைகள்,மின்சாரம்,வேலைவாய்ப்புகள்,கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றை அளிக்க முடியும்.

பெருநகரம் குறித்த சிறுகுறிப்பு ஒன்று:பெருநகரங்களில் எத்தனையோ சிக்கலகள் உண்டுதான்.ஆனால் அதில் நான் எப்போதும் ஒரு முக்கியமான மகிழ்ச்சியான விஷயத்தை பார்க்கிறேன்.உங்களை யாருக்கும் தெரியாது,உங்களுக்கு யாரையும் தெரியாது.இது கிராமங்களில் , சிறுநகரங்களில் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயம்.பெருநகரத்தில் நீங்கள் முழுக்க அந்நியப்பட்டு இருப்பீர்கள்.உங்கள் வீட்டிற்கு எந்த பெண்னையும் நீங்கள் அழைத்து வரலாம்.உறவாடலாம்.சண்டை போடலாம்.விலகலாம்.தனியாக கிடக்கலாம்.யாருக்கும் தெரியப்போவதில்லை.யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை.நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று யாரும் கேட்கப்போவதில்லை.நீங்களும் யாரையும் கேட்க வேண்டியதில்லை.இது எனக்கு பெருநகரங்களில் பிடித்த விஷயம்.


No comments: