இடது பக்கம் தஸ்தாவயெவ்ஸ்கி |
துர்கனேவ் |
துர்கனேவ் எழுதிய தந்தைகளும் மகன்களும் (Fathers and Sons - 1862)1 , தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய பதின் (The Adolescent - 1875)2 ஆகிய இரண்டு நாவல்களும் ரஷ்யாவில் நில
அடிமைகளின் விடுதலையின் காலகட்டத்தையும் அந்தக் காலகட்டத்தில் நடந்த உரையாடல்கள், கொந்தளிப்புகள்,
குழப்பங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை. இரண்டுமே தந்தைகளுக்கும் மகன்களுக்கும்
இடையில் நடக்கும் உரையாடல்களை மையப்படுத்திய நாவல்கள்.துர்கனேவை எழுத தொடங்கிய அதே
காலகட்டத்தில் தஸ்தாயெவ்ஸ்கியும் எழுத தொடங்குகிறார்.இருவருக்கும் இடையில் எப்போதும்
நட்பு இருக்கவில்லை.தஸ்தாயெவ்ஸ்கி துர்கனேவை தொடர்ந்து தன் நாவல்களில் கேலி செய்திருக்கிறார்.பீடிக்கப்பட்டவர்கள்
அல்லது சாத்தான்கள் (The Devils) நாவலில் வரும் பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் துர்கனேவின் கேலிச்சித்திரம்தான்.அதே
போல அந்த நாவலில் வரும் நாவலாசிரியர் கரமாஸினோவ் துர்கனேவ் பற்றிய நேரடியான கேலிச்சித்திரம்.ஆனால் தந்தைகளும் மகன்களும் நாவலும் பதினும் ஒரே கருத்தைதான் முன்வைக்கின்றன.
துர்கனேவின் தந்தைகளும் மகன்களும் நாவல் மறுப்புவாதத்தை
(Nihilism) அடிப்படையாக கொண்டது.பிரபுத்துவத்திற்கும்(Aristocracy) மறுப்புவாதத்திற்கும்
இடையிலான மோதலை முன்வைக்கும் நாவல் என்றும் இதைப் பார்க்கலாம்.பிரபுத்துவத்தை பிரதிநித்துவம்
செய்யும் கதாபாத்திரங்கள் நிகோலயும் அவரது மூத்த சகோதரர் பாவலும்.நிகோலயின் மகன் அர்காடியும்
அவனது நண்பன் பஸாரோவும் மறுப்புவாதத்தை பிரதிநித்துவப் படுத்துகிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் பதின் நாவலில் வரும் பிரதான கதாபாத்திரத்தின்
பெயரும் அர்காடிதான்.அவனுடைய உயரியல் தந்தை வெர்ஸிலோவ் மற்றும் அவனது சட்டப்படியான தந்தை மகர் இவானோவிச்
ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்கள்.மகர் இவானோவிச்சின் மனைவி சோபியாவின் மீது
காதல் கொள்ளும் வெர்ஸிலோவ் அவளுடன் இணைந்து வாழ்கிறார்.அவர்களுக்கு பிறந்த மகன் அர்காடி.மகள்
லிசா.மகர் இவானோவிச் வெர்ஸிலோவ்வின் பண்ணையில் வேலை செய்த நில அடிமை.இந்த நிகழ்வுக்கு
பிறகு அவர் வெர்ஸிலோவிடம் மூன்றாயிரம் ரூபுள்களை பெற்றுக்கொண்டு நாடோடியாக சுற்றித்திரிகிறார்.அந்த
திருமணம் முறிக்கப்படாததால் வெர்ஸிலோவும் சோபியோவும் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து
வாழ்கிறார்கள்.அர்காடி வெர்ஸிலோவின் மகன்.ஆனால் அவன் தன் பத்தொன்பது வயது வரையான வாழ்வில்
மிகக் குறைந்த அளவே அவரை சந்திக்கிறான்.சோபியாவையும் இரண்டு மூன்று முறை மட்டுமே சந்திக்கிறான்.அவனது
பிறப்பால் பால்ய பருவத்தில் அவனின் ஆசிரியர் அவனை மிகவும் அவமானப்படுத்துகிறார்.தன்
உயிரியல் தந்தையை அறிந்துகொள்ளும் நோக்கில் பீட்டர்ஸ்பர்க் நகரம் வரும் அர்காடி தன்
பயணத்தின் வழியில் தனக்கு என்று தனியாக சுயம் உள்ளது என்பதை அறிகிறான்.அவன் தன் சட்டப்படியான தந்தை
மகர் இவானோவிச்சையும் சந்தித்து உரையாடுகிறான்.அவனும்
பஸாரோவ் போல இரண்டும் இரண்டும் நான்கு என்பதற்கு அப்பால் வேறு எதுவும் முக்கியமில்லை என்கிறான்.
துர்கனேவின் நாவலில் பஸாரோவ் அர்காடியின் இல்லத்திற்கு வருகிறான்.அங்கு
பாவலுக்கும் அவனுக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது.பாவல் பஸாரோவ் முன்வைக்கும்
மறுப்புவாதத்தை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார்.நீங்கள் எதையெல்லாம் எதிர்கிறீர்கள்,கண்டனம்
செய்கறீர்கள் என்று கேள்வி கேட்கம் போது அவன் நாங்கள் எல்லாவற்றையும் கண்டிக்கிறோம்
என்கிறான்.எதுவுமே கண்டனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்கிறான்.எல்லா விழுமியங்களும்,லட்சியங்களும்
கண்டனத்திற்கு உரியவை என்கிறான்.அப்போது பாவல் அவனிடம் தானும் தாராண்மைவாத சிந்தனைகளை
கொண்டிருப்பதாகவும்,தானும் நில அடிமைகளின் விடுதலையை ஆதிரப்பதாகவும் ஆனால் அனைத்து
விழுமியங்களையும் மறுப்பது எந்தப் பயனையும் தராது என்கிறார்.பிரபுத்துவத்தில் ஒருவர்
பிறர் தன் கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறார்.அதனால் அவர் தன் கடமைகளை
சரியாக செய்கிறார்.பிரபுத்துவத்தில் ஒருவர் சுயமரியாதை கொள்கிறார்.ஏனேனில் அவர் ஏதோ
சில விழுமியங்களை கொள்கைகளை ஏற்கிறார்,பின்பற்றுகிறார்.அது அவரை ஒரு ஸ்திரமான ஆளுமையாக
ஆக்குகிறது.ஒருவன் தனக்கு என்று ஒரு குணத்தை கொண்டிருக்கும் போது , அதை சில விழுமியங்களின்
கொள்கைகளின் அடிப்படையில் வகுத்துக்கொள்ளும் போது அவன் தன்னை வலுவான ஆளுமையாக உணர்கிறான்.இது
மிகவும் முக்கியம்.இல்லாவிட்டால் அவன் யார்,அவன் எதை உருவாக்குவான் என்று கேட்கிறார்.எங்களின்
நோக்கம் எல்லாவற்றையும் மறுப்பது, மறுப்பது மட்டுமே,நாங்கள் எதையும் உருவாக்குவதில்லை
என்கிறான் பஸாரோவ்.இப்படிப்பட்ட சிந்தனைககள் உள்ளீடற்ற ,அறமற்ற வாழ்க்கைக்கே வழிவகுக்கும்
என்கிறார் பாவல்.
இந்த உரையாடல்தான் நாவலின் மையம்.இங்கே பாவல் ஒரு வலுவான
ஆளுமை பற்றி பேசுகிறார்.அது பிரபுத்துவத்தில் இருக்கிறது.உங்கள் மறுப்புவாதத்தில் அப்படியான
எதுவும் இல்லை என்கிறார்.இது ஒருவனை உள்ளீடற்றவனாக , அறமற்றவனாக ஆக்கும் என்கிறார்.பஸாரோவ்
நிகோலயுடன் இணைந்து வாழும் இளம் பெண் பெனிச்காவை(Fenichka) ஒரு உரையாடலின் போது சட்டென்று
முத்தமிடுகிறான்.அன்னா என்ற இளம் விதவையை காதலித்து அது ஏற்கப்படாமல் உடைந்துபோகிறான்.அவன்
தன் மருத்துவ ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடுகிறான்.அதே நேரத்தில் மிகவும் சோர்வாக,சலிப்பாக
உணர்கிறான்.தன் கிராமத்தில் இருக்கும் விவசாயிகளிடம் பேசுகிறான்.அவர்கள் இவன் சென்ற
பின் அவனைப்பற்றி கேலியாக பேசிக்கொள்கிறார்கள்.ஒரு பிணத்தை அறுக்கும் போது கையில் வெட்டு
ஏற்படுகிறது.நோய் தொற்றி இறக்கிறான்.அன்னா அவன் இறக்கும் தருவாயில் அவன் நெற்றியில்
முத்தமிடுகிறாள்.ஒரு முறை அர்காடியிடம் பேசும் போது தன் தந்தை இந்த அறுபத்தியிரண்டு
வயதில் எந்த சோர்வும் இன்றி தன் வேலைகளை மகிழ்ச்சியாக செய்யும் போது தான் இந்த இளம்
வயதில் அடையும் சோர்வை பற்றி பேசுகிறான். மறுப்புவாதம் கலைகள் மீதும் இயற்கையின் மீதும்
ஒருவன் கொள்ளும் மயக்கத்தை பித்தை மறுக்கிறது.மறுபுறம் அது அணைத்து விழுமியங்களையும்
கண்டிக்கிறது.அது அவனை உள்ளீடற்றவனாக்குகிறது.உள்ளீடற்றவன் வலுவற்ற ஆளுமை ஆகிறான்.வலுவற்ற
ஆளுமை எளிதில் பிறழும்.சலிப்படையும்.சோர்வடையும்.பாவலும் தன் இளமையில் ஒரு பெண்ணின்
மீது பித்தெறி அலைகிறார்.ஆனால் அவர் அந்த உறவின் முறிவுக்கு பின் தன் கிராமத்தில் எளிமையான
வாழ்வை வாழ்கிறார்.அவரில் கிளறும் பிறழ்வுகளை அவரின் பிரபுத்துவ விழுமியங்கள் தடுக்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் பதின் நாவலில் அர்காடி சிறுவயதிலிருந்தே தனியாக
வளர்கிறான்.பல அவமானங்களை சந்திக்கிறான்.தன் வாழ்வை தீர்மானித்த தன் உயிரியல் தந்தை
வெர்ஸலோவை சந்திக்க பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வருகிறான்.அவன் தன் தந்தையை புரிந்துகொள்ள
முயன்றபடியே இருக்கிறான்.அவன் அறிந்த அறைகுறை தகவல்களை வைத்து அவரை முதலில் வெறுக்கிறான்.பின்னர்
அவற்றில் பல தகவல்கள் பிழையானவை என்று அறிய வரும் போது அவரை மிகவும் நேசிக்கிறான்.வெர்ஸிலோவ்
பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் ஸ்டீபனை போன்றவர்.அவர் ரஷ்யாவை ஐரோப்பாவோடு இணைத்து
பார்க்கிறார்.ஐரோப்பாவின் எதிர்காலமே ரஷ்யாவின் எதிர்காலம் என்று கருதுகிறார்.கத்தொலிக்கத்தின்
மீது ஈர்ப்பு கொள்கிறார்.ரஷ்யாவை எந்தளவு நேசிக்கிறாரோ அந்தளவு ஐரோப்பாவை நேசிக்கிறார்.உலக
பொது மனிதனை எத்தனிக்கிறார்.ஆனால் அர்காடியுடனான ஒரு உரையாடலில் தன் ஐரோப்பிய பயணத்தில்
ஜெர்மானியர்கள் ஜெர்மானியர்களாகவும்,பிரஞ்ச் தேசத்தவர்கள் பிரஞ்ச் தேசத்தவர்களாவும்
மட்டுமே இருக்கிறார்கள்.அவர்கள் ஐரோப்பியர்களாக இல்லை என்கிறார்.இது தன்னை மிகவும்
ஏமாற்றமடைய செய்ததாக சொல்கிறார்.ஒரு ரஷ்யன் மட்டுமே தன்னை ஐரோப்பியனாக உணர்கிறான் என்கிறார்.இந்த
கருத்துதான் இந்த நாவலின் மையம்.இந்த கருத்தும் தந்தைகளும் மகன்களும் நாவலில் பாவல் சொல்வதும்
ஒரே விஷயம்தான்.ஐரோப்பியாவின் கருத்துருவகமாக வெர்ஸிலோவ் வருகிறார்.தன் சுயத்தை இழந்த
வெர்ஸிலோவின் மகன் அர்காடி தன் தொலைந்து போன பால்ய காலத்தால் பதின் பருவத்தில் ஒருவனில்
முழுமை பெற வேண்டிய ஆளுமை உருவாக்கம் முழுமை பெறாமல் இருக்கிறான்.அவன் தன் உயிரியல்
தந்தையை தேடி அவரை புரிந்து கொள்ள முயல்கிறான்.அப்போது தன் தந்தை காதலிக்கும் இளம்
விதவை பெண்னான கத்ரீனாவை அவனும் காதலிக்கிறான்.
அவன் தன் உயிரியல் தந்தை பற்றிய சிந்தித்து
அவரின் செயல்களுக்கு விளக்கங்களை உருவாக்கிக்கொண்டு , விளக்கங்கள் கேட்டுக்கொண்டு அதைப்பற்றிய
சிந்தித்துக்கொண்டு அவர் காதலிக்கும் பெண்னை காதலித்து அவரில் தன்னை தேடுகிறான்.ஒரு
மனிதன் இன்னொரு மனிதனில் ஏற்படுத்தும் பாதிப்பு எல்லையற்றது என்கிறார் ரிச்சர்ட் பிவியர்3.அவனின்
சட்டப்படியான தந்தை மகர் இவானோவிச்சை அவர் இறக்கும் தருவாயில் சந்திக்கும் போது பரவசம் கொள்கிறான்.அவன்
வெர்ஸிலோவிலிருந்து தன்னை பிரித்து உணராமல் தவிக்கிறான்.இதை வளர்ச்சியற்ற சுயம்
(Enmeshment/undeveloped self) என்கிறார்கள்.இதனால் அவனால் தன்னை மற்றமையிலிருந்து விலக்கி தனியாக உணர முடிவதில்லை.அதனால்
ஒரு தகவல் கிடைக்கும் போது அவன் வெர்ஸிலோவை வெறுக்கிறான்.மறுகணம் அந்த தகவல் தவறு என்று
கருதும் போது அவரை நேசிக்கிறான்.உண்மையில் அவன் அவரை நேசிக்கவும் இல்லை,வெறுக்கவும்
இல்லை , அவன் அவரில் தன்னை பார்க்கிறான்.அவன் தனித்த சுயம் கொண்ட தனி ஆளுமை என்பதை
நாவலின் இறுதியில் உணர்கிறான்.ஐரோப்பாவிலிருந்து ரஷ்யா தன்னை விலகி பார்க்க வேண்டும்
என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.இங்கிருந்து கொண்டு ரஷ்யா ஐரோப்பாவின் நிலைபாடுகளை எதிர்க்கலாம்,ஆதிரிக்கலாம்.ஆனால்
அது ஐரோப்பா அல்ல.அதன் சமயம் ரஷ்யாவின் மரபான கிறுஸ்துவம்.அதன் கருத்துருவகம்தான் அர்காடியின்
சட்டப்படியான தந்தை விவசாயியும் நாடோடியுமான மகர் இவானோவிச்.அர்காடி தான் தனித்த சுயம் கொண்ட மனிதன்
என்பதை உணரும் போது அவன் வெர்ஸிலோவை புரிந்துகொள்கிறான்.அவன் வலுவான ஆளுமையாகிறான்.
ஒருவனின் பதின் பருவத்தில்தான் ஆளுமை உருவாக்கம், பிறரிலிருந்து தன்னை
வேறுபடுத்தி பார்க்கும் சுயம் உருவாகுகிறது.பிறரிலிருந்து தன்னை பிரித்து பார்க்கும்
சுயம் தன் செயல்களை எண்ணங்களை தொகுத்து தனக்கான பிரக்ஞையை உருவாக்கிக்கொள்கிறது.பிறரிலிருந்து
தன்னை வேறுபடுத்தி பார்க்க இயலாத சுயம் பிறரில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதை அறிய
ஏக்கம் கொள்கிறது.நான் இந்த விஷயத்தில் இந்த முடிவை எடுக்கிறேன் என்று இல்லாமல் பிறர்
இதை எப்படி கையாள்வார்கள் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள்.சிதையுண்ட ஆளுமை பிறரில்
தன்னை நிறுவ முயல்கிறது.பிறரில் தன்னை நிறுவ முயலும் சுயம் அதற்காக அதிகாரத்தை நோக்கி
நகர்கிறது.அதிகாரம் மூலம் மட்டுமே தன்னை பிறரின் சுயத்தின் பகுதியாக மாற முடியும் என்று அது நினைக்கிறது.
குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ்
நான் நெப்போலியனாக விரும்பினேன் அதனால் நான் கொலை செய்தேன் என்கிறான்.இந்த நாவலில்
வரும் அர்காடி தான் ரொத்ஸ் சைல்டு (Rothschild) ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.மிகப்பெரிய
செல்வந்தனாக வேண்டும்.ஆனால் அந்த செல்வத்தை கொண்டு ஆடம்பரமான வாழ்வை வாழ வேண்டும் என்று
அவன் விரும்பவில்லை.மாறாக சாலையில் ஒரு பிச்சைகாரன் போல இருந்தால் போதும்,தான் மிகப்பெரிய
செல்வந்தனாக இருப்பதும் ஆனால் அது பிறருக்கு தெரியாமல் தான் ஒரு எளிய மனிதனாக சாலைகளில்
சுற்றும் போது பிறர் தன்னை சாதாரணமாக நடத்துவார்கள்.ஆனால் தன்னளவில் தான் மிகப்பெரிய
செல்வந்தன் என்ற எண்ணம் அளிக்கும் கிளர்ச்சி தனக்கு போதுமானது என்று நினைக்கிறான்.பிறரில்
தான் என்னவாக இருக்கிறோம் என்பதை முறியடிக்க அவன் ரொத்ஸ் சைல்டு ஆக வேண்டும் என்று
ஆசைப்படுகிறான்.அதன் மூலம் அதிகாரத்தை அடைய முடியும் என்று கருதுகிறான்.அவனது அதிகாரம்
குறித்த ஏக்கம் பிறரில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதும் அது அப்படியில்லை என்று
தான் மட்டுமே அறியும் ரகசியம் அளிக்கும் கிளர்ச்சியுமாக இருக்கிறது.அவன் செல்வந்தனாக யாருக்கும் உதவ வேண்டும்
என்று நினைக்கவில்லை.அந்த செளகரியங்களில் திளைக்க வேண்டும் என்று விரும்பவில்லை.மாறாக
பிறர் தன்னைப்பற்றி கொள்ளும் தவறான எண்ணத்தை எண்ணி உள்ளுக்குள் குதூகலித்து அவர்களை துச்சமாக
கருத வைக்கும் ரொத்ஸ் சைல்டு என்ற கருத்து அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.
பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் பேராசிரியர் ஸ்டீபனின் மாணவர்களாக
வரும் பீட்டரும் , நிகோலயும் அதிகாரத்தை அடைய விரும்புகிறார்கள்.ரஸ்கோல்நிகாவின் நோக்கமும்
அதிகாரத்தை அடைவதாக இருக்கிறது.அதிகாரத்திற்கும் சிதையுண்ட ஆரோக்கியமற்ற வளர்ச்சியற்ற
சுயத்திற்கும் உண்டு சம்மந்தம் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.சிதையுண்ட ஆளுமைகளாக வளரும்
பிள்ளைகள் அதிகாரத்தை நோக்கி செல்வதற்கன காரணம் தங்கள் வேர்களை முழுவதுமாக விடுத்து
ஐரோப்பாவின் புதிய கருத்துகளில் தனக்கான எதிர்காலத்தை தேடும் தந்தைகளே காரணம் என்கிறார்
தஸ்தாவெய்ஸ்கி.ஐரோப்பாவிலிருந்து தன்னை விலக்கி பார்க்கும் ரஷ்யா தனக்கென்று தனித்த
மரபு இருக்கிறது என்பதை அறியும்.அதில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ஐரோப்பாவோடு உரையாடுவதும்
உரையாடலில் தனக்கு பிடித்தமானவற்றை ஏற்பதும் , பிடிக்காதவற்றை நிராகரிப்பதும் சாத்தியம்
என்கிறார்.மாறாக ரஷ்யாவையே ஐரோப்பாவில் காண விரும்பும் போது ஒரு பக்கம் ஏமாற்றமும்
மறுபக்கம் கிளர்ச்சியும் மட்டும்தான் சாத்தியம் ஆகிறது என்கிறார்.இப்படியான சிதைவுகளால்
எளிய பிழைகளை கொண்ட சிந்தனைகளை அது அளிக்கும் கிளர்ச்சியின் காரணமாக நாம் ஏற்கிறோம்
என்கிறார்.
துர்கனேவின் நாவலில் வரும் நிகோலய், பஸாரோவ் இயற்கையை பார்த்து
வியக்க முடியாது அது மனிதன் வேலை செய்ய வேண்டிய தொழிற்சாலை என்று சொல்வதை ஏற்க முடியாமல் இயற்கையின்
எழிலில் தன்னை மறந்து நேரம் கழிக்கிறார்.பஸாரோவால் ஈர்க்கப்படும் அர்காடி பின்னர் அவனிலிருந்து
விலகி இசையிலும் காதலிலும் தன்னை இழக்கிறான்.அவன் கத்யா என்ற அன்னாவின் சகோதரியை திருமணம்
செய்து கொள்கிறான்.நிகோலயுடன் இணைந்து வாழும் பெனச்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு
அவரது சகோதரர் பாவல் அறிவுறுத்துகிறார்.நிகோலயும் பெனச்காவை திருமணம் செய்து கொள்கிறார்.பஸாரோவின்
கல்லறையில் பிராத்தனை செய்யும் அவனது பெற்றோரின் காட்சியோடு நாவல் நிறைவுறுகிறது.இயற்கையின்
மீதான கற்பனாவாதம் அற்று,இசையின் மீது ஈர்ப்பற்று,காதலை ஒரு உணர்ச்சி கொந்தளிப்பு மட்டுமே
என்றும் பார்க்கிறான் பஸாரோவ்.பதின் நாவலில் வரும் மகர் இவனோவிச் தன் முதுமையில் அர்காடியுடன்
பேசுகிறார்.அப்போது மனிதனால் தன்னை தாங்கிக் கொள்ள முடியாது.அவன் எதனிடமாவது மண்டியிடத்தான்
வேண்டும் என்கிறார்.பஸாரோவ் தன் கூர் அறிவை கொண்டு மட்டும் உலகை நோக்குகிறான்.காடுகளில்
திரிந்து தவளைகளை எடுத்து வந்து வெட்டி ஆராய்ச்சி செய்கிறான்.இயற்கையை ஒரு தொழிற்சாலையாக
பார்க்கிறான்.அவனால் தன் வலுவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு முறை காதலை மறுத்த
பின் அன்னா அவனை அவளது இல்லத்தில் தங்க சொல்கிறாள்.அதற்கு பஸாரோவ் மீன் தண்ணீரிலிருந்து
சிறிது நேரம் காற்றுக்காக வெளியே வரலாம்,ஆனால் அதன் இடம் தண்ணீர்தான் என்கிறான்.அவனது
பிரக்ஞை எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கிறது.அவன் தன்னிலையை மறக்கச்செய்யும் எதையும்
ஏற்க மறுக்கிறான்.தன்ளுள் கிளர்தெழும் காதலை கண்டு எரிச்சல் கொள்கிறான்.அவன் இறுதியல்
தன் வலுவை தாங்க முடியாமல் ஒரு விபத்தில் மரணமடைகிறான்.
பஸாரோவின் நீட்சிதான் தஸ்தாயெவ்ஸ்கியின் ரஸ்கோல்நிகோவ்,இவான்
கரமசோவ்,அலெக்ஸி,அர்காடி.பஸாரோவ் உயிருடன் இருந்திருந்தால் அவனும் அதிகாரத்தை நோக்கித்தான்
நகருவான்.கூர் அறிவைத்தாண்டி மனிதனுக்கு இயற்கையின் அழகை பார்த்து வியக்கும் கற்பனாவாதமும்,தன்னிலையை
மறக்கச்செய்யும் காதலும் இசையும், தான் பிறரில் இருந்து வேறு என்று அறிய சுயமும் அதை தரும் மரபும், தன்
வலுவை சுமக்க முடியாத போது மண்டியிட ஆன்மிகமும் தேவைப்படுகிறத்து.இவையனைத்தும் இணையும்
போதே ஒரு சமூகத்தில் கூடி வாழும் வாழ்க்கை சாத்தியமாகிறது.கூட்டு வாழ்க்கை
(sobornost) என்று இதை பற்றிச் சொல்கிறார் ரிச்சர்ட் பிவியர்.
துர்கனேவ் போல தஸ்தாயெவ்ஸ்கி இயற்கையை அழகை வியந்து எழுதுவதை
நான் எங்கும் வாசித்ததில்லை.துர்கனேவின் நாவல் ஒரு எளிய தொடக்கம்,கதாபாத்திரங்களின்
அறிமுகம்,அவர்களின் சிக்கல்,முதிர்வு என்று செல்கிறது.கற்பனாவாதத் தண்மை கொண்ட நாவல்.தஸ்தாயெவ்ஸ்கியின்
நாவல் ஒரே நேரத்தில் பத்து பேர் மேடையில் நின்று கொண்டு அன்றைய நிகழ்வுகளை சொல்வது
போன்றது.இதைப்பற்றி பக்தீன் சொல்வதை மேற்கொள் காட்டுகிறார் ரிச்சர்ட்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் படிப்படியான வளர்ச்சி இருப்பதில்லை.மாறாக
அதில் அதன் மையம் மனிதர்கள் இணைந்து இருத்தலும்,அவர்களுக்கு இடையிலான பரிமாற்றமும் தான்.அதனாலே அவரின் நாவல்கள்
காலத்தில் நிகழ்வதில்லை,மாறாக வெளியில் நடக்கிறது.ஒரே காலவெளியில் நாடகீய வடிவில்,அந்த
நாடகீய வடிவத்திற்கான நம்பகமான தரவுகளையும் உருவாக்கி அவரின் கதாபாத்திரங்களை அங்கு
கூட்டிணைவான சூழலில் அடுத்தடுத்து வைத்து நாடகீயத்தருணங்களை உருவாக்குகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.எல்லா
நாடகீயத்தருணங்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து அந்த நேரத்தில் மனிதஉறவுகளுக்கு
இடையில் நடக்கும் விஷயங்களை ஊகிப்பதுதான் அவரின் நோக்கமாக இருக்கிறது என்கிறார் பக்தீன்.
பக்தீன் சொல்லியிருப்பதை படிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கி இயற்கையின்
பரிணாமத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.அதனாலே அவரின் நாவல்களில்
இயற்கையை வியந்து தன்னை மறந்து நிற்கும் துர்கனேவின் பார்வை இல்லை.அவரின் நோக்கம் எப்போதும்
மனித உறவுகளுக்கு மத்தியில் நாடகீயத்தருணங்களில் நடக்கும் போராட்டங்களை பற்றியே இருக்கிறது.அப்போது
அவர்களின் விழுமியங்கள் என்னவாகிறது.எது முன்னகர்கிறது,எது பின்னகர்கிறது என்று பார்க்கிறார்.
அதனாலே துர்கனேவின் நாவல்கள் காலத்தில் பயணிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின்
நாவல்கள் வெளியில் பயணிக்கிறது.அவரின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் மூன்றே நாட்களில் நடக்கிறது.அதனால்
அவரின் நாவல்களில் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கின்றன.
இரண்டு நாவல்களும் ஒருவன் தன் தனித்த சுயத்தை உணர்வதும் அங்கிருந்து
மற்றதை மதிப்பீடவும் ,பிறரிலிருந்து தன்னை பிரித்து பார்க்கும்
சுயம் மூலம் தன் செயல்களை எண்ணங்களை தொகுத்து தனக்கான பிரக்ஞையை உருவாக்கிக்கொள்ளவும்,அப்படியாக அவனை கூட்டிணைவான வாழ்வை வாழ வழிவகுக்கும் என்கின்றன.உண்மையில் துர்கனேவ் தந்தைகளும்
மகன்களும் நாவலை இந்த அடிப்படையில் எழுதவில்லை என்று தோன்றுகிறது.அவர் மரபை மறுக்கும்
மறுப்புவாதம் போன்ற சிந்தனைகளை பரிசீலித்தார்.அவருக்கு மேற்குலகின் சிந்தனைகள் மீது
ஆர்வம் இருந்தது.ஆனால் நாவலை வாசிக்கும் போது பஸாரோவை மறுப்புவாதம் எவ்வாறு கொல்கிறது
என்றே அவர் சொல்ல வருவதாக தோன்றுகிறது.அந்த வகையில் இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றுக்கு
முந்தைய குரலாக இருக்கிறது.
பஸாரோவ் அன்னாவின் வீட்டில் அவளை பார்க்கும் போது அவளின் அழகில்
லயிப்பான்.அப்போது அவளின் இடையின் வளைவை பற்றிய வர்ணனை வருகிறது.இப்படியான ஒரு வர்ணனை
தஸ்தாயெவ்ஸ்கியின் எந்த நாவலிலும் நான் பார்த்தில்லை.அவர் ஒரு பெண்னை பற்றிய சித்திரத்தை
உருவாக்குவார்.அவர் பேரழகி என்று புரியவைப்பார்.ஆனால் இப்படியான வர்ணனைகளை அவரில் பார்க்க
முடியாது.இரண்டு பேர் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டார்கள் என்று கூட நேரடியாக எழுத மாட்டார்.ஆனால்
அதைச்சுற்றி இரண்டு பக்கங்களுக்கு எழுதுவார்.தந்தைகளும் மகன்களும் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி
எழுதியிருந்தால் ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல் எழுதியிருப்பார்.
குறிப்பு:
1. Fathers
and Sons – Ivan Turgunev – Translated by Richard Freeborn – Oxford’s world
classics.
2. The
Adolescent – Fyodor Dostoevsky – Translated by Richard Pevear and Larissa
Volokhonsky – Everyman’s Library.
3 3. ரிச்சர்ட்
பிவியர் பதின் நாவல் பற்றி எழுதியுள்ள அறிமுக உரை தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் பற்றிய
முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.