புதிய விழுமியங்கள்ஜெயமோகனின் "தன்னை அழிக்கும் கலை" கட்டுரை முக்கியமானது.உண்மையில் தினசரி பணி நிமித்தமே கூட பல்வேறு மனிதர்களை சந்திப்பவர்கள் இருக்கிறார்கள்.போலீஸ்காரர்கள்,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள்,சமூக சேவையில் ஈடுபடுபவர்கள்,வெகுமக்களை தினமும் சந்திக்க வேண்டிய வணிகர்கள்,கடை வைத்திருப்பவர்கள்,அரசியலில் இருப்பவர்கள்,வங்கி மேலாளர்கள்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஆட்டோ ஓட்டுநர்கள்,பேருந்து நடத்துனர்கள்,கோயில் அர்ச்சகர்கள்,பாதிரியார்கள்,இமாம்கள்,தாசில்தார்கள் இப்படி பலருக்கு தினசரி பணி சார்ந்தே பலத்தரப்பட்ட மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.தமிழில் எழுதுபவர்களில் மேற்சொன்ன துறைகளில் பணிபுரிந்தவர்கள் குறைவு.பெரும்பாலும் முந்தைய தலைமுறையில் எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் அல்லது அரசாங்கத் துறை அல்லது வணிகம் அல்லது பத்திரிக்கை என்றுதான் இருந்தார்கள். அப்படி இல்லை என்றால் அவர்கள் வேலையே செய்யாதவர்களாக இருந்தார்கள்.இந்தத் தலைமுறையில் அரசுத் துறை என்பதற்கு பதிலாக தனியார் துறை என்பது முக்கிய மாற்றம்.

இதில் பெரும்பாலும் தினசரி அனுபவங்கள் என்பது என்னவாக இருந்துவிட முடியும்.அலுவல் பிரச்சனைகள்,குடும்ப பிரச்சனைகள்,பால்ய காலத்தின் நினைவுகள்,காதல்,தான் வாழும் சிறுநகரம் சார்ந்த மாற்றங்கள் என்பதாகத்தான் இருக்க முடியும்.அதே நேரத்தில் பணியின் ஊடாக வெவ்வேறு அனுபவங்களையும் பெரும் பயணங்களையும் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் எழுதுவதில்லை.

பயணங்களும் அனுபவங்களும் தன்னையே தன் படைப்பில் முன்வைக்கும் நவீன எழுத்தாளனை அவனின் சிறு உலகத்திலிருந்து விடுவித்து வரலாற்றிலும் பண்பாட்டிலும் சென்று சேர்க்கும் என்கிறார் ஜெயமோகன்.அவன் மேலும் பெரிய கேள்விகளை எழுப்பலாம்.தன்னை விட பெரிய மகத்துவங்களிடமும் தன்னை விட பெரிய இருளிடமும் தன்னை ஒப்புக்கொடுப்பதன் வழி அவன் தன் கனவுகளாலும் ,கற்பனையாலும் அவைகளை கதைகளாக முன்வைக்க வேண்டும் என்கிறார்.அவைகளில் அவன் இருப்பான் என்கிறார்.அப்படி வெறும் தினசரி எளிய அனுபவங்களிலிருந்து தன்னை விடுவித்து கற்பனையை ,கனவை விரிக்க அனுபவங்களுக்கு தன்னை திறந்து கொள்ளும் மனமும் பயணமும் உதவும் என்கிறார்.

தமிழில் மாய யதார்த்த எழுத்துகள் , நினைவோடை எழுத்துகள்,தன்னைத்தானே எழுதிச் செல்லும் எழுத்துகள் என்ற வகைளுக்கு பின்னால் ஒரளவு அனுபவமின்மையும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே இங்கே எழுத்தாளர்களால் புதிய விழுமியங்களை உருவாக்க முடியவில்லை.

அசோகமித்திரனின் கதைவெளி என்று பார்த்தால் ஜெமினி ஸ்டுடியோ நாட்கள்,செகந்திரபாத் நாட்கள்,சென்னையின் ஒண்டிக்குடித்தனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதைவெளி.ஆனால் அது பண்பாட்டிலும் வரலாற்றிலும் சென்று மோதும் போது இன்னும் பெரிய கேள்விகளாக மாறுகிறது என்கிறார் ஜெயமோகன்.ஆனால் அதே நேரத்தில் அதில் அந்த எழுத்தாளனும் இருக்கிறான் என்கிறார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் நாம் வாசிக்கும் எந்த புனைவிலும் ஏதோ ஒரு வகையில் அந்த எழுத்தாளனின் ஆளுமையை நாம் கண்டுகொள்கிறோம்.பின்னர் அந்த எழுத்தாளனை நேரில் சந்திக்கும் போது நாம் கற்பனை செய்து வைத்திருந்த ஆளுமையும் உண்மையும் வேறாக இருப்பதை நினைத்து சில சமயம் ஏமாற்றம் அடைகிறோம்.சில நேரம் உவகை கொள்கிறோம்.ஜெயமோகன் சுந்தர ராமசாமியை முதல் முறை ஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்த பின் பார்த்து ஏமாற்றம் அடைந்ததை பற்றி நினைவின் நதியில் நூலில் எழுதியிருப்பார்.ஒரு நவீன எழுத்தாளன் தன் புனைவில் தன்னையே எழுதிச் செல்கிறான்.

சுகுமாரன் கவிதைகளை வாசிக்கும் போது நாம் சுகுமாரனுடன் உரையாடுகிறோம்.யுவன் கதைகளின் வழி நாம் யுவன் என்ற ஆளுமை பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி,லா.சா.ரா,மெளனி,புதுமைப்பித்தன் என்று  எல்லா எழுத்தாளர்களிலும் இதை நாம் காண்கிறோம்.நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் நான் வாசித்த வரை எஸ்.ராமகிருஷ்ணனின் புனைவுகளில் மட்டும் இது இல்லை என்று தோன்றுகிறது.அவரின் நெடுங்குருதி,யாமம்,உறுபசி ஆகிய நாவல்களில் எங்குமே நீங்கள் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற ஆளுமையை காண முடியாது.அவர் இதில் கவனமாக இருக்கிறார் என்றும் கூட நினைக்கிறேன்.

இன்று தூய இலக்கியம் பேசும் போது அநேகமாக நாம் அகம் நோக்கி பேசும் ஆக்கங்களையே முன்வைக்கிறோம்.புற விஷயங்களை சற்று மேலோட்டமாக பேசும் ஆக்கங்கள் வெகுஜன தளத்திற்கு தள்ளப்படுகிறது.மாறாக,தீவிர தளத்தில் நாம் நம் அகக்கேள்விகளை வரலாற்றிலும் பண்பாட்டிலும் தேடினால் இன்னும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை கொண்டுவரலாம்.

பண்பாட்டுப்  பயிற்சி என்பது அடிப்படையில் ஒருவனுக்கு வாழ்க்கை சார்ந்த தரிசனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பண்பாட்டின் மூலம் நாம் பெறுவது அதைத்தான்.இன்று மதம் சார்ந்த விழுமியங்கள் என்று அநேகமாக ஒன்றுமில்லை.நாம் பொருளியல் தேவைகளுக்காக மேற்குலகின் தனிமனித விழுமியங்களை கற்றுக்கொள்ளும் தலைமுறை.அதைத்தாண்டி பண்பாட்டு விழுமியங்கள் என்று எதுவுமே இல்லை.
ஒரு எழுத்தாளன் புதிய விழுமியங்களை காலம் தோறும் உருவாக்க வேண்டும்.அதுவே அவனது பணியும் கூட.அவன் தன்னை மீறி சற்று புறவயமான நோக்கினால் அதை இன்னும் சரியாக செய்ய முடியும்.

No comments: